
பவித்ராத்யா விளக்கம் கொடுத்த பின் யாரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
“சுதாவையே ஆஃப் பண்ணிட்டா இந்தப் பொண்ணு” தேவாரம் சிலாகிக்க, ஜெயசுதா திரும்பி தேவாரத்தை முறைத்ததில், அவர் அழகு காட்டினார்.
அதில் வாய்க்குள் சிரித்துக் கொண்ட ஜெயசுதா, பவித்ராத்யாவை அளவெடுத்தார்.
யோகா என்ற பெயரில் ஏனோ தானோவென எதையும் சொல்லிக் கொடுக்காமல், அக்கறை மிகுந்த அவளது அணுகுமுறை மிகவும் பிடித்தது.
அக்னி வேந்தனும் கூட அப்படித்தான். தையல் பழக ஆசைப்பட்டதும், சடுதியாக அதற்கு ஒரு அறையை உருவாக்கியதோடு, வெகு நேரம் அமர இயலாத பெரியவர்களுக்கு அந்த அறையில் ரெக்லைனர்களுடன் கூடிய இருக்கையை ஏற்பாடு செய்திருந்தான்.
யோகா சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த பவித்ராத்யாவிற்கு யாரோ தன்னை துளைப்பது போல பிரம்மை எழுந்ததில், சற்றே தள்ளி இருந்த மர நிழல்களை விழிகளால் துழாவ, அங்கு யாரும் இல்லை.
அன்றைய வேலையை முடித்துக் கொண்டு, தனது அறைக்குச் சென்றவள் மெத்தையில் டொம்மென படுத்தாள்.
மனம் ஒரு வித அழுத்தத்தில் உழன்றது. சில வருடங்களுக்கு முன், தனது தாய்க்கும் தந்தைக்கும் இதே போல யோகா சொல்லிக் கொடுத்தது நினைவிலாடி கண்ணீரையும் கொடுத்தது.
எத்தனை அழகான நாள்கள்! இன்று வெறும் கசந்த நினைவாக மட்டுமே நெஞ்சில் உறைந்திருக்கிறது!
ஒரு காதல். ஒரே காதல்… அவர்களின் ஒட்டு மொத்த நிம்மதியையும் அல்லவா குலைத்து விட்டது.
இங்கு திலோத்தமாவும் அதே எண்ணத்தில் தான் புதைந்திருந்தாள்.
வாழ்வில் அந்த ஒரு நாள் மட்டும் வராமல் இருந்திருந்தால்… இன்று தன்னுடைய தரித்திரத்தில் இவனும் புரளாமல் இருந்திருப்பான் தானே!
அமைதியாய் கட்டிலில் கண்மூடி படுத்திருந்த தன்னவனைப் பார்வையை மறைத்த நீர்திவலைகளுடன் ஏறிட்டாள்.
“அம்மா…” நான்கு வயது நிரம்பிய அக்னிலா கையில் தனது கரடி பொம்மையைத் தூக்கிக் கொண்டு அங்கு வந்தாள்.
மகளைக் கண்டதும் வேகமாய் கண்ணைத் துடைத்துக் கொண்ட திலோத்தமா, “உஷ்… அப்பா தூங்குறாங்க குட்டிமா” என்று அவளை வெளியில் அழைத்து வந்தாள்.
“அப்பா கூட விளையாடனும்…” அக்னிலா முகத்தில் விழுந்த முடியை பின்னால் தள்ளியபடி ஏக்கமாகக் கூற, திலோத்தமாவிற்கு அழுகை முட்டிக்கு கொண்டு வந்தது.
“அப்பாவுக்கு உடம்பு சரி இல்லைல அகிமா… சரியாகவும் உன் கூட விளையாடுவாங்க சரியா!” என்று அவளை அணைத்துக் கொள்ள, “போங்கமா… இப்டி தான் ரொம்ப நாள் சொல்றீங்க. ஐ மிஸ் அப்பா” என்ற சிறுமியின் விழிகளில் சிறு துளியாய் கண்ணீர்.
இதற்கே இப்படி என்றால் இனி நிரந்தர பிரிவும் இருக்கிறதல்லவா? எண்ணும்போதே வலித்தது.
