Loading

அத்தியாயம் 27

 

கைப்பேசியில் உரையாடியபடியே நடந்த கணவனின் மீது கண்களைப் பதித்தவாறு கோவிலில் இருந்து வெளியே வந்தாள் கனி.

‘பேச்சு கவனத்தில் மனைவியைத் தனித்து விட்டுவிடக் கூடாது!’ எனப் பாவையின் வலது கையை, தனது இடது கரத்தால் இறுக பற்றி இருந்தான் நவன்.

அவனது செயலில் சிரிப்புதான் வந்தது அவளிற்கு.

“எஸ் சார். ஹாஃப் டே லீவ் போதும். ஆஃப்டர்நூன் வந்திடுவேன். தேங்க்யூ சார்!” எனப் பேச்சை முடித்தவனின் கண்கள் உடன் இருப்பவளிடம் திரும்பியது.

அவளின் நடவடிக்கைகளை ஓரக்கண்ணால் அதுவரை பார்த்து இருந்தவன், “என்ன சிரிப்பு?”

“ஒன்னும் இல்ல.”

“ஒன்னும் இல்லாததுக்கு யாராவது சிரிப்பாங்களா? என்ன விஷயம்னு சொல்லு!”

“இதென்ன சின்னப் பிள்ளை மாதிரி கையை விடாம பிடிச்சிருக்கீங்க?”

“நீ பாட்டுக்கு எங்கேயாவது போயிட்டேனா?”

“அட, அவ்வளவு அக்கறையா என்மேல?”

“என்னை நம்பிதான உன்னை இங்க அனுப்பி வச்சிருக்காங்க. அப்ப, நான் பத்திரமா பார்த்துக்கணும்ல?”

“அதுக்குனு இப்படியா?” என தன்னை பற்றி இருந்த அவனது கையை கண்களால் காட்டினாள்.

“பிள்ளைகளோட கையைத் தான் பிடிக்கணும்னு இல்ல. பொண்டாட்டியோட கையையும் பிடிச்சுக்கலாம்.”

“அப்படியா?”

“என்ன அப்படியா?”

“இப்படி வெளிய வரும் போது, புருஷன் பொண்டாட்டி கை பிடிச்சுக்கலாமா?”

“ஹேய்.. இதுல என்ன இருக்கு? அதெல்லாம் தாராளமா பிடிச்சுக்கலாம்.”

“ஓ.. அப்பாவும் சித்தியும் ஒரு நாளும் அப்படிப் பிடிச்சுக்கிட்டது இல்ல. நாங்க குடியிருந்த தெருவைத் தாண்டி பெருசா வேற எங்கேயும் போனது இல்லையா? அதனால இந்த மாதிரி நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்ல.”

சின்னதாய்ச் சிரித்தவன், “ஒவ்வொருத்தரும்.. வளர்ந்த விதமும், பழக்க வழக்கமும், வாழ்க்கை முறையும் வேற வேற இல்லயா? கல்யாணமான புதுசுல, அவங்களும் இந்த மாதிரி கையைப் பிடிச்சு நடந்திருக்கலாம். இப்ப பிள்ளைக வளர்ந்ததால, அதை விட்டுட்டாங்களோ என்னவோ?

நானுமே அம்மா அப்பா கைப்பிடிச்சு அதிகம் பார்த்தது இல்ல. ஆனா எந்த இடமா இருந்தாலும் சரி, ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்துல தான் உட்காருவாங்க. அம்மா தள்ளி உட்காந்தாலுமே, அப்பா கூப்பிட்டு தன்னோட பக்கத்துல வச்சுக்குவாரு.

இங்க கோயில்லயே பார்றேன், நம்மளை மாதிரி நிறைய பேரு இருப்பாங்க. சரி, இங்க வெயிட் பண்ணு. நான் பார்க்கிங் போய் வண்டியை எடுத்துட்டு வந்துடுறேன்!” என்றுவிட்டு செல்ல, கோவிலிற்கு வந்து செல்பவர்களைக் கவனிக்கத் துவங்கினாள் கனி.

