
கல்லறை 6
தொலைக்காட்சி அதுபாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்க அதன் மீது கவனம் இல்லாது எதையோ நினைத்துக் கொண்டிருந்தாள் நர்மதா.
அவளின் தற்போதைய மயக்கத்திலிருந்து விடுபட வைக்க வேண்டியே கதவு தட்டும் சத்தம் கேட்டது. எழுந்தவள் மணியைப் பார்க்க அதுவோ இரவு பத்து எனக் காட்டியது.
இந்த நேரத்துல யாரு என்று நினைத்தவள் கொஞ்சம் பயத்தோடும் கொஞ்சமாயிருந்த தைரியத்தினையும் இறுக்கிப் பிடித்து கதவினை நோக்கி வந்தாள்.
“யாரது” என்று அவள் கேட்க “நதி”யென்ற குரலில் “ஆதி” என்று வேகமாய் கதவைத் திறந்தாள் அவள். அவள் முகம் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தது.
“உள்ள வா ஆதி” வார்த்தைகள் பரவசத்துடன் வந்து விழுந்தது.
“இல்லை நான் கிளம்புறேன். ஹாஸ்பிட்டல்ல இந்த ரிப்போர்ட்டை மறந்து வச்சுட்டு வந்துட்ட. அதான் குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்” இப்படி அவன் சொன்னதும் “மொத உள்ள வாடா.. சாப்பிட்டு போகலாம்” என்றாள் அவள்.
“இல்லை வேண்டாம். எனக்கு வேலை இருக்கு…”
“என்ன வேலை. அந்த தலைகாணி மாதிரி இருக்குற புக்கை படிக்குற வேலைதானே. அதைக் கொஞ்சம் தள்ளி வையேன்” கெஞ்சலாய் அந்த பெண்ணவள் பேச “அதில்லை இது வேற வேலை” பதிலுரைத்தான் இவன்.
“எதுவா இருந்தாலும் உள்ள வா. காஃபி போட்டு தர்றேன். குடிச்சுட்டு போ டா.. பெரிய இவன்” என்று அவனை உள்ளே இழுத்து வந்து உட்கார வைத்தாள்.
“டிவி பார்த்துட்டு இரு. நான் போய் எடுத்துட்டு வர்றேன்” என்று அவள் செல்ல இவனோ அதில் ஓடிக் கொண்டிருந்த பழைய பாட்டை சில நொடி ரசித்துவிட்டு “என்ன நதி எப்போ இருந்து பழைய பாட்டெல்லாம் கேக்க ஆரம்பிச்ச…” என்க உள்ளேயிருந்து அவள் “நைட் அதுதான் கேக்க நல்லா இருக்கு டா” என்றாள்.
“எப்பவும் கேக்க நல்லா இருக்கும்” என்றவன் சேனலை மாற்றி நீயூஸ் சேனலை வைத்து அதில் ஆழ்ந்து போய்விட்டான்…
காபியோடு அவள் வந்தமர அவனோ தீவிரமாய் முகத்தை வைத்துக் கொண்டு யோசனையில் இருந்தான்.
“ஏய் ஆதி என்னடா இது” என்றவாறு காபியினை அவனருகே வைத்துவிட்டு அவன் தோளைத் தட்டி டிவியினை காண்பித்து அவள் கேட்க “நாட்டு நடப்பு அப்படித்தான் இருக்கு நர்மதா… இந்த உலகத்துல தான் நாம வாழ்ந்துட்டு இருக்கோம்…” என்றவாறு காபியினை எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தான்.
“அதெப்படிடா இப்படி பண்ணுறாங்க” வார்த்தைகள் உணர்வுகளை அதிகமாய் தடவி வெளிவந்தது.
“எல்லாமே இங்க பணத்தை வச்சுத்தான் தீர்மானிக்கப் படுது. சோ ஒன்னும் சொல்லுறதுக்கில்லை” காபியை விழுங்கியபடியே பேசினான் ஆதி.
“அதுக்காக இது தப்பில்லையா?”
