
அவளின் மிரட்சியை உணர்ந்து உடனே கைவிட்டவனுக்கு தன் மாமாவின் மீதெல்லாம் பயமே இல்லை. தன் அக்காவின் வாழ்க்கைக்காக பாலாஜியிடம் வாதாடாமல் அமைதி காத்தவனுக்கு, ஜானவியிடம் அமைதி காக்க பொறுமையும் இல்லை முடியவும் இல்லை. இதற்கு மேல் அவ்வீட்டில் இருக்க அவனுக்குத் துளி அளவும் பிடிக்கவில்லை. அதனால் வேகமாக உடனே கிளம்பி விட்டான்.
ஒரு ஆட்டோவைப் பிடித்து வீட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தவனுக்கு அத்தனை ஆக்ரோஷம். ‘நல்ல குடும்பத்துல வாக்கப்பட்டிருக்கா அக்கா’ என்று அவனால் ஆதங்கமாக நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் ரிஷி அறியாத ஒன்று, வித்யாவின் புகுந்த வீட்டில் சீரான நிலையில் கட்டுக்கோப்பான சிந்தனையில் யாரும் இல்லை தான். அதற்கு அவர்களின் செல்வச் செழிப்பும் ஒரு வகைக் காரணம். ஆனால் அவர்கள் கெட்டவர்கள் இல்லை… அதை ரிஷி உணரும் நாள் வருமா?
‘ச்ச அக்காவுக்கு முதல்ல என்னனு பார்க்காமல் அந்த குட்டச்சிக் கிட்ட போய் இப்போ இந்த வாக்குவாதம் ரொம்ப அவசியமா எனக்கு’ என்று மனதில் தன்னையே நினைத்து கடுப்பானவன்,தன் தந்தைக்கு கால் செய்து, “அப்பா, என் பிரண்ட் வீட்டுல ஒரு எமர்ஜென்சி அதனால நான் கிளம்பிட்டேன்…அக்கா எப்படி இருக்கா… அவள் கண் முழிச்சிட்டாளா! ஒன்னும் பிரச்சனை இல்லையே” என்று தன் தலையை நீவியபடி அக்கறை கலந்த பதற்றத்துடன் கேட்டான்.
“ரிஷி நானே கால் பண்ணனும்னு நினைச்சேன்ப்பா! நம்ம வித்யா கண் முழிச்சிட்டாள்” என்று தந்தை கூறும் போதே அப்பக்கம் ஒரே சிரிப்பு சத்தமும், சந்தோஷ கூச்சலும்…
ஒரே சத்தமா இருக்குப்பா… சரியா கேட்க மாட்டிங்குது” என்று ஆட்டோவில் இருந்தவன் சத்தமாக உரைக்க,
“ஏங்க! யாரு ரிஷியா?” என்று கணவனை கவனித்து பக்கத்தில் வந்தார் சரஸ்வதி.
“ஆமா.. ஆமா” என்று பதில் தந்த கணவனிடம் ஃபோனை வாங்கிய சரஸ்வதி,
“ரிஷி! வித்யா கண் முழிச்சிட்டாள்…எல்லாம் நல்ல விஷயம்ப்பா” என்று கூறியபடியே ஆளில்லாத இடத்திற்கு வந்து, “நீ மாமா ஆகப் போறடா… நம்ம வித்யா அம்மாவாகப் போறா” என்று அவர் ஆனந்தத்தில் கண் கலங்க, இங்கு ரிஷியோ அவ்விஷயத்தைக் கேட்டு இதழ் பிரித்து புன்னகைத்தான்.
“அம்மா! ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று உற்சாகம் கலந்த சந்தோஷத்துடன் உரைத்த மகனிடம், “அவள் உன்னைத் தான் கேட்டுட்டே இருக்கா… நீ எங்க டா போன” என்று வேகமாகக் கேட்டார்.
