Loading

அத்தியாயம் 13

 

கணவன் பேசுவதைக் கேட்டிருந்த கனி..‌ அவன் தன்பக்கம் திரும்பிப் பார்ப்பதை உணர்ந்து, நிமிர்ந்து நோக்கினாள்‌. பாவையானவள் சிந்தனையில் மூழ்கி இருப்பதை, லேசாய் சுருங்கிய இரே புருவங்களும் அறிவிப்பு செய்தனர்.

 

“என்ன.?” என்றான் ஆடவன்.

 

“அப்பா சொன்னாரு, மாமாவைப் பத்தி.”

 

“என்ன சொன்னாரு, என்னோட மாமனாரு?”

 

“ஏதோ கம்பெனி நஷ்டம் ஆகிடுச்சுனு.‌ ஆனா, எல்லாருக்கும் பணத்தைக் கொடுத்துட்டாங்கனு சொன்னாரு.”

 

“ஏதோ கம்பெனியா?” எனச் சிரித்தவன், “ஃபைனான்ஸ் செஞ்சிட்டு இருந்தாரு.”

 

“அப்படினா.?”

 

“ஃபைனான்ஸ்னா தெரியாதா?”

 

அவள்‌ மறுப்பாய்‌ தலை அசைக்க, “என்ன படிச்சிருக்க‌ நீ.?”

 

“டென்த்.”

 

“வாட்.?”

 

“ஏன்‌‌, இப்படி‌ அதிர்ச்சி‌ ஆகுறீங்க.?”

 

“மேல படிக்கலயா‌?”

 

“பாஸ் ஆனாதான பதினொன்னுக்குப் போக முடியும்?”

 

“பாஸ் பண்ணலயா நீ?”

 

“ம்ம்..”

 

“ஏன்.?”

 

“நாலு தடவை எழுதுனேன். ஒன்னும் வேலைக்கு ஆகல. இனி என்ன செஞ்சாலும் படிப்பு மண்டையில ஏறாதுனு சித்தி வேணாம்னு சொல்லிட்டாங்க.”

 

“ஓ காட்!” என அவன் தலையில் அடித்துக் கொள்ள, “என்னாச்சு?”

 

“டென்த் ஃபெயிலா நீ?”

 

“என்ன கிண்டலா?‌ மாமாக்கு எல்லாம் தெரியும். அப்பாவும் சித்தியும் சொல்லிட்டாங்க.”

 

“நல்ல மாமனாரு‌. நல்ல மருமக. அந்த மனுஷன் என்கிட்ட இது எதுவும் சொல்லல. அட்லீஸ்ட் ஒரு டிகிரியாவது முடிச்சிருப்பனு நினைச்சேன்.”

 

“இதுல என் தப்பு எதுவும் இல்ல, பார்த்துக்கோங்க.”

 

“முதல்லயே கேட்டு இருக்கணும்.‌ கேட்காதது என் தப்புதான்.”

 

“தப்பை உங்க மேல வச்சுக்கிட்டு, என்மேல பழி போடக் கூடாது சொல்லிட்டேன்.”

 

“நான் எங்க‌ உன்னை பழி சொன்னேன்?”

 

“இனிமேல் சொல்லிடக் கூடாதுல?”

 

“முன் கூட்டியே உஷார் ஆகிக்கிறியாக்கும்.?”

 

“அப்படியும் வச்சுக்கலாம்.”

 

“ஏய்‌ கனி, எனக்கொரு உண்மையைச் சொல்லு.”

 

அவள் கேள்வியாய்ப் பார்க்க, “நான் உன்னை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்ப‌ அமைதியான பொண்ணு மாதிரி இருந்த. ஆனா இப்ப சரிக்குச் சரி வாயடிக்கிற? என்ன விஷயம்.?”

 

“அப்ப, நீங்க யாரோ ஒருத்தர். முன்ன பின்ன தெரியாத ஆளுக்கிட்ட பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கு? ஆனா, இப்ப அப்படி இல்லையே? நமக்குத்தான் கல்யாணம் ஆகிடுச்சே?”

 

“ஓஹோ? அதான் இப்படி மூச்சு விடாம பேசுறியா.?”

 

“இல்ல, நான் பொதுவா அப்படிப் பேச மாட்டேன். சித்தி தேவை இல்லாம பேசக் கூடாதுனு சொல்லி இருக்காங்க.”

 

“ஓ! அப்ப என்கிட்ட மட்டும் எதுக்கு இந்தப் பேச்சு? என்னைப் பார்த்தா இளிச்சவாயன் மாதிரி தெரியிதா?”