“இங்க இப்போலாம் தப்பு சரியின்னு இல்லை. ஓகே நாட் ஓகே அவ்வளவுதான்” என்றவன் “சரி டென்சன் ஆகாத.. மைண்டை ரிலாக்ஸ்ஸா வச்சுட்டு போய் தூங்கு. ரொம்ப நேரம் கண்ணு முழிச்சுட்டு உக்காந்துட்டு திரியாத… என்ன புரிஞ்சதா நதி. நான் வர்றேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அவன் மீது கொண்ட மயக்கம், அவனைப் பார்த்த பின்னான மயக்கம் என எல்லாமும் அவளை விட்டு தற்காலிகமாக விலகி இப்போது அவ்விடத்தில் செய்தியில் ஓடியதே நிலைத்திருந்தது.
இந்த உலகம் எதை நோக்கித்தான் செல்கிறது. ஏன் கொஞ்சங் கூட மனிதாபிமானம் என்ற எண்ணம் இல்லாது அனைவரும் நடந்து கொள்கிறார்கள் இவள் நினைவு முழுக்க அவ்வெண்ணமே இவ்வாறு ஆக்ரமித்திருக்க ஆதித்தனோ வேறு சிந்தனையில் சாலையில் வண்டியினை செலுத்திக் கொண்டிருந்தான்.
அவனுக்குள் அந்த நினைவின் தாக்கம் அதிகமாகவே இருக்க… தான் செல்ல வேண்டிய இடத்துக்கு வண்டியை இன்னும் கொஞ்சம் வேகமாக செலுத்தினான்.
சில்லென்ற காற்று முகத்திலறைய அவன் மனமோ வேறு நினைவில் பயணிக்க காற்றைவிட அதிகமாய் விரைந்து அவன் எண்ணங்கள் எங்கெங்கோ ஓடியது. அவன் படித்த பாடங்கள் அவனிலையை காப்பாற்றிக் கொள்ள உதவாது கைகட்டி வேடிக்கைப் பார்க்க அவனோ பாவம் என்ன செய்ய என்று தெரியாது வண்டியினை செலுத்திக் கொண்டிருந்தான்.
சட்டென்று அவனது வண்டி நின்றுவிட இவன் மறுபடியும் மறுபடியும் வண்டியை ஸ்டார்ட் செய்ய அதுவோ சண்டித்தனம் செய்யத் தொடங்கியது. ஓ காட்..! லட்சுமி ஸ்டார்ட் ஆகிடு… ஸ்டார்ட் ஆகிடு என்று படிக்காதவன் ரஜினி போல் முயல அதுவோ ம்ஹூம் என்று மறுக்க அவனோ வெறுத்து நிமிர அப்போதுதான் பெட்ரோல் காலியாகியிருப்பது அவனுக்குப் புரிந்தது.
‘ஷிட்’ என்று வண்டியினை தட்டியவன் ‘இதை நான் பார்க்கலையே’ என்றபடி அந்த இடத்தினைச் சுற்றிப் பார்த்தான். இரவின் கருமை
எங்கும் வெறுமை
பக்கத்தில் எருமை இருந்தாலும் சரி எமனே இருந்தாலும் சரி ஒன்றுமே தெரியாது. அப்படியாப்பட்ட நேரமது…
அந்த இடத்தில் தூரமாய் ஒரு கட்டிடம் இருக்க அதன் முன்னே சின்னதாய் இருந்த இரும்பு கேட் சற்றே பலமாய் வீசிக் கொண்டிருந்த காற்றில் சப்தம் எழுப்பியபடி ஆடிக் கொண்டிருந்தது…
ஊ…ஊ…ஊ…. என்ற நாயின் ஊளைக்குரலும், இரவு வண்டின் ரீங்காரமும் கோட்டான்களின் அலறலும் அந்த நிசப்தத்தினை கொஞ்சம் கொடுமையாகக் காட்டிக் கொண்டிருந்தது.
‘ஆதி என்னடா இது நட்ட நடுக்காட்டுக்குள்ள வந்து இப்படி அனாமத்தாமா நின்னுட்டு இருக்கோம். எப்படிப் போறது… பெட்ரோல் அப்பவே போட்டுருக்கலாம். இப்பப் பாரு…’ என்று அவன் நினைக்க அந்த கட்டிடத்தினுள்ளே நெருப்பு வேறு எரிந்துக் கொண்டிருந்தது அவன் பார்வையில் விழுந்தது.
