
இறுதி அத்தியாயம்
சிவநாதன் கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து இருக்க, அவரின் முன்னால் ஒரு காகிதத்தை வைத்தான் விஜயன்.
குடும்பத் தலைவர் கேள்வியாய் பார்த்திட, “யூபிஎஸ்சி எக்ஸாம் ரிசல்ட் ப்பா. பாஸ் பண்ணிட்டேன்.”
“அதை எதுக்கு என்கிட்ட வந்து கொடுக்குற.?”
“எப்பவாது உங்கக்கிட்ட எதுவும் வேணும்னா, கேட்க சொன்னீங்களே?”
“சொல்லு, என்ன வேணும்?”
“சஞ்சனா வீட்டுக்கு நான் போறப்ப, என்னோட அப்பாவா நீங்களும் கூட வரணும்!”
“ம்ம்..” என்று தலையை மட்டும் அசைத்தார் சிவநாதன்.
அவன் மெலிதான புன்னகையுடன் அங்கிருந்து நகர, முகம் மலர அந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தார் தந்தையானவர்.
*
வேலை முடிந்து, பேருந்து நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தாள் சஞ்சனா.
அவளின் இரு சக்கர வானம் பழுதடைந்து சரி செய்யும் பணியும் இருப்பதால், கடந்த இரு தினங்களாக பேருந்து பயணம் தான்.
சில தினங்களிற்கு முன்னர் வேலை முடிந்த பின்னர் வீட்டிற்குத் தாமதமாய் வருவதை பற்றி அன்னையும் தந்தையும் பேசி இருந்ததால், அதுமுதல் தனது நடவடிக்கைகளில் சற்று கூடுதலாய் கவனம் செலுத்தத் துவங்கி இருந்தாள்.
தற்போது, பத்து மணிக்கு மேல் வெளியே இருப்பது இல்லை. அதற்கு முன்பாகவே வீட்டிற்கு வந்துவிடும் பழக்கத்தைக் கடைபிடிக்கிறாள்.
வழியில் ஒரு நடுத்தர வயது தம்பதி ஆளிற்கு ஒன்றாய் சுமைகளுடன் அவளைக் கடந்து சென்றனர்.
மனைவி பின்னால் தொடர.. அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடி, “கொஞ்சம் வேகமாத்தான் நடையேன்!” என உரைத்து முன்னால் நடந்தார் கணவர்.
சஞ்சனாவிற்கு இதுபோல் விஜயனுடன் இணைந்து சிலமுறைகள் வெளியில் சென்று வந்தது நினைவிற்கு வந்தது.
ஆனால் இவர்களைப் போல் ஒருவரை விட்டு ஒருவர் விலகி நடந்தது இல்லை. அவள், அவனின் கையை இறுகப் பற்றிக் கொண்டு கண்களில் கனவு மிதக்க ஏதேனும் பேசிக் கொண்டே வருவாள். ஆடவனின் பணி, புன்னகை மாறாமல் மனைவியை கவனிப்பது மட்டுமாகத் தான் இருக்கும்.
உண்மையில் ஆடவன் அதனை மிக நேர்த்தியாகவே ஒவ்வொரு முறையும் செய்திடுவான். அவளை விட்டு ஒரு அடி முன்னெடுத்து வைக்க மாட்டான். அதேபோல் பின் நகர்பவனும் இல்லை.
மனைவியின் நடை வேகத்திற்குத் தக்கபடி தன்னுடையதை மாற்றிக் கொள்வான். அதில் இருந்து தொடங்கியது தான், பாவையின் குணத்திற்கு தனது செயல்களின் மூலமாய் ஈடுகொடுக்கும் பழக்கமும்.
அவற்றை எல்லாம், அன்று புரிந்து கொள்ள மனம் முற்படவில்லை. தற்போது மற்றவர்களை காணும் போது தான், அவர்களோடு தன் வாழ்வை பொருத்திப் பார்த்து உணர முடிந்தது.
வெகு தினங்கள் ஆயிற்று, இதுபோல் மற்ற மனிதர்களின் செயல்பாடுகளைப் பார்வையிட்டு. அதுவும் கூட இலக்கின்றி அவர்களின் மீது விழிகள் பதியுமே அன்றி, ஆழ்ந்து நோக்கிட மாட்டாள்.
கணவனை விட்டுப் பிரிந்து பெற்றோரின் வீட்டிற்கு வந்த பின்னர், அவளுள் நடந்த சில மாற்றங்கள் மற்றும் புரிதலின் காரணமாக, தன்னை விடுத்துச் சுற்றத்தையும் சற்று கவனிக்கத் தொடங்கி இருந்தாள்.
காதலுக்காக இல்லத்தை விட்டு வெளியேறிய பெண், சுவற்றில் அடித்த பந்தாய் மீண்டும் திரும்பி வருவது, அக்கம்ப க்கத்தாருக்குக் கிடைத்திருக்கும் புறம் பேசுவதற்கு வசதியான முக்கிய கரு அல்லவா?
வேலைக்காகக் கிளம்பிச் செல்லும் பொழுதும் வரும் பொழுதும், சுற்றி இருப்பவரின் பார்வையில், தனது காதல் கேலிப் பேச்சாய் நாளும் மாறி வருவதை உணர்ந்தே இருந்தாள்.
அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை எனினும், மனதிற்குள் தினம் தினம் போராட்டம் நடந்து கொண்டிருந்தது விஜயனுடன் பகிர்ந்த நாட்களின் சாயலுடன்.
அவனோடு இருந்த தருணங்களில், அவளிற்காக நில்லாமல் ஓடி இருக்கிறான்.
