
சுழலி-21
எதிர்பாராததை எதிர்பார்க்கும் தருணத்தில் நடத்துவதுதான் இந்த விதியின் விளையாட்டு. செந்தூரன் மடிவான், உயிரையும் உடலையும் பிடித்து செல்லலாம் என்று எண்ணி வந்த அகோரிகளுக்கு பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல, அவனே தன்னை அகோரிகளின்வசம் ஒப்படைப்பான் என்று அவர்கள் நினைக்கவில்லை. தானாக உயிர் பிரிந்தால், ஐந்து வருடமாவது அவனது ஆன்மாவை அடக்கி பணிய வைக்க நாட்கள் எடுத்திருக்கும். ஆனால், அவனே தீய வழியில் நுழைந்திட எண்ணம்கொண்டதனால், அத்தகைய சிரமம் இனி தேவையில்லை என்றே முதுகிழமகுடபதி மகிழ்ந்தான்.
“செந்தூரா, உனது ஆயுள் முடிவுக்கு வர இன்னும் சில நொடிப் பொழுதுகள் இருக்கின்றன. ஆனால், நீயே உனது ஆன்மாவை உடலில் இருந்து பிரித்து எடுத்துவிட்டாயெனில், இன்னும் சக்திகளை உருவேற்றமுடியும். நேரத்தைக் கடக்க வேண்டாம்.” அகோரிகளின் தலைவன் முதுகிழமகுடபதியின் சொற்கள் அனைத்திற்கும் செவிசாய்த்தான் செந்தூரன்.
குன்றுக்கு அருகில் அமர்ந்து செந்தூரன் தனது ஆன்மாவை பிரித்தெடுக்கும் முயற்சியை தொடங்கினான். உடலில் இருக்கும் அனைத்து நாடி நரம்புகளையும் வெட்டி எடுப்பது போல் வலித்தது, உயிர் பிரியும் வலி.
அப்போதுதான் அந்த நிகழ்வு நடந்தது. செந்தூரன் உயிர் பிரியும் நொடிக்கு ஒரு மயிரிழை முன்பாக அவனின் தலை வெட்டப்பட்டு மண்ணில் விழுந்தது. அவனின் உடல் தலையில்லா முண்டமாக குருதிக் கொப்பளிக்க அப்படியே மண்ணில் சரிந்தது. அத்தனை அகோரிகளுக்கும் அதிர்ச்சி.
இருவர் நின்றிருக்க, ஒருவன் கையில் வாளோடு நின்றிருந்தான். அவர்கள், கொங்குநாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் கருநாட்டின் சிற்றரசன் கந்தனும், அதனருகில் இருக்கும் கட்டியநாட்டின் சிற்றரசன் குகனும். வஞ்சனிற்கு அடுத்து செந்தூரனிற்கு மிகவும் நெருக்கமான ஆஸ்தான நண்பர்கள். இவர்கள் ஏன் செந்தூரனை கொல்ல வேண்டும்?
சிறிது நாழிகைகள் நாம் பின்னோக்கி செல்ல வேண்டும். பொதியமலையில் சித்தமுனியை தேடி வந்த படைகளில் வஞ்சனிற்கும் செந்தூரனிற்கும் அடுத்து தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள்தான் கந்தனும் குகனும். அந்நியப்படையெடுப்பு நடக்கவிருக்கிறது பற்றி ஒற்று செய்தி கொண்டு வந்ததே கந்தன் தான். நால்வரும் இணைந்துதான் என்றும் செயல்படுவார்கள். வஞ்சனின் கண்ணசைவிற்கு முன்னே இவர்கள் பணியை முடித்திருப்பார்கள்.
கமண்டல நீரை பெற்று, வெளியே வரும்போது காளிங்கன் படைகள் தாக்கிக் கொண்டிருந்தனர் அல்லவா, அப்போது மற்ற வீரர்களோடு இவர்களும் எதிர்தாக்குதல் நடத்திக் கொண்டுதான் இருந்தனர். திரும்பி வந்து பார்க்கும் பொழுது வஞ்சன் பரிதியில் சென்றுக் கொண்டிருக்க, அவனுக்கு உதவும்பொருட்டு இருவரும் அவனை பின்தொடர்ந்தனர். செந்தூரன் சென்றதை கவனித்து இருக்கவில்லை இருவரும். தன் மன்னரை தனியாக தவிக்க விடக்கூடாது என்று எண்ணி உடன் சென்றவர்கள், சிறிது நேரத்தில் வழிதவறிப் போயினர். அந்த நேரம்தான் காளிங்கன் வஞ்சனை தீண்டியிருந்தான்.
மீண்டும் வழியை அறிந்து வனக்காட்டில் நுழைந்த போதுதான், வஞ்சன் உடுத்தியிருந்த பட்டுத்துணியின் ஒரு பகுதி, ஒரு இடத்தில் கிடக்க, பதட்டத்தோடு தேடிக்கொண்டு எல்லைக்குன்றுக்கு வந்தவர்கள் கண்டது செந்தூரன் வஞ்சனை மலைச்சரிவிலிருந்து உருட்டிவிடுவதைத்தான்.
மேலும், அப்போது அவன் உதிர்த்த சொற்களும் தவறாமல் இருவரையும் சென்றடைந்தது. அரியணை ஆசைக்காக சிறுவயதிலிருந்து ஊனும் உயிருமாய் இருந்த நண்பனை கொல்ல எப்படி மனது வந்தது என்ற தீராக் கோபம் கொண்டனர் இருவரும். வனக்காட்டின் எல்லையை கடந்து நின்றிருந்ததால் செந்தூரனிடம் பேசிய அகோரிகள் யாரும் இருவர் கண்ணிற்கு புலப்படவில்லை. சினத்தின் உச்சியில் தனது வாளை உருவப்போக, உறையில் வாளும் இல்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால், கந்தனுக்கு செந்தூரனை கொல்லும் அளவிற்கு வெறி பிறந்தது. குகன் அத்தனை சொல்லியும் செவிசாய்க்காதவன் கண்களில் தென்பட்டது, வஞ்சனின் மரகதவாள். அது வனக்காட்டின் எல்லைக்குள் மிளிர்ந்தது. அதனை எடுக்ககும்போதுதான் அகோரிகளின் உருவமே இருவருக்கும் புலப்பட்டது.நொடியும் தாமதிக்காது அதனை எடுத்த கந்தன், ஒரே வீச்சில் செந்தூரனின் தலையை மண்ணில் சாய்த்தான். கந்தனின் கோபம் குகனுக்கு புரிந்ததுதான். ஆனாலும், செந்தூரனும் நமது நண்பனல்லவா என்றுதான் சிந்தித்தான். விதி வலியது.
