Loading

அவள் துடிப்பதை கண் கொண்டு அவனால் காண இயலவில்லை. அவளை தன்னிரு கைகளில் ஏந்திக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான் ரகுவரன். காரை சந்துரு ஓட்ட, பெண்ணவளை தன் தோள் சாய்த்து அமர்த்தியவன் அவளது கைகளை ஆறுதலாக பற்றிக் கொண்டான்.

 

“ம்மா…முடியல…ரொம்ப வலிக்குது. என்னால முடியல. என் குழந்தைக்கு எதுவும் ஆகிடாது தானே ரகு. என் பேபி எனக்கு வேணும். என் பேபிக்கு ஒண்ணும் ஆகக்கூடாது.” என்றவள் வலியில் கதறினாள்.

 

“ஒண்ணும் ஆகாதுமா. நீ பதட்டப்படாத. ரிலாக்ஸா இரு.” என்று என்ன தான் ஆறுதல் அவனளித்தாலும் அவன் மனமோ குத்தியது. தான் அன்று கூறிய வார்த்தைகள் இன்று நடந்திடுமோ? என்றெல்லாம் பயம் அவன் மனதைக் கவ்விக் கொள்ள, அவளை விட பயந்துப் போனது என்னவோ அவன் தான்.

 

‘கடவுளே என்னால அவ கஷ்டப்படுறத பார்க்க முடியலை. என் இரண்டு பேபியையும் நீ தான் காப்பாத்தணும். நான் பண்ண பாவத்துக்கு எனக்கு தண்டனை கொடு. அவங்களை ஒண்ணும் பண்ணிடாத ப்ளீஸ்.’ என்று மானசீகமாக வேண்டிக் கொண்டான்.

 

இதோ மருத்துவமனையை அடைந்திருந்தார்கள். பெண்ணவளால் ஒரு எட்டு கூட வைக்க இயலாது போக, அவளை ஸ்டெச்சரில் படுக்க வைத்தவாறு விரைந்து சென்றான் ரகுவரன்.

 

“டாக்டர், அவ அழுகுறத பார்க்க முடியலை டாக்டர். அவளையும் எங்க குழந்தையையும் காப்பாத்துங்க டாக்டர்.” என்று மருத்துவரைக் கண்ட நொடி இருகரம் ஏந்தி இவன் கெஞ்ச, வலியிலும் அவளது பார்வை அவன் மீது பதிந்தது.

 

மருத்துவரும் அவனை வெளியேற்றிவிட்டு அவளை பரிசோதித்தார். சந்துருவிற்கு இவனிடம் என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. 

 

“மச்சான், அவளுக்கு ஒண்ணும் ஆகாது தானே?”

 

“ஒண்ணும் ஆகாது ரகு”

என்று ஆறுதலாக கூறினாலும் அவனுக்குமே பதட்டமாகத் தான் இருந்தது.

 

சிறிது நேரத்தில் வெளியே வந்த பெண் மருத்துவரோ, “ரொம்ப பலவீனமா இருக்காங்க பீபி லெவல் இன்க்ரீஸ் ஆகியிருக்கு. எப்படி கவனிக்காம விட்டீங்க? அப்புறம் அவங்க கர்பப்பை ரொம்ப பலவீனமா இருக்கு. இன்னும் நீங்க கொஞ்சம் தமாதப்படுத்தியிருந்தாலும் உள்ள வளருர குழந்தைக்கு ஆபத்தா போயிருக்கும்.”

 

“டாக்டர், இரண்டு பேருக்கும் ஒண்ணும் ஆக கூடாது டாக்டர். ப்ளீஸ் அவளை காப்பாத்துங்க.”

 

“ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு. எங்களால முடிஞ்ச எல்லா முயற்சியும் பண்றோம்.” என்றவர் கூறிவிட்டு செல்ல அவன் மனமோ படபடத்தது.

 

“நான் பண்ண பாவத்துக்கு இவங்க ஏன்டா கஷ்டப்படணும். பாவம்டா அவ… அந்த மேஜர் ஆக்ஸிடென்ட் அப்புறம் என் கூடவே இருந்து என்ன அவ்ளோ கேர் பண்ணி பார்த்துகிட்டவடா. இப்போ இப்படி கிடக்குறா… எல்லாம் என்னால தான்.” என்று கண்ணீர் விடுபவனை கடினப்பட்டு தேற்றமுயன்றான் சந்துரு.

 

அடுத்த இருபத்தி நாலு மணி நேரமும் அவனது வாழ்வில் நரக நொடிகளாகவே நகர்ந்தது. கண்களை மூடி கடவுளை வேண்டினான். 