பணி செய்து களைத்து வந்த போதும், ‘வெளிய கூட்டிட்டு போறியா?’ எனக் கேட்டபவளின் விருப்பத்திற்காக, உடன் இணைந்து அலைந்திருக்கிறான்.
இதற்கு எல்லாம் மறுமொழியாய் ஆடவனிற்கு மனைவியிடம் இருந்து எதுவும் கிட்டியது இல்லை, தாம்பத்திய வாழ்வு உட்பட.
அவள் தயாராக இருந்த பொழுதும் கூட, விஜயன் தான் மறுத்தான்.
“நீ என்னை லவ் பண்ணவே இல்ல விஜி!” என சொல்லிவிட்டு வந்தவளிற்குத் தற்போது தான் புரிந்தது, ‘அவன் தன்னைக் காதலிக்க மட்டுமே செய்திருக்கிறான். அதில் துளியும் கூட காமமோ அல்லது வேறு எவ்வித உணர்வுகளோ கலந்திருக்க வில்லை!’ என.
ஆடவன் கொண்ட காதலை, தான் அறிந்த அனைத்து வழிகளின் மூலமாகவும் அவளிற்குள் சிறிது சிறிதாய் உட்புகுத்தி இருக்க.. பிரிந்து வந்த நிலையில், அது தற்போது மனதில் அரங்கேறத் தொடங்கியது.
*
வார இறுதி தினம் என்பதால் இரு ஜோடிகளும் ஒன்றாய் இணைந்து இருந்தனர்.
நவனையும் கனியையும் தனது இல்லத்திற்கு அழைத்து இருந்தாள் ரம்யா. அன்றைய சமையல் அவளுடையது தான்.
திருமணம் முடிந்த உடனேயே புதுமண தம்பதியருக்கு விருந்து வைத்திட நினைத்தாள். ஆனால் சூழலும், நெருக்கிய அலுவலகப் பணிகளும், தொடர்ந்த மருத்துவமனை சிகிச்சையும் அதற்கு ஒத்துழைக்காது போனது.
முதலிலேயே இதைச் செய்திருந்தால், கனிக்குள் உருவான அவளைப் பற்றிய தவறான புரிதல் கூட அப்பொழுதே மாறி இருக்கக்கூடும்.
என்ன செய்திட இயலும்? அனைத்தும் காலம் நிர்ணயித்த விதிகளின் கட்டயாம்!
கனியிடம் சந்தன நிறத்திலான பெட்டி ஒன்றை நீட்டிய ரம்யா, “பிலேட்டட் பர்த்டே விஷ்ஷஸ்!” என்றிட, “என்னக்கா?” எனப் புரியாமல் வினவினாள் அவள்.
மனைவியின் அருகே இருந்த நவநீதன், “முடிஞ்சு போனா உன்னோட பிறந்தநாளுக்கு விஷ் பண்ணுறா.”
“தேங்க்ஸ் அக்கா. ஆனா, இது என்ன?”
“உன்னோட பர்த்டேக்கு வாங்கின கிஃப்ட். அன்னைக்கு நைட் உங்களை டின்னருக்குக் கூட்டிட்டுப் போயி, கொடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா, பிஸினஸ் டிரிப் போக வேண்டியதா ஆகிடுச்சு. இவன்கிட்ட கொடுத்திடுடானு தந்தா, நீயே வந்து கொடுத்துக்கோனு சொல்லிட்டான்!” என்று நண்பனின் தோளில் விளையாட்டாய் அடித்தாள்.
“ஆமா! கிப்ட் வாங்குறது நீ, கொடுக்கிறது நானா?” என உரைத்த நவன், “சரி ஓப்பன் பண்ணு கனி, இந்த இம்சை அப்படி என்ன வாங்கி இருக்கானு பாப்போம்?”
பெட்டியைத் திறந்தாள் பாவை.
வெண்ணிற கற்கள் பதித்த வேலைப்பாடு மிகுந்த கைச்சங்கிலி, தங்க வண்ணத்தில் மிளிர்ந்தது.
கணவன் மனைவி இருவரும் விழிகளிலும் வியப்பு மேலிட, “ஹேய், நான் வாங்குன வாட்சோட டிசைன்லயே இருக்கு.?” என்றான் ஆடவன்.
“அதோட செட் தான்டா. கையில போடுறப்ப மேட்சிங்கா இருக்கும்னு, இதை தனியா எடுத்து என்பேர்ல பில் போட்டுட்டேன்.”
“நண்பி!” என அவன் தோளோடு அணைத்துக் கொள்ள, “கையை எடுடா, கிச்சன்ல இப்பதான் வேலையை முடிச்சிட்டு வர்றேன். ஃபுல்லா வியர்வை ஸ்மெல். கதிர் டைனிங் டேபிள்ல எல்லாத்தையும் எடுத்து வை. நான், போயி குட்டியா ஒரு குளியலைப் போட்டு வந்துடுறேன்!” என இரு ஆண்களிடமும் உரைத்து விட்டு நகர்ந்தாள்.
பத்து நிமிடங்களில் அவள் திரும்பி வந்த பொழுது, உணவு வகைகள் முதல் அருந்தும் நீர் வரை கூடத்தில் இருந்த மேஜையில் அடுக்கி இருந்தான், அந்த வீட்டின் தலைவன்.
“ரமி வந்துட்டா. நவா வா. கனி நீயும் வந்து உட்காரும்மா.” என்று கதிர் அழைத்திட, நால்வரும் உணவு மேஜையைச் சுற்றி அமர்ந்தனர்.