முகத்தில் இரத்தத் துளிகள் சிதறியிருக்க, பெருமூச்சோடு நின்றிருந்தான் கந்தன். அவனோடு குகனும் முகத்தில் கலக்கத்துடனும் வேதனையுடனும் நின்றிருந்தான். தனது ஆருயிர் நண்பர்களை இழந்தும் அவர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர்சிந்தும் நிலையில் தான் இல்லை என்பது அப்பொழுதுதான் அவனது புத்திக்கு உரைத்தது.
செந்தூரன் மடிந்தான்.ஆம், கொங்கு நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஈரேழு தேசத்தை கட்டியாளும் எண்ணம் கொண்டிருந்தவன், மஞ்சரியின் மீது தீராக் காதல் கொண்டிருந்தவன், விதியின் வசத்தால் தனது புண்ணிய பலன்களை இழந்தவன், இனி அகோரிகளின் எண்ணத்திற்கு ஆடப்போகின்றவன் இறந்தான்.
அகோரிகள் கந்தனை தாக்குவதற்குள், இருவரும் வேடுவக்குகைக்குள் புகுந்துவிட்டனர். அங்கு அகோரிகளால் நுழைய முடியவில்லை.
முதுகிழமகுடபதி சீறினான். “மானிடப்பதர்களே, வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்துவிட்டீர்களடா. அவர்களை விடுங்கள், உடனே செந்தூரனின் உடலையும் ஆன்மாவையும் கட்டுக்குள் கொண்டு வாருங்கள். கிங்கணர்கள் வருவதற்குள் நாம் செந்தூரனை பாதாளத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்” என்று ஆணையிட்டான். அகோரிகள் அனைவரும் ஒன்றிணைந்து தமது மந்திர சக்திகளை இணைத்து, செந்தூரனின் உடலையும் ஆன்மாவையும் அப்படியே பாதாளலோகத்திற்கு எடுத்து சென்றனர். பூமி பிளந்து உள்ளே ஒரு வழி தென்பட, மந்திர உச்சாடனங்கள் செய்தவாறே உள்ளே நுழைந்து மாயமாய் மறைந்தனர் அனைவரும்.
நடந்த அனைத்தையும் பார்த்த இருவரும் அதிர்ந்துதான் போயினர். செந்தூரன் மாயமந்திரங்கள் அறிந்தவன் என்று இருவருக்கும் தெரியும். ஆனால், அவன் தீயசக்திகளைத்தான் இத்தனை நாட்கள் பயன்படுத்தியிருக்கிறான் என்று சரியாக தவறாக புரிந்துக்கொண்டார்கள்.
“அவசரப்பட்டுவிட்டோமா கந்தா?” கண்களில் நீர் தேங்கியிருக்கக் கேட்டான் குகன்.
“இந்த கண்ணீர் செந்தூரனிற்காக என்றால் உடனே அதனை துடைத்துவிடு. நம் கண்ணீருக்குக் கூட அவன் தகுதியில்லாதவன்.”
“அவன் நம் நண்பனடா!”
“நண்பனா? நட்பிற்கான இலக்கணம் அறிவானா அவன்? வஞ்னைக் கொன்று மலைச்சரிவிலிருந்து தள்ளிவிட்டிருக்கிறான். அனைத்தையும் நீயும் கண்டாயல்லவா? அவன் துரோகி குகனா. இவனை நல்லவன் என்று நம்பி அங்கு மஞ்சரிஇவனின் வரவிற்காகக் காத்துக்கிடக்கிறாள். அவளிடம், என்னவென்று போய் சொல்லப்போகின்றாய். அரசியாரிடம் என்னவென்று மொழிவாய்.? நாட்டு மக்களிடம் என்ன சொல்லித் தேற்றுவாய்? அத்தனைக்கும் உன்னிடம் பதில் உள்ளதா குகனா? இவன் உயிரோடு இருந்திருந்தால் எப்படியும் நாட்டை நாசமாக்கியிருப்பான். இப்பொழுது சொல் நாம் அவசரப்பட்டுவிட்டோமா?” பதிலேதும் இல்லை குகனிடம். அமைதியாய் நின்றான்.
இன்னும் சிறிது நேரத்தில் பொழுது விடிந்துவிடும். அதுவரை வேடுவகுகையில் இருந்துவிட்டு பின், புறப்படலாம் என்ற முடிவுக்கு வந்தனர் இருவரும். இவர்களின் சண்டையில் மீண்டும் மாயமாய் மரகதவாளை கவனிக்கத்தவறிவிட்டனர். அது, வேடுவத்தலைவனின் காலடியில் பாந்தமாய் ஒளிந்துகிடந்தது.
….
கொங்குநாடு, அரண்மனை.
கொங்கிளக்கேசர் அனுப்பிய மடலை வாசித்த மாரிவெண்கோ, மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
“செம்பியா, கேசர் கூறியதை நிகழ்த்திவிட்டார். வஞ்சனும் செந்தூரனும் மடிந்தார்கள். இனி நாடு நம் கையில். இன்னும் சிறிது நேரத்தில் வேள்வி முடிந்துவிடும். அதற்குள் நீ கோட்டையின் எல்லைக்கு சென்று உன் தந்தையை உள்ளே அழைத்து வா. நான் கோதையிடம் மெல்ல விசயத்தைக் கூறுகிறேன். காயை பொறுமையாக நகர்த்த வேண்டும். மஞ்சரி முன்போல் இல்லை. தற்போது அவளோடு யட்சினியும் இருக்கின்றாள். ஆகவே, நான் கூறும்வரை வஞ்சன் மற்றும் செந்தூரன் மடிந்தது பற்றி யாரும் அறிந்திடக் கூடாது” என்றவர், ஆலயத்திற்கு புறப்பட்டார்.