 

“என் அப்பாவை என்கிட்ட இருந்து பறிச்சுகிட்ட. இந்த முறை எனக்காக என் மானசாவையும் என் குழந்தையையும் கொடுத்திடு. இனி நான் எப்போதுமே தப்பு பண்ணவே மாட்டேன். அவங்களை மீட்டு கொடு.” என்றவனின் வேண்டுதல் கடவுளை அடைந்ததோ என்னவோ, 

வெளியே வந்த மருத்துவர் புன்னகைத்தார். “பயப்பட ஒண்ணுமே இல்ல. பேபியும், பேபியோட அம்மாவும் ஆல்ரைட். இனி சிக்ஸ் மந்த் கம்ப்ளீட் பெட் ரெஸ்ட் இருக்க வேண்டியது வரும். அதுவரை ரொம்ப கேர்புல்லா பார்த்துக்க வேண்டியது வரும்.” என்றவர் கூறிவிட்டு செல்ல அப்போது தான் பெருமூச்சினை விட்டான் ரகுவரன்.

 

சில மணி நேரம் கழித்து அவளைக் காண உள்ளே சென்றவன் அவளது கால்களை தன் இரு கரத்தால் பற்றிக்கொண்டான். அவனையும் மீறி ஆணவனின் கண்ணீர் துளிகள் பெண்ணவளின் கால்களின் மீதே விழுந்த அந்நொடி அவளது மூடியிருந்த இமைகள் மெல்ல திறந்தது.

 

“ரொம்ப பயந்துட்டியா?” என்றவள் கேட்கும் போதே தெரிந்தது எத்தனை பலவீனமாக இருக்கிறாள் என்று.

 

“செத்துட்டேன்.” என்றவனின் பதிலில் அவளையும் மீறி அவளது விழிகள் கலங்கியது.

 

“பேபி, நீயும் நம்ம பாப்பாவும் எனக்கு வேணும். என்னை விட்டு விலகி போயிடாதீங்க இரண்டு பேரும். ப்ளீஸ்.” என்றவன் அவளது கால்களை பற்றிக் கொண்டு கெஞ்ச, அவனது மாற்றத்தை கலங்கிய விழிகளுடன் ஏறிட்டாள் பெண்.

 

“இங்க வா?” அவனை அவள் அழைக்க, குழந்தை போல அவளின் அருகே விரைந்துச் சென்றான்.

 

“கொஞ்சம் குனி.” என்றவள் கூற, அவளுக்கு நிகராக அவன் குனிந்த நொடி பளார் என்று அவன் கன்னத்தில் அறை வைத்தாள் பெண். அவனோ மறு கன்னத்தையும் காட்ட, அவளோ அறையாது அவனைக் கண்டு முறைத்து தள்ளினாள்.

 

“நீ பேசுன பேச்சுக்கு இந்த அடி எல்லாம் பத்தாது. வாழ்க்கை முழுக்க நீ அடி வாங்கு.” 

 

“இது போதும் பேபி எனக்கு… ஒரு அடி மட்டுமில்ல, ஓராயிரம் அடி வாங்க கூட நான் தயாரா இருக்கேன். நீயும், நம்ம பேபியும் என்னோட இருந்தா போதும்.” 

 

“எப்போ கல்யாணம் பண்ண போற?”

 

“இதோ இப்போவே.” என்றவன் அவளுக்காக கடவுளை வேண்டும் போது எடுத்து வைத்திருந்த குங்குமத்தை பிரித்தவன் அவளது உச்சி வகுட்டில் வைக்க, அவளோ கண்களை மூடி திறந்தாள். அடுத்த நொடி அவளது கன்னத்தை ஏந்தியவன் அவளது நெற்றியினை முட்டி, 

 

“தாங்க்ஸ் பொண்டாட்டி” என்று கூறிய நொடி இருவரது விழிகளும் ஒரு சேர கலங்கியிருந்தது.

 

நந்தா கூறிய வார்த்தைகள் அவள் மனதிலிருந்த ரணத்தை ஆற்றிவிட்டே சென்றது. அது மட்டுமல்லாது தன்னிலைக் கண்டு ரகுவரன் துடித்த துடிப்பினை பார்த்தவளது மனதிற்கு அவனை விலக்கி வைக்க முடியாமல் போனது. ஒவ்வொரு தருணமும் அவனை விட்டு இவள் விலகி செல்லும் போதெல்லாம் அவள் வயிறு வலித்தது அல்லவா? குழந்தைக்கு தந்தை வேண்டும் என்ற எண்ணமும் ஒரு விதத்தில் காரணமாகிப் போக, இனி அவளது காயங்களை அன்பினால் அவன் ஆற்றுவான் என்ற நம்பிக்கையும் துளிர்விடத் தொடங்கியது.  

                                ***

நந்தாவும், கேணியும் பிளைட்டில் கோயமுத்தூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். விமானத்தில் ஏறியது தொடக்கம் உர்ரென்று வரும் கேணியை அவனது கண்கள் கவனிக்காமல்  இல்லை.

 

“ஏம்ப்பா கேணி, உனக்கு உம்முன்னு இருக்கிறது எல்லாம் செட்டே ஆகலை.”

 

“எனக்கு எல்லாம் தெரியும். நீ கொஞ்சம் கம்முன்னு இருப்பா.” என்று முகத்தை திருப்பிக் கொண்டான் கேணி.

