
29
“மூன்று நாட்களுக்கு முன், காட்டில் ஆளில்லா தொழிற்சாலை ஒன்றில், குண்டடிப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை மனிதன் உயிர் பிழைத்திருக்கும் சமயத்தில், காட்டு வழிப் பாதைகளில், இறந்துபோன நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது, ப்ளான்டோ நிறுவனத்து ஆராய்ச்சியாளர் சந்திரசேகர் சடலம். காட்டு தாவரங்களை சட்டவிரோதமாக திருடியும், மலைவாழ் மக்களை தனது ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தியும் இருந்த நிலையில், தலைமறைவாகியிருந்த சந்திரசேகரின் உடல் கண்டுபிடிப்பு. காட்டிலுள்ள ஒரு விஷப்பூச்சிக் கடித்து, வந்து சேர வழியில்லாமல் அங்கேயே அவர் உயிரிழந்திருப்பதாக, உடற்கூர் ஆய்வாளர்களிடமிருந்து தகவல். மேலும் காட்டில் நடந்த மர்மங்களுக்கும், பச்சை மனிதர் மீதான கொலை முயற்சிக்கும், சந்திரசேகரும் அவருக்குத் துனையாய், தொழிலதிபர் பிரதாப்பும் தான் காரணம் என்பது சந்திரசேகரது காணொளியொன்றிலும், பிரதாப்பின் வாக்குமூலம் மூலமாகவும் தெரியவந்துள்ளது. பச்சை மனிதர் தன்னை ஏதும் செய்தாலும் கூட, சந்திரசேகரைப் பற்றிய ஆதாரத்தைத் திரட்டிவிட வேண்டுமென்று சந்திரசேகர் அறியாத வகையில் அவருடனான பேச்சு வார்த்தையைக் காணொளி பதிவாக சேமித்ததாக கூறியுள்ளார்” என்று செய்திகளெங்கும் ஒலித்துக் கொண்டிருந்ததை, அவ்வீட்டுக் கூடத்தில் அமர்ந்தபடி அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சுடர் மற்றும் சுபிக்ஷாவின் முகத்தைத்தான் அனைவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தனர்.
நினைவு தெரிவதற்கு முன்பே சுபியும், நினைவு தெரியவரும் வயதில் சுடரும் தந்தையை விட்டு வந்திருந்தனர். தந்தை பாசமென்று அவர்மீது தற்போது ஏதும் அரவே இல்லை என்றாலும், சற்று வருத்தமாகாத்தான் இருந்தது அச்செய்தியைப் பார்ப்பதற்கு.
சுடரின் கரத்தில் தன் கரம் வைத்த ப்ரீத்தி, அவன் நிமிரவும், “எல்லாம் சரியாப்போகும்” என்க,
“ஹ்ம்..” என்று பெருமூச்சு விட்டான்.
சுபிக்ஷாவிற்கு செய்தியை விட, கருப்பசாமியின் எண்ணங்கள்தான் அதிகம் பாதித்தது. அவனது பாராமுகம் அவளை என்னென்னமோ செய்தது.
சுபியின் தோளில் சுடர் கரம் வைக்க, அண்ணன் மாரோடு சாய்ந்துக் கொண்டாள்.
பெரியவர்கள் சிறியவர்களை வேதனையோடு பார்த்தனர்.
அடுத்ததாக செய்தியில் ராஜசிம்மனுக்கும் கருப்பசாமிக்கும், இவ்வழக்கினை முடித்துவைத்தமைக்கு பாராட்டுக்கள் வழங்கப்பட, “ஐ திங் ஐ அம் இன் லவ் வித் ஹிம் சுடரண்ணா” என்று சுபி அனைவரும் கூடியிருக்க, பளிச்சென்று கூறினாள்.
அவள் தோளில் தட்டிக் கொடுத்த சுடர், ராமராஜனைப் பார்க்க, மென்மையாய்க் கண்கள் மூடித் திறந்தவர், சுபிக்ஷாவின் தோளிலும் தட்டிக் கொடுத்தார்.
மெல்ல நடைபோட்டுக் கூடத்திற்கு வந்த சிவப்ரியாவும், செய்தியைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தாள்.