ஆலயத்தில் வேள்வி முடியும்தருவாயில் இருந்தது. மஞ்சரி சற்றும் குறையாத கோபத்தோடுதான் அமர்ந்திருந்தாள். செவ்வேலனும் அவனின் மனைவிகள் இருவரும் வேள்வியை முடித்து தீர்த்தநீரை அனைவருக்கும் கொடுத்திட, தனது சாபம் முழுவதுமாக களையப்பெற்றனர் நீலாவும் யட்சினியும். மஞ்சரியின் சினம் மெல்ல குறைந்தது. ஆனால், அவளின் மனத்தில் ஆற்றாமையும் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற எண்ணமும் செந்தூரனின் மீது வஞ்சத்தை விதைத்தது.
அங்கு வந்த மாரிவெண்கோ மஞ்சரியின் அருகில் சென்றார். “இளவரசி, தங்களிடம் தனியே உரையாட வேண்டும்” அவரின் சொல்லுக்கு செவிசாய்த்தவள் மெல்ல அங்கிருந்து மறைவான இடத்திற்கு வந்தாள். கோதை கருவுற்றிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், மஞ்சரி கருவுற்ற செய்தி, வேள்வியில் உடனிருந்தவர்களுக்கு மட்டுமே அறிந்த விசயம். இதனை கொங்கிளக்கேசரும் அறிந்திருக்கவில்லை.
“கூறுங்கள் அமைச்சரே! தமையனை கண்டறிந்துவிட்டீர்களா?”
அவளின் வினாவிற்கு விடையளிக்க இயலாமல் கண்ணீரோடு தலைகவிழ்ந்தார் மாரிவெண்கோ.
“அமைச்சரே! என்னவாயிற்று? ஏன் இந்த அமைதி?” அவளின் குரல் தழுதழுத்தது.
“இந்த கிழவனின் உயிர் ஏன் இன்னும் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று எண்ணி வெறுப்பு உண்டாகிறது இளவரசி. நாம் கணித்தது போல், செந்தூரன் வஞ்சனை கொன்றுவிட்டான். நம் மன்னர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார் இளவரசி” கண்ணீர் மல்க கூறியவனின் வார்த்தைமாயம் சரியாக மஞ்சரியின் சினத்தை பகையாக மாற்றியது.
பொங்கியெழுந்த விழிநீரை உள்ளேயே அடக்கியவள், “மகாராணியாரிடம் கூறியாயிற்றா?”
“இன்னும் இல்லை.”
“இனியும் தெரிவிக்க வேண்டாம். தமையன் நாட்டின் நலனுக்காக தேசம்விட்டு சென்றிருக்கிறார் என்று மட்டும் தெரிவியுங்கள்”
“ஆனால், இளவரசி…”
“என்ன?”
“எத்தனை தினங்கள் அரியணையை வெற்றிடமாக வைத்திருப்பது. இது நம் எதிரிகளுக்கு தெரிந்தால் பெரும் போர் சூழும் அபாயம் இருக்கின்றது.”
சிறிது நேரம் யோசித்தவள், “ஒற்றர் செய்தி…?”
“நமக்கு ஒற்றர்கள் மூலம் கிடைத்த செய்திகள் அனைத்தும் உண்மை. செந்தூரன் நாட்டைக் கைப்பற்ற அந்நிய நாட்டோடு கூட்டு வைத்திருக்கிறான். உங்களை மணக்க வேண்டும் என்பதும் அவன் திட்டத்தின் ஒரு பகுதி” என்று இன்னும் அவளை ஏற்றிவிட்டார்.
“அந்த நயவஞ்சகனின் நிலை?”
“அவனைப் பற்றிய செய்தி இன்னும் கிடைக்கவில்லை. ஆனால்…”
“ஆனால் என்ன?”
“கொங்கிளக்கேசர் உயிரோடு தான் இருக்கிறார். அவர் நாடு திரும்பிக்கொண்டிருக்கிறார். அவருக்கு செந்தூரனைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது?”
“கொங்கிளக்கேசரா?” குழப்பரேகை அவளின் முகத்தில்.
“ஆம், இளவரசி. எனது தந்தை இத்தனை நாட்களாக செந்தூரனின் கட்டுப்பாட்டில் அவனது சிறையில் இருந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு தான் நம் ஒற்றர்கள் மூலம் அவர் தப்பித்தார். காட்டில் மறைந்து வாழ்ந்தவர், பொதிய மலையில் நடந்ததையும், கல்வராயன் மலையில் நடந்ததையும் கண்ணுற கண்டு, நம் நாட்டிற்கு வந்துக் கொண்டிருக்கிறார் இளவரசி.”
“நல்லது. அவர் வந்ததும் நாம் மீண்டும் ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். பல போர்களை கண்டு, நாட்டினை ஆளுமையாக நிர்வகித்து வந்தவரின் ஆலோசனையோடும் தங்களின் வழிநடத்தலோடும் மகாராணியார் அரியணை அமருவார். அதன்பிறகு இக்கொங்கு நாட்டின் வாரிசு என் மருமகன் அரியணை ஏறுவான். இது அந்த ஈசனின் மீது ஆணை. நான் சென்று மற்ற பணிகளை கவனிக்கின்றேன்.” என்று அங்கிருந்து நகர்ந்தாள்.
இறுதியாய் அவள் கூறிய அனைத்தும் மாரிவெண்கோவிற்கு எரிச்சலைக் கொடுத்தது. தான் ஒன்று நினைத்து இருக்க, தற்போது மஞ்சரி சொல்லிச் சென்றது பெரும் அதிருப்தியைக் கொடுத்தது. அமைதியாக வந்தவர், பொறுமைக் காத்தார்.
செந்தூரன் பற்றி தவறாக மஞ்சரியிடம் கூறிய அனைத்தும் அவன்மேல் இவள்கொண்ட காதலை நசுக்கி நயவஞ்சகனாக மாற்றியது சரியாக வேலை செய்கின்றதை எண்ணி மர்ம புன்னகை வீசினார். அனைத்திற்கும் காரணம் மாரிவெண்கோதான் என்பது இனி சொல்லி தெரியவேண்டியது இல்லை.
வேள்வி முடிந்து அனைவரும் அரண்மனைக்கு புறப்பட்டனர். நீலா பேச முற்படும்பொழுது எல்லாம் அவளை எட்டவே நிறுத்தினாள் மஞ்சரி.
யட்சினியை உடன் வைத்துக் கொண்டவள், செந்தூரனை கோதைக்கு காவலாக நியமித்தாள்.
