
கல்லறை 2
மறுநாள்..
தன் வீட்டின் வெறுமை நிறைந்த அறையில் அமர்ந்திருந்தாள் செல்வி. உலை கொதித்துக் கொண்டிருந்தது. மனதும் அப்படியே. அந்த நேரத்தில் அவளுக்கோர் அழைப்பு வந்தது. அப்போதே தெரிந்துவிட்டது ஏதோவொரு இழவு என்று.
அடுப்பை அணைத்துவிட்டு சுடுகாட்டுக்குக் கிளம்பிவிட்டாள்.
வேலையெல்லாம் முடிந்து அக்கடா என்றவள் அமர மணியோ இரவு பனிரெண்டினை தாண்டியிருந்தது. இரவு வண்டின் ரீங்காரம் காதுக்குள் ஙொங்ய் என்று சத்தமிட அந்த இசையில் மயங்கி அவள் அங்கிருந்த சமாதியின் மேலேயே படுத்துவிட்டாள்…
கண்கள் சொறுக எத்தனிக்க அவளுக்குள்ளிருக்கும் ஆன்மாவோ அடங்காது திமிறி வெளியேற முயற்சி செய்வது போன்ற ஓர் மாயத்தோற்றம் அவளுக்குத் தோன்றியது. சமீப காலமாய் அவளுக்கு அப்படித்தான் தோன்றுகிறது. இன்று அதன் ஆட்டம் சற்று எல்லை மீற அதைக் கட்டுப்படுத்தி கண்களை மூடினாள் செல்வி.
மூடிய கண்களுக்குள் இப்போது கருமை நிற உருவமொன்று தோன்றி
எச்சில் கருப்பாயினும்
பாசி சிவப்பாயினும்
நெருப்பே நீராயினும்
நீரும் நிலைகெட்ட
இவ்வுலகில் உனக்கெதிராயினும்
உன்னுள் உயிராய் இருக்கும் இறைவன்(நான்) உன்னை வெறுப்பானில்லை….
இதை உணர்ந்துகொள்ளுவதுதான் பிறவியின் பயன். உணர்ந்து கொள்வாயா செல்வி?” என்றிட அவள் பட்டென்று எழுந்தமர்ந்தாள்.
அவளது தொண்டை ஏறி ஏறி இறங்க ஆரம்பித்துவிட்டது ஒருவித பயத்தில். அப்போது தூரத்தில் இருந்த கல்லறையின் மறைவில் இருந்து இரண்டு விழிகள் அவளையே உறுத்துப் பார்த்த வண்ணம் இருந்தது.
ஊசியாய் துளைத்த அந்த பார்வையின் தாக்கத்தில்
சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எப்போதும் இந்த இடம் கல்லறையாய் அவளுக்குத் தெரிந்ததேயில்லை. அன்னையின் கருவறையாய் தான் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இன்று இந்த அமானுஷ்யக் குரல் அவளுக்குள் நடுக்கத்தினை வரவழைத்திருந்தது.
கூடவே தன்னையே துளைக்கும் ஏதோ ஓர் உணர்வினை உணர்ந்தவள் அந்த திசையினை பார்ப்பதற்கே அஞ்சினாள். அங்கிருந்து வெளியேறி செல் என்று அவளுக்குள் மீண்டும் ஓர் குரல்.
வெளியேறிச் சென்று விடலாம்… தற்போது அவள் கால்களும் அடியெடித்து வைக்க அதன் பின்னே அவளும் சென்றாள்.
அவள் போகும் பாதையில் அந்த உருவமும் மெல்லமாய் நடந்து வந்தபடி இருந்தது. அதன் விழிகளோ இருளிலும் பளபளத்தபடி இருந்தது. பின் அவளைத் தொடர்வதை நிறுத்திவிட்டு அவ்விடம் விட்டு அகன்றுவிட்டது.
வீட்டினுள் நுழைந்தவள் வேகமாய் குளியலறைக்குள் நுழைந்து குளித்துவிட்டு வந்தாள். இருளோடு சற்று பனியும் நிறைந்த அவ்வேளையில் குளிர் நீரில் குளித்துவிட்டு வந்ததால் ஏற்கனவே பயந்ததில் ஏற்பட்ட நடுக்கத்தோடு புதிதாய் இந்த நடுக்கமும் சேர்ந்துக் கொண்டது.
