Loading

 

அத்தியாயம் 26

 

“எப்படி இருக்க? மாப்பிள்ள தம்பி உன்னை நல்லா பார்த்துக்கிறாரா.?” என்ற காளீஸ்வரியின் வினாவிற்குப் பதில் அளிக்க இயலாது தொண்டை அடைத்தது, ஆசைக்கனிக்கு.

 

விபரம் அறிந்த வயது முதல் இன்ப துன்பம் அனைத்திலும் உடன் இருந்து வழி நடத்தி அழைத்து வந்தவர், அவர். சிற்றன்னையாய் இருந்த போதும், இதுவரை சிறுமை மனதுடன் இதுவரை ஒருமுறைக் கூட நடந்து கொண்டது இல்லை.

 

அவள் கேட்பது என்றுமே கிடைக்காது தான். எனினும், பசி என்பதன் பொருளையோ சாயலையோ அறியாதவள். வறுமை வாட்டிய போதும், பிள்ளைகளின் வயிறை மட்டும் வாட விடாமல் பார்த்துக் கொள்வார் காளீஸ்வரி. அதில் தான் பெற்ற பிள்ளை, கணவனது மூத்த தாரத்தின் மகள் என்று எவ்வித வேறுபாடையும் காட்ட மாட்டார்.

 

தந்தையான திருப்பதி உடன் இல்லாத பொழுதும், அதிகப்படியான ஆசைகளை தவிர்த்து அடிப்படை தேவைகளுக்கு சிற்றன்னையானவள் என்றும் குறை வைத்ததே இல்லை.

 

“சித்தி!” என அழைத்தாலும் ஓர் அன்னைக்கான இடத்தில் இருந்து, கனியை வளர்த்து ஆளாக்கி விட்டிருந்தார்.

 

திருமணத்திற்குப் பின்னர் உருவாகி இருந்த இந்த இடைவெளி, பாவைக்கு பிறந்த வீட்டின் நினைவைத் தூண்டி உணர்வுகளில் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது.

 

“ஏய் கனி, என்ன பேச்சைக் காணோம்?” என மறுபுறம் இருந்து அதட்டல் குரல் வர, “ஒன்னும் இல்ல சித்தி. இப்பதான் எழுந்திருச்சேன். அதான்..” என்று இழுத்தாள்.

 

“மணி எட்டாக போகுதே, இவ்வளவு நேரமா தூங்குன?”

 

“அவர் ஒன்பது மணிக்கு மேலதான் ஆபீஸ்க்கு கிளம்புவாரு. பெருசா ஒன்னும் வேலை இல்ல சித்தி, அதான் பேசாம படுத்துட்டேன்.”

 

“அதுசரி! ஆமா, சாப்பாடு எல்லாம்?”

 

“அது செஞ்சிடலாம். அவரு காலையில நேரத்துக்குச் செய்யிறதையே மதியத்துக்கும் சாப்பிட்டுக்குவாரு.”

 

“ஏது, இல்லி தோசையவா?”

 

மெலிதாய்ச் சிரித்தவள், “இல்ல, சப்பாத்தியும் குருமாவும். இராத்திரியே சுண்டல் எல்லாம் ஊற வச்சிட்டேன். மசாலா அரைச்சு தாளிச்சு விட்டுட்டு, மாவை பிசைஞ்சு சப்பாத்தியை போட்டா போதும்.”

 

“சரி சரி, அதையாவது நேரத்தோட செய்யி. அப்புறம், குளிச்சிட்டு ஒரு நல்ல துணியா உடுத்தி பக்கத்துல இருக்கிற கோயிலுக்குப் போயி, சாமி கும்பிட்டுட்டு வா. இன்னைக்கு உனக்குப் பிறந்தநாளு இல்ல?”

 

“சரி சித்தி!”

 

“பார்த்துக்க சூதானம். உன்னோட அப்பா, வேலைக்கு போயிட்டு வந்து ராத்திரிக்கு உன்கிட்ட பேசுறேன்னு சொல்லி இருந்தாரு.”

