Loading

28

 

வண்டியில், ராஜசிம்மன், கருப்பசாமி மற்றும் அபூர்வன் பயணித்துக் கொண்டிருந்தனர்.

 

அந்த ஆழ்ந்த அமைதியைக் கலைத்த அபூர்வன், “கருப்பு..” என்று அழைக்க, கருப்பசாமி அவனைப் பார்த்தான்.

 

கருப்பசாமியும் அபூர்வனும் இன்னும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளவில்லை. அதற்கான அவகாசம் அமையவில்லை. இருந்தும், அவர்கள் உள்ளம் ரத்த பாசத்தை உணர்ந்து, சங்கமித்துத்தான் இருந்தது.

 

“உனக்குக் கண்ணு நல்லாத் தெரியும்தானே?” என்று அபூர்வன் கேட்ட கேள்வி மற்ற இருவருக்கும் குழப்பம் கொடுத்தது.

 

“உன்னைத்தானேடா கேட்குறேன்?” என்று அபூர்வன் கேட்க,

 

“தெரியும்.. ஏன்?” என்றான்.

 

“சுபிக்ஷா நீ உள்ளே போனதிலிருந்து கிளம்பும்வரை உன்னைத்தான் பார்த்துட்டு இருந்தா.. நோட் பண்ணலையா?” என்று அபூர்வன் கேட்டதுதான் தாமதம், வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவன் சட்டென்று அதை நிறுத்தினான்.

 

அந்த விசையில முன்னே வந்து இருக்கையில் மோதிக் கொண்ட ராஜசிம்மன், “பர*சி… மலைப்பாதையில போறோம்டா.. உன் இஷ்டத்துக்கு நிறுத்துற” என்று அவன் தோளில் அடிக்க,

 

அபூர்வன் முகத்தில் குறுஞ்சிரிப்பு…

 

“எ..என்ன சொன்ன?” என்று அபூர்வனிடம் கருப்பசாமி கேட்க,

 

“சுபிக்ஷா உன்னையே பார்த்துட்டு இருந்தான்னு சொன்னேன்” என்றான்.

 

“அப்படியா? நிஜமாவா?” என்று அவன் கேட்க,

 

“யார்ரா நீ? அந்த பொண்ணு உன்னைப் பார்த்தத நீ நோட் பண்ணலையா?” என்று கேட்டான்.

 

சோகத்துடன் இடவலமாய்த் தலையசைத்துக் கொண்டான், கருப்பு.

 

ஆம்! உண்மையில் அவள் அவனைப் பார்த்ததை அவன் பார்க்கவில்லை.. உணரும் மனநிலையிலும் அவன் இல்லை.

 

உள்ளே சென்றபோது அவளைப் பார்த்தான். அப்போது அவள் தன் யோசனையில் இருக்க, அவளுக்கு அவள் தந்தை பற்றிய செய்தி தெரிந்த சோகத்தில் இருப்பதாய் நினைத்து, தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அமைதியாக இருந்து கொண்டான்.

 

சுடரொளிவானன் வந்து மன்னிப்பு வேண்டிய போதுகூட, ‘இதுல உங்க தப்பு என்ன இருக்கு சுடர்?’ என்று தன்மையாக அவன் கூறியதைக் கேட்க, அவள் அங்கில்லையே?!

 

“நீயும் எதாவது பேசுவியா பார்ப்பியான்னு அந்த பொண்ணு பாத்துட்டே இருந்தா பாவம்” என்று அபூர்வன் கூற,

 

“ப்ச்.. நான் நோட் பண்ணலையே.. அவ அவங்க அப்பா விஷயம் தெரிஞ்சு சோகத்துல இருந்தானு நினைச்சேன்” என்று கூறினான்.

 

“உனக்கு விவரம் பத்தலைடா” என்று ராஜசிம்மன் கூற,

 

“ஆமா.. இவனைப் போல இழுத்துட்டுப் போக உனக்கு திறமையில்லைல” என்று அபூர்வன் அவன் காலை வாரினான்.

