Loading

அத்தியாயம் 11

 

காலையில் எழுந்ததும் படுக்கையிலேயே தேநீர் அருந்தும் பழக்கம் கொண்ட சஞ்சனா, ஒன்பது மணிக்கு விழித்துவிட்டு அத்தேநீர் கிடைக்காமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்.

‘பக்கத்துல இருப்பான்னு நினைச்சா, தூங்கினதும் கிளம்பிப் போயிட்டானே?’ என்று கணவனின்‌ மீது லேசாய் சினம் துளிர்த்தது‌. உடனே அவனிற்கு அழைத்து விட்டாள்.

மறுபுறம் பேசியவன், “என்ன சஞ்சுமா‌?”

“எங்கப் போன நீ?”

“வேலைக்குப் போறேன்னு, உன்கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன்?”

“என்கிட்ட ஒன்னும் சொல்லல. நான் தூங்குறப்ப, நீயா கிளம்பிப் போயிட்ட.”

“சரி சரி, தப்புதான். வேலையா இருக்கேன், அப்புறம் பேசட்டுமா.?”

“விஜி, எனக்கு டீ குடிக்கணும். என்ன செய்ய.?”

“ஹோ.. ஸாரி சஞ்சுமா. நம்ம ரூம்ல திங்க்ஸ் எதுவும் இல்ல. சமையல்கட்டுல தேவையானதைச் செஞ்சுக்கலாம் தான். ஆனா அப்பா, அங்க தங்கிக்கலாம்னு மட்டும் தான சொல்லி இருக்காரு? அதுனால நாம கிச்சனை யூஸ் பண்ணுறது நல்லா இருக்காது‌. இன்னைக்கு ஒருநாள் மட்டும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ. நான் நைட்டே திங்க்ஸ் எல்லாம் அரேஞ்ச் பண்ணிடுறேன்.”

“அது ஓகே! பட், இப்ப எனக்கு டீயோ காஃபியோ வேணுமே‌?”

“அலமாரியில பேஸ்ட், பிரஷ், சோப், டவல் எல்லாம் இருக்கு. ரெடியாகு. தெரு முனையில டீக்கடை இருக்கு. நீயே கொஞ்சம் போய் வாங்கிக் குடிச்சிக்கோயேன்.”

ஆடவனின் யோசனையில் அவளிற்கு லேசாய் சினம் எட்டிப் பார்க்க, “விஜி விளையாடுறியா.?”

“விளையாடுற அளவுக்கு நான் ஃபிரீயா இல்ல சஞ்சுமா. ஹோட்டல்ல வேலை போயிக்கிட்டு இருக்கு. இதுவே ஓனர்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு வந்து தான் பேசுறேன். ப்ளீஸ் கோபப்படாத.

வீட்டுல இருக்கிற உன்னோட தேவையைப் பத்தி யோசிக்காம, நான் பாட்டுக்கு வேலைக்கு கிளம்பி வந்தது தப்புதான். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. பத்தரை மணிக்கு ஒர்க் முடிஞ்சிடும். நான் வந்து பார்க்கிறேன் உன்னை!” எனச் சமாதானம் உரைத்துப் பேச்சை முடித்தான்.

சஞ்சனாவிற்கும் வேறு வழி இருக்கவில்லை. எழுந்து தயாராக, அரை மணி நேரம் ஆனது.

“என்னால கடையில போய் எல்லாம் குடிக்க முடியாது. நீ, வரும் போது வாங்கிட்டு வா.” என்று அவனிற்குக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள்.

பத்து நிமிட இடைவெளியில், “சரி, டிஃபனாவது போய் சாப்பிடு. உன்னோட ஹேண்ட் பேக்ல பணம் வச்சிருக்கேன்.” எனப் பதில்‌ வந்தது.

இம்முறை மறுதகவல் எதையும் அனுப்பவில்லை அவள். குடும்பத்துடனோ, நண்பர்கள் குழுவுடனோ வெளியில் சென்று பழக்கப் பட்டவளிற்கு, விஜயனின் யோசனை அபத்தமாகவே தோன்றியது.

