
அத்தியாயம் 10
அவள் சாப்பிட்டு முடித்ததும் தனக்கான உணவை உண்டவன் ஒரு பிசினஸ் புத்தகத்தை எடுத்து கொண்டு படிக்க ஆரம்பிக்க அவனிடம் இருந்து அதை பறித்தாள் கனி.
“என்னமா?”
“என்ன என்னமா? என்கிட்ட சந்தோசமா பார்த்துப்பேன் சொல்லிட்டு இந்த புக்கை வச்சு படிச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்?” என்று மூச்சு வாங்க பேசியவளை பார்க்க அவனுக்கும் ஆசையாக தான் இருந்தது. ஆனால் தன் உடல்நிலையை முன்னிறுத்தி அவளை விட்டு தள்ளி நின்றான்.
“நான் என்ன பண்ணிட்டேன்? படிக்குகிறது தப்பா?” என்று கேட்டவனின் இதழ்களை பட்டென கடித்து வைத்தாள் அவனின் செல்ல மனைவி.
“ஹே இது பகல் நேரம்.. ஒழுங்கா உன் எக்ஸாமுக்கு படி” என்றவனை முறைத்து பார்த்தவள் வாகாக அவனின் மடியில் அமர்ந்து கொண்டு “பிள்ளை வேணும்னு கேட்டா மட்டும் பத்தாது” என்று அவனின் மார்பில் கோலம் போட்டாள். மொத்தத்தில் அவனை பித்தாக்கி கொண்டிருந்தாள் கனி.
கீதனோ என்ன செய்வது என்றே தெரியாமல் திணறி கொண்டிருந்தான். அவனின் அவஸ்தை புரியாமல் கனி அவனை சீண்டி கொண்டிருக்க அவனோ அவளை அணைக்க முடியாமல் பரிதவித்து கொண்டிருந்தான்.
அவன் எழுந்து செல்ல முற்படவும் அவனை நெருங்கியதற்காக தன்னையே கடிந்து கொண்டவள் “சாரி..” என்று எழுந்தாள்.
அவளின் வலி புரிய அப்படியே அலேக்காக தன் கைகளில் ஏந்தி கொண்டான் அவன். “இந்த முறையும் உனக்காக தான் யோசிச்சேன் கனி.. அதுவே உனக்கு வலி கொடுக்குதுன்னா அதை பண்ணுற தைரியம் எனக்கு இல்ல.. இருக்குற வரைக்கும் இதே சந்தோஷம் உன் முகத்தில் இருக்கணும்” என்று அவளின் ஆசையை தன் பாணியில் நிறைவேற்றி வைக்க இருவர் மனதிலும் நிம்மதி நிறைந்திருந்தது.
___________
கன்னிபுரம் கிராமத்திற்கு தன் காதலியை தேடி வந்திருந்தான் அருண். கனிஷ்காவுக்கு திருமணம் ஆனதும் தெரியாது. அவளை பற்றி எந்த ஒரு விஷயமும் அவனுக்கு தெரியாது. அவள் மேல் கொண்ட காதல் அவளின் குணத்தை பார்த்து வந்தது தான். அவளின் நிலை, படிப்பு எதுவும் அறியாமல் வந்த காதல். அவளை பார்த்ததும் மனதில் ஒட்டிக் கொண்டாள். இன்றும் அவளுக்காக அவன் வந்திருக்க ஊரே அமைதியாக இருந்தது.
இதற்கு முன்பும் அந்த ஊருக்கு வந்திருக்கிறான் தான். ஆனால் ஆண்களின் சத்தமும் விடலை பையன்களும் கேலியும் நிறைந்திருக்கும். தன் நண்பன் வாசுவின் வீட்டிற்கு செல்ல வீடு பூட்டியிருந்தது.
வீடு பூட்டியிருக்கவும் அங்கிருந்தவர்களை பார்க்க, அவர்கள் அவனை தெரியாத மாதிரியே பார்த்தனர்.
“அண்ணே வாசு வீட்ல யாரும் இல்லயா?” அங்கு நடந்து வந்து கொண்டிருந்தவரிடம் கேட்க “நீ ஊருக்கு புதுசா தம்பி?” என்று கேட்டார்.
“ஆமா அண்ணே..”
“அப்போ உனக்கு விஷயம் தெரியாது தான்.. வாசுவும் அவன் அப்பனும் ஊருக்கு ஒதுக்குப்புறத்துல ஒரு மரக்கடை வச்சிருந்தானுவளே.. அதுல ஏதோ கஞ்சா விக்குறதா போலீஸ் பிடிச்சிட்டு போயிடுச்சு.. அதுக்கு அப்புறம் எவனும் வெளில வரது இல்ல”
“எந்த ஸ்டேஷன்?”
“அது எல்லாம் தெரியலப்பா.. நல்லவன்னு வேஷம் போடுறவன் தான் இந்த இடத்துல அதிகம்” என்று கூறிவிட்டு செல்ல கனியை பற்றி வேறு எவரிடமும் கேட்க முடியாமல் திணறினான்.
