Loading

30. இறுதி அத்தியாயம்

பெண்ணவளை தூக்கிக் கொண்டே, “போறேனு மட்டும் சொல்லவே சொல்லாதடி… ஏனோ அந்த வார்த்தை எனக்கு பிடிக்கவே இல்லை.” என்றான் நந்தா அழுத்தமாக.

“எனக்கும் தான். எப்படி கவிதை எல்லாம் சட்டுன்னு சொன்னீங்க?”

“அது எப்படினு கண்டிப்பா சொல்றேன். வார்த்தைகளால இல்லை.” என்றவன் அவளை தூக்கிக் கொண்டு செல்ல, அவளோ அவனையே இமைமூடாது பார்த்தாள்.

மெத்தையின் மீது பெண்ணவளை படுக்க வைத்தகணம், அவனது கழுத்தை தன்னிருக்கைகளால் சுற்றி வளைத்துக்கொண்டவள், அவன் தோள் சாய்ந்துக்கொண்டாள்.

“என்ன பண்ற மது கூசுது.” என்றவன் சிணுங்க, அவளது சூடான கண்ணீர் அவனது கழுத்து வளைவில் பதிந்த நொடி திடுக்கிட்டு அவளது முகத்தை தாங்கிக்கொண்டான் நந்தா.

“ஏய் ஜூஜிலி, என்னாச்சு? ஏன்டி அழுகுற?”

“உன் காதலுக்கு கொஞ்சம் கூட நான் பொறுத்தமில்லை.” என்றவளது கண்களை தன் பெருவிரலால் அழுத்தமிட்டு துடைத்தவன்,

“ஏய் ஜூஜிலி, யார் சொன்னா? உன்னை தவிர எனக்கு வேற யாரும் பொருத்தம் இல்லடி. இந்த நந்தாக்கு ஏத்த சீமாட்டி நீ தான். நீ மட்டும் தான். ஐ லவ் யூ டி என் ஜூஜிலி.” என்றவன் அவளது காதை செல்லமாய் கடிக்க, அதில் சிலிர்த்து எழுந்தவள் அவன் கன்னத்தை கிள்ளினாள். “ராட்சசி வலிக்குது.” என்றவன் கன்னத்தை அழுந்த தேய்த்தான்.

“எனக்கு மட்டும் இனிக்குதா போடா.” என்றவள் அவனை விட்டு விலகப் பார்க்க, பெண்ணவளது இடையை நெருக்கி தன்னோடு இணைத்தவன்,

“அப்படி எல்லாம் விடமுடியாது. கிள்ளியா வைக்குற? உன்னை என்ன பண்றேன் பாரு.” என்றவன் பெண்ணவளது இதழை அழுத்தமாக அழுத்தி முத்தமிட்டபடி மெத்தையில் சரிய, அவளது துள்ளலும், அவனது வேகமும் அங்கு போட்டிப்போட்டது.

“நந்து…” என்றவளின் சிணுங்களும், “மது” என்றவனின் கிறக்கமான அழைப்பும் என்று அவளது ஒவ்வொரு அசைவிலும் அவன் கவிதை வடிக்க, மீண்டும் மீண்டும் அந்த மதுரத்திடம் மயங்கியது என்னவோ அவன் தான். அதேபோல் இங்கு மதுரமும் மயங்கியது அவனது அப்பழுக்கற்ற  உன்னதமான அன்பில்.

உறவுகளின் புரிதல் அன்பின் மூலமே நிலைத்திருக்கும். உன்னதமான அன்பு தவறிழைத்தவரையும் சரி செய்யும். காயத்தை ஆற்றும் மருந்தாகவும் மாறும். அன்பைத் தவறான இடத்தில் தேடி ஓடுவதை விடுத்து, சரியான அன்பு கிடைக்கும் வரை காத்திருந்து அதை தவறவிடாது பார்த்துக் கொள்வதே சாலச்சிறந்தது.

                           ***

கண் இமைக்கும் நேரத்தில் இரண்டு வருடங்கள் உருண்டோடியது. இடைப்பட்ட மாதங்களில் அக்சராவிற்கு மட்டுமல்ல, சைத்ராவிற்கும் திருமணம் முடிந்திருக்க, தன் கணவனோடு மணாலிக்கு தேனிலவுக்கு சென்றிருந்தாள். தற்போது எல்லாம் உமாபதி வெண்ணிலாவின் பின் குட்டிப்போட்ட பூனை போல் சுற்றத்தொடங்கியிருந்தான்.

பெண்களின் உணர்வுகளை பகடைக் காயாக பயன்படுத்தியிருந்த ரகுவரன் இன்று இரு பெண்களை தன்னிரு கண்களை போல் பார்த்துக் கொள்கிறான். ஆம் மானசாவோடு சேர்த்து இருவரது மகளான சம்யுக்தாவையும் தன் இமைபோல தாங்குகிறான் ரகு. பிரசவ நேரத்தில் அவளுடனே இருந்து குழந்தை பிறக்கும் வரை அவளை போல் அவனும் துடித்து, அவள் ஈன்ற தன் மழலையை இருகரத்தில் ஏந்தும் நொடி அவன் உடல் சிலிர்த்திருந்தது. குருதி பூசிய வெண் பஞ்சு கால்கள் அவனது மார்பை உதைத்த நொடி, தன் பாவம் கரைவது போல உணர்ந்திருந்தான் ரகுவரன். அந்த தருணத்திலிருந்து புதுப்பிறப்பெடுத்ததைப் போலதான் உணர்ந்து வருகிறான்.

