Loading

அத்தியாயம் 15

 

மறுவீடு வைபவத்திற்காக கனியின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர் ராஜாவின் குடும்பத்தார்.

மணமக்களுடன் சில உறவினர்களையும் முன்னரே அனுப்பி விட்டு, மற்றவர்களுடன் மூத்த தம்பதிகள் அரை மணி நேர இடைவெளியில் கிளம்பினர்.

அருகே அமர்ந்து இருந்த கணவனை அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடியே வந்தாள் பாவை.

அதைக் கவனித்த நவன் காதோரம் குனிந்து, “என்ன?” என்றிட, “கோபமா‌ உங்களுக்கு?”

“ஏன் அப்படிக் கேட்கிற?”

“இல்ல. மாமா, நம்ம கல்யாணம் முடிவானதைப் பத்திப் பேசுனதும் உங்க மருமகளை நீங்களே வச்சுக்கோங்கனு சொல்லீட்டுப் போனீங்க. அதான் கோபமானு..” என அவள் பாதியில் நிறுத்திட, “கோபம் தான்னு சொன்னா என்ன செய்யிவ?”

திருதிருவென விழித்தவள், “தெரியல.”

மெலிதாய்ச் சிரித்தவன், “கோபம்னு இல்ல. ஆனா கொஞ்சம் வருத்தம். அப்பா சொன்னது உண்மை தான? உங்க அப்பாக்கு என்னைப் பத்தித் தெரிஞ்சிருக்க அவ்வளவா வாய்ப்பு இல்ல. அப்பா மேல இருந்த மதிப்புக்காகத் தான உன்னைக் கட்டிக் கொடுத்திருக்காரு?”

“ஏன் வருத்தம்?”

“என்மேல அந்த நம்பிக்கை இல்லேல அவருக்கு?”

“அப்பாக்கு உங்களைச் சரியா தெரியாதுனு நீங்கதான சொன்னீங்க? இனிமேல் தெரிஞ்சதும் நம்பிக்கை வந்திடும்.”

“அதுசரி, உனக்கு மட்டும் என்னைப் பத்தித் தெரியுமாக்கும்? என்னமோ எல்லாம் தெரிஞ்ச மாதிரி எனக்கு சமாதானம் சொல்லிக்கிட்டு இருக்க?”

“கொஞ்சமா தெரியும்.”

“ஓ, பாருடா. என்ன தெரியும்?”

“நல்லா படிச்சிருக்கீங்க. சென்னையில பெரிய கம்பெனில வேலை பார்க்கிறீங்க. நிறைய சம்பாதிக்கிறீங்க. கோபம் அதிகமா வரும். அதுனால யோசிக்காம பேசிடுவீங்க. அதேபோல பாசமும் அதிகம்.”

“பாசமா.?” என அவன் இடைநுழைந்து வினவ, “ஆமா.”

“அப்படி என்ன பாசத்தைப் பார்த்த என்கிட்ட?”

“மாமாக்கிட்ட அவ்வளவு தூரத்துக்குப் பேசுனாலும், கல்யாண விஷயத்துல அவர் பார்த்த பொண்ணைத் தான கட்டிக்க சம்மதம் சொன்னீங்க? அது, அவரு மேல இருக்கிற மரியாதைக்காகவும் பாசத்துக்காகவும் தான?”

“அது அப்படி இல்ல. நானா ஒரு பொண்ணைப் பார்த்துப் பேசிப் பழகி அப்புறம் புரிஞ்சுக்கிட்டுக் கல்யாணம் செஞ்சுக்கலாமா வேண்டாமானு யோசிச்சு முடிவு எடுக்குற அளவுக்கு எனக்குப் பொறுமை இல்ல. அப்புறம் இதுக்கு ஏகப்பட்ட டைம் ஸ்பென் பண்ணணும். மூளை வேற ‌ஓவர் திங்கிங்க் செய்ய ஆரம்பிச்சிடும். அந்த திங்கிங் எஃபெர்ட்டை வொர்க்ல போட்டா, பிரமோஷனாவது கிடைக்கும். அதான்‌..”

“பொய் சொல்லுறீங்க.”

“ஹேய் நிஜமா.”

அவள் முகம் சட்டென்று வாடிவிட, “என்னை, அத்தை மாமாக்கிட்ட தான் விட்டுட்டுப் போகப் போறீங்களா?”

“நீ என்ன நினைக்கிற.?”