அரண்மனைக்கு வந்தவளின் முகத்தில் சோர்வுக்கு பதில் வெறுமையுணர்வு தான் தோன்றியது. வேள்வி நடந்துவிட்டது. இனி யார் நினைத்தாலும் ஆலயப்பணிகள் முழுவதுமாக நடந்தேறும். ஆகவே, அடுத்து நடக்க வேண்டிய பணிகளுக்கு ஆணையிட்டு தனது அறைக்கு வந்தாள். அவளுடனேயே யட்சினியும் வந்தாள்.
மஞ்சரிக்கு ஓய்வு தேவையில்லை. ஆனால், அவளின் பிள்ளைகளுக்கு ஓய்வு அவசியம்தானே! அதனை யட்சினியும் கூறினாள்.
“இத்தனை நேரம் உறங்காமல் இருக்கக் கூடாது மஞ்சரி. சற்றே கண்ணயரு. இரட்டைக் கருவை தாங்கிக் கொண்டிருக்கிறாய். உடலும் மனமும் சோர்ந்து இருக்கிறது. இப்படியிருந்தால் பிள்ளைகளின் நிலை என்னவாவது?”
“ஏன், நான் உறங்கும்போதே என்னைக் கொன்றுவிடும்படி அவன் உனக்கு உத்தரவிட்டிருக்கின்றானா?” விரக்தி புன்னகையோடு கேட்டாள் மஞ்சரி.
“மஞ்சரி! என்ன வார்த்தை மொழிந்துவிட்டாய்? ஒன்றை நீ மறந்துவிட்டாயா? நான் தற்போது யாருக்கும் அடிமை கிடையாது. எனக்கு யாரும் உத்தரவிட முடியாது. வேதனையில் வார்த்தைகளை விடாதே மஞ்சரி. எனக்கு மனது வெம்புகிறது”
மெல்ல நடந்து பஞ்சணையில் அமர்ந்தவள், தனது கரங்களை வயிற்றில் பதித்து, “எனது காதல் உண்மைதான் யட்சினி. அவன் ஏன் என்னை ஏமாற்றி சென்றுவிட்டான்? இந்த அரியணைதான் வேண்டுமென்றால் என் சொல்லிற்காக என் தமையன் அனைத்தையும் விட்டுக்கொடுத்திருப்பாரே. செந்தூரனிற்காக எதையும் செய்யும் நிலையில் இருந்த என் தமையனை கொன்றுவிட்டான். என்னை ஏமாற்றி, துரோகத்தை பரிசளித்துவிட்டானே. ஏன், யட்சினி?”
“நான் என்ன கூறினாலும் அது உன் மனதை சாந்தப்படுத்தாது மஞ்சரி. தெரிந்த துரோகியாய் செந்தூரனை நிர்ணயித்துவிட்டாய். ஆனால், இங்கு நல்லவர்கள் வேடம் புரிந்து தெரியாத துரோகிகள் பலர் இருக்கின்றனர். அவர்களையும் நீ இனம்கண்டு உன்னையும் இந்த நாட்டையும் காக்க வேண்டும். செந்தூரன் பற்றி தற்போது நான் என்ன கூறினாலும், அதனை புரிந்து உணரும் நிலையில் நீ இல்லை. நடந்து முடிந்ததை விட்டுவிடு. இனி நடக்கவிருப்பதை கவனி.”
இவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது, வீரன் ஒருவன் “இளவரசி, கொங்கிளக்கேசர் வருகை தந்து இருக்கிறார். அமைச்சர், அவரசக்கூட்டத்தை கூட்டியிருக்கிறார். தங்களை உடனே வரும்படி கூறினார்” என்று சொல்லிச் சென்றான்.
“கொங்கிளக்கேசரா…?” அதிர்ந்த விழிகளில் நடந்தேறிய நிகழ்வுகளை உணரத் தொடங்கினாள் யட்சினி.
செந்தூரனின் ஆட்டம் ஆரம்பம்.
……
அதிர்ந்த விழிகளில் இருந்த யட்சினியை அப்போதுதான் கவனித்தாள் மஞ்சரி.
“யட்சினி, என்னவாயிற்று?”
“ஒன்றுமில்லை. நீ உடனே அவைக்கு செல்ல வேண்டுமா?”
“ஆம், கொங்கிளக்கேசர் வந்ததும் நான்தான் அமைச்சரிடம் அவையைக் கூட்ட சொன்னேன். தமையன் இல்லாது அரியணையில் யார் அமரப் போகிறார் என்ற வினா அனைவர் மனத்திலும் இருக்கின்றது அல்லவா. அதனை களையவே இந்த கூட்டம்”
சற்று நேரம் அமைதிக் காத்தவள், “நானும் உன்னோடு வரலாமா?”
“என்னவாயிற்று யட்சினி? உனக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. உள்ளதை உள்ளபடி கூறு”
யட்சினி சிறிது நேரம் மௌனம் காத்தவள், “நீ எடுத்த முடிவில் உறுதியாய் இரு மஞ்சரி. பிறகு பேசிக்கொள்ளலாம். இதை வைத்துக்கொள். வேள்வியில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பல். எக்காரணத்திற்கொண்டும் இதனை தவறவிட்டுவிடாதே. தீய சக்திகளிடமிருந்து உன்னைக் காக்கும் காப்பான் இதுவே” என்று சூசகமாய் மொழிந்த யட்சினியிடம் தற்போது விவரித்து கேட்கும் நிலையில் மஞ்சரி இல்லை. சாம்பலைப் பெற்றுக் கொண்டவள், நெற்றியில் சிறிது இட்டுக் கொண்டு, அவைக்கு விரைந்தாள்.
கொங்கிளக்கேசரும், செம்பியனும் ஒருபுறம் அமர்ந்திருக்க, மாரிவெண்கோ மறுபுறம் அமர்ந்திருந்தார். இன்னும் சில சிற்றரசர்கள் வீற்றிருக்க, கோதையோடு அவைக்கு வந்தாள் மஞ்சரி.
அவர்கள் வரும்வரை அவையே சலசலத்துக் கொண்டிருந்தது. ‘கொங்கிளக்கேசர் எப்படி இங்கு?’ ‘அவர் இத்தனை நாள் உயிரோடு தான் இருந்தார் என்பது செம்பியனுக்கு தெரிந்திருக்குமா?’ ‘மன்னர் நாடு திரும்ப இன்னும் நாட்கள் ஆகுமாம். அப்படியெனில், தற்போது அரியணை அமரப்போவது யார்?’ இப்படி ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருக்க, அனைவரின் கவனத்தையும் கோதையின் வருகை தன்பக்கம் இழுத்தாள்.