அதுவுமின்றி ஏதோ சத்தங்கள் வேறு அவனுக்குக் கேட்க அதென்ன இடம் என்று அறிய வேண்டியே அவன் அந்த வழியில் காலெடுத்து வைத்தான். இதுவரை அவன் இந்த மாதிரியான இடங்களுக்கு வந்ததில்லை. இருட்டில் வெகுவான இடமெல்லாம் மறைந்திருக்க அங்கே எரிந்துக் கொண்டிருந்த கஞ்சத்தனமான விளக்குகளின் வழியில் கொஞ்சம் இடம் மட்டும் கண்ணுக்குத் தெரிய…. அதில் இப்போது இது என்ன இடமென்று புரிந்துப் போனது.
மனதுக்குள் சிலீர் என்றோர் உணர்வு பாய்ந்தோட அச்சோ இங்கயா வந்து நின்னோம்… திரும்பிப் போய்டலாமா என்று மனம் சிறுபிள்ளையாய் யோசித்தாலும் ‘வாடா போய் பார்ப்போம்’ என்றவாறு நடந்தான் ஆதி.
“அடேய், அதென்ன சுற்றுலாத்தலமா சுடுகாடு டா.. அதுல சுத்திப் பார்க்க என்ன இருக்கு” மனசாட்சி கதற
“ம்ம் நாலு மண்டையோடு இருக்கும் அதை பார்த்துட்டு வர்றேன்” என்றான் ஆதி.
“டேய் சைக்காலஜி படிச்சவனே… ஏதாவது பேய் வந்து பயமுறுத்துனா என்ன பண்ணுவ ஒழுங்கா வந்துடு…” இது மனசாட்சி.
“பேய் வந்தா நான் கவுன்சிலிங் குடுத்து ஆத்ம சாந்தி பண்ணி மேலோகத்துக்கு பார்சல் பண்ணிடுவேன்” என்று மனசாட்சிக்குச் சொந்தக்காரன் சொல்லிவிட்டு அந்த கேட்டைத் தாண்டி உள்ளே நுழைகையில் மரத்தின் மறைவில் இருந்து அவனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த உருவம் அந்த இருளில் கரைந்து அப்படியே பின்வாங்கியது… இது எதுவும் அறியாத ஆதியோ மெல்ல மெல்ல முன்னேறி சென்றான்.
நடந்துக் கொண்டே இருந்தவன் பின்புறம் யாரோ வருவதைப் போல இருக்க உடனே அவன் சடாரென்று திரும்ப “ஆ அம்மா” என்று அவன் காலைப் பிடித்துக் கொண்டான்….
இந்த சத்தம் கொஞ்சம் சத்தமாய் கேட்டிருக்க வேண்டும் போல.. உடனே கையில் இருந்த கம்பை எடுத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த வேலையை விடுத்து அவ்விடம் வந்து சேர்ந்தாள் செல்வி.
கையில் இருந்த கம்பு… அவளுக்கு பின்னால் எரிந்துக் கொண்டிருந்த சிதை… அந்த நெருப்பொளி அவளின் பின்புறம் ஒருவிதமான மாயை தரும் தோற்றத்தினை காட்ட அதில் முதன்முறையாக மயங்கி அவன் நிற்க.. “யார் நீங்க?? இங்க என்ன பண்ணுறீங்க??” என்று தன் குரலில் கடுமையை கலந்து அவள் வினவினாள்…
ஒருவித தெய்வீக ஒளியில் மயங்கி நின்றவன் அவளின் குரலில் கலைந்து “வண்டி… பெட்ரோல்… இல்லை… நான் உள்ள… வேடிக்கை.. ச்சே” என்றவன் உளறிக் கொட்ட அவளோ தன் கம்பினை இறுகப் பிடித்துக் கொண்டு அவனை ருத்ர காளியாய் முறைக்க ப்ப்பா பயங்கர அனல் என்று நினைத்தவன் “வண்டியில பெட்ரோல் இல்லை. இங்க வெளிச்சம் தெரியவும் நான் உள்ளே வந்துட்டேன். இப்போ எப்படி வீட்டுக்குப் போறதுன்னு தெரியலை. இன்னும் ரொம்ப தூரம் நான் போகணும்” அவன் நிலையை விளக்க “சரி வெயிட் பண்ணுங்க… நான் எனக்குத் தெரிஞ்ச ஆட்டோக்கார அண்ணா இருக்காங்க அவங்களை வரச் சொல்லுறேன். அவங்க கூட போங்க. வண்டியை உள்ள நிறுத்திடுங்க. காலையில வரும்போது வண்டியை எடுத்துக்கோங்க” என்று அவள் சொல்லிவிட்டு அவன் அடுத்து பேசுவதை எதிர்பார்க்காது அங்கிருந்து விறுவிறுவென நடந்து சென்றுவிட்டாள்.