 

“ஏங்க இப்படிச் சொல்லுறீங்க? அதெல்லாம் இல்ல.”

 

“அப்புறம் வேற என்ன.?”

 

“மாமா தான்.”

 

“யாரு, எங்க அப்பாவா.?”

 

அவள் ‘ஆம்’ என்பது போல் தலை அசைக்க, “அவரு என்ன சொன்னாரு.?”

 

“உங்களுக்கு நாக்கு நீளமாம். பட்டுப் பட்டுனு பேசுவீங்களாம். அவன் சொல்லுறதை எல்லாம் கேட்டுக்கிட்டு அமைதியா இருக்காத. அப்புறம் உன்னை ரொம்ப அதிகாரம் செய்ய ஆரம்பிச்சிடுவான்‌. உன்னோட சொல் எடுபடாம போயிடும். அதுனால எதுவா இருந்தாலும் சரி, ஆரம்பத்துல இருந்தே பயப்படாம அவன்கிட்டப் பேசு. திட்டுனா, உன்‌மேல தப்பு இருந்தா ஏத்துக்கோ. இல்லேனா, அவன் மேலதான் தப்புனு அழுத்திச் சொல்லிடுனு.. மாமா தான்.”

 

கண்கள் விரிய அவள் உரைத்ததைக் கேட்டு இருந்தவன், “எனக்கு வில்லன் வேற எங்கேயும் இல்ல. என்னைப் பெத்த மனுசனே போதும்‌. என்ன எல்லாம் சொல்லி வச்சிருக்காரு உன்கிட்ட.? ஆமா, இன்னைக்குத்தான கல்யாணம் ஆச்சு? இதெல்லாம் எப்பப் பேசுனீங்க.?”

 

“வெத்தலை பாக்கு மாத்துன அன்னைக்கு.”

 

“சென்னைக்குப் போயி, நம்ம தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கானே? அதெப்படி இருக்கலாம்னு, மருமகளை ரெடி பண்ணி இருக்காரா அந்த மனுஷன்?”

 

கனி சிரித்திட, “என்ன சிரிப்பு.?”

 

“மாமா, நல்லவரு. அப்படி எல்லாம் சொல்லாதீங்க!”

 

“அப்ப, நான் கெட்டவனா.?”

 

“அச்சச்சோ! நான் அப்படிச் சொல்லல.”

 

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கெட்டவனாவே இருனு சொன்ன மாதிரி எனக்கு ஞாபகம்.?”

 

அவள் நாக்கைக் கடித்துக் கொண்டு வேறுபுறம் பார்க்க‍, நவனின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

 

நான்கு நொடிகள் அமைதியில் கடந்திருக்க, “ஏங்க, நான் காலேஜ் போய் படிக்கலன்றது குறையா தெரியிதா உங்களுக்கு.?”

 

“படிக்கலன்றது குறை இல்ல கனி. படிப்புங்கிறது நிறையோட எண்ணிக்கையில ஒன்னு கூடுன மாதிரி.‌ அவ்வளவு தான்.”

 

“அப்ப, அதுனால உங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லேல.?”

 

“இல்ல. இதைப் பத்தி எல்லாம் யோசிக்காத, என்ன சரியா.?”

 

“ம்ம்..”

 

“இது மழைக்காலம். எப்ப சாரல் அடிக்கும்னே சொல்ல முடியாது. நடுராத்திரியில குளிர ஆரம்பிச்சிடும்‌. அதுனால பெட்லயே படு. எல்லாத்துக்கும் முதல்லனு ஒன்னு இருக்கும்ல? பழகிக்கோ.”

 

தலை அசைத்தவள், “நீங்க எங்க படுப்பீங்க?”

 

“கட்டில் பெருசா தான இருக்கு? நான் அந்தப் பக்கம் படுத்துக்கிறேன்‌. உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லேல?”

 

“நான் எப்பவும் தம்பிக் கூடதான் தூங்குவேன்‌. அதுனால எனக்கு ஒன்னும் இல்ல. உங்களுக்குத்தான் எப்படி இருக்குமோனு.”

 

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உனக்குச் சொன்னது தான், எனக்கும். இன்னைக்கு உன்கூட ரூமை முதல் தடவையா சேர் பண்ணிக்கிறேன். இனி, இதுதான லைஃப்?”

 

மெலிதாய்ப் புன்னகைத்தவள் படுத்துக் கொள்ள, “உருண்டு கீழ எதுவும் விழுந்திட மாட்டியே.?”

 

“தெரியலயே? எனக்கு இதுதான முதல் தடவை.?”

