
அத்தியாயம் 29
ரம்யாவின் வீட்டிற்கு முன்பு நின்று இருந்தான் நவநீதன்.
‘கனி தனது தோழியிடம் பேசினால் அவளது எண்ணத்தில் மாற்றம் வரக்கூடும்!’ என, இரு பெண்களும் தங்களுக்குள் உரையாடிக் கொள்வதற்கான இடைவெளியையும் நேரத்தையும் கொடுத்து முன்னரே வந்திருந்தான்.
நண்பனைப் பார்த்தவள் புன்னகைத்து, “சரி, நீ போ நவா. இனி நான் பார்த்துக்கிறேன்.”
“கதவைத் திற, திங்க்ஸை உள்ள வச்சிட்டுப் போறேன்.”
“பரவாயில்லடா.”
“லூசு, ஓப்பன் பண்ணு!” என்றிட, திறந்து நேராய் அவள் படுக்கை அறைக்குச் சென்றாள்.
கூடத்தில் பைகளை வைத்த நவன், “ரமி எதுவும் வேணுமா? வாங்கிட்டு வரவா?” என வினவிட, உள்ளிருந்து பட்டென்று ஒலி.
கனியும் அவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வேகமாய் அறைக்குள் செல்ல, இடது கையால் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான் கதிர்.
ரம்யா கணவனை அறைந்து இருக்கிறாள் எனப் புரிந்து கொண்டனர்.
‘வீட்டுக்குள்ள தான் இருந்தாரா? நம்ம அத்தனை தடவை காலிங் பெல் அடிச்சும், ஏன் கதவைத் திறக்கல?’ எனக் கனி சிந்திக்க, “ஏன் பாஸ்?” என்றுவிட்டு வெளியே வந்தான் ஆடவன்.
கணவனின் பின்னாலேயே வரும் பொழுதுதான் கவனித்தாள், படுக்கைக்கு அடியில் மது பாட்டில்கள் இருப்பதை.
ரம்யா அடித்ததற்கான காரணத்தை அறிந்து கொண்டாள்.
அங்கு எதுவும் பேசாமல், அமைதியாய் வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்.
“ஏங்க?” என அருகே இருந்தவனை அழைத்தாள் கனி.
மறுமொழியாய், “என்ன?” என்று வினவியவனின் குரலில் ஏகத்திற்கும் கடுமை எட்டிப் பார்த்தது.
அவள் ரம்யாவைப் பற்றிப் பேசியதில் சினம் தான் என்ற பொழுதும், நடு இரவில் குடியிருப்பிற்கு வெளியே வந்து நின்று இருந்தவளைக் கண்டதும், அக்கோபத்தை இழுத்து பிடிக்க இயலாது, மனதின் இறுக்கத்தைச் சற்றே தளர்த்திக் கொண்டான்.
கணவனின் குரலிலேயே, ‘விருப்பமின்றி தன்னிடம் பேசுகிறான்!’ என்பதை புரிந்து கொண்டாள் பாவை.
எனினும் சற்று முன்னர் அவனது தோழியிடம் பேசியதன் விளைவாய், அந்த எண்ணத்தைப் புறம் தள்ளிய கனி, “உங்க ஃப்ரெண்டோட வீட்டுக்காரர் குடிப்பாரா.?”
மனைவியைப் புரியாமல் பார்த்தவன், “உனக்கு எப்படித் தெரியும்?”
“அவங்க ரூம்ல பாட்டில் பார்த்தேன்.”
“ஆமா.”
“ரொம்ப பெரிய குடிகாரரோ?”
“அதெல்லாம் இல்ல. இந்த ஒரு வருஷமா தான்.” என மனைவியின் வினாக்களை அலட்சியப்படுத்த இயலாமல் பதில் அளித்துக் கொண்டிருந்தான் நவன்.
அவளுமே ரம்யாவின் வாழ்வில் இருக்கும் கடினங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் “ஏன் இப்படித் திடீர்னு குடிக்க ஆரம்பிச்சிட்டாரு?” என்று தொடர்ந்து கேட்டாள்.
“கதிருக்கு இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளக்ஸ்.”
“அப்படினா?”
“தாழ்வு மனப்பான்மை.”
“எதுக்குத் தன்னையே தாழ்வா நினைக்கணும் அவரு?”
“ரமி, நல்ல வசதியான குடும்பத்துப் பொண்ணு. வீட்டுல இருக்கிற நாலு பேருக்கு, நாலு கார் நிற்கும். கதிர் அவங்க வீட்டுல வேலை பார்த்த வாட்ச்மேனோட பையன்.”
“இவங்க ரெண்டு பேருக்கும் எப்படிக் கல்யாணம்.?” என வினவியவளின் கண்கள் குழப்பத்தை தாங்கி இருந்தது.
