விழி வழியே சரணடைந்தேன் – 9

Loading

அத்தியாயம் 9

 

இத்தனை நேரம் அவன் குரலில் இருந்த சந்தோஷம் இப்போது இல்லாமல் போக அவனின் கண்கள் வலியை பிரதிபலித்தது. 

 

“உங்களுக்கு..” என்று அவள் திணற கட்டிலில் அவளை அமர்த்தியவன் “அனு ரூமுக்கு அம்மாவோட நகைய எடுக்கபோனேன். அப்போ தான் கபோர்ட்ல என் ரிபோர்ட்ஸ் பார்த்து தெரிஞ்சிகிட்டேன்” என்று கூற தாவி அவனை அணைத்து கொண்டாள். 

 

அவனுக்கும் அந்த அணைப்பு தேவையானதாக இருந்தது. இதுவரை இருந்த படபடப்பு, வலி எல்லாம் அவளின் ஒற்றை அணைப்பில் அடங்கியது. எத்தனை நேரம் இருந்தார்களோ அவன் தான் அவளை முதலில் விலக்கினான். 

 

“உனக்கு முதல்லயே தெரியுமே.. அப்புறம் எதுக்கு உன் வாழ்க்கையை பணயம் வச்ச?” 

 

“அது.. அது..” என்று தவித்தவளுக்கு இந்த கட்டாய கல்யாணத்தை பற்றி சொல்லி இன்னும் அவனின் வேதனையை கூட்ட விருப்பம் இல்லை. 

 

“கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரியும்..” என்று பொய்யுரைத்தவளுக்கு அவனின் நலம் மட்டுமே கருத்தில் பட “நாளைக்கு ஹாஸ்பிட்டல் போகலாமா?” என்று மெதுவாக கேட்டாள். 

 

“போகலாம்.. ஆனா எனக்கு ஒரு விஷயம் பண்ணுவியா கனி?” என்று அவள் மார்பில் சாய அவனின் தலை முடியை பிடித்து நிமிர்த்தினாள். 

 

“இந்த கெஞ்சல் எல்லாம் வேண்டாம்.. சொல்லுங்க உங்களுக்கு இல்லாம என்கிட்ட எதுவும் இல்ல” என்றவளுக்கு அவன் கேட்ட விஷயம் கண்களில் நீரை சொரிய வைத்தது. 

 

அவளின் முகத்தை தாங்கியவன் “என் டியூமர் இன்னும் கேன்சர் கட்டியா மாறலன்னு ரிப்போர்ட்ல இருக்கு.. ஆனா எனக்கு ஒரு ஆசை.. உன்னை நான் எவ்ளோ காதலிக்குறேன்னு கேட்டா வானத்துக்கு எல்லை உண்டான்னு கேட்பேன் நான்.. என் காதலும் அப்படி தான்.. அதே மாதிரி என் உயிரில் உருவாகும் ஒரு வாரிசு உன் வயிற்றில் வளருவதை பார்த்துட்டு நான் செத்து போனா போதும்” என்று கூற அவனின் கண்ணீரை காண சகியாதவள் அவனின் இதழோடு தன் இதழை பொருத்தினாள் கனி. 

 

தானே தேடிவரும் தேன் அவனுக்கு திகட்டுமா என்ன? அதை அவன் ஆசை தீரும் மட்டும் பருக அவனுக்கு வாரி வழங்கி கொண்டிருந்தாள் கனி. அவனின் காதலும் அவனின் ஆசையும் அவள் அறிந்த ஒன்றே. ஆனால் அவன் இவ்வுலகத்தை விட்டு செல்லுவான் என்பதை அவள் நம்ப மறுத்தாள். கண்டிப்பாக அவன் வாழுவான். ஒரு குழந்தை உருவாவதை மட்டும் அல்ல அந்த குழந்தையோடு அவனின் கடைசி காலம் மட்டும் வாழுவான் என்று உறுதியாக நம்ப முயன்றாள். 

 

அவளின் பயம் அவனும் அறிந்ததே. அவன் இறந்து போனால் இன்னொரு வாழ்க்கையை அவள் தேட மாட்டாள் என்பது நிச்சயம். எனவே தான் அவளுக்காக தன் உயிரை பரிசாக கொடுத்து விட்டு போக நினைத்தான். 

 

இருவர் மனமும் இரு விதமாக நினைக்க அதை மாற்ற என்றே இன்னும் இருவரின் ரூபத்தில் அவர்களுடன் விளையாட நினைத்தது விதி. 