நவன் சொல்லிச் சென்றது உண்மைதான். வயது வேறுபாடு இன்றி, திருமணமான பல இணைகள் கைப்பிடித்துச் சென்றனர்.

ஒருவர் வாழும் முறையை.. வளர்ந்த விதம் மற்றும் கற்றுக்கொண்ட பழக்க வழக்கங்கள் மட்டும் தீர்மானிப்பது இல்ல. அவர்கள் இருக்கும் சூழலும் சுற்றமும் சேர்ந்தே உறவினை வழிநடத்திச் செல்கின்றன என உணர்ந்து கொண்டாள்.

அந்த வகையில் நவநீதனும் ஆசைக்கனியும் நல்லண்ணங்கள் மிகுந்த சுற்றத்தையே பெற்றிருந்தனர். அதில் ரம்யாவின் நட்புதான், பாவைக்குச் சிறு குறையாகத் தோன்றியது. எனினும் கணவனின் மீதான பிடித்தத்திற்காக, அதனை ஏற்றுக் கொள்ள முயன்றாள்.

குடியிருப்பின் வாயிலில் மனைவியை இறக்கி விட்ட நவன், “சரி, நீ வீட்டுக்குப் போ. நான் அப்படியே கிளம்புறேன். எனக்கு லஞ்ச் வேணாம், உனக்கு மட்டும் செஞ்சுக்கோ, ஏதாவது. நைட் டின்னருக்கு வெளியே போகலாம். ஓகேவா?” என உரைத்துக் கனியிடம் விடைபெற்றுச் சென்றான்.

கோவிலிற்குக் கிளம்பும் முன்னர் கணவனானவன் தோழியைந் பற்றி பேசியதால் அவளின் மனதில் உண்டான வெறுமை, இடைப்பட்ட இந்த நேரத்தில் காட்டிய அன்பிலும் அக்கறையிலும்.. விரிசல் விழுந்த சுவற்றின் மீது பூசப்பட்ட லப்பத்தை போல் மறைந்திருந்தது.

இந்த லப்பத்திற்கு என்று ஒரு குணம் உண்டு. பிளவுகளை மறைத்து வைக்கும். அதுவே ஈரம் ஏறினால் பெயர்ந்து விழுந்து, விரிசல்களைக் காட்டிக் கொடுத்து விடும்.

கனியின் உணர்வுகளும், தற்போது அப்படித்தான் இருந்தன.

*

மணி, இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவ்வப்போது வாயிலை எட்டிப் பார்த்திருந்த கல்யாணி.. மகள் இன்னும் இல்லம் வந்து சேராததால், அழைப்பு விடுத்தார்.

மறுபுறம் தொடர்பை இணைத்த சஞ்சனா, “ஹலோ அம்மா?”

“ஏன் இன்னும் வீட்டுக்கு வராம இருக்க?”

“என்னம்மா?”

“மணி, பத்தாகப் போகுது சஞ்சு.”

“ஃப்ரெண்ட்ஸ் கூட கொஞ்சம் வெளிய வந்தேன்மா.”

“சரி, கிளம்பிட்டியா.?”

“இன்னும் இல்ல. பதினோரு மணி ஆகும்னு நினைக்கிறேன்.”

“ஹோ.. அப்படி என்ன செய்யிறீங்க?”

“ஹோட்டல்ல சாப்பிடுறோம் ம்மா.”

“முன்னாடியே என்கிட்ட ஏன் சொல்லல சஞ்சுமா?”

“ஸாரிமா, மறந்துட்டேன்.”

“முதல்லதான் இப்படி இருந்த. சரி, கல்யாணத்துக்கு அப்புறம் தானா மாறிடுவனு நினைச்சோம். ஆனா..”

“ஆனா.. என்னம்மா?”

“அந்த தம்பிக்கூட இருக்கும் போதும், நீ இப்படித்தான்  நடந்துக்கிட்டியா?”

சஞ்சனா சற்றே திகைத்து, “அம்மா.?”

