Loading

“நான் காலை உடைச்சுக்கிட்டது உனக்கு சிரிப்பா இருக்க?” தேவாரம் ஜெயசுதாவிடம் சண்டைக்கு நின்றார்.

“ஆமா, இவர் பெரிய பாடி பில்டர்… ட்ரெட்மில்ல வேகத்தை அதிகமா வச்சு ஓட முடியாம தரையில புதையல எடுத்தா யாருக்கு தான் சிரிப்பு வராம இருக்கும்” இப்போதும் வாயைப் பொத்தி நகைத்தார் ஜெயசுதா.

புசுபுசுவென கோபம் வந்ததில் தேவாரம் வேக மூச்சுகள் வாங்க, “ரொம்ப மூச்சை இழுக்காத ரம்மு. இளைப்பு வந்துட போகுது” என நக்கலடித்ததில் குருமணியும் விஜயாவும் நமுட்டு நகை புரிந்தனர்.

“டேய்… இப்ப அகிட்ட எப்படி பெர்மிஷன் வாங்குறதுன்னு யோசின்னா, இவள் சொல்ற மொக்க காமெடிக்கு சிரிச்சுட்டு இருக்க” என்று குருமணியின் முதுகில் ஒரு அடி போட்டார் தேவாரம்.

“இருங்க இருங்க… நானே அகிட்ட பேசுறேன்” என்று மீண்டும் நண்பர்களுடன் அக்னி வேந்தனின் அறைக்குச் சென்றார் விஜயா.

இவர்கள் வந்ததை உணர்ந்தும் நிமிராதவன், “இன்னும் நீங்க காட்டேஜுக்கு போகலையா? லன்ச் டைம் ஆகிடுச்சு…” என்றிட,

“அகி… என் பேராண்டி தான நீ” எனக் கொஞ்சினார் விஜயா.

“இல்ல” அவன் பட்டென உரைக்க விஜயாவின் முகம் வாடியது.

“உன் பேராண்டினு வெளில சொன்னா சிரிப்பாங்க விஜி. நீ பாட்டி மாதிரியா இருக்க. என் அக்கா மாதிரி தான இருக்க…” என்று தடித்த இதழ்களிலிருந்து இருந்து ஒரு வண்டி ஐஸ் கூடையை அவர் தலையில் அள்ளி வைக்க, இப்போது சிரிப்பது குருமணியின் முறையானது.

விஜயா வெட்கத்தில் நெளிய, “அவ நேத்து தான் பியூட்டி பார்லர்ல ரெண்டு மணி நேரமா மூஞ்சிக்கு பெயிண்டு அடிச்சுட்டு இருந்தா அகி. தலைல கருப்பு பெய்ண்ட்டு எக்ஸ்டரா டோஸேஜ் ஆகிடுச்சு. அதுக்காக இவ்ளோ பெரிய உருட்டு எல்லாம் உலகத்துக்கே ஆகாது…” என்று வாயில் கை வைத்தார்.

விஜயா அவரை முறைத்து, “இவன் மட்டும் என்னவாம், சொட்டை விழுந்த மண்டையில முடியை நட்டுட்டு தான வந்துருக்கான். மண்டை முழுசும் விக்கு அகி” எனப் பதிலுக்குப் பேச, அக்னி வேந்தனின் அதரங்கள் அழகாய் புன்னகைத்தது.

“இப்ப என்ன வேணும் உங்களுக்கு?” அத்தனை அழுத்தமும் தளர்ந்தவனாய் கேட்டான்.

“யோகா க்ளாஸ்” நால்வரும் ஒன்றாய் கூறியதில், “ம்ம்… அரேஞ்ச் பண்றேன். ஆனா, ராக்கிங் பண்றது, மேட்ச் பிக்சிங் பண்றதுனு இறங்க கூடாது ஓகே வா?” என்று கண்டிப்பாய் கூறியதில், “ச்சே ச்சே… மாட்டோம் தம்பி” என்று நால்வரும் கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

மறுநாளே, நால்வரின் முன்னும் ஒரு இளம்பெண் நின்றிருந்தாள்.

யோகா ஆசிரியையாக நேர்முகத்தேர்விற்கு வந்திருந்தாள் போலும். வந்ததுமே இவர்களிடம் மாட்டிக் கொண்டாள்.

“உன் பேர் என்ன?” ஜெயசுதா கையைக் கட்டிக்கொண்டு டெரராக கேட்க,

“அஞ்சனா…” என்றாள் அந்தப்பெண்.