 

“ம்ம்..” என்றிட, “உடம்பை கவனிச்சிக்க!” எனப் பேச்சை முடித்தார்.

 

அடிக்கடி கைப்பேசியில் அழைத்து பேசும் பழக்கம் எல்லாம் இல்லை காளீஸ்வரிக்கு. அதிகபட்சம் மாதம் இருமுறை மட்டுமே. சென்ற வாரம் தான் பேசி இருந்தார். இன்றைய நாள் அவளின் பிறந்த தினம் என்பதால், செல்வா அழைத்து வாழ்த்துத் தெரிவிக்க சிற்றன்னையும் பேசினார். அவ்வளவே!

 

கண்முன்னே அலைபாயும் கடலாய் அன்பை வெளிக்காட்டாது, தூரத்தில் போகும் படகை கண்கள் நிழலாய் காண்பது போல் அக்கறையை பகிர்ந்து கொள்ளும் மனிதி அவர்.

 

காலையே பிறந்த வீட்டினருடன் உரையாடியது பெண்மையின் மனதை நெகிழ்த்தி இருக்க, அந்த மகிழ்ச்சியுடனே பணிகளைக் கவனித்தாள்.

 

சரியாய் ஒன்பது மணிக்குத் தயாராகி வந்தான் நவநீதன். 

 

“கனி..” எனக் குரல் கொடுத்திட, “டைனிங் டேபிள்ல உட்காருங்க, சாப்பிட எடுத்து வந்திடுறேன்!” என்று பதில் வந்தது.

 

புத்தாடை உண்டோ இல்லையோ, ஆனால் நிச்சயம் கனியின் பிறந்த தினத்திற்குக் கேசரியோ, பாயாசமோ இருக்கும் அவளின் வீட்டில். 

 

பாவையைப் பொறுத்த வரையில் இனிப்பு என்பது, மகிழ்ச்சியின் மறுவடிவம். சிற்றன்னை அவளுக்காக என்று செய்து தரும் அந்த இனிப்பு வகையில் பிறந்த தினத்தில் இனிமை சேர்ந்திடும். அந்த நினைவில் அவளுமே அன்று கேசரி தயார் செய்து இருந்தாள்.

 

நவனிற்கு, விரலில் ஒட்டாத அளவிற்கு சற்று கூடுதலாய் நெய் சேர்த்து சமைக்க வேண்டும் கேசரியை. சிறிய அளவிலான கிண்ணத்தில், அவனுக்காக என்று தனியே எடுத்து வைக்க, கரண்டியில் இருந்து வழுக்கி கொண்டு விழுந்தது.

 

அதைக் கண்ட பாவையின் முகமும் மனமும் மலர்ந்திட, அதனை மேலும் அதிகரிக்கும் விதமாய்..

 

“கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் 

கோபாலன் குழலைக் கேட்டு

நாலுபடி பால் கறக்குது இராமாரி!

அந்த மோகனின் பேரைச் சொல்லி

மூடி வைத்த பாத்திரத்தில்

மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!”

 

எனப் பாடல் ஒலி செவியை அடைந்தது.

 

கூடத்தில் இருந்து சத்தம் கேட்டிட, செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு வேக எட்டுகளில் அவ்விடத்திற்குச் சென்றாள்.

 

உணவு மேஜையில் சாய்ந்தபடி நின்று இருந்தான் நவநீதன். ஐம்பது இன்ஞ்ச் அளவிலான தொலைக்காட்சியின் திரையில் காணொளியுடன் ஒலித்துக் கொண்டிருந்தது பாடல்.

 

அவள் வியப்புடன் கணவனைப் பார்க்க, “ஹேப்பி பர்த்டே, மை டியர்!” என்றான் ஆடவன்.

 

“உங்களுக்குத் தெரியுமா?”

 

“ஒரு வாரத்துக்கு முன்னாடியே, அந்தப் பிள்ளைக்கு எதுவும் வாங்கிக் கொடுடானு உன்னோட மாமனாரும் மாமியாரும் சொல்லிட்டாங்க.”

