
அத்தியாயம் 28
வீட்டில் தன் அறையில் சோகமாக இருந்த அருணின் அருகில் வந்தமர்ந்தான் விஷ்வா. அவன் எதையோ பறிகொடுத்தது போல் அமர்ந்திருந்தது அவனுக்கே கஷ்டமாக இருந்தது. அன்று சென்னையில் கனிமொழி மூலம் உண்மை தெரிந்த உடனே பெங்களூர் கிளம்பி விட்டான் அருண். இனியும் கனி மற்றும் கீதனின் வாழ்க்கையில் தலையிட அவனுக்கு மனமில்லை. ஆனாலும் கனிஷ்காவின் முடிவு அவனை அரித்து கொண்டிருந்தது.
“அருண்..” விஷ்வா அவனின் தோள்தொட “முதல்லயே சொல்லிருக்கலாமே விஷ்வா.. இப்போ இவ்ளோ வலியும் ஏமாற்றமும் இருந்திருக்காதே..” என்றான்.
அவனின் வலி விஷ்வாவுக்கும் புரிந்தது தான். ஆனால் அப்போது புரிந்துகொள்ளும் நிலமையில் அருண் இல்லையே. அதையே விஷ்வா இப்போது சொன்னான்.
“நாங்க சொல்ல ட்ரை பண்ணும் போது எல்லாம் நீ ரொம்ப வெறியா பிஹேவ் பண்ணுனடா.. அதனால் தான் கனி எதுவும் சொல்லல..”
“இல்ல விஷ்வா.. கனி சொல்லிருக்கா.. அவ கணவன், சித்தி எல்லாரையும் பத்தி சொல்லிருக்கா.. பட் அதை நான் புரிஞ்சிக்கல.. கனிஷ்கா முகத்தை பார்த்து மட்டும் லவ் பண்ணுன எனக்கு அவளோட பின்புலம் எதுவும் தெரியாது.. அவளுக்கு அப்பா, அம்மா இருக்காங்களா? எத்தனை தம்பி தங்கச்சி எதுவும் தெரியாது.. அவளுக்கே தெரியாம அவளை போட்டோ எடுத்து அதைவச்சு அவகிட்ட பேசி சம்மதிக்க வைக்கலாம் நினைச்சேன்.. ஆனா விதி அவளை மொத்தமா பிரிச்சு கொண்டு போயிடுச்சு..” என்ற அவனின் வலியை யாராலும் போக்க முடியாது தான்.
ஒருதலை காதல் அவ்வளவு எளிதானதல்ல. அவர்களுக்கே தெரியாமல் காதலிப்பதும் ஒருவேளை அவர்கள் ஏற்று கொள்ளவில்லை என்றால் அந்த வலியும் உயிர் இருக்கும் வரை விட்டு போகாது. அருண் நிலைமையும் அப்படிதான். ஆனால் அவனையே நினைத்து ஒருஜீவன் உருகி கொண்டிருக்கும் போது அவளை காயப்படுத்த விஷ்வா நினைக்கவில்லை.
“அருண் நீ அம்ருதா பற்றி என்ன நினைக்கிற?” என்று கேட்க “ஒருத்தி போனதும் இன்னொருத்தி பின்னாடி போகுறவன் நான் இல்லை விஷ்வா.. கனிஷ்கா என்னை காதலிக்கலன்னாலும் அவளோட நினைவுகள் மட்டும் எனக்கு போதும்..” என்று அருண் எழுந்து சென்று விட்டான்.
ஆனால் அப்படி அவனை விட்டால் விஷ்வா நல்லநண்பன் இல்லையே. அடுத்தநாள் பெங்களூரில் அருண் வீட்டின்முன் அவனுக்காக காத்திருந்தாள் அம்ருதா.