தந்தையிடம் கூறிய அதே பொய்யை தாயிடம் தொடர்ந்தவன், “மாமா கிட்ட நான் அப்புறம் பேசிக்குறேன்! வித்யாக்கா கிட்டயும் நான் பேசிக்குறேன்.. ஆனாலும் நீ நான் ஏன் கிளம்புனேன்னு விஷயத்தைச் சொல்லிடு” என்று கால்லை துண்டித்தவன், ‘அந்த குட்டச்சி எதுவும் சொல்லலை போல, பயந்திருப்பாள்’ என்று மனதில் நக்கலாக சிரித்தான்.
“பப்புமா! என்ன ஆச்சு உனக்கு… ஏன் ஒரு மாதிரி இருக்க… பாரு! நீ அத்தை ஆகப் போற” என்று ஒரு ஸ்வீட்டை ஜானவியின் வாயில் திணித்தார் பாட்டி.
‘எவ்வளவு சந்தோஷமான மொமண்ட் இது… பாலாக்கும் வித்யாவுக்கும் இத்தனை வருஷம் கழிச்சு ஒரு குழந்தை…எங்க வீட்டோட குட்டி வாரிசு.
ஆனால் அந்த காட்டான்னால என்னால இந்த சந்தோஷ நிலையை அனுபவிக்க முடியலை’ என்று மனதினுள் சோகமாக இருந்தவளை, ரொம்ப நேரமாக விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்த ஜெகன்…
“என்ன ஆச்சு ஜான்… உன்னைப் பார்க்க நான் ஓடோடி வந்தால் நீ அமைதியா இருக்க… என்ன ஆச்சி பாட்டி இவளுக்கு” என்று புரியாமல் கேட்டான் ஜெகன்.
“அது ஒன்னும் இல்லை மாப்பிள்ளை” என்று நிறுத்தி நிதானமாக அழுத்தி பேசிய காஞ்சனாவின் செவியில், “காஞ்சு! ரொம்ப கஷ்டப்பட்டு மரியாதை கொடுக்க முயற்சி பண்ற போல.. ஆனால் என்னன்னா உன் வாயால இப்படி கேட்க ரொம்ப செயற்கையா இருக்கு காஞ்சு!” என்று சிரிப்பை அடக்கியபடி புலம்பினார் குசேலன்.
தன் கணவனைப் பார்த்தபடியே, “யூ நோ வாட் குசேலன்… எனக்கே இந்த மாதிரி பேசுறது ரொம்ப செயற்கையா தான் இருக்கு… என்ன பண்றது பொண்ணு வீட்டுகாரங்களா போயிட்டோமே” என்று பேரனைப் பார்த்து பல்லைக் காட்டினார் காஞ்சனா.
“பாட்டி! எப்போயும் போல என்னை ஜெகன்னே கூப்பிடுங்க… உங்களுக்கு இந்த ஆக்டிங் எல்லாம் கொஞ்சம் கூட செட் ஆகலை” என்று நகைத்தான் பேரன்.
“ஏன் குசேலன்? நான் நடிக்குறது அவ்வளவு அப்பட்டமாவா தெரியுது” என்று கணவனின் காதைக் கடித்தார் காஞ்சனா.
“அதை என் வாயால நான் எப்படிச் சொல்லுவேன் காஞ்சு” என்று பழைய படம் நடிகன் போல் கையைப் பிசைந்து தாத்தா மேலே பார்த்தார்.
“காஞ்சு! எனக்குக் கொஞ்சம் தலை வலிக்குது… நான் உள்ளே போய்ப் படுத்துக்குறேன்” என்று கூறிவிட்டு அனைவரையும் பார்த்து பொதுப்படையாக புன்னகைத்து விட்டு வேகமாக தன் அறைக்குள் சென்று அடைந்துக்கொண்டாள் ஜானவி.
செல்லும் அவளையே யோசனையுடன் பார்த்த ஜெகன், “பாட்டி! ஜான்னுவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா இல்லையா? அதைத் தெளிவா கேட்டீங்களா?” என்றான் குழப்பத்துடன்.