அவன் கேட்க போய் அது ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாதித்து விடுமோ என்று அஞ்சி வந்த வழியே திரும்பி விட அவனுக்கு அவளின் திருமணமும் அதற்கு பின் நடந்த நிகழ்வுகளும் அறிய முடியாமல் போனது.
தந்தையின் தேடுதலில் இருந்து தப்பிக்க பெங்களூர் சென்றவன் அனைவரிடமும் இருந்து தன்னை தனிமைப்படுத்தி கொண்டான். வேலைக்கும் செல்வது இல்லை. தனது கார்ட் மூலம் மட்டும் பணம் எடுத்து கொள்பவன் தன் போக்கில் வாழ ஆரம்பித்தான். ஆனால் அவன் நினைவில் கனிஷ்கா உறுத்தி கொண்டே இருந்தான்.
*************************
தென்அமெரிக்கா மாகாணம். தன் கண்விழித்து பார்த்த கனிஷ்காவுக்கு எதுவுமே புரியவில்லை. அவசரமாக தன்னை குனிந்து பார்த்தவளுக்கு தன் ஆடை வித்தியாசமாக இருக்கவும் பதறி எழுந்தாள். சுற்றிலும் கண்ணாடியால் சூழ பட்ட அறையே தென்பட அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
கன்னிப்புரம் கிராமத்தில் அன்று கணவன் அடித்ததும் அதன் பிறகு எதுவோ கொண்டு தன் முகத்தில் அமுக்கியதும் மட்டுமே நினைவில் இருந்தது. அதன் பிறகு என்னாயிற்று? இது எந்த இடம்? எப்படி இங்கே வந்தேன்? யோசித்து பார்த்தவளுக்கு ஒன்றும் புரியாமல் போக ஏதாவது வழி இருக்கிறதா என்று கண்களால் துழாவினாள். அதை விட உடலை இறுக்கி பிடித்து தொடை வரை இருந்த அந்த உடை இன்னும் அருவருப்பை கூட்டியது.
பெண்கள் என்றால் இப்படி தான் உடுத்த வேண்டும் என்று கற்பிக்க பட்டவளுக்கு இந்த இடமும் உடையும் ஒருவித பயத்தை தோற்றுவித்தது. ஆனால் அவளின் ஒவ்வொரு அசைவையும் தன் அறையில் இருந்து கொண்டே பார்த்து கொண்டிருந்த சித்தார்த் உதட்டில் புன்னகை வந்தது.
“பெர்பெக்ட் கேர்ள்” என்றவன் “ஹலோ கியூட்டி” என்று குரல் கொடுத்தான்.
திடீரென வந்த குரலில் தடுமாறியவள் எங்கிருந்து சத்தம் வருகிறது என்று தேட அதை புரிந்து கொண்டவன் “ரொம்ப தேடாதே.. தேடினாலும் கண்டு பிடிக்க முடியாது.. அதனால் நான் சொல்றத மட்டும் பண்ணி பழகு.. வெல்கம் டு மை வேர்ல்ட்” என்று சொல்ல
“என்னை விட்டுடு.. நீ யாரு? நான் எங்க வீட்டுக்கு போகணும்” என்று அழுதாள்.
“அழுற பொண்ணுங்களை எனக்கு பிடிக்காது.. அப்புறம் நீ அழுறத பார்த்தால் அதுக்கான தண்டனை உன்னை தேடி வரும்” என்று கூற எதுவும் பண்ணி விடுவானோ என்ற பயத்தில் கண்ணீரை துடைத்து கொண்டாள்.
“குட்.. இப்போ நான் சொல்றத கேளு” என்றவன் “பென் அவளுக்கு சாப்பாடு கொடு..” என்று கூறவும் அந்த அறையின் ஒரு மூலையில் இருந்த கண்ணாடி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் பென்.
அவளின் கையில் உணவை திணிக்கவும் அந்த கதவை கவனமாக பார்த்தாள் கனிஷ்கா. அதை கவனித்த சித்தார்த்தோ வாய்விட்டு சிரித்தான். அவனின் சிரிப்பொலி அந்த அறை முழுவதும் பரவ கனிஷ்காவின் உடல் பயத்தில் நடுங்கியது.
“நீ நினைச்சாலும் அந்த கதவை இன்னொரு முறை திறக்க முடியாது.. வேணும்னா ட்ரை பண்ணி பாரேன்”
பென் அந்த கதவு வழியாக வெளியேறவும் அது தானாக பூட்டி கொண்டது. சாப்பாட்டு தட்டை கீழே வைத்தவள் ஓடி வந்து கதவை திறக்க முயற்சிக்க அது முடியாமல் போனது.