மகளை சமாதானம் செய்து உறங்க வைத்தவள் தனதறைக்கு தூக்கி வர, அப்போது கண் விழித்திருந்தான் அவன். விக்ரம வேந்தன்.
“முழிச்சுடீங்களா விக்ரம்!” அத்தனை முகம் தாங்கிய வேதனை தற்போது துளியும் இல்லை.
தன்னவனின் வதனம் கண்டதும் எப்போதும் போல புத்துயிர் கொண்ட தேகத்தை எண்ணி இப்போதும் வியந்து கொண்டாள்.
மகளை விக்ரமின் அருகில் கிடத்திட, “ம்ம் பாப்பா தூங்கிட்டாளா?” மகளை ஆசையாய் பார்வையால் தழுவியபடி கேட்டான்.
“ஆமா விக்ரம். காலைல ஸ்கூலுக்குப் போகணும்ல. உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரட்டா?” என நகரப்போக, அவளைக் கண்ணாலேயே அழைத்தான் விக்ரம்.
அதில் “என்ன விக்ரம்” எனக் கேட்டபடி அவன் அருகில் செல்ல, “உக்காரு திலோ…” என மடியைக் காட்டினான் கண்ணாலேயே.
மற்ற நேரமாக இருந்திருந்தால், கைப்பிடித்து ஒரு இழுப்பில் அவனது அரவணைப்பிற்கு கொண்டு வந்திருப்பானே…
அவனது அழுத்த விரல்கள் மேனியைத் தொட்டதும் மலர் போல நெளிந்து விடுவாளே.
வேதனையுடன் எச்சிலை விழுங்கியவள், தானே அவன் மடியில் மீது மெல்ல அமர்ந்து அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
“என்ன வேணுமாம்?” கொஞ்சலாய் அவனிடம் வினவ,
“என்னன்னவோ வேணும்…” என சோம்பல் நகையுடன் அவள் நெற்றி முட்டினான்.
விக்ரமின் நெற்றியில் இதழ் பதித்த திலோத்தமா, அவனது இதழிலிலும் அழுத்த முத்தமிட்டு “முதல்ல சாப்பிடணும். லேட் ஆச்சு பாருங்க…” எனச் சிணுங்கலுடன் எழுந்திட, அவன் அதரங்கள் சின்னதாய் புன்னகைத்தது.
தன்னவளை இழுத்தணைத்து முத்தமிட ஆசை எழுந்தும் அது வெறும் நிராசையாய் போனதில் எழுந்த வேதனையும் ஏமாற்றமும் அவனைக் கொய்திட, அவளுக்குத் தெரியாமல் அதனை மறைத்துக் கொண்டான்.
அடுக்களைக்கு சென்ற திலோத்தமா அடுப்பு மேடையில் கையூன்றி சில நொடிகள் அழுது தீர்த்தாள்.
குடும்பத்தை பிரிந்து வாழ வேண்டிய நிர்பந்தத்தை விதி தந்திருந்த போதிலும், அவளுக்கும் விக்ரமிற்குமான அழகான காதல் தருணங்களை திகட்ட திகட்ட தந்திருந்ததே!
இப்போதோ, தன்னவனின் வலி நிறைந்த வதனத்தை தினம் தினம் காண வைக்கும் இந்த வாழ்க்கையை எண்ணியே பயம் எழுந்தது திலோத்தமாவிற்கு.
“நான் போயிடுறேன் விக்ரம். நான் உங்களை விட்டுப் போய்ட்டா எல்லாமே சரி ஆகிடும்…” என்று மீண்டுமொரு முறை மனதில் தீர்மானம் எடுத்து விட்டு, தட்டில் இட்லியை நிரப்பிக் கொண்டு சென்றாள், அவள் அழுத சுவடே முகத்தில் தெரியா வண்ணம், புன்னகையையும் பூசிக்கொண்டாள்.
விக்ரமின் அருகில் அமர்ந்தவள், அவன் எழுந்து அமர்வதற்கு உதவி செய்து விட்டு, இட்லியை ஊட்டத் தொடங்கினாள்.
“உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறேனா திலோ” விக்ரமின் கேள்வியில் வெகுண்டு எழுந்தவள், “எனக்கு இப்படி ஆகி, நான் இந்தக் கேள்வியைக் கேட்டுருந்தா என்ன செஞ்சுருப்பீங்க” என சீறிட,
“ஓகே ஓகே சரண்டர்” என்றான் உதட்டைப் பிதுக்கி.