“நோ நோ ஜெகன்… நீ ஏன் அப்படி எல்லாம் திங்க் பண்ற… பப்புமாவுடைய சம்மதத்துடன் தான் உங்களை வீட்டுக்கு வரச் சொன்னோம். அவளுக்கு தான் தலைவலின்னு சொல்றாளே… மத்தபடி நத்திங்” என்று உறுதியாக கூறினார் காஞ்சனா.
“ஏன்ம்மா! நாங்க தான் இன்னிக்கு பாப்பாவை பொண்ணு பார்க்க வரோம்னு தெரியும் தானே… அவளுக்கு சேலை ஏதாவது கட்டிவிட்டிருக்கலாம்ல! இந்த வித்யா கூட இதெல்லாம் சொல்ல மாட்டாளா” என்று அம்மாவின் காதில் கடித்தார் வசந்தி.
“என்ன வசந்தி மாமியார் ஆகப் போறன்றதுக்காக இப்போவே அந்த தோரணையை காட்டுறியா?” என்று முகத்தைச் சுருக்கினார் காஞ்சனா.
“ஐய்யயோ!ச்ச ச்ச என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க… சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்” என்று அசடு வழிந்தார். அண்ணன் மகளை மகனுக்கு முடித்தால் பாலாஜி சொத்தில் பாதி கிடைக்கும் என்று தான் இத்தனை நாட்கள் ஜானவியிடம் ஜாடை மாடையாகக் கண்டிப்பைக் காட்டாது இந்த கும்பலோடு கோவிந்தா போட்டபடி இருந்தார் வசந்தி.
விடாப்பிடியாக கணவனிடம் அவளை தன் மகனுக்கு மணக்கக் கேட்டதற்கும் காரணம் சொத்திற்காகத் தான்.
ஆனால் ஜெகனிற்கு அப்படி இல்லை. ஐந்தடி உயரத்தில் இருக்கும் மாமன் மகளின் அழகிய தோற்றம் என்றோ அவனை பாதித்து விட்டது தான்.
ஆம், ஜானவி நல்ல அழகி தான்… நிலாவினைப் போன்ற வட்ட முகத்துடன், பால் வண்ண நிறத்தில் ஜொலிக்கும் வண்ண ரோஜா போன்ற மென்மையான முகம் தான் அவளுக்கு.
அவளின் முட்ட விழிகளும், கூர் நாசியும்,வில்லாய் வளைந்த புருவங்களும்,ஸ்ராபெரி போல் சிவந்திருக்கும் உதடுகளும் அத்தனை கச்சிதமாக இருக்கும். அவளின் உயர்த்திற்கேற்ற உடலமைப்புடன் பெண்மைக்கே உரித்தான வளைவு நெளிவுகளுடன் பார்ப்போரை ஈர்க்கும் விதமாகவே இருப்பாள் ஜானவி.
சிற்பமே 7
வித்யா கர்ப்பம் ஆனதில் இருந்து பாலாஜி மனைவி மீது மட்டும் தான் முழு கவனம் செலுத்தி வருகிறான். ஆதலால், ஜானவியின் வாடிய முகம் அவனுக்குத் தென்படவில்லை.
ரிஷி ஜானவியிடம் அப்படி பேசியதற்கு அத்தனை தாக்கமா? ஆம், கடந்த இருபது வருடங்களாக யாரிடமும் இத்தகைய கடினத்தை சந்திக்காத ஜானவிக்கு அன்று ரிஷி செய்தது… மிரட்டியதும் அச்சுறுத்தலாகவே இருந்தது. அச்சுவடு மறைய அவளுக்கு சில நாட்கள் தேவைப்பட்டது.