கண்ணீருடன் திரும்ப “திறக்க முயற்சி பண்ணாத.. இந்த அறை முழுவதும் கதவுகள் தான்.. எப்போ எது வழியா வரணும்னு முடிவு பண்ண வேண்டியது நான் மட்டும் தான்” என்றவன் சொல்லி விட்டு சென்று விட கீழே அமர்ந்த கனிஷ்காவுக்கு ஏதோ தனி காட்டுக்குள் அழைத்து வந்து விட்டது போல் இருந்தது.
கணவன் என்று ஒருவன் இருந்தும் வீண். வெளியேற விரும்பினாள் தான். ஆனால் இந்த நிலமைக்கு ஆசை படவில்லையே. அவன் கொடுத்த உணவை உண்டு முடிக்கவும் சித்தார்த் பென்னை அழைத்தான்.
“அவளோட கண்டிஷன் செக் பண்ணிட்டியா? கர்ப்பமாக எதுவும் இல்லையே” என்று கேட்க “செக் பண்ணிட்டேன் சார்.. கூடவே மருந்தும் கொடுத்திருக்கேன்” என்றான் பென்.
“தட்ஸ் குட்.. நாம பிளான் பண்ணுன விஷயம் என்ன ஆச்சு? அவன் எப்போ வருவான்?”
“அவன் வர இன்னும் ஒரு மாசம் இருக்கு சார்.. இந்த பெண்ணை அதுவரைக்கும் என்ன பண்றது?” என்று பென் கேட்க சித்தார்த் யோசித்தான்.
“அப்போ நாம வேற ஏதாச்சும் விஷயத்துக்கு யூஸ் பண்ணிக்கலாம்.. அதாவது சட்டப்படி ப்ரோசீட் பண்லாம்”
“எப்படி சார்?” பென் ஆச்சர்யமாக கேட்டான். ஏனென்றால் அவர்கள் சட்டப்படி செய்வது எல்லாம் இறந்தவர்களை வைத்து தான். முதல் முறையாக உயிரோட இருக்கும் பெண்ணை வைத்து செய்வது ரிஸ்க் ஆன விஷயம்.
“வேற வழி இல்லை பென்.. இவளை எப்போதும் ஆக்டீவாக வைக்கணும்.. அது தான் அவளின் மூளைக்கு நல்லது.. சீக்கிரமாவே இவள் மூலமா ஆராய்ச்சி பண்ணுவதாக பெர்மிஷன் வாங்கு.. அதாவது அவள் உயிரோடு இல்லைன்னு வாங்கு.. மத்த விஷயத்தை அப்புறம் பார்க்கலாம்” என்று கூற அவன் சொன்னதை செய்ய சென்றான் பென்.
சித்தார்த்க்கு கூடவே எதிரியும் உண்டு. அவன் இப்போது வெளியூரில் இருக்கிறான். அவனின் பெயர் வில்சன். வில்சனும் சித்தார்த்தும் ஒன்றாக வேலை செய்தவர்கள். வில்சன் ஆக்சிஜன் இல்லாமலேயே ஒருவனால் குறிப்பிட்ட நேரம் வாழ முடியும் என்று சோதனை செய்ய மூளைச்சாவு ஏற்பட்டவர்களை வாழ வைக்க முடியும் என்று சாதித்தான் சித்தார்த்.
சித்தார்த் ஆராய்ச்சி வெற்றி பெற்று விட வில்சனுக்கு அவனின் மேல் கோபம் உண்டு தான். ஆனால் சித்தார்த்தை தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கினான் அவன். ஒருவரை உடல்பலத்தால் தோல்வியடைய செய்வதை விட மனபலத்தால் தோற்கடிப்பது புத்திசாலித்தனம் என அவன் அதில் இறங்கி விட்டான்.
சித்தார்த்தோ அதையும் முறியடிக்கும் முயற்சியாக தான் கனிஷ்காவை வர வைத்திருக்கிறான். வில்சன் ஒரு பெண் பித்தன். அடுத்த மாதம் வரும் விழாவில் கனியை வைத்து தான் வில்சனை தோற்கடிக்க போகிறான். அதில் கனிஷ்காவின் வாழ்க்கை வீணாக போகவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் அதிகம் எதிர்த்து பேசாத படிக்காத பெண்ணாக தேடினான். கனியை பார்க்க கொஞ்சமும் அவனுக்கு பரிதாபம் வரவில்லை. ஆனால் மனதுள் எதோ நெருடியது. அவளை ஒரு பொருளாகவே பார்த்து கொண்டு இருந்தான். யோசனையில் கேமராவை திரும்பி பார்க்க அந்த கண்ணாடி கூண்டுக்குள் சிக்கிய பறவை துயில் கொண்டிருந்தது.
அவளை பார்க்கும் போது எல்லாம் தீண்டும் யோசனை வந்தாலும் அவளை திருப்பி அனுப்பும் நோக்கத்தோடு கூட்டி கொண்டு வந்ததால் பார்த்து கொண்டு நின்றான். அவளின் வடிவான உடல் வாகு, அந்த ஆடை இவனுக்கு இன்னும் போதையேற்ற கால் தானாக அந்த அறையை நோக்கி சென்றது.

