
சுழலி – 22
“திமுதிமுவென கழுகு கூட்டம் கூடிட…
படபடவென இறக்கைகள் படபடத்திட…
புனுகு பூனையின் கண்களில் ஒளிந்திருக்கும்
இரத்தம் தின்னும் சாத்தானே வா…
கருகருவென இருட்டில் வெளவால்கள் சிறகடித்திட…
காலநேரம் கள்ளமில்லா உயிரைப் பரிசளித்திட…
உதிரம் உரிய உடனே வா சாத்தானே…
உயிர்துடிக்கும் சேவலின் இரத்தம் வேண்டுமா?
உயிர்கருக்கும் கன்னி பலி வேண்டுமா?
ஆன்மாவை அறுதியிட்டு உடலை படையலிட்டு
அரக்கன் உனை அழைக்கிறோம் வா…”
இப்படி அகோரிகள் அனைவரும் ஒன்றுகூடி பல மந்திர உச்சாடனங்கள் செய்து பாதாள அரக்கனை வர வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களுக்கு நடுவில் நடுநாயகமாக, உடல் இணைந்து, இரத்த சிவப்பு நிறத்தில் இடையாடை மட்டும் அணிந்துக்கொண்டு தலைகீழாக நின்று பாதாள அரக்கனை நோக்கி தவம் மேற்கொண்டிருக்கிறான் செந்தூரன். அவன்மேனி முழுவதும் உறைந்த உதிரம் தான் இருக்கின்றது. மூலையில் நூற்றுக்கணக்கான சேவல்களும் ஆடுகளும் பலியிடப்பட்டு முண்டங்களாக கிடக்க, நுகரத்தகாத துர்நாற்றம் அந்த இடத்தை சூழ்ந்திருந்தது. இன்றோடு செந்தூரன் அகோரிகளின் கட்டுக்குள் வந்து, தற்போது சக்திக் கொண்டவனாக மாறி ஈரைந்து மாதங்கள் ஆகின்றது.
அகோரிகளின் தலைவன் முதுகிழமகுடபதி, ஒரு கன்னிப் பெண்ணை வசியம் செய்து அழைத்து வந்திருந்தான்.
“குருவே, நம்மின் இத்தனை பலிக்கும் பாதாள அரக்கன் நமக்கு காட்சியளிக்கவில்லையே! நாம் என்ன செய்து செந்தூரனுக்கு சக்திகளை உருவேற்றுவது?”
“அதற்குத்தான் நான் இளம்கன்னியை வசியம் செய்து அழைத்து வந்திருக்கிறேன். இவளை பலியிட்டு அதன் குருதியை பாதாள அரக்கனிற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதிலிருந்து சிறு உதிரக்குவியலை செந்தூரனின் உடல் முழுவதும் பூசி அவனை இன்னும் தயார்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டவன், பலிபூஜையை நிகழ்த்தினான்.
தனது கழுத்தில் கத்தியிறங்குவது கூடத் தெரியாமல் அமர்ந்திருந்தால் தேவநாகவேடர் குலத்தின் இளம்கன்னி சுகிதேவி. முதுகிழமகுடபதி அவளின் குருதியை பாதாளஅரக்கனிற்கு விருந்தாக்கினான். கன்னியின் குருதி சுவைக்கு தன் இருப்பிடம் விட்டு வெளியே வந்தான் பாதாளஅரக்கன்.
“செந்தூரா… உனது தொடர் மந்திர உச்சாடனங்களும் அதற்கு நீ எடுத்துக் கொண்ட காலஅவகாசமும் என்னவோ குறைவு தான். ஆனால், நீ எத்தனை ஈடுபாடோடு இதனை செய்திருக்கிறாய் என்பது உணர்ந்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அகோர சக்திகளின் தலைவனாய் நீ சிறப்பாயாக! வேறு என்ன வரம் வேண்டும் கேள்!” என்றான்.
தனது தவநிலையில் இருந்து விழித்தவன், பாதாள அரக்கனை வணங்கினான்.
