
மாயோன் 25
தேவன் சக்ரவர்த்தியிடம் பேசிவிட்டு நேராக அர்ஜுனின் அறைக்குள் நுழைந்தான் விக்ரமன்.
செல்லும் அவனை புருவம் சுருக்கி பார்த்த விஜய், அவனது வேகநடைக்கு ஈடுகொடுத்து தானும் அவன் பின்னால் சென்றான்.
“என்ன ஆச்சு விக்ரமன் ? ” என்று கேட்ட விஜயை திரும்பி ஒரு பார்வை பார்த்த விக்ரமன், எதுவும் பேசாமல் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தான்.
” என்ன விக்ரமன் இது? வெளியே அம்மா சடலத்தை வெச்சிட்டு, அங்க இல்லாமல் இங்க வந்து உட்கார்ந்து இருக்க? ஏதாவது பிரச்சனையா? ”
” சொல்லுறேன் விஜய், கொஞ்சம் பரதனை வர சொல்லுறியா? ” என்ற விக்ரமன், சிசிடீவியை ஆராயதொடங்கினான்.
“சரி ” என்று கூறிய விஜய் பரதனை அழைத்து கொண்டு உள்ளே வந்தான்.
” வர சொன்னிங்களா அண்ணா? ” என்று பரதன் கேட்க…
” ம்ம்ம்… வர்ஷாவுக்கும் உனக்கும் ஏதாவது பிரச்சனையா? ”
” அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே அண்ணா ” என்று தலைகுனிந்து கூறிய பரதனை புருவம் உயர்த்தி பார்த்தான் விக்ரமன்.
” உண்மையா ஒன்னும் இல்லையா? ” என்று விக்ரமன் சற்று அழுத்தமாக பரதனிடம் கேட்டான்.
பரதன் வர்ஷாவிடம் சரியாக பேசிக்கொள்வது இல்லை என்று இங்கு வந்த இரண்டாவது நாளே கண்டு கொண்டான் சத்யன். அதனை விக்ரமனிடமும் ஏற்கனவே கூறி இருந்தான்.
” இல்லை அண்ணா? ”
“ஒஹ்.. இங்க பாரு பரதா.. உன்கிட்ட வாக்குவாதம் பண்ண எனக்கு நேரம் இல்லை.. வர்ஷா விஷயத்தில் நான் இல்லாத சமயம் இங்க நடந்த உனக்கு தெரிந்த எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லு.. இப்போ அவள் வீட்டுல இல்லை, அதை பத்தி கொஞ்சமாவது யோசிச்சயா நீ..? என்ன தான் நமக்கு ஒருத்தர் மேல கோவம் இருந்தாலும் அவங்க எப்படி போனாலும் பரவாயில்லைன்னு சொல்லி விட்டிடுவியா? உன்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல பரதா? ”
” என்ன அண்ணா சொல்லுறீங்க? காணாமல் போக எல்லாம் வாய்ப்பில்லை.. வேற எங்கேயாவது போயிருப்பாள். ” என்று அதியனுடனான அவளது உறவுமுறையை மனதில் வைத்து கொண்டு பரதன் கூறினான்.
” நல்ல பொறுப்பான பதில்டா.. இந்த லச்சனத்தில நீ எல்லாம் போலீஸ் ஆகி என்ன தான் பண்ண போறியோ தெரியல… வீட்டுல ஒருத்தர் இல்லங்குறது கூட உனக்கு தெரியல ”
” இல்லை அண்ணா.. நான் அவள் கிட்ட பேசி ரொம்ப நாள் ஆகுது.. அவள் மேல இருந்த கோபத்தில தான் ”
” அவள் நம்ம வீட்டு பொண்ணுடா என்ன தான் அவள் மேல கோபம் இருந்தாலும் இது எல்லாம் தப்புடா.. அப்படி அவள் என்னடா தப்பு பண்ணா?.. பொய் சொல்ல முயற்சி பண்ணாத!! என்ன விஷயமா இருந்தாலும் என்கிட்ட மறைக்காமல் சொல்லு ” என்று விக்ரமன் சற்று காட்டமாக கேட்க, முதலில் தயங்கிய பரதன்.. பின்னர் அவனிடம் நடந்த அனைத்தையும் தனக்கு தெரிந்த வரை கூறினான். வர்ஷா அதியனை காதலித்ததையும் மேலும் அவர்கள் கன்னியாகுமரி வரை சென்று வந்ததையும், அதனை பற்றி தான் கேட்டதையும் என அனைத்தையும் விக்ரமனிடம் கூறினான் பரதன்.
