
“என்னமா நிவேதா… இதுக்குலாம் கவலைப்பட்டா எப்படி?” அலைபேசியில் நிவேதாவிடம் உரையாடிக் கொண்டிருந்தார் தேவாரம்.
ஜெயசுதா அவர் அருகில் அமர்ந்து ஒட்டுக் கேட்பது போல, “என்னடா?” என வினவ, “அட இரு” என்று சைகை காட்டி விட்டு பேச்சைத் தொடர்ந்தார்.
“இல்லப்பா… அத்தை பேசுறதை பார்த்தா அவங்களை மாதிரியே ஒரு பொண்ணைக் கூட்டிட்டு வந்துடுவாங்களோனு பயமா இருக்கு. பெரியவன் எப்படி இருக்கான்னு கூட தெரியல. சின்னவனுக்காவது எல்லாமே நல்லபடியா செஞ்சுப் பார்க்கணும்னு மனசு அடிச்சுக்குது” நிவேதாவின் குரலில் அத்தனை வேதனை.
ஜெயசுதா அலைபேசியைப் பிடுங்கி, லவுட் ஸ்பீக்கரில் போட்டு விட்டு, “உன் பையன் மேல உனக்கு இல்லாத உரிமையா நிவேதா. நானும் தான் பொண்ணு பார்ப்பேன்னு உன் மாமியார்ட்ட ஸ்ட்ராங்கா சொல்ல வேண்டியது தான? இன்னும் நீ இப்படி பயந்து நடுங்கிட்டு இருந்தா எப்படி?” என்றார் கண்டிப்பாக.
“என்னமா செய்ய சொல்றீங்க… என் அப்பாவும் பெரிய பிசினஸ்மேன் தான். என்னைக் கல்யாணம் பண்ணப்ப, என் மாமியார் அக்கறையா இருந்த மாதிரி தான் இருந்தாங்க. பெரியவன் பிறக்கும்போதே என் அப்பாவுக்கு பிசினஸ் எல்லாம் போச்சு. அவனுக்கு செய்ய வேண்டிய முறையை கூட கவுரமா செய்யலைன்னு ஆரம்பிச்ச பிரச்சினை, அதுக்கு அப்பறம் என்னை என் பசங்களுக்கு அம்மாவா கூட நினைக்கிறது இல்ல… பணம் தான் மரியாதையைக் குடுக்கும்னு அப்போ அப்போ குத்திடுவாங்க…” எனக் குமுறினார்.
“சின்னவனுக்கு கல்யாணம் ஆனதும், நானும் உங்க கூடவே வந்து இருந்துடலாம்னு தான் இருக்கேன்” சொல்லும்போதே நிவேதாவிற்கு அழுகை வந்தது.
ஜெயசுதாவின் அருகில் அமர்ந்திருந்த குருமணி தான் அதட்டினார்.
“என்ன பேசுற நீ… நாங்க எல்லாம் பேரன் பேத்தினு பார்த்துட்டு, அவங்க படிப்பு கல்யாணம்னு வெளிநாட்டுல செட்டில் ஆனதுனால, பேச்சுத் துணைக்கு ஆள் வேணுமேன்னு தான் இங்க வந்து இருக்கோம். உன் அப்பா பிசினஸ்ல லாஸ் ஆகி இருந்தா என்ன… உன் பையன் உனக்குன்னு எல்லாம் செய்றான் தான… அவன் முதல்ல இங்க வர ஒத்துப்பானா? இப்படி எல்லாம் யோசிக்காதம்மா”
“விக்ரமும் அக்னியும் என் மேல ரொம்ப பாசம் வச்சுருக்காங்க குருப்பா. அதுனால தான அவங்களுக்காகவே இந்த வீட்ல இருந்துட்டேன். அகி என்னை அப்டி விட மாட்டான்… இருந்தாலும் மனசு கேட்கல… இதுல என் கொழுந்தனும் அவர் குடும்பமும் வேற வர்றாங்க… என்ன செய்யக் காத்துருக்கங்களோ. அஞ்சு வருஷம் முன்னாடி அவங்க வந்தப்ப தான், பெரியவன் லவ் பண்ற விஷயம் தெரிஞ்சு அதை பெருசாக்கி, சண்டை இழுத்து விட்டாங்க… என்னவோ என்கிட்ட நல்லா பேசிட்டு இருந்த அக்னியும் கொஞ்ச கொஞ்சமா என்கிட்ட பேசுறதை குறைச்சுட்டான். நான் என்ன தப்பு பண்ணேன்னு தெரியல. ஆனா என்ன தான் பேசலைன்னாலும், அவன் வீட்ல இருக்கும்போது அத்தையை நல்லா மடக்கிடுவான்…” என்றார் வருத்தமாக.
தேவாரம், “நீ கவலைப்படாத நிவேதாமா. உனக்கும் அக்னிக்கும் இருக்குற நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும். விக்ரமும் நல்லாருப்பான்” என்று ஆசீர்வதித்து விட்டு அழைப்பைத் துண்டித்தார்.
