
கல்லறை 3
அந்த இடம் சற்று மேடானதும் அடுத்து செய்ய வேண்டியதினை செய்தவளை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த உருவம் மெல்லமாய் அங்கிருந்து சென்று விட்டது.
ஆம்புலன்ஸ் கிளம்பிவிட அவள் அந்த மேட்டுக்கு சற்று தள்ளியிருந்த இடத்தில் அமர்ந்து அதனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அங்கே அமர அவள் மனமோ அந்த இடத்தினையேச் சுற்றிச் சுற்றி சுழன்று கொண்டிருந்தது. தன்னைத் துளைக்குமந்த உணர்வு இப்போது அவ்விடம் இல்லை. அதனால் இன்னதென்றே வரையறுக்க இயலாத அமைதி இப்போது அவளிடம் நிறைந்திருந்தது. வாழ்க்கை அவளுக்கு எவ்வளவோ சோதனைகளை அள்ளி அள்ளி தந்த போதும் இன்னமும் உடைந்து நொறுங்கிவிடாது திடமாய் அவள் நிற்க காரணம், எது வந்தாலென்ன எப்போதும் போல் பற என்ற எண்ணமே…
ஆனால் ஏதோ நிகழவிருப்பது போல் தோன்றும் சிந்தனையை மட்டும் அவளால் இப்போது கட்டுப்படுத்த முடியவில்லை. சிறிது நேரங் கழித்து அவள் வீட்டுக்கு சென்றாள். குளிக்கும் போது அவள் மேனியெங்கும் அந்த புழுக்கள் ஊர்வது போன்ற பிரம்மையில் அவள் மேனியெங்கும் நடுங்கத் தொடங்கி விட்டது.
இந்த மாதிரியான பிரேதங்களை அப்புறப்படுத்தும் போது மட்டுமே அவளால் எப்போதும் ஒரு நிலையில் இருக்க முடியாது. அவ்வளவு உருக்குலைந்த சடலத்தைக் கண்டவள் திடமான பெண்ணாக இருந்த போதும் அந்த நினைவுகள் விழித்திரையை விட்டு அகல மாட்டேனென சண்டித்தனம் செய்து அவளைக் குத்தத் தொடங்கியது… குளிர் நீர் தலையில் பட்டு சிதற சிதற அந்த தண்ணீர் தன்னிடமிருந்த உயிர்சக்தி முழுவதையும் அவள் உயிருக்கான சக்தியாக ஏற்றிக் கொண்டிருந்தது.
மொபைல் சார்ஜ் ஏறுவதைப் போல இவளும் சோர்வடைந்த மனதிற்கு குளிர் நீரால் சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தாள்.
குளித்து முடித்து சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு அமர்ந்தவள் அதில் கைவைக்க தட்டு முழுக்க புழுக்கள் மறுபடியும் நெளியத் தொடங்கி மனம் அந்த காட்சியினையே மீண்டும் மீண்டும் நினைக்கத் தொடங்கியது. இதுவும் வழக்கம் என்பதால் அவள் கையையெடுத்துக் கொண்டாள்.
இனி சாப்பிட முடியாது என்று அவளுக்குப் புரிய சாப்பாட்டை எடுத்துப் போய் வெளியே இருந்த கல்லின் மேல் கொட்டிவிட்டு தட்டைக் கழுவி வைத்துவிட்டாள்.
அவள் கொட்டியதும் வேகமாய் அங்கே சுற்றிக் கொண்டிருந்த ஒரு கருப்பு நிற நாய் ஓடிவந்து அவள் சாப்பாட்டினை சாப்பிடத் தொடங்கியது. சாப்பிட்டு முடித்த நாய் இன்னமும் அங்கிருந்து கிளம்பாமல்
வீட்டைப் பார்த்தபடி ஊளையிடத் தொடங்கியது.
உள்ளே இருந்தவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. பொதுவாக அவளுக்கு இந்த நாய் ஊளையிடுவது மட்டும் கொஞ்சம் மனதை என்னவோ போல் இறுக்கிப் பிடிக்கும். இன்று அந்த நாய் இப்படி ஊளையிடுவது அச்சமாக வேறு இருந்தது.
