
7.அத்தியாயம்
மழை அடித்துப் பெய்துக் கொண்டிருப்பது போல மதுவின் மனதிலும் மழை தீவிரமாக அடித்துக்கொண்டே இருந்தது. மகிழுந்தை ஓட்டிக்கொண்டு சென்றவளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் சாலையைப் பார்த்து இயக்க முடியவில்லை. மனசெல்லாம் சொல்லில் அடங்காத வேதனையும் ரணமும் மிகுந்து காணப்பட, உணர்ச்சி துடைத்தெறிந்த நிலையில் காணப்பட்டாள் பெண்.
உணவு விடுதியிலிருந்தே அவளது நடவடிக்கையில் தெரிந்த மாற்றங்களைக் கவனித்துக் கொண்டு வருகிறான் நந்தா. அவளது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அவனது மனதிலும் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தது. இருந்தும் அங்கு அவன் எதையுமே கேட்க நினைக்கவில்லை. அவனும் அவளையே பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான். சீராக செலுத்த வேண்டிய மகிழுந்தினை பாதியிலேயே நிறுத்தியிருந்தாள் மது. அவளது செயலை புரியாமல் அவன் பார்த்தான்.
“உனக்கு கார் ஓட்ட தெரியும் தானே?” அலட்டலின்றி கேள்வியினைத் தொடுத்தாள்.
“ம்ம்ம்… தெரியும் மது. ஆனால்?” என்றவன் எதையோ கேட்க வரும் முன்னே குறுக்கிட்டவள்,
“எனக்கு கான்சன்ட்ரேட் பண்ண முடியலை. நீங்க கார் ஓட்டுங்க.” என்றவள் காரை விட்டு கீழே இறங்கியிருக்க, அடை மழை பெண்ணவளை ஓரளவு நனைத்திருந்தது. அவனுக்கும் அவளது அமைதியான பேச்சு ஆச்சர்யமாக தான் இருந்தது. மகிழுந்தில் இருந்தபடியே வெளியே நிற்பவளை அவன் பார்க்க, பெண்ணவளோ கார்மேகக்கூட்டத்தினை வெறித்துப் பார்த்தாள்.
மறுபுறமாக வந்து மகிழுந்தில் ஏறாமல், சாலையினோரம் தெரிந்த புல்வெளிக்கு சென்றவள் அப்படியே சிலை போல நிற்க, மழை நீரோடு சூடான அவள் கண்ணீரும் சேர்ந்து வழிந்தது. இத்தனை நேரம் அடக்கி வைக்கப்பட்ட கண்ணீர் அல்லவா? மழை நீரின் துணையோடு வெற்றிகரமாக வெளியேறி இருந்தது. அவள் மழையில் நிற்பதை பார்த்து பதறிய நந்தாவும் குழப்பத்துடனே காரை விட்டு இறங்கி அவளது அருகே வந்தான்.
“ஏங்க, ஏன் இப்படி மழையில நனைஞ்சுட்டு இருக்கீங்க. வாங்க மது காருக்குள்ள போலாம்.” என்றவன் அழைத்தும் அவளிடம் எந்த எதிர்வினையும் வரவில்லை. மழைத்துளிகள் அவளது கண்ணீரை மறைத்தாலும் அவளது சிவந்த விழிகள் வலியினை சுமந்துக் கொண்டு தான் இருந்தது.
‘இவ நம்மகிட்ட தானே லூசா இருப்பா? இன்னைக்கு என்ன வெளியில வந்துட்டு இப்படி நடந்துக்கிறா? சம் திங் இஸ் ராங்.’ என்று தலையை சொறிந்து யோசித்தவனுக்கு நொடியில் தோன்றியது என்னவோ, அவள் யாருடனோ பேசியபடி நின்றது தான்.
அதன் பின்னர் தானே அவள் செயலில் மாற்றம் நேர்ந்தது. ‘ஏதோ இருக்கு.’ என்றவன் அவளது தோள்பட்டையின் மீது கைவைத்தான்.
“மது.” மென்மையாக அவனது அழைப்பு அவள் செவிகளை அடைந்த நொடி, அவனை வலியுடன் திரும்பி பார்த்தவள், அவன் மார்பின் மீதே தலை சாய்த்துக் கொண்டாள்.