இங்கு நந்தாவின் அறையில் பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடந்தது. அறைக்கு வாய் ஒன்று இருந்தால் ‘கொஞ்சாமவது அமைதியா இருங்கடா அப்ரசண்டிகளா?’ என்று திட்டி தீர்த்திருக்கும். அந்த அளவிற்கு அறை முழுவதும் அலங்கோலமாக இருக்க,

“அடை மழை வரும் அதில் நனைவோமே… குளிர் காய்ச்சலோடு சினேகம்… ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்.” என்று ராகமாக போர்வையை போர்த்தியபடி பாடிக்கொண்டிருந்தவனது முதுகின் மீதே கனம் நிறைந்த புத்தகத்தை தூக்கி ஏறிந்தாள் மதுவர்ணிகா.

“எவ அவ…” என்று கனமான புத்தகம் பட்ட நொடி அவன் அடித்துப்பிடித்து எழுந்திருக்க,

“தூங்குவடா தூங்குவ? நைட் எல்லாம் என்னை தூங்கவிடாமல் பண்ணிட்டு நீ நல்லா தூங்குவ?” என்று அவனை முறைத்தவளுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது.

“ராங்கி, அதுக்கு ஏன்டி இப்போ அடிக்குற?”

“என்னடா… அப்படி தான் அடிப்பேன். என்ன பண்ணுவ?” தன்னை நோக்கி எகிறிக் கொண்டு வருபவளை கண்டு பின்னோக்கி இரண்டு அடிகள் வைத்தவன்,

“இங்க பாரு எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம். எதுக்கு இவ்ளோ டென்ஷன். கூலா இருடி ஜூஜிலி.”

“நீ பண்ணி வெச்ச காரியத்துக்கு கூலா எல்லாம் இருக்க முடியாது. இடியட் அறிவு கெட்ட மலைமாடு.”

“ஜூஜிலி நீ இப்போ என்னை தான் திட்றியா? நீ திட்டிப் பேசுறது கூட எனக்கு இஸ்க்கு இஸ்க்கு என்றே கேட்குதடி செல்லாகுட்டி.”

“அடிங்கு கேட்கும்டா கேட்கும். சூடு சுரணை எதாவது இருந்தா கேட்கும். உனக்கு தான் அது இல்லையே.”

“என்னடி, நானும் பார்க்கிறேன். சும்மா ஓவரா பேசிட்டே போற?” என்றவன் பதிலுக்கு அவளை மிரட்ட, அவன் நீட்டிய கைகளை பற்றிக்கொண்டவள் அவனை உறுத்து விழித்தாள்.

“என்ன சார் வாய் நீளுது?”

“மேடம், நீங்க அப்படியே அமைதியின் சொரூபம் பாரு.”

“போடா லூசு. நான் கோபப்பட காரணம் இருக்கு.”

“நான் கூட தான் கோபப்பட காரணம் இருக்கு. நீ திட்டுனா எல்லாம், என்னால வாங்க முடியாது சரிதான் போடி.”

“ஓ அப்படியா? அப்போ அடிப்பேன் வாங்கிக்கோ” எனறவள் அவனை அடிக்க வர, அடுத்த நொடி லாவகமாக குனிந்துக்கொண்டவன்,

“எப்படி?” என்று இல்லாத காலரை பற்றி கெத்தாக காட்ட,

“போடா பன்னி, எருமை, பைத்தியம்.” என்றவள் அவனை அடிப்பதற்காக துரத்த, பெண்ணவளின் கைகளில் அகப்படாது கட்டிலை சுற்றிசுற்றி ஓடிக்கொண்டிருந்தான்.

“பிராடுபயலே. இன்னைக்கு எனக்கு இன்டர்வியூ இருக்குனு தெரிஞ்சும் நீ இப்படி பண்ணிட்ட தான? உன்னோட பேச மாட்டேன்.” என்றவளது முகம் நொடியில் வாடிப் போக, அவளை நோக்கி ஓடோடி வந்தவன் அவளது கன்னத்தை தாங்கிக் கொண்டான்.

“கையை எடு.”

“ஏய் செல்லம், எதுக்கு இவ்ளோ கோபம். மொதல்ல இங்க வா.” என்றவன் அவளை தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.

நெற்றியை மறைக்கும் கூந்தலை அழகாக எடுத்து விட்டவன், “என்னாச்சு?” என்று அவள் தலையோடு தலை முட்டியபடி வினவ, “இவ்ளோ பக்கத்துல பார்த்தும் உனக்கு தெரியலையா?” என்றாள் அவனை ஊடுருவும் பார்வை பார்த்தபடி.