“லவ் மேரேஜ்.”
குழப்பமானது சட்டென்று வியப்பிற்கு மாறிவிட, “நிஜமாவா சொல்லுறீங்க?”
நொடிக்கு நொடி மாற்றம் அடையும் மனைவியின் முக பாவங்களை பார்த்திருந்த நவனது அதரங்களில் புன்னகை தோன்றிட, “ஏன் நம்ப முடியலயா.?”
“ஆமா, எப்படி இவங்களுக்கு இடையில லவ் எல்லாம்? எனக்கு ஒன்னும் புரியல.”
“கதிரோடது வசதிக் குறைவான குடும்பம். ரம்யாவோட அப்பாதான், அவரைப் படிக்க வச்சாரு. அதுனால வீக் எண்டுல அவங்க வீட்டுக்குப் போய், ஏதாவது வேலை செஞ்சு கொடுப்பாரு. அப்படித்தான் ரெண்டு பேருக்கும் பழக்கம்.
கதிர் ரொம்ப அமைதி. ஆனா இந்த ரமி அவருக்கு அப்படியே ஆப்போசிட். இவ்வளவு நாளா அவளை நீ கவனிச்சு இருப்பியே? சரியான படபட பட்டாசு! இந்த லூசுதான் விடாம அவரைத் துரத்தி துரத்தி லவ் பண்ணிக் கல்யாணம் செஞ்சுக்கிச்சு. அவங்க அப்பாக்கு அதுல இஷ்டம் இல்ல. அதுனால வீட்டை விட்டு வெளிய வந்துட்டா.
கதிரோட வேலை, சம்பளத்தைப் பத்தி எல்லாம் உனக்கு ஏற்கனவே தெரியும் தான? தான் ரம்யாக்குப் பொருத்தமானவன் இல்லையோனு அவருக்கு ஒரு எண்ணம்.
போன வருசம், எங்க காலேஜ் பேட்சுக்கு ரீயூனியன் நடந்துச்சு. நானும் ரமியும் சேர்ந்து போனதை பார்த்து, நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்னு ஒருத்தன் தப்பா நினைச்சு பேசப் போயி, அது வேற மாதிரி பிரச்சனை ஆகிடுச்சு.
அதோட, அவளுக்குக் கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆகுது. இன்னும் குழந்தை இல்ல. அதுக்காக டிரீட்மெண்ட் வேற எடுத்துக்கிறாங்க. அந்த ஸ்ட்ரெஸ் வேற. எப்படியோ குடிக்க ஆரம்பிச்சிட்டாரு கதிர்.
நானும் ரமியும் அவருக்கிட்ட எவ்வளவோ பேசிப் பார்த்தோம். கொஞ்சமும் மாறுற மாதிரி தெரியல. ஆனா அவருக்கு ரமினா ரொம்ப இஷ்டம். ஒருநாள் கூட பேசாம இருக்க மாட்டாரு. இன்னைக்குக் கொஞ்சம் ஓவரா குடிச்சிட்டாரு போல, அதான் அடிச்சிட்டான்னு நினைக்கிறேன். டிரிங்க் பண்ணி இருக்கும் போது டிரைவ் பண்ணுறது சேஃப் இல்ல. அதுனால தான் எனக்குக் கால் செஞ்சு பிக்கப் பண்ண வர சொல்லி இருக்கா.”
“ஓ..” என்றவள் சிந்தனையுடன் அங்கிருந்து நகர, “ஏய், என்ன ‘ஓ’னுட்டுப் போற.?”
“வேற என்ன செய்யணும்?”
“நான் கிளம்பும் போது, என்ன பேச்சு பேசுன?”
“இந்த விபரம் எல்லாம், நீங்க எனக்கு முன்னாடியே சொல்லி இருக்கணும். சொல்லாம விட்டது உங்க தப்பு! சொல்லி இருந்தா, நான் அப்படிப் பேசி இருக்க மாட்டேன்ல?”
“எது, என் தப்பா.?”
“ஆமா! ரமி அக்கா உங்க ஃப்ரெண்ட். அப்ப, நீங்க தான அவங்களைப் பத்தி சொல்லி எனக்கு புரிய வச்சிருக்கணும். அதை விட்டுட்டு, நான் வீணா பேசுறேன்னு என்னைத் திட்டீட்டு போறீங்க? இதுல, அடிச்சேனா பாருனு டயலாக் வேற! அடிச்சிடுவீங்களா என்னை? எங்க, அடிங்க பார்ப்போம்? அத்தை மாமாக்கிட்ட நீங்க பேசுனதை எல்லாம் சொன்னா, என்ன நடக்கும்னு தெரியுமா.?”
