
மாயோன் 26
நேற்று இரவு ..
கீழே விழுந்து கிடந்த அந்த ஒப்பந்த பத்திரத்தை புருவம் சுருக்கி பார்த்தாள் வர்ஷா… அவளுக்கு அது என்னவென்று எதுவுமே புரியவில்லை…
அதனை படித்து பார்த்தவளுக்கு, அது ஏதோ ஒரு ஒப்பந்தம் கையெழுத்தான பத்திரம் என்று மட்டுமே புரிந்தது.
” இது முக்கியமான பத்திரமா இருக்குமோ? என்னனு வேற தெரியலயே.. இதுல நந்தினி அக்கா கையெழுத்து இருக்கு, பேசாமல் அவங்க கிட்ட போன் பண்ணி கேட்போம் ” என்று எண்ணியவள் நந்தினிக்கு அழைக்க…
அலைபேசியின் திரையில் வர்ஷாவின் எண்ணை பார்த்த நந்தினி ‘ இவள் எதுக்கு இப்போ நமக்கு கால் பண்ணுறாள் ‘ என்று யோசித்தப்படி அழைப்பை ஏற்றாள்..
” நந்தினி அக்கா ”
” ம்ம்ம் சொல்லு ”
” ஒரு முக்கியமான விஷயம் உங்க கிட்ட பேசணும்.. எங்க இருக்கீங்க ? ”
” நான் லேப்ல இருக்கேன் ” என்று கூறிய நந்தினியின் அலைபேசி சார்ஜ் இல்லாமல் ஆப் ஆனது.
” ஹலோ ஹலோ ” என்று இந்த முனையில் அழைத்து பார்த்த வர்ஷா.. மீண்டும் நந்தினிக்கு அழைக்க.. எதிர்முனையில் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது…
” ஒருவேளை இது முக்கியமான பையிலா இருந்து, இப்போ நான் அதை எடுத்துட்டு போகும் போது தேவன் சார் பார்த்துட்டாருன்னா? நான் வேணும்னே எடுத்து வச்ச மாதிரி ஏதாவது நெனச்சு தப்பா பேசிட்டா என்ன பண்ணுறது? நந்தினி அக்கா லேப்ல தானே இருக்காங்க, முதலில் அக்கா கிட்ட இந்த பைலை பத்தி கேட்டுட்டு அப்ரோம் அவங்க கிட்ட கொடுத்து தேவன் சார் கிட்ட கொடுக்க சொல்லிடுவோம் அது வரை இது இங்கயே பாதுகாப்பா இருக்கட்டும்” என்றவள் ஆய்வகத்திற்கு செல்லும் முன்.. அந்த ஒப்பந்த பத்திரத்தை எடுத்து ஒரு மெட்டல் பாக்ஸ் உள்ளே வைத்தாள்.
அந்த மெட்டல் பாக்சுக்கு என பிரத்யேகமாக செய்யப்பட்ட திறப்பினை கொண்டு மட்டுமே அதனை திறக்கவோ அல்லது மூடவோ முடியும்.. ஒப்பந்த பத்திரத்தை அதனுள் வைத்தவள் அந்த திறப்பினை கொண்டு மூடினாள்… பின்னர் அந்த திறப்பை ஒரு மெட்டல் க்யூப்பில் வைத்தாள்.
அந்த மெட்டல் க்யூப் 7 வரி எண்கள் கொண்டது… அந்த மெட்டல் க்யூப் நடுவில் சரியான வரிசையில் குறிப்பிட்ட ஏழு எண்களை வர செய்தால் மட்டுமே அந்த க்யூப் ஓபன் ஆகும்… பின்னர் அது ஒரு பாக்ஸ் போன்ற அமைப்பில் மாறும்.. அதனுள் ஏதாவது ஒரு பொருளை வைத்து அதனை மீண்டும் சுற்றி விட்டால், பின்னர் சரியான எண்ணை வரிசை படுத்தினால் மட்டுமே அந்த க்யூபை திறந்து உள்ளே இருக்கும் பொருளை எடுக்க முடியும்… தவறான வரிசையில் எந்த எண்ணை கொடுத்து அதனை திறக்க முயன்றாலும், அதனை திறக்கவோ அல்லது உடைக்கவோ முடியாது.. சரியான எண்ணை வரிசை படுத்தினால் மட்டுமே அதை திறக்க முடியும்… அப்படி சரியான எண்ணை வரிசைப் படுத்தவில்லை என்றால் கடைசி வரை அந்த க்யூப்பை யாராலும் திறக்க முடியாது.
அதில் கொடுக்கப்படும் எண் வர்ஷாவுக்கு மட்டுமே தெரியும்.. மேலும் அந்த எண் அவள் இடையில் இருக்கும் ஒரு பட்டர் பிளை செயினிலும் பதிக்கப்பட்டிருக்கும்.
வர்ஷா தனது ஹேண்ட் பேக்கை எடுத்து போட்டு கொண்டு வீட்டில் இருந்து கிளம்பினாள்… அதனுள் தான் அந்த மெட்டல் க்யூப் இருந்தது.