பெண்ணவளின் செயலில் ஸ்தம்பித்துப் போய் நின்றான் நந்தா. ஒன்று மட்டும் அவனுக்கு புரிந்தது. தன்னவளுக்கு அந்நொடி ஆறுதல் தேவைப்படுகின்றது என்பதை.
“ரிலாக்ஸ் மது. உன்னோட நான் இருக்கேன். எப்பவும் உன்கூட நான் இருப்பேன்.” என்றவன் பெண்ணவளின் முதுகினை வருடிக் கொடுக்க, தீச்சுட்டார் போல அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.
வலியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஜஸ்ட் லீவ் மீ அலோன்.” என்றாள் விரக்தியான குரலில்.
“நான் ஒண்ணுமே பண்ணலயே டி. எதுக்கு இப்படி கத்துற?” என்றவனை பொருட்டாக கூட மதிக்காமல் மழையில் நின்றவளை விநோதமாக தான் பார்த்தான் நந்தா.
“எல்லாம் கலிகாலம். மம்மி சும்மா இருக்க உன் பையனை திட்டுறா இவ. டூ பேட்.” என்று புலம்பியபடி காரின் அருகே சென்றவன் சாய்ந்து நின்றவாறு அவளையே பார்த்தான். ஏனோ அவளை தனியாக விட்டுவிட்டு காரில் அமர்ந்திருக்க அவனுக்கு பிடித்தமில்லை.
வெகு நேரம் நின்றவள், இருள் பூசிய வானத்தை கண்டதும் தான் காரில் ஏறினாள்.
“நான் ட்ரைவ் பண்ணவா?” என்றவனின் கேள்விக்கு,
“தேவையில்லை நான் பார்த்துக்கிறேன்.” என்றவள் மகிழுந்தை செலுத்த தொடங்கியிருக்க, அப்போது இருந்ததைக் காட்டிலும் ஒரு தெளிவு பெண்ணவளின் முகத்தில் தெரிந்தது.
இங்கு வீட்டில் தனது அறையில் படித்துக் கொண்டிருந்தான் உமாபதி. சிறு வயதிலிருந்தே காவல் துறையில் உயர்ப்பதிவியிலிருக்க வேண்டும் என்பது அவன் கனவு. அக்கனவு தோன்றியதற்கு காரணமே வெண்ணிலா தான்.
போலீஸாக அவனும் திருடியாக அவளும் விளையாடியிருக்க, அவளை பிடித்து அடிக்கவே எப்போதும் அவளை திருடியாகவே வைத்து விளையாடுவான் அவன். மேலும் அவளுக்கு போலீஸ் என்றாலே பிடிக்காது என்பதால் அவளுக்காகவே தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற நோக்கில் கடந்த இரண்டு வருடங்களாக சிவில் சர்வீஸ் தேர்விற்காக தயாராகிக் கொண்டிருக்கிறான் உமா.
இன்னும் மூன்றே மாதத்தில் தேர்வு வர இருக்க, படித்துக் கொண்டிருந்தான் ஆர்வமாக. அந்நேரம் பார்த்து கதவு தட்டப்பட, கதவினைத் திறந்தவன் எதிரில் இருந்தவளைக் கண்டதும் கதவினை இழுத்து அடைப்பதற்காக போக, அவளோ கை வைத்து தடுக்க, பெண்ணவளின் கரத்தின் மீதே கதவு நன்கு அடித்தது.
வலியில் அவளையும் மீறி அழுதவளை விரைந்து அறைக்குள் இழுத்தவனோ,
“ஹே அழாதடி. உன்னை யாரு கை நீட்ட சொன்னா? அழுது என்னை மாட்டிவிடாத?” என்றவன் கடுப்புடன் கூறினான்.
பெண்ணவளோ உதட்டை பிதுக்கியபடி அழ, கதவு பட்ட கைகளோ நன்கு சிவந்து போய் காணப்பட்டது. அதனைக் கண்டதுமே அவனுக்கு புரிந்து போனது. ‘சங்கு ஊதிட்டா… இன்னைக்கு எல்லாரும் சேர்ந்து உன்னை திட்டியே சாவடிக்க போறாங்க.’ என்று தலையில் அடிக்காத குறையாக நின்றவனோ, வேறு வழியின்றி அவளிடம் மன்னிப்பை கேட்டான்.