அவனிற்குச் சிரிப்பு வர, “ஓ.. அப்படி என்ன நடக்கும்.?”
“அந்த அடி உங்களுக்குக் கிடைக்கும். இல்லேனா, ‘எங்க மருமகளை நாங்களே பார்த்துக்கிறோம், நீ போடா’னு துரத்தி விட்டுடுவாங்க உங்களை.”
“சந்தடி சாக்குல என்னை ‘டா’ போட்டு பேசிட்ட இல்ல?”
“நான் எங்க பேசுனேன்? மாமா அப்படி பேசுவாருனு தான் சொன்னேன்!”
“ஏய் வாயாடி!” என மனைவியின் கைப்பற்றி இழுத்து தனக்கு நெருக்கமாய் நிறுத்தியவன், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அழுகு மூஞ்சி மாதிரி கீழே நின்னுக்கிட்டு இருந்த ஆளா நீ? கால் மணி நேர கேப்ல, வாட் எ சேஞ்ச்? எப்படி எல்லாம் பேசுற, இந்த குட்டியூண்டு வாயை வச்சுக்கிட்டு!” என்றபடி அவளின் கீழ் இதழ்களை ஒருமுறை வருடிவிட்டு, அழுத்தமாய் பற்றி இழுத்தான்.
“ப்ச்ச்.. என்ன செய்யிறீங்க? விடுங்க என்னை! உதடு வலிக்கிது!” எனக் கணவனின் கரத்தைத் தட்டிவிட, “நல்லா சிவந்து, அழகா இருக்கு கனி உன்னோட லிப்ஸ்.”
“நல்லா நசுக்கி விட்டுட்டு, அழகா இருக்காம்!” என்று அவள் முறைக்க, மெலிதாய்ச் சிரித்தவன் சிவந்திருந்த இடத்தில் தனது இதழ்களை ஒற்றினான்.
அந்த ஒற்றல் அடுத்த இரண்டாம் நொடி முத்தமாய் மாற்றம் அடைய, தன்னால் உண்டான வலிக்கு உமிழ்நீரால் மருந்திட துவங்கினான் நவநீதன்.
ஊடலில் துவங்கி கூடலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது அவர்களுக்கு இடையேயான காதல் அரங்கேற்றம்.
*
அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை. நேரத்திற்கு எழுந்து அவசரமாய் தயாராகி வேலைக்கு கிளம்புவதில் இருந்து விடுமுறை, அனைவருக்குமே. இல்லத்து அரசிகளுமே சற்று ஆசுவாசமாய் பணிகளைக் கவனிக்கலாம்.
எட்டரை மணி வரையிலுமே படுக்கையில் தான் இருந்தாள் சஞ்சனா. அதன்பின்னர் கல்யாணி வந்து மகளை எழுப்பி விட்டு, தேநீரைக் கொடுத்துச் சென்றார்.
காலைக் கடன்களை முடித்து அதனை அருந்தி விட்டு, அறையில் அமர்ந்து இருந்தாள் பாவை. செய்வதற்கு என்று ஒரு பணியும் இல்லை.
இதுவரை சமையலின் அரிச்சுவடியைக் கூட கற்றுக் கொள்ளவில்லை என்பதால், அடுப்பு இருக்கும் பக்கமும் செல்வதற்கு இல்லை.
இதேபோல் விஜயனின் வீட்டில் எதுவும் செய்வதற்கு இல்லாமல் அறைக்குள்ளேயே அமர்ந்து இருந்த தினங்கள் நினைவிற்கு வந்தன.
“விஜி.. அதை வீடுனு சொல்லாத. ஒரு ரூம், அவ்வளவு தான்.” என்று சொல்லி விட்டு வந்தவள், தற்போது பிறந்தகத்தில் தான் இருக்கும் அறையை விட்டு, வேறு எங்குமே அவசியம் இன்றி செல்வது இல்லை எனும் நிலைக்கு வந்திருந்தாள்.
‘இது.. கணவனுடன் ஒரே அறையில் மூன்று மாதங்களுக்கும் மேலாய் தங்கி இருந்ததன் பழக்கமா? அல்லது, தனது தேவை ஒரே ஒரு அறை மட்டும் தானா.?’ எனக் குழப்பம் மேலிட்டது பாவைக்கு.
சமையல் அறையில் காலை உணவின் தயாரிப்பு நடக்க, அதேநேரம் மதியத்திற்காக மீன் வாங்க கடைவீதிக்குச் சென்று வரும்படி கணவனிற்கு, குடும்பத்தின் தலைவியிடம் இருந்து கட்டளை வந்தது.