 

“கேணி, என்ன தான்டா உனக்கு பிரச்சனை?”

 

“அடேய், என்ன பேச வைக்காத?” என்றவன் அமைதியாக வர, 

 

“சரி தான் போடா.” என்றவன் கண்களை மூடிக்கொண்டான்.

 

கோயமுத்தூர் விமான நிலையத்தில் இவர்கள் வந்த விமானம் தரையிறங்கியிருக்க, விமானத்தை விட்டு இறங்கியது தான் தாமதம், அதுவரை இழுத்துப் பிடித்து வைத்த மூச்சுக்காற்றை  அதிவேகத்தில் வெளியிட்டான் கேணி. 

 

“என்ன இந்த நாத்தம் நாறுது.” என்று நந்தா சுற்றும் முற்றும் பார்க்க,

 

“அது ஒன்னுமில்லைடா சிஷ்யா, இழுத்து மூச்சு விடுறப்போ,  பின்புறக் காற்றும் சேர்ந்து வந்திருச்சுடா.” என்றவன் வெகு சாதாரணமாக கூற, அவன் பின்னே நடந்து வந்த சிலரும் நாற்றம் தாங்காது மூக்கை பிடித்தபடி தெறித்து ஓடினர்.

 

“அட நார பயலே. இதுக்கு தான் அப்படி மூஞ்சியை வெச்சுகிட்டு வந்தியா?” என்று நந்தா வேறு வழியின்றி மூக்கை பொத்திக் கொள்ள,

 

“நான் வானத்துல தான்டா பிளைட்டை பார்த்திருக்கேன். என்ன போய் இதுல கூப்பிட்டு வந்துட்டு பேச்சாடா பேசுற. பிளைட் கீழ இறங்குற வரைக்கும் அல்லு இல்லை. யப்பா சாமி நல்லவேளை அந்த தாலி காத்த காளியம்மன் புண்ணியத்தால பத்திரமா வந்துட்டோம்.” என்றவன் வானை நோக்கி கடவுளுக்கு நன்றியை கூற, 

 

அவனது செயலை அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்தவன் தலையில் அடிக்காத குறையாக அவனை அழைத்துக் கொண்டு இரண்டு மணி நேர பயணத்திற்கு பின்பு ஈரோட்டை அடைந்திருந்தான்.

 

நந்தாவின் வீட்டைக் கண்டதும் வாயைப் பிளந்தான் கேணி. 

 

“அடேய் சிஷ்யா. இவ்ளோ பெரிய வீட்டை வெச்சுட்டா என்னோட நீ தங்கியிருந்த? உன்னை மாதிரி ஒருத்தனை உலகத்துல நான் பார்த்ததே இல்லைடா. நீயெல்லாம் ஏன் திருடனா வாழ நினைச்ச?”

 

“உனக்கொரு உண்மையை சொல்லவா? இந்த வீட்டை காட்டிலும் அங்கதான் எனக்கு ரொம்ப பிடிச்சுது. அங்க எந்த பாகுபாடும் இல்லை. ஆயா கடையில எத்தனை நாள் காசு இல்லாமல் இட்லி சாப்டிருப்போம். வெளியே இருந்து எவனாவது பிரச்சனை பண்ணா, அத்தனை பேரும் போய் சண்டை போடுவோம். நமக்கு காய்ச்சல்னா ஏரியாவே கேட்கும். உண்மையா அங்கிருந்த நாட்கள் எனக்கு வரம்டா. கொஞ்ச நாளா இருந்தாலும் அங்க ஏழை பணக்கார பாகுபாடு இல்லாம சந்தோசமா இருந்தேன். உண்மைய சொல்லணும்னா அங்க இருக்க நம்ம ஜனங்க மனசு தான் பெருசு.” என்றவன் அவ்வளவு அழகாக எடுத்துக் கூற,

 

“எனக்கு கண்ணெல்லாம் வேர்க்குது சிஷ்யா. ரொம்ப பெருமையா இருக்கு.” என்றவன் வராத கண்ணீரை துடைப்பது போல பாவனை காட்ட, “செல்லம்டா நீ… என் திருவல்லிக்கேணி” என்று நந்தா அவனை கட்டிப்பிடிக்க, உள்ளுக்குள் அவனது அன்பில் கரைந்து தான் போனான் கேணி.

 

“அப்புறம் சிஷ்யா தங்கச்சி பத்தி என்ன முடிவு எடுத்திருக்க? நம்ம மும்பை போறப்போ ட்ரையின்ல போயிட்டு, என்ன தான் பிளைட்ல ஒரு மணி நேரத்துல திரும்பி வந்தாலும் இங்க வரவே நாலு நாள் ஆகிடுச்சு. அந்த பொண்ணு என்ன நினைச்சிருக்கும்?” 

