Loading

மருத்துவமனையின் பிரசவ அறை அது.

 

உடம்பிலுள்ள அத்தனை நரம்புகளும் வலியில் நர்த்தனமிட, வலி மிகுதியால் விளைந்த கண்ணீரும், புலம்பலுமாய், அரை மயக்கமுமாய் வாழ்வின் உயரிய வலியாம் பிள்ளைப் பேற்றின் வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

அவள் வலியை தன் வலியாய் மனத்தில் ஏற்றுக் கண்ணீர் ஓடிய விழிகளுடன் பதட்டத்தின் உச்சத்தில் அவள் கைகளைப் பற்றியிருந்தான் அவன்.

 

அரை மயக்கமாய் நீர் நிறைந்த விழிகளுள் மங்கலாகவே அவன் முகம் தெரிந்தது அவளுக்கு. ஆயினும் அவளால் உணர முடிந்தது அவனின் ஆழ் காதலை அவன் கைகளின் இறுக்கத்தில். பாசமாய் அவன் இப்பொழுது அவளின் தலையை வருட, அவன் கைகளின் டாட்டூ காணக் கிடைக்கிறது அவளுக்கு. நிநி என ஸ்டைலாய் படு அழகாய் அவன் வெளிர் நிறக் கைகளில் அம்சமாய் இருந்தது அந்த டாட்டூ.

 

வலியின் உச்சத்தில் அவள் வீறிட்டு அலற,

 

“அம்மாஅஅஅஅ”

 

அதே வலி மிகுந்த அலறலுடன் எழுந்தமர்ந்தாள் நம் நாயகி தனது அறையின் கட்டிலிலிருந்து.

 

முகமெங்கும் முத்து முத்தாய் வியர்த்திருக்க, படபடப்பும் நடுக்கமுமாய்த் தனது வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டாள்.

 

இன்னமும் அவ்வலியுடன் தான் இருப்பது போல் உணர்ந்தாள் அவள்.

 

“ச்சே கனவா!” மனத்திற்குள் கூறிக் கொண்டாள்.

 

தன் அருகிலிருந்த நீரை மட மடவென முழுவதுமாய்க் குடித்திருந்தாள்.

 

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டுமாய்ப் படுத்தவள், எதனால் இத்தகைய கனவு தனக்கு வந்தது எனத் தனது சிந்தையைச் சீண்டினாள்.

 

 

“ஹப்பா குழந்தை பெத்துக்கிட்ட பொண்ணுங்களை எல்லாம் கோயில் கட்டிக் கும்பிடலாம் போல! என்னாஅஅஅ வலி!… செத்தே போயிருலாம் போலல இருந்துச்சு” என வாய்விட்டே கூறியவாறு பலவிதமான சிந்தனைக்குள் உழன்றவள் சில நேரங்களில் தன்னை மீறி உறங்கிப் போனாள்.

 

—-

 

மறுநாள் சென்னையிலுள்ள பேரங்காடியின் (shopping mall) முதல் தளத்தில் மத்தியமாய் அமைந்திருந்த நகரும் படிக்கட்டை நோக்கி வலபுறமிருந்து கோபமாய் வந்து கொண்டிருந்தாள் அவள்.

 

அவள் பின்னோடு, “ஹே நிவாஸ்! சாரிடி நில்லுடி” எனச் சத்தமாய்க் கூறியவாறு அவளைப் பின் தொடர்ந்து வந்தாள் அவளின் தோழி பவானி.

 

அதேப்போல் இடப்புறமிருந்து கோபமாய் வந்து கொண்டிருந்தான் அவன்.

 

அவன் பின்னோடு, “டேய் நித்தி நில்லுடா” எனக் கூறியவாறே வந்தான் அவனின் நண்பன் விஜய்.