 

புன்னகையில் அதரங்கள் விரிய, “அத்தை மாமாக்கு எப்படித் தெரியும்.?”

 

“கல்யாணம் பேசும் போது உன்னோட வயசு என்னனு கேட்டப்ப, அத்தை தேதி வருஷத்தோட சொன்னாங்களாம்.”

 

சிறுபிள்ளை போல் சிரித்தவள், “தேங்க்ஸ்ங்க.”

 

“உனக்கு என்னோட கிஃப்ட். எப்படி இருக்கு.?” எனத் தொலைக்காட்சியைக் காட்டி வினவினான்.

 

“பாட்டு ஓடுற சேனலை கண்டுபிடிச்சு, அதை போட்டு விடுறது எல்லாம் கிஃப்டா? ஆமா, எந்த சேனல்ல இந்த நேரத்துக்கு சாமி பாட்டு போடுறாங்க?” என்றபடி திரையை ஆராய்ந்தாள் கனி.

 

“இது, டீவி சேனல்ல வர்ற பாட்டு இல்ல. உனக்கு காலையில ஒன்பது மணிக்கு மேல கிருஷ்ணன் பாட்டு எல்லாம் போடுறாங்களாக்கும்?”

 

“அப்புறம்?” என அவள் புரியாமல் பார்க்க, “வா இங்க!” என்று மனைவியின் கைப்பற்றி இழுத்து தன்னருகே நிற்க வைத்து அங்கிருந்த பொருளைக் காட்டினான்.

 

“என்னதுங்க இது?”

 

“பென் டிரைவ். இதுல இருந்து தான், இந்த பாட்டு வருது.”

 

கண்களில் கேள்வி தொக்கி நிற்க, “”என்ன சொல்லுறீங்க?”

 

“உனக்குக் கண்ணன் பாட்டுனா ரொம்ப பிடிக்கும் இல்ல? அதான், அது எல்லாத்தையும் இதுல சேவ் பண்ணிட்டேன். நீ டீவிச் சேனல்ல தேட வேண்டிய அவசியம் இல்ல. தோணும் போது இதை ஆன் பண்ணிக் கேட்டுக்கலாம்! பார்க்கவும் செய்யலாம்!” என்றிட, “நிஜமாவா?” என வினவினாள் கனி.

 

மெலிதாய்ப் புன்னகைத்தவன், பென்டிரைவ்வை தொலைக்காட்சிப் பெட்டியில் எப்படி பயன்படுத்துவது என்று ஒன்றிற்கு இருமுறை அவளிற்கு இயல்பாகும் வரைக் கற்றுத் தந்தான். 

 

நேரமாவதை உணர்ந்தவள், “ஏங்க ஆஃபிஸ் போகலயா?”

 

“போயிக்கலாம். பர்த்டே பேபிக்காக ஒரு ஹாஃப் ஹவர் பர்மிஷன் போடுறதுல ஒன்னும் தப்பில்ல.”

 

“சரி வாங்க, சாப்பிடுங்க.” என்றவள் உணவைப் பரிமாறினாள்.

 

மஞ்சள் வண்ணத்தில் நெய்யில் வறுத்த முந்திரியும் காய்ந்த திராட்சையுப் ஆங்காங்கே தென்பட்ட கேசரியைப் பார்த்தவன், “இதென்ன ஸுவீட் எல்லாம்?”

 

“ஊருல எப்பவும் சித்தி செய்வாங்க. இங்க அவங்க இல்லேல? அதான் நானே செஞ்சிட்டேன்.”

 

“ஹோ.. பர்த்டே ஸுவீட்டா? உனக்கு நீயே செஞ்சுக்கிட்டியாக்கும்?”

 

“கிண்டல் பண்ணாதீங்க.”

 

“சரி சரி. கனியோட மனசைக் கஷ்டப்படுத்துறதுல எனக்கு இஷ்டம் இல்ல. அதுனால நான் இதுக்கு மேல பேசல.”