 

“என்ன நினைச்சிருப்பா..? தொல்லை விட்டுச்சுனு துள்ளி குதிச்சிருப்பா.” என்று விளையாட்டாக கூறியவன் கேணியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்த தருணம், வீட்டிலிருந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவனை முறைக்க, அவனோ குழப்பத்துடன் அவர்களைக் கண்டவன் நேராக தாத்தாவை நோக்கிச் சென்றான்.

 

“ஹாய் தாத்து? என்ன நீ, என்னை பார்த்ததும் முகத்தை திருப்புற? சொல்லாம கொள்ளாம போயிட்டேங்குற கோபமா?” என்றவனோ தாத்தவின் கரம் பற்றிக் கேட்க, அவரோ அவனை மேலும் முறைத்து தள்ளுவதில் குறியாக இருந்தார்.

 

“என்னாச்சு தாத்து? சரி விடு  உன்னை எப்படி கவனிக்கணும்னு எனக்கு தெரியும்.” என்றவன் சௌந்தர்யாவை பார்த்து,

 

“சித்தி, எனக்கு ஜில்லுனு ஜூஸ் வேணும். அப்படியே என் நண்பனுக்கும் கொண்டு வாங்க.” என்றவன் கூற, அவனது சித்தியோ அவனை முறைத்து விட்டு பழச்சாறை எடுத்து வந்து மேசையில் பட்டென்று வைத்து விட்டு மாடி நோக்கிச் சென்றார்.

 

“டேய் சிஷ்யா, உங்க வீட்ல எல்லாரும் ரொம்ப டெரரோ?” என்றவன் நந்தாவின் காதைக் கடிக்க,

 

“டேய், அப்படி எல்லாம் இல்லை. நான் வீட்டுல சொல்லாம வெளிய வந்ததுனால  வந்த சின்ன கோபம்.” என்றவன் தன் அண்ணன் மகள் சந்தனாவைக் கண்டதும், “ஏய், சந்து பேபி. சித்தப்பா வந்திருக்கேன் ஓடிவா.” என்று ஆசையாக அழைக்க,

 

“உன் பேச்சு கா.” என்ற குழந்தையோ ஒரே ஓட்டமாக மாடியில் உள்ள அறைக்கு ஓடிச் சென்றது.

 

“க்கூம்… சின்னதுல இருந்து பெருசு வர எல்லாம் அணு குண்டு முழுங்குன மாதிரி தான இருக்காங்க. இப்போ புரியுது நீ ஏன் நான் தங்குன குப்பத்துக்கு வந்தேன்னு.”

 

“டேய் கேணி, கொஞ்சம் அமைதியா இருடா.” என்றவன் தன் அத்தை நந்தினியை பார்த்தான்.

 

“அத்தை, இங்க என்ன தான் நடக்குது?”

 

” நீ இப்படி ஒரு காரியம் பண்ணுவேனு நான் நினைச்சு கூட பார்க்கலைடா. இப்படி பண்ணிட்டியேடா.” என்று அவரும் முகத்தை திருப்பிக் கொண்டு செல்ல, பாவம் இவன் தான் குழம்பிப்போய் நின்றான்.

 

“தாத்து, இங்க என்ன தான் நடக்குது?” என்றவன் வேறு வழியின்றி தாத்தாவிடம் மீண்டும் கேட்க, 

 

“நீ இவ்ளோ கோபக்காரனா இருக்கக்கூடாது. மேல போய் பாரு.” என்றவர் கூறவும் விரைந்துச் சென்றான் நந்தா. அவன் பின்னே கேணியும் செல்லப் பார்க்க,

 

“நீ எங்கடா போற தடிமாட்டு பயலே.” என்ற தாத்தாவின் அதட்டலில் திரும்பியவன்,

 

‘என்ன இந்த ஓல்டுமேன் இப்படி பேசுறாரு.’ என்று நினைத்துக் கொண்டான்.

 

“என்னடா பராக்கு பார்க்குற? ஜூஸ் எடுத்துக் குடி.” என்றவர் கூறவும், “நல்ல மரியாதை” என்றவன் முணுமுணுக்க,

 

“என்ன?” என்று தாத்தா கம்பினை நீட்டவும்,

 

“ரொம்ப நல்லா உபசரிக்குறீங்க தாத்தா.” என்று முப்பத்திரண்டு பற்களையும் காட்டினான் கேணி.

 

இங்கு மேல வந்து பார்த்தவன் அறை முழுவதும் கூட்டமாக நிற்பதைக் கண்டு எட்டிப் பார்த்தநொடி அதிர்ந்துப் போனான். ஆம் அவ்விடம் மெத்தையின் மீது அமர்ந்திருந்தது சாட்சாத் அவனது துணைவியே. அவளை சுற்றி பெண்கள் கூட்டமாக சூழ்ந்திருக்க அவளோ கதைகதையாக அளந்துக் கொண்டிருந்தாள்.