 

நிவாஸ் என்ற பவானியின் விளிப்பில் கோபமுற்றவள், அவள் புறம் திரும்பி, “ஜஸ்ட் ஸ்டாப் காலிங் மீ நிவாஸ், பவா.. பையனைக் கூப்டுற மாதிரி இருக்கு” என முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டு கூறியிருந்த அதே நேரம்,

 

“டோண்ட் கால் மீ லைக் திஸ் விஜய். உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன் இப்டி கூப்டாதனு” என ஹை டெசிபலில் அவனும் பொரிந்து தள்ள,

 

இருவருமே நகரும் படிக்கட்டினருகே நின்று கத்தியதால், இருவருமே மற்றவரின் பேச்சைக் கேட்டு திரும்பி முகத்தைப் பார்த்தனர்.

 

தன்னைப் போலவே அவளுடைய பெயரைச் சுருக்கிக் கூப்பிடுவது அவளுக்குப் பிடிக்கவில்லை என்பதை அறிந்தவனது இதழ்கடையில் சிறுமுறுவல் தோன்ற அவளைப் பார்த்திருந்தான்.

 

ஏற்கனவே தன்னைப் போலவே யாரது பேசுவது என அறிய எண்ணி திரும்பியவளின் பார்வையில் இவன் விழுந்ததுமே மனத்தில் இனம்புரியா உணர்வு அலைகள் அவளை நிலைக் கொள்ளாதிருக்கச் செய்ய, அவன் கைகளில் கண்ட டாட்டூ அவளை அவ்விடத்திலேயே மயங்கிச் சரியச் செய்தது.

 

திடீரென மயங்கிச் சரிந்தவளைக் கண்டு மூவரும் அதிர்ந்து அவளருகே பதறி ஓட, அவளைத் தனது மடியில் தாங்கியிருந்தானவன்.

 

அவளருகில் வந்த பவானி, “ஹே நிவாஸ், என்னாச்சுடி?” எனப் பதறியவாறு அவன் மடியில் சரிந்திருந்தவளின் கன்னத்தில் தட்டினாள்.

 

“ஏங்க இப்ப தானங்க, அவங்க உங்களை அப்படிக் கூப்டாதீங்கனு சொன்னாங்க?” என்று அவளைத் தாங்கியிருந்தவன் கேட்க,

 

“ஆமா இது இப்ப ரொம்ப முக்கியம்” என வாய்க்குள் முனகியவாறே அவனை முறைத்த பவானி, தனது பையிலிருந்த நீரை அவள் முகத்தில் தெளித்தாள்.

 

மயக்கத்திலிருந்து விழித்துச் சற்றாய் தெளிந்தவளுக்குக் கனவில் கண்ட அதே மங்கலான முகம் அவளின் பார்வைக்கருகில் காணக் கிடைத்தது.

 

சரியாய் அதே நேரம் அவள் தலையை அதே போல் அவன் வருட மீண்டும் அவனின் டாட்டூ அவள் கண்களில் விழ,  அவளை மீறிய பாச உணர்வு அவன் மீது அவளுக்குப் பொங்கி வழிந்தது. இதே போல் ஆயுளுக்கும் அவன் மடியில் தாங்க வேண்டுமென்ற ஆவல் அவளையும் மீறி ஊற்றாய் அவள் மனவெளியில் நிரம்பி வழிய இமை சிமிட்டாது அவனையே பார்த்திருந்தாள்.

 

அவன் கண்களும் ஆதுரமாய் அவளைத் தான் பார்த்திருந்தது.

 

“என்னங்க காலைல சாப்பிடலையா?” மடியில் தாங்கியிருந்தவளை நோக்கி கேட்டிருந்தான்.

 

அவனின் அக்கேள்விக்கும் பதிலிறுக்காது அவனையே வெறித்து நோக்கினாள் அவள்.

 

கட்டவிழுந்த அணையாய் ஓடிய மனத்தின் எண்ணங்களை, உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள், தட்டு தடுமாறி எழ முற்பட, கை கொடுத்து அவளை எழுந்து நிற்கச் செய்தான் அவன்.

 

இதற்கு மேல் அங்கு நிற்கவும் அவனிடம் வினவவும் மனமில்லை அவளுக்கு.