சுடுகாட்டில் இருக்கும் போது தெரியாத பயமெல்லாம் இப்போது அவளை ஆட்கொண்டிருக்க அவள் சன்னல் வழியாக பார்த்தாள். அந்த கருப்பு நிற நாய் வாசலையேப் பார்த்து அசையாமல் நின்றபடி ஊளையிட்டுக் கொண்டிருந்தது.
அவள் பார்ப்பதை அது உணர்ந்திருக்க கூடும் போல… உடனே அந்த சாளரத்தினை நோக்கி உர்ரென்று முறைக்க அவளோ சட்டென்று கதவினை அடைத்துவிட்டு அதன்மேல் சாய்ந்து நின்று கொண்டாள்.
நடக்கும் இந்த மாதிரியான விசயங்கள் அவளுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை. எதற்கு எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறதென்று அவளுக்குள் பயங்கர குழப்பம் சூழ்ந்து கொண்டது.
சற்று நேரத்திலே நாயின் ஊளைக்குரல் கேட்கவில்லை. ஆனால் அதை நினைத்து நிம்மதியாக இருக்கவும் முடியவில்லை அவளால். அன்று அவளுக்கு அன்னையின் நினைவும் அதிகமாக இருந்தது.
அன்னை நினைவுக்கு வந்த உடனே அம்மா என்னை ஏன் விட்டுட்டு போனீங்க என்று மானசீகமாக கேட்டுக் கொண்டாள். கண்கள் சொருக எத்தனித்தது. அப்படியே மடங்கி அமர்ந்தவள் பின் வெறுந்தரையில் படுத்துவிட்டாள்.
ஈரம் உலரா கூந்தலிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க அந்த வெறுந்தரை லேசான குளிரை அவள் தேகத்திற்கு கடத்திக் கொண்டிருந்தது. ஆனால் அவள் மனமோ அதற்கு நேர்மாறாய் நெருப்பின் தணலாய் கொதித்துக் கொண்டிருந்தது. இருந்தும் அவள் விழிகள் உறக்கத்தின் பிடியில் தன்னைச் சேர்ப்பித்திருந்தது…
———————————————
ஆதித்தன் தனது அறையில் இருக்க வெளியே திடீரென்று பெண்ணொருத்தி கத்தும் சத்தம் கேட்டது. பொதுவாய் அவனது அறை இருக்கும் பகுதியில் இது சாதாரணம் தான் என்று அவனுக்குத் தெரியும். இருந்தும் இந்த சத்தம் கூடவே கேக்கும் விசும்பல் இது சாதாரணமல்ல என்று அவனது அறிவு அவனுக்கு அறிவுறுத்தியது.
உடனே அவன் கதவைத் திறந்து வெளியே வர இறுக்கமாய் பிடித்திருக்கும் கணவனின் பிடியில் இருந்து திமிறிக் கொண்டு வெளியே வரவே அந்த பெண் முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
அவர்களுக்கு அருகில் சென்றவன் அந்த பையனிடம் “உள்ளே கூட்டிட்டு வாங்க” என்று சொல்ல அவனும் கஷ்டப்பட்டு அவளை இழுத்து வந்தான்.
அதுவரை கத்தியவள் அமைதியாய் பாவமாய் ஆதித்தன் முன் அமர்ந்து அந்த அறையையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். இப்போது அவள் இதழ்கள் லேசாய் பிளந்து புன்னகையை வேறு சிந்தியது. ஆதித்தனும் அவள் பார்வையை தொடர்ந்து பார்க்க அந்த புன்னகையின் காரணம் அவனுக்கும் புரிந்தது. அதற்கு காரணம் சுவற்றில் இருந்த மழலையின் புகைப்படம்.