 

“சரி, நான் பார்த்துக்கிறேன்‌. நீ தூங்கு!” என்றவன் தலை அருகே அமர்ந்து கொள்ள, படுக்கையில் உடலை சாய்த்து இமைகளை மூடினாள் கனி.

 

அதுவரை தள்ளி வைத்திருந்த கைப்பேசியை எடுத்துப் பார்த்தான் நவன்.

 

அறிந்தவர், தெரிந்தவர், உடன் பணிபுரிபவர்கள்‌ எனப் புலனத்தில் கணக்கற்ற திருமண வாழ்த்து செய்தி. வரிசையாய் அனைவருக்கும் நன்றி நவில்ந்து விட்டு, இறுதியின் தோழியான ரம்யாவின் செய்தியைத் திறந்தான்.

 

“ஹாய்டா.. கங்கிராட்ஸ் புது மாப்பிள்ள.‌ மேரேஜ் எப்படி நடந்துச்சு? புது பொண்டாட்டி, எப்படிப் பழகுறா? நீ இங்க இருந்து கிளம்புற வரைக்கும், அவக்கிட்ட எதுவும் பேசல. ஊருக்கு போன பின்னாடியாவது பேசுனியா? என்ன சொன்னா, ஓகேவா? இல்ல, உன்மேல கோபப் பட்டாளா? அப்படியே அவ எதுவும் கோபமா சொன்னாலும், பதிலுக்கு பட்டுனு பேசாத. கொஞ்சம் பொறுமையா ஹேண்டில் பண்ணு. 

 

மேரேஜ் ஃபங்ஷன்ல பிஸியா இருப்ப. அதான் உனக்கு ஃபோன் போடல. ஃப்ரீ ஆனதும் ரிப்ளை பண்ணு, ஓகேவா? அப்புறம் உனக்கொரு சர்ப்ரைஸ். சென்னைக்கு வந்ததும் சொல்லுறேன். பாய்டா..” எனப் பேசி பதிவு செய்து, குரல் செய்தியாய் அனுப்பி இருந்தாள்.

 

“எல்லாம் ஓகே. மேரேஜ் ஃபென்டாஸ்டிக்கா நடந்து முடிஞ்சிடுச்சு. நானும் ஹேப்பி. என் வொஃய்பும், ஸுவீட் தான். ஹாஸ்பிடல் போனியா? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று அவளிற்குப் பதில் செய்தியை அனுப்பிவிட்டு‍, அண்மையில் படுத்திருந்த மனைவியைப் பார்த்தான் நவன்.

 

சீரான இடைவெளியில் வெளிவந்த சுவாசம், அவள் உறங்கியதை உறுதி செய்தது. மெலிதான புன்னகையுடன், மனைவியைப் பார்க்கும் படியாய் மறுபுறம் சென்று படுத்தான்.

 

மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.

 

அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்களிடம் வேலை சம்பந்தமாய் மணிக்கணக்கில் பேசியதைத் தவிர, தாய் தந்தை உட்பட வேறு எவரிடமும் இவ்வளவு நேரம் உரையாடியது இல்லை அவன். 

 

ராஜாவும் அவனும் அவ்வப்போது பேசிக் கொள்வர் தான். ஆனால் அடுத்த ஐந்தாவது நிமிடமே அவர்களிற்குள் வாக்குவாதம் வந்துவிடும். அன்னை அம்பிகையுடன் உரையாடும் பொழுதும், தந்தையைப் பற்றிய பேச்சு வந்து இதுவே தான் நிகழும்.

 

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாய் அவனது வாழ்வில் நடந்து வந்த ஒரு நிகழ்வை, கரம் பற்றிய முதல்நாளே மாற்றி இருந்தாள் கனி.

 

இருவரும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாய் பேசி இருந்தனர். அதிலும் பெரிதாய் எவ்வித வாக்குவாதமும் நிகழவில்லை. நடந்த சிறிய வாதங்களும் கூட, மேற்படிச் செல்லாமல் பேச்சில் வழிமாறிக் கடந்து இருந்தது.

 

ரம்யாவைக் கடந்து.. நவனிற்கு ஒரு பெண்ணிடம் இவ்வளவு நேரம் உரையாடுவதும்‌, அவளும் சளைக்காமல் மறுமொழி தருவதும் இதுதான் முதல் அனுபவம். பாவையின் பெயரைப் போலவே, அவளுடனான அனுபவமும் திகட்டாமல் தித்தித்தது.

 

ஒரு பெருமூச்சு விட்டுக் கண்களை மூடியவனின் இதழ்களில், புன்னகை அப்படியே உறைந்தது.

