Loading

அத்தியாயம் 10

 

திருப்பதியின் வீட்டில் இருந்து கிளம்பும் முன்னர் கனியிடம் மகனின் புகைப்படத்தைக் கைப்பேசியில் காட்டினார் ராஜா.

கணவனின் அருகே அமர்ந்திருந்த அம்பிகை, “இதுதான் என்னோட மகன். சென்னையில வேலை பார்க்கிறான். எண்பதாயிரம் சம்பளம்!” என வருங்கால மருமகளிற்கு அவனைப் பற்றிய முகவுரையைக் கொடுத்தார்.

வெள்ளை நிற சட்டை, நீல வண்ண ஜீன்ஸில், கருப்பு கண்ணாடி அணிந்து பேண்ட் பாக்கெட்டிற்குள் கைகளை நுழைத்தபடி அவன் நின்றிருந்த நிழல்படம், திரையில் மிளிரும் நாயகர்களிற்கு ஈடானதாய் தோன்றிட, “இவங்க ரொம்ப நல்லா கலரா உயரமா இருக்காங்க‌. ஆனா நான் அப்படி இல்லையே.? கொஞ்சம் கலர் கம்மி வேற. உயரமும் குறைவு. சரியாவும் படிக்கல. என்னை எப்படி அவங்களுக்குப் பிடிக்கும்?” என எதார்த்தமாய் வினவினாள்.

காலையில்‌ அவனை ஒருமுறை நேரில் பார்த்து இருந்ததால், தங்களுக்கு இடையேயான வேறுபாடை அவளால் துல்லியமாய் உணர முடிந்தது‌.

“ஒருத்தரோட தோற்றத்தை வச்சு, அவங்களுக்கான மரியாதையைத் தர்றவன் இல்லம்மா என்னோட மகன்‌. பயப்படாத! அப்பப்ப கோபத்துல கொஞ்சம் கத்துவானே தவிர, மத்தபடி நல்லவன் தான்‌. எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவன்‌. நல்லா பார்த்துக்குவான் உன்னை!”எனத் தந்தையானவர் மகனிற்குச் சான்றிதழ் வழங்கிட,

“ரொம்ப கோபம் வருமா‌? என்னோட சித்திக்கு மேல சத்தம் போடுவாங்களா.?”

“அப்படி எல்லாம் இல்ல. காரணம் இல்லாம‌ கோபப்பட மாட்டான்! சம்மதமா உனக்கு?‌ என்னோட மகனைக் கல்யாணம் செஞ்சுக்கிறியா?” என்றிட, தந்தையையும் சிற்றன்னையையும் ஒருமுறைப் பார்த்து விட்டு சம்மதமாய் தலையை அசைத்தாள்.

*

படுக்கையில் படுத்தபடி அருகே இருந்த கணவனைப் பார்த்து இருந்தாள் சஞ்சனா. அவனோ கையில் புத்தகத்துடன் அமர்ந்து இருந்தான்.

“விஜி, தூங்கலயா?”

“நீ தூங்கு, சஞ்சு.”

“நான் உன்னைக் கேட்டேன்.”

“படிக்க வேண்டியது இருக்கு.”

“வீட்டுல இருக்கிற நேரமாவது என்கிட்ட பேசலாம்ல? அப்பவும் படிக்கிறேன்னு இப்படிப் புக்கைத் தூக்கி வச்சா, என்ன அர்த்தம்?”

“என்னோட வொய்ஃபுக்குப் பெட்டரான லைஃப் கொடுக்கிறதுக்கான பிரிபரேஷன்.”

“ஆமா, இதை ஒன்னு சொல்லு!” என அவள் முகத்தைச் சுருக்கிக் கொள்ள, மெலிதாய்ப் புன்னகைத்தான்.

மணி, இரவு பதினொன்றை நெருங்கிக் கொண்டு இருந்தது. கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவன், இதற்கு மேலும் விழித்திருந்தால் காலையில் எழ முடியாது என விளக்கை அணைத்து விட்டுப் படுக்கையில் விழுந்தான்.