“சொல்லுங்க என்ன ப்ராப்ளம்…”
“டாக்டர் இவ பேர் அனு. நான் கார்த்திக். இரண்டு பேரும் நாலு வருசமாக லவ் பண்ணி அப்பறமா கல்யாணம் பண்ணிக்கிட்டோம். வீட்டுல அவங்களுக்கு அதுல உடன்பாடு இல்லைன்னாலும் நான் இவளைத்தான் கட்டிப்பேன்னு அழுத்தமா சொன்னதால அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க. அதுக்கு அப்பறம் தான் பிரச்சனையே ஸ்டார்ட் ஆகிடுச்சு. இவளை நான் இல்லாத நேரத்துல ஏதாவது சொல்லுறது. இவ பண்ணுறதை எப்போப் பார்த்தாலும் குறை சொல்லுறதுன்னு இருந்திருக்காங்க. ஆனால் இதுவரைக்கும் இவ என்கிட்ட அதைப் பத்தி சொன்னதே இல்லை. இந்த நிலையில இவ கன்சீவா இருந்தா. எங்களுக்கு பயங்கர சந்தோசம் குழந்தையும் பொறந்துடுச்சு. ஆனா ஏற்கனவே அவளுக்கு நிறைய ஹெல்த் இஷ்யூஸ் இருந்தது. அது எல்லாம் சேர்ந்து இந்த டெலிவரில காம்ப்ளீகேசன்னை கொண்டு வந்து அவளோட யூட்ரசை ரொம்பவே வீக் ஆக்கிடுச்சு. அவளுக்கு டெலிவரி பார்த்த டாக்டர் இனி அவளால இன்னொரு குழந்தை பெத்துக்க முடியாது. ரொம்ப வீக்கா இருக்கா. அதனால குழந்தையை இவளை இரண்டு பேரையும் கவனமா பார்த்துக்க சொன்னாங்க. நானும் கேர் பண்ணி பார்த்துக்கிட்டேன். பட் குழந்தைக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. ஹாஸ்பிட்டலே கதின்னு கிடந்து கடைசியில குழந்தையை பறிகொடுத்துட்டு உயிரே இல்லாமதான் நாங்க அங்க இருந்து வெளிய வந்தோம். வாழ்க்கையில எல்லாத்தையும் தாங்குனவளால இதை தாங்கவே முடியலை. அது அவளோட மனநிலையை ரொம்பவே பாதிச்சுடுச்சு. நார்மலா இருக்குறவ சில நேரங்கள்ல ரொம்ப வயலண்ட்டா நடந்துக்குவா. எனக்கு என்ன பண்ணன்னே புரியலை. அப்போத்தான் அங்க டெலிவரி பார்த்த டாக்டர் உங்களை சஜெஸ்ட் பண்ணாங்க. உங்ககிட்ட எங்களோட பிரச்சனைக்கு தீர்வு இருக்கும்னு நம்பிக்கையோட வந்துருக்கோம். ப்ளீஸ் சரி பண்ணிடுங்க”
“குழந்தை இறந்து எவ்வளவு நாள் ஆகுது”
“கிட்டத்தட்ட இரண்டு வருசம்”
“அப்போ இவங்க இந்த மாதிரி நடந்துக்கிறது எப்போ இருந்து…”
“இந்த ஒன்வீக் தான் டாக்டர். அதுக்கு முன்னாடி அவ இப்படி இருந்ததில்லை”
“நீங்கள் சரியாக கவனிக்காமல் விட்டுருப்பீங்க கார்த்திக்”
“சார்..” என்று அவன் திடுக்கிட்டு அழைக்க “தப்பா நினைக்காதீங்க. அதுதான் உண்மை. அவங்க நல்லாதான் இருக்காங்க அப்படின்னு நினைச்சுட்டு நாம நம்ம வேலையை பார்த்திட்டு இருப்போம். ஆனா அவங்க மனசு இந்த இழப்பை அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்காது. அதுக்குள்ளயே உழன்றுகிட்டே தான் இருக்கும். அதை மாத்துறது அவ்வளவு எளிதான விசயம் இல்லை. இந்த மனசு எல்லாத்தையும் உள்ள