
அத்தியாயம் 28
பழைய துணிகளை எல்லாம் விலக்கி தேவையானவைகளை மட்டும் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் கல்யாணி. அதில் ஒரு பச்சை நிற பழைய புடவையை மட்டும் தனியாய் பைக்குள் போட்டு, பத்திரமாய் எடுத்து வைத்தார்.
அன்னையின் செயலைப் பார்த்திருந்த சஞ்சனா, “அந்த சேரியை, எதுக்குமா எடுத்து வைக்கிறீங்க?”
சின்னதாய் சிரித்தார் அவர்.
“என்னம்மா சிரிக்கிறீங்க? ஃபுல்லா வெளுத்து என்ன கலர்னே தெரியல. அதை வச்சு என்ன செய்யப் போறீங்க?”
“அது, கல்யாணம் ஆன புதுசுல உங்க அப்பா வாங்கிக் கொடுத்தது. அப்ப இந்த சேலையோட விலை அம்பது ரூபாதான். ஆனா அந்தக் காசுக்கு அவர் பட்டபாடு எனக்குத்தான் தெரியும். இப்ப இருக்குற வசதி, அப்ப நம்ம வீட்டுல இல்ல. இது, எல்லாமே அவர் உழைச்சது.
அதுக்கு அப்புறம் காசு கூடுதலா நிறைய சேலை வாங்கித் தந்திருக்காரு. ஆனா, எனக்கு என்னமோ இதுதான் ரொம்பப் பிடிக்கும். எத்தனை தடவைக் கட்டி இருக்கேன்னு கணக்கே சொல்ல முடியாது. மாசத்துக்கு ஏழெட்டு தடவைக்கு மேல கட்டுவேன்! ரொம்ப சுருங்கிப் போயிடுச்சுனு, இப்பதான் அஞ்சாறு வருசமா கட்டுறது இல்ல.” எனத் தொட்டுப் பார்த்துப் புன்னகைத்தார்.
அவரது முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
விஜயன் திருமணத்திற்கு முன்னர் முதன்முதலாய் உடை வாங்கி பரிசளித்த போது, “இன்னும் கொஞ்சம் பெட்டரா செலக்ட் பண்ணி இருக்கலாம்.” என உரைத்தது நினைவிற்கு வந்து, அன்றைய தினத்தின் தனது சிறுபிள்ளைத் தனத்தை காட்டியது.
‘இன்னும் கூட சற்று மன முதிர்வுடன் பேசி இருக்கலாமோ?’ என்று தற்போது தோன்றியது.
‘அன்னை நேசிக்கும் தந்தையின் ஐம்பது ரூபாய் புடவைக்குச் சமமானது தானே, அவனது இரண்டாயிரம் மதிப்புள்ள உடையும். ஆனால் தாயின் அளவிற்கு, தான் ஏன் அந்த ஆடையை நேசிக்காமல் விட்டோம்?’ என வினா எழுந்தது.
பதில் இல்லை.
விரும்பியதை அடைந்து பழகியவளிற்கு, தானாய் வந்ததன் மதிப்பு தெரியவில்லை என்பதே உண்மை.
“மாசத்துக்கு ஏழெட்டு தடவைக்கும் மேல கட்டுவேன்!” என்றவரின் சொற்களிற்கும், “ஒரே வாரத்துல போட்ட டிரஸ்ஸையே திரும்ப எப்படிப் போடுறது?” எனக் கேட்டவளின் வார்த்தைகளிற்கும் தான் எவ்வளவு வேறுபாடு?
“அவசரத்துக்குத் தேவைப்படும்னு சேர்த்து வச்ச பணத்துல தான், உனக்கு டிரஸ் வாங்கிக் கொடுத்தேன்.” என்று விஜயன் சொன்னது ஞாபகத்திற்கு வந்து, லேசாய் மனதை அரித்தது.
அதன் பொருள்.. அவன் காதலிக்குப் பரிசாய் ஒன்றை வாங்கித் தருவதை அவசியமானதாய் எண்ணாது, மிக முக்கிய அவசர தேவையாகவும் நினைத்து இருக்கிறான் என்பது அல்லவா?
அதற்கு மேல் சஞ்சனாவால் அதைப் பற்றி சிந்திக்க இயலவில்லை. அமைதியாய் நகர்ந்தாள், அவ்விடத்தில் இருந்து.
*
நள்ளிரவில் ஒலித்தக் கைப்பேசியைச் செவியோடு இணைத்தான் நவன்.
மறுபுறம் ரம்யா அழைத்து இருந்தாள்.
