
அத்தியாயம் 17
வீட்டிற்குள் அடி எடுத்து வைத்த மகனையும் மருமகளையும் பார்த்த ராஜா, “என்னடா, மாமியார் வீடு விட்டுடுச்சா? உங்க இஷ்டத்துக்குக் கல்யாணத்தை முடிவு பண்ணுறீங்க, பொண்ணை மாத்துறீங்கனு பேசிட்டு இருந்த. இப்ப என்னடானா ராத்திரி ஒன்பது மணி வரைக்கும் அங்கேயே இருந்துட்டு வர்ற.?”
மாமனாரின் சொற்களில் நிகழ்வுக்கு மீண்ட கனி, அவரை ஒருமுறை பார்த்துவிட்டு, அறையை நோக்கி நடக்க, அவளைப் பார்வையால் தந்தைக்குச் சுட்டிக் காட்டினான் நவன்.
ராஜா கையை அசைத்து என்னவென்று வினவ, “உங்க மருமக விட்ட கண்ணீரால ஒரு கர்ச்சீப் முழுசா நனைஞ்சு போச்சு.” என்றபடி அருகே சென்று அமர்ந்தான்.
“என்னாச்சு.? நேத்து சம்பந்தி வீட்டாளுங்க கிளம்பிப் போகும் போது நல்லாதான இருந்தா.?”
“அவளுக்கு மேரேஜோட சீரியஸ்நெஸ் நேத்துத் தெரியல அப்பா. இன்னைக்கு அது புரிய ஆரம்பிச்சிருக்குனு நினைக்கிறேன். அதான் எமோஷனல் ஆகிட்டா.”
“சரி, போய் பேசு மருமகக்கிட்ட.”
“என்னனு பேச?”
“என்னடா என்கிட்ட கேட்கிற.? நீ தான அந்தப் பிள்ளைக்குப் புருஷன்?”
“அப்பா.?” எனும் பொழுதே, “என்ன ரெண்டு பேரும் திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்களா? உங்க பஞ்சாயத்து என்னைக்கு தான் ஓயுமோ?” என்றபடி வந்தார் அம்பிகை.
“பஞ்சாயத்து எல்லாம் எதுவும் இல்லமா. மருமக கிளம்பும் போது அழுதிடுச்சாம். அதான் பேசிட்டு இருக்கோம்!” என ராஜா விபரம் உரைக்க, “சாப்பிட்டீங்களா நவநீ.?” என்று மகனைப் பார்த்தார் அன்னையானவர்.
“ம்ம்.. சாப்பிட்டோம்மா.”
“சரி, கொஞ்சம் பால் தர்றேன். அவளைக் குடிக்கச் சொல்லிட்டு தூங்க வை. ஒரு ரெண்டு நாளைக்கு அப்படித்தான் இருக்கும். அப்புறம் தானா சரி ஆகிடுவா.”
“ஆனா அம்மா.?”
“நானும் இதை எல்லாம் அனுபவிச்சு வந்தவ தாண்டா.” என்றிட, ஒரு பெருமூச்சு விட்டு எழுந்து சென்றான் நவநீதன்.
அறைக்குள் நுழைய, தனது உடைமைகளுக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தாள் அவள்.
“கனி..”
கணவனது அழைப்பில் திரும்ப, “என்ன செய்யிற?”
“சேலையோட படுக்க முடியாதுல? நைட்டி தேடுறேன்.”
முதல் தினத்தைப் போலவே அவன் தனது டீசர்ட் ஒன்றை எடுக்க, “ஏங்க.?”
“ம்ம்..”
“காலையில, என்கூட வர்றியா? இங்க இருக்கியானு கேட்டீங்க இல்ல.?”
நவன் கேள்வியாய் பார்க்க, “நான் அத்தை மாமாக்கூட இருக்கட்டுமா.? இங்கனா, நினைச்ச நேரம் சித்தி செல்வாவை எல்லாம் பார்க்கலாம். சென்னைக்கு, உங்கக்கூட வந்துட்டா அது முடியாதுல?”
“உனக்கு, என்கூட வர இஷ்டம் இல்லையா கனி?”
“அச்சோ அப்படி இல்ல.”
“அப்புறம் வேற எப்படி?”
“எங்க இருந்தாலும் ஒன்னு தானங்க?”
“நான் காலையிலேயே ரெண்டும் வேற வேறனு சொன்னேன். ஞாபகம் இருக்கா.?”