——————————–
சித்தார்த் தன் கோட்டை எடுத்து அணிந்தவாறே கண்ணாடியில் தன்னை உற்று பார்த்தான். இன்றைய மீட்டிங்கிற்கு அது பொருத்தமாகவே இருந்தது. சித்தார்த் இப்போது இயற்கைவள பாதுகாப்புதுறையில் பணியாற்றி கொண்டிருந்தான். அவனின் சேவைகளுக்கு மரியாதை செய்யும் விதமாய் அந்தபணி அவனுக்கு கொடுக்கபட்டிருந்தது. கனிஷ்கா இருக்கும் வரை தன் ஆசைக்காக எதுவும் செய்தவன் அவளின் மரணத்திற்கு பின் அரசுக்கு அதன்மூலம் ஏதாவது நன்மை வரவேண்டும் என்ற நோக்கத்தில் தன் ஆராய்ச்சிகளை செய்தான். அவனை தெரிந்தவர்கள் கூட ‘இது சித் தானா?’ என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அவனின் செயல்கள் இருந்தன. அவனை பாராட்டவே அந்த பதவியையும் அவனுக்கு கொடுத்திருந்தனர்.
வீட்டை விட்டு வெளியே வந்தவன் தனக்காக காத்திருந்த காரில் ஏற அன்று அவனுக்கு கலந்தாய்வு கூட்டம் ஒன்று இருந்ததால் அது தொடர்பான கோப்பைகளை படித்து கொண்டு வந்தான். பொதுவாக அவனின் நண்பர்கள் சந்திக்கும் இடத்தில் தான் இன்று அந்த அதிகாரிகளையும் வர சொல்லியிருந்தான். அனைவரும் வரவும் தான் எடுத்து வந்திருந்த விடியோவை ஒளிபரப்பினான்.
அது அமேசான் காடுகள் மற்றும் அதனை சார்ந்த பழங்குடியினர் பற்றிய பதிவு. அது அனைவரும் பார்வையிட்டதும் தன் இருக்கையில் இருந்து எழுந்தான் சித்தார்த்.
“இது பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் தான்.. ஆனாலும் எனக்கு வந்த ரிப்போர்ட் படி அந்த காடுகளில் எதுவும் சேப் இல்ல.. எப்பவோ எரிய ஆரம்பிச்ச தீ இன்னும் அந்த இடத்தை அழிச்சிட்டு தான் இருக்கு.. காடுகளை சார்ந்து இருக்குற மக்கள் பத்திரமா இருக்காங்களான்னு நாம யாராச்சும் கவலைபட்டிருக்கோமா?” என்று கேட்க அனைவரும் அமைதியாக இருந்தனர்.
அவன் சொல்வதும் உண்மை தானே. உள்ளூரில் இருக்கும் மக்களை பற்றிய கவலை கொண்டவர்கள் எத்தனை பேர் பழங்குடியினரை பற்றி நினைத்திருப்பார்கள்? அவர்களின் வாழ்வாதாரம் எப்படி போகிறது என்பதை எத்தனை பேர் சிந்தித்திருப்பார்கள்? அவர்களின் மனதில் தோன்றிய ஒரேவிஷயம் பழங்குடியினர் என்றால் ஆபத்தானவர்கள், மனிதர்களை உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள் என்பது தான். ஆனால் அவர்களும் மனிதர்கள் தான் என்பதை ஏன் யாரும் புரிந்து கொள்ளவில்லை? அவர்கள் தங்களை பாதுகாக்க மட்டுமே ஆயுதத்தை கையில் ஏந்துகின்றனர். அவர்கள் மனிதர்களை நம்புவதில்லை. நல்லமுறையில் வரவேற்பவர்களும் உண்டு. எனவே அவர்களை யாரும் நெருங்குவதில்லை.
சித்தார்த் சொல்ல வருவது யாருக்கும் புரியவில்லை. ஆனால் அவனின் கேள்வி நியாயமானதே.
“இப்போ எதுக்கு பழங்குடியினர் பற்றிய பேச்சு சித்?” ஒருவர் கேட்க “அங்க இருந்து புகார் வந்திருக்கு..” என்றான் சித்.
“வாட்?” அனைவரும் ஒரே குரலில் கேட்டனர்.