“என்ன ரமி.?”
“நவா, ஏர்போர்ட்ல இருக்கேன்டா. வந்து பிக்கப் பண்ணிக்கிறியா.?”
“இதோ வர்றேன்!” என்றவன் உடை மாற்றிக் கிளம்பினான்.
கணவனது வேகத்தைக் கண்ட கனி, “என்னங்க?”
“ரமியைப் பிக்கப் பண்ண போறேன்.”
“இந்த நேரத்துலயா?”
“ஆஃபிஸ்ல இருந்து பிஸினஸ் டிரிப் அனுப்பி இருந்தாங்க. இப்ப ரிட்டர்ன் வந்துட்டா.”
தனது பிறந்த தினத்தில் இருந்து, அவள் பார்வையில் படவில்லை என்பதை தற்போது தான் உணர்ந்தாள் கனி.
கடந்த ஒருவார காலமாக அலுவலகத்திற்கு நவன் மட்டுமே தனியாய் சென்று வருகிறான். ஏன் என்ற வினா எழுந்தாலுமே, ரம்யாவைப் பற்றிப் பேச விருப்பம் இல்லாமல் எதுவும் கேட்காது இருந்து கொண்டாள். இப்பொழுது, அதற்கான காரணம் புரிந்தது.
இதுவரை இழுத்து பிடித்து திருமண வாழ்வை நகர்த்தி வந்தவளின் பொறுமையானது, நடு இரவில் தன்னைத் தனியே விட்டுச் செல்ல தயாராகும் கணவனது செயலால் நிதானத்தை இழந்தது.
“சரி, அதுக்கு எதுக்கு உங்களைக் கூப்பிடுறாங்க. அவங்க புருஷனைத்தான கூப்பிடணும்.?”
“யாரைக் கூப்பிட்டா என்ன கனி?”
“நடுராத்திரியில இன்னொருத்தியோட புருஷனைக் கூப்பிடுறது சரி இல்ல.” என அவளுள் அமிழ்ந்து இருந்த சினமும் எரிச்சலும், இந்நொடியில் பட்டென்று வெடித்து வார்த்தைகளைச் சிதற விட்டது.
அவன் திகைத்து, “ஏய் என்ன சொன்ன.? அவ எனக்கு ஃப்ரெண்ட்.”
“ஃப்ரெண்டுனா இப்படி நேரங்கெட்ட நேரத்துல எல்லாம் கூப்பிடலாமா?”
“கனி, என்ன பேச்சு இது.?”
“நீங்க ஏங்க, இப்படி இருக்கீங்க? ஊர்ல இருந்த வரைக்கும் ஒருமாதிரி இருந்தீங்க. இங்க வந்ததும் ஆளே மாறிப் போயிட்டீங்க. எப்பப்பாரு, ரமி ரமினு அவங்க பேருதான் முக்கால்வாசி நேரம் வாயில இருந்து வருது. அப்படி அவங்க, என்னதான் உங்களுக்குச் செய்யிறாங்கனு எனக்குப் புரியவே மாட்டிது.”
“அடிச்சேனா பாரு.?” என நவன் குரல் உயர்த்திட, நடுக்கத்தோடு நோக்கினாள் கனி.
திருமணத்திற்குப் பின்னர் முதல் முறையாய் ஆடவனின் சினத்தைப் பார்க்கிறாள். இதயம் அதிவேகத்தில் துடித்து, உள்ளுக்குள் பயப்பந்தை உருள விட்டது. அதன் காரணமாய் விழிகள் அவனை வெறித்து நோக்கின.
“லூசுத் தனமா பேசிக்கிட்டு இருக்க? காலேஜ் டேஸ்ல கடை சாப்பாடு சாப்பிட்டு உடம்புக்கு ஒத்துக்காம போகும் போது எல்லாம் அவதான் வந்து என்னைப் பார்த்துக்கிட்டா. எத்தனை நாள், எனக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வந்திருக்கான்னு தெரியுமா?
தீபாவளி பொங்கலுக்குக் கூட, நான் ஊருக்குப் போக மாட்டேன். நீ மட்டும் ஏண்டா இப்படி இருக்கனு புது டிரஸ் வாங்கிட்டு வந்து கொடுத்து, அவளோட செலிபிரேஷனைத் தள்ளி வச்சிட்டு என் கூடவே இருந்துட்டுப் போவா.