அவன் கூறிய அடுத்த நொடி விக்ரமனது கரம் பரதனின் கன்னத்தில் இடியாய் இறங்கியது.
“இதெல்லாம் முன்னாடியே என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்லையா? நீ அப்படி சொல்லி இருந்தால், இப்போ இந்த பிரச்சனை இவ்வளவு தூரம் வந்து இருக்காது.. ”
“இல்ல அண்ணா வர்ஷா தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டா, இப்போ அவள் எங்க அண்ணா?”
“அவளை உன்னை நம்பி விட்டுட்டு போனேன் பாரு, அது தான் நான் பண்ண பெரிய தப்பு” என்ற விக்ரமன் அங்கிருந்து செல்ல பார்க்க..
” அண்ணா ஒருவேளை அந்த அதியன் ஏதாவது பண்ணி இருப்பானோ ? ” என்று பரதன் சொன்னான்.
“கண்டிப்பா அவனால அவளுக்கு எந்த பிரச்சனையும் வராது..” என்று விக்ரமன் நம்பிக்கையுடன் கூறினான்.
“ஏன் அண்ணா அவன் உங்க சொந்த தம்பி அப்படிங்குறதால வந்த நம்பிக்கையா இது?” என்று பரதன் கேட்க.. அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்த விக்ரமன்.
“அவன் என் தம்பின்னா அப்போ நீ யாருடா?.. தப்பு பண்ணது என் தம்பியா இருந்தாலும் கண்டிப்பா தண்டனை கிடைக்கும்.. என் வாழ்க்கையில் நான் இப்போவரை உங்களையும் அவனையும் பிரிச்சு பார்த்தது இல்லை” என்ற விக்ரமனின் வார்த்தையில் வெளிப்பட்ட வலியை அவன் மட்டுமே அறிவான்.
யாருக்காக நாம் இவை அனைத்தையும் செய்தோமோ.. அவர்களே நம்மை புரிந்து கொள்ளாமல் பேசும் போது உண்டாகும் வலி அது.
“இல்லை அண்ணா நான் அப்படி சொல்ல வரல ” பரதன் பரிதவிப்புடன் விக்ரமனை பார்த்தான்.
“அவன் எனக்கு தம்பின்னா நீயும் எனக்கு தம்பி தான்.. எனக்கு எல்லாரும் முக்கியம்டா.. வர்ஷா நம்ம வீட்டு பொண்ணு.. அதியனால அவளுக்கு ஒரு கஷ்டம் வந்தால் முதலில் அவனை கேள்வி கேக்குறது நானா தான் இருப்பேன்”
“சாரி அண்ணா.. நான் அப்படி கேட்டு இருக்க கூடாது” என்றவனது தோளில் தட்டிய விக்ரமன்.
“சரி சத்யா எங்கன்னு உனக்கு தெரியுமா? ” என்று அடுத்த கேள்வியை கேட்டான்.
“இல்லண்ணா நானும் இன்னிக்கு காலையில் இருந்து அவனுக்கு கால் பண்ணி பார்க்கிறேன்.. ஆனால் அவன் எடுக்கவே இல்ல.. வர்ஷாவையும் கடைசியா நேத்து நயிட் தான் பார்த்தேன். அண்ணா ஒருவேளை சத்யா? ” என்ற பரதனை முறைத்து பார்த்தான் விக்ரமன்.
