
அத்தியாயம் 14
காலையே இல்லம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. எழுந்ததும் வரிசையாகப் பணி செய்து பழகிய கனி, புகுந்த வீட்டில் என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்து இருந்தாள்.
கொண்டை இட்டிருந்த குழலில் இருந்து சொட்டுச் சொட்டாய் நீர் வழிய, “தலையை காய வைம்மா.” என்றபடி வந்தார் அம்பிகை.
“விசேஷத்துக்கு வந்த ஒரு பாட்டி வெளிய போகாதனு சொன்னாங்க. வீட்டுக்குள்ள எப்படி அத்தை?” என்றிட,
“அதுனால என்ன? முடியை நல்லா தட்டீட்டு விரிச்சு விடு!” என மின்விசிறியின் வேகத்தை அதிகப்படுத்தி விட்டுச் சென்றார்.
“என்னம்மா தனியா உட்கார்ந்து இருக்க? எங்க உன்னோட வீட்டுக்காரனை?” என்று கேட்டபடி கனியின் அருகே இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார் ராஜா.
“தூங்குறாரு மாமா.”
“ஏம்மா, அவனை எழுப்பலயா?” என மனைவியிடம் வினவ,
“தூங்கணும். எழுப்ப வேணாம்னு பொண்டாட்டிக்கிட்டச் சொல்லி விட்டிருக்கான்!” என்று பதில் வந்தது.
“கல்யாணம் ஆன மறுநாளே அந்தப் பிள்ளையை அதிகாரம் செய்ய ஆரம்பிச்சிட்டானா அவன்?”
“ரூமுல அந்தப் பிள்ள இருந்ததுனால, அவக்கிட்ட சொல்லி இருக்கான். நான் எழுப்பப் போயிருந்தா, என்கிட்ட சொல்லி இருப்பான். சும்மா எதையாவது பேசாதீங்க!”
“சரி சரி! உன்னோட மகனை ஒன்னும் சொல்லல நான்!” என்றவர் கனியைப் பார்த்துப் புன்னகைக்க, அவளும் சிரித்தாள்.
“நவநீ ராத்திரி நல்லா பேசுனானா ம்மா உன்கிட்ட, இல்ல காச்மூச்னு எதுவும் கத்துனானா.?”
“ஏன் மாமா, இப்படிக் கேட்கிறீங்க?”
“இல்ல, திடீர்னு பொண்ணு மாறிப் போச்சு. அவனுக்கு இஷ்டமானு கூட நான் கேட்கல.”
“நல்லா தான் மாமா பேசுனாரு, ஆனா உங்களைத் தான்..”
“என்ன சொன்னான் என்னை.?”
“வில்லன்னு..”
அவர் சட்டென்று சிரித்து, “பல வருஷமா நான் அவனோட வாழ்க்கையைக் கெடுக்கப் பார்த்தேன்னு தான் சொல்லிக்கிட்டு இருக்கான். அதுனால இது ஒன்னும் பெரிய விசயம் இல்ல. கோழி மிதிச்சு குஞ்சு சாகாதுமா. அதேபோல குஞ்சு கொத்துறதுனால கோழிக்கு வலிச்சிடப் போறதும் இல்ல. இதெல்லாம் சும்மா பேசிக்கிறது தானே தவிர, வேற ஒன்னும் இல்ல. நீ எதுவும் நினைச்சுக்காத!”
“ம்ம்.. நான் டென்த் கூட முடிக்கலனு அவர்கிட்ட சொல்லலையா மாமா நீங்க.?”
“அவன் என்ன வேலைக்கா ஆள் எடுக்குறான். படிப்பைப் பத்தி எல்லாம் சொல்ல.?”
“நான் காலேஜ் போயிருப்பேன்னு அவரு நினைச்சாராம்.”
“அதுசரி! இப்ப என்ன, இனிமேல் போ. அங்க சென்னையில நல்லதா பார்த்துச் சேர்த்துவிட சொல்லுறேன். படி!”
“படிக்கிறதா இருந்தா, இங்கேயே இத்தனை வருஷத்துக்கு படிச்சிருக்க மாட்டேனா? ஸ்கூல் முடிக்கவே வழிய காணோம். இதுல காலேஜ் வேறயா?”
“இதுல என்ன இருக்கு? உன் வீட்டுக்காரன் நல்லா படிப்பான். அவனையே சொல்லிக் கொடுக்கச் சொல்லுவோம்.”
“ஏன் மாமா, உங்களுக்கு எதுவும் என்மேல கோபமா?”
“என்னம்மா.?”