தலை துவட்டியவள் தனக்கு நேராய் இருந்த சிவன் படத்தின் முன் நின்றாள். “என் மனம் சமீப காலமாய் பயங்கரமான எண்ணங்களுக்கு அடிமையாகி என்னை அதிலிருந்து வெளிவரவிடாத படி செய்கிறது. என்ன முயன்றும் அதுவே தொடரவும் செய்கிறது. இதற்கான மாற்று வழி என்னவென்று யோசித்து யோசித்தே என் மூளை செயலிழந்து சிந்திக்க மறந்தும் போய்விடுகிறது. அதற்கொரு வழியை நீ காட்டினால் நன்றாக இருக்கும். உறங்கும் போதும், உலவும் போதும் எனக்குள் உயிராய் இருக்கும் உன்னை உணரவே நான் முற்படுகிறேன். இருந்தும் சில நேரங்களில் என் மனம் வேறு உணர்வுகளில் தத்தளித்துக் கொண்டு தடுமாறிவிடுகிறது. அந்த தடுமாற்றத்தினை தாங்க இயலாது இப்போது தவிக்கிறேன். என் தவிப்பினை போக்கும் மார்க்கமதை காட்டிவிடு சர்வேசனே…” என்றவள் அங்கே கொட்டி வைத்திருந்த திருநீறை எடுத்துப் பூசிக் கொண்டு அமைதியாகப் படுத்தாள்.
படுத்த பின்பும் அப்படியொன்றும் அவள் மனம் அமைதியடைந்துவிடவில்லை. அவள் அதையே நினைத்துக் கொண்டு உறங்காமல் கிடந்தாள். பின் ஒருவழியாய் உறங்கியும் போனாள்.
உறங்கும் அவள் குழந்தைத்தனமான முகத்திற்கு பின் இருக்கும் சோகம் இதுவரை எவரும் அறிந்திராத ஒன்று. அவளும் அதைப்பற்றி யாரிடமும் சொன்னதே இல்லை. அவளைப் பொறுத்தவரை அதெல்லாம் கடந்த காலம் . அந்நிகழ்வினை மறந்தும் விட்டேன் என்பதுதான் அவளது பதிலாகவே இருக்கும். ஆனால் அதன் பாதிப்பு இன்னமும் அவளுடனே பயணிக்கிறதென்பது அவளே அறியாதவொன்று. எது எப்படியோ தற்போது அவளது வாழ்வு கல்லறைகளுடன் தான். அவளுக்கென்று தனியாய் எந்தவித ஆசையும் இல்லை. திருமணம் என்பதில் சுத்தமாய் விருப்பமும் இல்லை. கடைசிவரையில் இப்படியே இருந்துவிட வேண்டுமென்பதுதான் அவளது எண்ணம். ஆனால் காலம் அவளுக்கு என்ன செய்யக் காத்திருக்கிறதோ????
————————————
“டாக்டர் சார் உள்ள வரலாமா” என்றவளின் குரலுக்கு
“வராத கிளம்பி அப்படியே ஓடிப்போயிடு. வேலை இருக்கு” என்றவன் நிமிர்ந்தே பாராமல் உரைக்க “அப்போ வருவேனே நான்” என்றபடி உள்ளே வந்தமர்ந்தாள் அவள்.
“ஏன் என்னை சாவடிக்குற” சலிப்பாய் அவன் பேச “யாரு நானா? உன்னையா ச்சே ச்சே… நான் போய் அப்படிச் செய்வேனா ஆதித்தா” வெகு பாவமாய் அவள் சொல்ல அவள் முகத்திலோ அதுக்கு நேர்மாறாய் விசமம் வழிந்துக் கொண்டிருந்தது.