அவளது கன்னத்தில் தெரிந்த பல்தடமும், கூடலில் ஆங்காங்கு சிவந்திருந்த கழுத்து வளைவையும் பார்த்து வசிகரிக்கும் புன்னகையினை உதிர்த்தவன், “இதுக்கு தான் இவ்ளோ ரியாக்ஷனா? இது எல்லாம் நம்ம காதலுக்கான அடையாளங்கள் பேபி. இதுக்கு போய் இவ்ளோ டென்ஷன் ஆகலாமா? பவுண்டேசன் வெச்சு பட்டி டிங்கரிங் பண்ணிடு.” என்றான்.

“என்னடா விளையாட்டா போச்சா? அதுகூட பரவாயில்லை. என் உதடு எப்படி வீங்கியிருக்கு பாரு. இப்படியே அவங்க என்னை வீடியோ எடுத்தா, அது பார்க்குற மக்கள் என்ன நினைப்பாங்க? என் இமேஜ்ஜை டேமேஜ் பண்ணவே பொறந்து வந்திருக்கியாடா திருட்டு புருஷா.”

“ஏன் புஜ்ஜிமா, இப்படி எல்லாம் மாமனை தப்பா பேசலாமா? காயம்பட்ட இடத்துக்கு மருந்து வைக்குறேன் வா சரியா போகும்.” என்றவனோ அவளது இடையை பற்றி தன்னோடு நெருக்க, அடுத்து அவன் செய்யவிருக்கும் விசயத்தை அறிந்திருந்தவள்,

“போடா, என் வாய்ல நல்லா வரும். உன்னால எனக்கு லேட் ஆனது தான் மிச்சம். நான் போய் குளிக்க போறேன். வரதுக்குள்ள ரூம் க்ளீன் பண்ணிடு. இல்லை அதுக்கும் அடி விழும்.” என்று அவன் நெஞ்சோரம் கைவைத்து விலக்கிவிட்டு பட்டென்று எழுந்துசென்றாள்.

அவனோ வடை போச்சே? என்று ஏக்கமாக அவளை பார்த்தபடி, “என்ன புருசனா தான் மதிக்கலை? அட்லீஸ்ட் மனுசனாவது மதிக்கறாளானு பாரு. அம்மா உன் புள்ளையை இவ கொடுமை படுத்துறாமா…” என்று தன் அன்னையிடம் மானசீகமாக முறையிட்டான் நந்தா.

அவள் குளித்து முடித்து வருவதற்குள், அறையை ஓரளவு சுத்தம் செய்துக் கொண்டிருந்தான் நந்தா.

“எப்படி இவ்ளோ அசிங்கமா ரூம் மாறுச்சு? அதுக்கும் ரூம் இப்படி கிடக்குறதுக்கும் என்ன சம்மந்தம்?” என்று ரீவைண்ட் பண்ணி பார்க்க, நேற்று போட்ட சண்டையில் கலவர பூமியான தங்களது அறையும் ஊடலுக்கு பின் தொடர்ந்த கூடலும் நினைவில் வர,

“நந்தா, உன்னை நினைச்சு எனக்கே பெருமையா இருக்குடா.” என்று வெட்கத்தில் நெளிந்தவனது கைப்பேசி சிணுங்கியது.

“சொல்லுடா கேணி.”

“என்னடா, ரொம்பா பிஸியா?”

“ஆமாடா… நீ எங்க இருக்க மச்சான்? முடிஞ்சா வீட்டுக்கு வந்துட்டு போயேன்.”

“எதுக்கு உன் காதல் மன்னன் தாத்தா என்ன விரட்டவா. பரவாயில்லைடா நான் இங்கயே இருக்குறேன். அப்புறம் சிஷ்யா நம்ம பெர்ஸ்னாலிட்டி பார்த்து மயங்கி ஒரு பொண்ணு எனக்கு ஓகே சொல்லிடுச்சுடா?”

“வாட்? என்னடா ஜோக் பண்றியா?”

“அடிங்கு… என்னை பார்த்தா எப்படி தெரியுது. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம். கல்யாண தேதி சொன்னதும் ஒழுங்கா வந்து சேரு.”

“அடப்பாவி கல்யாணம் வரைக்கும் போயாச்சா?” என்றவன் பேசிக்கொண்டிருக்கும் போதே தலையை துவட்டியபடி குளியலறை கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள் மது.

ஈரம் சொட்டும் பெண்ணவளின் கார்கூந்தலும், தண்ணீரில் மூழ்கி எடுத்த செந்தாமரையை போன்று பளிச்சென்ற முகத்தைக் கண்டவனது பார்வை அன்னிச்சையாக போனை அணைத்திருக்க, பெண்ணவளை அணுஅணுவாய் ரசித்துப் பார்த்தது ஆணவனின் கண்கள்.

‘கொல்றாளே?’ என்று மனதில் நினைத்து கைகளை ஷாருக்கான் பாணியில் விரித்தான். மதுவோ, தலையை துவட்டிக் கொண்டே அவனை விநோதமாகதான் பார்த்தாள்.

அவனோ அதை எல்லாம் கண்டு கொள்பவனா என்ன? உதட்டை மடிக்கிறான், கைகளால் அவன் நெஞ்சினை தடவுகிறான், அலைஅலையாய் வளர்ந்த சிகையை கோதுகிறான். கன்னக்குழி விழ சிரிக்கிறான். அவனது ஒவ்வொரு செயலையும் ஓர விழிப்பார்வையால் ரசித்தவளுக்கோ மனதில் ஒரு குறுகுறுப்பு.