 

அசையாமல் பதுமை போல் அவன் படுத்திருக்க, அருகே இருந்தவளோ குழந்தையைப் போல் சுற்றி வந்து கொண்டிருந்தாள்.‌ அவள் படுக்கையில் இருந்து கீழே விழாமல் கவனித்துக் கொள்வதே ஆடவனிற்கு இரவு நேரப் பணியாய் போனது.

 

காலையில் விழித்த போது, போர்வைக்குள் சுருண்டிருந்தாள் கனி. அப்போர்வை ஆடவனின் கரங்களிற்குள் இருந்தது.

 

‘ஐயோ! இதென்ன இப்படிப் படுத்திருக்கோம்?’ என நவனிடம் இருந்து போர்வையை விலக்கிட முயல, “ரௌண்ட் அடிக்காம படுடி!” என்று தூக்கத்தில் உரைத்தபடி இன்னும் இறுக்கமாய் பற்றிக் கொண்டான்.

 

‘டி யா? பொண்டாட்டியை டி போட்டுப் பேசுவாங்களா இந்த வீட்டுல? ஆனா.. அப்பா, சித்தியை ஒருநாளும் அப்படிப் பேசுனது இல்லயே.?’ எனச் சிந்தனை செல்ல, அறைக்கு வெளியில் கேட்ட கதவைத் தட்டும் சத்தம் தற்காலிகமாய் அதற்குத் தடை விதித்தது.

 

‘கணவன் அசையாமல் தான் எழ முடியாது!’ என உணர்ந்து கொண்டவள், “ஏங்க, எழுந்திரிங்க!” என்று அவனை எழுப்பும் முயற்சியில் இறங்கினாள்.

 

நான்கைந்து முறைக்கும் மேல் தோளில் தட்டி எழுப்பிய பின்னர், “என்னடி, உனக்கு இப்பப் பிரச்சனை?‌” என வினவினான் இமைகளைப் பிரிக்காமலேயே.

 

“என்ன பிரச்சனையா? நீங்கதான் இப்ப பிரச்சனை. விடுங்க என்னை முதல்ல. இப்படி கூடைக்குள்ள கோழியை அமுக்குற மாதிரி போர்வைக்குள்ள சுருட்டிப் பிடிச்சு வச்சிருந்தா எப்படி எழுந்திரிக்கிறதாம்.?” என்று செவிக்குள் சென்று உரைக்க, அவளின் நாசி மற்றும் இதழ்களின் வழியே வந்த சூடான மூச்சும், குளிர்ந்த உமிழ்நீர் தெறிப்புகளும் நவனின் காதைக் கூசச் செய்தன.

 

அக்கூச்சம், பாவையின் முயற்சியை வெற்றிப் பெறச் செய்திட, “என்ன செய்யிற.?” என கண்களைத் திறந்து வினவினான்.

 

“அதை நான் கேட்கணும். என்னை மனுசினு நினைச்சீங்களா? இல்ல வேற எதுவுமா? ஆளைப் பாரு. விடுங்க முதல்ல.”

 

நவனிற்குச் சிரிப்பு வர, கை அணைப்பிற்குள் இருந்தவளை விடுவித்தான்.

 

“ஸாரி! பெட்டுல இருந்து கீழ விழப் போன. அதான் பிடிச்சு வச்சேன்.”

 

“அதுசரி! உங்களுக்கு, என் தம்பியே தேவல போல. அவன்தான் கங்காரு குட்டி மாதிரி என்னைக் கவ்விக்கிட்டுப் படுப்பான்‌. நீங்க என்னனா, கரும்பு மிஷினுக்குள்ள சிக்குன கரும்பு மாதிரி என்னை நசுக்கி வச்சிருக்கீங்க.”

 

சட்டென்று எழுந்து அமர்ந்தவன், “வலிக்கிதா என்ன.?”

 

“மூச்சு முட்டிடுச்சு!”

 

“இப்ப, ஓகே தான நீ?”

 

“ம்ம்.. கதவைத் தட்டுற சத்தம் கேட்டுச்சு.”

 

“போயி என்னனு கேளு‌. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன். டிஸ்டர்ப் பண்ணாத!” என்றுவிட்டு அவன் படுக்கையில் கவிழ்ந்து கொள்ள, எழுந்து சென்றாள் கனி.

 

கதவைத் திறக்க, வாயிலில் நின்று இருந்தார் செல்வாம்பிகை.

 

அவள் அணிந்திருந்த உடையையும், நவனின் பிடிக்குள் சிக்கியதால் கலைந்து போன குழலையும் கண்டவரின் கற்பனை தானாகவே கதைகள் எழுதிட, பாவையை நீராடித் தயாராகும் படி உரைத்துவிட்டுச் சென்றார்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்