 

அவள் சிரித்திட, “உட்காரு, சாப்பிடுவோம்!” என்று மனைவி உண்டு முடிக்கும் வரை பொறுமையாய்க் காத்திருந்தான்.

 

“ஓகே, நான் கிளம்பட்டுமா?” என விடைபெற, “ஏங்க இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கா?”

 

“எதுக்குக் கனி?”

 

“பக்கத்துல ஏதாவது கோயிலுக்குக் கூட்டிட்டுப் போறீங்களா? சாமி கும்பிட்டதும் நீங்க கிளம்பிடுங்க. வீட்டுக்கு நானே வந்துக்கிறேன்.”

 

“ஓகே போகலாம். டிரஸ்ஸை மாத்தீட்டு வா!” என்றவன், “ரமி, இன்னைக்கு வர்றதுக்கு டைம் ஆகும். நீ முன்னாடி போ. நான் பின்னாடி வந்து ஜாய்ன் பண்ணிக்கிறேன்!” எனத் தோழிக்குச் செய்தி அனுப்பினான்.

 

“ஓகேடா..” என்று இரண்டு நிமிடங்களில் அவளிடம் இருந்து மறுசெய்தி வர, மெலிதான பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு அறையை எட்டிப் பார்த்தான்.

 

கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

 

ஆரஞ்சிற்கும் ரோஜாவிற்கும் இடைப்பட்ட வண்ணத்தில் புடவை உடுத்தி இருந்தாள் பாவை. அவளின் நிறத்திற்கு ஏற்றபடூ இருந்தது. இதற்கு முன் அதைக் கட்டிப் பார்த்தது இல்லை அவன். புதியதாய் இருக்கும் என அனுமானித்துக் கொண்டான்.

 

“சேரி நல்லா இருக்கே கனி? புதுசா? எப்ப வாங்குன?”

 

“என்ன கிண்டலா? இந்த ஊருக்கு வந்து, பக்கத்து தெருவுல இருக்க கடையையும் கோவிலையும் தாண்டி தனியா வேற எங்கேயும் போனது இல்ல. இதுல, நான் எங்கனு போயி சேலை எல்லாம் வாங்குறது? இது, நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் அத்தை மாமா வாங்கித் தந்தது.”

 

“ம்ம்.. பாருடா. உன்னோட மாமனாரு செலக்ஷன் நல்லாதான் இருக்கு.”

 

“என்னையே மருமகளா செலக்ட் பண்ணி இருக்காரு. அப்புறம் என்னவாம்?”

 

“ம்ம்.. ஒத்துக்கத்தான் வேணும்!” எனக் கண்களால் சிரித்தவனை மேல் இருந்து கீழ்வரைப் பார்த்தவள், “என்னவாம், பேச்சு ஒரு திணுசா இருக்கு!”

 

“இன்னைக்கு, நீயும் கூட ஆளு ஒரு மாதிரியா தான் இருக்க!” என்றவனது வலது கை விரல்கள், புடவைக்குள் இருந்து எட்டிப் பார்த்த அவளின் இடையின் மீது படர்ந்தது.

 

மற்றொரு கையை மனைவியின் முதுகுப்புறம் பதித்தவனீ தன்னோடு அணைத்துக் கொள்ள, “என்ன செய்யிறீங்க? கோயிலுக்குப் போகணும்!” என விலக முயன்றாள் பாவை.

 

“ஒன்னும் செய்யலடி! சும்மா, கட்டிப் பிடிச்சேன். அவ்வளவு தான்!” என்று அவளின் முகத்தைப் பற்றி நிமிர்த்தி, தன்னைக் காணச் செய்தான்.

 

“ஒன்னும் செய்யலயா? இப்படித்தான் முதல்ல ஆரம்பிப்பீங்க, தெரியாதா? இந்த வேலை எல்லாம் செஞ்சுக்கிட்டு இருந்தா, உங்களுக்குத்தான் ஆஃபிஸுக்கு டைம் ஆகும். எனக்கு ஒன்னும் இல்ல, சொல்லீட்டேன்!”