 

அவனின் அன்பான பரிவான பார்வைக்கு அவளின் மனம் வெகுவாய் ஏங்குவதை உணர முடிந்தது அவளால்.

 

யாரென்று அறியாத ஒருவனிடம் தனது மனத்தின் உணர்வுகள் தறிகெட்டு ஓடிவதை ஏற்றுக்கொள்ள இயலாது மிகுந்த குழப்பத்திற்குள் ஆழ்ந்தவள் அங்கிருந்து ஓடவே முற்பட்டாள்.

 

“ஆமாங்க இல்லைங்க. சாப்பிட்டேன்” வாயில் வந்ததை உளறிக் கொட்டியவள், பவானியின் கைப்பற்றி “வாடி போகலாம்” என்றவாறு

 

“தேங்கஸ் ஃபார் யுவர் ஹெல்ப்” என்று மென்னகை புரிந்து இருவரிடமும் தலை அசைத்து அங்கிருந்து நகர எத்தனித்த நேரம்,

 

“எக்ஸ்க்யூஸ் மீ! மே ஐ நோ யுவர் நேம்?” எனக் கேட்டான் அவன்.

 

அவனின் கேள்விக்குப் பதிலிறுக்காது தனது பெயரைக் கூறாது விறுவிறுவென பவானியின் கை பிடித்து அவள் கடந்து செல்லவும்,

 

“அவங்க பேர தானடா கேட்ட?  என்னமோ அவங்களை நிக்க வச்சி நீ ரேகிங் செஞ்ச மாதிரி பதறியடிச்சி ஓடுறாங்க?” என்றான் விஜய்.

 

“நம்ம திரும்ப அவங்களைப் பார்க்கனும்னு விதி இருந்தா கண்டிப்பா பார்ப்போம். லெட்ஸ் வெய்ட் அண்ட் சீ” என்றவன் கூற அங்கிருந்து நகர்ந்தனர் விஜயும் நம் நாயகனும்.

 

****

 

அன்றிரவு அந்தப் பெண்கள் தங்கும் விடுதியின் இரு படுக்கைகள் கொண்ட அறையில் தனது மெத்தைப் படுக்கையில் அமர்ந்திருந்த பவானி கைப்பேசியினில் யாருடனோ பேசிக் கொண்டிருக்க, அவளின் அருகே மெத்தைப் படுக்கையில் விட்டத்தைப் பார்த்தவாறு படுத்திருந்த நிவாசினி, பேரங்காடியில் பார்த்தவனைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

 

 

அன்றைய நாள் முழுவதும் நிவாசினியின் நினைவுகளை அக்கள்வனே ஆட்கொண்டிருந்தான்.

 

‘யார் அவங்க? எனக்கு ஏன் அவங்களை நினைச்சாலே மனசெல்லாம் பூரிச்சு போகுது? கனவுல கண்ட அந்த நிநி டாட்டூ எப்படி இவர் கையில இருக்கு?’ எவ்விதமாய்ச் சிந்தித்தாலும் மனத்தின் இக்கேள்விகளுக்குப் பதிலில்லை அவளிடம்.

 

அவள் மயங்கி சரிந்ததும் மடியில் தாங்கி பவானியிடம் இவளை நித்தி என அழைக்க வேண்டாமென அவன் உரைத்தது அவளின் மயக்க நிலையிலும் அவளது செவிகளுக்குள் எட்டியிருக்க, அச்சொற்கள் தற்போது அவளது நினைவினிலாட, ‘நான் மயக்கத்துல இருந்தாலும் எனக்குப் பிடிக்காத அந்தப் பெயரை சொல்லி என்னைக் கூப்பிட கூடாதுனு சொன்னாங்களே!’ அவனின் அந்தக் கனிவான அக்கறையான பேச்சு அவளை மேலுமாய் அவனின் பால் ஈர்க்க ஏகாந்த மனநிலையில் இருந்தாள் நிவாசினி.

 

இது எதைப் பற்றியும் தனது தோழி பவானியிடம் உரைக்கவில்லை அவள்.