வர்ஷா செல்வதை மாடியில் இருந்து பார்த்த சத்யன், இந்நேரத்துக்கு இவள் எங்க போறாள் ? ” என்ற யோசனையுடன் அவன் கீழே இறங்கி வருவதற்குள், அவள் தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தாள்.
வேகமாக தனது காரில் ஏறி அமர்ந்த சத்யன் அவளை பின்தொடர்ந்து சென்றான்.
காரில் வந்தபடியே சத்யா தொடர்ந்து வர்ஷாவுக்கு போன் செய்தான். வாகனங்களின் சத்தத்தில் போன் அடிக்கும் சத்தம் அவளுக்கு கேட்கவில்லை.
வர்ஷா ஆய்வகத்தை அடைந்தாள்.. அங்கிருந்த வாட்ச்மேனுக்கு வர்ஷாவை அடையாளம் தெரியும் என்பதால் எந்த வித கேள்வியும் கேட்காமல் அவளை உள்ளே செல்ல அனுமதித்தார்..
ஆனால் அதன் பிறகு வந்த சத்யாவை அவர் அனுமதிக்கவில்லை..
சத்யாவும் அவள் திரும்பி வரும் வரை வெளியே அவளுக்காக காத்திருக்க முடிவு செய்தான்.
ஆய்வகத்துக்கு உள்ளே வந்த வர்ஷா நேராக தேவனது அறையை நோக்கி செல்ல.. ” அர்ஜுன்.. தடைசெய்யப்பட்ட மருந்து ” என்று தேவனது அறையில் இருந்து பேச்சு வர வர்ஷாவின் கால்கள் அடுத்த அடி எடுத்து வைக்காமல் அப்படியே நின்றது..
காதுகளை கூர்மைப்படுத்தி, அவர்கள் பேசுவதை நிதானமாக கேட்டவள் அதிர்ந்து போனாள்.
“அந்த அர்ஜுன் அவமானப்பட்டு கூனிக்குறுகி நிக்கணும்.. அவனை காப்பாத்த முடியாமல் அவன் குடும்பம் தவிக்கணும் ” என்று ஒருவன் கூற .. அது யார் என்று அறியும் எண்ணத்தில்
அங்கிருந்த சன்னலின் திரையை மெதுவாக நீக்கி உள்ளே பார்த்த வர்ஷாவுக்கு அங்கு விஜய் நிற்பதை கண்டு மேலும் அதிர்ச்சியானாள்.
” அடப்பாவி நீயா ? நீ இவங்க கூட எப்படி? ” என்று மனசுக்குள் துடித்தாள்.
அவர்கள் பேசிக்கொள்வதை வைத்து ஏதோ தவறாக நடக்க இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டவள், உடனே தனது போனை எடுத்து அவர்கள் பேசுவதை அந்த சன்னல் திரை மறைவில் இருந்து வீடியோ பதிவு செய்தாள்.
அர்ஜுனின் காப்பகத்தில் இருந்து அந்த பத்து குழந்தைகளை விஜயின் துணையுடன் கடத்தினான் தேவன்.
தங்களது திட்டம் வெளியே தெரிந்துவிட கூடாது என்பதற்க்காக விஜயையே அந்த கேஸை பார்த்துக்கொள்ளும் படி கூறி இருந்தான். மேலும் இந்த குழந்தைகள் காணாமல் போன விஷயம் விக்ரமன் காதுக்கு போகாதவாறும் பார்த்துக்கொள்ள கூறி இருந்தான் தேவன்.
அர்ஜுன், விக்ரமனிடம் குழந்தைகள் காணாமல் போன விஷயத்தை கூற விழையும் போது, அவனை எதுக்கு அங்கிள் தொல்லை பண்ணுறீங்க? அவனும் எவ்ளோ விஷயத்தை தான் பார்ப்பான்.. இதை விடுங்க, நான் பார்த்துக்குறேன்.. நானும் உங்க பையன் மாதிரி தானே.. ‘ என்று விஜய் கூற.. அர்ஜுன் அந்த விஷயத்தை விக்ரமணிடம் கூறாமல் விட்டுவிட்டார்.
விஜய் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தார் அர்ஜுன். அவனது பேச்சுக்கு மதிப்பு கொடுத்தார். காரணம் அவனையும் தன் மகனாக தான் பார்த்தார் அர்ஜுன்.
கடத்திய அந்த குழந்தைகளின் உடலில், தான் தயாரித்த அந்த தடை செய்யப்பட்ட மருந்தை ஒவ்வொரு டோஸ் ஆக கொடுத்து, அந்த குழந்தைகளை ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி, துடிதுடிக்க கொன்றான் தேவன் சக்ரவர்த்தி.
பின்னர் இறந்த அந்த குழந்தைகளை விஜயின் மூலம், அர்ஜுனின் காப்பகத்தில் புதைத்தான்.
மேலும் தான் தயாரித்த அந்த மருந்துக்களையும் விஜய் உதவியுடன் அர்ஜுன் இடத்தில் வைக்கவைத்தார்.. இதற்கெல்லாம் அர்ஜுன் தான் காரணம் என்ற நிலைமையை உருவாக்கியப்பின் அதன் மூலம் அர்ஜுனை கைது செய்து சிறையில் அடைப்பது தான் அவர்களது திட்டமாக இருந்தது..