இன்று மட்டுமல்ல என்றும் தன்னை புதிதாக பார்த்து ரசிக்கும் அவனது கண்களை எண்ணும் போதே அவள் மனது படபடக்கும். சில நேரம் எலியும் பூனையும் போல் இவர்கள் இருந்தாலும் பல நேரம் ஒருவரை ஒருவர் அளவுக்கதிகமாகவே காதலித்தனர். என்றும் தன்னை காதலிக்கும் கணவன் கிடைப்பது வரம் அல்லவா? அந்த வரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள் மது.

“சீக்கிரம் குளிச்சிட்டு வா..? நேரமாச்சு.” என்றவள் தனது வெட்கத்தை மறைத்து அவனை விரட்டுவதில் குறியாக இருந்தாள்.

“அதுக்கு தான் சொல்றது சேர்ந்தே குளிச்சிருந்தா நேரம் மிச்சப்படுத்தியிருக்கலாம்.”

“நிச்சயமா இல்லை. அதுக்கு அப்புறம் சார் என்னெல்லாம் பண்ணுவீங்கனு எனக்கு நல்லாவே தெரியும். அப்புறம் இன்னைக்கு இன்டர்வியூ கேன்சல் தான் ஆகியிருக்கும். போடா போய் முதல்ல குளி.” என்றவள் அதட்டவும் தான் குளிக்கவே சென்றான்.

அதற்குள் மதுவின் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. பிரபாவதியும் தாமோதரனும் மகளுக்கு வாழ்த்தினைத் தெரிவித்திருக்க இன்முகத்துடன் அவர்களது வாழ்த்துக்களைப் பெற்றிருந்தாள் மது.

அவன் குளித்து வரும்முன் இளம்பச்சை நிறகாட்டன் புடவையை உடுத்தியபடி, ஆடைக்கேற்ற எளிய ஆபரணங்களை அணிந்துக்கொண்டிருந்தாள்.

“எப்படி ரெட்டா இருக்கு.” காயத்தைக் கண்டு பெண்ணவள் பெருமூச்சொன்றைவிட, குளியலறையிலிருந்து வெளியே வந்தவனோ அவளை பின்னிருந்து அணைத்திருந்தான்.

“டேய் விடு.” என்றவள் சிணுங்க, அவளது கழுத்தில் மென்மையாக தன் நாடியை புதைத்தவன், “ரொம்ப அழகா இருக்க? இந்த காயம் கூட உன்னை அழகா காட்டுது.” என்றவனின் பார்வையில் தெரிந்தது ரசனை.

“போடா, பண்றது எல்லாம் தப்பு, இதுல என்னெல்லாம் சொல்லி ஐஸ் வைக்குற?”

“அழகை ரசிக்கணும் மது. என் மது ரொம்ப அழகு.” என்றவாறே, அவளது காயத்தில் உள்ள கூந்தலை விலக்கி சிவந்த பெண்ணவளின் தோளின் மீது முத்தமிட, அவனது ஈர உதடுகள் புரிந்த ஜாலத்தில் அவளது தேகம் சிலிர்த்து அடங்கியது.

“போதும் போதும் ரெடியாக விடு.” என்றவள் முடிந்தவரை அவனை விலக்கி வைக்கப்பார்க்க,

“மது, ஒன்னு குறையுது பாரு?” என்றவன் பேச்சுக் கொடுத்த நொடி, “என்னது?” என்றவள் யோசிக்கும்முன் பெண்ணவளின் இதழ்களில் தன்னிதழினை பொறுத்தி மென்மையாக ஒற்றி எடுத்திருந்தான் நந்தா. அவன் கூறியது போலவே மருந்திட்டிருந்தது அவனது மென்மையான இதழ் ஒற்றல்.

அவள் தான் அவனது மென்மையான அணுகுமுறையில் தவித்துப்போனாள்.

“இப்போ ஓகேவா?” என்றவன் அவளை விட்டு மென்மையாக விலக, அவனது பின்னந்தலையை அழுத்தமாக பற்றிக் கொண்டவள் அவன் தந்த முத்தத்தை தொடர்ந்து புரிய, அவளது அதிரடியில் ஆணவனோ வெட்கத்தில் சிவந்துப்போனான்.

“ஏய் டைம் ஆகுதுடி…” என்றவன் அவளிடமிருந்து வம்படியாக விலகவும் தான், நமட்டு சிரிப்பொன்றை சிரித்தவள், “பொழைச்சு போ.” என்று கண் சிமிட்டியபடி அவனை விரட்ட, “கேடி என்னை விட மோசம் நீதான்.” என்று தலையை கோதி சமன்செய்தபடி நகர்ந்தான் நந்தா.

பின் அவளுக்கு முன்பு ரெடியாகியிருந்தவன், வெளியே வந்து, தன் சித்தியிடம் கூறி உணவினை பெற்றபடி மாடியிலிருந்த அவனது அறைக்கு விரைந்தான்.

“கிளம்பலாமாங்க?” அவள் கேட்க, அவளது வாயில் இட்லியை பிய்த்து ஊட்டி விட்டிருந்தான் நந்தா.