ஆனாலும் அவன் மேல் பயம் இருந்தாலும் கூட, தன் அண்ணனிடம் அவள் ரிஷி செய்ததைச் சொல்லி, தன்னால் அண்ணா அண்ணி பிரிந்து விடுவார்களோ என்கிற பயம்… அன்று ரிஷயிடம் விடுபட்டு வீட்டிற்குள் வந்த போது கூட, ‘எதுனாலும் பாலாக் கிட்ட சொல்லிடு ஜானவி’ என்று இருக்கொல்லி எறும்பாக இருந்த இதயத்தை ஸ்திரமாய் தடுத்தது வித்யா குழந்தை உண்டாகி இருந்த விஷயம் தான்.
எப்போதும் போல் மாணிக்கம் மற்றும் சரஸ்வதி ஜானவி வீட்டிற்க்கு விஜயம். அன்றைய தினத்திற்குப் பின்னர் ரிஷியும் இங்கே வரவில்லை.
“ஏய் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்திடு டி” என்று ஜானவிக்கு பத்திரிக்கை வைக்க வந்த தர்ஷினி, காஃபியை பருகியபடியே கூறினாள்.
அங்கிருந்த இன்னொரு சோஃபாவில் வித்யா அமர்ந்திருந்ததால், அவளின் செவிகளில் இவர்கள் பேசுவது நன்றாகவே விழுந்தது.
“கண்டிப்பா டி உன் கல்யாணத்துக்கு வராமல் இருப்பேன்னா! ஆனால் நீ தான் என்னை விட்டுப் போற போடி” என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள் ஜானவி.
“அடியேய்! நீ மட்டும் கல்யாணம் பண்ணிட்டு இங்கேயேவா இருக்கப் போற…உன் ஜெகன் அத்தான் வீட்டுக்கு போகத் தானே போற” என்று விளையாட்டாக கிண்டல் செய்த படி நொடித்துக் கொண்டாள் தர்ஷினி.
“உனக்கொரு விஷயம் சொல்லவா… நான் ஜெகன் அத்தானை கல்யாணம் பண்றதுக்கு முக்கியமா ஒரே ஒரு காரணம் தான் இருக்கு!” என்று ஜானவி புதிர் போட,
“என்ன உன் அத்தை பையன்றதுனாலயா?” என்று தர்ஷினி மிக்சர் சாப்பிட்டுக் கொண்டே இதெல்லாம் ஒரு கேள்வியா என்பது போல் அசால்ட்டாக பதில் கொடுத்தாள்.
“இல்லை” என்று ஜானவி மறுப்பாகக் தலையாட்ட,
“வேற என்ன… ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போலே இருப்பானே” என்று படத்தின் பாடலை ஒப்பிட்டு சிரித்தபடியே கூறினாள் தர்ஷினி.
“ஏய்! அதுக்கெல்லாம் இல்ல டி” என்று ஜானவி மீண்டும் மறுப்பாய் தலையாட்ட,
“அப்போ… நீயும் என்னை மாதிரியே உன் மாமாவை லவ் பண்ற! கரெக்ட் ஆ” என்று கண்ணடித்தபடி கேட்டாள் தர்ஷினி.
“ம்க்கும்…காதல்! அது மட்டும் தான் குறைச்சல்… நீ வேற போடி” என்று சலித்துக் கொண்டாள் ஜானவி.
“இது என்ன டி கூத்தா இருக்கு! அப்போ என்ன டேஷ்க்கு அவரைக் கல்யாணம் பண்ணப் போற” என்று ஆவேசப்பட்டாள் தர்ஷினி.
“ம்ம்… நான் ஜெகன் அத்தானை கல்யாணம் பண்ண அப்புறமும் இங்கே எங்க வீட்டுல தான் இருப்பேன் டி… அத்தான் இங்க வந்திடுவாரு… நான் அவர் கிட்ட இந்த விஷயத்தை ஃபோன்ல உறுதி செஞ்ச அப்புறம் தான் வீட்ல ஓகே சொன்னேன்” என்று ஜானவி தன் தோழியிடம் கூறுவதைக் கேட்ட வித்யாவிற்கு பேரதிர்ச்சி என்றால், தர்ஷினியோ வாயைப் பிளந்து விட்டாள்.