“ஏமாற்றங்களை மட்டுமே சந்தித்த என் வாழ்வில் தற்போது இந்த நிலை என்னை உறுதியானவனாக மாற்றியுள்ளது. முதலில் நான் கொங்கு நாட்டை எனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். ஈரேழு லோகத்தையும் நான் ஒருவனே ஆட்சி செய்ய வேண்டும். எனக்கு மரணம் என்பதே நிகழக் கூடாது என்ற வரங்களை தாருங்கள்”
இடிஇடியென சிரித்தான் பாதாளஅரக்கன். “நீ கேட்கும் அனைத்தும் சவால் நிறைந்தவை செந்தூரா. கொங்கு தேசம் முழுவதும் தற்போது இறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனை நீ கைப்பற்றுவதே சிரமம் தான். அதன் பிறகு ஈரேழு லோகத்தையும் ஆள நினைப்பது எளிதான காரியமல்ல. அதற்கு பல வேள்விகள், பல்லாயிரக்கணக்கான உயிர் பலிகள் எனக்கு நீ தர வேண்டும். அப்போது தான் அதற்கான உபாயத்தை நான் தருவேன். இறுதியாக, உன் மரணம். ஏற்கனவே, நீ மடிந்து தற்போது அகோர சக்திகளினால் உயிர்பித்து இருக்கின்றாய். இதில் நல்ல விசயம் என்னவென்றால், நீ முன்னரே உனது ஆன்மாக்களை பிரித்து மறைத்து வைத்திருப்பதுதான். உன் உடலுக்குத்தான் அழிவே அன்றி, உனது பிரிந்திருக்கும் ஆன்மாக்கள் முழுவதுமாக அழிந்தால் மட்டுமே நீ முழுவதும் மடிவாய். அதுவரை, உன்னை எண்ணூறு துண்டங்களாக வெட்டி சாய்த்தாலும், உயிர்கூடும் சக்தியால் உனது உடல் மீண்டும் இணையும்.
உன் சக்திகள் பெருக, தலைச்சன்பிள்ளைகளை பலி கொடு. அதன்பிறகு நீ பார்க்கும் முதல் பெண்ணோடு கூடி களித்து உன் வாரிசை உருவாக்கு”
“தலைச்சன்பிள்ளைகளின் பலி…” வக்கிர சிரிப்பை உதிர்த்தவன், “அவை எங்கிருக்கும் என்று நான் அறிவேன். ஆனால், நான் என் மஞ்சரியை தவிர, வேறு யாரோடும் இணையமாட்டேன். அந்த சுழலியே எனது அரக்க வாரிசை பெற்றுத் தர தகுதியானவள். மஞ்சரி… உன்னைத் தேடி வருகிறேன்… காத்திரு” என்று கண்களில் வஞ்சம் பொங்க கத்தினான் செந்தூரன்.
…
அரண்மனை.
ஒரு பக்கம், மஞ்சரி பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கோதையிசையாளுக்கும் பிரசவ வலி கண்டுவிட்டது. அரண்மனையே பரபரப்பிற்கு உள்ளானது.
மக்கள் அனைவரும் தங்களது சேரகுல வாரிசை காண அத்தனை ஆவலாக அரண்மனை வாயிலை முற்றுகையிட்டு இருந்தனர். நீலாவும் யட்சினியும் தான் இந்த ஒருத்தர் மாற்றி ஒருத்தர் மற்ற இருவரையும் கவனித்து வந்தனர். தற்போது மணிக்கொடி கருவுற்றிருந்ததால், அவள் மஞ்சரிக்கு துணையாக அமர்ந்திருந்தாள். அங்கதினி தான் வரப்போகும் மொட்டுகளை எதிர்பார்த்து பொக்கை வாய் சிரிப்போடு காத்திருந்தாள். செங்கொடி கோதையுடன் இருக்க, செவ்வேலனோ இறைவனை வேண்டிக்கொண்டிருந்தான்.
பத்து மாதங்கள் என்ன செய்தும் கருக்களை அழிக்க முடியவில்லை என்று கொங்கிளக்கேசர்தான் கொதித்து போனார். செம்பியனுக்கு நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், தனது மகளின் கருவை அழிக்க அவன் எண்ணவில்லை. சிறிது நாட்களாக காளிங்கனையும் காணவில்லை. கல்லுக்குள் தற்போதுதான் சிறிதாக ஈரம் சுரக்க ஆரம்பித்தது போலும். கேசர் செய்த சூழ்ச்சிகளில் பல செம்பியனே யாருக்கும் தெரியாமல் தகர்த்துவிட்டான். முக்கியமாக கருவை அழிக்க அவர் எடுத்த அத்தனை முயற்சிகளையும்.
மாரிவெண்கோ ஒட்டுமொத்த கொங்கு தேசத்தையும் தன் கைக்குள் கொண்டு வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார். அதற்கு, தன் சொல் கேட்டு நடக்கும் ஒருவர் அரசாள வேண்டும். பெண்டீர் தலைமையில் அடங்கியிருக்க அவரது ஆண் எண்ணம் ஒத்துழைக்கவில்லை. அதனாலேயே நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் செம்பியனை இன்னும் மூளைச்சலவை செய்துக் கொண்டிருக்கிறார்.
முதலில், மஞ்சரியின் உதரத்தை கிழித்து வெளியே வந்தான் ஆண் குழந்தை. அவனைத் தொடர்ந்து மற்றொரு அறையில் கோதையும் ஒரு ஆண் குழந்தையை பெற்றாள். இறுதியாக மஞ்சரியின் மணிவயிற்றிலிருந்து பெருங்குரலோடு வெளியே வந்தாள் வெண்ணிலவு போன்ற பால் முகம் கொண்ட பெண் குழந்தை.