“சரி என்ன விசயம்.. சொல்லு நர்மதா” என்றவன் அவசரப்படுத்த “என்ன வேலை இருக்குன்னு சொல்லப் போறயா. ஏன்டா ஆதி அதையேச் சொல்லுற? கொஞ்சமாச்சும் கண்ணைத் தொறந்து வெளிஉலகத்தைப் பாரேன். எப்போப் பார்த்தாலும் ஆராய்ச்சி… சிக்மண்ட் ப்ராய்டு, டார்வின் இப்படியேதானா” என்றவள் ஆதங்கத்துடன் கேட்டு முடிக்க “என்ன செய்யுறது நர்மதா. என் வேலை அப்படி. நான் என்கிட்ட வர்றவங்களோட மனநிலையை புரிஞ்சுக்கணும்னா அதுக்கு இவங்களை எல்லாம் நான் படிச்சுட்டே இருக்கணும். என்னை மீட் பண்ணிட்டு போறவங்க திருப்பி என்னைப் பார்க்கும் போது சின்னதாய் ஸ்மைல் பண்ணி ஆதித்தா! இப்போ எங்களுக்குள்ள எந்தவித பிரச்சனையும் இல்லை. எல்லாமே நல்லா போயிட்டு இருக்குன்னு சொல்லுவாங்க பாரு அதுல கிடைக்குற போதை உலகத்துல வேற எந்ததுலயும் இல்லை” என்றவன் கண்கள் சொறுக சொல்ல “பெண்கள் கிட்ட கூட இல்லையா?” என்று பட்டென்று கேட்ட மாத்திரத்தில் கையில் இருந்த சிக்மண்ட் ப்ராய்ட்டு புத்தகத்தினாலே அவள் தலையில் இரண்டு தட்டு தட்டினான் அவன்.
“என்னைப் பத்தி தெரிஞ்சும் இந்தக் கேள்வியைக் கேக்கலாமா நர்மதா. பெண்களை அந்த ஒற்றை வார்த்தைக்குள் என்னால… ம்ஹூம் என்னால மட்டும் அல்ல. வேறு எவராலும் அடக்க முடியாது. அவள் பேரின்பக் கடல். அந்த சாகரத்துக்குள்ள மூச்சடக்கி மூழ்கி எழுந்திருக்கும் சுகம் அலாதியானது தான். ஆனால் அந்த சுகந்தரும் போதையினை விட இதில் கிடைக்கும் போதையே சிறப்பு வாய்ந்தது. நானும் ஏதோ பண்ணுறேன் மத்தவங்களுக்கு உபயோகமான வகையில் இருக்குறேன் அப்படிங்கிற எண்ணத்தினை ஒருவிசயம் எனக்குத் தருதுன்னா… நீ புரிஞ்சுக்கோ அதெனக்கு எந்தளவுக்கு முக்கியம்” என்றவன் பேசிக் கொண்டு போக
“வெளிய ஷீலா மேடம் அவங்க பையனுக்கு இன்னைக்கு பேர்த்டேன்னு பிரியாணி கொண்டு வந்துருக்காங்க. உன்னைச் சாப்பிடக் கூப்பிடலாம்னு வந்த பாவத்துக்கு என்னை இப்படி நகரவே விடாம பேசிப் பேசியே கடுப்பாக்குறயே ஆதி” என்றாள் நர்மதா.
“ஏதே பிரியாணியா. இதோ வந்துட்டேன். அதை நீ முன்னாடியே சொல்லிருக்க வேண்டியதுதானே” என்று எழுந்து வெளியே வர அதற்க்குள் இருவர் உள்ளே வந்து விட்டிருந்தனர்.
“டாக்டர் சார் சாப்பிட…” என்று நர்மதா சொல்ல முற்படும் போது அவள் கைவிரல்களில் அழுத்தம் கூடியது. அதில் அவளுக்கு தெரிந்துபோனது இனி அவன் சாப்பிட வரமாட்டான் என்று.
அவனும் “நர்மதா நீ கிளம்பு நான் இவங்களைப் பார்த்துட்டு வர்றேன்” இவ்வாறு சொல்ல அவளோ சரி என்று உதட்டைச் சுழித்துவிட்டுச் சென்றுவிட்டாள்.
அவன் கவுன்சிலிங் முடித்துவிட்டு சாப்பிடும் இடத்திற்கு வர
“ஆதி ப்ராப்ளம் ஓவரா” என்று கேட்டாள் நர்மதா.