காய் வகைகளோடு பரிமாறக் கூடிய சற்றே பெரிதான அளவில் ஒவ்வொருவரின் முன்பும் தட்டினை வைத்த ரம்யா, “கதிர் ஸ்வீட் பாக்ஸ் எங்க?” என வினவிட, “வண்டியில இருந்துச்சே, நீ எடுத்துட்டு வரலயா?” என்றான் அவளின் மணாளன்.
“நீதான எப்பவும் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வருவ? இன்னைக்கு என்ன, புதுசா என்கிட்ட கேட்கிற?”
“கால் வந்துச்சுனு பேசப் போனேன். உன்கிட்ட சொன்னேன் ரமி, ஸ்வீட் பாக்ஸை எடுத்துட்டு போனு.”
“சரி இப்ப என்ன, போய் எடுத்துட்டு வா!” என்றவள் உணவைப் பரிமாற, வண்டி சாவியுடன் வெளியே சென்றான் அவன்.
அதுவரை நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளை கவனித்து இருந்த கனி, “ரமி அக்கா!”
அழைப்பில் அவள் பக்கம் திரும்பிய மூத்தவள், “என்ன குட்டித் தங்கச்சி?”
“நான் ஒன்னு சொல்லவா?”
“என்ன சொல்லப் போற?”
“உங்க வீட்டுக்காரர் குடிக்கிறாருனு தெரியும். ஏன் குடிக்கிறாருனும் உங்களுக்குத் தெரியும். அதை சரிபண்ண என்ன செஞ்சீங்க.?”
“நீ உன்னைத் தாழ்வா நினைச்சுக்க எந்த அவசியமும் இல்லனு எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். ஆனா அவன் அதைப் புரிஞ்சுக்க மாட்டிறான். இதுக்கு மேலனா, கவுன்சிலிங் தான் கொடுக்கணும். அதைப் பத்திப் பேசுனா, தப்பா எதுவும் நினைச்சிடுவானோனு யோசனையா இருக்கு.”
“வார்த்தையா சொல்லுறது வேற. செய்யிறது வேற அக்கா!”
நவனும் ரமியும் அவளைப் புரியாமல் பார்க்க, “முதல்ல அவருக்கிட்ட, உங்க வீட்டுல வேலை செய்யிற வேலைக் காரங்களை அதிகாரம் பண்ணுற மாதிரி நடந்துக்கிறதை நிறுத்துங்க. அவரு உங்களுக்குப் புருஷன்.
அந்த ஸ்வீட் பாக்ஸை, அவரு தான் எடுத்துட்டு வரணுமா.? நீங்க போகலாம். உங்க ஃப்ரெண்ட் போகலாம். என்கிட்ட சொல்லி இருந்தா, நான் கூட எடுத்துட்டு வந்து இருப்பேன். அவர் இப்படி இருக்க, நீங்கதான் காரணம் அக்கா. அவருக்கு முன்னாடி நீங்கதான் மாறணும்!” என்றிட, ஓர் ஆழ்ந்த அமைதி நிலவியது அவ்விடத்தில்.
உண்மை தான். மாற்றம் என்பது முதலில் நம்மிடம் இருந்து தான் துவங்க வேண்டும். அதன் பிரதிபலிப்பாய் எதிரில் இருப்பவரிடமும் அம்மாற்றம் உண்டாகும்.
நண்பர்கள் இருவரும் எதையோ உணர்ந்தது போல், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ரம்யாவிற்குள் எங்கெங்கோ மறைந்து ஒளிந்து நீர்த்துப் போய்க் கொண்டிருந்த காதல், கனியின் சொற்களில் மன அரங்கத்தில் ஏறத் துவங்க, “ரமி, கார் கீயை மாத்தி எடுத்துட்டுப் போயிட்டேன்!” என்றபடி வந்தான் கதிர்.
“சரி பரவாயில்ல, வந்து சாப்பிடு. நான் போய் எடுத்துட்டு வர்றேன்!” என்று இருக்கையில் இருந்து எழுந்தாள் அவள்.
“ஏய்! நீ எதுக்கு, நானே போயிட்டு வர்றேன்!”
“உட்காருடா. ஆறு மாடி தான, லிஃப்ட்ல நான் போயிட்டு வர மாட்டேனா.? யாரும் என்னைக் கடத்திட்டு எல்லாம் போக மாட்டாங்க.” எனச் சிரித்து கணவனது தோளில் கரம் பதித்து அமர வைத்து விட்டு, வெளியே சென்றாள்.
கதிர் ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, “சாப்பிடுங்க!” என உணவைப் பரிமாறினாள் கனி.
நவன் தன் மனைவியையே பார்த்திருக்க.. அதை கவனித்த மற்றவன், “என்ன பாஸ், வொய்ஃபை இப்படி சைட் அடிக்கிறீங்க.?”
கனி கணவனை ‘என்ன?’ என்பது போல் பார்க்க, “ஏன் பாஸ், வொய்ஃபை சைட் அடிக்கிறது தப்பா என்ன?”
“நான் எங்க தப்புனு சொன்னேன்?”
“சரி, நீங்க சொல்லுங்க. லாஸ்டா எப்ப நீங்க ரமியை சைட் அடிச்சீங்க?”
“அது.. திடீர்னு கேட்டா எப்படி.?” என அவன் திணற, “இப்பதான். ரமி அக்கா வெளிய போகும் போது!” என்று சிரித்தாள் கனி.
“எஸ் எஸ். என் பொண்டாட்டி ரொம்ப ஷார்ப். எப்படிக் கரெக்டா சொல்லுறானு பாருங்க!” என நவன் உரைத்திட, மெலிதான சிரிப்பலை பரவியது.