அவனை நெருங்கிப் படுத்தாள் சஞ்சனா. ஆடவனும் அரவணைத்துக் கொண்டான்.

“விஜி.”

“ம்ம்.”

“வீட்டுல எனக்கு ரொம்ப போர் அடிக்கிது. நாளைக்கு எங்கேயாவது வெளிய கூட்டிட்டுப் போறியா?”

“ஈவ்னிங் உலகம்மன் கோயிலுக்குப் போகலாமா?”

“கோயில் குளம்னு போறதுக்கு நமக்கு என்ன வயசா ஆகிடுச்சு?”

“வயசு ஒன்னும் ஆகல. புதுசா கல்யாணம் ஆகி இருக்கு. போய் சாமிக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வரலாம்.”

“ம்ம்.. அப்புறம்?”

“அப்படியே வெளிய சாப்பிடலாம்.”

“வேற.?”

“வேற என்ன?”

“நாளைக்கு மறுநாள் குற்றாலம் போகலாமா.?”

“அங்க போனா, பாதி நாள் ஓடிடும். என்னால லீவ் போட முடியாது சஞ்சு.”

“ஏன்?”

“லீவ் போட்டா, எப்படி சேலரி கிடைக்கும்? சேலரி இல்லாம, உன்னை எப்படிப் பார்த்துக்க முடியும்?”

“நான் பணம் வச்சிருக்கேன்.”

அவன் முகம் நிமிர்த்தி கேள்வியாய் பார்க்க, “என்னோட சேலரி. உனக்குத் தெரியும் தான, நான் முதல்ல வேலைக்குப் போயிக்கிட்டு இருந்தேன். கல்யாணம் நிச்சயம் ஆனதும் சென்னைக்குப் போயிடுவேன்னு, அப்பா தான் ரிலீவ் ஆகச் சொல்லிட்டாரு.”

“ம்ம் ஓகே.. பட் அது உன் பணமாச்சே.?”

“அதுனால என்ன.?”

“கல்யாணம் ஆன நாலாவது நாளே பொண்டாட்டிக்கிட்ட காசு வாங்கி செலவு பண்ணா நல்லாவா இருக்கும்‌?”

“என்ன, கௌரவம் தடுக்குதா?”

“ஹேய் அதெல்லாம் இல்ல. அவசியத்துக்காக வாங்கலாம். ஆடம்பரத்துக்காக வாங்குறது தப்பு. கட்டாயம் நாம குற்றாலம் போயே ஆகணும்னு ஒன்னும் இல்லையே?”

“என்னோட ஆசைக்காக ப்ளீஸ்..”

“சரி போகலாம். ஆனா அடுத்த வாரம். தினமும் வெளிய போயிட்டு வர்றதுனா செலவு எகிறிடும். சின்னச் சின்னதா பிளான் பண்ணிக்கலாம்.”

“ம்ம். ஹனிமூன் போறதைப் பத்தி எதுவும் ஐடியா வச்சிருக்கியா.?”

“இப்ப இருக்கிற சுச்சுவேஷன்ல முடியாது சஞ்சு. நாலஞ்சு மாசம் போகட்டும். என்ன.?”

“நாலஞ்சு மாசமா? அதுக்குப் பேரு ஹனிமூன் இல்ல. கல்யாணம் ஆன புதுசுல போகணும்.”

“அதுக்கு எல்லாம் முன்னாடியே பிரிபர் பண்ணி இருக்கணும். நம்ம மேரேஜே சடனா நடந்திடுச்சு. இருக்குற பிரச்சனையில ஹனிமூன் வேறயா?”

“என்ன விஜி?”

“நான் முடியாதுனு சொல்லல. கொஞ்ச நாள் ஆகட்டும்னு தான் சொல்லுறேன். நாமளா கல்யாணம் செஞ்சுக்கிட்டு வந்திருக்கோம். லைஃப் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும்.‌ சுச்சுவேஷனை அக்செப்ட் பண்ணிக்க முயற்சி செய், சஞ்சுமா.” என்று பொறுமையாகவே எடுத்துரைத்தான் விஜயன்.