 

“உனக்கு ஒன்னும் இல்லையா?” என சின்னதாய் சிரித்தவன், “கோயிலுக்குப் போக முடியாதே, பரவாயில்லையா?”

 

“நான் திரும்பவும் குளிச்சிட்டு, சாயங்காலம் தனியா போயிக்கிறேன்!” என உரைத்தபடி வெறுபக்கம் பார்வையைத் திருப்பினாள் கனி.

 

தனது கரங்களிற்குள் இருக்கும் மனைவியின் தேகம், குழைவதை உணர்ந்தான் நவன். அவளுள்ளுமே ஆசை இருப்பது புரிந்தது. எனினும் பகல்பொழுது என்பதால் அதற்கு எல்லை அமைக்கிறாள் எனவும் அறிந்து கொண்டான்.

 

பாவையை சீண்டிப் பார்த்திடும் எண்ணம் தோன்றிட, “கனி!” என அழைத்தான், சற்றே குனிந்நு காது மடலில் இதழ்கள் உரசும்படி.

 

கணவனின் மார்பில் இரு கரங்களையும் பதித்து விலக்க முயன்றவள், “கொஞ்சம் தள்ளி நின்னு பேசுங்க. இப்படியா காதுக்கிட்ட வந்து கூப்பிடுவாங்க. கூசுது!”

 

“உனக்குப் பிடிச்ச பாட்டெல்லாம் சேவ் பண்ணிக் கொடுத்திருக்கேன். பதிலுக்கு, நீ எனக்கு என்ன தருவ.?”

 

“நீங்க, எங்க சுத்தி எங்க வர்றீங்கனு தெரியிது. ஆனா, இப்ப என்னால முடியாது!”

 

“அப்ப, ஒரே ஒரு கிஸ் மட்டும்!”

 

“ஹான்?” என அவள் திகைப்புடன் பார்க்க, “கிஸ் தானடி கேட்டேன்? அதுக்கு எதுக்கு இவ்வளவு ஷாக்.?”

 

“ஏன் இப்படிப் படுத்துறீங்க என்னை? அதெல்லாம் முடியாது!”

 

“ஏன்டி? உன் வீட்டுகாரன் பாவம் இல்லையா?”

 

“அது கிஸ்ஸோட நிக்காது. அதான் சொல்லுறேன்!”

 

“நான் நிப்பாட்டிக்கிறேன். இப்ப, கிஸ் மட்டும் போதும். மத்ததை நைட்டுக்குப் பார்த்துக்கலாம். ரமி வேற எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கா!” என்றவன் இதழ்முத்தம் பகிர, ஏனோ பாவைக்குத்தான் அந்த முத்தம் கசந்தது.

 

மெல்ல மெல்ல அவளுள் அரங்கேறிக் கொண்டிருந்த காதல் கணவனது இறுதி சொற்களில், ‘ஃப்ரெண்டுக்காக உங்க ஆசையைக் கூட தள்ளி வைப்பீங்களா?’ எனத் தோன்றிய எண்ணத்தால் அப்படியே அமிழ்ந்து போனது.

 

உண்மையில் கனி, அவன் தந்த பிறந்தநாள் பரிசின் காரணமாக மனம் நெகிழ்ந்து துணைவனின் தேவையை ஈடுசெய்திட தயாராகவே இருந்தாள். நவன் இன்னும் ஒருமுறை கேட்டிருந்தால், தற்போது கோவிலுக்கு செல்லும் திட்டத்தை மாற்றி, மாலை நேரத்தில் அவள் மட்டுமாக கூட சென்று வந்திருப்பாள். ஆனால் தற்போது..?

 

அழகாக விடிந்த பாவையின் பிறந்த தினம், சிறிது நேரத்திலேயே மன வருத்தத்தை பரிசளித்து நீண்டு கொண்டிருந்தது.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
13
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்