இந்த தருணம் அவன் எதிர்பாராத ஒன்று. அமைதியாய் அதே சமயம் முக்கண்ணனின் மனைவியின் வடிவாய் அவள் இருக்கும் அந்த கம்பீரம் அவனை வாயடைக்க வைத்தது. அச்சுறுத்தும் அந்த சுடுகாட்டின் அமானுஷ்யத்தில் அச்சமென்பதே இல்லாது அணங்கவள் வேலை செய்கிறாளென்றால் அவள் மனம் எந்தளவிற்கு பக்குவப்பட்டு இரும்பாய் இருக்கும் என்று யோசித்தவன் அவளையே பார்க்க அவளோ கருமமே கண்ணாயிருந்தாள்…
“போய் உக்காருங்க இந்தப்பக்கம் வராதீங்க” என்று அவள் வாயிலிருந்து வார்த்தைகள் உஷ்ணத்துடன் வந்து விழ “இல்லை ஜஸ்ட் பார்த்தேன். பார்க்கலாம் தானே” என்றவாறு அவன் அவளுக்கு எதிரே வந்து நிற்க அவளோ அவனுக்கு பதிலெதுவும் சொல்லவே இல்லை.
பற்றியெரியும் நெருப்பின் தாக்கம் அவனிருக்கும் இடம் வரை சுட அவனோ அசையாது அவளைப் பார்த்தபடி அவள் செய்வதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அவன் கண்களில் எந்தவித உணர்வும் இல்லை. மாறாய் ஒருவித பிரம்மிப்பே அவன் தேகம் முழுவதும் நிறைந்திருந்தது.
எந்தவித பாதிப்பும் இல்லாது அவள் பாட்டுக்கு சிவனே என்று இருக்க அந்த இடத்தின் அமானுஷ்யம் வெறுமை அவளுக்குள் எந்தவித பயத்தையும் ஏற்படுத்தவில்லையா என்று ஆச்சர்யத்தோடு அவன் பார்த்தான்.
அவன் பார்வையை உணராதவள் போல் அவள் “அப்போ கத்துனீங்க தானே என்னாச்சு. எதையாவது பார்த்து பயந்துட்டீங்களா” என்று கேட்க அவன் அப்போதுதான் ஞாபகம் வந்தவனாய் “ஒன்னுமில்லை கால்ல ஏதோ குத்திடுச்சு. அது ரொம்ப பெயினா இருந்தது. அதான் என்னையும் மீறி கத்திட்டேன்” என்றவன் காலை உயர்த்தி அந்த வெளிச்சத்தில் பார்க்க முயன்றான். இப்போதும் லேசாய் வலியிருக்க அதற்குள் அவளே வந்து மண்டியிட்டு அவன் பாதத்தினை ஏந்தி பார்த்தாள்.
“பார்த்து வர வேண்டாமா அந்த இடத்துல குடம் உடைச்சுப் போடுவாங்க. நல்லவேளை காயம் பெருசா எல்லாம் இல்லை. செருப்பு போட்டுட்டு வந்துருக்கலாம்ல” என்று அவள் அவன் காலினை தன் இடுப்பில் இருந்த துணியால் துடைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தே கேட்க அவனோ என்ன பேசுவது எதைப் பேசுவது எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் அவளின் விரல்களையேப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் விரல்களின் இறுக்கம், வலிமை அவளுக்குள் இருந்த வலிமையை பறைசாற்றியது.