போட்டு போட்டு அழுத்தி அழுத்தி அதை வெளிய கொட்டாம தனக்குள்ளே வச்சுக்கிட்டா அது ரொம்ப பெரிய ஆபத்து. பார்க்குறப்போ அவங்க நார்மலா இருக்குற மாதிரி தான் தெரியும் ஆனா அவங்களோட உணர்வுகள் அவங்களோட மனப்போராட்டங்கள் சீக்கிரமாவே வெடிச்சு கிளம்பி வந்துடும். அது பிரளயம் மாதிரித்தான். அவங்களையும் அழிச்சு எதிர்ல இருக்குறவங்களையும் அழிக்க ஆரம்பிச்சுடும். நான் தீர்வுசொல்லுறவன் மட்டும் தான். ஆனால் அந்த பிரச்சனையை ஒன்னுமே இல்லாத மாதிரி மாத்துறது உங்க கையில தான் இருக்கு” என்று அவன் சொன்னதும்…
“இல்லை, என் கையில எதுவும் இல்லை… என் குழந்தை இல்லை..அவ என்னை விட்டுப் போயிட்டா. எனக்கு குழந்தை வேண்டும். எனக்கு என் குழந்தை வேண்டும். டாக்டர் நீங்க வாங்கித் தாங்க அவகிட்ட இருந்து.. அவதான் என் குழந்தையை தூக்கிட்டுப் போயிட்டா. அவ என் குழந்தையை என்னவோ செஞ்சுட்டா. அவகிட்ட இருந்து என் குழந்தையை காப்பாத்துங்க.. அவ ரொம்ப மோசமானவ” என்றவள் அப்படியே மயங்கிச் சரிந்த அந்நேரம் செல்வி “இல்லை இந்த குழந்தையை நானெதுவும் பண்ணலை… நான் மோசமானவ இல்லை. இந்த குழந்தை என்னோடது. எனக்குத்தான் சொந்தம்” என்றவாறு அலறியடித்து எழுந்தவள் தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டாள்.
வயிற்றைப் பிடித்த கரங்களில் இன்னும் இன்னும் அழுத்தம் கூடியபடி இருக்க அவள் பார்வை இப்போது வயிற்றை நோக்கிப் பாய்ந்தது.
அது கனவென்று அவளுக்கு புரிந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது அதிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள் செல்வி. கண்ட கனவு நீர்சுழல் போல் அவளை இழுத்து உள்ளே அமிழ்த்தவே மீண்டும் மீண்டும் முயன்றுக் கொண்டிருக்க மீண்டு வர இயலாது அதனுள்ளயே தத்தளித்துக் கொண்டிருந்தாள் செல்வி.
‘நான் வயித்துல பிள்ளையோட இருக்குறேன். ஆனா அந்தக் குழந்தையை யாரோ கேக்குற மாதிரி இருந்தது… அது என்னோட குழந்தை என்கிட்ட கொடு கொடுன்னு எங்க பார்த்தாலும் அதே குரல்….அய்யோ ஆண்டவா..! அந்த வேதனையும் விரக்தியும் என்னை என்னவோ செய்கின்றது… அப்பா ஈசுவரா..! இதென்ன இப்படி ஒரு கனவு வந்திருக்கிறது. இதற்கு முன்னால் எல்லாம் இந்த மாதிரி எனக்கு வந்ததே இல்லையே…’ அவள் பதைபதைத்து தனக்குள்ளே கேட்டுக் கொள்ள சற்று முன் கேட்ட அதே நாயின் ஊளைச்சத்தம் இப்போது இன்னும் சத்தமாய் கேட்டு அந்த வீட்டினையே அதிர வைத்தது. அதில் அவள் உலுக்கி விழுந்து எழுந்தே விட்டாள். ஏற்கனவே பயம், இதில் இந்த அலறலும் சேர்ந்து கொள்ள தொண்டை வற்றிப் போய் தாகம் வேறு எடுக்கத் தொடங்கியது.