“ரொம்ப குடிக்காதீங்க சார். உடம்புக்கு நல்லது இல்ல. உங்களுக்கு ஏதாவது ஆச்சுனா, ரமி அக்கா என்ன செய்யிவாங்க? பெத்தவங்க ஆதரவு கூட, அவங்களுக்கு இல்ல இப்ப. உங்களுக்காகக் தான குடும்பத்தை விட்டு வந்தாங்க? அப்ப, நீங்க அக்காவை எப்படி பார்த்துக்கணும்?” என கனி வினவிட, “புரியிதுமா. இனி, குடிக்கிறதை மெல்ல குறைச்சுக்கிறேன்!” என்று வாக்களித்தான் அவனும்.
வாயிலில் நின்று அதைக் கேட்டிருந்த ரம்யா மலர்ந்த முகத்துடன் உள்ளே வர, அடுத்ததான நிமிடங்கள் இனிமையான நிகழ்வுகளாய் மாற்றம் பெற்றன.
அவர்களின் கவனத்தைக் கலைக்கும் விதமாய் ஒலித்தது, நவனின் கைப்பேசி.
மறுபுறம் பேசியது, அவனின் அன்னை செல்வாம்கை.
“ஹலோ.. சொல்லுங்க அம்மா.”
“நவநீ உனக்கும் கனிக்கும் கல்யாணம் முடிஞ்சு, அஞ்சாவது மாசம் ஆரம்பிக்கப் போகுது. ரெண்டாவது வெள்ளிக்கிழமை நல்ல நாளா இருக்கு. இங்க, ஊருக்கு வந்துடுறீங்களா? தாலி பிரிச்சுக் கோர்த்திடலாம்.”
“ம்ம்.. ஓகேம்மா.”
“சரிப்பா. மருமக எப்படி இருக்கா?”
“நல்லா இருக்கா. பேசுறீங்களா?”
“சரி, கொடு!”
கைப்பேசியை ஒலிப்பெருக்கிக்கு மாற்றி கனியின் அருகே வைத்தான்.
“எப்படி இருக்கீங்க அத்தை? மாமா என்ன செய்யிறாரு?”
“நல்லா இருக்கேன். இப்பதான் போயி ஜோசியரைப் பார்த்துட்டு வந்தாரு அவரு. நவநீகிட்ட விபரம் சொல்லி இருக்கேன். உன்னோட வீட்டுலயும் பேசியாச்சு. நீங்க, முதல் நாளே ஊருக்கு வந்துடுங்க.”
அவள், “சரிங்க அத்தை!” என்றிட, “ரெண்டு பேரும் உடம்பைப் பார்த்துக்கோங்க!” எனப் பேச்சை முடித்தார் மூத்தவர்.
இவர்களது உரையாடலைக் கேட்டிருந்த ரம்யா, “நவா, என்ன ஃபங்ஷன்?”
“ஏதோ தாலி பிரிச்சுக் கோர்க்கிறதாம்.”
“அப்படினா.?”
“உங்களுக்குத் தெரியாதா அக்கா?” என்று கனி வினவிட, “நானா தான மேரேஜ் பண்ணிக்கிட்டேன். சோ, இதுமாதிரி எதுவும் செய்யல.”
“அப்ப, உங்க கழுத்துல இருக்கிற செயின்.?”
“கல்யாணத்துக்கு வாங்கினது இது. கதிர் இப்படியேதான் எனக்கு போட்டு விட்டான்.”
“நீங்களே வாங்கினீங்களா?”
“ஆமா..” என ரம்யா சிரித்திட, “எவ்வளவு சாதாரணமா சொல்லுறீங்க?” என்று வியப்புடன் வினவினாள் இளையவள்.
“சரி, என்னோட கல்யாணக்கதை இருக்கட்டும். ஒரு விளக்கம் கேட்டேனே அதுக்கு முதல்ல பதில் சொல்லு.”
“பொதுவா.. கல்யாணம் செய்யும் போது வெறும் தாலி மட்டும் தான், நூல் கயிறுல கோர்த்து கட்டுவாங்க அக்கா. நாள் ஆச்சுனா, அந்த கயிறு விட்டுப்போக வாய்ப்பு இருக்கு. அதுனால அதை மாத்தி நல்ல இறுக்கமான கயிறுலயோ, செயின்லயோ தாலியையும் அதோட சேர்த்து அவங்கவங்க பழக்கத்துக்குத் தகுந்த மாதிரி பவளம், காசு, மாங்கானு வாங்கி கோர்த்து கழுத்துல போட்டுப்பாங்க.”
“ஹோ.. எனக்கு இந்தமாதிரி எல்லாம் எதுவும் செய்யல. ஆள் இருந்தா தான் செய்யிறதுக்கு?” என உரைத்துப் புன்னகைத்தவள், “நவா, ஃபங்ஷன் டேட் என்ன?”
“நெக்ஸ்ட் மந்த் டுவல்வ்.”
கணவனின் பக்கம் திரும்பிய ரம்யா, “கதிர், நான் நவனோட மேரேஜுக்கே தென்காசிக்குப் போகணும்னு ஆசைப்பட்டேன், ஆனா ட்ரீட்மெண்டால போக முடியல. இப்பப் போகலாமா?”
அவளை வியப்பாய் நோக்கியவன், “என்ன புதுசா என்கிட்ட கேட்கிற? எப்பவும் நீ தான முடிவு எடுப்ப? நான் நீ சொல்லுறதை கேட்பேன்.”
“இல்ல. இந்த தடவை நீ சொல்லு!”
“ஆசைப்பட்டுட்ட இல்ல? போகலாம்.”
“லீவ் கிடைக்குமா உனக்கு? பிரச்சனை இல்லேல?”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.”