“உங்ககிட்டதான் கேக்குறேன் செருப்பு போட்டுட்டு வர வேண்டியதுதானே” என்று அவள் கேட்கவும் இல்லை “அது வெளியே கேட்கிட்டயே கழட்டி வச்சுட்டேன். நீங்களும் தான் போடலையே” அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று அவன் ஒருவித பரபரப்புடன் கேட்க “இது எனக்கு கோவில். இங்க நான் இப்படித்தான் இருப்பேன். இதுவரைக்கும் செருப்பு போட்டு உள்ள வந்ததே இல்லை. இனிமேலும் வரமாட்டேன்” என்றாள் அவள்.
“குடம் உடைப்பாங்கன்னு சொன்னீங்க தானே. அப்படின்னா என்ன பண்ணுவாங்க. என்ன ரீசனுக்காக இதைப் பண்ணுவாங்க?”
“இதைப் பத்திய ஆராய்ச்சிலாம் உங்களுக்கெதுக்கு”
“தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டேன்”
“ஓர் உயிர் இந்த உலகத்துக்கு எப்படி வருது… உங்களுக்கேத் தெரியும் தானே… அந்த கரு கர்ப்பப்பையில வந்த உடனே அதை நீர்சூழ்ந்த அந்த படலம் பாதுகாக்க ஆரம்பிக்கும். கடைசியாய் அந்த பனிக்குடத்தை உடைச்சுட்டு தான் அந்த உயிர் வெளிய வருது. இது உறவை ஏற்படுத்துவதற்கான அடையாளம். அதேமாதிரி உறவை முடிச்சு அனுப்பி வைக்கிறதுக்கு உடைக்குறதுதான் இந்த கொள்ளிக் குடம்… மண்பானையில தண்ணீர் நிரப்பி தான் இந்த சடங்கை பண்ணுவாங்க. அதுவும் சில சமூகத்துல இரண்டு இடத்துல இந்த சடங்கு பண்ணுவாங்க. ஒன்னு இடுகாட்டுல அந்த இறந்தவங்களோட பொண்ணு பண்ணுறது இன்னொன்னு சுடுகாட்டுல அவங்க பசங்க பண்ணுறது.
எப்படி உடைஞ்ச மண்பாண்டத்தை அடுத்து ஒட்ட வைக்க முடியாதோ.. அது மாதிரி இந்த இறந்து போன உறவையும் இனி நம்மளால திரும்பி ஒட்ட வைக்க முடியாது… முடிஞ்சது முடிஞ்சதுதான் என்று சொல்வதற்காகத்தான் இந்த சடங்கு…” என்றாள் அவள்.
அவள் இந்த சடங்குகளின் அர்த்தம் தெரிந்துதான் செய்கிறாள் என்று அவனும் நினைத்துக் கொண்டே “பொதுவா சுடுகாடு அப்படின்னாலே நிறைய கதை சொல்லுவாங்க. ஆனா நீங்க இங்கயே இருக்கீங்க” என்று கேட்க
“நீங்களே சொல்லிட்டீங்க அது கதைன்னு அப்பறமென்ன?” இயல்பாய் உரையாடினாள் அவள்.
“அப்போ உங்களுக்கு பயமே இல்லையா?” என்றவன் கேட்க அவள் விழி கணநேரத்தில் மாறி பின் இயல்பானது.
“இப்போ வண்டியோட அந்த அண்ணா வந்துடுவார். இந்த இடத்துல நீங்க நிக்க வேண்டாம். போய் அந்த மண்டபத்துல உக்காருங்க” என்றவள் சொல்லவும் அவனோ “சாரி நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா. ஆக்சுவலா உங்களை இப்படிப் பார்த்தும் கேட்டுட்டேன். நான் சுடுகாட்டுக்கு வர்றது இதுதான் பர்ஸ்ட் டைம். கொஞ்சம் அதனோட தோற்றம் இதெல்லாம் கொஞ்சம் ஹாரர் பீல் தருது. பட் உங்களைப் பார்த்தா உடனே டிவோஷனல் பீல் தான் வருது. எனக்கு இது புதுமையா இருக்கு” என்றான்.