 

“இது மட்டுமில்லை உங்களை பத்தி அவர் ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. எப்போ பாரு, என்னை திட்டிட்டே தான் இருப்பாரு. அன்பான சின்ன மாமியார், அம்மா மாதிரி பார்த்துக்க இரண்டு அத்தைங்க, சித்தி சித்தினு பாசமா பழக அழகான இரண்டு குழந்தைங்க, தோழி மாதிரி பழகுறதுக்கு சைத்ரா அப்புறம் அக்சரா. அன்பா மட்டுமே பேசத் தெரிஞ்ச மாமனார், ஹேன்ட்ஸமான சித்தப்பாஸ், கம்பீரமான தாத்தா. இப்படி ஒரு அழகான குடும்பத்தை மறைக்குறதுக்கு அவருக்கு எப்படி தான் மனசு வந்துச்சுன்னே தெரியலை.” என்றவள் கண்ணீர் வடிக்க,

 

“என் சாமி, அழாதடா கண்ணு.” என்று பெண்ணவளின் கண்ணீரை துடைத்து விட்டார் சௌந்தர்யா.

 

“பார்த்தீங்களா அண்ணி, இந்த ரகு பையன் பண்ண காரியத்தை. நம்மளை தான் மறந்துட்டு போனானு பார்த்தா, அந்த பொண்ணையும் கஷ்டப்படுத்திருக்கான். அவன் வரட்டும்.” என்று பொறிந்து தள்ளினார் சந்திரலேகா.

 

“எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு சந்திரா. நம்ம ரகுவா இப்படி.” என்று சந்திராவின் கணவரும் பேச, அங்கு கண்ட காட்சியில் வாயில் கைவைத்தபடி அதிர்ந்து நின்றவன், இதற்கு மேல் விட்டால் சரிபட்டு வராது என்பதை உணர்ந்து, “இங்க என்ன நடக்குது? அப்புறம் எல்லாரும் இங்க என்ன பண்றீங்க?” என்றான் சத்தமாக.

 

அவன் குரல் கேட்டு மது நாக்கினைக் கடித்தவள், “பார்த்தீங்களா அத்தை அவரு எப்படி கோபப்படுறாரு.” என்று பாவம் போல் கூற, அவனோ, “நான் எங்கடி கோபப்பட்டேன்” என்று அழுத்தமிட்டுக் கூற, அவளோ மிரள்வது போல உதட்டினை பிதுக்கினாள்.

 

“என்னடா, குழந்தை பொண்ணை போட்டு இப்படி மிரட்டுற?” நந்தினி முறைக்க, பெண்ணவளோ யாரும் பார்க்காத நொடி நந்தாவைக் கண்டு கண்ணடித்தாள்.

 

“அடிப்பாவி” என்றவன் முணுமுணுத்தவாறு அவளது நாடகத்தை உணர்ந்தவன், “சரி இப்போ எல்லாரும் வெளிய போறீங்களா? நான் மதுகிட்ட பேசணும்.” என்றான் சற்று காட்டமாகவே.

 

“எதுக்கு அந்த புள்ளையை மிரட்டவா. பிச்சு புடுவேன் பிச்சு. போடா.” என்று கூறிய சந்திரலேகா கையோடு மதுவை அழைத்துக் கொண்டு சென்றுவிட இறுதியில் தனியாக மாட்டியது என்னவோ சைத்ரா தான்.

 

சைத்ராவோ நைசாக நழுவப் பார்க்க, “எங்க போற அம்மு? உங்கிட்ட கேட்க ஆயிரம் கேள்வி இருக்கு.” என்றான் அழுத்தமாக.

 

“ரகு, எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீ போறப்போ நம்ப ஃபேமிலி போட்டோவை மிஸ் பண்ணிட்டு போயிட்ட. நீயாச்சு இனி மதுவாச்சு. என்னை ஆளை விடுங்க சாமிகளா.” என்றவள் ஒரே ஓட்டமாக ஓடி சென்றுவிட்டாள்.

 

நந்தாவின் வீட்டிற்கு வருவதில் மிக தீவிரமாக இருந்தாள் மதுவர்ணிகா. சைத்ராவுக்குமே அவளது செயல் புரியவில்லை. அவனிடம் வேறு எதுவும் கூறக்கூடாது என்று மது சொல்லியிருந்ததால், சைத்ராவால் மதுவின் காதலை பற்றி நந்தாவிடம் கூற முடியவில்லை. நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்றெண்ணி அவளை அழைத்துக் கொண்டு இவ்விடம் வந்துவிட்டாள் சைத்ரா.

 

வந்த சில நொடிகளிலே வீட்டில் உள்ளவர்களது மனதை கவர்ந்துக் கொண்டாள் மதுவர்ணிகா. நந்தா எவ்வாறு அவள் வீட்டில் இடம் பிடித்தானோ? அதே போல இவளும் இவன் வீட்டில் உள்ளவர்களின் மனதில் இடம்பிடித்துக் கொண்டாள். ஒரே நாளில் இத்தனை மாற்றமா? என்று தான் தோன்றியது நந்தாவிற்கும்.