“சித் முதலில் அவர்களுக்கு நம்ம மொழி தெரியாது.. அப்புறம் எப்படி எழுதி வந்தது?”
“எனக்கும் நிச்சயமாக தெரியாது.. ஆனா அவர்களின் நான்குபேர் காணாம போயிருக்காங்க.. அவர்களை கண்டுபிடிக்க தான் புகார் வந்திருக்கு..”
“ஓகே.. ஆனா அது எதற்காக இயற்கைவள பாதுகாப்பு துறைக்கு வருது?”
“காடுகள் இயற்கை இல்லயா? மரங்கள் வளம் இல்லயா?” சித்தார்த்தின் கேள்வியில் அந்த மனிதர் வாயடைத்து போனார்.
தொடர்ந்த சித்தார்த் “எனக்கு அங்க ஏதோ தப்பா நடக்கிற மாதிரியே பீல் ஆகுது.. இப்போ இந்த தீ பரவும் நேரம் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்கன்னு தவறு நடக்கலாம் இல்லயா?” என்று கேட்டான்.
“அவங்க ரொம்ப ஆபத்தானவங்க சித்.. நேர்ல போய் விசாரிக்கிறது ரிஸ்க்..”
“அங்கேயே நமக்கு தெரிந்த ஒருத்தர் பக்கத்துல தங்க சொல்லிருக்கேன்.. அவங்களை காப்பாத்த வர யாரையும் தாக்க மாட்டாங்க..” என்றவன் மறுநாளே அமேசான் அருகில் இருக்கும் காடுகளை நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்தான்.
அவன் அங்கு சென்று சேரும்நேரம் அவர்களை நோக்கி வந்தார் ரிக்கோ. அவர் தான் தூரத்தில் இருந்து அந்த பழங்குடியினரை கவனித்து கொள்பவர். சிலநேரம் ஆபத்து என்றால் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்குள் சென்று விடுவார். அவர் தான் சித்தார்த்திடம் அவருக்கு வந்த புகாரை பற்றி சொல்லியிருந்தார்.
“ஹலோ சித்.. ஹவ் ஆர் யூ மேன்?” என்று அவனை அணைத்து கொள்ள பதிலுக்கு அவனும் அணைத்து கொண்டான்.
“பைன் ரிக்கோ.. அந்த கூட்டத்தில் இருந்து யார் உங்களுக்கு தகவல் தந்தது?” என்று கேட்க “அவ ஒரு பெண்.. கண்டிப்பா இவர்களின் கூட்டத்தை சேர்ந்தவள் இல்ல.. ஆனாலும் அவளை குருவி மாதிரி பாதுகாக்குறாங்க.. அந்த விஷயத்தில் அவங்க கிரேட்.. அவதான் கடந்தவாரம் நான் அவங்க பக்கம் போகும் போது ஆட்களை காணலன்னு சொன்னா.. அவ சைகை மொழி புரியல.. அதுக்காக வரைஞ்சு காட்டினா” என்றவர் அவள் வரைந்த படத்தை காட்ட அதில் பக்கத்தில் அவள் தமிழில் எழுதியிருந்ததை அதிர்ந்து பார்த்தான் சித்தார்த்.
உடனே தன் போனில் இருந்த கனிஷ்காவின் புகைப்படத்தை காட்டியவன் “ரிக்கோ.. இவளா அந்த பெண்?” என்று ஒரு பதற்றத்தோடு கேட்க “ஹே.. உனக்கு அவளை தெரியுமா?” என்று ஆச்சர்யமாக கேட்டார் ரிக்கோ.
அவரின் கேள்வியில் அவனுக்கு அத்தனை நிம்மதியும் கூடவே அதிர்ச்சியுமாக இருந்தது. அவன் கடந்த மூன்றரை வருடங்களாக யாரின் நினைவில் தன்னை தொலைத்து கொண்டிருந்தானோ அவள் உயிரோடு இருக்கிறாள் என்பதே அவனுக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.