 

காலையில் உண்ணாதிருந்ததே அவளை இவ்வாறு மயங்கச் செய்ததென எண்ணியிருந்தாள் பவானி.

 

மின்சாரம் தடைப்பட்டு இரண்டு மணிநேரம் ஆகியும் வராதிருக்க, மெழுவர்த்தி வெளிச்சத்தில் அறையினுள் இருந்த இருவரும் அவரவர் சிந்தனையில் படுத்திருந்தனர்.

 

“ஹே ஹாசினி என் ஃபோன்ல சார்ஜ் இல்லடி! வைஃபையும் வர்க் ஆகலை. உன் ஃபோன்ல எதாவது பாட்டு போட்டு விடேன்” நிவாசினியிடம் கேட்டாள் பவானி.

 

“நான் என்னிக்கு ஃபோன்ல பாட்டுலாம் சேவ் செஞ்சி வச்சேன். ஃப் எம் போடலாமா?” எனக் கேட்டவள், தனது கைப்பேசியில் ஃப் எம்மின் அலைவரிசையை ஒவ்வொன்றாய் மாற்றினாள்.

 

அப்பொழுது ஓர் அலைவரிசையில் வந்த அந்தக் குரலில் தன்னை மறந்து சுற்றம் மறந்து அப்பேச்சினைக் கேட்டிருந்தாள் நிவாசினி.

 

“ஹை ஹலோ வணக்கம் அண்ட் வெல்கம் டூ நித்தில நினைவுகள் வித் மீ நித்திலன்” படு உற்சாகமாய்த் துள்ளலான குரலுடன் படபடவெனப் பேசியிருந்த அவனின் குரலை கேட்டவள், சட்டெனப் படுக்கையை விட்டெழுந்து, “ஹே பவா! இது அவங்க குரல் தான்டி! எனக்கு நல்லா தெரியும்! இது அவங்க குரல் தான்” நெஞ்சம் ஒருவித சிலிர்ப்பில் இருக்க அச்சிலிர்ப்பை தனது கண்களில் தேக்கி பவானியை நோக்கியவளாய் கூறினாள் நிவாசினி.

 

அவளின் இந்த மின்னலான பார்வையும் பரவசமான பேச்சையும் கேட்டு அவளை ஆராயும் பார்வை பார்த்த பவானி, “யாரடி சொல்ற? எவங்க குரல் இதுனு சொல்ற?” எனக் கேட்டாள்.

 

“நம்ம காலைல பார்த்தோமேடி! என்னை மடியில தாங்கிக்கிட்டாரே அவரோட

குரல் தான்டி இது” நிவாசினி கூறவும்,

 

“அவரோட குரல்னு எப்படிச் சொல்ற?” எனக் கேட்ட பவானி, மீண்டுமாய் நித்திலன் என அவன் தன் பெயரை உரைத்ததை அந்தப் பண்பலை அலைவரிசையில் கேட்டவளுக்கு அங்கு அவனின் நண்பன் அவனை நித்தி என அழைத்தது நினைவிற்கு வர, ‘ஹோ அவங்க ஃப்ரண்ட் அவங்களைக் கூப்பிட்டத வச்சி சொல்றாளோ’ என எண்ணியவாறு கேட்டாள்.

 

“இல்லடி அவங்க ஃப்ரண்ட் அவங்கள என்னனு கூப்ட்டாங்கனுலாம் எனக்கு ஞாபகம் இல்ல! ஆனா இது அவங்க குரல் தான்” சத்தியம் செய்யும் விதமாய் அவள் அடித்துக் கூற, பவானியின் ஆராய்ந்த பார்வை ஆச்சரிய பார்வையாய் மாறியது.