“ஆறனா… ஏழனானு பேர் வைக்க வேண்டியது தான!” தேவாரம் கேலி செய்ததில் குருமணி “பாப்பாவோட பேருக்கு என்ன… அழகா தான இருக்கு!” என்று சிரித்து வைத்தார்.

“பொண்ணை பார்த்துட்டா போதும் ஃப்ளர்ட் பண்ணிடுவான் உடனே” விஜயா கேவலமாய் முணுமுணுக்க, அஞ்சனாவோ “தாத்தா பாட்டி, இங்க நான் யோகா க்ளாஸ் எடுக்க வந்துருக்கேன். உங்ககிட்ட வெட்டியா பேசுறதுக்கு இல்ல…” என்றதும்,

“நாங்க என்ன வெட்டியாவா பேசுறோம். எங்க டீச்சர் பத்தி தெரிஞ்சுக்க தான பேச வந்தோம்” என்றார் விஜயா.

“என்னது நான் உங்களுக்கு டீச்சரா?” அவள் முகம் அஷ்டகோணலானது.

“ஆமா நீ எங்களுக்கு தான் யோகா சொல்லி தரணும்” என்றதும் அஞ்சனா நெஞ்சில் கை வைத்தாள்.

“விளையாடுறீங்களா… இந்த வயசுல நான் ஹெவியா எதுவும் சொல்லிக் குடுத்து உங்களுக்கு ஏதாவது ஆனா பழி என்மேல வர்றதுக்கா?” என்று அஞ்சனா சிடுசிடுக்க, “கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்ட அஞ்சனா…” என்று தேவாரம் அவளைப் பாராட்டினார்.

“ஆளை விடுங்க” என்று அஞ்சனா வந்த வழியே சென்று விட,

“ஹப்பாடா நல்லவேளை அவள்கிட்ட பேச்சு கொடுத்தோம். இல்லனா யோகா க்ளாஸ் போரிங் ஆகியிருக்கும்… வாங்கடா அடுத்த ஆள் வருதா பாக்கலாம்…” என்று அசட்டையாய் மரத்தினடியில் அமர்ந்தனர்.

—-

“நீ சொன்ன அட்ரஸ் சரி தானாக்கா? ஓல்ட் ஏஜ் ஹோம்னு சொன்ன, இதை பார்த்தா லக்சுவரி வில்லா மாதிரி இருக்கேகா. நான் எதுவும் கேட்டட் கமியூனிட்டிக்கு மாறி வந்துட்டேனா?” என்று அலைபேசியில் பேசியபடி சுற்றி முற்றி பார்த்தாள் அவள்.

மஞ்சளில் கருமை பூ போட்ட, காட்டன் சுடிதார் அவளது மெல்லிய தேகத்தில் பாந்தமாய் ஒட்டிக்கொண்டது.

நேர் வகுடு எடுத்து இடை வரை பின்னப்பட்டிருந்த கூந்தலின் அடர்த்தியில் யாரின் மனம் சிறைப்படுமோ என்ற கர்வமும் வீற்றிருக்க, அந்தக் கர்வத்தின் சாயல் பெண்ணின் முகத்தில் துளி கூட அல்லாது அன்பின் உறைவிடமாய் இருந்தது.

“ஓல்ட் ஏஜ் ஹோம்னு சொன்னதும் நீ அநாதை ஆஸ்ரமம்னு நினைச்சுட்டியாடி… இதையே ஒழுங்கா புருஞ்சுக்கல. அங்க போய் எதையும் சொதப்பி வச்சுடாதடி” எதிர்முனையில் பயமும் பதட்டமும் கலந்து வெளிவந்தது திலோத்தமாவின் குரல்.

“நீ பயப்படாதக்கா. நான் கரெக்ட்டா வேலையை முடிச்சுடுவேன். போறேன். பேச வேண்டியதை பேசுறேன். வர்றேன் அவளோ தான. அவர் பேர் அக்னி வேந்தன்னு தான சொன்ன?” என மீண்டுமொரு கேட்டுக்கொண்டாள்.

“ம்ம் ஆமா… அவரைத் தவிர வேற யார்கிட்டயும் மூச்சு கூட விட்டுடாத பேபி” திலோத்தமாவின் வார்த்தைகளில் அத்தனை அழுத்தமும் வருத்தமும்.