பின்னர் வீட்டின் நுழைவாயிலில் இருந்த சிசிடீவி கேமராவை ஆராய ஆரம்பித்தான் விக்ரமன். அவனுடன் விஜயும்,பரதனும் இருந்தனர்.
வர்ஷா நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே செல்வதும்… அவள் சென்ற சிறிது நேரத்தில் சத்யனும் வீட்டில் இருந்து வெளியே செல்வதும்… வரை பதிவாகி இருந்தது… பின்னர் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு விஜய் வீட்டிற்கு வந்ததும்… வந்த கையோடு சிறிது நேரத்தில் அவன் கையில் ஒரு பொருளுடன் திரும்பி செல்வதும் இருந்தது… அவன் கையில் இருந்த பொருள் சிசிடீவியில் தெளிவாக தெரியவில்லை…
” அது ஒரு மெட்டல் பாக்ஸ் விக்ரமன்… கேஸ் விஷயமா கொண்டு வந்திருந்தேன்.. அதை தான் திரும்ப எடுத்துட்டு போறேன் ” என்று விஜய் உடனே கூறினான்..
” நான் எதுவும் கேட்கலையே விஜய் ” என்று விக்ரமன் அவனை நிதானமாக பார்த்தான். ஏனோ அங்கு பதிவான காட்சி விக்ரமனின் மனதில் முதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது.. ஆனால் அவன் அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. தன் சந்தேகத்தை வெளிக்காட்டி கொள்ளவும் இல்லை.
வர்ஷா சென்ற சிறிது நேரத்திற்கு பிறகு சத்யனது கார் செல்வதை பார்த்த பரதன் ” நான் சொன்னேன் இல்லை அண்ணா அவன் எதுக்கு அவள் போன கொஞ்சம் நேரம் கழிச்சி வீட்டை விட்டு வெளியே போகணும் அவன் தான் ஏதாவது … ” என்று ஆரம்பித்தவனை சலிப்பாக பார்த்தான் விக்ரமன். அவனது பார்வையில் பரதனது வாய் மூடிக்கொண்டது.
” சரி நேத்து நயிட் பத்து மணிக்கு நீ எதுக்கு வெளியே போன? போயிட்டு எப்போ வீட்டுக்கு வந்த? ” என்று பரதனிடம் கேட்டான் விக்ரமன்.
” நேத்து நயிட் என் பிரெண்ட் பர்த்டே பார்ட்டிக்கு போய்ட்டு, நயிட் பிரெண்ட் வீட்டுலையே ஸ்டே பண்ணிட்டேன். அப்ரோம் தான் காலையில் அப்பா கைதான விஷயமும்… அம்மாவை ஹாஸ்பிட்டல்ல சேர்த்ததும் எனக்கு தெரியும்… இந்த பிரச்சனையில் வர்ஷாவை கவனிக்க முடியல அண்ணா ”
“அப்போ அம்மாக்கு ஹார்ட் அட்டாக் வரும் போது நீ அவங்க பக்கத்துல இல்லயா? அப்போ யாரு அவங்களை ஹாஸ்பிட்டல் அழைச்சுட்டு போனது ”
” பரதன் அப்போ வீட்டுல இல்லை விக்ரமா.. அதனால நான் தான் அர்ஜுன் சார் விஷயத்தை அவங்க கிட்ட சொன்னேன்.. சொன்ன உடனே நெஞ்சைவலிக்குதுன்னு மயங்கி விழுந்துட்டாங்க… அதுக்கு அப்ரோம் தான் நான் அவங்களை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு… பரதனுக்கு தகவல் சொன்னேன் ” என்று கூறினான் விஜய்.
அவன் கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த விக்ரமன்.. ” சரி நீங்க கிளம்புங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ” என்றான்.
” என்ன விக்ரமா இது இறந்தவங்களை நடுவீட்டுல போட்டுட்டு நீ ஏதோ வேலைன்னு சொல்லிட்டு இருக்க? ” என்று விஜய் ஆதங்கபட்டு கேட்டான்.