இங்க வந்து, நான் சம்பாதிச்ச ஒரே ஒரு நல்ல மனுஷி. அவளுக்கு தேவையான நேரத்துல ஹெல்ப் பண்ணாம, நான் எதுக்கு ஃப்ரெண்டா இருக்கணும்? வீணானதை பேசி, நமக்கு இடையில பிரச்சனையை வர வச்சிடாத கனி. சொல்லிட்டேன், அவ்வளவு தான்!” என்றுவிட்டு அவன் கிளம்பிச் செல்ல, கண்களில் இருந்து நீர் வழிய நின்றிருந்தாள் பாவை.
கனிக்கு, கணவனிற்கும் அவனது தோழிக்குமான உறவின் மீது ஐயம் எல்லாம் எதுவும் இல்லை. ஆனால் ஆடவனின் சிந்தைக்குள் மனைவியாய் இருக்கும் தன்னைக் காட்டிலும் வேறு ஒருவள் முக்கியத்துவம் பெறுவதைத் தான் ஏற்க இயலாமல் தவித்தாள்.
ரம்யாவின் கணவன் கதிர் அவ்வப்போது வேலையின் சம்பந்தமாய் வெளியூர் சென்று விடுவது வழக்கம்.
‘ஒருவேளை இன்றும் அதுபோல் சென்று விட்டானோ? அதனால் தான் நண்பனிற்கு அழைத்தாளோ?’ என நவன் பேசி விட்டுச் சென்றதில், அவனது நட்பிற்கு ஆதரவாய் சிந்தனை துளிர்விட, உடனடியாய் ஆறாம் தளத்திற்குச் சென்றாள்.
நான்கைந்து முறைக்கும் மேல் அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருக்க, எவ்வித பதிலும் இல்லை.
‘ஊருல இல்ல போல? நாமதான் அவசரப்பட்டு அவருக்கிட்ட அப்படிப் பேசிட்டோம்! ஆனா, அவங்களும் தான் ஃப்ரெண்ட்ஸுனா கொஞ்சம் இடைவெளியோட பழக வேண்டாமா.?’ எனக் கணவனின் மீதான பிடித்தத்திற்காக.. கேள்வியைக் கேட்டு அதற்கான சமாதானத்தையும் உரைத்துக் கொண்டாள்.
நவநீதன் மொழிந்துவிட்டுச் சென்ற சொற்களில் மனம் நிலையின்றி தவிக்க, குடியிருப்பின் வாயிலிற்குச் சென்று காத்திருக்கத் தொடங்கினாள்.
ஒன்றரை மணி நேரம் ஆனது, அவனும் ரம்யாவும் வந்து சேர.
கனியைக் கண்டதும் அவள், “ஏய், என்ன இங்க வந்து நிக்கிற? வீட்டுல இருக்கிறது தான?” என வினவி, ‘என்ன?’ என்பது போல் நண்பனைப் பார்த்தாள்.
“என்ன, என்னைப் பார்க்கிற?”
“எதுவோ சரி இல்லையே? என்ன மேட்டர்?”
“ஒரு மேட்டரும் இல்ல. நீ வா.” என்றவன் தோழியின் உடைமைகளைத் தூக்கிக் கொண்டு முன்னே செல்ல, நண்பனது மனைவியின் கரத்தைப் பற்றிக் கொண்டு பின் தொடர்ந்தாள் ரம்யா.
நவன் சற்றுதூரம் சென்று விட்டதை கவனித்தவள் கனியிடம் குரல் தாழ்த்தி, “என்னாச்சு? உங்க ரெண்டு பேருக்கும் இடையில சண்டையா?” என வினவினாள்.
இளையவளிற்குத் தான் மற்றவளின் இயல்பான நடவடிக்கையில், ‘எதார்த்தமாய் பழகுபவளின் மீது ஒவ்வாத உணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டு தவறாயாப் பேசி விட்டோமோ?’ என்று ஒருமாதிரியான குற்ற உணர்வு தோன்ற ஆரம்பித்துவிட்டது.
“அதெல்லாம் இல்லக்கா!” என பதில் உரைத்திட, “அப்ப, அந்த எருமை கோபத்துல உன்னை ஏதோ பேசி இருக்கான்!”
கனி வியப்புடன் பார்க்க, “என்ன கரெக்டா சொல்லிட்டேனா? நீ ஸுவீட் பேபி. கோபமா எல்லாம் பேசத் தெரியாது. ஆனா அவன் இருக்கானே? சரியான ஆங்கிரி பேர்ட். கோபம்னு வந்துட்டா, காச்சு மூச்சுனு கத்தி வார்த்தையைக் கொடுக்கு மாதிரி கொட்டுவான்.”