‘எங்க வீட்டுல என்னை, பொருள் வாங்குறதுக்கு கூட கடைக்கு அனுப்பினது இல்ல. அப்பா தான் அதெல்லாம் செய்வாரு. அதுமாதிரி, இவன் எனக்கு வாங்கிட்டு வந்து கொடுத்தா ஆகாதா.?’ எனச் சிந்தித்தபடி அமர்ந்து இருந்தாள்.

பத்தரைக்கு அவனிடம் இருந்து அழைப்பு வந்தது.

“என்ன விஜி.?”

“சாப்பிட்டியா சஞ்சுமா?”

“இன்னும் இல்ல.”

“ஏன்?”

அவள் பதில் உரைக்காமல் இருக்க, ஒரு பெருமூச்சு விட்டுக் கைப்பேசியை அணைத்தான்.

நூலக பொறுப்பாளரிடம் ஒரு மணி நேரம் தாமதமாக வருவதாய் உரைத்து அனுமதி பெற்றுக் கொண்டு, மனைவிக்கான தேநீர் மற்றும் உணவுடன் வீடு வந்து சேர்ந்தான்.

பசியோடு இருந்தவளிற்கு அவனிடம் வாதம் செய்வது தற்போது நேர விரயம் எனத் தோன்றியதால், உணவை உண்பதில் கவனமானாள்.

மதியத்திற்கும் உணவை வாங்கிக் கொடுத்துவிட்டுக் கிளம்பிச் சென்றான் விஜயன்.

இரவு வீடு திரும்பும் பொழுது அவசியத் தேவைக்கென, சமையல் பாத்திரங்கள் சிலவற்றோடு மளிகைப் பொருட்களும் வாங்கி வந்தான்.

இதற்கு எல்லாம் அவசியமே இல்லை என்பது போல், “எனக்குச் சமைக்கத் தெரியாது விஜி. எதுக்கு இப்ப இந்த திங்க்ஸ் எல்லாம்.?” என அதிர வைத்தாள் மனையாள்.

“தெரியலேனா என்ன, கத்துக்கலாம் சஞ்சுமா. நானும் ஹெல்ப் பண்ணுறேன்.”

“ஹேய். இந்த அடுப்புல எல்லாம் நின்னு சமைக்கிறது ரொம்ப கஷ்டம்பா.”

“அடடா!‌‌ அப்புறம் எப்படி சாப்பிடுறதாம்?”

“ஹோட்டல்ல வாங்கிக்கலாம்‌. இல்லேனா சமைக்க ஆள் வச்சுக்கலாம்.”

மெலிதாய்ச் சிரித்தவன், “மேடம் கொஞ்சம் ரியாலிட்டிக்கு வாங்க. நீங்க இப்ப டாடிஸ் லிட்டில் பிரின்சஸ் இல்ல. ஒரு குடும்பஸ்திரி. என்னோட மனைவி. வாழ்க்கை முழுசும் ஹோட்டல்ல வாங்கி சாப்பிட முடியாது. வேலைக்கு ஆள் வைக்கிற அளவுக்கு நான் ஒன்னும் தாராளமா சம்பாதிக்கல.”

“அட போடா! எல்லாத்துக்கும் ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்க!” என அவள் படுத்துக் கொள்ள, விஜயன் அவசியத்தின் காரணமாய் மீண்டும் வெளியில் கிளம்பி விட்டான்.

சொன்னது போலவே சஞ்சனா எதையும் சமைப்பதற்கு முற்படவில்லை.

காலை நேர சுடு பானங்கள் தயாரிப்பது, பிரட்களை டோஸ்ட் செய்வது, தோசை ஊற்றுவது, ஆயத்த சப்பாத்திகளை சூடேற்றுவது, நூடுல்ஸ், ஆம்லெட், சோறு, பருப்பு, ரசம், கலவை சாதங்கள் தயார் செய்வது, கடையில் வாங்கிய வத்தக்குழம்பு, தொக்கு வகைகளை அதற்கு துணையாக பயன்படுத்துவது போன்ற சிறு சிறு சமையல் பணிகளை விஜயன் தான் செய்தான்.

பிடித்திருந்தால் கணவனோடு இணைந்து அவளும் உண்டாள்.

“இல்ல எனக்கு வேண்டாம், பிடிக்கல.” என உரைக்கும் தருணங்களில் வேண்டியதைக் கேட்டு வெளியில் வாங்கித் தந்தான்.