“இல்லை இனிதான் ஆரம்பம். ஆனா அவ ரியலைஸ் பண்ணிடுவான்னு தான் தோணுது பார்க்கலாம்”
“நிறைய பொண்ணுங்க இன்னும் இப்படித்தான் இருக்காங்க இல்லை…ப்ச்”
“ஆமா. அது அவங்க சூழ்நிலை அந்த மாதிரி அமைஞ்சுடுது. அதுவும் இல்லாம சின்னவயசுல இருந்தே பொண்ணு நீ இப்படித்தான் இருக்கணும் அப்படின்னு அவளுக்குச் சொல்லி சொல்லி அதெல்லாம் உள்ள பதிஞ்சு போய் இருக்கு. அது அவ்வளவு சீக்கிரம் அழியாது நதி…”
சாப்பிட்டு முடித்து அவனோடு அறைக்குள் வந்தாள்.
பேசிக் கொண்டே இருந்தவள்
“சரி டா நான் கிளம்புறேன்” கதவின் பக்கம் சென்றவளை “ஏய் நதி நில்லு” என்றான் ஆதித்த கரிகாலன்.
“என்ன ஆதி”
“பின்னாடி கறை இருக்கு.போய் வாஷ் பண்ணு. உன்கிட்ட எத்தனை தடவை சொல்லுறது நாப்கின் மாத்து அடிக்கடின்னு. இட்ஸ் நாட் குட் பார் ஹெல்த்… எப்போ தான் நீ திருந்த போறயோ. இதுல நீயெல்லாம் ஒரு டாக்டர். நீ எல்லாருக்கும் சொன்னா மட்டும் போதாது. அதை நீயும் பாலோ பண்ணனும் நதி”
“இல்லை ஆதி. இன்னைக்கு ஓபி பார்த்து முடிக்கவே டைம் ஆகிடுச்சுடா. நானும் சேஞ்ச் பண்ணனும்னு தான் நினைச்சுட்டே இருந்தேன். வொர்க்கல மறந்துட்டேன்”
“சரி போ.. உள்ள போய் சேஞ்ச் பண்ணிட்டு வா” என்று அவன் சொல்லவும் அவளும் அவனுடைய வாஷ்ரூமை உபயோகப்படுத்திக் கொண்டாள்.
“பெயின் எதுவும் இருக்கா நதி. இருந்தா நீ வேணும்னா கொஞ்சம் இங்க ரெஸ்ட் எடு. நான் பேஷண்ட்ஸை பார்த்துக்கிறேன்” வெளியே வந்தவளைப் பார்த்து அவன் கேட்க
“இல்லை ஆதி.. பெயின் எதுவும் இல்லை. ஜஸ்ட் ஓவர் ப்ளோ பீலிங்க் மட்டும் தான். இதைக் கூடவா நான் தாங்க மாட்டேன் என்னடா நீ” என்றாள் அவள்.
அதான நீங்களாம் யாரு
வயதை தொடும் நேரத்து வலி, மாதம் மாதம் வரும் மாதவிடாய் வலி, முதன்முதலாய் கணவனின் நெருக்கம் தரும் வலி, மசக்கை தரும் வலி, பிள்ளைப்பேற்றின் பெரும் வலி, சிசேரியன் எனில் தீராத வலி இப்படி
அத்தனை வலியையும் தாங்கிக் கொள்ளும் பெண்கள் எப்பவும் ஸ்ட்ராங்க் தான். ஆகச்சிறந்த பலசாலிகள்”
“அப்பா அப்பா போதும். அப்படி பார்த்தா பசங்க நீங்களும் தான் எல்லா வலியையும் தாங்குறீங்க மனசளவில. நாங்க ஏஜ் அட்டெண்ட் பண்ணா ஒரு அப்பா அங்க தடுமாறி போய் நிக்குறார்… அச்சச்சோ நம்ம பொண்ணு பெரிய பொண்ணு ஆகிட்டாளே இனி அவளுக்கு சேர்த்து வைக்கணுமே… அசால்ட்டா இருந்துட்டோம். இப்போ அவளுக்கு என்ன பண்ணுறது என்று புலம்பி தவிக்கும் தந்தையோட வலி
மாதம் மாதம் அவள் வலியினை ஓரமாய் நின்று கண்டுகொள்ளதா மாதிரி கடந்து செல்லும் அண்ணனின் வலி