” இதுக்கு மேல வேற யாருக்கும் எதுவும் ஆகிட கூடாதுன்னு தான் இங்க இருக்கேன். வேற ஏதாவது தெரியணுமா என்ன? கேள்வி கேட்டு முடிஞ்சுதுன்னா நீங்க ரெண்டு பேரும் கிளம்பலாம். ” என்று விக்ரமன் கூற பரதனும், விஜயும் வெளியே வந்தனர்.
அன்று இரவு நேரம் என்பதால் அடுத்த நாள் தான் ஜோதியின் சடலத்தை எடுப்பதாக இருந்தது.
பின்னர் மீண்டும் சிசிடீவியை ஆராய்ந்தான் விக்ரமன்… அர்ஜுன் கைதாகும் போது மணி பத்து.. விஜய் ஜோதியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது மணி காலை பதினொன்றாக இருந்தது.. அனைத்தையும் பார்த்து முடிந்துவிட்டு
ஒருமணி நேரம் கழித்து தன் அறையில் இருந்து வெளியே வந்த விக்ரமனது கண்கள் அக்னிக்கு ஒப்பாக சிவந்திருந்தது. அவன் வரும் வரை அறைக்கு வெளியே நின்றிருந்தனர் பரதனும், விஜயும்..
” என்ன ஆச்சு அண்ணா ? ” என்று பரதன் கேட்க… அவனது கேள்விக்கு பதில் கொடுக்காத விக்ரமன்.
” ஹான் விஜய் அம்மாவை எந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருந்த? ” நிதானமாக கேட்டான்.
” எதுக்கு விக்ரமா? ” விஜயின் முகம் யோசனையை பூசிக்கொண்டது.
” சும்மா தான் தெரிஞ்சுகலாம்னு கேக்குறேன் ”
” *** ஹாஸ்பிட்டல் விக்ரமா ” என்று கூறியவனை பார்த்து மெலிதாக புன்னைகைத்த விக்ரமன்.. ” போகலாமா ? ” என்று கேட்டு வாசலை நோக்கி கை காட்டினான்.
” எங்க விக்ரமா? ” என்று விஜய் கேட்க..
” என்ன விஜய் நீ.. என் பிரெண்டு நீ.. நான் வர சொன்னா அது சுடுகாடா இருந்தால் கூட நீ வரணும்.. அது தானே நட்புக்கு நம்ம கொடுக்குற மரியாதை.. ”
” இல்லை விக்ரமா எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.. ”
” எனக்கும் தான் விஜய், வா ” என்று கூறிய விக்ரமன் விஜயின் தோளில் கைபோட்டு அவனை அழைத்து சென்றான்.
தேவன் சக்ரவர்த்தி இங்கிருந்து செல்லும் போதே அவரை பின் தொடரும்படி தனது ஆட்களிடம் கூறி இருந்தான் விக்ரமன்.
அவர்கள் பின்தொடர்வதை ஒரு கட்டத்தில் கண்டு கொண்ட தேவன்.. அது விக்ரமனுடைய பிளான் தான் என்று அறிந்து கொண்டு.. வேண்டுமென்றே அந்த ஊர் முழுக்க சுற்றிய இடத்திலேயே காரில் சுற்றி கொண்டிருந்தார்.
காரில் சென்றவாறு தனது ஆட்களுக்கு போன் போட்டான் விக்ரமன் ” என்ன ஆச்சு ? ” என்று கேட்டான்.
” அவர் சுத்தின இடத்துலயே சுத்திட்டு இருக்காரு சார்… எங்கயும் நிக்கிற மாதிரி தெரியல ” என்று அவர்கள் கூற.. தேவன் சுதாரித்து கொண்டார் என்பதை அறிந்து கொண்டான் விக்ரமன்.
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்த விக்ரமனுக்கு திடீரென ஒரு யோசனை வந்தது.
அடுத்ததாக விஜயை அழைத்து கொண்டு அதியனை காண சென்றான் விக்ரமன்.