“அம்மா தாயே, தெரியாமல் பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடு.” என்று கைகூப்பியபடி கேட்ட நொடி, பெண்ணவளின் அழுகை மட்டுப்பட்டது.
“வலிக்குது அத்தான்.” என்றாள் உதட்டை பிதுக்கியபடி…
“நீ எதுக்கு இங்க வந்த? அப்புறம் இந்த அத்தான் சொத்தான்னு கூப்பிடாத… கடுப்பாகுது.”
“அதுவந்து, மாமா உங்ககிட்ட இதை கொடுக்க சொன்னாங்க.” என்றவள், தான் கொண்டு வந்த புத்தகத்தை அவனிடம் நீட்ட, அதை பெற்றவனோ,
“அதான் கொடுத்தாச்சுல்ல கிளம்பு.” என்று மூஞ்சியில் அடித்தாற் போல் உரைக்க, அழுத விழிகளோடு சென்றவளை தடுத்து நிறுத்தினான் உமாபதி.
“நில்லு” என்றவனின் குரலில் அவள் சிலையாகி நிற்க, பெண்ணவளின் அருகே வந்தவன்,
“அழுதுட்டே போய் என்னை மாட்டி விடுறதுக்கா?” என்று முறைத்து விட்டு அவளது துப்பட்டாவை இழுத்தவன், பெண்ணவளின் கண்களை நன்கு துடைத்துவிட, அவனையே பார்த்தாள் நிலா.
மேலும் அவளது கைகளை தூக்கியவன் சிவந்த பகுதியினைத் தொட, பெண்ணவளோ வலியில், ஆவென கத்தினாள்.
“ச்சு… வாயை மூடு.” என்றவன், தன்னிடமிருந்த மருந்து களிம்பு ஒன்றை எடுத்து வந்து வைத்து விட்டது மட்டுமின்றி, “இங்க பாரு. யார்க்கிட்டயாவது காயத்தை பத்தி சொன்ன, அப்புறம் நடக்கிறதே வேற?” என்று முறைக்க, பெண்ணவளோ சம்மதமாக தலையாட்டினாள்.
“சரி போ.” என்றவன் கூறியதும் அங்கிருந்து சென்றிருந்தவள், வலியுடன் அவனைக் கண்டு புன்னகைக்க, அவளை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவனோ அவனது வேலையை கண்ணும் கருத்துமாக செய்துக் கொண்டிருக்க, நாளையே அவனுக்கு காத்திருந்தது மிகப்பெரிய அதிர்ச்சி.
சில மணி நேரத்தில் வீட்டை அடைந்தனர் மதுவும், நந்தாவும். வீட்டிற்கு வந்ததும் நேராக அறைக்கு சென்று கதவினை அடைத்திருந்தாள் மது. வேறு வழியின்றி முகப்பு அறைக்கு சென்று அமர்ந்துக் கொண்டான் நந்தா.
அறைக்குள் நுழைந்ததும் தான் தாமதம் தனது ஈரமான உடையினை களைந்து தூர எறிந்தாள் மதுவர்ணிகா. பின் வேறு உடையினை எடுத்து அணிந்தவள் தலையில் ஈரம் சொட்ட சொட்ட கட்டிலின் மீது அமர்ந்திருந்தாள் விரக்தியான தோரணையில்.
தன் உதடுகளை குவித்து “துரோகி.” என்றவளுக்கு மேலும் வார்த்தைகள் வரவேயில்லை. உணவு விடுதியில் நடந்த ஒவ்வொன்றும் கண்முன் காட்சிகளாக விரிய, தன் கைகளை மடக்கி ஆத்திரத்தினை அடக்கினாள் மது.
சில மணி நேரம் முன்பு உணவு விடுதியில் அவனைக் கண்டதும் ஸ்தம்பித்துப் போய் நின்றவளது உதடுகள், “ரகு” என்று உரைக்க, அவனோ அவளைக் கண்டு மென்மையாக புன்னகைத்தான்.
“வருணிகா.” என்றவனின் அழைப்பு எத்தனை மென்மையாக இருந்தாலும் அவளுக்கு நரக வேதனையைத் தான் தந்தது.
“என் பேர் சொல்ற தகுதி உனக்கு இல்லை.” என்றாள் பற்களை கடித்தபடி.
“வரு, இன்னும் என் மேல இருக்க கோபம் குறையலையா?” என்றான் விரக்தியாக.