அனைவரும் மரியாதை நிமித்தம் எழுந்து அவளுக்கு வணக்கம் வைக்க, அனைவரையும் அமரும்படி சைகை செய்தவள், மஞ்சரியை அவளிடத்தில் அமரும்படி பணித்தாள்.
கேசர் தனது வசிய மருந்தை கோதை மறறும் மஞ்சரியின் இருக்கைகளில் போட்டு வைத்திருந்தார். ஆனால், இருவரும் வேள்வி சாம்பலை பூசியிருந்ததால், அந்த வசியம் செயலிழந்து போனது.
தன் மன்னவன் உடனில்லை என்ற ஒன்றைத் தவிர, கோதைக்கு எந்த விதக் கவலையும் இல்லை. அவளைப் பொறுத்தவரை வஞ்சனும் செந்தூரனும் மக்களின் நலனுக்காக சென்றிருக்கின்றனர்.
மஞ்சரியிடம் செந்தூரனைப் பற்றி கேட்டபொழுதும், ஏதும் கூறாமல் அமைதியாய் இருந்தவள், தமையன் விரைந்து வருவார் என்று மட்டுமே கூறியிருந்தாள்.
மாரிவெண்கோதான் உரையைத் தொடங்கினார். “கொங்குநாட்டின் மாதரசி, எட்டுத்திக்கும் தனது கருணைக் குணத்தால் மக்களை அன்பெனும் கயிற்றால் கட்டிவைத்திருக்கும் மகாராணி கோதையிசையாள் அவருக்கு இந்த அவையின் சார்பாக எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அரசி, நமது மன்னர் வஞ்சன் அவர்கள் மக்களின் நலனுக்காக தேசம் கடந்து உபாயம் தேடி சென்றிருக்கிறார் என்று நமக்கு ஒற்றர்கள் மூலம் தகவல் அனுப்பியிருக்கிறார். அவர் வரும்வரை இந்த அரியணையில் யார் அமர்ந்து கோலோச்சுவது என்ற பெருத்த வினா ஒன்று நமது கண்முன் நிற்கிறது. தற்போதுதான் தாங்கள் கருவுற்று இருக்கிறீர்கள். இந்த நிலையில், இன்னும் சுமையை தங்கள் சுமத்த எனக்கு உடன்பாடில்லை. ஆகவே, அவையோர் கூடி பேசி வயதில் மூத்த சிற்றரசரான கொங்கிளக்கேசரை தலைமைப் பொறுப்பில் வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்” என்றார்.
இதனைக் கேட்ட மஞ்சரிக்கு புருவம் முடிச்சிட்டது. ஆலயத்தில் அத்தனை தெளிவாக கோதைதான் அரியணை அமரப்போகிறார் என்றுதான் கூறியதற்கு சரியென்றவர், தற்போது மாற்றி பேசுவது அவளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், இது அவையோர்கள் கருத்து என்று அமைதி கொண்டாள்.
முதன்மையமைச்சர் மாரிவெண்கோ கூறிய அனைத்தையும் கேட்ட கோதையிசையாள் மெல்லிய புன்னகை வீசினாள். “கருவுற்று இருப்பதினால் மட்டும் நான் ஓய்வெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்களா, அல்ல ஒரு பெண்ணின் கீழ் தாம் எதற்கு இருக்க வேண்டும் எண்ணி என்னை அப்புறப்படுத்த எண்ணுகிறீர்களா அமைச்சரே?” அமைதியாய், அதே சமயம் அழுத்தமாய் வந்து விழுந்தது வார்த்தைகள்.
“அந்தோ, அரசியாரே! என்ன வார்த்தை மொழிந்துவிட்டீர்கள்? நான் அப்படி நினைக்கக்கூடியவனா?” அவர் தொடர்ந்து பேசுவதற்குள் கைநீட்டி அவரை அடக்கியவள்,
“முதலில், இத்தனை நாட்கள் இல்லாத கொங்கிளக்கேசர் திடீர் என்று எப்படி இங்கு வந்தார்? அதுவும் சரியாக மன்னர் தூர தேசப்பயணத்திற்கு சென்றிருக்கையில்?”
மாரிவெண்கோ அதற்கு பதிலளிக்கும் முன்பே, தனது இருக்கையில் இருந்து எழுந்து பேசத் தொடங்கினான் கொங்கிளக்கேசர்.
“அரசியாருக்கு இந்த பழுத்த கிழவனின் வணக்கங்கள். குறுக்கிடுவதற்கு பொறுத்தருள வேண்டுகிறேன். தங்களின் சந்தேகமும் வினாவும் மிகச்சரியே. தங்களின் கேள்விக்கு யான் ஒருவனே சரியான விளக்கம் தர முடியும் என்று எண்ணுகிறேன். சில வருடங்களுக்கு முன்பு நடந்த போரில் நான் பெருத்த காயமுற்றேன். அப்போது செந்தூரனின் தந்தை செங்குட்டுவனும் வீரமரணம் அடைந்திருந்தார். அந்நியப்படைகளிடமிருந்து தப்பித்து நான் கானக வழி செல்ல சிறிது நேரத்தில் சுயநினைவின்றி மயங்கி விழுந்தேன். அந்தப்பக்கமாக சென்ற யோகிகள்தான் என்னைக் காப்பாற்றி குணப்படுத்தினர். நான் முழுவதுமாக குணமாக வருடங்கள் இரண்டானது. செங்குட்டுவரின் மரணம் என் கண்ணிமையை விட்டு நீங்காத காரணத்தினால், முதலில் செந்தூரனை சந்தித்துவிட்டு வரலாம் என்று எண்ணியும், கானகத்திற்கு அருகில் கங்க நாடுதான் இருக்கிறது என்ற காரணத்திற்காகவும் நான் சென்று செந்தூரனை சந்தித்தேன். அப்பொழுதுதான் நான் அறிந்தேன், செந்தூரன் யார் என்பதை.” அவர் நிறுத்தி மஞ்சரி முகம் பார்த்தாள்.
அவளின் முகம் செந்தூரனின் பெயரைக் கேட்டதும் சினத்தில்செந்தூர நிறமாய் சிவந்திருந்தது. அதனைக் கண்ணுறக் கண்டு திருப்தி அடைந்தவர், மேலும் தொடர்ந்தார்.