அதியனும் சரத்தும் இரண்டு வருடமாக தனியாக தங்கி இருப்பது விக்ரமனுக்கு ஏற்கனவே தெரியும் என்பதனால் நேராக அவர்கள் தங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுஸ்க்கு விஜயை அழைத்துக் கொண்டு சென்றான்.
வீட்டில் அதியன், சரத் என யாரும் இல்லை.. அவர்கள் வீட்டிற்கு வாட்ச்மேன் கூட இல்லை..
வீட்டிற்கு வந்த விக்ரமன் கதவினை திறந்து பார்க்க முயன்றான்.. கதவு பூட்டி இருந்தது… ஏதோ யோசனையுடன் மீண்டும் கார் நோக்கி வந்தவன். காரில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து கதவினை நோக்கி சுட்டவன் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
உள்ளே வந்தவனது கண்ணில் பட்டது ஹாலில் இருந்த அதியனது டைரி தான். அதனை புருவம் சுருக்கி பார்த்த விக்ரமன் அதனை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.
அதனை படித்து முடித்தவனது கண்கள் கலங்கி போனது..
ஒவ்வொரு நொடியும் அதியன் தன்னை தேடி இருக்கிறான், என்பதை அந்த டைரியின் மூலம் அறிந்து கொண்டான் விக்ரமன். மேலும் வர்ஷாவின் மீது அவன் கொண்ட உண்மை காதலையும் அறிந்து கொண்டான்.
அவனது அமைதியை கண்டு ” என்ன விக்ரமா? ” என்று கேட்டான் விஜய்.
” ஒன்னும் இல்லை ” என்றவன் அடுத்ததாக சென்றது பூபாலன் சக்ரவர்த்தியின் இல்லத்திற்கு தான்.
விகர்மனை கண்ட பூபாலன் ” நீ எதுக்கு இங்க வந்த ? இன்னிக்கு பணத்துக்காக உன் அப்பன் பார்த்த வேலையில என் மானமே போய் இருக்கும்.. நல்லவேளை அவன் இந்த வீட்டுல இல்லை அதனால என் குடும்ப மானம் தப்பிச்சுது ” என்றவரை எரிச்சலுடன் பார்த்தான் விக்ரமன்.
” அந்த மானத்தை மூட்டை கட்டி வச்சுக்கோங்க.. நீங்க போற காலத்துக்கு உங்களுக்கு உபயோகமா இருக்கும் ” என்று நக்கலுடன் கூறினான் விக்ரமன்.
“இப்போ எதுக்கு இங்க வந்தா உன் ஆத்தாகாரி செத்ததுக்கு நான் வரணும்னு எதிர்பாக்குறியோ? ”
” எங்க அம்மாவுக்கு நாங்க இருக்கோம் உங்களை மாதிரி ஆளுங்க கருணையோ.. பரிதாபமோ அவங்க சடலத்துக்கு கூட தேவை இல்லை. ” என்றவன் நேராக அந்த வீடு முழுக்க தேட தொடங்கினான்… அதியன் மற்றும் சரத்தை..
” டேய் எங்கடா போற? “என்று கேட்டவரை பொருட்படுத்தாமல் வீடு முழுக்க தேடிவிட்டு இறுதியாக அவர் அருகில் வந்தவன் ” அதியன் எங்க? “என்று கேட்டான்.
” என் பேரனை நீ ஏன்டா தேடுற? ” என்றவரின் தொண்டைகுழியில் நொடியில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான் விக்ரமன்.
” இப்போ சொல்லுறீங்களா? இல்லை ? ” என்று கேட்டவன் துப்பாக்கியை அழுத்த.. அரண்டு போனார் பூபாலன் இருந்தும் ஒரு வார்த்தை பேசவில்லை.
” மிஸ்டர் பூபாலன் சக்ரவர்த்தி… என் பொறுமையை சோதிக்காதிங்க பதில் சொல்லுங்க ? ” என்று விக்ரமன் கேட்க..