“நேரமாச்சு”

“நேரமானா ஆகட்டும். நீ பசி தாங்க மாட்ட. அப்படியே சாப்பிடு.” என்றவன் அவள் ஒவ்வொன்றாக எடுத்து வைக்க, அவள் பின்னே ஓடிச் சென்று இட்லியினை ஊட்டிவிட்டு, அவளது சிவந்த அதரங்களை அழகாய் துடைத்துவிட்டே நகர்ந்தான் இந்த காதல் கணவன்.

“ஆல் தி பெஸ்ட் அண்ணி கலக்குங்க.” என்று சர்வா தொடக்கம், வீட்டிலுள்ள அனைவரும் அவளுக்கு வாழ்த்துக்கள் கூற, சௌந்தர்யா கடவுளிடம் தீபாராதனை காட்டி அவள் முன் கொண்டு வந்தார். கடவுளின் ஆசிகளை பெற்றவள், தன் மாமனாரிடமும், தாத்தாவிடமும் காலில் விழுந்து ஆசிகளை பெற்றாள்.

“நல்லா பேசு மதுமா. உனக்கு எப்படி பேசணும்னு நல்லாவே தெரியும். ஆனால் இவன் டேன்ஜர்… உன்னை குழப்பி விட்டாலும் விடுவான்.” சந்திரலேகா நந்தாவை சுட்டிக்காட்டிக்கூற,

“என் மருமகனுக்கு என்ன கொறைச்சல்? அவன் பேசுனா சரியா தான் இருக்கும்.” நந்தினி தன் தமக்கைக்கு எதிராக பேச,

“அப்படி சொல்லுங்க மை டார்லிங்” என்று அவரின் தோளின் மீது கைபோட்டுக் கொண்டு கெத்தாக நின்றான் நந்தா.

“அது சரி நேரமாச்சு. என் பேத்தியை கூப்பிட்டு கிளம்புடா.” என்று தாத்தா விரட்டவும், பின் வீட்டிலுள்ள அனைவரிடமும் விடைபெற்ற இருவரும், புகழ்பெற்ற யூடூயூப் சேனல்களில் ஒன்றான லிட்டில்  செலபிரிட்டீ டாக்கிஸ் என்னும் சேனல் அமைந்திருந்த வளாகத்தை நோக்கி சென்றிருந்தனர்.

இவர்கள் இணைந்த பின், நந்தா தான் அவளை மேல் படிப்பு படிக்க சொல்லியிருந்தான். அவளுக்கோ அதில் ஆர்வம் இல்லாது போக, வலையொளி (யூடியூப்) சேனலை உருவாக்க சொல்லி யோசனையளித்தான். அவனது யோசனையின் பேரில் உருவான சேனல் தான் மது டைரிஸ். ஆரம்ப காலத்தில் பெரிதாக ரீச் எதுவும் இல்லாது போக, படிபடியாக வீடியோக்கள் பதிவிட்டு ஆரம்பித்த ஒரே வருடத்திற்குள் நல்ல வரவேற்பை பெற்றது இவர்களது சேனல். அதன்பின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சைபர் கிரைம் என்னும் தலைப்பில் அன்றாட வாழ்வில் நடக்கும் சைபர்க்ரைம் பிரச்சனைகளையும், அதை எப்படி தவிர்க்கலாம் மற்றும் அதனைக் கடந்து வருவதை பற்றியும் அவள் பேச, நாளடைவில் அந்த வீடியோ நல்ல வைரலாக மாறியிருந்தது.

யூடியூபில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரமான மதுவர்ணிகாவை தங்களது சேனல் சார்பாக பேட்டி எடுப்பதற்காக அழைப்பினை விடுத்திருந்தனர் லிட்டில் செலபிரிட்டி டாக்கிஸ். பெண்ணவளது ஒவ்வொரு உழைப்பிற்கும் பின் உறுதுணையாக இருந்தது நந்தா மட்டுமே. அவள் பேசுவதை வீடியோ எடுப்பது தொடங்கி, வீடியோ எடிட்டிங் வரை அனைத்திலும் அவன் பக்கபலமாக நின்றிருந்தான்.

இருக்கையில் அமர்ந்திருந்த மதுவர்ணிகாவிற்கு லேசான பதட்டம் இருந்தது. செட்டின் பின் நின்றிருந்த நந்தா, கண்களாலே தைரியம் சொல்ல, அவனது சிறு கண்ணசைவில் நிமிர்ந்து அமர்ந்துக் கொண்டவள், ‘இப்போ ஓகேவா?’ என்று கருவிழியை அசைத்துக் கேட்க, ‘டபுள் ஓகே’ என்பது போல கண்ணசைத்தான் நந்தா.

“ஹாய் மதுவர்ணிகா. ஆரம்பிக்கலாமா?” என்று ஆங்கர் சாரா கேட்க, “கண்டிப்பா” என்றாள் பளிச்சென்ற புன்னகையில்.

“ஹாய் வணக்கம் மக்களே, இன்றைக்கு நம்ம நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருக்கும் சாமானியன் டூ டாப் யூடியூபர் வரிசையில் இன்று ஜொலிக்கும் நட்சத்திரம் மிஸ்சஸ் மதுவர்ணிகா ரகுநந்தனை தான் பார்க்க போகிறோம். அவங்களை பத்தி அவங்களே சொல்வாங்க. சொல்லுங்க மதுவர்ணிகா நாங்க உங்களை பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலாக இருக்கோம்.”