“அடிப்பாவி! என்ன டி சொல்ற நீ?” என்று வியப்பில் கூறிய தர்ஷினி இன்னும் அதிர்ச்சி நிலையில் தான் இருந்தாள்.
“அடியேய்! நான் அத்தான் கிட்ட சொல்லி அத்தானும் ஓகே சொல்லிட்டாரு… அத்தையும் ஓகே தான் சொல்லுவாங்க!” என்று உறுதியுடன் கூறினாள் ஜானவி. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வித்யாவிற்கோ உடம்பெல்லாம் புகைந்தது.
“ஆமா… அண்ணா, பாட்டி, தாத்தாக் கிட்ட கூட சொல்லிட்டேன்” என்று சாதாரணமாகக் கூறினாள் ஜானவி. உறவினர்களைத் தாண்டி மற்றவர்கள் முன் தன் குடும்பத்தினரை உறவு முறையில் தான் அழைப்பாள் ஜானவி.
“சரியான அசால்ட் தான் டி நீ… அவங்க என்ன சொன்னாங்க” என்று கன்னத்தில் கைவைத்து கதையைக் கேட்பது போல் கேட்க ஆரம்பித்தாள் தர்ஷினி.
“எல்லாரும் ரொம்ப ஹாப்பி டி…பின்ன நான் இங்க வீட்டுல இருக்கணும்னு தானே அவங்களும் நினைப்பாங்க” என்று சந்தோஷம் கலந்த பெருமையுடன் ஜானவி கூற, வித்யாவோ உறைந்தே விட்டாள். ஏனெனில் அவளுக்கு இவ்விஷயம் தெரியாது.
‘நான் என் அம்மா வீட்டுக்கு போக முடியாமல் இருக்கேன்… ஆனால் இவள் நிரந்தரமா இங்கேயே இருக்கப் போறாளா! இவங்களுக்கு வந்தால் ரத்தம் எனக்கு வந்தால் தக்காளி சட்டினியா… ச்ச’ என்று மனதில் எரிந்துக் கொண்டிருந்தவளுக்கு ஜானவி மீது அத்தனை பொறாமை கலந்த கோபம்.
நியாயப்படி அவளின் கோபம் கடுப்பு எல்லாம் கணவன் மீது தான் இருந்திருக்க வேண்டும். இப்போதும் கணவன் மீது வித்யாவிற்கு கடுப்பு இருக்கிறது தான். ஆனால் அதையும் தாண்டி, ஜானவியின் மீதே அதீத கோபம் இருந்தது… அது ஜானவியின் நடவடிக்கையால் வந்த விளைவா? அல்லது ஜானவியை கணவன் தூக்கி வைத்து கொண்டாடுவதால் வரும் பொறாமையா? அவளுக்கே வெளிச்சம்.
ஜெகன் ஜானவியின் நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டாலும், வசந்திக்கும் அவளின் கணவருக்கும் கடுப்பு தான். ஆனாலும் சொத்து வருகிறதே அதனால் இப்போதைக்கு விட்டு பிடிக்கலாம் என்று விட்டுவிட்டனர்.
இன்னும் சரியாக ஒன்றரை மாதத்திற்குள் பாலாஜி யூஎஸ்எ செல்ல வேண்டும் என்கிற கட்டாயம். வித்யா கருவுற்றதால் இங்கே தான் விட்டு செல்லவிருக்கிறான்.தான் செல்வதற்குள் தங்கை கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்தது போல், அடுத்த மாத கடைசியில் ஒரு பிரைவேட் ரெசார்ட்டில் தன் தங்கைக்கும் ஜெகனுக்கும் இன்டிமேட் வெட்டிங் நடத்தி விடலாம் என்று முடிவு செய்திட, அனைவருமே ஒப்புக்கொண்டனர். கல்யாணத்திற்கு முந்தைய நாள் நிச்சயம் என்று தீர்மானித்திருந்தனர்.