கணவனின் கரத்தைப் பற்றி, “தேங்க்ஸ்டா!” என்றவள் நண்பனின் பக்கம் திரும்பி, “நவா, ட்ரெயின்ல தான போவ? எங்களுக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணு. நாங்களும் உங்கக் கூடவே வர்றோம்.”
“பாஸ், நாலு நாள் சேர்த்து லீவ் போட முடியுமானு பாருங்க.”
கதிர் சிரித்து, “எதுக்கு?”
“வாங்க, அப்படியே குற்றாலம், ஐந்தருவி, உலகம்மன் கோவில்னு ஒரு ரவுண்ட் போயிட்டு வருவோம். நானும் கனியும் கூட ஊருல எங்கேயும் இன்னும் வெளிய போகல. ரெண்டு பேரும் தனியா போறதுக்கு பதிலா, நாலு பேரா போனா இன்னும் பெட்டரா இருக்கும்!”
ரம்யா முறைத்து, “அடப்பாவி! ஹனிமூன் போகவே இல்லயா நீ?”
நவன் சிரித்திட, “நான் அதெல்லாம் முடிச்சிட்டு, சென்னைக்கு வந்தனு இல்ல நினைச்சேன்?”
“அதுக்கு எல்லாம் டைம் இல்ல இம்சை!”
“எல்லாம் இந்த கனியைச் சொல்லணும். இவனை அதட்டி வைக்காம, இப்படி இஷ்டத்துக்கு விட்டிருக்க?” என அவளிடம் வினவ, “என்னை நல்லாதான அக்கா பார்த்துக்கிறாரு. அப்புறம் எதுக்கு அதட்டி வைக்கணும்?”
“அதுசரி! இந்த ஆங்கிரி பேர்டுக்கு எப்படி ஒரு கியூட்டி ஜோடியா கிடைச்சிருக்கா பாரு!” என்றிட, மெலிதான சிரிப்பலை எழுந்தது.
“போகலாமா கதிர்? நாமளும் ஃப்ரீயா வெளியே போய் ரொம்ப நாள் ஆகுது இல்ல?” என ரம்யா எதிர்பார்ப்புடன் வினவ, புன்னகையில் சம்மதத்தை தெரிவித்தான் ஆடவன்.
விடை கொடுக்கும் பொழுது கனியை இறுக்கமாய் அணைத்துக் கொண்டவள், “சோ ஸ்வீட் தெரியுமா நீ? எவ்வளவு அழகா எல்லாத்தையும் புரிஞ்சுக்கிற? இவ்வளவு நாளா நான் என்ன தப்பு செஞ்சுக்கிட்டு இருந்திருக்கேன்னு இன்னைக்குத்தான் புரிஞ்சுக்கிட்டேன். தேங்க்ஸ் கியூட்டி!” என்றிட,
“ஹேய் ஹேய், அவ என்னோட பெட்! பிடிச்சு நசுக்கி விட்டுடாத லூசு!” என தோழியிடம் இருந்து மனைவியைப் பிரித்து, தனது கரங்களிற்குள் வைத்துக் கொண்டான் நவன்.
“அடப்பாவி! பொறாமை பிடிச்சவனே! அவளை நாலு செகண்ட் ஹக் பண்ணக்கூட விட மாட்டிற?”
“அதுக்குத்தான் நான் இருக்கேன்ல? நீ எதுக்குச் செய்யிற?”
“அதுசரி! ஆமா, அது என்ன பெட்? பொண்டாட்டியை போய் யாராவது பெட்டுனு சொல்லுவாங்களா?”
“அவ, நான் சேஃப்கார்ட் பண்ணுற செல்ல மனுஷி! அண்ட் ஆல்சோ மை டிசையர்!” என்றிட, “சரி சரி!” எனச் சிரித்தாள் ரம்யா.
நண்பர்களின் சிறுபிள்ளைத் தனத்தைக் கண்டு, மற்ற இருவரும் சிரித்துக் கொண்டனர்.
*
அழைப்பு மணியின் ஒலியில் கதவைத் திறந்தார் கல்யாணி. வாயிலில் நின்று இருந்தான் விஜயன்.
“உள்ள வாங்க தம்பி!” என அழைத்திட, பின்னால் திரும்பிப் பார்த்தான்.
சிறிது தூரத்தில் சிவநாதனும் வசந்தியும் பேசியபடி வர, “என்னங்க, மாப்பிள்ளையோட வீட்டு ஆளுங்க வந்திருக்காங்க!” என உரைத்தபடி உள்ளே சென்றார் மூத்தவர்.
அன்னையின் சொல்லில் அதிர்ந்து, ‘மாப்பிள்ளை வீட்டு ஆளுங்களா? நான் இங்க வந்ததைத் தப்பா நினைச்சு, அப்பா எனக்கு மாப்பிள்ளை எதுவும் பார்த்துட்டாரா என்ன?’ எனத் தவிப்புடன் வெளியே வந்த சஞ்சனா, கணவனை வாயிலில் கண்டதும் அப்படியே நின்று கொண்டாள்.
“என்னமா? வீட்டுக்கு வந்தவங்களை வானு கூப்பிட மாட்டியா.?” என்று சிவநாதன் புன்னகையுடன் வினவிட, விழிகளில் நீர் நிறைந்து வழிந்தது.
“வா.. வாங்க..” என அழைத்தவளின் நா தந்தியடிக்க சற்றே திணறலுடன், “வாங்க மாமா!” என்றாள்.
அருகே இருந்த வசந்தி அவளைப் பார்த்து புன்முறுவல் சிந்த, “வாங்க அண்ணி.”