அவனின் கண்ணீரை கண்ட ரிக்கோ “சித் ஆர் யூ ஆல்ரைட்?” என்று அவனின் தோள் தொட தன்னை நிலைப்படுத்தியவன் “நான் அவளை இப்பவே பார்க்கணும் ரிக்..” என்றான்.
“இப்பவேவா? நாளைக்கு போகலாம் சித்.. இப்போ நீங்க எல்லாரும் டையர்ட் ஆக இருக்கீங்க..” என்று கூற “நோ ரிக்கோ.. இப்பவே போகலாம்.. அவங்க இங்க ரெஸ்ட் எடுக்கட்டும் ப்ளீஸ்..” என்று கெஞ்சும் குரலில் கேட்டான் சித்தார்த். அவனுக்கு இப்பவே கனிஷ்காவை பார்த்து கட்டிபிடித்து கதற வேண்டும் என்று தோன்றியது.
“அவ்ளோ சீக்கிரம் போக முடியாது சித்.. அவங்க வெளி ஆட்களை ஏத்துக்க மாட்டாங்க.. அந்த பொண்ணு நாளைக்கு கண்டிப்பா வருவா.. அப்போ பேசிக்கலாம்” என்று சொல்ல மனமே இல்லாமல் உள்ளே சென்றான் சித்தார்த். மனதிற்கு பிடித்தவளை பிரிந்து அவன் கொண்ட வேதனையைவிட இன்னும் இருக்கும் பனிரெண்டு மணிநேரங்கள் வேதனையை கூட்டியது.
அடுத்தநாள் காலையில் சித்தார்த் எழும்பி வெளியில் வர ரிக்கோவிடம் சைகையில் பேசி கொண்டிருந்தாள் கனிஷ்கா. சித்தார்த்தை பார்த்த ரிக் அவளுக்கு அவனை அறிமுகபடுத்தினார்.
“இவர் தான் சித்தார்த்.. நீ சொன்ன விஷயத்தை விசாரிக்க வந்திருக்கார்..” என்று கூற சித்தார்த்தை பார்த்தாள் அவள். அவளின் பார்வையில் தன்னை தொலைத்தவன் அவளை நோக்கிவர எழுந்தவள் ரிக்கோவிடம் சைகையில் தான் கிளம்புவதாக சொன்னாள்.
சித்தார்த் “நான் அவகிட்ட பேசணும் ரிக்..” என்று கூற அதை புரிந்து கொண்டவள் “முடியாது..” என்று தலையசைத்து விட்டு நகர்ந்தாள்.
“உங்க இனத்தில் காணாம போன நான்கு பேரை பற்றிய விவரம் வேணும்” என்று தமிழில் கூற திரும்பி அவனை பார்த்தாள்.
தன் முன்னே நின்றிருந்தவளை கண்வெட்டாமல் பாரத்து கொண்டிருந்தான் சித்தார்த். அவனின் உயிரானவள் உயிரோடு இருப்பதையே அவனால் நம்ப முடியவில்லை. இத்தனை வருடங்கள் அவளின் நினைவுகளில் தன்னை தொலைத்தவன் “கியூட்டி..” என்று அவளின் அருகில் செல்ல அவளோ பின்னோக்கி சென்றாள். அவளின் புறக்கணிப்பில் மனம் வலிக்க “உன் சித்துடா..” என்று கூற இல்லையென்று தலையசைத்தவள் ரிக்கின் பின்னால் சென்று மறைந்து கொண்டாள்.
அவளை பார்த்தபின்பு சித்தார்த்தின் கால்கள் அங்கிருந்து நகர மறுத்தன. தன் அருகில் நின்றவர்களிடம் “நீங்க வழக்கமா தங்குற இடத்துக்கு போங்க.. நான் இங்கேயே தங்கிக்குறேன்” என்று சொல்ல மற்றவர்களும் தயங்கினர்.
“நாங்களும் இங்க இருக்கோம் சித்..” என்று கூற “இந்த இடம் உங்களுக்கு வசதிபடாது.. என்னால உங்க யாருக்கும் கஷ்டம் வேண்டாம்..” என்றவன் ரிக்கோவின் வீட்டிற்குள் சென்றான். அவனுக்கு தன்னவளை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது.