“மணி, இப்ப தானம்மா ஒன்பது ஆகுது.?” என அவர் சமாதானம் உரைக்க, “மீனை வாங்கி வெட்டிட்டு வர்றதுக்கே ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகிடும். பதினொன்னுக்காவது வந்தா தான, ஒரு மணிக்காவது நான் சமையலை முடிக்க முடியும்? வாங்க, டிஃபனை சாப்பிட்டு கிளம்புங்க!” என்றார் கல்யாணி.
“சரிம்மா..” என நடராஜன் எழுந்து செல்ல, பெற்றோரின் பேச்சு வார்த்தை உள்ளிருந்த சஞ்சனாவின் செவிகளை அனுமதி இன்றி அடைந்தது.
இவையாவும் கணவன் மனைவிக்கான உரையாடல் அல்லவா? இதுபோல் எல்லாம், திருமணத்திற்குப் பின்னர் அவளிற்கும் விஜயனிற்கும் இடையே நிகழ்ந்ததே இல்லை.
தான் ஒருவரின் மனைவி என்ற உறவிற்கு மாற்றம் அடையாமல், கல்யாணி நடராஜன் தம்பதியரின் மகளாகவே தற்போது வரை வாழ்ந்து வருவதாய் தோன்றியது அவளிற்கு.
அறைக்குள் இருந்த தனிமை.. புகுந்த வீட்டின் சாயலைக் கொடுக்க, ஏனோ நேசம் கொண்டவனின் நினைவு அதிகமாய் ஆட்கொண்டு மனதை இம்சித்தது.
விஜயன் ஒவ்வொன்றையும் செய்யும் பொழுது, ‘அது தனக்குப் பிடித்திருக்கிறதா, தனக்கு வசதியாய் இருக்கிறதா?’ என்றுதான் யோசித்தாளே அன்றி, அவன் அதற்காக அடைந்த சிரமங்களையும் மெனக்கெடல்களையும் பற்றி இதுவரை சிந்தித்ததே இல்லை.
காலைப் பொழுதினில் உணவகத்தில் பணியை முடித்ததும், மனைவிக்கான உணவை பேருந்தில் பயணம் செய்து வந்து, கொடுத்து விட்டுச் செல்வான்.
ஒருநாளும் அந்நிகழ்வு அவளின் பிறந்தகத்தில் நிகழ்ந்தது இல்லை. அதற்கு தலைகீழாய் நடக்கும்.
நடராஜன் சொந்தமாய் தொழில் துவங்கிய காலத்தில், கல்யாணி தான் கணவனிற்குத் தேவையான உணவு, தேநீர் என அனைத்தையும் வீட்டில் தயார் செய்து எடுத்துச் செல்வார். இதோ, இந்நாளில் கூட அப்பழக்கம் தான் தொடர்ந்து வருகிறது.
‘இதுவரை விஜயனிற்காக, தான் தேநீரோ காஃபியோ கூட தயாரித்துத் தந்தது இல்லை!’ என இப்பொழுது தான் சிந்தைக்கு எட்டியது சஞ்சனாவிற்கு.
மாறாக ஆடவன் தான் காலையில் பணிக்குக் கிளம்பும் பொழுதே தேநீர் தயாரித்து, அவளிற்காக ஃபிளாஸ்கில் ஊற்றி வைத்துவிட்டுச் செல்வான்.
“எனக்காக என்ன செஞ்ச விஜி.?” என வீதியில் வைத்து அவனிடம் கேட்டது செவிகளுக்குள் ஒலித்து, விழிகளை கலங்க வைத்தது.
அதனைத் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைகளில் கணவனின் மீது அவள் சாட்டிய குற்றம், தந்த பாதிப்புகளைத் தான் தற்பொழுது அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
நேசம் கொண்ட மனம் காதலித்து கரம் பற்றியவனை விட்டு விலக மறுக்க, ‘எதுக்கு இப்படி கிளம்பி வந்து, அவனை நினைச்சு நிமிஷத்துக்கு நிமிஷம் நொந்து சாகுற? விஜி தான் சொன்னானே, வேலை கிடைக்கிற வரை கொஞ்சம் பொறுமையா இருனு. அதை செய்ய முடியாதுனு வந்தியே, இப்ப மட்டும் என்ன நீ ஆசைப்பட்ட மாதிரி இருக்க முடியிதா? சந்தோஷம், நிம்மதி ஏதாவது கிடைச்சுதா?’ என சிந்தை வினாக்களை எழுப்பி பாவையின் எண்ணங்களை சோதனை செய்து பார்த்தது.
ஊடலிலும் கூடலிலும் மட்டும் அல்ல, பிரிவிலும் கூட காதல் அரங்கேற்றம் நிகழும்.
இந்த இடைப்பட்ட காலத்தில் சஞ்சனாவின் உணர்வுகளிற்குள் மெல்ல அரங்கேற தொடங்கியது, கணவனின் மீதான காதல்.