“என்னோட வீட்டுக்கு வந்து நின்னு, உங்க தம்பியும் நானும் லவ் பண்ணுறோம். அவரை உடனே வரச் சொல்லுங்கனு, அன்னைக்கு அவ்வளவு தைரியமா பேசுனா பொண்ணா இது? இன்னைக்கு என்ன ஆச்சு, என் தம்பி பொண்டாட்டிக்கு? வார்த்தை ஒவ்வொன்னும் யோசிச்சு யோசிச்சு வருது?”
“அதெல்லாம் இல்ல அண்ணி. உங்களை எல்லாம் இப்படித் திடீர்னு எதிர்பார்க்கல!” எனச் சமாளித்தவாறே, அமைதியாய் நின்று இருந்த விஜயனை நோக்கினாள்.
நடராஜன் வெளியே வந்து வரவேற்று மகளின் புகுந்த வீட்டாரை உள்ளே அழைத்துச் செல்ல, சஞ்சனாவை நோக்கி கை நீட்டினான் ஆடவன்.
இருவருக்குமான இடைவெளியை சட்டென்று ஓடிச் சென்று குறைத்தவள், நீட்டிய கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள்.
இருவரும் உள்ளே சென்ற பொழுது, அனைவரும் கூடத்தில் ஒன்றாய் அமர்ந்து தேநீர் அருந்திய படியே பேசிக் கொண்டிருந்தனர்.
“வசந்திமா, உன்னோட வீட்டுக்காரர் வரலயா?” என கல்யாணி விசாரிக்க, “வேலையா வெளியூர் போயிருக்காரு அத்தை. இன்னைக்கு நாள் நல்லா இருந்ததுனால தள்ளிப்போட வேண்டாம்னு நாங்க முதல்ல வந்துட்டோம். இப்ப என்ன, அவரு வந்ததும் பிள்ளையையும் கூட்டிட்டு இன்னொரு நாள் வர்றேன் நானு.”
அவர், “சரிம்மா..” என்றிட, “அப்புறம் சம்பந்தி, கடை வியாபாரம் எல்லாம் எப்படிப் போகுது?” என வினவினார் நடராஜன்.
“எங்க? தங்கத்தோட விலை பீக்ல போயிடுச்சு. ஜனங்க இப்ப நகை வாங்கவே யோசிக்கிறாங்க. இவ்வளவு விலையானு மலைப்பா இருக்கும்ல? விசேஷத்துக்குனு ஆளுங்க வந்தா தான் ஆச்சு. கொஞ்சம் தேக்கமா இருக்கு. சரி ஆகிடும்னு நம்பிக்கையில ஓட்டுறோம். உங்க தொழில் எல்லாம்?”
“அதுக்கென்ன எப்பவும் போல நடக்குது!” என்றிட, அவர்கள் பேசுவதை வியப்புடன் நோக்கினாள் சஞ்சனா.
அங்கு நிகழ்வதைக் கண்டு அசையாமல் இருந்த மனைவியைக் கவனித்த விஜயன், “என்ன சஞ்சு?”
“எப்ப, அம்மா அப்பா மாமா எல்லாம் இவ்வளவு க்ளோஸ் ஆனாங்க விஜி?”
“பெரியவங்க. எத்தனை வருஷம் அனுபவம்? இதுவரை எவ்வளவு பேருக்கிட்ட பேசிப் பழகி இருப்பாங்க? அவங்களுக்கு இதெல்லாம் நார்மல் தான்.”
அவள் தவிப்புடன் நோக்க.. புன்னகைத்தவன், “என்னமா?”
“அப்ப நீயும்.?”
“நீ இங்க வந்த மறுநாளே, மாமா என்னை பார்க்க வந்துட்டாரு. இவ்வளவு நடந்த பின்னாடியும் பெரியவங்க அவங்களே இறங்கி வரும் போது, நான் அமைதியா இருக்கிறது நல்லா இருக்காதுல? வாரத்துக்கு ஒரு தடவை, நாங்க பேசிட்டு தான் இருக்கோம். நீ என்ன செய்யிறனு அத்தைக்கிட்டயும் அப்பப்ப கேட்டுப்பேன்.”
“நான்தான் எதுவுமே தெரியாம, யாரையும் புரிஞ்சிக்காம இத்தனை காலமும் இருந்திருக்கேன் இல்ல?’
“அது அப்படி இல்ல. நான் மட்டும் என்ன? லவ் பண்ணும் போதும் சரி, கல்யாணம் செஞ்சுக்கும் போதும் சரி, உன்னைப் பத்தி மட்டும் தான் யோசிச்சேன். உன்னோட பேரண்ட்ஸைப் பத்தி நினைச்சு பார்க்கலயே? அது அதுக்குனு ஒருநேரம் வரும். மறக்க முடியாத அளவுக்கு வலியையும், வாழ்க்கைக்கான ஒரு புது பாடத்தையும் கத்து கொடுத்துட்டுப் போகும். அதுதான் இப்ப நடந்திருக்கு.”
அவள் அமைதியாய் பார்த்திருக்க, “தம்பி, இந்தாங்க டீ..” எனக் கொண்டு வந்து தந்தார் கல்யாணி.
“தேங்க்ஸ் அத்தை. எதுக்கு இப்படி எடுத்துட்டு வர்றீங்க? ஒரு வார்த்தை கூப்பிட்டு இருந்தா, நானே வந்து வாங்கிப்பேன்ல?”
“இதுல என்ன இருக்கு?” என்றுவிட்டு அவர் நகர, நடராஜனின் அருகே சென்று அமர்ந்தான் ஆடவன்.