“ப்பா… பின்றீங்க ரகு… இன்னும் செமையா நடிக்குறீங்க. வெரி குட்.” என்றாள் நக்கல் தொனிக்கும் குரலில்.
“வரு, ஸ்டாப் இட். நான் பண்ணது தப்பு தான். ஆனால் உன் மேல எனக்கு இருக்க காதல் ரொம்ப உண்மை. ஐ லவ் யூ வரு. ஐ லவ் யூ சோ மச்.” என்றவனின் முகத்தின் மீதே காரி உமிழ்ந்து துப்பினாள் மது.
அதை சற்றும் எதிர்பாராதவன், அவமானத்தில் சுற்றும் முற்றும் பார்த்தான். நல்லவேளையாக அவ்விடம் யாருமில்லை. உடனே தன் கைக்குட்டையைக் கொண்டு முகத்தை துடைத்தவன்,
“வரு” என்றபடி பெண்ணவளின் கரத்தினைப் பற்ற,
அடுத்த நொடியே அவனது கைகளை உதறித் தள்ளியவள், “இன்னொரு முறை என் மேல கையை வெச்ச மவனே கொன்னுடுவேன்.” என்று உரைத்தவள்,
தன் கழுத்திலிருந்த தாலியினை சுட்டிக் காட்டினாள். “என் புருசனுக்கு மட்டும் நீ என் கையை பிடிச்சது தெரிஞ்சுதுனு வை. உன்ன அடிச்சே கொன்றுவாரு. மைண்ட் இட்.” என்றவள் உறுத்து விழிக்க, அந்நொடி அவளைத் தேடி அவ்விடம் வந்திருந்தான் நந்தா.
“மது” என்றவனின் அழைப்பில் அவனை முறைத்து விட்டு திரும்பியவள், அவனை நோக்கி வந்ததும் இல்லாமல் ஆணவனின் கரத்தினை பற்றிக் கொண்டாள். ரகுவோ, முதுகு காட்டி நின்றக் காரணத்தினால் அவனை இவன் பார்க்கவில்லை.
“யார் மது அவங்க?” என்றவனைப் பார்த்து புன்னகை புரிந்தவள்,
“தெரியலைங்க. யாரோ ஒரு ஸ்ட்ரேஞ்சர்.” என்றவளின் பதில் நின்றவனின் செவியையும் அடைந்திருந்தது.
“ஓகே நானும் ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வரேன்.” என்றவன் கை கழுவ செல்ல, அவனை தடுத்து நிறுத்தியவள்,
“எதுக்கு நந்து. இன்னைக்கு நான் தான் ஊட்டி விடப் போறேன்.வாங்க.” என்றவள் இன்முகத்துடன் அழைத்துச் செல்ல, ஆடவனோ திருதிருவென விழித்தான்.
‘இங்க என்னடா நடக்குது. இவளுக்கு என்ன ஆச்சு.’ என்று நினைத்துக்கொண்டே அவளோடு நடந்தவன், அவளை பார்த்து, “உனக்கு ஒண்ணும் இல்லையே மது. நல்லா தானே இருக்க?” என்று கலவரத்துடன் கேட்டவனைக் கண்டு மேலும் புன்னகைத்தாள் பெண்.
“எப்ப பாரு காமெடி.” என்று செல்லம் போல அவனது கன்னத்தை பற்றி கொஞ்ச,
“எது நான் காமெடி பண்றேனா?” என்று அதிர்ந்த தோரணையில் பார்த்தான் நந்தா.
‘ஆண்டவா! இவ இப்படி பண்றது எல்லாம் பார்த்தா எனக்கு பக்குபக்குனு இருக்கே? ஒரு வேலை நம்மளை எதோ வெச்சு செய்ய பிளான் பண்ணிட்டாளோ?’ என்று கலவரத்துடன் பார்த்தவன், ரகுவை கவனிக்கத் தவறியிருந்தான்.
ரகுவோ, பொங்கி வரும் ஆத்திரத்தினை அடக்கியவன், எதிர்முனையிலிருந்த மேசைக்கு சென்று அமர்ந்துக் கொண்டான். மதுவிற்கு நேர் எதிராக அமர்ந்திருந்ததால், அவனை எள்ளலாக பார்த்தவளின் மனமோ, ‘எத்தனை அசிங்கப்பட்டாலும் திருந்த மாட்டான் போல?’ என்ற ரீதியில் பார்க்க, தன்னை கட்டுப்படுத்தியவன் வலியுடன் பார்த்தான் அவளை.