“வணக்கம் நான் மதுவர்ணிகா ரகுநந்தன். ஃபேஷன் டிசைனர். பிறந்தது கோயமுத்தூர், கல்யாணம் பண்ணி வந்தது ஈரோடு. நான் யாருனு எனக்கே தெரியாம இருந்த போது, என்ன மத்தவங்க தெரிஞ்சுக்குற அளவுக்கு மாத்துனது எங்க சேனல் மட்டுமல்ல என் கணவர் நந்தா தான்.” என்று புன்னகையுடன் முடித்தாள்.

“ஒவ்வொரு பொண்ணோட வெற்றிக்கு பின்னும் கணவரது சப்போர்ட் எவ்வளவு முக்கியம்னு உங்க பதில்ல இருந்து தெரியுது. இப்போ மெயின் கேள்விக்கு இறங்கலாம் சாதாரண லைஃப் ஸ்டெயில், உங்க ரொட்டின் வொர்க், அப்படி ஆரம்பித்த உங்க பயணம் சமூகம் சார்ந்து ஒரு கட்டத்துல மாற ஆரம்பிச்சுது? எப்படி அந்த தாட்ஸ் உங்களுக்கு வந்துச்சு?”

“நான் ஆரம்பிக்கும் போது சரியா சொல்லணும்னா நூறு சப்ஸ்கிரைபர்ஸ்ல தான் தொடங்குனோம். அப்போவே என் கருத்துக்களை சொல்லியிருந்தா? எந்தளவுக்கு மக்கள் கிட்ட என் கருத்து போயிருக்கும்னு தெரியலை. முதல்ல என்னோட தன்னம்பிக்கையை அதிகரிக்க நினைச்சேன். லைஃப் ஸ்டெயில் வீடியோஸ் தவிர்த்து நம்ம எதாவது பண்ணனும்னு எண்ணம் இருந்தது. அப்போ என் ஹஸ்பெண்ட் சொன்ன விசயம், “பிடிச்சது பண்ண தானே நீ யூடியூப் ஸ்டார்ட் பண்ண? இன்னும் நீ தயங்கிகிட்டே இருந்தா எப்படி. தைரியமா பண்ணு உனக்கு நான் இருக்கேன்”னு  சொன்னாரு அப்போ ஆரம்பிச்சது தான் சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு வீடியோஸ்.”

“வாவ்..! கொஞ்சம் சைபர்கிரைம் பத்தி சிம்பிளா சொல்றீங்களா?”

“சைபர் கிரைம் வலைதளங்கள் இன்டர்நெட் மூலமா செய்யப்படுற மோசடியை தான் சைபர்கிரைம்னு சொல்றோம். அது பண மோசடியாவும் இருக்கலாம், ஆள் மாறாட்டமாகவும் இருக்கலாம். நான் அதுல ஸ்பெசிஃபிக்கா எடுத்தது விமன்ஸ் என்னென்ன பிராப்ளம்ல சிக்குறாங்க. அதுல இருந்து எப்படி அவங்க வெளிய வரலாம்னு தான். இந்தியாவுல 2012 வது வருடத்துல 3477 சைபர் கிரைமா இருந்த குற்றங்கள் இப்போ 2021 ல 50,035 குற்றங்களாக அதிகரித்து இருக்கு.

ஒரு பொண்ணோட போன் நம்பர் தொடங்கி, அவங்க போட்டோ பயன்படுத்தி மார்பிங் பண்ணி பிளாக்மெயில் பண்ற கேவலமான பிறவிகளும் அதிகரிச்சுட்டே தான் இருக்காங்க. நம்ம பொழுது போக்குக்கு பயன்படுத்துற ஒவ்வொரு அப்ளிகேஷன்லயும் ஆபத்தும் சேர்ந்தே இருக்கு.”

“வெல். இன்றைய காலத்துல என்ன மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் வருது? அப்போ இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்துவதையே பெண்கள் நிறுத்தணுமா என்ன? அது நடக்காத காரியமாச்சே?”

“நிச்சயமா இல்லை. எதுக்கு நம்ம நிறுத்தணும்? அதுக்கான அவசியமும் இல்லை. நமக்கு தெரியாதவங்களை தவிர்க்கலாம். சிலர் நல்லவங்க மாதிரி பேசி நடிப்பாங்க, அப்படி பட்டவங்ககிட்ட தான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். சப்போஸ் நீங்க யாரோ ஒருத்தரால ஏமாறப்பட்டு நிற்குறீங்கனா தைரியமா வெளிய வாங்க. உங்க குரல் என்னைக்குமே இது மாதிரி ஆட்களுக்காக பயப்படக்கூடாது.”

“இதுல பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்னு அவங்க பிளாக்மெயிலுக்கு அடி பணிஞ்சு போறாங்க. இல்லை தற்கொலை முயற்சி செய்றாங்க. அவங்களுக்கு நீங்க சொல்ற ஆலோசனை என்ன?”