“பின்ன, இப்படி என்னைச் சிக்க வைக்கப் பார்க்கிறீங்க? இப்பத்தான் கல்யாணம் ஆகி இருக்கு. அவரு எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து, நான் படிச்சு.? என் இலட்சணத்தைப் பார்த்து, அவரு என்னோட அப்பா வீட்டுக்கே துரத்தி விடவா.?”
“அப்படி எல்லாம் இல்லம்மா.”
“இதுனால தான், அவரு உங்களை வில்லன்னு சொல்லுறாரு போல.”
“பார்த்தியா நான் அவன்கிட்டப் பேசக் கத்துக் கொடுத்தா, நீ அதை என்கிட்டயே திருப்புற.?”
“ஸாரி மாமா..” என அவள் நாக்கைக் கடித்தபடி தலையைக் குனிந்து கொள்ள, “பரவாயில்ல பரவாயில்ல.” என்று மருமகளின் தலையில் கைவைத்து தட்டிக் கொடுத்தார் ராஜா.
“இந்த மாதிரி நிதானமா உட்கார்ந்து பேசியே பல வருஷம் ஆச்சு. நவநீ படிக்கிறதுக்காக சென்னைக்குக் கிளம்பிப் போகவுமே, வீடு வெறிச்சுனு ஆகிடுச்சு. அவனுக்கு என்மேல கொஞ்சம் கோபம். அதுனால ஏதாவது விசேஷம்னா மட்டும் தான் ஊருக்கு வருவான். அப்பவும் சண்டை தான் வரும் எங்களுக்கு இடையில.
நானும் உன்னோட அத்தையும் எவ்வளவு தான் பேசிக்க முடியும்? ஓரளவுக்கு மேல, எங்களுக்குமே யாரும் இல்லாம தனியா இருக்கிற மாதிரி தோண ஆரம்பிச்சிடுச்சு. முக்கியமா இதுக்காகத்தான் அவனுக்குக் கல்யாணம் செய்யணும்னு முடிவெடுத்தேன்.
மருமகப் பொண்ணு உள்ளூரா இருந்தா, அந்தப் பிள்ளையோட அம்மா அப்பாவை பார்க்கிறதுக்காவது அப்பப்ப ஊருக்கு வருவாங்க இல்ல. அப்படியே இங்கேயும் ரெண்டு நாள் இருக்கச் சொல்லலாம். அதான்.”
“நல்ல பிளான். எப்பவும் எனக்கு என்ன தேவைனு யோசிக்கிறதே இல்ல. உங்களுக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்யிவீங்க? அப்படித்தான அப்பா.?” என்றவாறே நவநீதன் வர,
“ஏன், நான் செஞ்சதுல இப்ப நீ எதுல குறைஞ்சு போயிட்ட? நல்லா தான இருக்க?” என விடாமல் மறுமொழி தந்தார் ராஜா.
“இப்ப, நான் நல்லா இருக்கிறதுக்குப் பின்னாடி நீங்க எதுவும் செஞ்சிடல. அது, நானா முயற்சி செஞ்சுக் கிடைச்சது.”
“அது உண்மை தான். ஆனா இங்க ஊருக்குள்ள போற இடத்துல எல்லாம் உனக்குக் கிடைக்கிற மதிப்பும் மரியாதையும், நீ சம்பாதிச்சது இல்ல. இந்த ராஜகணபதி உனக்கு அப்பனா இருக்கிறதால தர்றது.
‘என் பொண்ணை வசதியா வச்சுக்கணும்னு எல்லாம் நான் எதிர்பார்க்கல. பிள்ளையோட மனசைக் கஷ்டப்பட விடாம பார்த்துக்கிட்டா, போதும்’னு தான் கேட்டுக்கிட்டாரு கனியோட அப்பா.
அந்த எதிர்பார்ப்பு உனக்கானது இல்ல. என்கிட்ட இருந்து வந்தது. நம்ம பிள்ளையைக் கட்டிக் கொடுத்தா, அவங்க பிள்ள மாதிரி பார்த்துப்பாங்கனு என்மேல சம்பந்திக்கு இருந்த நம்பிக்கை.”
“அம்மா..” என அவன் பல்லைக் கடிக்க,
“காலையிலயே ஆரம்பிச்சிட்டீங்களா உங்க பஞ்சாயத்தை? வீட்டுல சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க. ஞாபகம் இருக்கா இல்லையா?” என்றபடி வந்தார் அம்பிகை.
“உங்க வீட்டுக்காரர் என்னென்ன பேசுறாருனு பாருங்க.”
“நீங்க தான் கொஞ்சம் சும்மா இருங்களேன்.?” எனக் குடும்பத் தலைவி கணவனை அமைதிப் படுத்த முயல, “நான் உண்மையைத் தான சொன்னேன்? பொய் எதுவும் பேசலயே.?” என்றார் ராஜா.