அவன் சொன்ன உணவுகள் மேசையின் மீது நிறைந்திருக்க, தனது கைகளாலே உணவினை எடுத்தவள் நந்தாவிற்கு ஊட்டினாள். அவனோ, ‘ஙே’ வென விழித்தபடி வாயினை திறவாமல் இருக்க,
“அட ஆ காட்டுங்க நந்து.” என்று அன்பாக அவள் உரைக்க, அவன் மறுப்பாக தலையாட்டினான்.
‘எதுக்கு வம்பு. நான் சொன்னா உனக்கு எங்க போச்சு அறிவுனு வீட்டுக்கு வந்ததும் கேட்பா? எனக்கு அது தேவையா என்ன?’ என்று படபடக்கும் விழிகளோடு அவன் நினைத்த கணம், அவளுக்கும் புரிந்தது.
“சாப்பிடுங்க.” என்று முதலில் மென்மையாக உரைத்தவள், அடுத்த நொடியே, “சாப்பிடுங்க.” என்று கண்கள் மின்ன அழுத்தமிட்டுக் கூற,
‘இது அதுல்ல…’ என்று நினைத்தவனுக்கு சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் கண்கள் ஒளியுடன் பிரபுவை முறைத்தது போலவே தோன்றிய நொடி, “ஆத்தி விட்டால் இவ சந்திரமுகியோட கசின் சிஸ்டரா மாறிடுவா. நமக்கு எதுக்கு வம்பு.” என்று முணுமுணுத்தபடி வாயைத் திறந்தான்.
அவளும் புன்னகையோடு உணவினை ஊட்டியிருக்க, பாவம் அவன் தான் மெல்லவும் முடியாமல், முழுங்காமல் இருக்கவும் இயலாமல் தவித்தபடி உண்டான். அவனது முக பாவனை யாரேனும் கண்டால் பக்கென்று சிரித்துவிடுவார்கள். அந்த லட்சணத்தில் தான் உணவினை உண்டான் நந்தா.
மேலும் மேலும் உணவினை ஊட்ட, அதைக் காண முடியவில்லை ரகுவினால். பற்களை கடித்தவனுக்கு அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்கவில்லை. எழுந்தவன், விறுவிறுவென்று அங்கிருந்து நகர, செல்லும் அவனை பழி வெறியுடன் நோக்கியவளின் இதழ்களில் ஒருவித வெற்றி களிப்பு மேலோங்கியது.
இருந்தும் நெஞ்சில் சுருக்கென்று வலி இருக்க, அவளால் இன்றும் ஜீரணிக்கவே இயலவில்லை. அதற்கு மேல் உணவினை ஊட்டாமல் எழுந்தவளோ,
“நான் கார்ல இருக்கேன். சாப்பிட்டு வாங்க.” என்று கூறிவிட்டு கைகளை கழுவியவள் உணவுக்கான பணத்தினை கொடுத்துவிட்டு சென்றிருக்க, அவளை புரியாதப் பார்வை பார்த்தான் நந்தா.
“சாப்பாடா? மதுவா?” என்று மாறி மாறிப் பார்த்தவன், அடுத்த நொடியே வெயிட்டரை அழைத்து மீதமான உணவுகளை பார்சல் கட்டித் தர சொல்லிவிட்டு எழுந்துக்கொண்டான்.
அவன் கை கழுவி வருவதற்குள், பார்சல் தயாராகியிருக்க, பணத்தினை கொடுத்தவன் வெளியே வர, ஒருவேளை உணவின்றி தவிக்கும் வயதானவர் அவனிடம் உதவிக்கரம் நீட்டினார்.
“இந்தாங்க தாத்தா.” என்றவன் உணவினை கொடுத்துவிட்டு மீதி பணத்தினையும் அவரிடமே கொடுத்திருந்தான்.
“நீ நல்லாயிருக்கணும் தம்பி.” என்று அவர் தள்ளாடும் குரலில் ஆசிர்வதிக்க, மென்புன்னகையை பரிசளித்துவிட்டு வந்தவனை காரில் இருந்தபடியே பார்த்துக் கொண்டு இருந்தாள் மதுவர்ணிகா. அவனது செயல் பிடித்தாலும் அந்நேரம் அவனை பாராட்டும் நிலையிலேயே இல்லை அவள்.