தண்ணீர் எடுத்து வந்து குடிக்க தொண்டை தாண்டி அந்த திரவம் மிகுந்த கஷ்டத்துடனே சென்றது. இப்போது வயிற்றுப் பகுதி பாரமாக இருப்பதாகவே அவளுக்குப் பட்டது. உடனே அவள் வயிற்றைத் தடவிக் கொண்டாள்.
‘கண்டிப்பா எதுவோ சரியில்லை.. என்னவோ நடக்கப் போகுது. என் மனசு என்கிட்ட எதையோ சொல்லத் துடிக்குது. ஆனா என்னென்னு எனக்கொன்னும் விளங்கலை. ஆனா எதுவா இருந்தாலும் நான் எத்துக்கிறேன். என் வாழ்க்கையில நான் இழந்தது அதிகம் தான். அதுக்காக என்னைக்கும் உன்னை திட்டி ஒதுங்கிப் போனதில்லை. நீதான் நான் என்று நினைத்துத்தான் உன்னையே துதித்துக் கொண்டிருக்கிறேன். நான் உடைந்து விழும் போதெல்லாம் நீயே என்னை ஒட்டவைத்து எழ வைக்கிறாய். உன்னொளி தந்தே என்னிருள் அகற்றுகிறாய். என் ஆவி தவிக்கும் நேரமெல்லாம் துணையாய் இருந்து ஆறுதல் தருகிறாய். பிரசவம் பார்க்க தாய் வடிவேற்று வந்திறங்கிய தாயுமானவனே பிறர் சவம் அகற்றும் இவளின் மனதில் படிந்த ரணத்தினை அகற்றுவதும் உன் வேலை அல்லவா!.. நீ அனைத்தையும் சரி செய்வாய் தான். இருந்தும், நடக்கும் நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ள இயலாது மனம் தடுமாறி தடம்மாறிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. என் வழியில் வழித்துணையாய் என்னிறுதி வரை உடன் வருவாய் என்ற நம்பிக்கையில் இவள் இப்போது சற்று தெம்பாக இருக்கிறாள். காத்தருள்வாய் மதொருபாகா..! என்று ஆதி அந்தமில்லாத அவனிடம் அவள் முறையிட்டுக் கொண்டிருந்தாள். கடவுளிடம் சொல்லியதும் கவலை தீர்ந்துவிடுமா என்ன..? தீராது… அதற்கான முயற்சியினை நாம் எடுக்கும் போதுதான் அத்தனை பிரச்சனையும் தீர்ந்து நமக்கான வழியும் புலப்படுகிறது. ஆனாலும் அவனிடம் முறையிடுவோம் காரணம் அவனிடம் சொல்லியாகிவிட்டோம். பதில் சொல்லாவிட்டாலும் அவன் பார்த்துக்கொள்வான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே… அது அவளிடத்தில் அளவில்லாது குடிகொண்டிருந்தது. அந்த நம்பிக்கையையே ஆதாரமாய் பற்றியவள் அந்த கனவினை மறக்க முயன்றாள்.
அப்போதுதான் அவளுக்கு அன்றொரு நாள் நடந்தது நினைவுக்கு வந்து இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையினையும் ஆட்டங் காண வைத்துவிட்டது.
‘அய்யோ அதை எப்படி மறந்தேன். அதுக்கும் இந்த கனவுக்கும் சம்பந்தம் இருக்குமோ… கண்டிப்பா இருக்கும்!.. ஆனால் இதுல நான் எந்த தப்பும் பண்ணலையே. எனக்கெதுக்கு இந்த வேதனை? என்னோட வேலையைத்தான் நான் பண்ணேன். அது அது…’ என்றவள் சற்று இடைவெளிவிட்டு ‘இல்லை நான் தப்பு பண்ணலை’ என்றபடி வயிற்றில் அடித்துக் கொண்டே அழத் தொடங்கிவிட்டாள். அவள் மனநிலை இன்னதென்றே வரையறுக்க இயலாத இருளில் மாட்டிக் கொண்டு திரும்பி வரும் வழிதெரியாது திக்கற்று அங்கேயே நின்றுவிட்டது.
கல்லறையிலிருந்து உருவாகிடுமோ கருவறை..?