அதனை பற்றி அவர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை பேசியது அனைத்தையும் வர்ஷா ஒன்றுவிடாமல் அவளது போனில் வீடியோ பதிவு செய்தாள்..
விஜயின் தந்தை அர்ஜுனின் மருத்துவனையில் பணிபுரிந்தவர், அங்கு மருத்துவமனைக்கு வரும் எளியவர்களின் உடல் உறுப்புகளை எல்லாம் திருடி, கடத்தி வெளிநாடுகளுக்கு விற்றுக் கொண்டிருந்தார் விஜயின் தந்தை. அதனை கண்டுபிடித்த அர்ஜுன், தகுந்த ஆதாரத்துடன் அவரை போலீசில் பிடித்து கொடுத்து தண்டனை வாங்கியும் கொடுத்தார். அந்த அவமானம் தாங்க முடியாமல் விஜயின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.. விஜயின் தந்தையும் சிறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார்.. விஜய் தனித்து விடப்பட்டான்..
தனித்து விடப்பட்டவனை அர்ஜுன் தான் தனது காப்பகத்தில் சேர்த்து படிக்க வைத்தார்.. அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்து பார்த்துக் கொண்டான்.. அப்போது விஜய்க்கு பதினைந்து வயது.. நல்ல விவரம் தெரிந்த வயது என்பதனால் அவனது மொத்த கோவமும் அர்ஜுனின் மீது பாய்ந்தது… அர்ஜுன் செய்யும் உதவியில் வாழ்ந்தாலும்.. விஜய்க்கு அவர் மீதான கோவம் கொஞ்சம் கூட குறையவில்லை.. அவரால் தான் தன் குடும்பம் அழிந்தது என்று எண்ணிய விஜய், அப்போதே அவரை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான்.. தன் குடும்பம் அடைந்த அவமானத்தை விக்ரமனது குடும்பமும் அடைய வேண்டும் என்று நினைத்துதான் வளர்ந்தான் விஜய்.. தன்னை தானே பார்த்துக்கொள்ளும் நிலை வந்தவுடன்.. அர்ஜுனின் நிழலில் இருந்து வெளியே வந்த விஜய் வாழ்க்கையில் தனியாக போராட ஆரம்பித்தான்.
ஒரு கட்டத்தில் அர்ஜுன் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தேவனும் இருப்பதை அறிந்து கொண்ட விஜய் தேவனுடன் கூட்டு சேர்ந்தான்..
” பகையாளி குடும்பத்தை உறவாடி கெடு ” என்று தேவன் விஜயிடம் கூற.. விக்ரமன் குடும்பத்தோடு நல்ல நட்புறவை மேற்கொண்டான் விஜய். அதனால் தான் அவன் மீது யாருக்கும் சந்தேகம் வராமல் இருந்தது.. போலீஸ் வேலையில் சேர்ந்த விஜய், தமிழ் நாட்டில் தான் ஆரம்பத்தில் பணி புரிந்தான். அதன் பிறகு தேவன் மூலம் தான் மும்பைக்கு மாற்றம் ஆனான்.
தேவன் கூறியே விக்கிரமன் வீட்டில் தங்க முடிவு செய்தான் விஜய். அதியன், சரத் இருவரும் விக்ரமனின் தம்பி என அவனுக்கு நன்கு தெரியும். வேண்டுமென்றே தான் அவர்களை அன்று கைது செய்தான். எப்படியும் தேவன் அப்போது அங்கு இல்லை என்றவுடன் அவர்கள் விக்ரமனது உதவியை தான் நாடுவார்கள்.. அப்போது விக்ரமனுக்காக என்று கூறி அவர்களை விடுதலை செய்தால் விக்ரமனது மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்து சுலபமாக அவன் வீட்டிற்குள் சென்று விடலாம் என்று நினைத்தான்.
அப்போது தான் வர்ஷா அங்கு வந்தாள்.. தேவனுக்கு வர்ஷா விக்ரமனின் வீட்டு பெண் என்று ஆரம்பத்திலேயே தெரியும்.. ஆராயாமல் ஒருவருக்கு தன் இடத்தில் வேலை கொடுக்கும் அளவுக்கு அவர் ஒன்னும் முட்டாள் இல்லையே?
அவளை வைத்து தான் விக்ரமன் வீட்டில் ஏதாவது செய்யவேண்டும் என்று இருந்தனர் இருவரும்.. ஆனால் இடையில் அதியன் வர.. எல்லாமே மாறி போனது… வர்ஷாவும் விஜயுடனான திருமணத்தை நிறுத்திவிட்டாள்.
அதன் பிறகு தான் இந்த பிரச்சனையை கையில் எடுத்து, அர்ஜுனுக்கு அவமானத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இருவரும் சேர்ந்து இந்த செயலை செய்தனர்.