அந்நேரம் சரியாக அக்னி வேந்தன் கிளம்பிவர, சவுந்திரவல்லி பேரனை அழைத்தார்.
“சொல்லுங்க பாட்டி…”
“இந்த போட்டோ எல்லாம் பாருப்பா… உனக்கு யாரைப் பிடிச்சுருக்குனு சொல்லு” என சில புகைப்படங்களைக் காட்டியதும், அவர் அருகில் சாவகாசமாக அமர்ந்தவன் வெகு நிதானமாக புகைப்படங்களையும் விவரங்களையும் ஆராயத் தொடங்கினான்.
மாமியாரின் குரல் கேட்டு அங்கு நிவேதாவும் வந்து விட்டார்.
அவரைக் கண்டதும் சவுந்தரவல்லி, “நீ ஏன் மசமசன்னு இங்க நின்னுட்டு இருக்க. போய் சாப்பாட எடுத்து வை…” என்று எரிந்து விழுந்ததில் நிவேதாவின் முகம் வாடி விட்டது.
அதனைக் கண்டுகொள்ளாத அக்னி வேந்தன், “எனக்கு இதுல யாரையும் பிடிக்கல பாட்டி… இப்ப தான் நிறைய மேட்ரிமோனி எல்லாம் இருக்கே. அதுலயும் பாருங்க…” என்று எழுந்ததில் சவுந்திரவல்லிக்கு சிறு நிம்மதி.
திருமணம் வேண்டாமென்று மறுத்து விடுவானோ எனப் பயந்து போனார். அவனது ஆர்வத்தில் அவருக்கும் அறிவு மழுங்கிப் போனது.
இத்தனை வருடத்தில் விக்ரமின் நாடித் துடிப்பை அறிந்து வைத்திருக்கும் அவரால், சிறிய பேரனின் சிறு செயலையும் கூட கணிக்க இயலவில்லை பாவம்!
அடுக்களையில் இட்லியை எடுத்து ஹாட் பாக்சில் வைத்துக் கொண்டிருந்த நிவேதாவின் தோளில் நாடியை வைத்து அழுத்தினான் அக்னி வேந்தன். பல வருடம் கழித்து சிறிய மகனின் தீண்டலை உணர்ந்த நிவேதாவின் நெஞ்சில் பேரலைகள் எழுந்தது.
“அக்னி?” கலங்கிய முகத்தை வேகமாய் மாற்றிக்கொண்டார்.
“உங்க பிலவ்ட் ரிலேட்டிவ்ஸ் எப்போ வர்றாங்க?” கேலியாய் கேட்டதில் அவன் புறம் திரும்பியவர், “இன்னைக்கு மதியம்… உனக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டார் வியப்பாக.
“என் கல்யாணத்துக்கு வர்றாங்க. அப்போ எனக்குத் தெரியாதா?” தாயை கீழ்க்கண்ணால் முறைத்தான்.
“உனக்கு கல்யாணத்துல சம்மதம் தான அக்னி. உன் மனசுல யாரும் இருந்தா சொல்லு.”
“சொன்னா? சொன்னதும் பாட்டிட்ட போய் சொல்லி, தேதி குறிச்சுடுவீங்களோ?”
நிவேதா முகம் சுண்டிப் போனார்.
“மாட்டீங்க தான? அப்பறம் எதுக்கு இந்தக் கேள்வி?” மகனின் கேள்வியில் அவரிடம் ஏனென்றே தெரியாத குற்ற உணர்ச்சி.
“நான் என்ன தான் செய்ய முடியும் அக்னி. உன் அப்பாவும் பாட்டியும் என் பேச்சைக் கேட்டுடுவாங்களா? பெரியவன் என்ன தப்பு செஞ்சுருந்தாலும் பரவாயில்ல வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு ஒரு நாள் சொன்னதுக்கே, என் பெட்டி படுக்கை எல்லாம் எடுத்து வெளில போட்டாரு உன் அப்பா…”
“ஹ்ம்ம்! அப்படியே நீங்க வீட்டை விட்டுப் போயிருந்தா நான் சந்தோஷப்பட்டுருப்பேன். என்னைக்கு உங்களுக்கு ரோஷமும் தைரியமும் வருதோ, அப்போ என்கிட்ட இதே கேள்வியைக் கேளுங்க. நான் பதில் சொல்றேன்…” என்று விட்டுக் கிளம்ப நிவேதா சிலையாக நின்றார்.
————
“இன்னைக்கு யோகா க்ளாஸ் லீவ் விட்டுருவோமா?” ஜெயசுதா மெல்ல ஆரம்பிக்க, தேவாரம் “எனக்குத் தெரியும். உன்னால ஒரு கிளாஸை ஒழுங்கா அட்டென்ட் பண்ண முடியாதுனு” என்று முறைத்தார்.