“கண்டிப்பா அவரைத் தவிர யார்ட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன்கா. அந்த தீ வேந்தன், அவ்ளோ நல்லவராக்கா? இது தெரிஞ்சுருந்தா நீ மாமாவை மேரேஜ் பண்ணப்பவே நான் அவரை மீட் பண்ணி உங்களை சேர்த்துக்க சொல்லிருப்பேன்”

“அடியேய்… இருக்குறதுலயே அவர் தான்டி உன் மாமா மேல கோபமா இருக்காரு. நீ மட்டும் எதுக்கு வந்துருக்கேன்னு சொன்ன, உன்னைப் போட்டு தள்ளுனாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல”

“என்னக்கா பயமுறுத்துற. நேத்து நைட்டு வரைக்கும் அந்த தீ வேந்தனுக்கும் மாமாவுக்கு இருந்த பாண்டிங் பத்தி அவ்ளோ விலாவரியா சொல்லிட்டு இப்ப டிவிஸ்ட் வைக்கிற” பெண்ணவளுக்கு தொண்டை வறண்டது.

“இதோ பாரு பேபி. அக்னி நல்லவர் தான். ஆனா நீ நினைக்கிற அளவு நல்லவர் இல்ல. அந்த குடும்பத்துல எதிராளி பேசுறதை காது குடுத்து கேக்குற ஒருத்தர் அவர் மட்டும் தான். வேற யார்கிட்டயும் நீ உன் மாமா பேரை சொன்னா, எனக்கு உங்கிட்ட இருந்து தகவல் வராது. தந்தி மட்டும் தான் வரும்” என்றதில் அவளுக்கு நடுங்கி விட்டது.

“நீ ஓவரா பயமுறுத்துற போனை வை. நான் பாத்துக்குறேன்” என்று அழைப்பைத் துண்டித்து விட்டவளோ, “முருகா… இந்த கேட்டை பார்த்தாலே பயமா இருக்கே. என்னை சேஃபா என் வீட்ல லேண்ட் பண்றது உன் கடமை முருகா…” என்று பெரிய வேண்டுதலை வைத்தபடி உள்ளே சென்றாள்.

கையில் பைலுடன் வந்தவளைப் பார்த்த வாட்ச்மேன்,

“இன்டர்வியூக்கு வந்தியாமா” எனக் கேட்க, அவளும் இதுவே சந்தர்ப்பமென்று “ஆமா அண்ணா… அக்னி வேந்தன் ரூம் எங்க இருக்கு” என்றதில், அவளை மேலும் கீழும் பார்த்து வைத்தார்.

“இந்த வேலைக்கு எல்லாம் ஐயா இன்டர்வியூ எடுக்க மாட்டாரு. மேனேஜர் இருப்பாரு. நேரா போய் லெஃப்ட் எடுங்க” என்றதும் அவளுக்கு ‘புஸ்’ என ஆனது.

“ஐயா இல்லைங்களா?” மீண்டும் அவரைப் போலவே அக்னி வேந்தனை விசாரிக்க, “இல்ல… ஐயா வெளிநாட்டுக்கு போயிருக்காங்க. வர ஒரு மாசம் ஆகும்” என்றதில், “ஒரு மாசமா” எனத் திகைத்தவள் அப்படியே கிளம்பி விடலாமா என யோசிக்கும்போதே, வாட்ச்மேன் வற்புறுத்தி உள்ளே அனுப்பி விட்டார்.

மீண்டும் திலோத்தமாவிற்கு அழைத்த பெண்ணவள், “அக்கா… அந்த தீ வேந்தன் இங்க இல்லையாமேக்கா. என்ன செய்றது?” என்றாள் யோசனையாக.

திலோத்தமாவின் முகமும் சுண்டி விட்டது வேதனையில். “எப்போ வருவாராம்?” அழுகையை அடக்குவது புரிந்து,

“ஒரு மாசம் ஆகும்னு சொல்றாங்களேக்கா. ஆனா நீ கவலைப்படாத. நான் வேணும்னா இங்கயே இருந்து அவரைப் பார்த்துட்டு வரேன்” என்றாள்.

“அங்க எப்படிடி நீ இருப்ப?” கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள் திலோத்தமா.

“ஏதோ இன்டர்வியூ நடக்குது போலக்கா. பேசாம இங்க வேலைக்கு சேர்ந்துடுறேன்.”