மனதில் சொல்ல முடியாத அலைப்புறுதல்… ‘நீ வருவ தானே அபூ என்னைத் தேடி?’ என்று மனதோடு அவள் கேட்டக் கேள்விக்கு, மனதிற்குள்ளேயே, கண்சிமிட்டிச் சிரித்தான் கள்வனவன்…
“எல்லாம் முடிஞ்சதுல? நாம கிளம்புவோமா?” என்று பிரம்மவதனி கேட்க,
ப்ரீத்தியின் அம்மா பிரபா ஒரு ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்.
“நான் போய் பேசிட்டு ஃபார்மாலிடீஸ் எதும் இருக்கானு விசாரிச்சுட்டு வரேன்.. பேக் எல்லாம் பேக் பண்ணிடலாம்” என்று சுடரொளிவானன் கூற,
“ஹப்பாடா.. அதை முதல்ல செய் சுடரண்ணா..” என்றபடி எழுந்து பிரம்மா சென்றாள்.
சுடரொளிவானன் சென்று, கருப்பசாமி மற்றும் ராஜசிம்மனைப் பார்த்தான்.
இருவரும் மருத்துவமனையில் தான் இருந்தனர்.
பரஸ்பர நலவிசாரிப்புகள் முடியவும், “நாங்க கிளம்பலாமானு கேட்க வந்தேன். எதும் ஃபார்மாலிடீஸிருக்கா சார்?” என்று சுடர் கேட்டான்.
கருப்பசாமி மனதில் அலைகடலின் வர்ண ஜாலங்கள்.. அவள் தன்னைப் பாராமலே புறப்பட்டு விடுவாளோ? என்ற தவிப்பு…
“அவ்வளவுதான் சார்.. இனி நீங்க தாராளமா புறப்படலாம்..” என்று ராஜசிம்மன் கூறினான்.
அந்த நேரம் மருத்துவர் அறையிலிருந்து உடலெல்லாம் மறைத்தபடி, அபூர்வன் வர,
பெண் மருத்துவர் ஒருவர் அவனுடன் பேசியபடி வந்து, சிலபல மாத்திரைகள் கொடுத்துவிட்டுச் சென்றார்.
அபூர்வனைக் கண்டதும், அடையாளம் கண்டுவிட்ட சுடருக்கு தன்னைப்போல் ஒரு பச்சாதாபம் எழுந்தது. அபூர்வன் தான் இத்தனை நாட்கள் சிவப்ரியாவை வைத்திருந்தது என்றபோது வந்த கோபம், அவளது பாதுகாப்பிற்காகத்தான் என்று புரிந்ததும் கரைந்து போனது..
அவளைப் பாதுகாப்பாய் வைத்திருந்ததற்காக நன்றி கூற வேண்டும் என்ற எண்ணத்துடன், “தேங்ஸ் சார்” என்று சுடர் கூற,
மெல்லிய புன்னகை அபூர்வனிடம்.
“உடம்பு முடியலையா?” என்று சுடர் கேட்க,
“லேசா காய்ச்சல்..” என்று கூறும்போதே மீண்டும் அவனிடம் வந்த மருத்துவர், “டேய்.. இந்தா.. இந்த டேப்லைட்டை விட்டுட்டுப் போயிட்ட. டேக் கேர்” எனக் கூறிவிட்டுச் செல்ல,
மூவரும் அபூர்வனையே குறுகுறுவென்று பார்த்தனர்.
“காலேஜ் மேட்..” என்று சிரித்தபடி அபூர்வன் கூற,
“நீங்க மெடிகோவா?” என்று சுடர் கேட்டான்.
அபூர்வன் ஒரு கசந்த புன்னகையுடன் ஆமென்று தலையசைத்தான்.
சட்டென்று சுடரொளிவானனுக்கு ஒரு யோசனை.. தனது தந்தை செய்த பிழைக்கு, தன்னாலான ஒரு பிராயச்சித்தமாக இருந்துவிட்டுப் போகட்டுமே? என்று நினைத்தவனாய், அதை அவன் வெளிப்படுத்த, மற்ற மூவரும் மனமார அதை ஏற்றுக் கொண்டனர்.
அனைவரும் வால்பாறை விட்டுப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருக்க, ராஜசிம்மன் மற்றும் கருப்பசாமி அவர்களை வழியனுப்ப வீட்டு வாசலில் நின்றிருந்தனர்.
தங்கள் பொதிகளை ஏற்றிக் கொண்ட அனைவரின் மனதிலும் பலவகையான உணர்வுகள்.