“அட, அதில்ல ரம்மு… இன்னைக்கு யோகா கிளாஸை கட் பண்ணிட்டு, பவிட்ட மேரேஜ் ப்ரொபசல் பத்தி பேசலாம்!” என்றதில், “எதுக்கு அந்தப் பொண்ணு பாதில ஓடவா. முதல்ல அக்னியையும் பவியையும் பார்த்துக்க வைக்கலாம்” எனத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.
குருமணியோ, “இந்த மாதிரி செட் பண்ற வேலை எல்லாம் விஜி நல்லா செய்வா” என்றதில் விஜயா, “ஆமா ஆமா நான் ப்ரோக்கர் வேலை தான் பாத்துட்டு இருந்தேன் பாரு…” என நொடித்துக் கொள்ள, நால்வருக்குள்ளும் மீண்டும் பேச்சு வார்த்தைகள் கேலியாய் உருமாறியது.
—–
“பவி எங்க போயிருக்கா திலோ?” விக்ரமின் கேள்வியில் திருதிருவென விழித்த திலோத்தமா, “அது வந்து விக்ரம், செங்கல்பட்டுல ஏதோ இன்டெர்வியூனு போனா, வேலை கிடைச்சுடுச்சுனு உங்ககிட்ட சொல்ல சொன்னா…” என மென்று விழுங்கினாள்.
“எதுக்கு திலோ அவளை அனுப்புன. ஏற்கனவே படிச்சு முடிச்சதும் வேலை கிடைக்காம பீல் பண்ணிட்டு இருந்தா. இப்போ நம்மளை விட அவ தான் வருத்தப்படுவாள்ல” என்று வருந்தினான்.
“ஆமா தான் விக்ரம். அதான் அவளை கண்ட்ரோல் பண்ணி எதுக்கு கஷ்டப்படுத்தனும்னு அவள் இஷ்டத்துக்கு அனுப்புனேன். இங்க இருந்து ரெண்டு மணி நேரம் தான். ஏதோ ஃப்ரெண்டு வீட்ல தங்கி இருக்கறதா சொன்னா… எனப் பொய்யுரைத்தாள்.
“ம்ம் சரி… வேலை செட் ஆகலைன்னா வர சொல்லு திலோ பாத்துக்கலாம்” என்றதும், “சரிங்க விக்ரம்” என்று தலையாட்டிக் கொண்டாள்.
திலோத்தமாவும் விக்ரமும் ஒரே ஐடி கம்பெனியில் தான் பணிபுரிந்தனர். விபத்திற்குப் பிறகு விக்ரமின் வேலை பறிபோக, சில மாதங்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் வாங்கி திலோத்தமா தான் அனைத்து செலவுகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
பகல் முழுக்க தன்னையும் குழந்தையையும் பார்த்துக் கொண்டு, இரவு முழுதும் மடிக்கணினியில் வேலை செய்பவளைப் பார்க்க பார்க்க வலி கொன்று எடுத்தது விக்ரமிற்கு.
அவனுக்குள் மருகிக்கொண்டிருக்கும்போதே, திலோத்தமாவிற்கு அழைத்தாள் பவித்ராத்யா.
தனது அத்தானிடம் பொய் சொல்லி சமாளிக்கும் அளவு அவளுக்கு தைரியம் இல்லை. அதனாலேயே அவனிடம் சொல்லாமல் கோவைக்கு கிளம்பி இருந்தாள்.
இப்போதோ, “அக்கா அத்தான் வட்லாப்பம் செய்வாங்கள்ல அது எப்படினு கேட்டு சொல்லேன்” என்றதில் இருவருமே விழித்தனர்.
“என்ன பவி, எதுவும் ஹோட்டல்ல வேலைக்கு சேர்ந்துட்டியா?” விக்ரம் கேட்டதில், “இல்ல அத்தான்… அது வந்து என் ஃபிரெண்டு கேட்டா அதான்…” என்று சமாளிக்க, “அங்க எல்லாம் ஓகே தான” என மீண்டும் உறுதி படுத்திக்கொண்டான்.
தன்னிடம் சொல்லாமல் சென்றவளிடம் கோபம் கூட காட்டவில்லை அவன்.
பின் வட்லாப்பத்திற்கு தேவையான ரெசிபியைக் கூறி முடிக்கும் நேரம், அக்னி வேந்தனின் நினைவு கொய்தது.
“விக்ரா… டைம் ஆச்சுண்ணா” அவசரமாக கல்லூரி செமஸ்டர் தேர்விற்கு கிளம்பிக் கொண்டிருந்தான் அக்னி வேந்தன்.
“இருடா. ஒரு டூ மினிட்ஸ்” என்ற விக்ரம் அடுக்களையை இரண்டாக்கிக் கொண்டிருந்தான்.
அன்று அக்னி வேந்தனுக்குப் பிறந்தநாளாக இருக்க, அவனுக்குப் பிடித்த வட்லாப்பத்தை தானே செய்து கொடுப்பது விக்ரமின் வழக்கம்.
முந்தைய நாள் கேக் வெட்டி விளையாடி உறங்கவே தாமதம் ஆகி விட்டதில், எழுந்ததும் தாமதம் ஆகி விட்டது.