“சரி சம்பந்தி, விஜயிக்கு அடுத்த வாரத்துல இருந்து டிரைனிங் ஆரம்பிக்கிது. முடிச்சிட்டு வர, எப்படியும் ஒரு வருஷத்துக்கு மேல ஆகும். அவன் கிளம்புற வரைக்கும் ரெண்டு பேரும் ஒன்னா இருக்கட்டுமே? மருமகளை நாங்க கூட்டிட்டுப் போகலாம்னு தான் வந்தோம்.” என வருகைக்கான காரணத்தை உரைத்தார் சிவநாதன்.
மதிப்பெண் மற்றும் பிறப்பின் படி வந்த பிரிவுகளின் அடிப்படையில் வருவாய்த் துறையில் பணிக் கிடைத்து இருந்தது விஜயனிற்கு.
போதைப் பொருட்கள் தடுப்புத் துறையில் இணைந்தவன், தற்போது ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள தேசிய அகாடெமியில் பதினாறு மாத பயிற்சிக்கு செல்லவிருக்கிறான்.
கணவனைப் பற்றி அறிந்த செய்தியில், “எக்ஸாம் எல்லாம் முடிஞ்சிடுச்சா? டிரைனிங் போகப் போறானா?” என்று வியப்பும் தவிப்புமாய் அவனை நோக்கினாள் பாவை.
மகளின் முகம் மாற்றங்களை பார்த்து, “தம்பியை உள்ள கூட்டிட்டுப் போய் பேசிட்டு இரு சஞ்சு!” என்ற அன்னையின் சொல்லில், விஜயனை அழைத்துச் சென்றாள்.
அறைக்கு உள்ளே சென்றது தான் தாமதம். மனைவிக்குப் பேசக்கூட வாய்ப்பு தராது இடை அணைத்து இதழ் பதித்தவனின் வேகத்தில், அவளின் நிலைதான் பரிதாபமாகிப் போனது.
கழுத்து வளைவில் முத்தத்தால் ஊர்வலம் நடத்தியவனின் இறுகிய அணைப்பில், உள்ளிருக்கும் உறுப்புகள் ஒவ்வொன்றும் உடைவது போல் உணர்ந்தாள்.
அவனின் மென் அரவணைப்பை மட்டுமே அறிந்தவளிற்கு, தன்னுள் இருக்கும் மோகத்தின் வன்மையையும் புரிய வைத்திடும் வேகம் தெரிந்தது அந்த தொடுதலில்.
“மிஸ் யூ சஞ்சு. லவ் யூ.” என முத்தத்திற்கு இடையே உரைத்தவனின் சொற்களில் கண்கள் கலங்கிட, “ஸாரி விஜி!” என்றாள் அவளும் அழுகையுடன்.
பாவையின குரல் தொனியில் விலகியவன், “ஹேய்.. எதுக்கு இப்ப அழுகிற?” என விழி சிந்திய நீரை துடைத்து விட, “நானும் மிஸ் யூடா. ஏதோ முட்டாள் தனமா எதையும் புரிஞ்சுக்காம, என்னென்னமோ பேசிட்டேன் உன்னை!”
“ப்ச்ச்.. அதெல்லாம் ஒரு விஷயமா? நானும் உன்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது!”
தலை அசைத்தவள், “உடனே முடிவெடுத்த கிளம்பி வராம, கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் நானும். எனக்கு உன்கூடவே இருந்தா, லவ் எல்லாம் ஹேட்டிங்கா மாறிடுமோனு பயம் வந்திடுச்சு விஜி. அதான் வந்துட்டேன். ஆனா, நான் அப்படி இல்லடா. நிஜமா, என்னால உன்னை விட்டு இருக்க முடியல தெரியுமா? ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு, தெரியுமா?
கிளம்பி வந்ததுனால என்மேல கோபமா இருப்பியேனு நினைச்சு, உனக்குக் கால் பண்ணுறதுக்குக் கூடத் தைரியம் வரல. அம்மா அப்பாக்கிட்டயும் முன்ன மாதிரி பழக முடியல. ஏதோ ஒரு பயம். நீ மட்டும் இப்ப வரலேனா, என்ன செஞ்சிருப்பேனோ எனக்குத் தெரியல.”
“ஹேய்.. என்ன இது, சின்ன குழந்தை மாதிரி?”
“டிரைனிங் போறியா விஜி?”
“ம்ம்.. ஹரியானா. பதினாறு மாசம்.”
“அவ்வளவு நாள் ஆகுமா?”
“என்னோட இலட்சியம் சஞ்சு.”
“ஐ அண்டர்ஸ்டாண்ட். பட்.?”
“விலகி இருந்தா, இன்னும் கூட காதல் அதிகமாகும்.”
“போடா நீ! இதுவரைக்கும் இருந்ததுக்கே முடியல. இன்னுமா?” என்றவள் வேறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.
“இந்த பிரிவு வேற. அந்த இடைவெளி வேற! தினமும் வீடியோ கால்ல பேசிக்கலாம். கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தோமே, அந்த மாதிரி லவ் பண்ணலாம். ஆனா ஃபேமிலிக்கு பயப்படாம.”
அவள் அதைக் கேட்டும் சமாதானம் அடையாமல் இருக்க.. மனைவியின் தாடையைப் பற்றி தன்னை காணச் செய்தவன், மெல்லிய புன்னகையுடன், “சஞ்சு, ப்ளீஸ்..”
“என்னடா?”
“ஒரு வாரம் தான் ஊருல இருக்கப் போறேன். சோ..”
சஞ்சனா புரியாமல் பார்க்க, இடையில் பதித்திருந்த கரத்தை மெல்ல உடைக்குள் செலுத்தினான்.
கணவனின் கைப்பற்றி தடுத்தவள், “விஜி, எல்லாரும் ஹால்ல தான் இருக்காங்க. என்ன நினைப்பாங்க.?”