‘ அடபாவிங்களா கூடவே இருந்து எவ்ளோ பெரிய பாவம் பண்ணி இருக்கீங்க? நான் உயிரோட இருக்கும் வரை என் அப்பாவுக்கு எதுவும் ஆக விடமாட்டேன்.. உங்களை சும்மா விட மாட்டேன்டா இப்போ என்ன பண்ணுறது.. வீட்டுக்கு போய் விக்ரமன் கிட்ட இதை பத்தி பேசுவோம் ‘ என்று மனதில் எண்ணி கொண்டவள் அங்கிருந்து செல்ல போகும் நேரம்.. ஆய்வகத்தின் உள்ளிருந்து வெளியே வந்த நந்தினி அவளை பார்த்துவிட்டாள்.
” வர்ஷா ” என்று நந்தினி அழைக்க.. வர்ஷாவுக்கு நெஞ்சம் படபடக்க தொடங்கியது.. பயத்தில் அவளுக்கு முகமெல்லாம் வியர்த்துவடிய தொடங்கியது.
வெளியே நந்தினியின் குரல் கேட்டு தேவனும், விஜயும் வெளியே வர.. மூவரும் வர்ஷாவை பார்த்துவிட்டனர்.
” இவள் எங்க இங்க? ” என்று தேவன் யோசிக்க..
” சார் நம்ம பேசியதை எல்லாம் கேட்டுட்டா போல .. இப்போ இவள் வெளியே போய் விக்ரமன் கிட்ட ஏதாவது சொன்னா நம்ம நிலைமை அவ்ளோ தான்.. இதுக்கு எல்லாம் நான் துணையா இருக்குறது அவனுக்கு தெரிஞ்சா என்னை சும்மா விட மாட்டான்” என்று சொல்ல.. வர்ஷா அந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு நொடியில் அங்கிருந்து ஓடினாள்..
அதனை பார்த்த நந்தினிக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை..
வெளியே செல்லும் முன் அவளை விரைந்து பிடித்தான் விஜய்..
” என்னவிடு.. உங்க திட்டம் எல்லாம் ஒன்னும் இல்லாமல் போக போகுது.. பாவிங்களா பாவம் அந்த குழந்தைங்க அதை கொன்னு, உங்க பழிவெறியை தீர்த்துக்க பார்க்குறீங்களே நீங்க எல்லாம் மனுசங்களா?? உங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராதுடா ” என்று ஆக்ரோஷமாக கத்திய வர்ஷாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் தேவன்..
” எல்லாத்தையும் கேட்டுட்டா போல விஜய்.. இவளை என்ன பண்ணலாம்.. ”
” நான் இல்லனாலும் உங்களுக்கு தண்டனை கிடைக்கும்.. நீங்க தயாரித்த அந்த தடைசெய்யப்பட்ட மருந்துக்கான ஒப்பந்த பத்திரம் என்கிட்ட தான் இருக்கு.. அது விகர்மன் கையில் கிடைச்சாலே போதும் உங்க நிலைமை அவ்ளோ தான் ” என்றவளை புரியாமல் பார்த்தபடி நின்றான் தேவன்.. அவள் கூறிய பதில் நந்தினியின் வயிற்றிலும் புளியை கரைக்க ஆரம்பித்தது..
” இவள் கிட்ட எப்படி அந்த பைல் இருக்கும்.. அப்போ சரத் அதை எல்லாம் எரிக்கலையா ? ” என்று மானசீகமாக சரத்தை திட்டிக்கொண்டவர்.. பின்னர் வர்ஷாவை நோக்கி ” அந்த பையில் எங்கடி ” என்று கேட்டவர் அவளது கன்னத்தில் மாறி மாறி அறைந்தார்.
விஜய் அவளை ஓடாமல் பிடித்து கொண்டான்.
” சீ ஆம்பளையாடா நீங்க எல்லாம்.. ஒரு பொண்ணு கிட்ட போய் உங்க வீரத்தை காட்டுறீங்க, ஆம்பளையா இருந்தால் எங்க வீட்டு ஆளுங்க கிட்ட நேருக்கு நேரா மோதுங்கடா அதை விட்டுட்டு.. ” என்ற வர்ஷாவின் முடியை கொத்தாக பற்றிய தேவன் அவளது தலையை பிடித்து சுவரில் மோத செய்தான்.
” என்ன நடக்குது இங்க ? ” என்று நந்தினி கேட்க.. அவர்கள் அவளுக்கு பதில் சொல்ல திரும்பிய நேரம் பார்த்து தேவனை தள்ளி விட்டுவிட்டு வெளியே ஓடினாள் வர்ஷா…
“அவளை பிடி ” என்று அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற வர்ஷாவை துரத்தி கொண்டு வெளியே வந்தனர் விஜயும், தேவனும்..
நந்தினி அவளை பின்தொடர்ந்து செல்ல போகும் நேரம்.. நிலைபடி தடுக்கி கீழே விழுந்தாள்.. முட்டியில் காயம் பட்டு துடித்தவள் மீண்டும் ஆய்வகத்துக்குள் நுழைந்து காயத்தை ஆராய தொடங்கினாள்.
வெளியே வந்த விஜய் வர்ஷாவை தேடினான். ஆனால் அவள் அங்கு இல்லை.. சுற்றியும் மரங்கள் நிறைந்திருக்க.. நடுவே தான் ஆய்வகம்.. இருள் நேரம் என்பதனால் அவளை கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது.