“சரி. ரொம்ப லேட் ஆக்காம, சீக்கிரம் வரப்பாரு.” என்று பேசி முடிக்க, இல்லத்திற்குள் நுழைந்தார் நடராஜன்.

“என்ன கல்யாணி பேச்சு சத்தம் பலமா இருக்கு.?” என மனைவியிடம் வினவ, மகளிற்கும் தனக்குமான கைப்பேசி உரையாடலை உரைத்தார்.

“ஹோ..” என்ற குடும்பத் தலைவரின் முகத்தில் சிந்தனை ரேகை படர்ந்தது.

“என்ன, யோசனை செய்யிறீங்க?”

“சஞ்சனாவோட வீட்டுக்காரரைப் போய் பார்த்துப் பேசிட்டு வந்தேன்!” என்றவர் மாமனாருக்கும் மருமகனிற்கும் இடையே நடந்த உரையாடலைப்
பற்றிப் பகிர்ந்தார்.

“ஒரே பொண்ணுனு கேட்கிறதை எல்லாம் வாங்கித் தந்து, ரொம்ப செல்லம் கொடுத்து நாமளே அவளுக்கு எதையும் சொல்லிக் கொடுக்காம வளர்த்துட்டோமோனு தோணுதுங்க. இதுவே நாம பார்த்து வச்ச பையனைக் கல்யாணம் செஞ்சிருந்தா, பெரும் பிரச்சனையா ஆகி இருக்கும் போலயே.?” என கல்யாணி உரைத்திட, ஒருவித பேரமைதி நிலவியது இல்லத்தில்.

தந்தையானவருக்கும் மகளின் இன்றைய தின செயலில் பெரும் வருத்தம். அதனால் மனைவி பேசியதை தலையசைத்து ஏற்றுக் கொண்டார்.

மகளின் எதிர்கால வாழ்வைப் பற்றிப் பேசியபடியே மூத்த தம்பதியர் இரவு உணவை முடித்து விட்டு, வீட்டின் வாயிலுக்கு வந்து காத்திருக்க துவங்கினர். சிறிது நேரத்தில் வந்தாள் சஞ்சனா. மணி, பத்து ஐம்பதைக் கடந்து இருந்தது.

பெற்றோரை வெளியே பார்த்தவள், “என்னப்பா,. அம்மாவும் நீங்களும் இந்த நேரத்துல இங்க நின்னுகிட்டு இருக்கீங்க?”

“உன்னை இவ்வளவு நேரமா காணோமா? அதான்..” நடராஜன் பதில் தர, பாவையின் நினைவு சட்டென்று கணவனிடம் சென்றது.

விஜயனும் இப்படித்தான். இங்கு பெற்றோர்கள் வாசலில் தான் நின்றிருந்தனர். அவனோ, தெருமுனைக்கே வந்து விடுவான். திருமணமான கடந்த மூன்று மாதங்களில், ஐந்தாறு முறை அதுபோல் நடந்திருக்கிறது.

அந்த நினைவுகள் யாவும் நேசித்தவனின் ஞாபத்தை.. முன்அறிவிப்பு ஏதும் இன்றி மனதில் மறுஓட்டம் நடத்தின.

“சரி வாங்க, உள்ள போவோம்!” என ஒரு பெருமூச்சை விட்டபடி அவள் வீட்டிற்குள் செல்ல, அவர்களும் பின் தொடர்ந்தனர்.

“இவ்வளவு நேரம் லேட்டா வர்றது எல்லாம், நல்லது இல்ல சஞ்சு!” என கல்யாணி மெல்ல உரைத்திட, “ஏன்மா?” என்றாள் அவள்.

“என்ன ஏன்னு கேட்கிற?”

“வேற என்னம்மா கேட்கிறது உன்கிட்ட? ஃப்ரெண்ட்ஸைப் பார்க்கப் போறது தப்பா?”

“தப்புனு யாரு சொன்னா?”

“அப்புறம் வேற என்ன?”