“நான் ஒன்னும் நினைக்கல. நீங்க தான் காலையில மாமாக்கிட்ட அப்படிச் சொன்னீங்க.”

“இன்னும் முடிவெடுக்கல அதைப்பத்தி. நீ சொல்லு, என்கூட வர்றியா? இல்ல, இங்க இருக்கியா.?”

“எனக்கு எங்க இருந்தாலும் ஒன்னுதான்.”

புரியாமல் பார்த்தவன், “அது எப்படி, இரண்டும் ஒன்னாகும்.?”

“நீங்களும் எனக்குப் புதுசு, அத்தை மாமாவும் புதுசு. இங்க இருக்கிற வீடும், சென்னைக்குப் போனா அங்க இருக்கிறதும், ரெண்டுமே பழக்கம் இல்லாத இடம் தான.?”

அவளின் பேச்சுத் தொனியில் அவனிற்குச் சிரிப்பு வர, “ஹேய், ரெண்டும் ஒன்னாக முடியாது. வேற வேற.”

“அதெப்படி.?”

“நான் சொல்லுறேன்.” என்று வெளிப் பக்கம் பார்த்திட, ஆடவனின் விளக்கத்தை எதிர்பார்த்தவளிற்கு தொடர்ந்த ஏழு நொடிகளின் மௌனம் ஒருவித பதற்றத்தைக் கொடுத்தது.

“என்ன சொல்லுறேன்னு, அமைதி ஆகிட்டீங்க?” என அவளே பேச்சை முன்னெடுக்க, உட்புறம் திரும்பினான் நவன்.

“இப்ப, உடனே சொல்ல முடியாது. அதுக்கு நேரம் காலம் எல்லாம் இருக்கு.”

“ஓ.. சரி.”

“ஓகே,‌ நீ‌ ஏன் டல் ஆகிட்ட.?”

“அது..” என அவள் தயக்கத்துடன் பார்க்க, “என்ன.?”

“உங்க.. உங்களுக்கு என்னைப் பிடிக்கல தான.?”

திகைப்புடன் அவளின் முகத்தை நோக்கியவன், “யார் சொன்னா அப்படி.?”

“யாரும் சொல்லல, எனக்கே தெரியும்.”

அந்நொடியானது ஒருவித இனிமையையும் அத்தோடு சுவாரஸ்யத்தையும் கூடுதலாய் தந்திட, “எப்படி, இப்படி ஒரு முடிவுக்கு வந்த நீ.?”

“நீங்க காலேஜ் படிச்ச பொண்ணை எதிர்பார்த்தீங்க. நான் ஸ்கூலே முடிக்கல. அப்புறம் என்னை அமைதியான பொண்ணுனு நினைச்சீங்க. ஆனா, நான் கொஞ்சம் அதிகமா பேசுறேன். அப்ப, உங்களுக்கு என்னைப் பிடிக்காது தான.?”

“ஓ.. உனக்கு சேரி வாங்கித் தர்றேன்னு சொல்லி இருந்தேன். அப்படியே அதுக்கும் என்ன அர்த்தம்னு சொல்லீடு!”

கனி புரியாமல் திருதிருவென விழிக்க, அடுத்த நான்காவது நிமிடம் அவளின் வீட்டை வந்தடைந்து இருந்தனர்.

மாடியில் இருந்து இறங்கி கீழே காத்திருந்தனர் திருப்பதியும் காளீஸ்வரியும். ஆரத்தி எடுத்து மணமக்களை வரவேற்க, பாவையின் கண்கள் தானாய் கீழ் வீட்டின் பக்கம் சென்றது.

நவனோ முன்னர் நடந்து முடிந்த ஒவ்வாத நிகழ்விற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல், “அங்க என்ன பார்வை? வா.” என அவளின் கைப்பற்றி அழைத்துச் சென்றான்.

பாதி‌ படிகளிற்கு மேல் பாதை குறுகியதாய் மாறிவிட, இருவரும் ஒன்றாய் இணைந்து செல்ல முடியாத நிலை. கனியைத் தனக்கு முன்னால் செல்லும் படியாய் நகர்த்தி விட்டு, சற்று பின்தங்கி கொண்டான் ஆடவன்.

அவள் அப்படியே நின்று பின்னால் திரும்பிப் பார்த்திட, “முன்னாடி போ. நான் இப்ப தான் உங்க வீட்டுக்கு ஃபர்ஸ்ட் டைம் வர்றேன். நீதான என்னைக் கூட்டிட்டுப் போகணும்?”