” அவரை ஒன்னும் பண்ணிடாத? அதியன் இங்க இல்லை .. அவனுங்க எங்கன்னு எங்களுக்கு தெரியாது…அவனுங்க இந்த வீட்டுக்கு வந்தே ரொம்ப நாள் ஆகுது.. நேத்து நயிட் தான் போன் பண்ணி ரெண்டு பேரும் வெளிநாடு போறதா சொன்னாங்க… அவனுங்க நம்பர் கூட இப்போ எடுக்கல ” என்று தன் தந்தையின் கழுத்தில் துப்பாக்கியை வைத்ததை பார்த்து, தேவனது தந்தை ராஜன் வெளியே வந்து இதனை கூறினார்.
அவரை திரும்பி பார்த்த விக்ரமன்… அவரது கண்ணில் தெரிந்த உண்மையை உணர்ந்து அங்கிருந்து சென்றான்.
அவர்கள் அங்கும் இல்லை என்பதை அறிந்து கொண்ட விக்ரமனுக்கு அவர்கள் இருவரையும் அறிந்த நந்தினியே ஒரே இறுதி வாய்ப்பாக இருந்தாள். வர்ஷாவிற்கு யாருடன் என்ன பிரச்சனை என்பதை முதலில் அறிந்து கொள்ள நினைத்தான் விக்ரமன்.
நந்தினியும் சரத்தும் ஒன்றாக படித்தவர்கள் மேலும் நெருங்கிய நண்பர்கள் என விக்ரமன் நன்கறிவான்.
அதனால் அடுத்ததாக நந்தினியை காண விஜயை அழைத்துக்கொண்டு நேராக அவளது வீட்டிற்குச் சென்றவன் அவள் வீட்டிற்கு சிறிது தூரம் இருக்கும் பொழுது வண்டியை நிறுத்தினான்.
” என்ன ஆச்சு விக்ரமா? ”
” ஒரு நிமிஷம் ” என்ற விக்ரமன் தன் அலைபேசியை எடுத்து நந்தினிக்கு அழைத்தான்.
அலைபேசியின் திரையில் விக்ரமனது எண்ணை கண்ட நந்தினிக்கு ஒரு கணம் உடல் நடுக்கம் கொண்டது.
‘இவன் எப்படி? ஒருவேளை அந்த பைல் விஷயம் ஏதாவது அவனுக்கு தெரிந்து இருக்குமோ’ என்று மனதில் குழம்பியபடியே கண்களில் கலவரத்தோடு அழைப்பை ஏற்றாள் நந்தினி.
” என்ன விஷயம் ஆச்சர்யமா இருக்கு நீங்க எனக்கு கால் பண்ணி இருக்கீங்க? ” என்று பயத்தை மறைத்து நிதானமாக கேட்டாள் நந்தினி.
” இந்த இன்னசென்ட ஆக்டிக் எல்லாம் விட்டுட்டு வெளியே வரியா? உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ” என்று விக்ரமன் கூறினான்.
” இந்த நேரத்துலயா? எனக்கு வேலை இருக்கு என்னால வர முடியாது ”
” அப்போ சரி நானே உன் வீட்டுக்கு வரேன்.. அங்க வந்து வர்ஷாவை பத்தி கேட்டுக்குறேன் ”
” இல்லை வர்ஷாவை பத்தி எனக்கு எதுவும் தெரியாது… ” என்ற அவளது பதட்டமே காட்டி கொடுத்தது நந்தினிக்கு ஏதோ ஒரு விஷயம் இதை பற்றி தெரியும் என்று..
” அதை கொஞ்சம் வெளியே வந்து சொல்லுறியா? இல்லை ? ”
” சரி நான் வரேன்.. எங்க இருக்கீங்க? “என்று கேட்டவள் சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தாள்.
நேற்று நடந்த நினைவுகளை எல்லாம் எண்ணி உள்ளுக்குள் அச்சத்துடன் இருந்தாலும் வெளியே அதனை காட்டிக் கொள்ளாமல் திமிருடன் அவன் முன் நின்றாள் நந்தினி.