இதுவே தான் ஒவ்வொரு நாளும் தொடர்ந்தது. சஞ்சனாவுடனான வாழ்வு அத்தனை எளிதாய் இருக்காது என விஜயனின் சிந்தையானது சாதக பாதகங்களை எடுத்துரைத்து அவ்வப்போது ஆரூடம் சொல்லத் தொடங்கியது.

எனினும் மணமான பின்னர் தற்போது என்ன செய்திட இயலும்? வளைந்து கொடுத்து இணைந்து வாழ்தலைத் தவிர. அதற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ளும் பணியில் இறங்கினான் விஜயன்.

*

முதலிரவு அறைக்குள் காலடி எடுத்து வைத்தான் நவநீதன். திரைப்படங்களில் வருவது போல் புது மணப்பெண் கையில் பால் செம்போடு உள்ளே வரும் காட்சி எல்லாம் இல்லை.

“உள்ள போய் உட்கார்ந்து இருமா.‌ அவன்‌ வருவான்.” எனக் கனியை முன்னரே அறைக்குள் அனுப்பி வைத்து விட்டார் செல்வாம்பிகை‌.

சிறு பெண், திடீரென முடிவான திருமணம், மூன்று தினங்களாய் இருந்த பரபரப்பு, அத்தோடு காலை முதல் சுப நிகழ்வில் செய்து‌ வந்த வரிசையான சடங்குகள்‌ என அவளின் சிந்தை எந்த அளவிற்குக் குழப்பத்தில் இருக்கும் என்று மூத்தவர் உணர்ந்தே இருந்தார்.

ஆகையால் மருமகளிற்கு எவ்வித அசௌகர்யத்தையும் கொடுக்காது அரை வயிறு இரவு உணவோடு‌, சிறிது பாலை மட்டும் அருந்த கொடுத்து, உறவுப் பெண்கள் எவரையும் விடாது, தானே தயார் செய்து அறைக்குள் அனுப்பினார்.

அத்தோடு நவனும் தன் பங்கிற்கு, “சும்மா, அது இதுனு கசகசனு செஞ்சிட்டு இருக்காதீங்க ம்மா. இது ஜெஸ்ட் ஒரு மேரேஜ் தான். ஊர்த் திருவிழா இல்ல! சிம்பிளா ரெடி பண்ணுங்க. முக்கியமா சொந்தக்காரங்களைப் பக்கத்துல வச்சுக்காதீங்க. வந்தது போனதுனு எதையாவது பேசி நம்ம மூடையே ஸ்பாயில் பண்ணி விட்டுடுவாங்க!” என அன்னையிடம் உரைத்து இருந்தான்.

மற்ற விஷயங்களில் எல்லாம் எதிரும் புதிருமாய் இருந்தாலும், தந்தையும் தனயனும் திருமண விவகாரத்தில் ஒத்துப் போய் விட்டனர்.

“சின்னப் பிள்ளமா. நீங்க ஏதாவது சொல்லப் போயி அது பயந்துடப் போகுது. உங்க அறிவுரையையும் அனுபவத்தையும் பிள்ளைக்கிட்டத் திணிக்காம, சும்மா விடுங்க. அதுவே வாழ்க்கையைத் தானா கத்துக்கும்!” என்று ராஜாவும் மனைவி‌ மற்றும் கனியின் சிற்றன்னையிடம் சொல்லி இருந்தார்.

அதனால் சற்று கூடுதல் கவனத்துடனேயே நடந்து கொண்டார் அம்பிகை.

எவரும் அற்ற‌ நிசப்தமான அறையும், அலங்காரம் செய்யப்பட்ட படுக்கையும் ஒருவிதமான படபடப்பையும் அச்சத்தையும் அத்தோடு ஆர்வத்தையும் தர, என்ன செய்வது என்று புரியாமல் ஓரமாய் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் கனி.

திருமண ஏற்பாடுகள் என்று காளீஸ்வரியும் திருப்பதியும் நில்லாது ஓட, வீட்டை முழுமையாய் கவனித்தது அவள் தான். மூன்று தினங்களாய் உறக்கம் கிட்டவில்லை.

தற்போதான தனிமையும் அமைதியும் உடலை ஓயச் செய்து இமைகளையும் மூட வைக்க, அதற்குத் தடை விதிக்கும் விதமாய் உள்ளே வந்தான் நவன்.