மறுத்துத் தலை அசைத்தவள், “இது இரண்டாவது தடவை. ஏற்கனவே நான் உங்களை இங்க கூட்டிட்டு வந்து இருக்கேன்.” எனக் கீழே பார்த்தாள்.

நவனும் அத்திசையில் திரும்பிட, கிருஷ்ணர் கோவிலின் வாயில் தெரிந்தது.

“எஸ்!” என்றுரைத்து அவன் புன்னகைத்திட, கனிக்கோ அவ்விடத்தில் நின்று சஞ்சனாவுடனான திருமணம் நின்றதை பற்றி அவனது பெற்றோரிடம் பேசிச் சென்றது நினைவிற்கு வந்தது.

அன்றைய தினம், “வெளிய என்ன‌ வேடிக்கை வேண்டி கிடக்கு உனக்கு? ஒழுங்கா வீட்டுக்கு உள்ளேயே இரு!” எனக் காளீஸ்வரி கண்டித்து உரைத்து இருந்தாலும், ‘என்ன நடக்கிறது?’ என்று அறிந்து கொள்ளும் ஆர்வ மிகுதியின் காரணமாக, பாதி படிகளில் அமர்ந்து நடப்பதைப் பார்த்திருந்தாள் கனி.

அப்பொழுது நவன் பேசியதில், “வந்ததுக்கு உங்கக்கூட ஒருநாள் இருந்துட்டு, நாளைக்குக் கிளம்புறேன்‌. சங்கடப்படாதீங்க பார்த்துக்கலாம். நானும் கொஞ்சம் தப்புதான் செஞ்சிட்டேன். கல்யாண விசயத்தை ஜஸ்ட் லைக் தட்னு எடுத்திருக்கக் கூடாது‌. அதுக்கான ஃபைனா இதை நினைச்சுக்கிறேன்!” என்பன போன்ற சில வார்த்தைகள் அனுமதியின்றி அவளின் செவிகளில் விழுந்திருந்தன.

கணவனாய் மாறிய பின்பு அவனிடம் இலகுவாக பேசுவதற்கும் பழகுவதற்கும், இதையும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.

‘உங்களைப் பத்திக் கொஞ்சம் தெரியும்.’ என வரும் வழியில் அவள் உரைத்ததில், இதுவும் அடங்கும்.

“ஏய் கனி! வந்துட்டியா? வா வா. ஹாய் அங்கிள்..” எனச் செல்வா மாடியின் மேல் படியில் நின்று கைக்காட்டிட, இருவரது கவனமும் அவன் பக்கம் திரும்பியது.

பாவையவள் முகம் மலர்ந்து வேகமாய் ஏறிச் சென்றிட, நவனும் பின் தொடர்ந்தான்.

“கனியா? அவளுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு.‌ இனிமேல் பேரைச் சொல்லிக் கூப்பிடக் கூடாது. ஒழுங்கா அக்கானு சொல்லிப் பழகு! அதென்ன‌ அங்கிள்? மாமாடா அவரு, உனக்கு!” என்று காளீஸ்வரி மகனின் முதுகில் லேசாய் அடிக்க, அவனோ பாவமாய் பார்த்தான்.

“ஏன் சித்தி அடிக்கிறீங்க? பேர் சொல்லிக் கூப்பிட்டா‌ என்ன? நீ அப்படியே கூப்பிடுடா!” என அவள் மாற்றாந்தாயின் வயிற்றில் பிறந்தவனை அணைத்துக் கொள்ள, “அவனே மாறுனாலும், நீ விட மாட்ட!” என்று பொய்யாய் முறைத்து, “உள்ள வாங்க தம்பி!” என மருமகனை அழைத்துச் சென்றார்.

சிறுவனும் அவர்களோடு இணைந்து செல்ல, தமக்கை மற்றும் தம்பியின் பேச்சில் சூழல் கலகலப்பானது.

“அக்கா இந்தா..” என அவன் பெற்றோருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்த சாக்லெட்டை எடுத்து வந்து தர, “இது ஏதுடா உனக்கு?”

“நேத்து, கல்யாண மண்டபத்துல பசங்க எல்லாருக்கும் வாங்கிக் கொடுத்தாரு மாமா.”