பிரபாவிற்கு மகளோடு பத்திரமாக அவ்விடம் விட்டுச் செல்வதே பெரும் நிம்மதி. மற்றபடி அவள் மற்றும் சுடரின் காதலைப் பற்றி அவருக்கு மறுப்பதற்கு எந்த காரணமும் இருக்கவில்லை. வீட்டிற்கு சென்றதும் கணவனிடமும் பேசி ஆலோசித்து, மற்ற முடிவுகளை மேற்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்திருந்தார்.
மருத்துவர்களின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளோடு பாதுகாப்பாக சிவப்ரியாவை அழைத்துச் செல்லும் ஏற்பாட்டை மேற்கொண்டிருந்தனர்.
வண்டியில் பின்னிருக்கை மொத்தமும் அவள் படுத்துக் கொண்டு வரும்படியான வசதியோடு காற்றுப் படுக்கைகள் வைத்து சுடர் மற்றும் ப்ரீத்தி அமைத்துக் கொண்டிருக்க, ராமராஜன் மகளிடம் மருந்துகளைக் கொடுத்துப் போடச் செய்து கொண்டிருந்தார்.
பிரம்மவதனி பிரபாவோடு மற்றப் பொதிகளை ஏற்றிக் கொண்டிருக்க,
விட்டின் பக்கவாட்டுத் தோட்டத்தில் சுபிக்ஷா மற்றும் கருப்பசாமி நின்றிருந்தனர்.
“சாரிங்க.. அ..அன்னிக்கு உங்களைக் கவனிக்கலை. நீங்க நியூஸ் பாத்த வருத்தத்துல இருக்குறதா நினைச்சேன்” என்று கருப்பசாமி கூற,
“இருக்கட்டும் சார்” என்றவள், அவனைப் பார்த்தாள்.
அவள் பார்வையைத் தவிற வேறு என்ன அவனுக்கு அவள் மனதை தெள்ளென உணர்த்திவிடப் போகிறது?
மென்மையான புன்னகையுடன், தனது சட்டைப் பையிலிருந்து இரு வளையலை எடுத்தான்.
அவள் அதனைப் புரியாமல் பார்க்க, “எனக்கு நினைவு தெரிஞ்சதுலருந்து நான் நேசிக்குறது இயற்கையைத் தான். நான் வளர்ந்த ஹோம் ஒரு மலையடிவாரத்துல இருக்கும். விளையாட்டுனா அந்த காடுதான் எனக்கு.. காடு மேல உள்ள காதல்லதான் வனத்துறை அதிகாரி ஆகனும்னு ஆசைப்பட்டேன்.. நான் உறவா நினைச்சது ராஜையும் அந்தக் காட்டையும் மட்டும்தான்.. ஆனா இப்ப நிறைய உறவுகள் கிடைச்சுருச்சு..” என்றவனுக்கு மனதில் அண்ணனின் நினைவுகளும்…
“இங்க வால்பாறை காடும் அப்படித்தான்.. ஏகப்பட்ட மர்மம் இருந்தும் இந்தக் காடு எனக்குக் கொடுத்த மன அமைதியைச் சொன்னாக்கூட யாராலயும் புரிஞ்சுக்க முடியாது. எனக்கு இந்தக் காட்டுல அடிக்கடி சின்னச் சின்ன வித்தியாசமான பூ, இலை, மொட்டெல்லாம் கலெக்ட் பண்ற பழக்கம் உண்டு” என்றபடி அந்த வளையலைக் காட்டினான்.
ரெஸின் என்ற திரவம் கொண்டு அவன் சேகரித்த பூ, இலை, மண், ஆகியன சேர்த்து உருவாக்கப்பெற்ற வளைகள் அவை…
“உன்னை நேசிக்குறதா நான் உணர்ந்தப்பவே இதை செய்துட்டேன்.. உனக்கானது உன் விருப்பத்தோட உன்னை அடையனும்னு இதை பத்திரமா வச்சுருந்தேன்.. உன் விருப்பு எதுவோ?” என்று அவன் அதனை நீட்ட,
விரல்களை குவித்து, அவனையே அதை அணிவித்துவிடும்படி கரம் நீட்டினாள்.
அவன் முகத்தில் சாந்தமான புன்னகை.