அவளின் தலை அனிச்சையாய் ‘ஆம்’ என்பது போல் அசைந்திட, “நைட்டி வேணாம், என்னோட சட்டையே போட்டுக்கோ!” என்றவன் கையில் இருந்ததை மீண்டும் அலமாரிக்குள் வைத்து விட்டு, அதற்கு மாறாய் முன்பக்கம் பட்டன் வைத்த சட்டையை எடுத்துத் தந்தான்.
அவள் அதனை வாங்கிட, “நவநீ..” என அறையின் வாயிலில் அம்பிகையின் குரல் கேட்டது.
“டிரஸை சேஞ்ச் பண்ணு. இதோ வந்திடுறேன்!” என்றுவிட்டு வெளியேறியவன், அடுத்த அரை நிமிடத்தில் பால் டம்ளருடன் உள்ளே வந்தான்.
புடவையைப் பாதி கழட்டிய நிலையில், “என்ன திடீர்னு உள்ள வந்துட்டீங்க?” என மீண்டும் தன்மீது போர்த்திக் கொண்டாள் கனி.
மெலிதாய் சிரித்தவன், “அதுக்காக வெளியவா நிக்க முடியும்.? நேத்து, நான் இருக்கும் போது தான மாத்துன? இன்னைக்கு என்னவாம்?”
“சரி, திரும்பி நில்லுங்க.”
அவளைச் சீண்டும் எண்ணம் இருந்தாலும், அதைச் செய்யாது திரும்பிக் கொண்டான்.
“அம்மா உனக்குத்தான் பால் கொடுத்து விட்டாங்க கனி. குடிச்சிடு.”
“உங்களுக்கு இல்லையா.?”
“நான் வேணாம்னு சொல்லிட்டேன்.”
“ஓ..” என்றவள் உடையை மாற்றுவதில் முனைப்பாகி விட்டாள்.
மூன்று நிமிடங்கள் கடந்திருக்க, “மாத்திட்டேங்க!” என உரைத்தவள் பாலையும் ஒரே மூச்சில் அருந்திவிட்டு, படுக்கையின் ஒரு ஓரத்தில் உடலைக் கிடத்தினாள்.
அவளைப் பார்த்தவாறே தனது சட்டையின் பொத்தான்களைக் கழட்டிய நவன், “என்ன மேடம், படுத்துட்டீங்க?”
அவனது மரியாதையான அழைப்பு வேறுபாடாய் தோன்றிட, “ஏங்க? எதுவும் வேலை இருக்கா.?” என்றபடி எழுந்து அமர்ந்தாள்.
“ஆமா.. ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணு!” எனக் குளியல் அறைக்குச் சென்றான்.
சிறிது நேரத்தில் வெளியே வந்தவனைப் பார்த்தவள், “குளிச்சீங்களா.?”
“ம்ம்..”
“நைட்டுலயா?”
“ஏன், நைட்ல குளிச்சா என்ன.?”
“சளி பிடிச்சுக்கும்.”
சின்னதாய்ச் சிரித்தவன், “நீயும் போய் குளி.”
“ஐயோ! நான் மாட்டேன்பா. தண்ணி சில்லுனு இருக்கும். எனக்கு ஒத்துக்காது.”
“என்கூட வர்றதுக்கும் இங்க இருக்கிறதுக்கும் என்ன வித்தியாசம்னு கேட்ட இல்ல? குளிச்சிட்டு வா, சொல்லுறேன்!” என்றவன் அவளின் உடைமைகளில் இருந்து உள்ளாடைகளை எடுத்து நீட்டினான்.
சட்டென்று கணவனது கரத்தில் இருந்து அதனைப் பறித்தவள், “என்ன இது, அசிங்கமா.?”
அடுத்த நொடி கனியின் கனியிதழ்களில் ஒற்றை விரலை வைத்துப் பேச்சை நிறுத்தியவன், “எதுவும் பேசக்கூடாது. பாத்ரூமுக்குப் போற. குளிக்கிற. என்னோட சர்ட்டையே போட்டுக்கோ. வெளிய வந்ததும், நீ அசிங்கம் சொன்னதுக்கும் சேர்த்து நான் பதில் தர்றேன்!” என்றிட, பாவையின் சுவாசம் சில நொடிகள் நின்று இயல்பிற்கு மீண்டது.
அவள் திகைத்து நிற்பதைப் பார்த்தவன், “என்னாச்சு.?”