“அங்க என்ன வேலை பார்ப்ப. ஆயா வேலையா? நீ ஸ்கூல்ல தான ட்ரை பண்ணிட்டு இருந்த.”

“ஆமா இப்ப கூட ஒரு ஸ்கூல்ல இன்டெர்வியூ முடிச்சுட்டு தான் வர்றேன். அங்க வேலை கிடைச்சுட்டா, உனக்கு இன்னும் உதவியா இருக்கலாம்ல…” வெகுளியாய் பேசிய தங்கையின் அன்பைக் கண்டு மீண்டும் கலங்கியது திலோத்தமாவின் கண்கள்.

“எவ்ளோ நாளைக்குடி… உனக்குப் பாரமா இருக்குறது” திலோத்தமா தேம்பி விட்டாள்.

“அக்கா என்ன பேசுற நீ. பாரம் கீரம்னுட்டு. அப்பா செத்துப்போன நாள்ல இருந்து உங்க வீட்ல நான் பாரமா இருந்தேனே. அப்போ நீயும் மாமாவும் கொஞ்சமாவது முகம் சுளிச்சீங்களா? இப்டி பேசாதக்கா!” அவளுக்கும் அழுகையே வந்தது.

“சாரி பேபி…”

“ப்ச் விடு. இங்க என்ன வேலை குடுத்தாலும் பரவாயில்ல. நான் செய்றேன். மாமாவை அவர் குடும்பத்தோட சேர்த்து வைக்கிறேன். ஓகேவா?” என அழைப்பைத் துண்டித்தவள் பெருமூச்சு விட்டாள்.

இந்த வாழ்க்கை அன்பு நிறைந்த உள்ளங்களை மட்டும் ஏன் தான் பந்தாடி வேடிக்கை செய்கிறதோ! என்ற வேதனையை விழுங்கி கொண்டு, நேர்முகத்தேர்விற்காக சென்றாள்.

அதன்பிறகே யோகா ஆசிரியைக்காக ஆள் எடுப்பது புரிந்து குஷியானாள்.

‘அட, நமக்கு தான் யோகா கை வந்த கலையாச்சே!’ என விழிகள் மின்னியது.

சம்பளமும் கூட பள்ளியில் கொடுப்பதாக சொன்ன சம்பளத்தை விட அதிகம். அதுவும் வெறும் இரண்டு மணி நேர வேலைக்கு!

“அந்த தீ சார் வர்ற வரை இங்கயே டேரா போட்டுட வேண்டியது தான்!” என முடிவெடுத்துக் கொண்டவள், வேலையை வாங்கி விட்டே மேனேஜரின் அறையில் இருந்து வெளியில் வந்தாள்.

அங்கோ, நால்வர் குழுவும் கையைக் கட்டிக்கொண்டு நின்று அவளை முறைத்திருந்தது.

“உன் பேர் என்ன?” ஜெயசுதா எகத்தாளமாக கேட்க, பேந்த பேந்த விழித்தவள் “பவி… பவித்ராத்யா” என்றாள் மெல்லமாக.

“என்ன ஆத்த போற?” தேவாரம் நக்கல் செய்திட,

“ஹான்? எதுவும் ஆத்தல அங்கிள். என் பேர் அது” என படபடத்தவளுக்கோ இவர்கள் அக்ரம் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்களோ என்ற பயம் எழுந்தது.

அதற்குள் குருமணி, “ஹே டார்லிங்… உன் ஹேர்க்கு என்ன ஆயில் யூஸ் பண்ற?” எனக் கேட்டதும், ‘எதே டார்லிங்கா?’ எனத் திகைத்து விட்டு, “வெறும் தேங்காய் எண்ணெய் தான் அங்கிள்” என்றாள்.

“வாவ்… இட்ஸ் லவ்லி” என்று புகழாரம் சூட்டியதில் வெட்கப்பட்டாள்.

“தேங்க்ஸ் அங்கிள்”

“யூ ஆர் வெல்கம் டார்லிங்” என்ற குருமணியின் இடுப்பில் ஒரு இடி இடித்தார் விஜயா.

“மூடிட்டு நில்லுடா…” என்று அதட்டி விட்டு பவித்ராத்யாவின் புறம் திரும்பியவர், “மேல பாரு… கீழ பாரு” என்று பணிக்க, அவளும் மிரண்டு அவர்கள் சொன்னதை எல்லாம் செய்தார்.