அவளுக்கு நெருக்கமாய் மாற இதழ்கடித்து வலி தாங்கும் சமயம் அவள் வலியை உணரும் கணவனின் வலி
அவள் மசக்கையில் மடி சாயும் போதும், மழலை ஈன்ற போதும் ஒவ்வொரு தடவையும் ஆணவனின் அரவணைப்பும் ஆறுதலும் அளவிட முடியாதது. பெண்களுக்குப் போலவே உங்களுக்கும் வலி இருக்குது. என்ன நாங்க வெளியே காட்டிக்கிறோம். நீங்க காட்டிக் கொள்ள நினைக்குறதே இல்லை. வலி இரண்டு பேருக்கும் பொது தான் ஆதித்தா. இங்க இப்போலாம் பொண்ணுங்க வலியை புரிஞ்சுக்குற அளவுக்கு பசங்க பக்குவமா மாறிட்டாங்க. பட் பொண்ணுங்க தான் அவங்க புரிஞ்சுக்க மாட்டுறாங்க இவங்க புரிஞ்சுக்க மாட்டுறாங்கன்னு புலம்பிட்டே இருக்காங்க”
“உண்மை தான் நதி… “
“புரிஞ்சுக்குற அளவுக்கு பசங்களுக்கு பக்குவம் வந்துருக்குன்னு எனக்கு உணர வச்சதே நீதான் ஆதி. உன்னோட பேசும் போது நான் ரொம்ப கம்பர்ட்டபிளா இருக்கேன். எனக்கெந்த சங்கடமும் அசௌகரியமும் இதுவரைக்கும் வந்ததே இல்லை”
“தட்ஸ் கிரேட். சரி பெயின் இல்லை தானே”
“இல்லை மா. இருந்தாலும்கூட நம்ம அம்மா ஜெனரேசன் தாங்குன பெயினோட கம்பேர் பண்ணும் போது இப்போ வலி குறைவு தான். ஆனாலும் தாங்க முடியலை. அதுக்கு காரணம் நம்மளோட ஹெல்த் கண்டிசன் அந்தளவுக்கு வீக் ஆகிடுச்சு. சாப்பிடுறதும் ஹெல்த்தியானது இல்லை.
என்ன பண்ணுறது மாடர்ன் வேர்ல்ட்டுல இப்போ புட் அப்படிங்கிற பேர்ல பாய்சன் தானே கிடைக்குது”
“உண்மைதான் நதி”
“என்னடா இது கடைசியில என்னையும் உன்னை மாதிரியே பேச வைச்சுட்ட…” இதுவரை சீரியசாக பேசியவள் சட்டென்று சிரிக்க அவன் முகம் மாறி “ஓய் நர்மதா கிளம்பு நீ” என்றான்.
“நதியில இருந்து நர்மதா மாறிடுச்சுன்னா நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு அர்த்தம். பாய் ஆனாலும் நதி ஆதி பேர் பொருத்தம் நல்லா இருக்குள்ள” என அவள் சொல்ல
நீ இன்னும் போகலையா என்பது போல் அவன் பார்க்க அவளெழுந்து சென்றுவிட்டாள்.
—————————————–
“செல்வி செல்வி” என்ற சத்தத்தில் கதவைத் திறந்தவள் “என்னண்ணே” என்றாள்.
“செல்வி GHல இருந்து ஆக்சிடெண்ட் ஆன பாடி ஒன்னு வருது ம்மா. உனக்கு போன் பண்ணாங்க. ரீச் ஆகலை அதான் நானே வந்து கூட்டிட்டு வரலாம்னு வந்தேன்” என்று சொல்லி முடித்ததும் “போகலாம் அண்ணே” என்றாள் அவள் அவசரமாக.
மயான பூமி…
மதிய மொட்டை வெயிலில் இரவு பார்த்ததை விட படு பயங்கரமாக இருந்தது. உள்ளே நுழைந்தவளுக்கு தன்னை யாரோ தொடர்வது போல் ஓர் உணர்வு. அது ஏனோ இங்க வந்தால் மட்டும் இப்போது இப்படியொர் உணர்வு தோன்றுகிறது. இப்போது அதை பற்றி அலசி ஆராய முடியாத காரணத்தால் அவள் சென்று குழிவெட்டத் தொடங்கினாள்.