“எப்படி அவரைப் பத்தி இவ்வளவு சரியா சொல்லுறீங்க அக்கா?”
“பன்னெண்டு வருஷமா பழகுறேன், எனக்குத் தெரியாதா? ஆனா, நவா குட் பாய் கனி. ஒருத்தரை அவனுக்குப் பிடிச்சிட்டா, அவங்களைச் சந்தோஷப் படுத்த தன்னால எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவும் செய்வான்.
இப்ப நான் கூப்பிட்டதும், உடனே கிளம்பி வந்துட்டான் பாரு. அதுவே உனக்காகனா, இதுக்கு மேல வேகமா இருப்பான்.”
“எனக்காக செய்வாரா? என்ன அக்கா சொல்லுறீங்க?”
“உனக்கு கண்ணன் பாட்டுனா ரொம்ப பிடிக்குமாமே?”
“உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“அவன்தான் சொன்னான். என்கிட்ட இருந்த பென்டிரைவைப் பிடிங்கிட்டு போயி, ஆஃபிஸ்ல வேலையைப் பார்க்காம உனக்காக சாங்ஸ் எல்லாம் தேடித் தேடி டவுன்லோட் செஞ்சிருக்கான்.”
கணவன் தனக்காக செய்ததை எண்ணி சட்டென்று முகமும் மனமும் மலர்ந்திட, “நிஜமாவா?”
“பாருடா. பேபியோட ஃபேஸ்ல சந்தோஷத்தை? அவனை அவ்வளவு பிடிக்குமா?”
‘ஆம்’ என்பது போல் தலை அசைத்தவள், “ரொம்ப!”
“ஏன் உனக்கு, என்னோட ப்ரெண்டை ரொம்ப பிடிச்சிருக்கு?”
“தெரியலயே அக்கா!”
“அதுசரி! காரணத்தை வச்சுக்கிட்டு ஒருத்தர் மேல பிடித்தம் வந்தா, அது எப்படி உண்மையானதா இருக்க முடியும்?”
கனி அதைக் கேட்டுப் புன்னகைத்திட, “வெளிய தான் கண் மண் தெரியாம பேசுவானே தவிர, ஆனா மனசு அப்படியில்ல. அந்த எருமைக்கு பாசத்தையும் அக்கறையையும் வார்த்தையால சொல்லத் தெரியாது. ஆனா, இதுமாதிரி அப்பப்ப செயல்ல காட்டுவான். நாமதான், புரிஞ்சுக்க முயற்சி செய்யணும். ஒருசிலர் இப்படித்தான். அதுனால கோபமா எதுவும் கத்துனா, அதையெல்லாம் பெருசா கண்டுக்காத.
உங்களுக்கு இடையில சண்டை வந்தாலும் கூட, நீ நார்மலா போய் பேசுனா அவனுமே நடந்ததை உடனே மறந்துட்டுப் பழைய மாதிரி ஆகிடுவான். ஓகேவா.?” என்றாள்.
தனது மாமனாருக்கும் கணவனிற்கும் இடையேயான உறவு அவளிற்கு நினைவிற்கு வந்தது.
இருவரும் ஒருவருக்கொருவர் பேசுவது, சண்டையிட்டுக் கொள்வது போலத்தான் இருக்கும். எனினும் தந்தையின் வார்த்தைகளை நவன் என்றுமே மீற மாட்டான். அவர் பார்க்கும் பெண்ணை, மணந்து கொள்ள சம்மதித்ததே அதற்குச் சான்று.
அதேபோல் தான் ராஜாவும். மகனின் நலனே அவருக்கு முதன்மை. அதற்காக தனது சுயகௌவரம் மட்டும் பாதிக்காத அளவில், எதைச் செய்திடவும் எத்தருணத்திலும் சித்தமாய் இருப்பார்.
நிச்சயத்த பெண் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றதிலும் சரி, உடனடியாய் வேறொரு பெண்ணைப் பார்த்துப் பேசி முடித்ததிலும் சரி.. தனது மகன் என்றுமே சிறுமையாய் உணர்ந்து விடக்கூடாது என்பதில் உறுதியாய் உடனுக்குடனே முடிவுகளை எடுத்து அதனைச் செயல்படுத்தியும் காட்டியவர்.
இந்த வகையில் தந்தையைப் போலத்தான் மகன் என ஒப்புக்கொள்ளவே வேண்டும்.
அதனை எண்ணி அவள், “சரி அக்கா..” என்றிட, பேசிய படியே ரம்யாவின் இல்லத்தை அடைந்தனர்.