சுட சுட வட்லாப்பத்தை எடுத்து தம்பிக்கு ஊட்டி விட்ட விக்ரம், “ஹேப்பி பிர்த்டேடா” என்றதில், “தேங்க் யூ தேங்க் யூ என்றவன்” அந்தத் தட்டை வாங்கி ரசித்து ருசித்து உண்ண ஆரம்பித்தான்.
“லவ் இட்ண்ணா!” என விக்ரமின் கன்னம் கிள்ளியவன், அவசரமாகக் கல்லூரிக்குச் சென்றான்.
“ம்மா நானும் கிளம்பிட்டேன்” விக்ரமின் குரல் கேட்டதும், “இருப்பா வரேன்… முதல் முதல்ல ஒரு நல்ல காரியத்துக்குப் போகப் போற” என்று அவன் நெற்றியில் திருநீர் பூசி விட்டார் நிவேதா.
“யார் காசை எடுத்து யார் தானம் பண்றது?” சவுந்திரவல்லியின் குத்தலில் இருவரின் முகமும் மாறியது.
“தானம் எல்லாம் பண்ணல பாட்டி. பணம் இருந்தும், வீட்ல தனியா இருக்குற வயசானவங்களுக்கு ஒரு இடம் வேணும். கோயம்பத்தூர்ல அந்த மாதிரி ஹோம்ஸ் நிறைய இருக்கு. ஆனாலும் மிடில் க்ளாஸ் பெரியவங்களுக்கும் ரீசனபிள் ரெண்ட்ல, காட்டேஜ் குடுத்து அவங்களுக்குத் தேவையான எல்லாமே கொடுக்குறது தான் என் நோக்கம். இதுவும் ஒரு தொழில் தான்.”
அவன் சொன்னது போன்றே இதை ஒரு தொழிலாகப் பார்த்தாலும், பணம் இருப்பவர்களிடம் ஒரு விலையும் பணப்பாற்றாக்குறையில் வாடும் பெரியவர்களுக்கு ஒரு விலையுமாக வாங்க வேண்டுமென்பதே அவனது குறிக்கோள். இதனை நன்கு விரிவுப்படுத்திய பின்பு தனது சம்பாத்தியத்தில் ஏழை பெரியவர்களுக்கும் ஒரு இடம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென்று முடிவெடுத்திருந்தான்.
இப்போது அதனை சொன்னால், சவுந்திரவல்லி தன்னை தலைமுழுகினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
கல்லூரி முடித்த கையோடு, தொழில் தொடங்குவதற்காக சிவக்குமார் அவனிடம் சில லட்சங்களைக் கொடுத்திருந்தார். அதைத் தான் அவன் அக்ரம் லக்சுவரி ஹோமாக மாற்ற முடிவெடுத்திருந்தான்.
அக்னி மற்றும் விக்ரமின் பெயரின் கலப்படமே அக்ரம். தனக்கு வரும் எந்த லாபத்திலும் தம்பிக்கும் பங்கு வரும் படி செய்திருந்தான். ஒருவேளை நட்டமானால், அதற்கான முழு பொறுப்பை அவன் ஏற்றிருந்தான்.
இந்த முடிவைக் கேட்டதும், இனி தொழிலுக்காக ஒற்றைப் பைசா தர மாட்டேனென சிவக்குமார் கூறி இருக்க, இருக்கும் பணத்தை வைத்தே புத்திசாலித்தனமாக அக்ரம் சொகுசு இல்லத்தை அம்சமாய் நிறுவி இருந்தான்.
சவுந்திரவல்லிக்குத் தான் விக்ரமின் நடவடிக்கை முற்றிலும் பிடிக்கவில்லை.
மிகப்பெரிய லெதர் தொழிற்சாலையின் முதலாளி சிவக்குமார். அவரது மகனும் அதே போல கவுரமான தொழிலை ஆரம்பிக்காது, சேவை செய்யப் போனதில் அவருக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.
அது மட்டுமின்றி, இந்த முடிவை அவன் எடுத்ததற்கு காரணம் என்னவென்று புரிந்து கொள்ள இயலாத அளவிற்கு சவுந்திரவல்லி முட்டாளல்லவே!
நிவேதாவின் தாய், தந்தையர் தொழில் இழந்து தற்போது சிரமத்தில் உள்ளது தெரிந்து, அவர்களுக்காக ஒரு இடத்தை உருவாக்கும் நோக்கிலேயே இதனை செய்வது புரிந்தது.
அதுவே அவருக்கு எரிச்சலையும் ஏற்படுத்தியது. நிவேதா எத்தனை கெஞ்சியும் இந்தக் குடும்பத்தினுள் அவரது பெற்றோரை நுழைய விடவில்லை சிவக்குமார்.
ஆனால் அவரது லட்சங்களை வைத்தே, தாய் வழி தாத்தா பாட்டியை வசதியாய் வைத்துக்கொள்ள விக்ரம் மேற்கொண்ட முயற்சியின் பலனாய் அவனுக்கு கிடைத்தது குடும்பத்தாரின் பகை மட்டுமே!