மண்வெட்டியினால் அவள் ஒவ்வொரு முறையும் பூமியினை வெட்டும் போது அவளோடு இறுகப் பற்றியிருந்த அந்த மண்துகள்கள் பிரிந்து வெளியே வந்து விழுந்தது.
குழியினை சரியாக வெட்டியவள் வெளியே வந்து நிற்க அங்கே இருந்தவன் “சாப்பிடுறயா செல்வி” என்று கேட்க “இல்லை வேண்டாம் அண்ணா எல்லாத்தையும் முடிச்சுட்டு போய் சாப்பிட்டுக்கிறேன்” என்று சொல்ல “செல்வி ஆக்சிடெண்ட் ஆனா உடம்பு உனக்கேத் தெரியும் எந்த நிலைமையில அது இருக்கும்ன்னு. சாப்பிட்டுக்கோ. அப்பறம் உன்னால சாப்பிட முடியாது” என்றான் அவன் அக்கறையாக.
“பரவாயில்லை அண்ணே.. நான் குழி வெட்டிட்டாலே அதுக்குள்ள பொணத்தை வச்சு மூடி எல்லாத்தையும் சரியாச் செய்யாம எனக்கு சாப்பாடு இறங்காதுன்னு உங்களுக்குத் தெரியும்ல”
“என்னவோ போ செல்வி. எனக்கு உன்னை இப்படிப் பார்க்குறதுல வருத்தம்தான். வயசுப் பொண்ணு இந்த சுடுகாட்டுக்குள்ள சிக்கிட்டு நொத்து போய் கிடக்குதேன்னு”
“அண்ணே இது எனக்கு சிவன் கோவில் மாதிரி. கோவிலை எப்படி புனிதமா மதிச்சு உள்ளே போறோமோ அதேமாதிரிதான் எனக்கு இந்த இடம். இதுல நான் சிக்கிட்டு இருக்கல. இந்த இடத்துல தான் நான் நானாவே இருக்கேன். என்னைப் பொறுத்தவரைக்கும் இது எல்லாத்தையும் விட புனிதமான இடம் தான். வெளிய இருக்குற மனுசங்க கிட்ட போட்டி பொறாமை வஞ்சம் எல்லாம் இருக்கும். இங்க அது இல்லை. அதுவும் இல்லாம இங்க இருக்கவங்க எல்லாமே எனக்கு சொந்தக்காரங்க. நான் அப்படித்தான் பார்க்குறேன். இன்னொரு தடவை நான் இங்க இருக்குறதுக்காக நீங்க வருத்தப்பட்டு பேசாதீங்க ண்ணே. இங்க கிடைக்குற சந்தோசம் வெளிய போன கிடைக்கவே கிடைக்காது. அதனாலேயே தான் நான் எனக்குன்னு தனியான வாழ்க்கையைப் பத்தி சிந்திச்சதே இல்லை. அதெனக்கு தேவையும் இல்லை….”
அதற்குள் ஆம்புலன்ஸ்ஸின் சத்தம் காதைக் கிழிக்க இருவரும் பேசிக் கொண்டிருந்ததினை மறந்து அங்கே ஓடினார்கள்.
வண்டி நின்றதும் கதவினைத் திறக்க உள்ளே இருந்து நாற்றம் வந்தது. இதெல்லாம் பழகியவொன்று என்றாலும்கூட அந்த நேரத்தில் அதை தாங்கவே இயலாது…
“அண்ணே பாத்து இறக்குங்க” என்று சொல்லியபடி இருவரும் ஸ்ட்ரெச்சரை இழுத்து கீழே வைத்தனர்.
உருக்குலைந்த உடம்பென்பது ப்ளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்திருந்ததை பார்க்கையிலே புரிந்து போனது. உடனே அவள் சென்று மாஸ்க் அதனுள் கற்பூரம் வைத்துக் கொண்டே கிளவுஸ் எல்லாம் மாட்டிக் கொண்டு வந்தாள்.