மற்றவர்கள் தாங்கள் வழக்கமாக தங்கும் ஹோட்டலுக்கு சென்றுவிட ரிக்கின் பின்னால் மறைந்திருந்த கனிஷ்காவை தன்புறம் இழுத்தான்.
“சித் என்ன பண்ற?” ரிக் அவளை அவனிடம் இருந்து பிரித்தெடுக்க முயல “ரிக் அவ என் பொண்டாட்டி.. இத்தனை வருஷம் செத்து போயிட்டான்னு நினைச்சிட்டு இருக்குற ஒருத்தி இப்போ என் கண் முன்னாடி உயிரோட இருக்கும் போது விட்டுட்டு போக சொல்லுறியா?” என்று சீற ரிக்கோ கனிஷ்காவை பார்த்தார்.
அவளோ அவனிடம் இருந்து தன்னை பிரிக்க முயன்று கொண்டிருந்தாள். “அவளுக்கு விருப்பம் இல்ல போல..” என்று இழுக்க “எல்லாம் இருக்கும்.. நடிக்கிறா..” என்றவன் அவளை தன்புறம் திருப்பி அவள் கண்களோடு தன் பார்வையை கலக்க அதை சந்திக்க முடியாமல் திணறினாள் அவள்.
“ரிக் அவகிட்ட நான் பேசணும்.. கண்டிப்பா அங்க திரும்ப அனுப்பிடுவேன்..” என்று கூறி அவளை தன் அறைக்கு இழுத்து சென்றான்.
அறைக்கு வந்தவுடன் அவன் கைகளை அவள் உதற “என்ன கோபம் உனக்கு கியூட்டி?” என்று கேட்டான்.
அவள் பேசாமல் அமைதியாக இருக்க “பேசுடி..” என்று சீறினான். அதில் நிமிர்ந்தவள் “பேச முடியாது” என்று சைகை காட்ட “வாட்?” என அதிர்ந்தவன் தொப்பென அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
வார்த்தைக்கு வார்த்தை ‘சித்து.. சித்து..’ என்பவள் பேச முடியாது என்பதே அவனுக்கு கஷ்டத்தை கொடுத்தது. ஆனாலும் காதலுக்கு பேசும்மொழி ஒரு தடை இல்லையே.
“உன்னை நான் எவ்ளோ மிஸ் பண்ணுனேன் தெரியுமா கியூட்டி? அப்போதான் என் காதலை புரிஞ்சிகிட்டேன்.. ஐ லவ் யூடா..” என்று அணைக்க அவனை தன்னில் இருந்து பிரித்தவள் “போ..” என்று சைகையால் சொன்னாள்.
அவள் பேச சிரமபடுவது புரிய அங்கிருந்த லெட்டர் பேடை எடுத்து கொடுக்க வாங்கியவள் “நான் இங்கே இருந்து வரமுடியாது.. எனக்கு மறுவாழ்க்கை கொடுத்தவங்க அவங்க.. என்னதான் கொடூரர்ன்னு பேர் இருந்தாலும் நான் அவங்க இனம் இல்லைன்னாலும் என்னை குழந்தை மாதிரி பார்த்துக்குறாங்க.. அவங்களை விட்டு நான் வரமாட்டேன் சித்து..” என்று எழுதி காட்ட “லூசாடி நீ?” என்று கத்தியே விட்டான்.
“ஆமா.. நான் சாக போகும்போது நீ எங்க போயிட்ட? எனக்கு நீ வேண்டாம்..” என்று எழுதியவள் லெட்டர்பேடை அவனின் கையில் கொடுத்துவிட்டு எழுந்தாள்.
“ஹே.. விட்டு போகாத கியூட்டி.. செத்துடுவேன்..” எனவும் அவனின் வாயில் அடித்தவள் கலங்கிய கண்களுடன் வெளியே சென்றாள். அழுதபடியே சென்ற அவளை யோசனையாக பார்த்த ரிக்கோ அறைக்குள் வந்து சித்தார்த்தை பார்க்க அவனும் பித்து பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான்.