இதெற்கெல்லாம் தூண்டுதல் அக்னி வேந்தன் என்பதை மட்டும் தெரிந்து கொள்ளவில்லை அவர்கள்!
எண்ணங்கள் எங்கங்கோ பறந்து கொண்டிருக்க, “விக்ரம் ஆட்டோ வந்துடுச்சு வாங்க ஹாஸ்பிடல் போகலாம்” என்று அவனைக் கைத்தாங்கலாய் எழ வைத்தாள் திலோத்தமா.
——–
மரத்தடியில் தீவிர வாக்குவாதத்தில் இருந்த நால்வரின் முன்னும் வந்து நின்றாள் பவித்ராத்யா.
“என்ன இன்னும் நீங்க யோகா பண்ண ரெடி ஆகலையா?” கேட்டபடி அவளும் தேவாரத்திற்கு அருகில் அமர்ந்து கொள்ள,
“இன்னைக்கு லீவ் விட்டுடலாம் பவி” என்றார் ஜெயசுதா.
“என்னாச்சு ஆண்ட்டி. எங்கயும் வலிக்குதா?” அவள் பதட்டமாகக் கேட்க,
விஜயா “அதெல்லாம் இல்ல பவிமா. உண்மையை சொல்லப்போனா, ஸ்ட்ரெஸ் எல்லாம் பறந்து போன மாதிரி இருக்கு…” என்ற பிறகே அவளுக்கு நிம்மதி பிறந்தது.
“சரி சரி ஆனா தினமும் பண்ணனும் ஆண்ட்டி. அப்ப தான் எஃபக்டிவா இருக்கும். வேணும்னா நம்ம கொஞ்ச நேரம் கழிச்சு கூட க்ளாஸ் ஸ்டார்ட் பண்ணலாம்…” என்றாள்.
“நீ இங்க மட்டும் தான் வேலை பாக்குறியா டார்லிங்” குருமணி கேட்டார்.
“ஆமா அங்கிள். எங்கயும் வேலை கிடைக்கல. இப்போதைக்கு இதான் எனக்கு வேலை. அப்பா அம்மா இல்ல. சென்னைல அக்கா வீட்ல தான் இருந்தேன். என் அத்தான் ரொம்ப நல்லவரு. என்னை படிக்க வச்சதும் அவர் தான். இப்ப வேலை தேடி இங்க வந்தேன். ப்ரெண்டு இங்க வீடு எடுத்து தங்கி இருக்கா, நல்ல வேலை கிடைக்கிற வரை என்கூடவே இருன்னு சொன்னதுனால, அவள் வீட்ல இருக்கேன்.
சும்மா இருக்குற நேரத்துல டி. என். பி. எஸ். சி- க்கு படிச்சு டைம் பாஸ் பண்ணிட்டு இருக்கேன். ஆல்ரெடி ரெண்டு டைம் அட்டென்ட் பண்ணி மார்க் வரல. இன்னும் ஒரு தடவை அட்டென்ட் பண்ணி பார்த்துட்டு அதையும் ஓரங்கட்டிட வேண்டியது தான்…” என்றாள் சிரிப்பாக.
அவளைக் கவலையாகப் பார்த்த நால்வரில் விஜயா, “அட நம்ம சுதாவே டீச்சர் தான் பவி. உனக்கு எதுவும் சந்தேகம் இருந்தா அவகிட்ட கேளு. இங்க யோகா க்ளாஸ் முடிச்சுட்டு கோச்சிங் எதுவும் போறியா?” என்றதும் அவள் முகம் மெல்ல வாடியது.
கல்லூரி செலவையே விக்ரம் மீது திணித்ததில் அவளுக்கு ஏகப்பட்ட குற்ற உணர்வு. கிடைக்கும் நேரத்தில் கிடைத்த புத்தகத்தை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக படித்து தான் அரசு பரிட்சைக்கே எழுதினாள்.
தான் தீவிரமாக படிப்பது தெரிந்தால், அதற்கும் கோச்சிங் வகுப்புகள் சேர்த்து விட்டு விக்ரமும் திலோத்தமாவும் செலவை இழுத்துக் கொள்வார்கள் என்றெண்ணி பொழுது போகாம படிக்கிறேன் என்று விடுவாள்.
“கோச்சிங் எல்லாம் போகல ஆண்ட்டி… சுதா ஆண்ட்டி நீங்க டீச்சரா இருந்தீங்களா?” என விழி விரித்தாள்.
“ஆமா பவி… பன்னிரண்டாவது வரை எடுப்பேன். பார்ட் டைமா டி. என். பி. எஸ். சி கோச்சிங் க்ளாஸும் எடுத்தேன்.”
“வாவ் சூப்பர் ஆண்ட்டி! ரொம்ப பிஸியாவே இருந்தீங்களோ”
“ஆமாமா… ஒர்க்கஹாலிக். அதுனால தான் இப்ப சும்மா இருக்க முடியாம எதையாவது க்ளாஸ் போறேன்னு இவர்களையும் டார்ச்சர் பண்றது” என்றார் சிரிப்பாக.