 

**************************

 

அரசியல் வாதி என்றாலே ஒரு கெத்தை காட்டுவார் ஈஸ்வரன். இன்று தன் ஒரே மகனின் திருமணத்தை ஊரே வியக்கும் அளவிற்கு நடத்த அந்த ஊரே மண்டபத்தில் திரண்டிருந்தது. 

 

ஆனால் அருணோ திருமண சந்தோசம் எதுவும் இல்லாமல் வெறித்து கொண்டிருந்தான். அவன் அருகில் இருந்த விஷ்வாவுக்கு அவனை நினைத்தே பயமாக இருந்தது. அருண் தான் நினைக்கும் விஷயத்தில் உறுதியாக இருப்பவன். அந்த கனி அவனின் வாழ்க்கையில் இல்லாவிட்டாலும் அம்ருதாவை அவன் மனைவியாக ஏற்று கொள்ள மாட்டான். இந்த விஷயம் விஷ்வாவிற்கு புரிந்து என்ன பயன்? புரிய வேண்டியவரோ தன் பதவிக்காக மகனை பலி கொடுத்து கொண்டிருந்தார். 

 

அம்ருதாவின் தந்தை நேசன் ஈஸ்வரனின் கட்சி தொண்டர் தான். ஒரு கலவரத்தில் நேசன் இறந்து விட கட்சிக்குள் பூசல் வந்தது. அதே நேரம் தன் பதவியை காப்பாற்றி கொள்ள அம்ருதாவை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து நல்ல பெயர் வாங்க நினைத்தார். எந்த பெரிய மனிதன் தான் தன் மகனுக்கு ஒரு ஏழைப்பெண்ணை திருமணம் செய்து வைக்க ஒத்து கொள்வார்? ஆனால் ஈஸ்வரனின் செயல் அவருக்கு கட்சியிலும் நல்ல பெயர் வாங்கி கொடுக்க அருணின் மனதை அறியாமலே போய் விட்டார். 

 

வெளியில் நடந்த சத்தம், மேள சத்தங்களை கேட்கும் போது விஷ்வாவுக்கே எரிச்சலாக இருந்தது. ஒருவன் மனதொடிந்து இருக்கும் நேரத்தில் இது தேவையா என்று கடுப்பாக இருந்தாலும் அவன் ஒன்றும் செய்ய முடியாது. அவனும் விருந்தாளியாக வந்தவன் தான். அருணை நினைத்து பாவப்பட மட்டுமே முடியும். வெளியில் இருந்து ஐயர் மணமகனை அழைத்து வர சொல்ல அறைக்கு சென்றவனுக்கு நெஞ்சு வலி வரும் அளவிற்கு ஒரு காரியத்தை செய்து விட்டு சென்றிருந்தான் அருண். 

 

“சாரி.. இந்த கல்யாணத்தில் எனக்கு விருப்பம் இல்லை” என்ற வாக்கியங்களோடு ஒரு துண்டு பேப்பர் இருக்க அதை எடுத்து படித்த விஷ்வாவிற்கு நெஞ்சு கூடு உலர்ந்து போனது. 

 

“அட கிராதகா..” மனம் முழுவதும் பயத்தில் நடுங்க வெளியே வர “அருண் எங்க விஷ்வா?” என்று கேட்டார் ஈஸ்வரன். 

 

“அப்பா அவன் இங்க இல்ல” என்று கூறி கொண்டே அவரின் கையில் பேப்பரை திணிக்க வாசித்து பார்த்தவர் கண்கள் கோவைபழமாய் சிவந்து போனது. 

 

“இவனை..” என்று பல்லை கடித்தவன் “டேய் கணேசா.. அருண் வெளில தப்பிச்சு போயிட்டான்.. உடனே தேடுங்க” என்று கூற அவரின் கத்தலில் வெளியே எட்டி பார்த்த அம்ருதா செய்தி கேட்டு மயங்கி விழுந்தாள். 

 

அவளின் தாயார் தண்ணீர் தெளித்து எழுப்ப “மா.. அவர் எங்க போயிட்டார்?” என்று கேட்க அவளின் கையில் அவனின் கடிதத்தை வைக்க வாசித்தவள் கண்ணீர் மல்க “நோ…” என்று கத்தினாள். 

 

ஈஸ்வரன் அருகில் வர “நீங்க தானே அவரை கல்யாணம் பண்ண கேட்டீங்க.. என் மனசுல ஆசைய வளர்த்துட்டு எப்படி அவரை விட்டீங்க” என்று அவரின் சட்டை காலரை பிடிக்க அனைவரும் அவளை அதிர்ந்து பார்த்தனர். 