 

ஏனெனில் எவரையும் இரண்டு மூன்று தடவைக்கு மேல் பார்த்தால் தான் அவர்களின் முகத்தை ஞாபகம் வைத்திருப்பாள் நிவாசினி. ஆனால் இன்றோ அவனின் குரல் வைத்தே அது நித்திலன் தான் என அடித்துக் கூறுகிறாளே இவளென ஆச்சரியப் பார்வை பார்த்தவள்,

 

“ஏன்டி அவங்க ஒன்னும் பார்த்ததும் அட்ராக்ட் ஆகுற அளவுக்கு ஹேண்ட்சம்லாம் இல்லயே? முன்னாடி தலை முடி இல்லாம வழுக்கை வரதுக்கான அறிகுறியோட முப்பது வயசுக்கு மேல இருக்கும்னு சொல்ற அளவுக்கான முதிர்ச்சியோட தானே அவரோட தோற்றம் இருந்தது! அப்புறம் எப்படி அவரை உனக்கு இவ்ளோ ஞாபகம் இருக்கு” நிவாசினியை சீண்டும் விதமாய் கேட்டாள்.

 

“ம்ப்ச் பவா என்ன பேச்சு இது?” அவளைக் கண்டிக்கும் விதமாய்க் கூறினாள் நிவாசினி.

 

அவனின் தோற்றத்தை பவானி இவ்விதமாய்க் கூறியது பிடிக்கவில்லை அவளுக்கு.

 

“ஆனா எனக்கு அவர் பேசின வார்த்தைகள் தான் ஞாபகம் இருக்கு பவா! உன்கிட்ட அவர் நிவாஸ்னு என்னைக் கூப்பிடாதீங்கனு சொன்னது, காலைல சாப்பிடலையானு அவர் அக்கறையா கேட்டதுனு அந்தப் பரிவான பார்வையும் அக்கறையான பேச்சும் தான்டி ஞாபகம் இருக்கு! மத்தபடி உருவமெல்லாம் ஒன்னும் எனக்குப் பெரிசா படலை” எனக் கூறிக் கொண்டே வந்தவளுக்கு அப்பொழுது தான்,

 

தான் கனவில் கண்ட அந்த ஆடவனுக்குத் தலையில் அடர்த்தியாய் கேசம் இருந்ததே என்ற நினைவு வர, கனவில் கண்ட முகத்தினை அவள் நினைவிற்குக் கொண்டு வர முயல, அது காலையில் அவள் கண்ட நித்திலனின் முகமாய் ஆனால் தலையில் முடியுடன் இருந்தது போல் தோன்ற, தான் கண்ட கனவிற்கான பயன் என்னவென அவளுக்கு விளங்கவேயில்லை.

 

குழப்பமான மனநிலையில் அவள் யோசித்திருக்க, இவர்களின் பேச்சினூடே நித்திலனின் அந்நிகழ்ச்சி நிறைவுக்கு வந்திருந்தது.

 

“இந்த நித்தில நினைவுகள் நிகழ்ச்சியில தினமும் ஒரு தலைப்புல நீங்க உங்கள் நினைவுகளை அலைபேசி வாயிலாகப் பகிர்ந்துட்டு வர்றீங்க இல்லயா! வழக்கம் போல நிகழ்ச்சியின் இறுதி பகுதியாய் அந்தத் தலைப்புடனான என்னோட நினைவுகளையும் இன்னிக்கு நான் பகிர்ந்துக்கப் போறேன்” என்ற நித்திலனின் பேச்சு இவ்விருவரையும் அந்நிகழ்ச்சியில் அவர்களின் கவனத்தை ஈர்க்க, அவனின் பேச்சை கவனிக்கலானர்.

 

“இன்னியோட தலைப்பு நம்ம வாழ்க்கைல எங்கயோ எப்பவோ, இவங்க நம்மளை போலவே யோசிக்கிறாங்களேனு யாரையாவது ஒருத்தரையாவது அப்படி நாம வாழ்க்கைல மீட் செய்யும் போது நினைச்சிருப்போம்ல! அப்படி நீங்க மீட் பண்ண ஆளை பத்தின நினைவுகளைத் தான் பகிர்ந்துக்கச் சொல்லியிருந்தேன். நிறையப் பேரு நிறையச் சுவாரசியமான நினைவுகளைப் பகிர்ந்துக்கிட்டீங்க”

 

“நான் என் நினைவுகள்ல சொல்ல போறது இன்னிக்கு காலைல நான் மீட் செஞ்ச ஒருத்தங்களைப் பத்தி தான்” நித்திலன் கூறிய நொடி,

பவானி மற்றும் நிவாசினியின் பார்வைகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன.