பவித்ராத்யாவும் சிரித்து விட்டு, “தேவாரம் அங்கிள் நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” என வினவினாள்.
“நான் பேங்க் மேனேஜர். ரிட்டையர் ஆனதும் சும்மா இருக்க முடியாம, பெரிய பசங்களுக்கு மேத்ஸ் சொல்லிக் குடுப்பேன். அப்பறம், என் வைஃப் இறந்து போகவும் வீட்ல இருக்குறது ரொம்ப சிரமமா இருந்துச்சு. ஆனாலும் அவ கூட வாழ்ந்த வீட்டை விட்டு வர்றது மனசுக்கு பாரமாவும் இருந்துச்சு. என் பையன் தான் வற்புறுத்தி என்னை இங்க அனுப்புனான். இங்க பணம் எல்லாம் அவன் கட்டிடுவான். அப்போ அப்போ குடும்பத்தோட வந்து பார்த்துட்டுப் போவாங்க… நான் இங்க நல்லாருக்கேன்னு அவனுக்கும் ஒரு நிம்மதி…” என்றார்.
“உங்க பையன் இங்க அனுப்புனதுல உங்களுக்கு கோபம் இல்லையா அங்கிள்?”
“அவன் என்ன என்னை நடுரோட்டுலயா நிறுத்தினான் கோபப்படுறதுக்கு. வீட்ல என் மனைவியோட நினைவுகளோட போராடுறதை பார்த்து அவனுக்கும் தான் வருத்தம்.
மருமகளும் நல்ல பொண்ணு தான். ரெண்டு பேருக்குமே வெளிநாட்டுல வேலை கிடைச்சுது. நம்ம ஊரை விட்டுப் போறது சிரமம்னு சொன்னேன். எனக்காக அவங்க கேரியரை ஏன் கெடுத்துக்கணும். அதுனால அக்ரம் ஹோம்ஸ் பத்தி கேள்விப்பட்டு, என்னை இங்க சேர்த்தான். என் வீட்ல கூட நான் இவ்ளோ சுதந்திரமா இருந்தது இல்ல. இங்க வந்தப்ப யார் கூடவும் பேசாம முசுடு மாதிரி தான் இருந்தேன். இவங்க மூணு பேரும் என்னை இப்படி மாத்திட்டாங்க… என் பையன் கூட, ‘இப்போல்லாம் உங்ககூட பேசுறப்ப எனக்கே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வருது’ன்னு சொல்லுவான்” என்று சிரித்துக்கொண்டார்.
ஜெயசுதாவோ, “எனக்கு அப்படி எல்லாம் இல்ல. வீட்ல சும்மா இருக்க முடியாம எதையாவது செஞ்சுட்டு இருக்கேன்னு என் மகளுக்கு அத்தனை கவலை. என் ஹஸ்பண்ட் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே இறந்துட்டாரு. மகளைக் கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சுட்டாலும் அவளுக்கு நான் தனியா இருக்குறதுல கவலை. அப்பறம் நானாவே இங்க வந்து சேர்ந்துட்டேன். அக்னி தம்பி, இங்க யாரோட முகத்தையும் வாட விடாது. ரம்மு இங்க வந்தப்ப கூட, அவரை சிரிக்க வைக்கிறது உங்க பொறுப்புன்னு எங்களை இவன் கூடவே சுத்த விடும்” என்றார் பெருமையாக.
எப்படி இவர்களால் இத்தனை நேர்மறை எண்ணத்துடன் வாழ இயல்கிறது?
பவித்ராத்யாவிற்கு உள்ளம் குளிர்ந்தது. இப்படிப்பட்ட அழகான அமைப்பை நிறுவி விட்டு விக்ரம் பாதியில் வந்தது அவருக்கும் தான் எத்தனை வருத்தமாக இருந்திருக்கும். ஆனால், அவரது கனவை அக்னி அத்தனை சிறப்பாய் நடத்தி கொண்டிருந்ததை கண்டு, பவித்ராத்யாவிற்கு அவன் மீது மதிப்பு கூடியது.
இவளது எண்ணத்தை தடை செய்யும் விதமாய், ஜெயசுதாவே பேசினார்.
“ஆனா என்ன ஒன்னு… என்ன தான் எல்லா வசதியும் இருந்தாலும் கூட, உழைச்சே பழகியாச்சு. நம்ம உழைச்ச காசுன்னு நம்மகிட்ட ஒரு பத்து ரூபா இருக்குறது பெரிய தைரியம் பவிமா” என்றதில், அவரை ரசித்துப் பார்த்தாள் அவள்.
மற்றவர்களும் அதனை ஒப்புக்கொண்டு மேலும் பேசிட, “ஐயோ மறந்தே போய்ட்டேன் பாருங்க…” என்று தனது கைப்பையில் இருந்து டிபன் பாக்ஸை எடுத்துக் கொடுத்தாள்.