 

“விடு அம்ருதா..” என்று கடிந்தவர் காலரை சரி செய்து கொண்டே “உனக்கும் அவனுக்கும் தான் கல்யாணம் நடக்கும்.. நான் நடத்தி வைப்பேன்” என்று சொல்ல அம்ருதா “உன்னை விட மாட்டேன் அருண்” என்று சீறினாள். அருணோ தன் காதலி கனியை தேடி செல்ல கன்னிப்புரம் பேருந்தில் அமர்ந்திருந்தான். 

________

“ஏன்மா காலையிலேயே இது எல்லாம் தேவையா? மீட்டிங் இருக்குடா..” என்று கீதன் கெஞ்ச அதை துளியும் பொருட்படுத்தவில்லை கனிமொழி. 

 

அவள் பாட்டிற்கு அவனின் மெடிக்கல் ரிபோர்ட்ஸ் எடுத்து வைத்து கொண்டிருக்க அவன் தான் பாவமாக நின்றிருந்தான். ரொம்ப நாட்களாக அவனை மருத்துவமனை வர சொல்லி கனி கேட்டு கொண்டிருக்க ஏற்கனவே அவனின் நிலை பற்றி அறிந்தவனுக்கு அதை மருத்துவர் வாய் வழியாக கேட்டு இன்னும் கவலையடைய விருப்பம் இல்லை. அதனால் தான் அவளை சமாளித்து கொண்டிருந்தான். இன்று கனி வற்புறுத்தவே அவளுடன் மருத்துவமனை சென்றான். 

 

அவனின் பழைய ரிப்போர்ட் பார்த்த மருத்துவர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து பார்க்கலாம் என்று அனுப்பி வைத்தார். கனியோ அனைத்து தெய்வங்களையும் வேண்டி கொண்டு அவனுக்காக காத்திருந்தாள். திருமணம் ஆகி கொஞ்ச வாரங்களே ஆகியிருந்தாலும் என்ன தான் பிடிக்காமல் திருமணம் பண்ணினாலும் இந்த சில காலங்களில் அவளின் இதயத்தில் நிரம்பியிருந்தான் கீதன். 

 

ஸ்கேன் எடுத்து முடித்ததும் வெளியே வந்த கீதனின் முகத்தை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. இவ்வளவு நாள் ஏதோ என்று நாட்களை தள்ளி கொண்டிருந்தான். இன்று என்ன ரிசல்ட் வருமோ என்ற பயம் அப்பட்டமாக தெரிந்தது. 

 

“எல்லாமே நல்லதா தான் நடக்கும்” என்று கனி அவனின் கையை பிடிக்க அதை இறுக பற்றி கொண்டான். அவளுக்காக மட்டுமே அவனுக்கு வாழ வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது. 

 

ரிசல்ட் பார்த்த மருத்துவரோ அவர்களை வருத்தத்தோடு நோக்கினார். “சாரி கனி.. இது கான்சர் கட்டி இல்ல தான்.. ஆனால் இப்படியே வளர விடுறது ஆபத்து” எனவும் வைத்திருந்த நம்பிக்கை அனைத்தும் ஒற்றை நொடியில் தகர்ந்து போனது அத்தம்பதியருக்கு. 

 

“இதை சரி பண்ணவே முடியாதா டாக்டர்?” கனி கேட்க “கட்டி மூளைக்கு பக்கத்தில் இருப்பதால் அறுவை சிகிச்சை பண்ணினாலும் கோமா போக சான்ஸ் இருக்கு.. பட் அறுவை சிகிச்சையில் முப்பது பெர்சன்ட் ஹோப் தான்” என்று கூற கீதன் எழுந்து விட்டான். 

 

“இட்ஸ் ஓகே டாக்டர்.. உடனே ஆபரேஷன் பண்ணி கோமா ஸ்டேஜ்க்கு போக நான் தயாரா இல்ல.. எனக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு.. எப்போ நேரம் அழைக்குதோ அப்போ போயிக்குறேன்” என்றவன் கனியை பார்க்க அவளோ பேயறைந்தது போல் இருந்தான். 

 

“ஹே சில் கனி.. நாம இருக்குற வாழ்க்கையை சந்தோசமா வாழ்ந்திட்டு போகலாம்” என்று அவளையும் எழுப்ப சுரத்தையே இல்லாமல் அவனை நோக்கினாள். 

 

அவ்வளவு வலியிலும் அவளுக்காக புன்னகைத்தான் அவன். அவர்களை பார்த்த மருத்துவருக்கு கஷ்டமாக போய் விட்டது. 