“ஒன்னும் இல்ல!” என மொழிந்தவளின் நா தந்தி அடிக்க, “ரிலாக்ஸ். காலையில சீக்கிரமே குளிச்சிட்ட. பகல்ல எவ்வளவு வியர்த்து இருக்கும்? உடம்பு டயர்டா ஃபீல் ஆகும். அதான் குளிக்கச் சொல்லுறேன்!” என்று சமாதானம் உரைத்தான்.
தலையை அசைத்துவிட்டுச் சென்றவளின் மனம் கணவனது அச்சமாதானத்தை ஏற்க மறுத்து, உள்ளுக்குள் முணுமுணுத்த வண்ணமே இருந்தது.
இருந்தும் ‘நவன் சற்று கோபக்காரன்!’ என மனதில் பதிந்துவிட்டதால், தூங்கப் போகும் நேரத்தில் வீணாய் வாதம் செய்ய விரும்பாமல், நீராடிவிட்டு வந்தாள்.
“என்ன ஓகேவா உனக்கு? இல்ல, சளி பிடிச்சிடுச்சா.?”
“உடனே எப்படித் தெரியும்? அதெல்லாம் காலையில தான் உடம்புல வேலையைக் காட்டும்.”
“அழுமூஞ்சி கனி ஓடிட்டா போல.?”
அவள் கணவனை முறைத்து, “என்ன கிண்டலா.?”
“அழுது அழுது உன்னோட முகமே ஒரு மாதிரி ஆகிடுச்சுடி. அதான் குளிக்கச் சொன்னேன்.”
“ஓ.. அப்புறம் வேற ஏதோ சொன்னீங்களே?”
“நேத்து நான் உன்னைத் தூங்க சொன்னதுக்கு, நிஜமாவானு ஏன் கேட்ட.?”
“அது..” என அவள் தயக்கத்துடன் வேறுபுறம் பார்க்க, அருகே சென்று கைப்பற்றி அழைத்து வந்து படுக்கையில் அமர வைத்தான்.
“என்ன பதிலைக் காணோம்?”
அவள் அமைதி காக்க, பாவையின் தாடையில் கை வைத்து நிமிர்த்தினான் நவன்.
“வாயாடிப் பொண்ணு, ஏன் திடீர்னு அமைதி ஆகிட்டா.?”
“தாகமா இருக்கு. தண்ணி குடிச்சிட்டு வரவா.?” என அவள் ஒவ்வொரு சொல்லாய் மென்று உதிர்த்திட, தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தான்.
அவள் கேள்வியாய்ப் பார்க்க, அதற்கான விடையாய் “நான் எப்பவுமே நைட் டைம்ல பெட் பக்கத்துல தண்ணி வச்சுப்பேன்.” என்றான்.
இரு மிடறு நீரை அருந்தினாள் கனி.
“போதுமா?”
“போதும். நான் தூங்கட்டுமா?”
“என்ன அவசரம்?” என்றவன், தண்ணீர் பாட்டிலை மூடி மீண்டும் அதே இடத்தில் வைத்தான்.
“நீங்க தூங்கலயா.?” என உள்ளே போன குரலில் கேட்டிட, “என்னமோ இன்னைக்கு எனக்குத் தூக்கம் வரல.”
கனி எவ்வித எதிர்வினையும் செய்யாது அமைதியாய் இருக்க, “நீதான், நான் கேட்டதுக்குப் பதில் சொல்ல. நான், நீ கேட்டதுக்குப் பதில் சொல்லட்டுமா.?”
“என்ன பதில்.?”
“கண்ணை மூடு சொல்லுறேன்.”
அவன் சொல்வதைச் செய்வோமா வேண்டாமா என்று தனக்குள்ளயே சில நொடிகள் பட்டிமன்றம் நடத்திவிட்டு, பின்னர் இமைகளை மூடினாள் பாவை.
நீர் அருந்திய போது அவளின் இதழோரம் ஒட்டி வழிந்த ஒரு துளி நீரை விரலால் துடைத்தவன், அங்கிருந்து சற்றுத் தள்ளி கன்னத்தில் தன் இதழ்களைப் பதித்தான்.
முதல் முத்தம்.
இன்னதென்று சொல்ல இயலா உணர்வு. பாவையின் மூடிய இமைகளிற்குள் கருவிழிகள் அங்கும் இங்குமாய் மிதந்து உருண்டது. அதன் உரசலில் லேசாய் கண்ணீர் உற்பத்தியாகி உள்ளேயே நின்றது.
கணவனது எதிர்பாராத நெருக்கத்தால் உண்டான தேக அனலில் கனியின் தொண்டை வறண்டிட, எச்சில் விழுங்கி அதனைச் சரிசெய்ய முயன்றாள்.