” எதுக்கு வர சொன்னிங்க? வர்ஷா உங்க வீட்டு பொண்ணுன்னு எல்லாம் எனக்கு ஆரம்பத்தில் தெரியாது… நான் தான் அவளை வேலைக்கு சேர்த்து விட்டேன்.. அந்த நன்றி கூட இல்லாமல் என்கிட்ட ஒரு தகவலும் கொடுக்காமல் வேலையை விட்டு நின்னுட்டாள். இப்போ அவள் அங்க வேலைக்கு வருவது இல்லை, நான் அவளை பார்த்து ஒரு மாசம் இருக்கும்.. எனக்கு வேற எதுவும் தெறியாது. ” என்று படபடவென கூறினாள் நந்தினி..
சரத் கூறிய பின் தான் நந்தினிக்கே வர்ஷா விக்ரமன் வீட்டு பெண் என்று தெரியவந்தது.
” அந்த கதை எல்லாம் எனக்கு தேவை இல்லை… ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு ” என விக்ரமன் அவளை அழுத்தமான பார்வை பார்க்க..
“என்ன ? ”
“தேவன் விஷயத்துல அவருக்கும் வர்ஷாவுக்கும் ஏதாவது பிரச்சனை இருந்ததா? அப்படி இருந்தால் அது என்னன்னு என்கிட்ட சொல்லு ”
“இது என்ன அநியாயமா இருக்கு அவருக்கும் அவளுக்கும் இடையே பிரச்சனை இருந்தால் அது அவங்களுக்கு தானே தெரியும் எனக்கு எப்படி தெரியும்? ” என்று திமிராக பதில் கூறினாள் நந்தினி.
“நல்ல பதில்! இதை தான் நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்த்தேன் அப்போ உனக்கு எதுவும் தெரியாது அப்படித்தானே?”
“எனக்கு எதுவும் தெரியாது… நான் அவளை பார்த்தே பல நாள் ஆச்சு.. நானும் இப்போ லேபுக்கு போறது இல்லை.. வேற ஒரு ஹாஸ்பிட்டல்ல தான் வேலை பாக்குறேன்.. ”
” ம்ம்ம்… சரி… ஒருவேளை உனக்கும் வர்ஷா காணாமல் போன விஷயத்துக்கும் ஏதாவது ஒரு சம்பந்தம் இருக்கும்னு எனக்குத் தெரிய வந்தால், அதுக்கப்புறம் உன் நிலைமை ரொம்ப மோசம் ஆயிடும் நந்தினி மைண்ட் இட்..” என்ற விக்ரமன் அங்கிருந்து வெளியே செல்லும் முன் அவனை அழைத்தால் நந்தினி.
“அவ மேல அவ்வளவு பாசமா விக்ரமன்?” என்று நக்கல் பொதிந்த குரலில் அவள் கேட்க.. இதழ் வளைத்து சிரித்தான் விக்ரமன்
“பாசம்னா என்னனு தெரியாத உனக்கு.. நான் என்ன பதில் சொன்னாலும் புரியாது” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றான்.
அவன் அங்கிருந்து சென்ற அடுத்த நொடி… தேவனிடம் இருந்து விக்ரமனுக்கு அழைப்பு வந்தது.. அழைப்பை ஏற்றான் விக்ரமன்.
” என்ன விக்ரம் நீ.. இப்போ எதுக்காக என் வீடு.. அதியன் வீடு, நந்தினி வீடுன்னு போய் டைம் வேஸ்ட் பண்ணுற? உனக்கு அவளை உயிரோட பார்க்கணுங்குற ஆசை இல்லை போல? இன்னும் வெறும் ரெண்டு மணி நேரம் தான் இருக்கு விக்ரமா?? நான் கூட உன்னை என்னமோன்னு நெனச்ச ஆனால் நீ என்னன்னா?..
இந்த வேகத்தில் அவளை தேடினால் உன்னால அவளை கல்லறையில் கூட பார்க்க முடியாது.. ” என்று தேவன் கூற.. பின்னால் திரும்பி நந்தினியை பார்த்தவன்… அப்படியே தனக்கு முன்னால் நின்ற விஜயை பார்த்தான்.. அவனது இதழ்கள் மெல்ல விரிந்து கொண்டது.