 

‘இவ என்ன நினைச்சுட்டு இந்த மாதிரி எல்லாம் பண்றா? இது இப்படியே விடக்கூடாது.’ என்றவன் தீவிரமாக யோசித்தான்.

 

மதுவை கீழே பார்த்த கேணிக்கும் அதிர்ச்சி தான். மதுவிற்கு அவனை தெரியவில்லை என்பதால் அவனைக் கண்டு அவள் புன்னகைத்தாள்.

 

“எனக்கென்னமோ நம்ம நந்தா இவங்கூட சேர்ந்து தான் இப்படி மாறிட்டான்னு தோணுது.” என்று தாத்தா ஒருபுறம் முறைக்க,

 

‘இந்த கிழவன் நம்மளையே டார்கெட் பண்றான். இது சரிபட்டு வராது.’ என்று மனதில் நினைத்த கேணி, “டேய் மச்சான், பாய்டா. உனக்கு வேண்டப்பட்டவங்களே வந்தப்புறம் நான் எதுக்கு இடையில இருந்துட்டு.” என்றவன் தாத்தாவை முறைக்க,

 

“மொதல்ல போய் தொலைடா தடிமாடு.” என்று தாத்தா சத்தமாக கூற, நந்தா ஏதேனும் பேசுவான் என்று எதிர்பார்த்த கேணிக்கு ஏமாற்றமாய் போனது. அந்நொடி அவன் கவனம் முழுவதும் மதுவின் மீது அல்லவா இருந்தது!

 

“ஊருல இருந்த ஒரு நல்லவனும், எனக்கு மட்டும் துரோகம் பண்றான்‌. ஒண்ணும் சொல்றதுக்கில்லை.” என்று வாய்விட்டே புலம்பியது கேணியின் உள்ளம்.

 

“பாய் தாத்தா” என்று தாத்தாவிற்கு டாட்டா காட்டிவிட்டு செல்ல,

 

“இன்னுமா நீ கிளம்பலை தடிமாடு.” என்றவர் கத்தவும், முகத்தை திருப்பிக் கொண்டவன்,

 

“டேய் சிஷ்யா, வூட்டாண்ட வருவல்ல அப்போ உன்னை யார்னே தெரியாது போடானு சொல்லலை, என் பேரு திருவல்லிக்கேணி இல்லைடா.” என்று மானசீகமாக சாவல் விட்டபடி வீட்டைவிட்டு சென்றிருந்தான் கேணி.

 

பின் அனைவரும் மதுவை விழுந்து விழுந்து கவனிக்க, தன் குடும்பத்தை எண்ணி தலையில் அடிக்காத குறையாகப் பார்த்தான் நந்தா. சர்வாவும் கூட “அண்ணி” என்று உரிமையுடன் பேச, ஆக மொத்தத்தில் யாரும் இவனைக் கண்டுக் கொள்ளவே இல்லை. 

 

ஒருபுறம் அவன் ஆசைப்பட்டது தான் இருந்தாலும் அவளது செயல் நடிப்பா? இல்லை உண்மையா? என்று தான் குழப்பமாக இருந்தது அவனுக்கு. அவளுக்காக பொறுத்திருந்து காத்துக்கொண்டிருந்தவன், இரவு தூங்குவதற்காக அறைக்கு அவள் வந்த நொடி கேள்வி கேட்க தயாராகியிருந்தான் நந்தா.

 

“மது, இப்போ எதுக்கு இப்படி எல்லாம் பண்ற?” அவளை ஊடுருவும் பார்வை பார்த்தபடி கேட்டான்.

 

“நான் என்ன பண்ணேன்?”

 

“ப்ச்… புரியாத மாதிரி கேட்காத? நான் யாருனு தெரிஞ்சதும் இங்க வந்திருக்கேனா என்ன அர்த்தம்?”

 

“என்ன அர்த்தம்?”

 

“நான் உங்கிட்ட கேள்வி கேட்டா… நீ எங்கிட்ட கேள்வி கேட்குற?”

 

“இல்லை சொல்லுங்க நந்தா. உங்க கருத்து என்னனு தெரிஞ்சுக்க விரும்புறேன்.”

 

“உனக்கு  என்னை பிடிக்கலை தான. உனக்காக தான ஒதுங்கி வந்தேன்.”

 

“சின்ன திருத்தம். விட்டுட்டு வந்துட்டீங்க.”

 

“நீ எதிர்பார்த்தது தானே?”

 

“ஓ நான் சொன்னேனா?” 

 

“உன்னோட நடவடிக்கையே சொல்லுச்சு‌.”

 

“ம்ம்ம்… வெல். இப்போ நீங்க என்ன நினைக்குறீங்கனு நான் சொல்லட்டுமா?”

 

“ம்ம்ம்… என் மனச படிக்க உனக்கு முடியுமா?”

 

“ம்ம்ம்… நல்லாவே. உங்களை பழி வாங்க உங்களை மாதிரியே உங்க வீட்டுக்கு வந்து நடிக்க வந்திருக்கேன். அப்படி தான நினைக்குறீங்க?”