“இப்டி பேசாதீங்க விக்ரம்… சீக்கிரம் எல்லாம் சரி ஆகிடும்!” எனும்போது கண்கள் கலங்கத் தயாரானது.
தனது கண்ணீர் அவனைப் பாதிக்குமென்று அதையும் விழுங்கி கொண்டவள், “நாளைக்கு பாப்பாவை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, நம்ம ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துடலாம்… கைக்கு ஃபிசியோ குடுக்க சொன்னாங்க டாக்டர்” என்றதும், தனது செயலிழந்த கைகளை ஒரு முறை பார்த்துக் கொண்டான் விக்ரம வேந்தன்.
சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த கோர விபத்து ஒன்றில், அவனது முதுகுத் தண்டில் ஏற்பட்ட பலத்த அடியின் காரணமாக இரு கைகளும் செயலிழந்திருந்தது.
சற்றே பெரியதொரு அறுவை சிகிச்சை செய்தால், மீண்டும் அவன் குணமடைய இயலும் என்ற நிலை இருப்பினும், அதற்கே பல லட்சங்கள் தேவைப்பட்டது.
மாத சம்பளத்தில், தங்களுக்கென ஒரு சிறிய கூட்டை உருவாக்கிக் கொண்டவர்களிடம் ஏது அத்தனை பணம்.
விக்ரமின் குடும்பம் நினைத்தால், அவனை நிச்சயம் மீட்க இயலும். ஆனால்???
அவனது நிலை பற்றி அவனது குடும்பத்திற்கு தெரியப்படுத்தி, அதற்கு ஈடாக அவனைப் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் கூட அக்னிலாவை அழைத்துக் கொண்டு கண் காணாத இடத்திற்கு செல்ல அவள் தயார் தான்!
விக்ரமின் மீதிருக்கும் அளவு கடந்த காதலை விட, அவன் ஆரோக்கியமாய் இவ்வுலகத்தில் நடமாடினாலே போதுமென்ற மனநிலை தான் இப்போது அவளுக்கு. இந்த முடிவை எடுக்கும் முன் பலமுறை இறந்து மீண்டிருப்பது அவள் மட்டுமே அறிந்த ஒன்று.
தமக்கையின் இந்த திட்டம் புரியாது, தந்தைக்கு நிகராய் தன்னிடம் பாசம் செலுத்திய விக்ரம வேந்தனின் உடல்நிலை சீர்பெறுவதற்காக, அக்ரம் குடும்பத்தினுள் எப்படி நுழைவது என்ற தீவிர சிந்தனையில் இருந்தாள் பவித்ராத்யா.
தனது தாயும் தந்தையும் அவமானப்பட்டு, துயரம் கொண்டு இறந்ததற்கு ஈடாய், தமக்கையை அவர்களை தூற்றியவர்களின் முன்னாலேயே நிமிர்ந்து வாழ வைத்து விட வேண்டும் என்ற வைராக்கியம் அவளுள் அதிகமாவே வீற்றிருந்தது.
மறுநாள், அக்னி வேந்தனின் அலைபேசி எண்ணையாவது பெற்று விட வேண்டுமென்ற எண்ணத்துடன் அங்கு சென்றாள்.
யோகா வகுப்பு முடிவடைந்ததும், பெரியவர்கள் கலைந்து செல்ல, மேலாளர் கனியிடமே விவரம் கேட்டு விடுலாமா என்ற சிந்தனை ஓடியது.
கனியின் அறை வரை சென்றவள், சற்று தள்ளி ஒரு அறை இருந்ததைக் கண்டு அங்கு சென்றாள்.
அக்னி வேந்தன், எம். டி. என்ற போர்ட் கதவில் வீற்றிருக்க, அந்த அறை வாயிலில் இருந்தே எட்டி எட்டிப் பார்த்தவளுக்கு பூட்டப்பட்ட கதவைத் தவிர ஒன்றும் தெரியவில்லை.
“எப்படி அடுத்தவங்க ரூமுக்குப் போறது?” என்ற பயத்துடன் திரும்பியவள், தன்னெதிரில் ஆறடி உயரத்தில் சிலையாக நின்றவனை எதிர்பாராது அவன் மீது இடிக்காமல் நகரும் பொருட்டு பின்னால் நகர முற்பட்டு கீழே விழுந்து விட்டாள்.