“நீ வேணும்னா உன் அம்மா வீட்டுக்கு போயி இருந்துக்கோ” என்று பாலாஜி வித்யாவிடம் கருவுற்ற பிறகு ஒரு முறை கூறினான் தான்.
ஆனாலும் அவளின் பதில்… “நீங்க வந்து எங்க வீட்ல ரெண்டு மூனு நாளு தங்குங்க… நான் அதுக்கு அப்புறம் எங்க வீட்டுல இருக்கேன்” என்று உறுதியாகக் கூறிவிட்டாள் வித்யா.
பாலாஜிக்கோ பழைய குருடி கதவைத் திறடி என்கிற நிலை தான்… கோபம் வந்தது… ஆனாலும் இத்தனை வருடங்களாக தங்களுக்கு கிடைக்காத பிள்ளை பாக்கியம் இப்போது நிறைவடைந்திருக்கிறதே!
அதனால் மனைவியிடம் என்ன நடந்தாலும் கோபமே படக்கூடாது, கர்ப்பிணி பெண்ணின் மனதை காயப்படுத்திடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக, தீர்மானமாக இருந்தவன் தன்னவளை பூப்போல் தாங்கிக் கொண்டிருக்கிறான்.
இதில் ரிஷி அவ்வப்போது கால் செய்யும் சமயங்களில் ஒரு முறை, “அக்கா! இந்த நேரத்துல நீ சந்தோஷமா மட்டும் தான் இருக்கணும்! தேவையில்லாத சிந்தனை எல்லாம் இருக்க கூடாது. அம்மா சொன்னாங்க நீ நம்ம வீட்டுக்கு வர முடியலைன்னு ரொம்ப ஏக்கமா இருக்கணு… இங்கப் பாருக்கா, அத்தான் உன்னை சந்தோஷமா வைச்சிருக்காரு! இதை விட உனக்கு வேற என்ன வேணும். அதனால மத்த விஷயத்தை எல்லாம் தூக்கிப்போட்டு நல்லா சாப்பிடு, நல்லா தூங்கு!கவலையில்லாமல் இரு” என்று ஆறுதல்படுத்தினான்.
நாட்கள் நகர ஆரம்பிக்க, ஜானவி கல்யாணத்திற்கான வேலைப்பாடுகள் வேகமாக நடந்துக் கொண்டிருந்தது. ரிஷி கூறியது போல், மற்ற எல்லா எண்ணங்களையும் ஓரந்தள்ளி தன் குழந்தையைப் பத்தி மற்றும் நினைத்த வண்ணமாய் சந்தோஷத்துடன் இருந்தாள் வித்யா.
தர்ஷினி கல்யாணத்திற்கு குடும்பத்துடன் சென்ற ஜானவி, மணமக்களை வாழ்த்தி விட்டு, “அடுத்த வாரம் என் கல்யாணத்துக்கு வந்திடுங்க” என்று இருவரிடமும் பாசமாக கட்டளையிட்டாள்.
“ஹேய் சாரி டி… உன் கல்யாணம் டேட் பிக்ஸ் பண்ற முன்னாடியே நாங்க ஹனீமுனுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டோம்” என்று தோழியின் காதில் மெல்ல கூறி கெஞ்சியபடி சிணுங்கினாள் தர்ஷினி.
அதைக் கேட்டு முறைத்த ஜானவியோ, “போடி பேசாத.. கல்யாணம் அன்னிக்கு சொன்னதுனால உன்னை மன்னிச்சு விடுறேன்… ஹாப்பி மேரிட் லைஃப்” என்று இருவரிடமும் கூறியவள்…தோழியின் காதில், “நைட்டுக்கு ஆல் தி பெஸ்ட் டி” என்று சிரித்தாள்.
“அடியேய்” என்று கணவனைப் பார்த்தபடி வெட்கப்பட்ட தர்ஷினியிடம் சந்தோஷத்துடன் விடைப்பெற்றாள் ஜானவி.