 

“என் பெயரைச் சுருக்கி நித்தினு கூப்பிடுறது எனக்குப் பிடிக்காது. அது போல அவங்களுக்கும் நிவாஸ்னு அவங்கப் பெயரைக் கூப்பிடுறது பிடிக்காதுனு சொன்னது என்னை ரொம்பவே கவர்ந்தது. வாவ் என்னைப் போல் ஒருவள்னு தோணுச்சு எனக்கு! என்னோட கெஸ்ல அவங்க பேரு நிவாசினியா தான் இருக்கனும். அந்த நிவாசினி தான் இன்னிக்கு என்னோட நினைவுகளில் இருந்தாங்க” மென் குரலில் உணர்வாய் அவன் கூறியிருக்க,

 

இங்கு நிவாசினிக்கு அவன் அவளருகில் அமர்ந்து கைப் பிடித்து, “உன் நினைவாகவே நான் இருக்கிறேன்” எனக் கூறியது போன்றதொரு உணர்வு தோன்ற, அடி வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் குறுகுறுப்பை உணர்ந்தாள் அவள்.

 

அவனின் கூற்றில் பவானியோ, “என்னடி நடக்குது இங்க?” என்ற வகைப் பாவனையில் கண்களை உருட்டி கொண்டு நிவாசினியைப் பார்த்தாள்.

 

அங்கு நித்திலனோ நிகழ்ச்சியின் நிறைவு பாடலை நிவாசினிக்கு சமர்ப்பிப்பதாய் உரைத்து சென்று விட்டான்.

 

இருவருமே ஆர்வமாய் என்ன பாடல் போடப் போகிறானென அவளின் கைப்பேசியின் அருகேயே வந்திருக்க, அவன் போட்டதோ அவளின் நலம் அறிய எண்ணிய பாடல் தான்.

 

நலம் நலம் அறிய ஆவல்

உன் நலம் நலம் அறிய ஆவல்

 

இப்பாடலை அவள் காலை மயங்கி விழுந்ததை விசாரிக்கும் விதமாய் அவன் போட்டிருக்கிறான் என்று புரிந்தது அவர்களுக்கு.

 

வேறு ஏதோ காதல் பாடலை எதிர்பார்த்திருந்தவளுக்கு இப்பாடல் வயிற்றில் பறந்த பட்டாம்பூச்சி சிறகை ஒடித்து வயிற்றைப் பதம் பார்த்த உணர்வை அளித்தது நிவாசினிக்கு.

 

சரியாய் அந்நேரம் மின்சாரமும் வந்திருக்க, “சரிடி தூங்குவோம்” எனக் கூறி முகத்தை முழுவதுமாய் மூடி படுத்து விட்டாள் நிவாசினி.

 

“ம்ஹூம் இங்க நடக்கிறது எதுவும் எனக்குச் சரியாபடலை” எனக் கூறிக் கொண்டே படுத்தாள் பவானி.

 

முகத்தை மூடியிருந்த நிவாசினியின் முகம் வாடிப் போயிருக்க, அச்சமயம் அவன் கையிலிருந்த நிநி டாட்டூ நினைவுக்கு வர,

 

‘ஒரு நி நித்திலன்.. அப்ப இன்னொரு நி? அது யாரு? ஒரு வேளை அவங்களுக்குக் கல்யாணம் ஆகிருக்குமோ?’ எண்ணிய நொடியில் அந்த உணர்வைத் தாங்க முடியா நிலையில், அவளை மீறி அவளின் கண்களில் கண்ணீர் வழிய உறங்கிப் போனாள் நிவாசினி.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்