அவனோ எந்த எதிர்வினையும் காட்டாது, பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து ஸ்டைலாக நிற்க, “ஐயோ…” என இடுப்பைப் பிடித்துக் கொண்டபடி தட்டுத் தடுமாறி எழுந்தாள் பவித்ராத்யா.
எழுந்ததுமே “யாருங்க நீங்க?” என்று சண்டைக்கு வர,
“அது என் கேள்வி… நீ யாரு?” என்று அழுத்தக்குரலில் வினவினான் அக்னி வேந்தன்.
அவனது பார்வையும், தோரணையும் அவளுக்கு சற்றே பயத்தைக் கொடுக்க, அக்ரம் குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருப்பானோ என்ற எண்ணத்தில்,
“நான் யோகா டீச்சர் சார்…” என்ற பாவையின் படபடத்த விழிகளதில் பல்லாயிரம் பரிதவிப்பு!
“வயசானவங்களுக்கு கையை காலை ஆட்ட சொல்லிக் கொடுத்துப் போட்டுத் தள்ளுற வேலையா?” ஆண்மகனின் குறுகுறு பார்வையில் கொந்தளித்துப் போனாள் அவள்.
“ஹலோ யோகா உடம்புக்கு நல்லது…”
“ஓ ரியலி!” அவனது வளைந்த புருவங்கள் ஆச்சரியத்தில் மேலும் வளைந்து கேலி செய்தது.
“உன் பேர் யோகாவா? உடம்புக்கு நல்லதுன்னா ட்ரை பண்ணிட வேண்டியது தான்” அவனது கூற்றில் திக்கென ஆனது அவளுக்கு.
“என்ன என்ன ட்ரை பண்ணப் போறீங்க?” நடுங்கிய குரலில் கேட்டாள்.
“எல்லாமே ட்ரை பண்ணிட வேண்டியது தான்!” மீண்டும் ஒரு கேலி வளைவு அவன் இதழ்களில்.
“என்னது?” விழி அதிர கேட்டவளிடம்,
“ஐ மீன் யோகாவை சொன்னேன்!” என்றான் அமர்த்தலாய்.
அவனது பேச்சே ஒரு மார்க்கமாக இருந்ததில், அவனை முறைத்து வைத்தவள், வேகமாய் அவனைத் தாண்டி சென்று விட்டாள்.
அவள் சென்ற திசையை மர்மப் புன்னகையுடன் ஏறிட்ட அக்னி வேந்தனின் அருகில் நிழலாட, அங்கு அவனது தோழன் சஞ்சீவ் நின்றிருந்தான்.
“நீ எப்படா வந்த?”
“நான் வந்து 28 வருஷம் ஆச்சுடா…” என்றவனின் மொக்கை காமெடியைக் கண்டு முறைத்தவனிடம், “அது இருக்கட்டும்… இங்க பாட்டிஸ் தானடா ஃபேமஸ். ஹூ இஸ் தட் பியூட்டி?” என்றான் பவித்ராத்யாவின் அடர்ந்த பின்னலில் ஈர்க்கப்பட்டு.
“யோகா டீச்சர்!”
“ஓஹோ! மச்சி… இங்க என்னையும் ஒரு வயசானவனா நினைச்சு சேர்த்துக்கோயேன்” என வெட்கப்பட்டுக்கொண்டான் சஞ்சீவ்.
“எதுக்கு அவளை சைட் அடிக்கவா?”
“எஸ் மச்சி…”
“தேவை இல்ல. அதை அவள் பாய் ப்ரெண்ட் பார்த்துப்பான்! நீ மூடிட்டு வா” என்று தனது அறைக்கு இழுத்துச் சென்றான்.
“அவளுக்கு பாய் ப்ரெண்ட் இருக்கடாவ்” என்றவனின் கேள்விக்கு அவனிடம் பதில் வரவில்லை.
‘மூஞ்சியும் முகரையும் பாரு…’ அக்னி வேந்தனை மனதினுள் திட்டியபடி வந்தவளை மரத்தினடியில் அமர்ந்திருந்த தேவாரமும் ஜெயசுதாவும் அழைத்தனர்.