 

“லைட்டா. ஆனால் உண்மையை சொல்லணும்னா எனக்கு புரியலை மது? ஏன் இப்படி எல்லாம் பண்ற? எதுக்கு இந்த நாடகம்?”

 

“நமக்கு பிடிச்சவங்களுக்காக எவ்ளோ பெரிய நாடகம் வேணாலும் போடலாம் தப்பில்லை.” அவனை உற்று பார்த்து அவள் கூற, அந்நொடி அவனது இதழ்களில் வலி நிறைந்த புன்னகை வந்து விட்டு சென்றது. 

 

அவன் சைத்ராவிடம் கூறிய அதே வார்த்தைகளில் சில மாற்றங்கள் புரிந்து கூறுகிறாள் அவ்வளவு தான் வித்தியாசம். 

 

“சரி நான் தூங்கட்டுமா? நாளைக்கு அக்சராக்கு புடவை எடுக்கப் போறோம். எப்படியும் கல்யாண ஷாப்பிங் அலைச்சல் நிறைய இருக்கும்.”

என்றவள் கூறிவிட்டு நகர்ந்துச் செல்ல, அவளது கைகளை பற்றி தடுத்து நிறுத்தியிருந்தான் நந்தா.

 

“என்னால உன்னை புரிஞ்சுக்கவே முடியலை மது?”

 

“புருஞ்சுருந்தா என்னை விட்டு போயிருக்கமாட்ட.” என்றவள் அவனது கைகளை மட்டும் விலக்கவில்லை. அவனுக்கும் விளக்கம் அளித்திருக்க, அந்நொடி அவளை இன்ப அதிர்ச்சியுடன் ஏறிட்டது ஆணவனின் கண்கள்.

 

அடுத்த நொடியே அவளை தன்னை நோக்கி இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவன் பரந்த மார்பின் மீதே கைவைத்து மோதி நின்றாள் பெண்‌. அவளது கருவிழிகளோ படபடத்துக் கொண்டது. இதயமோ தாறுமாறாக அடித்துக் கொண்டது அவனது நெருக்கம் தந்த படபடப்பில்.

 

“மது, இப்போ என்ன சொன்ன?”

 

“விம்பார் போட்டு விளக்கி சொல்ல முடியாது. இதுக்கு மேல புரியலைனா இப்படியே இரு.” என்றவளோ அவனை படபடப்பிலும் திமிர் பார்வை பார்த்தாள்.

 

“உனக்கு என்னை பிடிக்குமா? இல்லை நான் தான் ரகுநந்தன் னு தெரிஞ்சதுனால பிடிச்சுதா?” என்றவனின் ஒற்றை வார்த்தை அவளை காயப்படுத்தியிருக்க, அவனது சட்டையை கொத்தாக பற்றிக் கொண்டவள்,

 

“என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? ஹான் நீ பணக்காரன்னு தெரிஞ்சதும் உன்னை லவ் பண்ற மாதிரி தெரியுதா?” 

 

“ஏய், நான் அந்த அர்த்தத்துல கேட்கலை டி. எப்பபாரு தப்பாவே புரிஞ்சுகிட்டா எப்படி. சைத்ராவோட கசின், அப்புறம் உன்னை காப்பாத்துனது இது எல்லாம் தெரிஞ்சதுனால பிடிச்சுதானு கேட்டேன்.” என்றவனின் பதிலில் மீண்டும் கோபம் தான் வந்தது அவளுக்கு. கோபத்தை மீறி வலியும் தோன்ற,

 

“அன்னைக்கு நீ குடிச்சிட்டு வந்தப்போ கூட, நான் தந்த முத்தத்துல காதலை பார்த்தேன்னு சொன்னியேடா. இப்போ தெளிவா இருக்கும் போது இப்படி பேசுற? அப்போ உனக்கு என் காதல் புரியவே இல்லையா? உன்னை திட்டினாலும் உன்னோட காதலை நான் உணர்ந்தேனே? நீ மட்டும் ஏன் நந்து உணரலை. அந்தளவு நான் உன்னை காயப்படுத்திட்டேன்ல. என் மேல தான் தப்பு. நான் தான் தப்பு.” என்றவள் உதட்டை மடித்து கேவி அழ, அவளது அழுகை அவனை கலங்கச் செய்தது.

 

“ஏய், மது அழாதடி. நீ அழுதா எனக்கு வலிக்கும். ரொம்ப… உன் லவ் எனக்கு தெரியாம இருக்குமா? இருந்தும் உன் வாயால தெரிஞ்சுக்க அவ்வளவு ஆசையா இருக்கு. அதுக்கு தான் உன்னை விட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கேன். கேடி நான் போறப்போ நீ அழுத தானே? ஆனால் சட்டுன்னு உன் கண்ணீரை துடைச்சுட்ட. அட்லீஸ்ட் நான் போறப்போ என்னை தடுப்பேன்னு நினைச்சேன். அதுவும் நீ பண்ணலை. எனக்கும் வலிக்கும் தானே ஜூஜிலி.” என்றவன் அவளது கன்னத்தை பிடித்துக் கொண்டு கேட்க, அவள் அழுகையைக் கண்டு அவன் கண்களிலும் கண்ணீர் திரண்டு வந்தது.