அதற்கு மேலும் அவளிற்கு அப்பேச்சைத் தொடர விருப்பம் இல்லாததால், “சரி.” என அமைதி ஆனாள்.

“என்ன குரல் டல் ஆகிடுச்சு. கோபமா.?”

“ஆமானு சொன்னா என்ன பண்ணுவ?”

“நீயா சமாதானம் ஆகுற வரை, வெயிட் பண்ண வேண்டியது தான்!”

“விஜி.?” என அவள் கணவனின் மார்பில் அடிக்க, “எனக்குச் சமாதானம் செய்யத் தெரியாது. தெரியாத ஒன்னை எப்படி செய்ய முடியும், சொல்லு? முன் அனுபவம் வேற இல்ல.”

“ஓ.. சாருக்கு முன் அனுபவம் எல்லாம் வேணுமோ?” என்றவள் மேலும் அடிக்க, “ஹேய்.. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.” எனக் கைப்பற்றித் தடுத்தான்.

“விஜி நல்லவன். என்னை நல்லா பார்த்துக்குவான்னு என்னோட பேரண்ட்ஸ்கிட்ட சொல்லீட்டு வந்தேன். நீ என்னனா, இப்படி எல்லாம் பேசுற?”

“நிஜம் எது, கேலி எதுனு புரிஞ்சுக்காம பேசுனா எப்படி.?”

“நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கும் போது, நீ கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்க.?”

“சரி சரி, தப்புதான். ஸாரி!” என அவன் சமாதானக் கொடியைப் பறக்கவிட, சஞ்சனாவும் இயல்பிற்கு மீண்டாள்.

மனைவியைக் கை வளைவில் வைத்து அணைத்து, “தூங்கு!” எனத் தட்டிக் கொடுத்தவனது தூக்கமோ தொலை தூரம் சென்று இருந்தது.

காதலிப்பது வேறு, கரம் பற்றி வாழ்தல் என்பது வேறு. அதை ஆடவன் நன்றாய் அறிந்திருக்க, பாவைக்குத்தான் அப்புரிதல் இல்லாமல் போனது.

அவர்களின் காதலிற்கு ஒன்றரை மாத வயதுதான். சொல்லப் போனால், இருவருக்குமான புரிதலின் தொடக்கப் புள்ளியையே இன்னும் தொடாது இருந்தனர்.

அவரவர் குணத்தின் காரணமாய் சட்டென்று சண்டைகள் வருவதும், புதிதாய் மணமான மயக்கத்தால் அது உடனே சமாதானம் ஆவதுமாக தொடர்ந்தது.

இருவருக்குமே மற்றவரிடம் ஆசை உண்டு, பிடித்தமும் உண்டு. ஒருவேளை அது இளமை உணர்வினால் சுரக்கும் ஹார்மோன்களின் உந்துதலாய் கூட இருக்கலாம்.

ஆனால் காதல் என்பது பிடித்தமும் ஆசையும் மட்டும் அல்லவே?

புரிதலையும் விட்டுக் கொடுத்தலையும் விதைத்து, குறைகளையும் வலிகளையும் களை எடுத்து, அன்பை விளைய வைத்து அதனை விலையின்றி வழங்குவதாகும். அந்த அன்பானது ஒவ்வொரு தருணத்திலும் சிறிது சிறிதாய் ஆழமாய் ஊடுருவி, மெல்ல மெல்ல காதலாய் அரங்கேறும்.

தந்தையின் ஆலோசனையை ஏற்காததால், ஐந்தாண்டு காலமாகவே தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் விஜயன், இந்த இடைவெளியில் வாழ்வின் நெளிவு சுளிவுகள் நன்றாகவே கற்றிருந்தான்‌. அதனால், திருமண வாழ்வையும் துணைவியையும் பக்குவமாகக் கையாள முற்பட்டான்.