தேவனோ அங்கு பாதுகாப்புக்காக இருந்த அவரது ஆட்களிடம் வர்ஷாவை தேட சொன்னார்.. ஆள் ஆளுக்கு ஒவ்வொரு பக்கமும் அவளை தேட தொடங்கினர்..
தேவனது கார் பின்னாடி பதுங்கி அமர்ந்திருந்த வர்ஷாவுக்கு தான் இங்கிருந்து உயிரோடு வெளியே செல்வது கடினம் என்று தெரிந்து விட்டது.
உடனே தேவன் பேசிய வீடியோ பதிவாகியிருந்த மெமரி கார்டை போனில் இருந்து எடுத்தவள்.. சரியான எண்ணை கொண்டு மெட்டல் க்யூபை திறந்து அதனுள் மீண்டும் அந்த சாவியையும், மெமரிக்கார்டையும் வைத்து சுழற்றி விட்டாள். பின்னர் அந்த க்யூபை தன் ஹண்ட் பேக்கில் வைத்து கொண்டாள்.
அப்போது கார் பின்னால் ஏதோ சத்தம் வருவதை அறிந்து கொண்ட தேவன் அங்கு சென்று பார்க்க.. தேவனை கண்ட வர்ஷா அங்கிருந்து மீண்டும் எழுந்து ஓடினாள்.
” அவளை பிடிங்க ” என்று தேவன் அவனது ஆட்களிடம் கத்த, அவளை துரத்தி கொண்டு சென்றனர்.
நிதானமாக கீழே கிடந்த ஒரு கட்டையை எடுத்த விஜய்.. அதனை நேராக வர்ஷாவின் காலை நோக்கி எறிந்தான்.. அதில் தடுமாறி கீழே விழுந்தாள் வர்ஷா.
அடியாட்கள் தன்னை நோக்கி வருவதை கண்ட வர்ஷா.. பின்னர் தட்டுத்தடுமாறி மீண்டும் எழுந்து ஓடினாள்.
நுழைவாயிலை கடந்து வெளியே வந்தவள் சுற்றும் முற்றும் தேடி பார்க்க.. அங்கு போன் பேசியபடியே சாலையை அந்த பக்கம் நின்றிருந்த சத்யனை பார்த்து விட்டாள்..
அங்கு அவனை கண்ட நொடி தன்னையும் மீறி அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது..
” சா..சா.. த்யா ” என்று கண்ணீருடன் அவள் அவனை அழைக்க வாய் எடுக்கும் முன்.. அவளது சிகையை கொத்தாக பற்றி இருந்தான் அடியாட்களில் ஒருவன்.
“ச..த்யா ” என்று பரிதவித்த அவளது குரல் .. அவனது செவியை அடைந்த நொடி சட்டென திரும்பி பார்த்தான்..
வர்ஷாவின் கெட்ட நேரமோ என்னமோ அப்போது பார்த்து ஒரு வாகனம் இருவருக்கும் இடையில் செல்ல.. அந்த நேரத்தில் அவளை பிடித்து உள்ளே இழுத்து வந்தான் அந்த அடியாள். நுழைவாயில் கேட்டை ஒருகையால் பிடித்து கொண்ட வர்ஷா,
தனது மொத்த சக்தியையும் திரட்டி ” சத்யா ” என்று அடித்தொண்டையில் இருந்து கத்த.. சத்யனின் உள்ளம் நடுக்கத்துடன் சத்தம் வந்த திசையில் திரும்பி பார்த்தது.
கேட் மறைவில் சிறிதாக அவள் அணிந்திருத்த உடையும் கையும் மட்டுமே அவனுக்கு தெரிய.. பதறி துடித்தவன் வேகமாக சாலையை கடந்து அந்த பக்கம் வந்தான்.
அடியாள் அவளது முடியை பற்றி உள்ளே இழுக்க.. சத்யனின் கரம் அவளது கரத்தை வலிமையுடன் பற்றி அவனது இயக்கத்தை நிறுத்தி இருந்தது..
கண்களில் கண்ணீருடன்.. எதிரியின் கையில் அகப்பட்டு தவித்தவளுக்கு சத்யாவை பார்த்த நொடி இதழில் ஒரு மென்னகை தொன்றி மறைந்தது.
வர்ஷாவின் சிகையை பற்றி இருந்த அந்த அடியாளின் கரத்தை பிடித்து முறுக்கிய சத்யா வர்ஷாவை தன் பின்னால் பாதுகாப்பாக நிறுத்திக் கொண்டான்.
அடியாளின் கரத்தை முறுக்கிய சத்யன் அவனது இடையில் ஓங்கி மிதிக்க.. துடிதுடித்து கீழே விழுந்தான் அந்த அடியாள்.
பின்னர் வர்ஷாவிடம் திரும்பி ” என்ன ஆச்சு தேவா ? ” என்று பரிதவித்தவனது கண்கள் அவளை ஆராய்ந்தது..
” உனக்கு ஒன்னும் இல்லலடா.. அவன் உன்னை அடிச்சானா? வலிக்குத்தாடா.. ” என்று அவளை பார்த்த சத்யனின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் வழிந்தது.