“நைட்டு நேரத்துல இப்படித்தான் மூளை கொஞ்சம் லூசுத்தனமா உளறிட்டு திரியும். கவலைப்படாதீங்க விடிஞ்சா சரியாகிடும்”
‘அடிப்பாவி ஒரு சைக்கலாஜி படிச்சவனைப் பார்த்து பையித்தியம்னு சொல்லிட்டயே’ என்று மனதுக்குள்ளயே நினைத்தவன் அவள் சொன்னது போலவே அவளுக்கு இடையூறாய் இல்லா வண்ணம் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டான். திகுதிகுவென பற்றியெறியும் நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அந்த உடலை தன்னோடு சேர்த்துக் கொண்டு சாம்பாலாக்கியது. மொத்தமாய் சிதை எரிந்து முடிந்த பின் அவள் இருகையையும் சேர்த்து கும்பிட்டாள். அவள் மனம் ஈசனை வணங்கியது… இந்த உயிர் உன்னோடு அடைக்கலமாகி நற்கதி அடையட்டும். உன்நிழலிலே வைத்துக் கொள் என் அப்பனே என வேண்டி முடித்தவள் அந்த இடத்தினை விட்டு நகர்ந்தாள்.
இன்னமும் ஆட்டோ வராததால் அவனும் அங்கேயே இருக்க வேண்டியதாகிப் போய்விட்டது.
“வர்ற வழியில ஆட்டோவுல ஏதோ பிரச்சனை போல அதான் லேட்டாகுது” என்றவாறு அவனருகே இருக்க அவனோ மனதுக்குள் ரிப்பேர் ஆன ஆட்டோவுக்கு ஒரு நன்றியை அவசரமாய் செலுத்திவிட்டு “பரவாயில்லை நான் வெயிட் பண்ணுறேன்” என்றான் இயல்பாய்.
அவளோ ம்ம் என்று தலையாட்டிவிட்டு அங்கிருந்த அவளது பையை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள்.
“சாப்பிடப் போறீங்களா” அவன் குரலில் பெரும் ஆச்சர்யம்.
“ஆமா” இவள் குரலில் ஏக இயல்பு..
“இந்த இடத்துலயா”
“ஆமா ஏன் இந்த இடத்துக்கு என்ன?”
“இது சுடுகாடுங்க”
“அதனால என்ன? இதெனக்கு கோவில். இங்க என்னோட தெய்வங்கள் தான் இருக்காங்க. இந்த இடத்துல நான் சாப்பிடுறதை அவங்களே ஒன்னும் சொல்ல மாட்டாங்க. நீங்க எதுக்கு இவ்வளவு தூரம் யோசிக்கிறீங்க?. உங்களுக்கும் வேண்டுமா?” என்றே அவள் கேட்க அவனோ அந்த இடத்தினை ஒரு முறை நன்றாக சுற்றிப் பார்த்துவிட்டு முழிக்க “உங்களுக்கு எல்லாம் அப்படியே கண்ணாடி மேஜையில விதவிதமான பதார்த்தங்களோட அப்படியே டீசண்டா சாப்பிட்டுத்தான் பழக்கம் இருக்கும்.. இல்லையா?” என்றதும் அவனோ நெற்றி சுருக்கிவிட்டு சட்டென்று அவளருகே அமர்ந்துவிட்டான். அதுமட்டுமில்லாது கையையும் அவள் முன்னால் நீட்டினான்.
“என்னாச்சு”
“சாப்பாடு வேண்டும்”
“உளறாம எந்திரிச்சுப் போங்க” இம்முறை இன்னும் கடுமையுடன் தான் வெளிவந்தது அவள் குரல்.
“எனக்கு சாப்பாடு வேண்டும் நீங்க கொடுங்க. பசிக்குது ரொம்ப” என்று சொல்ல “உங்களைப் பார்த்தாலே ரொம்ப பெரிய ஆள் மாதிரி இருக்கீங்க. நீங்க ஏன் இப்படி நடந்துக்கிறீங்க.நான் ஒரு சாதாரண பொண்ணு. என்னை ஒதுக்கி வைக்குற பார்வையைத்தான் இதுவரைக்கும் நான் பார்த்திருக்கேன். இது புதுசா இருக்கு. ஆனா இது எதுவும் நிரந்தரமில்லைன்னு எனக்குத் தெரியும்” என்றவள் பேச்சு கழிவிரக்கத்தில் கடைசியில் முடிந்தது.