ஆனால் இல்வாழ்க்கை யாதென எதுவுமே அறிந்திடாமல், இளமையின் மயக்கத்தில் திருமண பந்தத்திற்குள் அடியெடுத்து வைத்து விட்டாள் சஞ்சனா‌.

வெளி உலகை அறிந்திடாது, பெற்றோரின் பாதுகாப்பில் வீட்டிற்குள் ஆட்சி செய்யும் கூண்டுக் கிளியாய் வளர்ந்தவள். தற்போது அவள் காணும் மனிதர்கள் அனைவரும் புதிது, விஜயன் உட்பட.

ஆடவனின் மீதான பிடித்தத்தால் அவனை நன்றாய் அறிந்திருப்பதைப் போன்ற பிம்பத்தை, பாவையின் மனம் உருவாக்கி வைத்திருந்தது.

‘அவள் இன்னும் பக்குவப்படாதவள். மண வாழ்வின் புரிதல் இல்லாதவள்!’ என சஞ்சனாவைக் கரம் பற்றிய மறுநாளே உணர்ந்து கொண்டான் விஜயன்.

நடந்த சிறுசிறு நிகழ்வுகள், அதனை அவனிற்கு சொல்லி விட்டன.

திருமணமான மறுநாள் வழக்கமாய் ஆறரைக்கு விழிப்பவன், அன்று ஆறு மணிக்கே விழித்து விட்டான்.

முதலில் தங்கி இருந்த இடத்தில் இருந்து பணி செய்யும் உணவகத்திற்கு பத்து நிமிட நடைப் பயணம் தான். ஆனால் தற்போது அப்படி இல்லை. வீட்டில் இருந்து நெடுந்தூரம். நிச்சயம் வாகனப் பயணம் தான் மேற்கொள்ள வேண்டும்.

கல்லூரிக் காலத்தில் தந்தை வாங்கித் தந்த இரு சக்கர வாகனத்தை, சுயமரியாதையின் காரணமாக இவனே தான் வேண்டாம் எனத் திருப்பிக் கொடுத்து விட்டான். அன்றில் இருந்து பயணம் முழுவதும், அரசு பேருந்தில் தான்.

வேறு பணிகள் எதுவும் இல்லாததால், பத்து நிமிடங்களில் தயாராகி விட்டான்.

உறங்கிக் கொண்டிருந்த மனைவியை எழுப்பிட, அவளோ அசைந்து கொடுப்பது போல் தெரியவில்லை.

‘நல்ல வேளை லைஃபை உடனே ஸ்டார்ட் பண்ண வேணாம். கொஞ்ச நாள் போகட்டும்னு தள்ளிப் போட்டோம். இப்பவே இப்படித் தூங்குறா. நைட் நான் எதுவும் செஞ்சிருந்தா, எழுந்திருக்கவே நாலு நாள் ஆகும் போலயே?’ என எண்ணியவனிற்குச் சிரிப்பு வந்திட, “சஞ்சு!”‌ என்று மீண்டும் கன்னத்தில் தட்டினான்.

“தூங்குறப்ப எழுப்பாதனு எத்தனை தடவை சொல்லி‌ இருக்கேன்மா?” என விஜயனின் கரத்தைத் தட்டிவிட, “அதுசரி. இது உன்னோட அம்மா வீடு இல்லம்மா. புருஷனோட பெட்!” என்று காதோரம் குனிந்து உரைத்தான்.

அவள் சட்டென்று விழித்துப் பார்த்திட, “என்ன, தூக்கம் தெளிஞ்சிடுச்சா.?”

“இல்ல. எங்க போறோம்? இவ்வளவு சீக்கிரம் ரெடியாகி நிக்கிற.?”

“போறோம் இல்ல. போறேன். எனக்குக் காலையில ஏழு மணிக்கு ஹோட்டல்ல வேலை. இங்க இருந்து இப்ப கிளம்பினா தான், அங்க போக சரியா இருக்கும்.”