“ஆலோசனை சொல்ற அளவுக்கு நானும் பெரிசா எதுவும் பண்ணதில்லை தான். ஆனால் ஒன்னு பாதிக்கப்பட்ட நம்ம ஏன் தற்கொலை செய்யணும்? உன்னை அவன் நியூடா மார்பிங் பண்ணி போடுறதுல இதுல உங்க தப்பு எங்க இருக்கு? இல்லை காதல் வலையில வீழ்த்தி நீ அவனோட பேசுன காதல் வார்த்தைகளை வீட்டுக்கு அனுப்புவேனு பிளாக்மெயில் பண்ணா நம்ம ஏன் பயப்படணும்? இங்க பயம் தான் அவங்க பலமா இருக்கு. கெட்டது செய்ற அவங்களே பயப்படாதப்போ, நம்பி ஏமாந்துப்போன நம்ம ஏன் பயப்படணும்?

தைரியமா எதிர்த்து நிற்கணும். நம்மளை ஏமாத்துனவன் முன்னாடி செமையா வாழ்ந்துக் காட்டணும். ஆடையில்லா உடல்ல ஆபாசம் இல்லை. பார்க்குற பார்வையிலும் நடந்துக்கிற செயல்லையும் தான் ஆபாசம் இருக்கு. என்னைக்குமே துணிவோடு இருப்போம். நம்ம துணிவே நமக்கு துணை.” என்றவளது பார்வை தன்னவனின் மீது படிந்து விட்டு மீள, நந்தாவோ அவளை பெருமை பொங்க பார்த்தான்.

அவன் தந்த வார்த்தைகள் தான் அவளுக்கு பலமாய் மாறியிருந்தது. நந்தா போன்ற ஆண்கள் இருக்கும் வரை பெண்களின் பாதுகாப்பு உயர்ந்துக்கொண்டே செல்லும்.

“ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க மதுவர்ணிகா. கடைசியா ஒரு கேள்வி? உங்களோட கல்யாணம் காதல் கல்யாணமாமே? அதுவும் உங்க ஹீரோ பல சாகசங்கள் எல்லாம் பண்ணி கல்யாணம் பண்ணதாக கேள்வி பட்டோம்.” சாராவின் கேள்வியில் பெண்ணவளின் முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை உருவானது.

“என்ன அவர் கேட்க சொன்னாரா?” என்றாள் வெட்கம் கலந்து.

“இல்ல இல்ல நாங்க தான் கேட்கிறோம்.”

“எங்க கல்யாணம் ரொம்ப வித்தியாசமானது தான். காதல் எவ்வளவு அழகானதுனு அவரு கிட்ட தெரிஞ்சுகிட்டேன்.” என்றவளின் பார்வை அவனைத் தேட, அவனோ அங்கிருந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்க,

‘அடப்பாவி மனுசா? உன்னை பத்தி பெருமையா பேசுனா, அங்க யாருகிட்டடா பேசிட்டு இருக்க?’ என்றவள் மனதில் அவனை வறுத்தெடுத்தாள்.

“அப்போ உங்களுக்குள்ள சண்டையே வராதா?” சாராவின் கேள்வியில் நிமிர்ந்தவள்,

“ஏன் வராது? ரொம்ப நிறைய வரும்? ஊடல் இல்லாத வாழ்க்கையில சுவாரஸ்யம் இருக்காதுங்க” என்றவளோ, பேசிக்கொண்டே பார்வையால் அவனை முறைக்க, எதேச்சையாக திரும்பியவனுக்கு அவளது முறைப்பின் அர்த்தம் ஓரளவு புரிந்துப்போனது.

‘செத்தடா இன்னைக்கு’ என்றவனோ, “எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைடி.” என்று செய்கை செய்து காட்டினான்.

பின் ஒரு சில கேள்விகளில் நேர்காணல் முடிந்திருக்க, “வீட்டுக்கு வா? உனக்கிருக்கு.” என்று தன்னவனை முறைத்துவிட்டு காரில் ஏறிக்கொண்டாள் பெண்.

“மது… செல்லாகுட்டி நான் ஒண்ணுமே பண்ணல. அந்த பொண்ணு தான் வந்து பேசுச்சு.” என்றவன் எவ்வளவு கெஞ்சியும் அவள் சமாதானம் அடையவே இல்லை.

பின் இருவரும் வீட்டிற்கு வர, அங்கு அக்சரா வீட்டு உறவினர்கள் சிலர் வந்திருந்தனர். அக்சரா ஏழு மாதம் முழுகாமல் இருப்பதால் வளைகாப்பு முடிந்த கையோடு வீட்டிற்கு வந்திருந்தாள் பெண்.

“வாம்மா மது, நல்லா பேசுனியா?” சௌந்தர்யா கேட்க, “அது எல்லாம் பக்கா அத்தை.” என்றாள் புன்னகைமுகத்துடன்.

“நந்தா பொண்டாட்டியா இது? எப்படி இருக்கமா? அப்புறம் கல்யாணமாகி இரண்டு வருசம் ஆகுது. விசேஷம் எதுவும் இல்லையா?” என்று மனதை நெருடும் கேள்வியினை வந்தவர்களில் மூத்த பெண்மணி கேட்க, மதுவின் முகம் வாடிப்போனது என்றால் காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு உள்ளே வந்த நந்தாவின் முகம் கோபத்தில் சிவந்தது.