“செந்தூரன், மாய மந்திர வித்தைகள் கற்று கைதேர்ந்திருந்தவன் என்பது இப்பொழுது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அவன் கற்ற மந்திரங்கள் அனைத்தும் சாத்தானை வழிபடும் அகோரிகள் பயன்படுத்துவது. அது மட்டுமில்லாமல், செந்தூரனின் வாழ்நாள் இலட்சியமே இந்த கொங்கு நாட்டை முழுவதும் அவனது கட்டுப்பாட்டில் ஆள வேண்டும் என்பதுதான். அவனின் தனியறையில் நமது நாட்டின் முழு வரைபடமும், நாட்டின் படைகள் பற்றிய இரகசியமும், மன்னர் பயன்படுத்தும் சூளாமணியும் இருந்தன. அதனைப் பார்த்த என் அங்கமெல்லாம் கொதித்தெழுந்து விட்டது. அவனது தந்தைக்கும் இந்த பேராசை இருந்தது பிறகுதான் தெரியவந்தது.
செந்தூரனின் உண்மை முகம் எனக்கு தெரிந்துவிட்டதை எப்படியோ கண்டுக்கொண்டான் அவன். உடனே என்னை மயக்கி, அவனது பாதாள சிறையில் அடைத்து வைத்துவிட்டான். இத்தனை காலமும் நான் அங்குதான் அடைப்பட்டு சிறைவாசத்தில் கிடந்தேன். செந்தூரனும் நமது மன்னரும் பொதிய மலைக்கு சென்றிருப்பது பற்றி காவலர்கள் பேசிட, அப்போதுதான் செம்பியனும் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறான் என்ற விடயமே எனக்கு தெரிய வந்தது. எப்படியாவது எனது இருப்பிடத்தை அவனுக்கு உணர்த்திட முயன்று அங்கு இருந்த ஒரு காவலனின் உதவியோடு செய்தி அனுப்பினேன். பின், நம் ஒற்றர்களின் உதவியால் அங்கிருந்து தப்பித்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன் தற்போது. இனியும் தங்களுக்கு என் மேல் சந்தேகம் தீரவில்லையெனில் அமைச்சரின் ஒற்றர்படை தலைவனை விசாரியுங்கள் அரசியாரே!” என்றான். ஒரு பொய்யை எத்தனை அழகாக திரித்து உண்மையாக சொல்லிவிட்டான் என்று மாரிவெண்கோவே ஒருநிமிடம் உறைந்துதான் போனார்.
அனைத்தையும் கேட்ட கோதைக்கு இதனை நம்புவதா வேண்டாமா என்று தெரியவில்லை. ஏனெனில். செந்தூரனும் தனது மன்னவரும் எப்படி இருந்தார்கள் என்பது அவள் அறிந்ததே. அப்படியிருக்கையில் செந்தூரன் பற்றிய அவதூர்களை கோதையால் நம்பவே முடியவில்லை. அவள் யோசனையோடு மஞ்சரியைப் பார்க்க,அக்கினியை விழுங்கியதுபோல் இருந்தது அவளது முகம். எதனையும் கண்டுபிடிக்க இயலவில்லை கோதையாள்.
“தற்போது செந்தூரன் எங்கே?”
“அவன் அகோரிகளோடு ஐக்கியமாகிவிட்டான் அரசி” என்றவாறே வந்தனர் கந்தனும் குகனும்.
அதனைக் கேட்ட மொத்த அவையும் அதிர்ச்சியில் உறைந்தது. கொங்கிளக்கேசரோ வன்மபுன்னகையை வீசினார் யாரும் அறியாமல்.
“என்ன கந்தா கூறுகிறாய்?”
“நாங்கள் இருவரும் கண்ணால் கண்டதைதான் கூறுகிறோம் அரசி. பொதிய மலையிலிருந்து நமது அரசர் கல்வராயன் மலைக்கு செல்லும்போது அவரைத் தொடர்ந்து நாங்களும் சென்றோம். சிறிது நேரத்தில் வழிதவறிவிட்டோம். கருக்கல்லில் மலையுச்சியை அடைந்தபோது, நாட்டினை கைப்பற்றுவது பற்றி செந்தூரன் அகோரிகளிடம் பேசிக்கொண்டிருந்தான். அதற்காக நம் மன்னரை கொல்லவும் தயங்கமாட்டான் என்றும் பேசிக்கொண்டிருந்தான். அதனைக் கேட்ட எங்கள் இருவருக்கும் இரத்தம் கொதித்தது அரசி. செந்தூரனை நான் கொன்றுவிட்டேன். நயவஞ்சகமாக உடனிருந்த குழி பறித்த கோழையவன். அவனைப் பற்றி பேசவும், இத்தனை நாட்கள் அவனோடுதான் நான் நட்பு கொண்டிருந்தேன் என்று எண்ணவுமே எனக்கு உடல் கூசுகிறது.
அவனின் தலையை நான் கொய்ததும் அகோரிகள் ஏதோ மந்திரங்கள் உச்சரித்து, அவனின் ஆன்மாவையும் உடலையும் எடுத்துக் கொண்டு பாதாளத்திற்கு சென்றுவிட்டார்கள். இவையனைத்தும் உண்மையே!” என்றான் கந்தன்.
“இதிலிருந்தே தெரிகிறது அந்த செந்தூரன் இத்தனை நாட்கள் எப்படி ஆட்சி நடத்தினான் என்று” எக்காளமாக மொழிந்தான் செம்பியன். செந்தூரன் மடிந்துவிட்டான் என்பதே அவனுக்கு குதூகலமாய் இருந்தது. சிங்கம் மடிந்தால் நரிகளுக்கு கொண்டாட்டம் தானே!
கொங்கிளக்கேசருக்கும் அவர் எதிர்பார்த்த செய்தி செவியை அடைந்து மனத்தை குளிர வைத்தது. இனி, அவனை தீய சக்திகள் கொண்டவனாக மாற்றும் வேலையை அகோரிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று களிப்புற்றார்.