“அதை எல்லாம் யோசிக்கிற மூடுல நான் இல்ல. உன்கூட இருக்கிற டைம்ஸ் ஒரு செகண்டை கூட வேஸ்ட் பண்ண விரும்பல. ப்ளீஸ்.. ” என மோகத்திற்கு முதல்புள்ளி இட்டான். கணவனின் காதலிற்காக காத்திருந்த பெண்மைக்கும், குடும்பத்தாரைப் பற்றிய எண்ணம் சில நொடிகளின் இடைவெளியில் மறந்தே போனது.
*
படுக்கையில் தனது கை அணைப்பில் இருந்த மனைவியை நவன் இமைக்காது பார்த்து இருக்க, “என்னங்க.?”
“மூக்கை சிந்தி அழுகிற இந்த குட்டிப் பொண்ணு, எப்ப இவ்வளவு பெரிய மனுசியா மாறுனா?”
கனி சிரித்து, “ஏன்?”
“ரமிக்கு அட்வைஸ் பண்ணற அளவுக்கு பெரிய ஆளா ஆகிட்ட!”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்களும் ரமி அக்காவும், அவங்க வீட்டுக்காரரை ஆரம்பத்துல இருந்தே பார்த்துக்கிட்டு இருக்கிறதுனால, எந்த மாதிரி நடத்துறீங்கனு உங்களுக்கே புரியல. நான் புதுசா வந்த ஆளு இல்ல, அதான் எனக்கு அது பட்டுனு தெரிஞ்சிடுச்சு!” என்றிட, அவளின் நுதலில் இதழ் பதித்து அணைத்துக் கொண்டான் நவன்.
“ஏங்க?”
“என்னடி?”
“பெட், சேஃப்கார்ட், டிசையர்னா என்ன.?”
“பெட்டுனா, செல்லப் பிராணினு அர்த்தம்.”
“ஏது, செல்லப் பிராணியா? நான் உங்களுக்கு பூனை மாதிரி தெரியிறேனா? இல்ல நாய் மாதிரி தெரியிறேனா?”
“அதெல்லாம் இல்லடி! நீ என்னோட செல்ல பொண்டாட்டி!”
“ஓ..”
“ஓவா? என்ன சௌண்ட் இது?”
“நீங்க சொல்றது நம்புற மாதிரி இல்ல.”
“உண்மையாதான்டி சொல்லுறேன், என்னோட கியூட்டி!”
“இது, ரமி அக்கா எனக்கு வச்ச பேரு. நீங்க எதுக்கு சொல்லுறீங்க?”
“ஏன், அந்த வார்த்தையை அவளுக்கு மட்டும் தான் பட்டா போட்டு கொடுத்து இருக்கா? நான் எல்லாம் யூஸ் பண்ண கூடாதோ?”
“ஆமா, கியூட்டினா என்ன?”
“அது தெரியாம தான், சண்டைக்கு வந்தியா நீ?”
“தெரியாம தான் கேட்கிறேன், சொல்லுங்க நீங்க!”
ரம்யா உரைத்ததை விடுத்து தான் சொன்ன சொற்களிற்கு மட்டும் விளக்கம் கேட்ட பெண்மையின் மீதான பிடித்தம் மேலும் மேலும் அதிகரித்திட, “கியூட்டினா, புத்திசாலித்தனமான அழகினு அர்த்தம்!”
அந்த விளக்கத்தில் முகம் மலர்ந்த கனி, “ஆமா, மத்ததுக்கு எல்லாம் நீங்க சொல்லல?”
“சேஃப்கார்டுனா, பாதுகாப்பு செய்யிறதுனு அர்த்தம்!”
சட்டென்று சிரித்தவள், “அப்ப, நீங்க என்னை பார்த்துக்கிற வாட்ச்மேனா?”
அவள் தன்னைக் கேலி செய்வதை அறிந்த நவன், “அடியேய் வாயாடி!” என கனியின் மூக்கைப் பற்றி ஆட்டினான்.
ஆடவனின் கரத்தைத் தட்டிவிட்டவள், “இன்னொன்னு சொன்னீங்களே? ஹான், டிசையர்!”
பொருள் அறியாத பொழுதும் அந்த வார்த்தைகள் அனைத்தையும் சரியான உச்சரிப்புடன் அவள் நினைவு வைத்திருப்பதைக் கண்டு வியந்தவன், “அப்படினா, ஆசைனு அர்த்தம். அதாவது நான் ரொம்ப ஆசை வச்சிருக்க என் செல்லப் பொண்டாட்டி. ஆசைக்கனியோட அர்த்தமும் அதுதான்.” என உரைத்தபடியே மனைவியின் புடவை விலகிய இடைப்பகுதியில் இதழ்பதித்து, மோகக் கவிதைகளை வரையத் துவங்கினான்.
கணவனின் அந்த தொடுதலில் தேக அனல் கூடி தகித்தவள், “ஏங்க, கூச்சமா இருக்கு. என்னால முடியல.” விலகிட முயற்சிக்க,
அதற்குத் தடையிட்ட நவநீதன், “கொஞ்ச நேரத்துல ஓகேவாகிடும். என்னை ஃபீல் பண்ணு கனி.” என்றவன், கூடலின் வகைகளை கற்றுத் தர தயாரானான்.
அந்த சொற்களில்.. தன்னைக் கணவனின் கரங்களில் தந்துவிட்டு, அவன் தன்மீது வைத்திருக்கும் ஆசைகளின் மொழிகளை அறிந்து கொள்ள துவங்கினாள் ஆசைக்கனியும்.
கலவி அங்கே காதலாய் அரங்கேறியது, புரிதலோடு.
* முற்றும் *