“ம்ம்… பொண்ணு அம்சமா தான் இருக்கா. இல்ல சுதா” என ஜெயசுதாவிடம் அபிப்ராயம் கேட்க, அவரோ “உனக்கு வட்லாப்பம் செய்யத் தெரியுமா?” எனக் கேட்டார் தீவிரமாய்.

“அப்டின்னா என்ன ஆண்ட்டி? இங்க யோகா க்ளாஸ்கு தான ஆள் எடுத்தாங்க. சமைக்கவும் செய்யணுமா?” என்று பரிதாபமாக கேட்டதில், தேவாரத்திற்கு சிரிப்பு வந்து விட்டது.

“பார்க்க பாவமா இருக்கா இந்தப் பொண்ணு. விட்டுடுங்கப்பா…” எனும்போதே மேனேஜர் கனி அறையில் இருந்து வந்தார்.

“அடடா உங்க ராக்கிங்கை ஆரம்பிச்சுட்டீங்களா. பாவம் இந்தப் பாப்பாவை கேள்வி கேட்டே ஓட விட்டுடாதீங்க… இவங்க இங்க தான்மா இருக்காங்க. இவங்களுக்கு தான் நீ யோகா சொல்லிக் குடுக்க போற. வேற யார் யார் யோகா க்ளாஸ் ஜாயின் பண்றாங்கன்ற டீடெய்ல் நாளைக்குத் தரேன்” என்று விட்டு கனி அங்கிருந்து நகர,

“என்னது ராக்கிங்கா?” என்று அதிசயித்து விட்டாள் பவித்ராத்யா.

“ராக்கிங் எல்லாம் காலேஜ்ல தான பண்ணுவாங்க?”

“ஏன் எங்களை பார்த்தா காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மாதிரி இல்லையா டார்லிங்” குருமணி தனது விக்கை கோதியபடி கூற, அவர்கள் அக்ரம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இல்லையென்ற நிம்மதியில் புன்னகை மலர்ந்தது அவளுக்கு.

“காலேஜ் ஸ்டூடண்ஸ்விட யங்கா இருக்கீங்க அங்கிள்…” எனக் கண் சிமிட்டிட, “ஓ! நோ” என்று முகத்தை மூடி வெட்கப்பட்டுக் கொண்டார்.

ஜெயசுதாவோ, “உஷ் இப்படி ஐஸ் வைக்கிற வேலை எல்லாம் வச்சுக்க கூடாது. உன்னை நாங்க இன்னும் ராக்கிங் லிஸ்ட்ல தான் வச்சிருக்கோம். நாளைக்கு ‘ஃபர்ஸ்ட் டே’ க்ளாஸ்ல உன்னை அனலைஸ் பண்ணதுக்கு அப்பறம் தான், அடுத்த ஸ்டெப் பத்தி யோசிப்போம்” என கண்ணை உருட்டி பயமுறுத்த முற்பட, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவர்கள் அக்னி வேந்தனுக்கு இவளை ஜோடியாக அல்லவா கற்பனை செய்து கொண்டிருந்தனர்.

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு எல்லாம் அக்ரம் இல்லத்திற்கு வந்து விட்டாள் பவித்ராத்யா.

முந்தைய நாள் பார்த்த நால்வருடன் இன்னும் சில பெரியவர்கள், டிராக் ஷூட் டி ஷர்ட் சகிதம் அந்த திறந்த வெளிக்கூடத்திற்கு வந்திருந்தனர்.

“ஹாய் டார்லிங்” முன் வரிசையில் அமர்ந்திருந்த குருமணியைக் கண்டதும், “ஹாய் அங்கிள்” என்றாள் சிரிப்புடன்.

“ஹாய் ஆண்ட்டி” ஜெயசுதாவிற்கும் ஹாய் சொல்ல, அவரோ உதட்டைச் சுளித்துக்கொண்டு “ஹாய்” கூறினார்.

தேவாரமோ “இந்தப் பொண்ணு அழகா தான இருக்கு. உனக்குப் பிடிக்கலையா?” எனக் கிசுகிசுக்க,

“அழகா இருக்கா. நம்ம என்ன பேசுனாலும் சிரிச்சுட்டு சைலண்டா போய்டுறா. அதான் அவளை டக்குனு நம்ப முடியல ரம்மு. இன்னும் அகிக்கு ஏத்த மாதிரி குவாலிட்டிஸ் அவள்கிட்ட இருக்கானு செக் பண்ணனும். அப்பறம் தான் நான் முடிவு பண்ணுவேன்” என்றார்.