அவள் கணவனின் புறம் திரும்பிப் பார்க்க, “நான் உன்கூட தான இருந்தேன், நேத்து முழுசும்?” எனப் பதில் தர, “இவரு இல்லக்கா, பெரிய மாமா!” என்றான் செல்வா.

“பாரி வள்ளல், எங்கப்பா. மனுஷன் மாறவே மாட்டாரு எந்த காலத்துலயும்!” என நவன் தந்தைக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க, மற்ற அனைவரும் சிரித்தனர்.

“உனக்குத் தான வாங்கித் தந்தாரு? நீ ஏன் அவக்கிட்ட கொடுக்கிற?” என்று வினவிட, “அக்கா எதுன்னாலும் எனக்கும் எடுத்து வச்சிருக்கும் மாமா. என்னை விட்டுட்டு, எப்பவும் அது தனியா சாப்பிடாது. இன்னைக்கு நீங்க எல்லாரும் வீட்டுக்கு வருவீங்கனு அப்பா சொன்னாரு. அதான் வச்சிருந்தேன்!” என்றான்.

“நாங்க ஒருவேளை இன்னைக்கு வரலேனா என்ன செஞ்சிருப்ப.?”

“எனக்குத்தான் உங்க வீடு தெரியுமே? நேத்து, அக்காவை விட வரும் போது வழியைப் பார்த்தேன். ஞாயித்துக் கிழமை லீவு தான, அப்ப வந்து கொடுத்திருப்பேன்.”

“அப்பா, உங்க பாசத்தைப் பார்த்துப் புல்லரிக்கிதுடா!” என நவன் சிரித்திட,

“அப்படி எல்லாம் இல்ல‌ மாமா‌. நாங்க, ரொம்ப சண்டை தான் போட்டுக்குவோம். இப்ப திடீர்னு கனியை உங்க வீட்டுக்கு அனுப்பிட்டாங்களா‌‍? என்கூட இங்க விளையாடவும் சண்டை போடவும் யாருமே இல்ல. நேத்து நீ இல்லாம தனியா படுத்தனால தூக்கமே வரல தெரியுமா.?” என்று செல்வா தமக்கையைப் பார்த்தான்.

“ஒன்னும் இல்ல. பழகிடும் சரியா?” என அவள் இளையவனின் முதுகில் வருடிவிட, “உன்னோட அக்காக்கு மட்டும் தான் சாக்லெட்டா? எனக்கு இல்லையா?” என்று அச்சூழலை மாற்ற முயன்றான் நவன்.

“இதோ ரெண்டு இருக்கே?” என நீட்ட, “நீ ஒன்னைச் சாப்பிடு. எங்க ரெண்டு பேருக்கும் பாதி பாதி‌ போதும்!‌” என்று வாங்கிப் பிரித்துப் பாதியை அவளிடம் நீட்டினான்.

எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டவளிற்கு ஏனோ கண்கள் கலங்கியது. முதல்நாள் புகுந்த வீட்டில் அவளை விட்டுவிட்டுக் குடும்பத்தார் கிளம்பும் பொழுது கூட, அழுகை எதுவும் வரவில்லை‌‌. ஆனால் மனம் மட்டும் ஒருநிலையில் இல்லாது தவித்தது‌. என்னவென்று வார்த்தைகளால் உரைக்க இயலாத ஒருவித உணர்வு.

இன்றைய தினமோ.. தான் ஓடி ஆடி வளர்ந்த வீட்டையும், இளையவனின் ஏக்கம் நிறைந்த முகத்தையும், சிற்றன்னையின் கனிவு நிறைந்த பார்வையையும், உறவுகளை உபசரித்துக் கொண்டிருந்த தந்தையையும் பார்த்த பின்னர் நெருக்கமான ஒன்றை சிறிது சிறிதாய் இழந்து கொண்டிருப்பதைப் போல் தோன்றியது.

விழியோரம் கசிந்து சில துளிகள் வழிந்திட, “கனி.” என்று மனைவியின் கரத்தைப் பற்றினான் நவன்.

“ஒன்னும் இல்ல. பாத்ரூம் போயிட்டு வந்துடுறேன்!” என எழுந்து அவள் அறைக்குள் சென்றிட, “நீங்க உள்ளப் போயி உட்காருங்க தம்பி. இனி ஆளுங்க எல்லாம் வந்தா, இந்த இடம் பத்தாது!‌” என்று அவனின் குழப்பமான முகத்தைத் கண்டு உரைத்தார் திருப்பதி.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 33

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
28
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்