“இதே இடத்துல இருக்குறவளுக்கு நிலையாமை பத்தித் தெரியாம இருந்தாத்தான் ஆச்சர்யம். இங்க பாருங்க நான் உள்ளே வந்தேன். நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லியிருக்கீங்க.. இப்போ சாப்பிடவும் சொல்லுறீங்க. இது உங்க மனசோட பவித்திரத்தைக் காட்டுது. அதுக்காக நான் இந்த வேலை செய்யுறவ அப்படின்னு நீங்க ஏன் உங்களை தள்ளி வைச்சுக்கிறீங்க “
“இது நான் தினமும் அனுபவிக்கிறது தான்.. ஒவ்வொரு முறையும் கர்ணன் எப்படி ஒதுக்கப்பட்டானோ அது மாதிரி தான் இங்க நானும்… உங்களுக்கு பிரச்சனை இல்லைன்னா எனக்கும் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. இந்தாங்க” என்று அவள் சாப்பாடை எடுத்து அவன் கையில் வைக்க அவனோ அவளுக்குள்ளே இருக்கும் சோகத்தினை வெளியேற்ற முடியாது தவித்தான்.
ஒரு மருத்துவனாய் அவன் அவளை நினைத்து அந்த தருணத்தில் துடிக்கத் தொடங்கினான். வெளியே கொட்டாத உணர்வுகள் ஆபத்து என்று அவனுக்கு தெரிந்ததால் அவனால் இப்போது நிம்மதியாகவே இருக்கவே முடியவில்லை. அவன் முகத்தினை பார்த்தவள் “என்னாச்சு” என்று அவள் மீண்டும் கேட்க “உங்களுக்கு ஏதாவது ப்ராப்ளம் இருக்கா என்ன?” என்றான் தன்மையாய்.
“எனக்கா அப்படிலாம் இல்லையே. அவன் என்கூடவே இருக்குறவரைக்கும் எனக்கெந்த குறையும் வராது”
“அவன்???” என்றே ஆதி இழுக்க “சிவன்” என்றாள் இவள்.
“கடவுள் நம்பிக்கை ரொம்ப அதிகமோ”
“ரொம்ப ரொம்ப அதிகம். அவனில்லையென்றால் அண்டத்தில் எதுவும் இல்லை என்பதே என்னோட கருத்து. நீங்க கடவுளுக்கு எதிரானவங்களா???”
“இல்லை இல்லை அப்படிலாம் இல்லை. கும்பிடுவேன் நானும்.. பட் தோணும் போதுதான்”
“ஓ… சாப்பிடுங்க” என்று அவள் சொல்ல அவனும் சாப்பிடத் தொடங்கினான. இருவரும் சாப்பிடும் இந்த காட்சியினை பார்த்த அந்த உருவத்திற்கு வயிறு பற்றியெறிந்தது.
தனியாள் என்று அவன் நினைத்தே அத்தனை காய்களையும் சாமார்த்தியமாக அவன் நகர்த்தியிருக்க இப்போது புதிதாய் வந்து நிற்கும் இவன் குட்டையை குழப்பிவிட்டுவானோ என்ற பயம் அவனைச் சூழ்ந்துக் கொண்டது.
இல்லை இந்தமாதிரி நடந்தால் அது நமக்கு மிகவும் ஆபத்து. ஏதாவது செஞ்சு செல்வியை நாம இங்கயிருந்து கூட்டிட்டுப் போய் மகேஷ் கிட்ட விடணும். அப்போத்தான் நமக்கு நிம்மதி. ஸ்மார்ட்டா ஸ்டார்ட் பண்ணனும் சொல்லிட்டு வந்தேன். அதுக்குள்ள இவன் ஏதாவது செஞ்சுடுவான் போலயே என்று நினைத்தவாறே அவன் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறிவிட்டான். அந்த அவனும் சிவன் தான்… இருந்தும் இவளின் நம்பிக்கைக்கு பாத்திரமான சிவன் இனி என்ன செய்யக் காத்திருக்கிறானோ… ???
கல்லறையிலிருந்து உருவாகிடுமோ கருவறை?