“சித்து..” அவனை தொட “நான் வேண்டாம்னு சொல்லிட்டு போறா ரிக்.. அவளை காப்பாற்ற முடியாத தூரத்தில் நான் இருந்தேன்.. இல்லன்னா அவளைவிட்டு ஒருநொடி பிரிந்திருக்க மாட்டேன்.. தப்பு பண்ணிட்டேன் தான்.. ஆனா அதுக்காக மூன்றரை வருஷம் தண்டனை அனுபவிச்சிட்டேன் ரிக்.. அவ உயிரோட இருக்கான்னு தெரிஞ்சிருந்தா கூட கொஞ்சம் நிம்மதியா இருந்திருப்பேன்.. ஆனா செத்துட்டான்னு நினைச்சு நான் கஷ்டபட்டதை விடவும் இப்போ அவளை நெருங்க முடியாம இருக்கிறது வேதனை” என்று கண்களை மூடி கொள்ள அதில் அவனின் வலிபுரிந்தது.
“கண்டிப்பா அவ உன் கூட வருவா சித்.. இப்போ நீ வந்த வேலையை கவனி.. அதுதான் அவளை உன்கூட சேர்த்து வைக்கும்.. நாளைக்கு அவதான் உங்களை கூட்டிட்டு போக வருவா.. உன் மனசு கண்டிப்பா அவளுக்கு புரியும்” என்று கூற அடுத்தநாளை எதிர்நோக்கி காத்திருந்தான் சித்தார்த்.
அதற்கிடையில் அந்த நான்கு பேர் காணாமல் போனதற்கான காரணத்தை தேடினான். நான்கு பேரும் ஒவ்வொருநாளும் ஒரே நேரத்தில் காணாமல் போயிருந்தார்கள். அது எப்படி சாத்தியம் என்று யோசித்தவன் அவர்களை பற்றிய தகவல்களை சேகரிக்க சொன்னான்.
அடுத்த நாளை எதிர்நோக்க அவனை ஏமாற்றாமல் அவனின் தேவதை வந்து சேர்ந்தாள். அவன் வெளியில் சாப்பிடுவது குறைவு. வீட்டில் இருந்தவரை அவனே சமைத்து சாப்பிடுவான். கனிஷ்கா வந்தபின் அவள் சமைத்து கொண்டிருந்தாள். காலையில் ரிக் வெளியில் சாப்பாடு வாங்க செல்ல ஏற்கனவே ஹோட்டலில் சாப்பிட்டது ஒத்துகொள்ளாமல் படுத்திருந்தான் சித்தார்த்.
அவன் நினைவு முழுவதும் கனிஷ்கா தான் நிறைந்திருந்தாள். அந்நேரம் அவனுக்கான உணவை எடுத்துகொண்டு உள்ளே வந்தாள் கனிஷ்கா. அவளை பார்த்ததும் சித்தார்த் எழுந்தமர அங்கிருந்த மேசையில் உணவை வைத்தவள் அவனை பார்த்து சாப்பிட சொன்னாள்.
அவளை நெருங்கியவன் சட்டென அவளின் கன்னத்தில் முத்தமிட்டு விட அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் அவள்.
“சோ ஸ்வீட்..” தன் கன்னத்தை தடவியபடியே சொல்ல தன் ஆள்காட்டி விரலை அவனின் முன் நீட்டியவள் “என்கிட்ட வச்சுக்காத” என்ற உதட்டசைவுடன் வெளியே சென்றாள்.
அவள் வெளியே சென்றதும் அதுவரை இருந்த உற்சாகம் மறைய அவன் கண்களில் பெரியவலி தோன்றியது. அவள் எடுத்து வந்த உணவை உண்டவன் வெளியேவர அவனுக்காக ரிக்குடன் சைகையில் பேசியபடி காத்திருந்தாள் கனிஷ்கா.