அவன் காரில் ஏறியதும் தான் தாமதம் காரினை உயிர்ப்பித்திருக்க, அதுவரை லேசாக பெய்த மழை மீண்டும் அதிரடியாக பொழிய ஆரம்பித்தது.
“என்ன மது நீ காரை ஓட்டும் போது மழையும் அதிகமாகுது. மழைக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு போல” என்றவன் புன்னகை மாறாது கூறவும் அவள் பதில் கூறாது அமர்ந்திருந்தாள்.
“ரைட்டு… ஏதோ இருக்கு…” என்றவன் அமைதியானான். அதன் பின்னரே மற்றவை அனைத்தும் நிகழ்ந்தது.
கட்டிலில் சிலை போன்று அமர்ந்திருந்தவளின் அமைதியை கலைத்தது என்னவோ நந்தா தான்.
நந்தா கதவினைத் தட்டிக்கொண்டிருக்க, சலிப்புடன் எழுந்தவள் கதவினைத் திறந்து விட்டாள்.
“கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? பையன் ஈரமான டிரஸோட வெளியே நிக்குறானே, பாவம் மாத்தட்டும்னு எல்லாம் யோசிக்க மாட்டியா?” என்றான் காட்டமாக.
பெண்ணவளோ எதுவும் பேசாமல் அமைதியாக செல்ல, அவன் தான் குழப்பம் கொண்டான்.
“இந்நேரம் இவ சண்டை தானே போடணும். அமைதியா இருக்காளே?” என்று யோசனையோடு சென்றவன், தனது துணிகளை எடுத்துக்கொண்டு குளியலறை சென்று ஆடை மாற்றி தனது தலையை துவட்டியபடி வந்தான்.
அவளோ அதே தோரணையில் அமர்ந்திருக்க, அவன் மனதில் ஒரு நெருடல் உருவானது. தலையைக் கூட துவட்டாமல் ஏன் இவ்வாறு இருக்கிறாள் என்ற கேள்வி அவனுள் எழ, நடந்தவற்றை ஒவ்வொன்றையும் யோசித்தான். அதே யோசனையோடு அவளை நெருங்கியவன், பெண்ணவளின் தலையினைத் துவட்டிவிட, மறுப்பேதும் தெரிவிக்காமல் அமர்ந்திருந்தவளை காணும் போதே அவனுக்குள் ஆயிரம் கேள்விகள் எழுந்தது. இருந்தும் அவளது தலையினை மென்மையாக அவன் துவட்ட,
“என்ன தைரியத்துல என்னை நீ கல்யாணம் பண்ண? இவளை சுலபமா க்ரெக்ட் பண்ணி செட்டில் ஆகிடலாமானு நினைச்சுட்டு தான தாலிக்கட்டுன?” என்று சலனமின்றி அவள் உரைத்த நொடி, அவனுள் ஒரு வலி ஊடுருவி சென்றது. அது அவனைத் தவிர யாருக்கும் தெரியாது.
பெரும் குரலெடுத்து சிரித்தவனோ, “மேடம்க்கு இந்த நினைப்பு வேற இருக்கா? பணம் கொடுப்பேனு சொன்ன, அதுனால உன் கழுத்துல தாலி கட்டுனேன். அப்புறம் உன்னை அடைஞ்சு செட்டில் ஆகுற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. பட் இப்போ ஏன் உன்னை லவ் பண்ணக் கூடாதுனு தோணுது செல்லம்.” என்றவனின் பதிலில் கலங்கியவள் அவனை வலியுடன் பார்த்தாள்.
“கனவுல கூட நடக்காது. எதுடா இன்னைக்கு நடந்த சம்பவத்தால உனக்கு அப்படி தோணுச்சோ? அதுதான் காரணமா இருந்தால் ஐ மீன் என் உடம்பு மேல தான் உனக்கு ஆசைனா? இப்
போவே சொல்லிடு.” என்றவளின் கேள்வியில் ஒரு நிமிடம் ஆட்டம் கண்டது அவன் உள்ளம்.
அடுத்த நொடியே அவன் செய்திருந்த செயலில் விக்கித்துப் போய் பார்த்தாள்
மதுவர்ணிகா.