சட்டென்று எழுந்து நின்றாள் பாவை.

திருமணத்திற்கு என்று மாப்பிள்ளை வீட்டார் தேர்வு செய்திருந்த இருபத்து ஐந்தாயிரம் மதிப்பான புடவை அவளின் உடலோடு ஒட்டாமல், விரைத்துக் கொண்டு நின்றது. உடைக்குள் பாவையின் தேகத்தைத் தேடிதான் கண்டுபிடிக்க வேண்டும் போல். திருமண மண்டபத்திலேயே அதைக் கவனித்து இருந்தான் ஆடவன்.

“ஹேய்.. ரிலாக்ஸ்.. எதுக்கு இவ்வளவு அவசரமா எழுந்திரிக்கிற.?” என அவளை நிதானப்படுத்த முயன்றவன், அறையில் இருந்த இரண்டு ஜன்னல்களையும் திறந்து வைத்தான்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஊர் என்பதால், இரவு நேர தென்றல் குளிர்ச்சியோடு உட்புகுந்தது. உள்ளிருந்த இறுக்கம் சற்றுத் தளர்ந்தது போலான உணர்வு.

“ம்ம்.. ஆசைக்கனி! ரைட்.?” என்றவாறு அவளின் புறம் திரும்ப, ‘ஆம்’ என்பதாய்த் தலையை அசைத்தாள்.

“பேரு நல்லா இருக்கு.”

மெலிதான புன்னகை அவளின் இதழ்களில்.

“உங்க பேரும் நல்லா இருக்கு, நவநீதன். கிருஷ்ணனோட பேர் இல்ல.?”

தனது உரையாடலிற்கு சட்டென்று அவளிடம் இருந்து இலகுவான, அதேநேரம் சுவாரஸ்யமான எதிர்வினை வரும் என நவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

முன்னர் தெருக்கார பெண்ணிடம் பேசும் பொழுது அவனின் கவனத்தை ஈர்த்தது போலவே, தற்போது வியக்க வைத்தாள் கனி.

“எஸ். உனக்குக் கிருஷ்ணன்னா பிடிக்குமா?”

“ஆமா. உங்களுக்குத் தெரியுமே எங்க வீட்டுப் பக்கத்துல கோயில் இருக்கிறது‌. அன்னைக்குக் கூட வழி காட்டுனேனே. அங்க சனிக்கிழமை சனிக்கிழமை பஜனை நடக்கும். நான் சின்னப் பிள்ளையில அங்க இருக்கிற ஆளுங்களோட சேர்ந்து பாட்டு பாடுவேன். உள்ள கிருஷ்ணன் சிலை குட்டியா, அழகா இருக்கும்.”

“பாட்டுப் பாடுவியா? என்ன பாட்டு.?”

“எல்லா பாட்டும். கிருஷ்ணனோடது.”

“இப்பவும் பாடுவியா?”

“ம்ம்.. ஆனா சித்திதான் அனுப்ப மாட்டாங்க.”

“பாட்டு, அப்புறம் வேற என்ன தெரியும் உனக்கு.?”

“வேறனா?”

“வேறனா?” என அவனும் சிந்திக்க, ‘டேய் அவ உன் பொண்டாட்டிடா. நீ என்ன சின்னக் குழந்தைக்கிட்டப் பேசுற மாதிரி பேசிக்கிட்டு இருக்க.?’ என்று மூளை எடுத்துரைத்தது.

‘ஆமா இல்ல. பொண்டாட்டி தான். ஆனா சைஸையும் முகத்தையும் பார்த்தா, சின்னப்பிள்ள மாதிரி இல்ல தோணுது?’ என மனம் எண்ணிட, திடீரென வீசிய காற்றின் வேகத்தில் பாதி.. ஜன்னல் கம்பிகளின் உள்ளே நுழைந்து, பாவையின் முடிந்திடாத முந்தானையைப் பறக்க விட்டது.

அதனை இழுத்துப் பிடித்துச் சுருட்டி இடையில் சொருக முயன்றாள் கனி. ஆனால் அவளின் முயற்சி வெற்றி கொள்ளாமல் மீண்டும் விலகி வந்து, நவனின் கரத்தை உரசிச் சென்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்