‘என்ன கேள்விடா இது? வெட்கமே இல்லாமல் கேட்குறாங்க?’ என்று நினைத்தவன் அடுத்த நொடியே, “என்ன மாமி உங்க வீட்ல எந்த விசேஷமும் இல்லையா? இங்க வந்து கேட்டுட்டு இருக்கீங்க?” சற்று காட்டமாகவே கேட்டு விட்டான். அப்பெண்மணியின் முகமோ அவமானத்தில் கறுத்துப்போனது.

“நான் இப்போ வந்திடுறேன்” என்று வலுக்கட்டாயமாக புன்னகைத்தபடி மது அறை நோக்கிச்செல்ல, வீட்டிலிருந்த மற்றவர்கள் அவளை எண்ணிக் கவலைக்கொண்டனர்.

“போ நந்தா. போய் மதுவை பாரு.” என்று சௌந்தர்யா கூற, “சரிங்க சித்தி” என்றவன் பதட்டத்துடன் அவளைக்காண ஓடினாலும் அவன் பார்வை அந்த மாமியை முறைத்துவிட்டே சென்றது.

கட்டிலின் மீது அமர்ந்திருந்த மதுவின் முகத்தில் ஒருவித பதட்டம் தெரிந்தது. உள்ளே வந்தவனும் அவளை நோக்கி விரைந்து வந்து, பெண்ணவளின் முன் மண்டியிட்டு அமர்ந்துக் கொண்டபடி முகம் தாங்கினான்.

“ஏய் மது, அவங்க எல்லாம் ஒரு ஆளுனு அவங்க சொல்றத கேட்டு அப்செட் ஆகுவியா நீ?”

“இல்லைடா அது வந்து.”

“நீ எதுவும் பேசாத… நமக்கு தெரியும் எப்போ குழந்தை பெத்துக்கணும்னு. அடுத்தவங்க சொல்றதுக்காக எல்லாம் பண்ண முடியாது.”

“நந்து… உங்கிட்ட ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்டா?”

“சொல்லு மது?”

“எனக்கு நாள் தள்ளி போயிருக்கு. ஐ திங் ஐ அம் பிரெக்னெண்ட்.”

“என்ன சொன்ன?” அவன் தான் கேட்டது கனவா? நினைவா என்ற அதிர்ச்சியில் ஏறிட்டான்.

“எஸ் அப்படி தான் தோணுதுடா.”

“ஜூஜிலி இது ஏன்டி முன்னாடியே சொல்லலை? அய்யோ நேத்து வேற கலவரமே நடந்துச்சே.”

“கன்பார்ம் பண்ணிட்டு சொல்ல நினைச்சேன் நந்து‌. கிட் கூட வாங்கி வெச்சிருந்தேன்டா.”

“இப்போவே செக் பண்ணு.” என்றவன் அவளை குளியலறைக்குள் வம்படியாக அனுப்பி வைக்க, அவளும் பரிசோதனை செய்து வந்தவள் கிட்டை அவனிடம் காட்ட, அதில் தெரிந்த இரண்டு கோடுகளை கண்டவனது கண்களில் அவனையும் மீறி கண்ணீர் சுரந்தது.

“ம…மது நான் அப்பாவாகப் போறேனா?” என்று கண்கள் கலங்க ஏறிட்டான். இரண்டு வருடங்கள் கழித்தல்லவா அவ்வரம் கிடைத்திருந்தது.

அதற்குள் வெளியாட்களின் பேச்சுக்கள் வேறு, நம்மை சுற்றியுள்ள ஆட்களுக்கு சொல்லவா வேண்டும்? முடிந்தவரை யாரையும் விசேஷமா? விசேஷம் இல்லையா? என்று கேட்பதை தவிருங்கள்.

“எஸ் நந்து. நம்ம டாடி மம்மி ஆகப் போறோம்” என்றவள் பூரிப்பில் கூறி முடிக்க, அவனோ மண்டியிட்டு தரையில் அமர்ந்தவன் அவளது வயிற்றினை சுற்றி வளைத்து பற்றிக்கொண்டான்.

“பாப்பா…” என்றவன் அவளது வயிற்றில் முத்தமிட, அந்நொடி அவனது செயலில், கண்கள் கலங்கிப் போய் பார்த்தாள்.

அடுத்த நொடியே அவனது சிகையை வருடியவள், அவனுக்கு நிகராக மண்டியிட்டு அமர்ந்தபடி அவன் மீது தாவ, அவளை அணைத்துக்கொண்டே தரையில் சரிந்தவன், பெண்ணவளின் உச்சியை முகர்ந்து முத்தமிட்டான். அந்த ஒற்றை முத்தத்தில் காதல் பெருக்கெடுத்திருந்தது. மோதலும் காதலும் கலந்த அவர்களது காதலை அழகாக்க ஒரு குட்டி தேவதையும் வரப் போகிறாள். ஒருவருக்குள் ஒருவர் மீது மயங்கிய மதுரங்களின் வாழ்வில் என்றென்றுமே புன்னகை மலர் வீசட்டும்…

                       முற்றும்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்