இந்த கள்ளமில்லா அன்பு கொண்டவனையா இத்தனை நாள் வார்த்தையால் வதைத்துள்ளோம்.. பாவி, நான் பாவி என்று தன்னை தானே கடிந்து கொண்டவள்.. கண்ணீருடன் அவனது கண்களை பார்த்து ” இல்லை ” என்று தலை ஆட்டினாள்.
” என்ன ஆச்சு தேவா யாரு இவங்க எல்லாம் எதுக்காக நீ இங்க வந்த ? ” என்ற சத்யனை பார்த்து கொண்டிருந்த வர்ஷாவின் கண்கள் நொடியில் விரிந்து கொண்டது..
” நோ ” என்று கத்திய வர்ஷா சத்யனை தள்ளி விட சத்யனின் தலையை குறிவைத்து வந்த அந்த அடியாளின் கரத்தில் இருந்த கட்டை வர்ஷாவின் தலையை பதம் பார்த்தது.
அடிபட்ட வேகத்தில் திகைத்து முழித்தவள் அங்கே விழுந்து கிடந்த சத்யனின் பாதுகாப்பை உறுதி படுத்தி கொண்டு அவனை பார்த்து மென்மையாக சிரித்தவள் அப்படியே சரிந்தாள்..
பின்னர் மீண்டும் அடியாள் சத்யனை தாக்க வர, அவனது நெஞ்சில் ஓங்கி மிதித்து தள்ளிய சத்யன், கீழே விழுந்து கிடந்த வர்ஷாவின் பக்கம் வந்தான்..
அவளை தன் மடியில் தாங்கியவன் ” தேவா.. என்னை பாருடா.. கண்ணை திறமா.. டேய். தேவா…தேவா ” என்று கதறியவன் அவளது கன்னத்தை தட்டி எழுப்ப முயற்சிக்கவும்.. மெல்ல தன் கண்களை திறந்தாள் வர்ஷா..
” தேவா.. என்னடா ரொம்ப வலிக்குதா ? ” என்றவன் அவளது தலையை தொட்டு பார்க்க.. அவன் கரம் முழுவதும் அவளது உதிரத்தால் நனைந்திருந்தது…
” அய்யோ தேவா ரத்தம் வருதுடா.. நீ ஏன்டா எனக்காக… இப்போ பாரு எவ்ளோ ரத்தம் வருது ஏன்மா? வா நம்ம முதலில் ஹாஸ்பிட்டல் போகலாம் ” என்றவன் அவளை கரத்தில் ஏந்திக்கொள்ள முயற்சிக்கவும்… அவனுக்கு பின்னால் வந்து நின்ற தேவன்.. ஒரு இரும்பு கம்பியால் சத்யனது மண்டையில் ஓங்கி அடித்தான்.
தலையை பிடித்து கொண்டு சரிந்தவன்.. தலையை உலுக்கி நிமிர்ந்து பார்க்க.. மீண்டும் அவனது தலையில் ஓங்கி அடித்தான் தேவன்.
அரைமயக்கத்தில் கிடந்த சத்யனின் விழிகளில் தேவனது பின்னால் நின்ற விஜய் காட்சியளிக்க.. வலி மறந்து புன்னகைத்தான்.. ” விஜய் எப்படியும் தங்களை காப்பாற்றி விடுவான்” என்ற நம்பிக்கையில்..
” விஜய்.. தேவா.. தேவாவை பாருடா.. அவளுக்கு என்ன ஆச்சுன்னு பாருடா” என்று சத்யன் முகம் முழுவதும் வழிந்த ரத்தத்தையும் பொருட்படுத்தாமல் அவளது நலனை மனதில் வைத்து கொண்டு கூற.. சிரித்தபடியே அவனை நெருங்கி வந்த விஜய்..
” அவளை பார்த்து நான் என்னடா பண்ண போறேன்.. அவளோட இந்த நிலைமைக்கே நாங்க தான் காரணம் ” என்று விஜய் அவன் பங்குக்கு தேவனது கையில் இருந்த கம்பியை வாங்கி சத்யனின் தலையில் ஓங்கி அடித்தான்.. அதனை பார்த்து ஊமையாய் கதறிய வர்ஷாவினால் எழுந்துகொள்ள கூட முடியவில்லை. அதே இடத்தில் சத்யா மயக்கமானான்..
” இவன் தானே நீ சொன்ன நிதின் அவள் மேல ரொம்ப அன்பா இருப்பான் போல.. ” என்று தேவன் கேட்க..
” ஆமா சார்.. இவன் இருந்தவரை இவள் பக்கத்துல கூட நம்மள விடமாட்டான்.. பெரிய ரச்சகன் போல அவள் நிழல் மாதிரி பின்னாடியே அழைஞ்சான்.. விக்ரமன் இல்லை இவளை ஒருகை பார்த்துடலாம்னு நினைச்சா அப்போ தான் இவன் வந்து இறங்கிட்டான்.. ” என்ற விஜய் மயங்கி கிடைந்தவனின் முதுகில் ஓங்கி மிதித்தான்.