இந்த மாதிரி ஆக்சிடெண்ட் ஆன பாடியென்றால் அதைப் பார்ப்பதற்கே ஒரு மனதிடம் வேண்டும். உடம்பின் உறுப்புகள் எல்லாம் பிய்ந்து சதையெல்லாம் உருக்குலைந்து கிடக்கும் இவ்வுடம்பினை பார்க்கையில் அவளுக்கு நிலையாமையின் அர்த்தமே தெள்ளத்தெளிவாக விளங்கியது.
இது போல் எண்ணற்ற உடல்களை முறையாக அடக்கம் செய்தவள் தான் அவள். அதனால் பயம் இல்லையென்றாலுங் கூட ஒருவித மன உணர்வு மட்டும் நிரம்பியிருந்தது.
குழியின் அருகே எடுத்துச் சென்றவள் கவரைப் பிரிக்க ஆரம்பிக்க மாஸ்க்கைத் தாண்டி அந்த நாற்றம் நாசிக்குள் இறங்கியது. குமட்டல் வந்த போதும் முயன்று தன்னை சரிப்படுத்திக் கொண்டவள் கவரை பிரித்திருந்தாள்.
ஆறடி உயரங் கொண்டு
அடங்காத தோற்றங் கொண்டு இந்த உலகத்துல நான் தான் பெரியவன் என்னும் நினைப்போடு சுற்றித் திரிந்த உடம்பு. இப்போது அதன் வடிவமற்று கிடப்பதை காண்கையில் லேசாக கண் கலங்கியது. அந்த சதைப் பிண்டத்தினை வெளியே எடுக்கையிலே பொத் பொத்தென்று அதன் சதைகள் விழுந்து கூடவே அதில் புழுக்களும் கொட்ட ஆரம்பித்திருந்தது….
இப்போது நாற்றம் இன்னும் அதிகமாக சற்று தள்ளி இருந்தவன் “ஏய் செல்வி இரு” என்றவாறு இன்னொரு மாஸ்க்கை எடுத்துவந்து அவளுக்கு அணிவித்தான்.
தனித்தனி கவரில் இருந்ததை எல்லாம் அவள் பிரித்து அந்த குழிக்குள் அதனை வைத்தாள்.
இந்த தேகம் மண்ணுக்குள் இல்லையெனில் நெருப்போடு முழுமையாக கலக்க வேண்டும். அதுதான் அதற்கு கிடைக்க வேண்டிய முறையான மரியாதை. கவரோடு இருந்தால் மண்ணதை திண்ண முடியாது. அதனாலயே அவள் அத்தனை நாற்றத்தினையும் சகித்துக் கொண்டு தன் கருமத்தினை கண்ணாகத் தொடர்ந்தாள்.
குழியிலிருந்து மேலேறி வந்தவளுக்கு உலகமே சுற்றுவதைப் போல் தோன்ற கிளவுஸ் தாண்டி புழுக்கள் ஊர்வதைப் போல இருக்க ‘செல்வி இல்லை நீ தடுமாறாத திடமா இரு’ என்று தனக்குள்ளயே சொல்லிக் கொண்டவள் அப்படியே சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.
சமீபமாய் உணரும் அந்தப் பார்வை இப்போதும் தன்னை தொடர்வது போன்ற உணர்வு அவளுக்கு இதயத்தினை அடைக்கச் செய்தது அவ்வேளையிலும். இந்த வேலையை மறந்து அவள் சுற்றிலும் பார்க்க ஒன்றும் புலப்படவில்லை. தலையை உதறியவள் மண்ணை அள்ளி போட ஆரம்பிக்க அந்த உருவமோ அவள் செய்வதினையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.
விட்டுவிடப் போகுதுயிர் விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்
பட்டது பட்டு
எந்நேரமும் சிவனை ஏந்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம்….பட்டினத்தாரின் வரிகள் அந்த பாவையிடமிருந்து வெளி வந்தது. அதோடு நில்லாமல் எவ்வளவு ஆசையோடு வந்த உயிர் இப்படி அவசர அவசரமாய் உலகை விட்டு போயிடுச்சே… போன உயிர்க்கு நிம்மதியை அளித்து சாந்தப்படுத்துவாய் ஈசனே என் சர்வேசனே என்று அவள் வேண்டிக் கொண்டே அந்த சதைப்பிண்டத்தின் மேல் மண்ணைத் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தாள்.