“என்னமா முகம் வாட்டமா இருக்கு?” தேவாரம் கேட்டதில்,
“அவர் யாரு அங்கிள்” என்று தூரத்தில் கை காட்டி கேட்டாள்.
அவர்களின் பார்வையில் சஞ்சீவ் மட்டுமே தெரிய, ஜெயசுதாவோ “அது அகியோட பிரெண்டு” என்று முகம் சுளித்தார்.
“யாரு அகி?” எனக் கேட்க வந்தாலும் அதைக் கேளாமல், “அக்ரம் குடும்பத்துல சேர்ந்தவரா?” என்றாள் சந்தேகமாக.
“இல்லமா… இங்க இந்தப் பையன் தான் சூப்பர்வைசரா இருக்கான். அகி அளவுக்கு இல்ல. கொஞ்சம் தலைக்கணம் பிடிச்சவன்…” தேவாரம் கூறியதும், “பார்த்தாலே தெரியுது…” என முணுமுணுத்தாள்.
இவர்களிடமே அக்னி வேந்தனின் எண்ணைக் கேட்டு விடலாமா? என்ற யோசனை வந்தாலும், அது சரிவராது என்று அதனை மறைத்துக் கொண்டாள்.
———
“நிவேதா…” சவுந்திரவல்லியின் குரலில் வேக வேகமாய் அவர் அறைக்கு சென்றார் நிவேதா.
“சொல்லுங்கத்த”
“நாளைக்கு மனோஜும், இனியாவும் வர்றாங்க. அக்னியோட கல்யாண விஷயத்தைப் பத்தி பேசுறதுக்காக வர சொல்லிருக்கேன். அவனுக்கு கல்யாணம் முடியிற வரை இங்க தான் இருப்பாங்க. ரூமெல்லாம் ரெடி பண்ணி வை!” என்று உத்தரவிட, நிவேதா திகைத்தார்.
“அக்னிக்கு கல்யாணமா?”
“ஆமா அவனுக்கும் 28 வயசு ஆகுதே. மத்த பிள்ளைங்க மாதிரியா கண்டவளை இழுத்துட்டு ஓடுறதுக்கு. என் பேரன் தராதரம் தெரியாம நடந்துக்க மாட்டான்…” எனக் குட்டு வைக்க, நிவேதாவின் மனம் பற்றி எரிந்தது.
ஒரு பிள்ளைக்கு பூ’வையும் ஒரு பிள்ளைக்கு கல்லையும் தராசுத் தட்டில் வைத்ததில்லை அவர்.
ஆனால் இவர்களுக்கு எப்போதும் பெரியவன் மட்டும் இளக்காரம் தான்!
“அதில்ல அத்தை அக்னிகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு…” நிவேதா ஆரம்பிக்க,
“என் மகன் வெளிநாட்டுக்குப் போறதுக்கு முன்னாடி பொண்ணு பார்த்து தேதி குறிச்சுட சொல்லிட்டு தான் போனான். ஒரு மாசத்துல அவன் வர்றதுக்கும் கல்யாணம் நடக்குறதுக்கும் சரியா இருக்கும்… நான் சொல்றதை மட்டும் செய்!” என்றதில், நிவேதாவிற்கு செய்வதறியாத நிலை.
சிவக்குமார் வெளிநாட்டுக்குச் சென்றிருப்பதை தான் வாட்ச்மேன், ‘ஐயா’ என்று குறிப்பிட்டார்.
அந்த ஐயா, அக்னி வேந்தன் என்று தவறாக எடுத்துக்கொண்ட பவித்ராத்யா, அவனது வரவிற்காக காத்திருக்க தொடங்கினாள்.
யோகா வகுப்புகள் நன்முறையில் நடந்து கொண்டிருக்க, அன்றும் அக்னியின் அறையை நோட்டமிட்டாள்.
அவனது அறை பூட்டப்பட்டிருப்பது கண்டு, கனியின் அறைக்குச் சென்றாள்.
“சார்…” அவள் அழைத்ததில் அங்கு கனியின்றி சஞ்சீவி இருந்தான்.
“எஸ் சொல்லுங்க!”