குழந்தையை கையில் ஏந்திய யட்சினிக்கு வார்த்தைகள் வரவில்லை. பெண் குழந்தை அப்படியே மஞ்சரியை உரித்து வைத்ததுபோல் இருந்தாள். கோதையும் தனது மகவை கண்டு பூரித்து போனாள். மஞ்சரியின் ஆண் குழந்தையின் கண்கள் அப்படியே செந்தூரனின் கண்கள். அதனை யட்சினி அறிந்திருந்தாலும் ஏதும் சொல்லாது அமைதியாகிவிட்டாள். இந்த காரணத்தினால் மற்றவர்கள் இந்த பச்சிளங்குழந்தையை வெறுத்துவிடக் கூடாது என்றும் எண்ணிக் கொண்டாள்.
குழந்தையை கோதையிடம் நீட்டிய நீலா, “பெயர் சூட்டுங்கள் மகாராணி…” என்றாள்.
மெல்ல எழுந்து, குழந்தையை வாங்கியவளின் கண்கள் பனித்தது. ‘இந்த நேரத்தில் தாங்கள் உடனில்லாது போய்விட்டீர்களே!’ என்று அவளின் மனம் வஞ்சனை எண்ணிக் கலங்கியது.
“உன் தந்தை ஒரு காலத்தில் தீவிர சிவபக்தன். ஆனால், காலப்போக்கில் இறையை வழிபடுவதையே நிறுத்திவிட்டார். மீண்டும் அவர் இறையை நோக்கி செல்லும் தருணம்தான் நீ என் உதரத்தில் உதித்து, தாய்மை என்னும் பதவியை தந்திருக்கிறாய். எனவே, உனக்கு சேரமான் சொக்கநாத இரும்பொறை என்ற திருநாமத்தை நான் சூட்டுகிறேன். அனைவராலும் சொக்கன் என்று அன்போடு அழைக்கப்படுவாய்.” என்று அவனின் நுதழில் இதழ் பதித்தாள் கோதை.
அதனைக் கண்ட யட்சினிக்கும் மஞ்சரிக்கும் நெஞ்சம் நிறைந்து போனது. ஆனாலும், மனது இந்த காட்சியெல்லாம் காண சேரமான் வஞ்சன் நம்மோடு இல்லை என்ற எண்ணம் வராமலில்லை.
“மஞ்சரி, நீயும் பெயர் சூட்டு. மக்கள் அனைவரும் இம்மூவருக்காகக் காத்துக் கிடக்கின்றனர்.” என்றாள் கோதை.
மென்முறுவல் பூத்தவள், “என் மகன், தந்தைக்கே பாடம் சொல்லும் சுப்பனாக விளங்குவான். எனவே, அவனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரை சூட்டுகிறேன். என் மகளோ, முழுமதி நிலவுபோல் என்றும் பிரகாசத்துடன் இருப்பாள். அவளுக்கு யாழ்மதி என்ற திருநாமத்தை சூட்டுகிறேன்.” என்று இருவரையும் இருபக்கமும் அணைத்துக் கொண்டாள்.
வெளியே வந்த நீலா, செம்பியனிடமும், மற்ற அமைச்சர்களிடமும் தகவலைக் கூறினாள்.
செம்பியனுக்கு உண்மையிலேயே மட்டற்ற மகிழ்ச்சி. தன் பேரனின் வரவு, இனி நமக்கு உட்சம்தான் என்று எண்ணினார்.
அரண்மனையின் முகப்பில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மஞ்சரிக்கு கந்தர்வ மணம் நடந்தது முன்பே அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது தான். ஆனால், செந்தூரன் உடனில்லாத போது, இந்த குழந்தைகளுக்கு யார் தகப்பன் என்ற கருத்து ஒன்று வெளிபட, அதே நேரம் செந்தூரன் அகோரிகளோடு இணைந்து விட்டான் என்ற செய்தியும் அனைவரையும் எட்டியது.
மக்களைக் கண்டு நற்செய்தியை கூற வந்த அமைச்சரின் செவிக்கு வந்த வார்த்தைகள்….
“தகப்பன் பெயரறியாத மஞ்சரி குழந்தைகளின் நாமம் எங்களுக்கு வேண்டாம். எங்கள் இளவலின் பெயரை மட்டும் அறிவியுங்கள் அமைச்சரே”
இதனைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள் என்றால், மஞ்சரி….
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Hi sis… seriously indha storykaha romba nala wait panren…epa next episode poduvinga….
hi sis. some personal and health issue nala next episodes post panna mudiyala. as soon as possible i’ll be posted sis. thank you.
pls don’t forgot to finish this story…..eagerly I am waiting…….
Sure sis. Asap I’ll complete