“என்னைத் தனியா விட்டுட்டுப் போறியா?”

“தனியா எங்க? அக்கம் பக்கத்துல ஆளுங்க இருக்காங்க. என்னதான் பேச மாட்டாருனாலும் வீட்டுல அப்பா இருக்காரு. கொஞ்ச நேரத்துல வேலைப் பார்க்கிற அம்மா வந்துடுவாங்க.”

“ஆனா, இவங்க எல்லாரும் எனக்குப் பழக்கம் இல்லாதவங்க.”

“அப்ப பழகு. அப்பா பேச மாட்டாரு‌. அவருக்கிட்ட வாய்ப்பு இல்ல. ஆனா மத்தவங்க இருக்காங்களே?”

“திடீர்னு பழகுனு சொன்னா எப்படி.?”

“இதுல என்ன இருக்கு? ஸ்கூல், காலேஜ், வொர்க்குக்குனு போன சமயம் அங்க இருக்கிறவங்கக்கிட்ட பழகி இருப்ப தான?”

“விஜி.?” என அவள் பாவமாய் பார்க்க, பணிக்கு நேரம் ஆகிக் கொண்டிருப்பதை மூளை அறிவுறுத்தியது.

“நீ சின்னக் குழந்தை இல்ல. அதோட, இது வழி தெரியாத காடும் இல்ல. வீட்டுல இருக்கிறதுல என்ன பிரச்சனை உனக்கு‌?”

“நமக்கு நேத்து தான் மேரேஜ் ஆகி இருக்கு. இன்னைக்கு, விட்டுட்டுப் போறேன்ற.?”

“ஹேய், வீட்டுல தான விட்டுட்டுப் போறேன்? என்னமோ உன்னையே விட்டுட்டுப் போற‌ மாதிரி பேசுற.?”

“இன்னைக்கு லீவ் போட முடியாதா உன்னால?”

“நான் பார்க்கிறதே பார்ட் டைம் ஜாப் மாதிரி தான். இந்த வசதியும், சலுகையும், சம்பளமும் வேற இடத்துல கிடைக்கிறது கஷ்டம். ஏற்கனவே ரெண்டு நாள் லீவ் போட்டுட்டேன் சஞ்சுமா. இதுக்கு மேலயும் லீவ் போட்டா, ஹோட்டலோட ஓனர் இனி நீ வேலைக்கு வர வேணாம்னு அப்படியே அனுப்பிடுவாரு‌.”

“நீ உன்னோட சுச்சுவேஷனை சொல்லுற. என்னோட இடத்துல இருந்து யோசிச்சுப் பாரேன்.?”

“புரியாம இல்ல. ஆனாலும் நீ, எனக்காக கொஞ்சம் விட்டுக் கொடுக்கப் பாரேன்? ஏன், உன்னோட வீட்டுல நீ தனியா இருந்தது இல்லயா?”

“என்னடா இப்படிப் பேசுற.?”

“எதார்த்தத்தைப் பேசுறேன்.‌ தூக்கம் தெளியலனு சொன்ன இல்ல? பேசாம தூங்கு. தோணும் பொழுது எழுந்திரி. உன் விருப்பம் தான். யாரும் உன்னை இங்க டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க. ஏதாவதுனா கால் பண்ணு. டேக்கேர்.” என்று விடைபெற, “விஜி ப்ளீஸ்..” எனச் சிறுபிள்ளை போல் ஏக்கத்துடன் நோக்கினாள் அவள்.

அதில் மனம் கனத்திட, “சரி படு!” என்று அருகே அமர்ந்து தட்டிக் கொடுத்து போராடி உறங்க வைத்தவன், பத்து நிமிடங்கள் தாமதமாகவே கிளம்பிச் சென்றான்‌.

அன்றைய தினத்தின் அந்தப் போராட்டம் அத்தோடு நிற்கவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்