ஜெயசுதா அதனை வாங்கி “என்னமா இது?” எனக் கேட்டுப் பிரித்து பார்த்து திகைத்தார்.
“வட்லாப்பம் ஆண்ட்டி. நான் இதுவரை செஞ்சது இல்ல. என் அக்காட்ட கேட்டு செஞ்சேன். நீங்க அன்னைக்கு கேட்டீங்கள்ல…” என்றதும், நால்வரும் நெகிழ்ந்து விட்டனர்.
“எங்களுக்காகவா செஞ்ச?” விஜயா கண்கள் பனிக்க கேட்டதும், “ஆமா ஆண்ட்டி… எனக்கு இது என்னன்னே தெரியாது” என சிரித்தாள்.
விஜயா அதனை ஒரு பகுதி எடுத்து உண்டு விட்டு, மனதில் வேதனையும் கொண்டார்.
‘என் பேரனோட கைப்பக்குவம்!’ மற்றவர்கள் அறியாது கண்ணைத் துடைத்துக் கொண்டார்.
———-
அன்றைய வகுப்பு முடிந்ததும் பவித்ராத்யாவின் மனதில் சிறு எண்ணம் ஓடியது.
இங்கு பெரியவர்களின் மீது அக்கறை கொண்டே அனைத்தும் நடைபெறும் என்று அறிந்து கொண்டதால், இதைப்பற்றி யாரிடம் பேசுவது என யோசித்தபடி கனியிடம் சென்று, “இங்க எதுவும் ஃபேவர் இருந்தா யார்கிட்ட சொல்லணும் சார்?” எனக் கேட்டாள்.
“இங்க சூப்பர்வைசர் சஞ்சீவ் தான்மா. எதுனாலும் அவர்கிட்ட சொல்லலாம். பக்கத்து ரூம் தான்” என அனுப்பி விட, அங்கு அந்த வளர்ந்து கெட்டவனின்றி சஞ்சீவ் அமர்ந்திருப்பதை கண்டு நிம்மதி கொண்டாள்.
“ஹாய் பவி… வாங்க!” சஞ்சீவ் ஆர்வமாக அவளை வரவேற்க,
“ஹாய் சார். வந்து… நான் உங்ககிட்ட ஒன்னு பேசணும். உங்ககிட்ட சொன்னா அக்னி சார்ட்ட சொல்லிடுவீங்கனு கனி சார் சொன்னாரு” என்றாள் தயக்கமாக.
“எதுக்கு அக்னி சார்ட்ட சொல்லிட்டு… நானே என்ன வேணுமோ செஞ்சுத் தரேன்” என்றதில், அவளும் புன்னகைத்தாள்.
“அதில்ல சார்… இங்க இருக்குற பெரியவங்க நிறைய பேர் வேலை பார்த்து பழகுனவங்க. வயசையும் உடல்நிலையையும் காரணம் காட்டி, அவங்களோட சுயத்தை மறக்க வைக்கிறதும் கூட அவங்களை ரெஸ்ட்லெஸ் ஆக்கும்.
உண்மையாவே இனி உழைச்சது போதும்னு ரெஸ்ட் எடுக்குறவங்க பிரச்சினை இல்ல. ஆனாலும் இன்னுமே மனசும் உடம்பும் உழைக்க ஏங்கும் போது அதை தடுத்து வைக்கிறது அவங்களோட சந்தோஷத்தைப் பறிக்கும்.
இங்க இருக்குறவங்களுக்குனு ஏன் ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கி, அவங்களுக்குனு சம்பளம் குடுக்க கூடாது” என மெல்லமாகக் கேட்க, அவளது கூற்றில் எரிச்சலடைந்தான் சஞ்சீவ்.
“இது மேனேஜ்மெண்ட் சம்பந்தப்பட்ட விஷயம் பவி. இதுல நீங்க தலையிட தேவை இல்ல” பட்டென உரைத்திருந்தான்.
“எனக்கும் புரியுது சார். மேனேஜ்மெண்ட்ல எந்த ரெகுவெஸ்ட் வேணாலும் வைக்கலாம்னு இங்க இருக்குறவங்க சொன்னாங்க. அதான் சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க…” என்று அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
‘ஏற்கனவே இந்த வேலை கடுப்படிக்குதுனு இருக்கேன். இதுல இவள் வேற அக்னியை ஏத்தி விடுவா போல’ என எரிச்சலுடன் முணுமுணுத்துக் கொண்டான்.
வேகமாய் சஞ்சீவின் அறையில் இருந்து வெளியில் வர, அங்கு நின்றிருந்த அக்னியின் அகன்ற மார்பின் மீது இடித்துக் கொண்டாள்.
‘ஐயோ இவனா?’
“இன்னும் கிளம்பல?” ஆடவனின் கம்பீரக் குரலில்,
“கிளம்ப தான் போறேன்.” அவனைப் பாராது கூறினாள்.
“மே ஐ ஹெல்ப் யூ?” அக்கேள்வியில் விழித்தவள், “என்னது?” என நிமிர, “டிராப் பண்ணவானு கேட்டேன்” என்றான் குறுநகையுடன்.