ஆடவனின் நிலையோ வேறு விதமாய் இருந்தது. பார்த்து நான்கு தினங்கள். திருமணமாகிப் பழகிய இரு நாள்கள். அதுவும் முழுதாய் இல்லை. சரியாய் முதல் நாளின் காலை ஆறு மணியில் இருந்து, தற்போதான பத்தரை மணி வரை. மொத்தமாய் நாற்பதரை மணி நேரம்.
‘ஒரு பெண்ணிடம் ஆசை தோன்றுவதற்கும், மையல் கொள்வதற்கும் இந்த நேர இடைவெளி போதுமா?’ என்று தோன்றியது.
முதல் சந்திப்பிலேயே அவனுள் விதையாய் விழுந்த கனி, தற்போது உணர்வுகளாய் முளைவிடத் தொடங்கி இருந்தாள் என்பதே உண்மை.
அவ்வுணர்வுகள் மெல்ல மெல்ல ஆடவனிற்குள் இரசாயன மாற்றத்தை உண்டாக்கிட.. மனமும் மயங்கித்தான் போனது, பெண்ணவளின் மேற்பூச்சற்ற இயல்புகளில்.
காதல் என்றால் என்னவென்றே அறிந்திடாதவனிற்குள் சிறிது சிறிதாய் மோகத்தின் வழியே முத்தக் கவிதையில், காதல் அரங்கேறத் துவங்கியது.
கன்னத்தில் பதிந்த இதழ்கள் மெல்ல கீழ் இறங்கி, அவளின் கழுத்தில் பயணித்தன.
கணவனது அதரங்களின் வழியே தனது தேகத்தில் உமிழ்நீரின் அனலை உணர்ந்த கனி, “என்னங்க!” என அவனின் முகத்தில் கரம்பதித்து விலக்கினாள்.
அடுத்த நொடியே சட்டென்று அவளின் இமைகள் பிரிந்து உள்ளே தேங்கி இருந்த கண்ணீர் வழிந்திட, நவன் திகைத்தான்.
“ஏய், என்ன? உனக்குப் பிடிக்கலயா.?” என கன்னத்தைத் துடைத்து விட, அவனின் கைப்பற்றித் தடுத்து தனது பிடிக்குள் வைத்துக் கொண்டாள் கனி.
“ஸாரிமா. நீ தூங்குறதுனா தூங்கு!” என்று எழுந்தவனின் கை, அவளின் கரத்திற்குள் இருந்தது.
நவன் அப்படியே நிற்க, “இதுதான் பதிலா?” என்றாள்.
என்ன எதிர்வினை செய்வது என்று புரியாமல் விழித்தவன் ஒரு ஆசுவாச மூச்சை வெளிவிட்டு, “ஏன் அழுத.?”
“நான் எங்க அழுதேன்.?”
“இதுக்குப் பேர் என்ன.?” என அவளின் கண்களை சுட்டிக்காட்டி வினவ,
“தெரியல. தானா தண்ணி வந்திடுச்சு. உங்க மூச்சு வேற கொஞ்சம் சூடா இருந்துச்சா. அதான் ஒரு மாதிரி!” என்று முடிப்பதற்கு முன்னரே அவளிடம் இருந்த கரத்தை விடுத்து, மற்றொரு கையை பாவையினது தலையின் பின்பக்கம் பதித்து எழச் செய்து தன்னோடு அணைத்துக் கொண்டான் நவன்.
சிறிது நேர இடைவெளிவிட்டு, “நான் பயந்துட்டேன் தெரியுமா? உனக்கு என்னைப் பிடிக்கலயோனு.” என்றவனின் குரலில் லேசான நடுக்கம் இருந்தது.
அவனே தன்னுள் இப்படியான ஒரு போராட்டம் நடக்கும் என எதிர்பார்த்து இருக்கவில்லை.
முதலில் முடிவான திருமணத்தை எந்த மனநிலையில் ஏற்றானோ தெரியவில்லை. ஆனால், கனியை மனதிற்குப் பிடித்தே மணந்திருந்தான். அதைத் தற்போது தான், அவனே அறிந்து கொண்டான்.
அந்த அறிதல் ஆடவனின் உணர்வுகளைச் சோதனை செய்து பார்த்திட, இதய துடிப்பின் வேகம் நொடிப் பொழுதில் இரு மடங்காய் அதிகரித்து மனதில் இன்பத்தைக் கூட்டி, இனிமையாய் இம்சித்தது.