விஜயாவோ, “எல்லாம் சரியா இருந்தா மட்டும் அகி இவளை கட்டிக்குவானாக்கும். மேட்ரிமோனில ஓராயிரம் பொண்ணை பார்த்தாச்சு. எல்லாத்துக்கும் ஒரு குறை சொல்றான். இவகிட்டயும் ஒரு குறையை கண்டுபிடிச்சுட்டு வருவான் பாரு…” என்றிட,

“நமக்குப் பிடிச்சுட்டா இந்தப் பொண்ணோட டீடெய்ல நிவேதாவுக்கு குடுக்கலாம். அவள் பாத்துப்பா மீதிய…” என்ற தேவாரத்தின் கூற்றில் மற்ற மூவரும் சமாதானம் அடைந்தனர். அக்னியை போலவே நிவேதாவும் இவர்களிடம் கொள்ளைப் பிரியமாக இருப்பார்.

பவித்ராத்யாவோ தன்னைச் சுற்றி ஒரு சுயம்வரமே நிகழ்வது புரியாது, “இப்ப ஃபர்ஸ்ட் வார்ம் அப் பண்ணிக்கலாம். யாருக்காவது மூட்டு வலி, முதுகு வலி இருந்தா சொல்லிடுங்க… நான் நோட் பண்ணிட்டு உங்களுக்கு ஏத்த மாதிரி சிம்பிள் யோகா சொல்லித்தரேன்…” என்றவள் பெயர் லிஸ்டை எடுத்து யார் யாருக்கு என்ன உடல் உபாதை இருக்கிறது என்பதை கேட்டு குறித்துக் கொண்டாள்.

“சரி நிக்க முடியாதுனு பீல் பண்றவங்க சேர்ல உக்காந்துக்கோங்க. இப்ப முதல்ல மூச்சுப் பயிற்சி பண்ண போறோம்” என்றவள், “தேவாரம் அங்கிள் நீங்க பண்ணாதீங்க” என்று விட்டு, மற்றவர்களுக்கு மூச்சுப் பயிற்சியை சொல்லிக் கொடுத்தாள்.

தேவாரத்தை ஒரு முறை பார்த்து விட்டு ஜெயசுதா அவள் சொல்வதை செய்ய, பின் “இப்ப நம்ம செய்யப்போறது சேர் யோகா… எல்லாரும் சேர்ல உக்காந்துக்கோங்க. ஸ்ட்ரெட்ச் பண்ணுங்க. அதுக்கு முன்னாடி விஜயா ஆன்ட்டி, சுரேஷ் அங்கிள்” என மேலும் சில நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு, “நீங்க இந்த யோகா செய்ய வேண்டாம்” என்று அறிவுறித்தினாள்.

அடுத்ததாக, ‘ஆர்ம் ரைஸ் ஸ்ட்ரெட்ச்’ என்றவள் அதை செய்வதற்கு ஜெயசுதாவை அனுமதிக்கவில்லை. நேரம் செல்ல செல்ல ஜெயசுதாவிற்கு கோபம் வந்து விட்டது.

“இந்த க்ளாஸ் எனக்குப் பிடிக்கல…” என்று முன்னே வந்தவரிடம், “என்னாச்சு ஆண்ட்டி?” எனக் கேட்டாள் புரியாமல்.

“நாங்க எல்லாரும் சேர்ந்து பண்றதுக்கு தான இப்படி ஒரு க்ளாஸ் அரேஞ்ச் பண்றோம். எங்களோட ஹெல்த் இஸ்யூவை மறந்து பண்றதுக்கு தான் யோகா மெடிடேஷன் எல்லாம் செய்றோம். ஆனா நீ அதை ஞாபகப்படுத்தி கார்னர் பண்ற” என்றதும் பவித்ராத்யா நிதானமாக அவரை ஏறிட்டாள்.

“நீங்க ஹேப்பியா இருந்தா என்ன செய்வீங்க?” பவித்ராத்யா சம்பந்தமின்றி கேள்வி கேட்க, “ஹான்?” என முறைத்தார் ஜெயசுதா.

“சொல்லுங்க ஆண்ட்டி” அவள் பொறுமையாய் கேட்டதில், “பாட்டு கேட்பேன்” என்றார் வேறெங்கோ பார்த்தபடி.

“தேவாரம் அங்கிள் நீங்க ஹேப்பியா இருந்தா என்ன செய்வீங்க?”