“அதுக்கு இதுதான் நேரமா? லீவு நாளுல அவங்கக்கூட பகல் நேரத்துல வெளிய போறது. காலையில போயிட்டு, சாயங்காலம் கூட வா. உன்னை எதுவும் சொல்ல மாட்டோம். ஆனா.. வேலைக்குப் போற நாள்ல, நேரத்தோட வீட்டுக்கு வந்து சேர வேண்டாமா? காலம் கெட்டுக் கிடக்கு.”

“ம்மா..” என அழைத்து சஞ்சனா அன்னையின் பேச்சை நிறுத்த முயல, “உன்னைப் பெத்தவ, கெடுதலுக்கா சொல்லுவா? உங்க அம்மா பேச்சையும் தான் கொஞ்சம் கேளேன்!” என்றார் நடராஜன்.

வேறு வழி இல்லாது அவள் அமைதியாய் பெற்றவர்களைப் பார்க்க, “வயசான கிழவிக்குக் கூட இங்க பாதுகாப்பு இல்ல சஞ்சுமா. நாமதான் நம்மளைப் பார்த்துக்கணும்.

அதைக்கூட விடு! தங்கம் விக்கிற விலைவாசிக்கு கவரிங் செயினைக் கூட விடாம அத்துட்டு போயிடுறானுங்க. நகை போனா போயிட்டுப் போகுது. கழுத்தை இல்ல அறுத்துடுறாங்க. ராத்திரியில இப்படி லேட்டா தனியா வர்றது, பாதுகாப்பு இல்ல. அம்மா உன்னோட நல்லதுக்குத் தான் சொல்லுறேன்!” என்றார் கல்யாணி.

ஈன்றவர்களின் பயமும் பரிதவிப்பும் அவளிற்குப் புரிய, ‘சரி’ என்பதாய் தலையை மட்டும் அசைத்தாள்.

அறிவுரை என்ற பெயரில் ஒரே தினத்தில், அனைத்து உணர்வுகளையும் மகளின் மீது திணிக்காமல் அன்றைய தினத்தில் அத்தோடு நிறுத்திக் கொண்டனர், வாழ்க்கைப் பாடத்தை அறிந்திருந்த அந்த மூத்த தம்பதி.

*

உயர்ரக உணவு விடுதி ஒன்றிற்கு மனைவியை அழைத்து வந்திருந்தான் நவநீதன்.

கனிக்குப் பிடித்தமானதைக் கேட்டு உண்பதற்கு வாங்கித் தந்தவன்.. இருவருமாய் உண்ணும் அந்த இடைவெளியில் பெற்றோரிற்கு அழைப்பு விடுத்து கைப்பேசியை ஒலிபெருக்கிக்கு மாற்றி வைத்தான்.

அம்பிகையும் ராஜாவும் தங்களின் வாழ்த்தையும் ஆசியையும் மருமகளிற்குத் தெரிவிக்க.. அவனோ, “என்னோட பிறந்த நாளுக்கு சில வருஷங்களா நீங்க இப்படி விஷ் பண்ணதா ஞாபகமே இல்லையே எனக்கு?” என்று வினவினான் மூத்தவர்களிடம்.

“நல்லா இரு! கோவிலுக்குப் போனியா? பிறந்தநாள் வாழ்த்துகள்னு சொல்லும் போது, மருமக என்ன பதில் சொல்லுச்சு.?” என மறுபுறம் இருந்து மகனிடம் வினவினார் ராஜா.

“ஆமா, தேங்க்ஸுனு சொன்னா.”

“இதுவே, நீயா இருந்தா என்ன சொல்லி இருப்ப?”

“ஏன், என்ன சொல்லி இருப்பேன்?”

“எங்க நல்லா இருக்கேன்? கடன்காரனா தான் பிழைப்பு போகுது. கோயிலுக்கு எல்லாம் போக முடியாது. பெத்துட்டு, கடமையை ஒழுங்கா செய்யலனு அதுக்கு ஒரு பேச்சு பேசி இருப்ப எங்களை. இது தேவையா? பிறந்த நாள்லயாவது உன்னை டென்ஷன் பண்ணாம இருக்கலாமேனு தான், எதுவும் பேசுறது இல்ல.