” ம்ம்ம்.. டேய் இவனை இழுத்துட்டு வாங்க ” என்று தனது ஆட்களிடம் தேவன் கூற… அவர்கள் சத்யனை இழுத்துக்கொண்டு போய் ஆய்வகத்தின் நுழைவாசலில் போட்டனர்…
அவனை பார்த்து’ யார் இது ? ‘ என்று யோசித்து கொண்டிருந்தாள் நந்தினி.. முகம் முழுக்க ரத்தத்தில் திளைத்திருந்ததால் நந்தினிக்கு அவனை அடையாளம் தெரியவில்லை.
” அவளை உள்ள இழுத்துட்டு வா விஜய் ” என்று தேவன் கூற.. வர்ஷாவின் முடியை வலிக்க பற்றியவன் அவளை தரதரவென உள்ளே இழுத்து வந்தான்.. அவளது உடல் முழுக்க தரையில் உராய்ந்து காயங்கள் ஏற்பட்டிருக்க.. அந்த ரணத்தை கூட உணர முடியாத அளவுக்கு அவளது தலை பாரமாக இருந்தது.
அரைமயக்கத்தில் இருந்த வர்ஷாவின் முடியை பிடித்து உள்ளே தள்ளினான் விஜய்.. அவன் தள்ளிய வேகத்தில் அருகில் இருந்த மேசையில் மோதி ” ஆஆஆ ” என்று பெரும் சத்தமிட்டு வயிற்றை பிடித்து கொண்டு கீழே விழுந்தாள் வர்ஷா…
” என்னடி ரொம்ப துள்ளுற? நாயோட வேலை எதுவோ அதை மட்டும் பார்க்கணும்.. என்கிட்டயே வீர வசனம் பேசுறியா? ” என்ற தேவன் கீழே விழுந்து கிடந்தவளின் முதுகு தண்டில் ஓங்கி மிதிக்க… வலி பொறுக்க முடியாமல் கதறியவளின் கண்கள் தானாக சொருகி கொண்டது.
அதியனின் உயிர் நீரில் உதித்த குழந்தை அவள் உடலில் இருந்து உதிரமாக வெளியேறியது.. அதனை கண்ட நந்தினி ” ஒஹ் காட் ஷி இஸ் பீலீடிங் “(God she is bleeding) என்று பதறியபடி அவள் அருகில் செல்ல முயற்சிக்கவும்.. தேவனது கைகள் அவளை தடுத்து நிறுத்தியது..
” அவளை விடு.. செத்தா சாகட்டும்.. எவ்ளோ தைரியம் இருந்தால் என் முன்னாடி நின்னு இவ்ளோ பேச்சு பேசுவாள் ”
” ஆமா சார்.. இவளை வெளியே விட்டால் நம்ம பிளான் முழுக்க சொதப்பிடும்.. நான் உங்க ஆளுன்னு வேற இவளுக்கு தெரிஞ்சிடுச்சு.. பேசாமல் இவளை இங்கயே முடிச்சிடுவோம் ” என்று விஜய் தனது துப்பாக்கியை எடுத்து அவளை குறிபார்க்க..
” முட்டாள் மாதிரி நடந்துக்காத விஜய்.. அந்த பைல் நமக்கு வேணும்.. அது மட்டும் விக்ரமன் கையில் கிடைச்சா நம்ம பிளான் அவ்ளோ தான்.. அப்புறம் கூட்டத்தோட களி தான் திங்கனும்.. பேர் கெட்டு போயிரும்.. மானம் மரியாதை எல்லாம் போயிடும், நீயும் தான் நந்தினி ஜெயிலுக்கு போகணும் ” என்று தேவன் கூற..
” நான் எதுக்கு சார்.. நான் ஒன்னும் அவள் சொல்லுற மாதிரி யாரையும் கொலை பண்ணலயே ” என்று பதட்டத்தில் கேட்டாள் நந்தினி.
” உண்மை தான், ஆனால் அந்த மருந்தை தயாரித்த விஷயத்தில் நீயும் இருக்க.. உன்னோட கையெழுத்தும் அதுல இருக்கும்.. அது தடை செய்யப்பட்ட மருந்துன்னு உனக்கு தெரியும் தானே , அப்போ இது வெளியே தெரிய வந்தால் உன்னை சும்மா விட்டுடுவாங்களா?.. இது மட்டும் வெளியே தெரிஞ்சா உன் கேரியர் முடிஞ்சுது.. உன் வாழ்க்கையும் முடிஞ்சது.. உன் குடும்பத்துக்கு இந்த விஷயம் தெரிந்தால் அவங்க கூட உன்னை விட்டுவைக்க மாட்டாங்க.. மொத்த பேரும் நமக்கு எதிரா தான் இருப்பாங்க.. அப்படி இது வெளியே தெரிஞ்சு அவமான பட்டு உன் வாழ்க்கை அழிஞ்சு போனாலும் பரவ இல்லன்னு நெனச்சா.. நீ இப்போ இவளுக்கு உதவி பண்ணி இவளை காப்பாத்து.. இல்லையா வாயை மூடிட்டு ஒரு ஓரமா. நின்னு நடக்குறதை வேடிக்கை மட்டும் பாரு… ” என்று தேவன் மயங்கி கிடந்த வர்ஷாவின் தலையில் ஓங்கி மிதிக்க.. அவளது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது.