அதை அவள் கரத்தில் அணிவித்தவன், “என்னென்னமோ நினைச்சுட்டு இருந்த போலயே? அப்படியெல்லாம் நான் எதுவும் உங்களை நினைக்கலை சுபி.. இந்த உலகம் எவ்வளவு சின்னதுனு வியப்புத்தான் வந்தது. யாரோ செய்த தப்புக்கு சம்மந்தமில்லாத உங்களை ஏன் நான் தண்டிக்கனும்?” அமைதியாய்க் கேட்க,
“ரொம்ப இன்ஸ்பைர் பண்றீங்க” என்றாள்.
“நீங்க அப்படித்தான் என்னைக் காதல்ல விழ வச்சீங்க.. உங்க தைரியத்துலயும் தன்னம்பிக்கைலயும் இன்ஸ்பயர் ஆகித்தான் உங்கமேல எனக்குக் காதலே வந்தது. ஒருமாதிரி.. நான் எனக்காகனு ஆசைப்பட்ட நேசம் நீங்க.. நீயில்லனா செத்துடுவேன் அப்படி இப்படினு டிரமாட்டிக்காலாம் பேச மாட்டேன்.. நிச்சயம் நீங்க இல்லைனா வலிச்சுருக்கும்.. ஆனா கடக்க முயன்றிருப்பேன்.. பிடித்தம் இரண்டு பக்கமும் இருந்தாதான் வாழ்க்கையெனும் பொதுவுக்கானக் கற்பனைகளை விரிக்கும் உரிமை எனக்குண்டு. என் பிடித்தம் என் சார்ந்தது. உங்கப் பிடித்தம் கிடைக்கலைனாகூட என் உணர்வுக்கு சொல்லிப் புரியவைக்க முயன்றிருப்பேன்.. ஆனா பிடித்தத்தை நிறுத்தியிருக்க மாட்டேன்” என்று அவன் கூற,
“அப்றம்?” என்று புரியாமல் கேட்டாள்.
“பிடித்தம் அடைந்தாதான் பிடித்தமா என்ன? நிறைவேறாத ஆசைகள்னு நமக்கு ஒரு பக்கெட் லிஸ்ட் இருக்கும்ல? அப்படியான பிடித்தமா அதை அமைச்சுருப்பேன்.. நீங்க நல்லா இருக்கனும், சந்தோஷமா இருக்கனும்னு உங்களுக்காக வேண்டுறதைப் போன்றதொரு பிடித்தமா அமைச்சுக்க முயன்றிருப்பேன்” என்று கருப்பசாமி கூற,
“ஆச்சரியமா இருக்கு..” என்றாள்.
“எனக்கும்தான்.. உணர்வுகள் எல்லாமே ஆச்சரியங்கள் தானே?” என்று அவன் கேட்க
மெல்ல புன்னகைத்தவள் அவன் சற்றும் எதிர்பாரா விதமாய் அவனை அணைந்திருந்தாள்.
திடுக்கிட்டுப் போய் அவன் அவளைப் பார்க்க, “ரொம்ப பிடிக்குது.. தனியாலாம் வேணாம்.. சேர்ந்தே அமைக்கலாம்..” என்றவள் அவன் முகம் பார்த்து, “வாழ்க்கைப் பாதையை” என்க,
மெல்லிய புன்னகையுடன் அவள் தோள் தட்டிக் கொடுத்தவன், “தேங்ஸ்” என்று கூறினான்.
அங்கு பிரபா, வீட்டின் உள் சென்று சரிபார்த்துவிட்டு வரும்படி பிரம்மவதனியைப் பணிக்க, அவளும் உள்ளே சென்று பார்த்துவிட்டுத் திரும்ப எத்தனித்தாள்.
அவள் முன் வந்து நின்ற ராஜசிம்மன், “பிரம்மா” என்று அழைக்க,
“சார்.. நீங்க என்ன பேச வர்றீங்கனு புரியுது. பட் ஐம் ரியலி சாரி. எனக்கு உங்க மேல எந்த இன்டிரஸ்டும் இல்ல” என்று அமைதியாகக் கூறினாள்.
“ஏன்?” என்று ஒற்றை வார்த்தைக் கேட்டவன் குரலில் சிறுபிள்ளையின் தவிப்பு…
அவள் முன்பு வேண்டாமென்று சொன்னபோது பூதாகரமாகத் தெரியாத வலி, அவள் கிளம்பி சொல்லும் நொடிவரை மாறா அவள் மனம் கண்டு நடுங்கியது.