“ஆமா, உலக மகா உண்மை தான். உங்களை நம்பித்தான பொண்ணைக் கொடுத்தாங்க. அப்ப, உங்க மருமகளை நீங்களே வச்சு நல்லபடியா பார்த்துக்கோங்க.” என நவன் உரைத்துவிட்டுச் செல்ல,
“என்ன பேச்சு இது? வளர்ந்துட்டியேனு பார்க்கிறேன். இல்லேனா பட்டுனு நாலு அடி போட்டுடுவேன்!” என்ற சொற்கள் அவனைப் பின் தொடர்ந்து சென்றன, தந்தையிடம் இருந்து.
அம்பிகை கணவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு மகனைச் சமாதானம் செய்வதற்காக செல்ல, நடந்த நிகழ்வைப் பார்த்திருந்த கனி சின்னதாய்ச் சிரித்தாள்.
“என்னம்மா சிரிக்கிற?” என ராஜா வினவிட,
“நானும் என் தம்பியும் சண்டை போட்டுக்கிற மாதிரியே, நீங்களும் அவரும் சண்டைப் போட்டுக்கிறீங்க மாமா!” என்றாள்.
தலையை அசைத்து நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவர், “இப்படி ஏதாவது சொன்னா தான், கொஞ்சமாது பேசுவான். இல்லேனா வீட்டுக்கு வரும் போது எல்லாம் லேப்டாப்பை எடுத்து வச்சுக்கிட்டு ரூமுக்குள்ளயே இருந்திடுவான். வேலை பார்க்கிற இடத்துல எப்படி இருக்கானோ தெரியல. இங்க மனுசங்களுக்கும் அவனுக்குமான தொடர்பே விட்டுப் போச்சுனு தான் சொல்லணும்.
இரயில்வே ஸ்டேஷன்ல இறங்கி வீட்டுக்கு வர்ற ஆட்டோக்குக் கூட ஃபோன்ல இருந்து காசை அனுப்புவான். அக்கவுண்ட்ல பணம் நம்பரா ஏறுறது எப்படிச் சந்தோஷத்தைக் கொடுக்கும்.? நம்ம சட்டை பையில வச்சு இருந்து, அதை கையில எண்ணிக் கொடுக்கும் போது, அதைத் தொட்டு வாங்குறவனுக்கு சந்தோஷமும் ஒரு நிறைவும் கிடைக்கும்ல.?” என்றார்.
கீழ் வீட்டுக் கல்யாணி, கோலம் போட்டதற்காக இருநூறு ரூபாய் கொடுத்தது நினைவிற்கு வந்தது கனிக்கு.
ஐஸ்கிரீமிற்கு முப்பது ரூபாய் செலவு செய்தது போக, மீதத்தை அப்படியே தான் தனியாய் டப்பா ஒன்றில் வைத்திருக்கிறாள். இதுவரை பதினைந்து முறையாவது அதனை எடுத்துத் தொட்டுப் பார்த்திருப்பாள். காணும் பொழுதெல்லாம் அப்படி ஒரு மகிழ்ச்சி அவளிற்கு.
திருமணம் நிச்சயமான பின்னர், தன்னை வளர்ப்பவரிடம் மறைக்க மனமின்றி காளீஸ்வரியிடம் பணத்தைப் பற்றி உரைத்து விட்டாள் கனி.
‘ஏதேனும் திட்டுவார்.’ என்ற அவளின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி, கன்னத்தைத் தட்டிக் கொடுத்துப் புன்னகைத்தார்.
“இந்தாங்க சித்தி காசு. என்னை நீங்க தான் பார்த்துக்குறீங்க. நியாயமா இதை உங்கக்கிட்டதான் நான் கொடுத்து இருக்கணும்! மறைச்சு வச்சது தப்பு.” எனப் பணத்தை நீட்டியவளின் கரம் பற்றி தடுத்து,
“இதுல தப்பு எதுவும் இல்ல. அது, உன்னோட காசு. நீதான் வச்சுக்கணும். பிள்ளையை வளர்க்கிறது எங்க கடமை. அதுக்குக் காசு வாங்குனா, அதெப்படி நல்ல குடும்பமாகும்? ஆமா, உன்னை இத்தனை வருஷம் பார்த்துக்கிட்டதுக்கு இந்த நூத்தி எழுபது ஈடாகுமா, சொல்லு?
கொடுக்கிறதா இருந்தா எவ்வளவு கொடுக்கணும்னு தெரியுமா? ஆனா, காசுக்கு மேல நீ நிறைய செஞ்சிருக்க. வீட்டு வேலை, செல்வாவைப் பார்த்துக்கிறதுனு. அந்த உதவி எல்லாம் நீ எனக்குச் செய்யலேனா, நான் நாள் தவறாம வேலைக்குப் போயி வந்திருக்க முடியாது.