“நான்… டைரில எழுதுவேன்.”

“விஜயா ஆண்ட்டி நீங்க?”

“ஹேப்பியா இருந்தா ப்ரெண்ட்ஸ்ட்ட ஷேர் பண்ணுவேன்…”

“ம்ம் சரி குரு அங்கிள் நீங்க சோகமா இருந்தா என்ன செய்வீங்க?” அடுத்து அவரிடம் கேட்டாள்.

“எனக்கு சோகமா இருந்தாலே சாப்பிடணும்…” என்றதும் அங்கு ஒரு சிரிப்பலை பரவியது.

பவித்ராத்யாவும் சிரிப்பை அடக்கியபடி “சரி தேவாரம் அங்கிள் நீங்க என்ன செய்வீங்க?” எனக் கேட்டாள்.

“நான் வருத்தப்பட்டா கோவிலுக்கு போறது வழக்கம்…”

“ஹ்ம்ம் இப்ப நீங்க சொல்லுங்க ஆண்ட்டி. நீங்க சோகமா இருந்தா என்ன செய்வீங்க?” என ஜெயசுதாவிடம் கேட்டாள்.

“சோகமா இருந்தா அழுகை வரும். உக்காந்து அழுவேன்” என்றார் வெடுக்கென.

“பார்த்தீங்களா… இங்க எல்லாருமே ஒவ்வொரு சூழ்நிலையை ஒவ்வொரு மாதிரி கையாளுறாங்க. உணர்வு ஒன்னு தான். ஆனா அதை வெளிக்காட்டி மனசை ஹீல் பண்ணிக்கிற முறை, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி மாறிக்கிட்டே இருக்கும்.

அது மாதிரி தான் நம்ம உடம்பும். சந்தோஷமோ துக்கமோ நம்ம மனசுக்கு எது ஆறுதலா இருக்கும்னு மனசை கேட்டு ஒரு விஷயம் பண்ற மாதிரி தான், இது செட் ஆகுமா ஆகாதான்னு நம்ம உடம்பை கேட்டு பண்ணனும் ஆண்ட்டி.

மூச்சுப்பயிற்சி எல்லாருமே பண்ணலாம். ஆனா தேவாரம் அங்கிள்கு சிவியர் ஆஸ்துமா இருக்கு. டாக்டர் அட்வைஸ் இல்லாம, எடுத்ததும் அவர் உடம்புக்கு ஒத்துக்காத ஒரு விஷயத்தை பண்றது ஆபத்தா முடியலாம்.

நம்ம பண்ணுன சேர் யோகா முதுகுத்தண்டை பலப்படுத்தும். ஆனா விஜயா ஆண்ட்டிக்கு முதுகுத் தண்டுல வலி இருக்கு. அதை ட்ரிக்கர் பண்ணிட கூடாதுன்னு தான் அவங்களை பண்ண வேணாம்னு சொன்னேன்.

அதே மாதிரி தான் உங்களுக்கும்… ஆர்ம் ரைஸ் ஸ்ட்ரெட்ச் பண்றது ஷோல்டரை ரிலாக்ஸ் பண்ணும். ஆனா உங்களுக்கு ஆல்ரெடி ஷோல்டர் பெயின் இருக்கு. பர்ஸ்ட் டே’ வே டைரக்டா அதை அட்டாக் பண்ணுனா, அடுத்த நாள் உங்களுக்கு நார்மல் யோகா கூட பண்ண முடியாம போய்டும்.

ஹெல்த் வச்சு பிரிச்சு எல்லாம் சொல்லிக்கொடுக்கல ஆண்ட்டி. யோகா செய்றது நல்லது தான். ஆனால் அதை முழுசா தெரிஞ்சு செய்றது தான் பெஸ்ட். உங்களை ஹர்ட் பண்ணிருந்தா சாரி ஆண்ட்டி” என்று நீண்ட விளக்கம் கொடுத்து மன்னிப்பும் கேட்டவளை ஜெயசுதா மட்டுமின்றி அனைத்து பெரியவர்களும் வாயடைத்து வியந்து பார்த்திருந்தனர்.

கூடவே, சற்றே தள்ளி இருந்த அடர்ந்த மரத்தின் மீது சாய்ந்திருந்த ஆடவனின் விழிகளும் அவள் மீதே படர்ந்திருந்தது.

போதை தெளியும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
17
+1
0
+1
5

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்