பேசலன்றதுக்காக, பாசம் இல்லாம எல்லாம் போகாது. நானும் உங்கம்மாவும் இங்க கோயிலுக்குப் போயி, உன் பேர்ல அர்ச்சனை செஞ்சிடும். எதுக்கு விளம்பரம்னு வெளிய சொல்லிக்கிறது இல்ல.”

“அதான் இப்ப சொல்லிட்டீங்களே?”

“இதோ.. இதுக்குத்தான் பேசுறதே இல்ல!”

“ஆமா.. இதையே சொல்லி நீங்க நல்லவரு மாதிரியும், என்னைக் கெட்டவனாவும் ஆக்கிடுங்க.”

“சேச்சே! நீ கெட்டவன் எல்லாம் இல்லடா. நிச்சயம் நல்லவன் தான். ஏன்னா, பெத்தது நான் ஆச்சே? உன்னோட உடம்புல, என்னோட இரத்தம் இல்ல ஓடுது!”

அதற்கு மேல் தந்தையிடம் பேச விரும்பாதவன், “அம்மா..” என்றிட, “பேசுறது எல்லாம் நீயும் அவரும் பேசிட்டு, கடைசியில என்னை எதுக்கு இழுக்குற?” என வினவினார் அம்பிகை.

“என்கிட்ட ஏட்டிக்குப் போட்டியா பேசுறதுக்காகவே யோசிச்சு வச்சிருப்பாரா அவரு?”

“ஆமா.. எனக்கு வேற வேலை இல்ல!” என்று ராஜா இடைநுழைந்து உரைக்க, “கடவுளே முதல்ல ரெண்டு பேரும் பேச்சை நிப்பாட்டுங்க!” என தாலி மற்றும் தொப்புள் கொடி உறவிற்குக் கட்டளையிட்டார் குடும்பத்தின் தலைவி.

“ம்ம்..” என்று தந்தை தனயன் இருவரும் ஒன்று போல் உரைக்க, “கனி, ஊருக்கு எதுவும் வரணும்னு இருக்குதாமா உனக்கு..?” என மருமகளிடம் பேசினார்.

உணவை விரல்களால் அலைந்தவள் அமைதியாய் இருக்க, “என்ன மருமகளை பேசாம இருக்க.?” என்றார் ராஜா.

அவள் எதிரே அமர்ந்திருந்த கணவனைப் பார்க்க, “ஊருக்குப் போகணுமா கனி?” என நவனும் தன் பங்கிற்குக் கேட்டான்.

“போகணும்னு தான் தோணுது. ஆனா உங்களுக்கு லீவ் கிடைக்கணும்ல.?”

அவன் சிந்தனையில் மூழ்க, “நவநீ, தாலி பெருக்கிக் கோர்க்கணும். நான், கனியோட வீட்டுல பேசிட்டு நல்லநாள் பார்த்துச் சொல்லுறேன். ரெண்டு மூனு நாள் இருக்கிற மாதிரி ஊருக்கு வந்து போங்க!” என்றார் அம்பிக்கை.

கணவனை முந்திக்கொண்டு அவள், “சரிங்க அத்தை!” என உரைத்திட, ஆடவனோ பாவையின் சிறுபிள்ளை தனத்தைக் கண்டு புன்னகைத்தான்.

“சரி சரி.. மருமகளே பிறந்தநாளுக்கு உன்னோட வீட்டுக்காரன் என்ன வாங்கி தந்தான்?” என்று ராஜா வினவிட, “கிஃப்டை வாங்கி வச்சிருக்கேன். வீட்டுக்குப் போயிதான் அவக்கிட்ட கொடுக்கணும். அடுத்த தடவை ஃபோன் பேசும் போது விசாரிச்சுக்கோங்க! இப்ப, எங்களை விடுங்க.” எனப் பேச்சை முடித்தான் நவன்.

கணவனை வியப்புடன் நோக்கியவள், “காலையில பாட்டுப் போட்டுக் கொடுத்தீங்களே, அது கிஃப்ட் இல்லயா?”