 

“நீ ஏன்டா அழுகுற?”

 

“நான் எங்க அழுதேன். அது சும்மா வேர்க்குது.” என்றவனின் சொல்லில் அழுகையிலும் புன்னகைத்தவள், 

 

“ஐ லவ் யூ நந்து ஐ லவ் யூ…” என்று அவன் மார்பில் முகம் புதைத்தபடி வெடித்து அழுதாள்‌.

 

“மது” என்றவன் அவளை மிக இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

 

“எனக்கு இந்த நந்தாவை தான் பிடிச்சிருக்கு. அவன் மனசு எனக்காக ரொம்ப வலியை  தாங்கியிருக்கு.” என்றவள் சர்ட் பட்டன் விலகியிருந்த அவனது மார்பினை தன் கைகளால் மென்மையாக தடவி விட்டாள்.

 

“இப்போ வலிக்கலை மது. ரொம்ப சந்தோசமா இருக்கு. என் மது என்னை லவ் பண்றா. இந்த திருடனை லவ் பண்றா. இது போதும் எனக்கு.” என்றவன் அவளது உச்சந்தலையில் முத்தம் பதிக்க,

 

“எஸ் என் மனசை திருடிட்டு போன திருட்டு பயலை தான் காதலிக்குறேன். இன்னும் நிறைய காதலிப்பேன். நீ எங்கூடவே இருப்ப தானடா. எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டு போ மாட்டியே?” அவள் கேட்டதும் பெண்ணவளின் முகத்தை மீண்டும் தன் கைகளில் ஏந்தியவன், “போகவே மாட்டேன். ஐ ப்ராமிஸ்” என்று அவளது நெற்றியை முட்டிக் கொண்டு கூற, அந்நொடி அவனது காதலில் அவள் உருகி தான் போனாள். 

 

தனக்காக ஒருவன் இத்தனை தூரம் இறங்கி வந்து காதல் புரிய, அந்த காதலுக்கு கொஞ்சம் கூட தகுதியற்றவளாக தான் இருப்பதாகவே உணர்ந்தவள், அவனுக்காகவே அவனைத் தேடி அவன் வீட்டிற்கு வந்திருந்தாள். இங்கு வந்த பின்னர் தான் தெரிந்தது எத்தனை அழகான மற்றும் அன்பான உறவுகள் அவனுக்கு இருக்கின்றது என்பது. அந்நொடி இத்தனை உறவுகளையும் விட்டுவிட்டு தன்னை தேடி வந்தவனது காதலின் ஆழத்தை நினைக்கும் போதே அவனைக் கண்டு கர்வமாக பார்த்தது பெண்ணவளின் கண்கள்.

 

“ஆமா அத்தை மாமாகிட்ட என்ன சொல்லிட்டு வந்திருக்க?”

 

“என் புருசனோட ஹனிமூன் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு வந்தேன்.” என்றவள் கூற,

 

“வாவ்..! அதுக்கான வேலையை ஆரம்பிப்போமா?” அவன் கேட்டதும் வெட்கத்தில் முகம் சிவந்துப் போனாள் மது.

 

“நீ வெட்கப்படுறத பார்க்கும் போதே, என் நாக்கு கவிதை சொல்லத் துடிக்குது மது.”

 

“கவிதை எல்லாம் சொல்ல வருமா?”

 

“என்ன இப்படி கேட்டுட்ட?” என்றவன் மனமோ ‘அய்யயோ வாயைக் கொடுத்து வம்புல மாட்டிகிட்டோமே? எப்படி சமாளிக்க’ என்று யோசனை செய்ய,

 

“ஓய் கேடி கவிதை சொல்ல வரும்னு பொய் தான சொல்ற. போ நான் தூங்கப் போறேன்.” என்றவள் அவனை விட்டு நகர்ந்த அத்தருணம்…

 

“உன் கண்ணீரில் கலந்த

என் பார்வையில்

அதன் பின் 

வந்த ஒவ்வொரு நாளும்

விடியலும் நீயே…

காரிருளும் நீயே…

உன் இடை தொடங்கி

என் பார்வை

பதிந்த

உன் மேனிகள்

சொல்லுமடி

எனை மயக்கிய 

மற்றும் மயக்கும் மதுரம்

நீ ஒருத்தியே என்று…”

என்றவன் அவளையே பார்த்தபடி கூற அவன் கவியில் கரைந்தவள், அவனை காதலோடுக் காண, தன்னவளை இருக்கரம் ஏந்தி தூக்கிக் கொண்டான் இந்த கள்வன். அவனையே கண்கள் அகலாது பார்த்தாள் கள்வனின் துணைவி.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்