தன் செவியால் கேட்ட அனைத்தும் உண்மையா என்று மனது அத்தனை முறை கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தது கோதையை. காதல் கொண்ட மஞ்சரியோ செந்தூரன் இறந்துவிட்டான் என்று கேட்டதும் கல்லாய் சமைந்திருப்பது இன்னும் கோதைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
ஒருநிமிடம் மூச்சை ஆழமாக இழுத்து விட்ட கோதை, “அமைச்சரே! இனி, தங்கள் அனைவரின் ஆலோசனைப்படி நானே என் மன்னவர் வரும்வரை சீரிய ஆட்சி புரிவேன். இந்த அரியணை என்றும் என் மன்னவருக்கு மட்டுமே உரித்தானது. சேர வம்சம் என்றும் தலைதாழ்ந்து போனது கிடையாது. அவர் வரும்வரை இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாப்பது எனது கடமை. நாட்டின் நிலைகளை கருத்தில் கொண்டு நானே கவனித்துக் கொள்கிறேன் அமைச்சரே!. ஒருவேளை நான் சரியான முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில், எனக்கு அறிவுரைக் கூறத்தான் எனது பாட்டனாரும், தந்தையும் அமைச்சராகிய நீங்களும் உள்ளீர்களே!. உங்களின் ஆசியோடு இந்த நாட்டினை இன்னும் வளப்படுத்துவேன். சபை கலைந்தது” மற்றவர்களின் பதிலுக்குக் கூட காத்திராதவள், விறுவிறென தனது அறைக்கு சென்றாள்.
கந்தன், முன்னரே அரண்மனைக்கு வந்து முதலில் மாரிவெண்கோவிடம்தான் விடயத்தை பகிர்ந்தான். அவர்தான் வஞ்சன் மரணித்ததை தற்போது கூற வேண்டாம். அரசி, கருவுற்றிருக்கும் இந்த சமயம் அதிர்ச்சியான செய்திகளை அவர் கேட்டால் இரு உயிருக்கும் ஆபத்து. செந்தூரனை பற்றி மட்டும் அவையில் கூறுமாறு அறிவுறுத்தியிருந்தார். அதனைத்தான் தற்போது செய்திருந்தனர் கந்தனும் குகனும்.
கோதையின் பின்னாலேயே மஞ்சரியும் சென்றாள். மனது இரணமாக வலித்தது. இத்தனை கொடிய எண்ணம் உடையவனிடமா நான் காதல் கொண்டேன் என்று அவளின் மனது அவளை குத்திக் கிழித்தது. ஆனால், இது அனைத்திற்கும் மாறாக கோதை தெளிவாக இருந்தாள். செந்தூரன் பற்றி யார் சொன்னதும் அவளின் செவியை அடைந்ததே தவிர, மனத்தை குழப்பவில்லை. முழுவதுமாக நம்பினாள், செந்தூரன் அப்படிப்பட்டவன் அல்ல என்பதை. அவளை இத்தனை நாட்கள் தங்கையாக பாவித்து எத்தனை அறிவுரைகளும் அரசியல் திறன்களையும் கற்றுக் கொடுத்து இருக்கிறான். அவன் எப்படி தவறு செய்வான் என்றே கோதைக்கு தோன்றியது.
தனது அறைக்குள் நுழைந்த மஞ்சரியை கண்ணீர் சுமந்த விழிகளோடு பார்த்தாள் கோதை.
“மஞ்சரி…” என்று அழைத்த கோதையை உணர்வற்ற விழிகளால் ஏறிட்டவளின் வதனம் வெறுமையாய் இருந்தது.
“இவர்கள் கூறுவது அனைத்தும் உண்மையல்ல மஞ்சரி. நீ நம்புகிறாயா? செந்தூரன் இப்படிப்பட்ட காரியத்தை செய்திருப்பார் என்று?”
“தன் வாயாலேயே எனது கரு கலைந்து போகட்டும் என்று சாபமளித்தவன் இதையெல்லாம் செய்திருக்க மாட்டான் என்று நம்புவதற்கு நான் ஒன்றும் முட்டாளல்ல மதினி” வார்த்தைகளில் அடிப்பட்ட வலி அப்பட்டமாய் தெரிந்தது.
“என்ன கூறுகிறாய் மஞ்சரி?”
“வேள்வி நடக்கும் சமயம், அவன் வந்தான். தீய சக்தியின் மறுஉருவமாய் இருந்ததனால் எல்லைக்குள் அவனால் நுழைய முடியவில்லை. அவன் என்னை அழைத்ததை நான் உணர்ந்தேன். ஆனால், ஏதோ ஒன்று அவனிடம் செல்ல என்னைத் தடுத்தது. அப்போதுதான் அவன் சாபமளித்தான். அதன்பிறதே சித்தமுனி வந்து நமக்கு விளக்கமளித்தார்” பொறுமையாக அதே சமயம் வறண்ட குரலில் அனைத்தையும் கூறி முடித்தாள் மஞ்சரி.
அனைத்தையும் கேட்ட கோதைக்கோ எங்கோ ஏதோ தவறு நடந்திருப்பது புரிந்தது. ஆனால், எங்கு என்றுதான் தெரியவில்லை. செந்தூரனைப் பற்றி தவறாக மஞ்சரி புரிந்துக்கொண்டிருக்கிறாள் என்பது கோதைக்கு தெளிவாக புரிந்தது. ஆனால், அவள் விளக்கம்கேட்க தயாராகவில்லை என்பதையும் உணர்ந்துக்கொண்டாள் கோதை.
சிறிது நேரம் அங்கு அமைதியே ஆட்சி செய்ய, அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தாள் யட்சினி.
மஞ்சரி ஏற்கனவே யட்சினியைப் பற்றி கோதையிடம் கூறியிருந்தாள் என்பதால் பெரிதாக அதிர்ச்சியடையவில்லை.
யட்சினியை பார்த்த கோதை, மஞ்சரியிடம் “செந்தூரன் தீய சக்திகளை உருக்கொண்டவன் என்றால், இத்தனை நாட்கள் அவனோடு இருந்த யட்சினி மட்டும் எப்படி நல்லவள் ஆவாள்?”
“தங்களின் வினா எனக்கு புரிகிறது. நாம் நடத்திய இந்த வேள்வி மிகவும் சக்தி வாய்ந்தது. எந்த தீய சக்தியும் இந்த வேள்விக்கு தாக்குப்பிடிக்க இயலாது. ஆனால், வேள்வி தொடங்கி முடியும் தருவாயில் வரைக்கும் யட்சினி இங்குதான் இருந்தாள். இதிலிருந்தே தெரிகிறது, அவள் தேவலோககன்னிகை என்று”
தனக்காகப் பேசும் மஞ்சரியைக் கண்டு உள்ளம் பூரித்தாலும், உண்மையை கேட்கக் கூட மறுக்கிறாளே என்ற ஆற்றாமையும் சேர்ந்தே வந்தது யட்சினிக்கு.