“ஆன்லைன்ல இருந்து சாங் டவுன்லோட் பண்ணுறது எல்லாம், கிஃப்டல சேராது கனி டியர்.”

அவள் அதைக் கேட்டுப் புன்னகைத்திட, “சரி சாப்பிட்டு முடிச்சிட்டியா? கிளம்புவோமா?”

“ம்ம்..” என்றிட, பணத்தைச் செலுத்தி விட்டுக் கிளம்பினர்.

இல்லத்தை அடைந்ததும், மனைவியின் கரத்தில் தங்க நிறத்தில் அவன் கைக்கடிகாரத்தை அணிவிக்க, விழிகள் தெறித்து விழும் அளவிற்கு வியப்பாய் நோக்கினாள்.

“வாட்சாங்க.?”

“பிடிச்சிருக்கா கனி.?”

“ம்ம்.. ரொம்ப நல்லா இருக்கு.”

“எஸ்.. உன்னோட கைக்கு இந்த டிசைன் பர்ஃபக்டா மேட்ச் ஆகுது. ரமிக்கு செம டேஸ்ட்.”

அவள் புரியாத பார்வையுடன், “ரம்யா அக்காவா?”

“ஆமா. உனக்கு வாட்ச் பிரசண்ட் பண்ணலாம்னு அந்த இம்சை தான் ஐடியா குடுத்துச்சு. அதான் செலக்ட் பண்ணுறதுக்காக அவளையே கூட்டிட்டுப் போயிட்டேன்.”

“ஓ..” என்றவளிற்கு அதுவரை இருந்த மகிழ்ச்சி மொத்தமும் வடிந்து போனது.

“நேரமாச்சு. நான் போயி தூங்குறேன்!” என்று நகர்ந்து வந்தவள், கடிகாரத்தைக் கையோடு கழட்டி வைத்து விட்டாள்.

‘அது ரம்யாவால் தேர்ந்தெடுக்கப்பட்டது!’ என அறிந்ததும், ஏனோ அணிந்து கொள்வதற்கு மனம் ஒப்பவில்லை.

‘அவ செலக்ட் பண்ணி இருந்தாலும், அதுக்குக் காசு கொடுத்தது உன்னோட வீட்டுக்காரர் தான?’ என்று மூளை உரைத்திட, ஆடவனின் மீது ஆசை கொண்ட நெஞ்சமோ அதை ஏற்க மறுத்தது.

கண்மூடி படுக்கையில் படுத்து இருந்தவளை நவன் பின்னிருந்து அணைக்க, “கோவிலுக்குப் போகணும்னு வீட்டை முழுசும் சுத்தம் செஞ்சு துடைச்சு விட்டேன். அதுனால உடம்பு கொஞ்சம் சோர்வா இருக்குங்க. இன்னைக்குக் கொஞ்சம் தூங்கிக்கட்டுமா? ப்ளீஸ்.. நாம நாளைக்கு..” எனக் கெஞ்சலாய் வினவினாள்.

“ஹேய்.. அதுக்கு எதுக்கு ப்ளீஸுனு எல்லாம் சொல்லுற. ரெஸ்ட் எடு. நான் சும்மா மட்டும் உன்னைப் பிடிச்சுக்கிறேன்!” என்று தனது தேகத்தோடு மனைவியை ஒட்டிக் கொண்ட நவன், “ஹேப்பி பர்த்டே கனி! குட் நைட்!” எனக் காதோரம் உரைத்திட, அவளிற்கு விழியோரம் கசிந்தது.

இதுபோல்.. இவர்கள் இருவருக்கு இடையே ரம்யாவைப் பற்றிய பேச்சு வரும் தருணங்களில் எல்லாம், ஒரு நாளில் பகலும் இரவும் மாறிமாறி வருவது போல், பாவைக்கு கணவனின் மீதான பிடித்தமும் சினமும் அவ்வப்போது மாற்றம் அடைந்து உணர்வுப் பேரலையாய் சுழன்று கொண்டே இருந்தது.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
23
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்