“வேணாம். எனக்குப் போக தெரியும்… எனக்கு கால் இருக்கு” என வெடுக்கென கூற,
“ஓ! நான் கூட நீ கால் இல்லாத ஆவின்னு நினைச்சேன்” என்றான் அசட்டையாக.
“ஆவியானா முதல்ல அடிக்கிறது உங்களை தான்!”
“நான் ரெடி தான். எங்க கிஸ் அடிப்ப கன்னத்துலயா? இல்ல…” என்று இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டு கூர்மையாய் ஏறிட, அவளுக்கு நெஞ்சம் சில்லிட்டது.
“ஹலோ நான் கையால அடிப்பேன்னு சொன்னேன்!” அவள் பதறி விட்டாள்.
“கையால எப்படி கிஸ் பண்ணுவ ஆத்யா? நான் கேள்விப்பட்டது இல்லையே…” தாடையைத் தடவி அவன் சிந்திக்க, “இப்டி எல்லாம் டீஸ் பண்ணீங்கன்னா நான் அக்னிகிட்ட சொல்லிடுவேன்” என மிரட்டினாள்.
“சொன்னா நான் பயந்துடுவேனா?” அவள் முன்னே காலடி எடுத்து வைத்ததில் மிரண்டவள், திடுதிடுவென அங்கிருந்து ஓடியே விட்டதில், “ஏய் ஆத்யா… நான் தான்” என்று சொல்லும்போதே அவள் கேட்டைத் தாண்டி ஓடி விட்டாள்.
ஆடவனின் புன்னகை பெரிதாய் விரிய, மறுபுறம் திரும்பியவன் அங்கிருந்த நான்கு பேரையும் கண்டு பின்னந்தலையை கோதிக் கொண்டான்.
“என்ன நடக்குது இங்க?” விஜயா வினவ,
“இவ்ளோ நேரம் யோகா க்ளாஸ் நடந்துச்சு விஜி!” என்ற அக்னியின் பதிலில் நால்வரும் முறைத்தனர்.
ஜெயசுதா அவன் முன்னே டிபன் பாக்ஸை நீட்ட, “என்ன சுதா இது?” என வாங்கினான்.
“உன் ஆத்யா எங்களுக்காக செஞ்சுட்டு வந்த வட்லாப்பம்!” ஜெயசுதா ‘உன் ஆத்யா’ என்றதை அழுத்திக் கூற, அவன் ஒரு கண்ணை மூடித் திறந்தான்.
அதற்கு மறுப்பும் கூறவில்லை, ஆமாவென்றும் ஒப்புக்கொள்ளவில்லை.
அவனை வெளியில் முறைத்தாலும் நால்வருக்குள்ளும் துள்ளல் தாண்டவமாடியது.
“வாங்க வாங்க” என்று குருமணி அவர்களை இழுத்துச் செல்ல, அந்த டிபன் பாக்ஸை வெறித்திருந்தான் அக்னி வேந்தன்.
தனதறைக்குச் சென்றவன் அந்த டிபன் பாக்ஸை டேபிள் மீது வைத்து விட்டு நாற்காலியின் பின் புறம் கழுத்தைச் சாய்த்தான்.
“அகி, உனக்காக உன்கூட எப்பவும் உன் அண்ணா இருப்பேன்டா…” என்ற விக்ரமின் கூற்று காதில் அசரீரியாய் ஒலிக்க, தனக்காக தன்னுடன் அவனின்றி போன ஆற்றாமை தாளாது, அவன் மீது எழுந்த கடுங்கோபத்தில் அவன் நினைவாய் தன்முன் வீற்றிருந்த வட்லாப்பத்தை தட்டி விட்டான்.
சற்றே சமநிலைக்கு வந்த பிறகு, வேகமாய் தனது அலைபேசியை எடுத்தவன் முந்தைய நாளே எடுத்து வைத்திருந்த பவித்ராத்யாவின் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.
“ஐ ஆம் அக்னி. நாளைக்கு க்ளாஸ் முடிஞ்சதும் என் ஆபிஸ் ரூம்ல மீட் பண்ணலாம்.”
பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தவளுக்கு, ‘அந்த வளர்ந்து கெட்டவன் ஓவரா தான் பேசுறான்’ என்ற பொருமல் அதிகரிக்க, அந்நேரம் அந்தக் குறுஞ்செய்தியைக் கண்டு குதூகலித்தாள்.
“நீங்க ஃபாரின்ல இருந்து வந்துட்டீங்களா?”
அவள் பதில் அனுப்பியதில், “ம்ம்” என்றதைத் தவிர அவன் எதுவும் பேசவில்லை.
குறுஞ்செய்தியிலேயே விஷயத்தை கூறி விடலாமா என்ற எண்ணத்தைக் குழி தோண்டி புதைத்தவள், நேர்ல பார்த்தே பேசலாம் என்று துடித்த மனதை அடக்கிக் கொண்டாள்.
போதை தெளியும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
10
+1
+1