” தப்பு பண்ணிட்டீங்களே தேவன்… நான் என்ன உங்களை போல சும்மா ஊர் சுத்திட்டு இருக்கேன்னு நினைச்சிங்களா? இன்னும் ரெண்டே மணி நேரம்.. வர்ஷாவை பார்த்துட்டு உங்க கிட்ட வரேன்.. ” என்று கூறி அழைப்பை துண்டிந்தான் விக்ரமன்.. அவனது பதிலில் தேவனது முகம் ஒரு நொடி வெளிறி போனது..
” என்ன விக்ரமா நீ வர்ஷாவை காணோம்ன்னு சொல்லுற? ஆனால் அவளை இப்படி தேடி எப்படி கண்டு பிடிப்ப? உன்னை நீயே ஏன் வருத்திக்கிற? ஒரு கம்ப்ளைண்ட் கொடு.. மீதி எல்லாம் எங்க டீம் பார்த்துப்பாங்க ” என்று விஜய் கூறினான்.
” அது என் பிரச்சனை விஜய் நான் பார்த்துக்குறேன் ” என்றவன் விஜயை அழைத்து கொண்டு அடுத்து சென்றது ஆள் இல்லாத ஒரு காட்டிற்கு தான்.
” இங்க எதுக்கு வந்து இருக்கோம் விக்ரமா? ” என்று கேட்டபடி காரில் இருந்து கீழே இறங்கினான் விஜய்.
” காரணமா தான் விஜய்.. நீ வர்ஷா காணாமல் போனதை பத்தி என்ன நினைக்கிற? ”
” நான் இதுல நினைக்க என்னடா இருக்கு? ஆனால் தேவை இல்லாமல் இந்த தேவன் உன்னை சுத்தலில் விடுறாருன்னு நினைக்கிறேன்.. எனக்கு என்னமோ பரதன் சொன்ன மாதிரி அந்த சத்யன் மேல தான் டவுட் இருக்கு… நானே ஒரு முறை சத்யா அவள் கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணத பார்த்திருக்கேன் ” என்று கூறிய விஜயை.. பார்த்து மெலிதாக புன்னகைத்துக் கொண்டான் விக்ரமன்…
” தேவன் பத்தி நான் உன்கிட்ட இதுவரை எதுவுமே சொல்லலையே விஜய்.. உனக்கு எப்படி தெரியும்? ” என்று விக்ரமன் கேட்க..
” இல்லைடா.. அவர் வந்து உன்கிட்ட பேசிட்டு போன அப்ரோம் தான் நீ ஒரு மாதிரி பதட்டமா இருக்க.. அது தான் ஒரு யூகத்தில் கேட்டேன் ”
” ஒஹ்… சரி சரி.. அப்ரோம் எங்க அம்மாவுக்கு எப்போ ஹார்ட் அட்டாக் வந்தது நீ எப்போ அவங்களை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போன ? ”
“அது அது.. காலையில் ஒரு பதினோரு மணி இருக்கும்டா.. ” என்று அவன் கூறிய நொடி அவனது தலையை பிடித்து வேகமாக காரில் மோதினான் விக்ரமன்.
தலையில் ரத்தம் வடிய கிடைந்த விஜயின் சட்டையை கொத்தாக பிடித்து தூக்கிய விக்ரமன்..
” என்னை என்ன முட்டாள்னு நெனச்சியாடா? என் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்கா? உன்னை நம்பி என் வீட்டுக்குள்ள விட்டதுக்கு.. என் அம்மா உயிரையே எடுத்துட்டியேடா.. அத்தனையும் பண்ணிட்டு எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்தால்… என் முன்னாடி தைரியமா நின்னு கதை சொல்லுவ? ” என்றவன் விஜயை மாறி மாறி அடிக்க ஆரம்பித்தான்.