“கனி சார் இல்லைங்களா சார்…”
“ஏன் கனி சார்ட்ட மட்டும் தான் ரகசியம் சொல்லுவீங்களா?” கனி விளையாட்டாய் கேட்க, “ரகசியம் எல்லாம் இல்ல சார்… அது வந்து…” என இழுக்க,
“அது இருக்கட்டும்… உங்களுக்கு பாய் ப்ரெண்ட் இருக்கா” என்ற அதிமுக்கிய கேள்வியைக் கேட்டான்.
“பாய் ப்ரெண்டா?” அவனது கேள்வியில் திருதிருவென விழித்தபடி நின்றிருந்தாள் அவள்.
“சஞ்சீவ் காட்டேஜ் நம்பர் 51 – ல எலக்ட்ரிக்கல் இஸ்யூ. ஃபிக்ஸ் இட் நொவ்!” என்ற அக்னி வேந்தனின் குரல் பவித்ராத்யாவின் பின்னால் ஒலித்தது.
‘சிவபூஜைல கரடி…’ முணுமுணுத்தபடி எழுந்த சஞ்சீவ், “இவங்க இஸ்யூ கேட்டு சால்வ் பண்ணிட்டுப் போறேனே” என இளித்து வைத்தவன், அக்னியின் காட்டப்பார்வையில் அங்கிருந்து நகன்றான்.
“எஸ் மிஸ் யோகா?” நக்கலாய் அக்னி கேட்டதில், ‘ஐயோ இவனா…’ என்று நொந்து கொண்டு திரும்பியவள், “என் பேர் யோகா இல்ல. பவித்ராத்யா” என்றாள் உதடு குவித்து.
ஓர் கணம் ஆடவனின் பார்வை அவள் மீது ஆழப் பதிந்து மீள, “ஹ்ம்ம்! ஓகே… வாட் டூ யூ வாண்ட் ஆத்யா?” எனக் கேட்டான்.
அவனது பெயர் சுருக்கத்தில் திகைத்து கண்ணை வேகமாய் சிமிட்டியவள், “நான்… நான் அக்னி சார பார்க்கணும்” என்றாள் மெல்லமாக.
“எதுக்கு?”
“அது எதுக்கு உங்களுக்கு… நான் அவர்கிட்ட தான் சொல்லணும்” என்றதில் அவனது நெற்றியில் வியப்பின் வரிகள். வேண்டுமென்றே தன்னை ஆழம் பார்க்கிறாளோ? என்ற சந்தேகத்துடன் அவளை நோட்டமிட,
அவளே “அவர் எப்போ ஃபாரின்ல இருந்து வருவாரு” எனக் கேட்டு வைத்தாள்.
“இப்போதைக்கு வர மாட்டாரே!” அவளைச் சுற்றலில் விடத் தோன்றியது அவனுக்கு. தான் யாரென்றே தெரியாமல் தன்னைத் தேடும் காரணமென்ன என்ற யோசனையும் ஓடியது.
அதில் அவளது முகம் வாடிவிட, “அவரது போன் நம்பர் ஏதாவது?” என இழுத்ததில், “எதுக்குன்னு சொல்லு. நம்பர் தரேன்” என்றான் விடாப்பிடியாக.
“அதெல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியாது. இது எங்க பெர்சனல்” என்றதில் ‘எனக்கும் இவளுக்கும் எப்போ பெர்சனல் இருந்துச்சு’ என்ற குழப்பம் அவனுக்கு.
“பெர்சனல்னா?” கேட்டுக்கொண்டே அவளை நோக்கி அடி எடுத்து வைக்க, அவளுக்கு நெஞ்சில் பயம் குடியேறியது.
“பெ… பெர்சனல்னா பெர்சனல் தான்!”
அந்நேரம் கனி உள்ளே வந்ததும், அக்னியும் மேலும் பேச்சைத் தொடராமல் நின்று விட, பவித்ராத்யா நடுங்கிய கால்களுடன் வெளியில் சென்று விட்டாள்.
அவள் சென்ற திசையை சுவாரஸ்யமாய் ஏறிட்ட அக்னி வேந்தன், “கனி இந்தப் பொண்ணைப் பத்தின முழு தகவல் எனக்கு வேணும்!” என்று பணித்து விட்டுச் செல்ல, கனி ஒன்றும் புரியாமல் தலையாட்டிக் கொண்டான்.
போதை தெளியும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
36
+1
2
+1
1