தனக்கு தண்டனை கிடைத்து , பெயர் கெட்டு போய் விடுமோ என்று பயந்த நந்தினி.. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
” எல்லாம் இந்த சரத்தால் வந்தது.. முதலில் இந்த சரத்தை” என்று கோவத்தில் பல்லை கடித்தவர்.. ” பைலை எரிக்க சொன்னால் என்ன வேலை பார்த்து வைச்சு இருக்கான்.” என்று சரத்துக்கு போன் செய்து அவனை வர செய்தனர்.
உள்ளே வந்த சரத் வாசலில் கிடந்த சத்யனை கண்டு ” யார் இவன் ? ” என்று கேட்டான்.
” நிதின்..வர்ஷாவின் பெஸ்டி ” என்று கூறினான் விஜய்..
” ஒஹ் இவன் பின்னாடி தான் இவள் சுத்திட்டு இருந்தாளோ ? ” என்ற சரத், சத்யனை தாண்டி உள்ளே வந்தான்.
“எதுக்கு என்ன வர சொன்னிங்க? ” என்று தேவனிடம் கேட்டான் சரத்.
” அறிவு இருக்காடா உனக்கு அந்த பையிலை உன்னை எரிக்க தானே சொன்னேன் ”
” அதுக்கு இப்போ என்ன? இப்போ இங்க என்ன பிரச்சனை ? ”
” அது தான் இப்போ பிரச்சனை ” என்ற தேவன் அனைத்தையும் கூறி முடித்தார்.
” சரி இப்போ என்ன பண்ணலாம் ?” என்று சரத் கேட்க..
” இவள் கிட்ட இருந்து அந்த பைலை வாங்கணும் ” என்று அவர்கள் கூற.. விரைந்து வர்ஷா அருகில் வந்தவன் அவளது தலையை உயர்த்தி தன் முகம் பார்க்க வைத்தான்.
” நந்தினி அந்த தண்ணியை எடு ” என்றவன் அதனை வாங்கி வர்ஷாவின் முகத்தில் தெளிக்க.. கண் முழித்தாள் வர்ஷா…
” ஏய் பையில் எங்கடி ? ” என்று கேட்ட சரத் அவளது சிகையை வலிக்க பற்றினான்..
” என் உயிரே போனாலும் அதை உங்ககிட்ட கொடுக்க மாட்டேன் ” என்று வர்ஷா கூற..
” அப்போ சரி ” என்ற சரத்… ” விஜய்” என்று அவனை அழைத்தான்..
விஜய் தேவனது ஆள் என்று கொஞ்ச நாளுக்கு முன் தான் சரத்துக்கு தேவன் சொல்லி தெரியவந்தது..
” சொல்லு சரத் ” என்று விஜய் கேட்க..
” அவள் ட்ரெசை ரிவூவ் பண்ணு விடியோ எடுத்து நெட்ல போட்டுடுவோம் ” என்று சரத் கூற.. சத்தமாக சிரித்த விஜய் ” குட் ஐடியா ” என்று கூறி அவளது ஆடையில் கைவைக்க வர..
” ஸ்டாப் இட் என்ன பண்ணுறீங்க நீங்க ? ” என்று நந்தினி அவர்களது செயலை தடுக்க பார்த்தாள்.
” நடக்குறதை வேடிக்கை மட்டும் பாரு.. இல்ல உனக்கும் இதே நிலைமை தான் ” என்று தேவன் கூற.. கண்களை மூடி திறந்து கொண்ட நந்தினி ” வர்ஷா ப்ளீஸ் அந்த பைலை கொடுத்துடு… எதுக்கு உனக்கு இந்த கஷ்டம் ” என்று நந்தினி வர்ஷாவிடம் கூறினாள்.
வர்ஷா அமைதி காக்க… விஜய் அவளது ஆடையில் கைவைக்கவும்… தட்டுத்தடுமாறி எழுந்து வந்த சத்யன் வந்து அவனது செயலை தடுத்து நிறுத்தி.. வர்ஷாவை தன் பின்னால் மறைத்து வைத்து அமர்ந்து கொண்டான்.. அவனால் நிற்க்க கூட முடியவில்லை.. இருந்தும் அவளை காப்பாத்த தன் உடலில் உயிர் இருக்கும் வரை போராட நினைத்தான்.
தகுதி இல்லை !!
என்று நீ வெறுத்தாலும்
நீ தடுமாறும் போதெல்லாம்
உன்னை தாங்கிப்பிடிக்க,
நான் இருப்பேன்…
என் அன்பு
கொடுப்பதற்கு மட்டும்..
பெறுவதற்காக அல்ல…
என் உடலில் கடைசி துளி உதிரம் உள்ளவரை என் உள்ளம் உனக்காக துடித்து கொண்டிருக்கும்.
கரம் தீண்ட தான்
உறவோ உரிமையோ தேவை..
கரம் கொடுக்க உள்ளம் போதும்…
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ROMPA FEELING AH IRUGUTHU VARSHA ,SATHYA PAVAM