மெல்ல அவளருகில் வந்தவள், ஆதுரமாய் அவளின் தலையை வருடினாள். யட்சினி மற்ற இருவரையும் மஞ்சத்தில் அமர வைத்தவள் தான் இதுவரை எண்ணியதை மொழிந்தாள்.
“இருவரும் நான் கூறுவதை பதட்டமில்லாமல் செவிசாய்க்க வேண்டும். நடந்த நிகழ்வுகளில் பல குழப்பம் என்னை சுற்றி வருகிறது. தங்கள் இருவரின் கிரகப்பலன்களையும் நான் ஆராய்ந்தேன். இருவரின் பிள்ளைகளும் இம்மண்ணைத் தொடும்வரை தாங்கள் இருவரும் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பிள்ளைகளை கருவிலேயே அழிக்க பல பேர் முயல்வார்கள். தீய சக்திகள் கொண்டவர்கள்தான் நம் எல்லைக்குள்ள வர இயலாது. ஆனால், மனத்தில் தீய எண்ணம் கொண்டவர்கள் மானுடர்கள் தானே. அவர்களால் இன்னல்கள் வரும். உண்ணும் உணவிலும் அருந்தும் நீரிலும் ஏன், வீசும் காற்றிலும் கூட கவனம் வேண்டும். நான் நமது எல்லையைக் கடந்து செல்ல வேண்டிய சூழல். இந்த நேரத்தில் செவ்வேலனை தவிர என்னால் யாரையும் நம்ப இயலவில்லை.
மஞ்சரி, உனது கோபத்தை மட்டுப்படுத்து. எந்நேரமும் இறைவழிபாட்டில் கவனம் செலுத்து. எண்ணம் திண்ணமாக இருந்தால் எப்பேற்பட்ட எதிரியையும் நாம் தரைமட்டமாக்கிவிடலாம். அரசியாரே! தாங்கள் எந்த சூழ்நிலையிலும் இதே திடத்துடன் இருக்க வேண்டும். முடிந்தவரை இருவரும் அரண்மனை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது நலம்.”
“முதலில் என்னை விட்டு நீ எங்கே செல்லப்போகின்றாய் யட்சினி? அதனைக் கூறு?” கண்களில் தவிப்பு மஞ்சரிக்கு.
“நம்மைச் சுற்றி பல சூழ்ச்சிகள் நடந்தேறிவிட்டன மஞ்சரி. முக்காலமும் அறியக்கூடிய என்னால் இப்போது கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் கணிக்க முடியவில்லை. நான் நிச்சயம் இந்த எல்லையைக் கடந்து சென்று நடக்கும் இன்னல்களுக்கான உபாயத்தோடு வருகிறேன். அதுவரை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்றாள் யட்சினி. இத்தனை சிறிது காலத்தில் எப்படி இவளின் அன்புக்கு கட்டுப்படுகிறோம் என்று யட்சினி மெய்சிலிர்த்துப் போனாள்.
“முன்னொருமுறை நான் என்ன கேட்டாலும் செய்வேன் என்று சொன்னாயே யட்சினி. எனக்கு இப்போது ஒரு வரம் வேண்டும்”
“கேள் மஞ்சரி.”
“முதலில் எங்களிருவருக்கும் இது தலைப்பிரசவம். எங்களின் பிள்ளைகள் இந்த உலகை காணும்வரை நீ நிச்சயம் எங்களோடு தான் இருக்க வேண்டும். இரண்டாவது, இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் என் வம்ச பிள்ளைகளுக்கு நீ என்றும் துணையாக இருக்க வேண்டும். இதனை நீ எனக்காக செய்தாக வேண்டும்” என்றாள்.
யட்சினி ஒரு நிமிடம் சிலையாய் சமைந்து போனாள். கிட்டத்தட்ட மஞ்சரி, தன்னை அவளின் தாய் ஸ்தானத்தில் நிறுத்தியிருந்தாள். தலைப்பிரசவம் என்றும் அன்னையின் அரவணைப்போடு நிகழும். அந்த இடத்தை தனக்கு கொடுத்தவளின் சொற்களில் அந்த நிமிடம் யட்சினியின் மார்பிலும் தாய்மை சுரந்தது.
கண்ணீரை தன்னுள் அடக்கியவள், “பஞ்சபூதங்களின் ஆணையாக, நீ கேட்கும் வரத்தை நான் அளிக்கிறேன். பிள்ளைகளை உன் கையில் கொடுத்துவிட்டு நான் உபாயம் தேடி செல்கிறேன். எத்தனை பிறவி கொண்டாலும் அவர்களுக்கு என்றும் துணையாக நானிருப்பேன்.” என்று வாக்கு பகர்ந்தாள்.
துன்பத்திலும் ஆனந்தகளிப்புற்றார்கள் மஞ்சரியும், கோதையும்.
நாட்கள் கடந்தது. இரு பெண்களையும் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டாள் யட்சினி. நீலா எத்தனை முயன்றும் அவளை அருகில் கூட சேர்க்கவில்லை மஞ்சரி. செவ்வேலன் தனது வாழ்நாள் முழுவதும் நல்வழியில் அவர்களுக்கு துணையிருப்பேன் என்றும் வாக்களித்து அதன்படி நடந்தும் கொண்டான்.
செவ்வேலன் செங்கொடிக்கு பெண் பிள்ளை பிறந்தாள். அவளுக்கு அங்கதினி எனப் பெயர் சூட்டி, அவளையும் தன் பிள்ளைப் போலபே பாவித்து வந்தாள் மஞ்சரி.
கோதையின் தலைமையில் நாட்டின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு வந்தது. வெள்ளாமை செழித்தது. மக்கள் எந்நேரமும் ஆலய வழிபாட்டில் அதிக கவனம் செலுத்திட, கொங்கிளக்கேசர் இதனை கலைக்கும் திட்டத்தில் ஈடுபட்டார்.
….
மறுபக்கம், செந்தூரனின் ஆன்மா ஒவ்வொரு நொடியும் சித்திரவதை அனுபவித்து, சிறிது சிறிதாக அரக்கக் குணம் பெறத் தொடங்கியது.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