 

“நான் பாசிபிலிட்டிஸ் தான் சொன்னேன் கனி.. நீ ஆபரேஷன் பண்ணினா கூட சரி ஆகலாம்ல” என்று கேட்க “ரிஸ்க் எடுக்க விரும்பல டாக்டர்” என்றவன் மனைவியுடன் வெளியேறி விட்டான். 

 

காரை அதிவேகத்தில் செலுத்தியவனுக்கு வீட்டிற்கு வந்தபோதும் மூச்சடைப்பது போல் இருந்தது. அவனின் ஆயுள் அவ்வளவு தானா? இதற்காகவா உருக உருக காதலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான்? இப்போது அவளின் வாழ்க்கையும் அல்லவா பிரச்சனையில் மாட்டி கொண்டு இருக்கிறது.. கனியை பார்க்க அவளோ இன்னும் மருத்துவரின் பேச்சில் இருந்து வெளி வராமலே இருந்தாள். 

 

அவளை பார்த்தவன் தன் வலியை மறைத்து கொண்டு அவளை நெருங்கினான். “ஓ மை கனி செல்லம்.. இவ்ளோ தானா உன் தைரியம்.. எனக்கே ஆறுதல் சொல்ல வேண்டிய நீ அழுதா நான் எங்க போய் ஆறுதல் தேடுவேன்?” என்று கேட்க கட்டி கதறினாள் அவள். 

 

சிறிது நேரம் அவளை அழ விட்டவன் பின் அவளின் நாடியை நிமிர்த்தி “நான் ஒன்னும் இப்போ சாக போறது இல்ல.. கடைசி வரைக்கும் போராடுவேன்.. அதுக்கு இன்னும் வருஷங்கள் இருக்கு.. அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு போக மாட்டேன்” என்று கூற அவனின் தோள் சாய்ந்தாள் கனி. 

 

அவனுக்கே தெரியும் இன்னும் சில மாதங்கள் தான் அவனின் வாழ்க்கை என்பது. ஆனாலும் அவளுக்காக தன்னை தேற்றி கொண்டவன் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை பார்த்தான். அதிரனுக்கு அழைத்து இன்று அலுவலகம் வர முடியாது என்று சொன்னவன் பின் தனக்கு விஷயம் தெரியும் என்பதை அனு அறியாதவாறு பார்த்து கொள்ள சொன்னான். கஷ்டமோ நஷ்டமோ அது கணவன் மனைவிக்குள் தீர்ந்து விட நினைத்தான். 

 

கனி சமையலறைக்குள் செல்ல “இப்போ நீ இருக்கிற நிலமைல உப்புக்கு பதில் சக்கரை போட்டா சாப்பிட நல்லாவா இருக்கும்” என்று செல்லமாக தலையில் குட்டியவன் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு சாப்பிட அழைத்தான். 

 

அவளுக்கு பரிமாறி விட்டு சாப்பிட தொடங்க கனியோ சாப்பாட்டை அளைந்து கொண்டிருந்தாள். அவளின் நிலைமை அவனுக்கும் வருத்தத்தை தான் கொடுத்தது. ஆனால் சாக போகிறோம் என்பதற்காக சாப்பிடாமலா இருப்பது? 

 

“கனி எதை பத்தியும் நினைக்காம சாப்பிடு” என்று தட்டை அவள் பக்கம் நகர்த்த முறைத்தாள். 

 

“நினைக்காம எப்படி இருக்க முடியும்? நீங்க பாட்டுக்கு சந்தோசமா இருக்கீங்க.. எனக்கு நெஞ்செல்லாம் வலிக்குது” என்று கத்த “அதுக்காக நீ சாப்பிடாம இருந்தா நான் சரியாவேனா?” என்று கேட்டான். 

 

அவளின் அமைதி அவனை என்னவோ செய்தது. அவளுக்கு அருகில் இருக்கையில் அமர்ந்தவன் சாப்பாடை அவளுக்கு ஊட்டி விட்டு “வாழ்க்கை எப்போ முடியும்னு யாருக்கும் தெரியாது கனி.. எனக்கு அதை தெரிஞ்சிக்க முடிஞ்சுது அவ்ளோ தான்.. எல்லாரும் இந்த உலகம் அழியுற வரைக்கும் உயிரோட இருக்க முடியுமா என்ன? நான் இருக்குற வரைக்கும் எல்லார் கூடவும் சந்தோசமா இருக்க நினைக்குறேன்.. நீ சாப்பிடாம இருந்தா எனக்கு மட்டும் எதுக்கு சாப்பாடு?” என்று தன் தட்டை நீக்கி வைக்க அவசரமாக அவன் கையில் இருந்ததை வாயில் வாங்கி கொண்டாள் கனி. 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்