போற வீட்டுல புருஷன், மாமியார், மாமனார்னு அவங்க சொல்லுறதைக் கேட்டு நடந்துக்க. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. உனக்கு அவங்க வீட்டுப் பழக்க வழக்கமோ, நடைமுறையோ தெரியாம இருக்கலாம். அதைச் சங்கடப்படாம கேட்டுத் தெரிஞ்சிக்க. சிலது பிடிக்காம போகலாம். பரவாயில்ல, கொஞ்சம் அனுசரிச்சுக்க.
அதுக்குனு எப்பவும் அப்படியே இருக்கணும்னு அவசியம் இல்ல. ஏதாவது சங்கடமா இருந்தா, மனசுல வச்சுக்காம வாய்விட்டு சொல்லீடு. சண்டை வந்தாலும் பரவாயில்ல, சமாதானம் பேசிக்கலாம்.
சகிச்சுக்க முடியாத அளவுக்கு ஏதாவது நடந்தா, உடனே கிளம்பி வந்துடு. நானும் அப்பாவும் இருக்கோம், பார்த்துக்குறோம். இந்தா, அந்த காசோட இதையும் சேர்த்து வச்சுக்க!” என்று ஐந்தாயிரம் பணத்தை அவளின் கரத்தில் கொடுத்தார் காளீஸ்வரி.
எப்பொழுதும் வேலை ஏவிக் கொண்டு, உயர்ந்த குரலில் கண்டிப்புடனே நடந்து கொள்ளும் சிற்றன்னைக்கு, இப்படி ஒரு முகம் இருக்கும் என்று அவள் கற்பனை செய்து கூடப் பார்த்தது இல்ல.
“சித்தி!” என உரைத்தவளிற்குக் கண்கள் கலங்கிட,
“எதுக்கும் யாரைப் பார்த்தும் பயப்படக் கூடாது. நீ அவ்வளவா படிக்கல. அதுனால பொது இடத்துக்குப் போகும் போது, நல்லா படிச்சவங்களைப் பார்த்தா கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்கும். பரவாயில்ல, கடந்து வந்துடு.
ஆனா, உன்னால உழைக்க முடியும். எப்படி அசராம வேலைப் பார்க்கிறதுனு, நான் கத்துக் கொடுத்திருக்கேன். தேவைப்படும் போது, உனக்காகனு ஏதாவது ஒரு வேலையைத் தேடிக்க. இது எல்லாத்தையும் விட, முக்கியமான விசயம் ஒன்னு இருக்கு. நல்லா சாப்பிடு. உடம்பைப் பார்த்துக்கோ.
இந்தா உனக்காகனு இந்த ஃபோன் வாங்கிட்டு வந்தாரு அப்பா. வச்சுக்கோ. என் நம்பரும் அப்பா நம்பரும் தெரியும் தான? ஏதாவதுனா ஃபோன் போடு. காசு தேவைப்பட்டாலும் கேளு. நான் வந்து தர்றேன். சரியா?” என்று தாய் தந்தை இருவரும் இணைந்து சொல்ல வேண்டியதைச் சிற்றன்னையான அவரே உரைத்து முடித்தார்.
உண்மையில் ராஜாவும் காளீஸ்வரியும் அவளிடம் பேசிய பின்னர் தான், நிகழப் போகும் திருமணத்தை முழுமையாய் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தாள் கனி.
நொடிப் பொழுதில் சட்டென்று உறுதியான மனிதியாக மாறி விடும் திறம் பெற்றது பெண் இனம். பத்து மாதங்கள் பயந்து கொண்டே இருந்தாலும், பிரசவத்தைத் துணிவுடன் எதிர்கொள்ளும் குணம் கொண்டவர்கள். அதே போலான மாற்றம் தான், கனியிடமும் நிகழ்ந்து இருந்தது.
திருமணம் என்ற ஒற்றைச் சொல்லும் அதன் பின்னர் நடந்த தயாரிப்புகளும், ‘அவ்வுறவில் ஒரு பெண்ணிற்கான கடமை யாது? குணம், செயல், சிந்தனை எல்லாம் எவ்வகையில் மாற்றம் பெற வேண்டும்?’ என நான்கு தினங்களிலேயே ஓரளவிற்குப் புரிதலைக் கொடுத்து இருந்தது.
அந்தப் புரிதலின் மூலமாய் திருமணத்திற்குப் பின்பான வாழ்விற்குத் தக்கபடி, தன்னைச் சிறிது சிறிதாய் அரங்கேற்றிக் கொள்ளத் தொடங்கினாள் ஆசைக்கனி.