தான் ஆசைப்பட்ட முதல், கடைசியாகிவிடுமோ? என்று அவன் மனம் அதீத அச்சம் கொண்டு அவனைத் தவிக்கச் செய்தது.
“தெரியலை.. ஃபர்ஸ்ட் இம்பிரஷனே சரியில்லாததாகூட இருக்கலாம். உங்களோட வைஃபா ஒரு லைஃப்ல என்னால அடாப்ட் ஆக முடியும்னு தோன்றலை. ப்ளீஸ் தப்பா நினைக்காதீங்க..” என்று பிரம்மவதனி கூற,
அவனுக்குள் சொல்ல முடியாதவொரு வலி..
“பிரம்மா.. நா.. நான் நீ நினைக்குறப்போல இருக்க மாட்டேன்.. ஐ வில்..” என்று அவன் பேச முற்பட,
“பிரம்மா” என்று வெளியில் பிரபா அழைக்கும் குரல் கேட்டது.
“வரேன் அத்த” என்று குரல் கொடுத்தவள், அவனை நோக்க, “என் பாஸ்ட் எனக்கு அந்தளவு நல்லா அமையலை. என் ப்யூச்சர் உன்கூட நல்லா அமையும்னு தோன்றுது.. எனக்கு வேற என்னப் பேசனும்னு தெரியலை..” என்று கூறும்போது அவன் கட்டுப்பாட்டை மீறி அவன் கண்கள் கலங்கியது.
உணர்வற்ற ஒருவனின் கண்களில் உணர்ச்சி மிகுதி!
“எனக்கும் என்ன சொல்றதுனு தெரியலை சார்” என்று அவள் மெல்லிய குரலில் கூற,
அதற்குமேல் அவள் முன்பு தாக்குப்பிடிக்க இயலாதவனாய், அவன் வெளியேறியிருந்தான்.
பேசி முடித்து தன்னவளோடு வந்த கருப்பசாமி, சிவப்ரியாவுக்கு அறிவுரைகள் கூற, அவனை கேள்வியான பார்வையோடு கலக்கமாய் பார்த்தாள்.
“நம்பிக்கையோட இரு சிவா” என்று அவள் கலக்கம் புரிந்தவனாய் அவன் கூற,
“நம்பிக்கைக்கு என்னிக்குமே பஞ்சமில்ல சார்..” என்று கூறியவள் கலங்கத் துடித்தக் கண்களைக் கட்டுப் படுத்திக் கொண்டு, “சீக்கிரம் வரச் சொல்லுங்க.. திரும்பத் திரும்ப பிரிவைத் தாங்கும் திடம் அவனுக்கில்ல” என்று கூறிவிட்டு வண்டியில் ஏறினாள்.
சுடர் கருப்பசாமியிடம் கூறிவிட்டு ராஜசிம்மனைத் தேட,
“இவன் எங்கப் போனான்?” என்று நண்பனுக்கு அழைப்பு விடுத்தான்.
‘எமர்ஜன்ஸி வர்க்’ என்ற குறுஞ்செய்தி அவனிடமிருந்து வருவதைக் கண்டவன், “ஏதோ வேலையா போயிட்டான் போல.. நீங்க பாத்துப் போயிட்டு வாங்க” என்று கூற,
“ஓகே சார்..” என்று சுடர் கூறினான்.
சுபிக்ஷாவைப் பார்த்தவன், “சீக்கிரம் வரேன்.. கொஞ்சம் நாள் போகட்டும்” என்று சுடரிடம் கூற,
புன்னகையுடன் தங்கையைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு தலையசைத்தான்.
சுபிக்ஷா சுடர் மற்றும் சிவப்ரியா ஒரு வண்டியிலும், ஓட்டுநர் ஏற்பாடு செய்த மற்றொரு வண்டியில் ப்ரீத்தி, பிரம்மவதனி, பிரபா மற்றும் ராமராஜனும் தங்கள் ஊரை நோக்கிப் புறப்பட்டனர்.
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டு, கலங்கி சிவந்து தன்னிடம் யாசகம் வேண்டிய விழிகளை மனதோடு பிரம்மவதனி அசைபோட,
அங்கு கருப்பசாமியின் வீட்டை அடைந்த ராஜசிம்மன் மனபாரம் தாங்க இயலாமல், நடு கூடத்தில் அமர்ந்து, “ஆ…” என்று வாய்விட்டுக் கத்திக் கதறினான்…