 

கருப்பசாமி ராஜசிம்மனைப் பார்த்து, அதிர்ந்தவனாய், “இழுத்துட்டுப் போனியா?” என்று கேட்க,

 

“உங்கண்ணன் தூக்கிட்டுப் போனாரு.. அது பெருசா தெரியலையாடா உனக்கு?” என்று ராஜசிம்மன் கேட்டான்.

 

“நான் தூக்கிட்டுப் போகலை” என்று அபூர்வன் திருத்த,

 

“சரி குகைக்குள்ள மறைச்சு வச்சிருந்தீங்க..” என்றான்.

 

“உங்களுக்கு மத்தியில இருந்தும் அவ பார்த்ததுகூட தெரியாம இருக்குற நான் உண்மையிலேயே திறமையில்லாதவன் தான்” என்று முனகிய கருப்பசாமி மீண்டும் வண்டியை எடுத்தான்.

 

“எப்ப வெளிய சொல்லப் போறீங்க?” என்று அபூர்வன் கேட்க,

 

“என்னத்த?” என்று கேட்டனர்.

 

“சந்திரசேகர்னு ஒருத்தனை போட்டுத் தள்ளிருக்கோம்.. அதைத்தான்” என்று அபூர்வன் கேட்க,

 

மற்ற இருவரிடமும் ஒரு பெருமூச்சு.

 

ஆம்! சந்திரசேகர்.., சுபி சுடரின் அப்பா, சக்கரவர்த்தியின் முன்னாள் நண்பர், அந்த காட்டின் கொலைகளுக்குப் பின்னிருக்கும் மற்றொரு காரணியானவர், அபூர்வன், கருப்பசாமி மற்றும் ராஜசிம்மனால் கொள்ளப்பட்டார்.. கொலை என்று கூறுவதை விட, வதம் என்று கூறினால் தகுமோ?

 

மூவரின் மனதிலும் அன்றைய நினைவு…

 

சரியாக பச்சை மனிதன் காணவில்லை என்று சொல்லப்பட்ட அன்றைய இரவு…

 

கடும் மழை பொழிந்து கொண்டிருந்தது.

 

“எப்படி இங்கதான் இருப்பாருன்னு இவ்வளவு உறுதியா சொல்ற?” என்று கருப்பசாமி கேட்க,

 

“என்னைக் காணும்னா எங்க தேடுவீங்க முதல்ல?” என்று அபூர்வன் கேட்டான்.

 

“காட்டுல தான்..” என்று ராஜசிம்மன் கூற,

 

“அப்ப நானும் அப்படித்தான யோசிப்பேன்? அப்ப நீங்க தேடாத எனக்குப் பாதுகாப்பான இடம் எது?” என்று கேட்டான்.

 

இருவருக்கும் அவன் கூற வருவது புரிந்தது.

 

“இந்த பழைய ஃபேக்டரி உங்களுக்குத் தெரியாத இடமா இருக்கலாம்.. ஆனா எனக்கும், அந்த சந்திரசேகருக்கும் தெரிந்த, எனக்கு பாதுகாப்பான இடம் இதுதான்” என்று அபூர்வன் கூற,

 

இருவரும் அந்த பாழடைந்த தொழிற்சாலையைப் பார்த்தனர்…

 

அபூர்வனை அழைத்துக் கொண்டு, சந்திரசேகரைச் சந்திக்க, சக்கரவர்த்தி அழைத்து வந்த அதே தொழிற்சாலை தான்…

 

மூவரும் அமைதியே உருவாய், உள்ளே நுழைந்தனர்.

 

அவர்கள் எதிர்பார்த்ததைப் போல், சந்திரசேகர் அங்கு தான், அபூர்வனைத் தேடிக் கொண்டிருந்தார்.

 

“ச்ச.. அன்னிக்கே கொஞ்சம் வெயிட் பண்ணி ரெண்டு பொணமும் காருல இருக்கானு பாத்துட்டுப் போயிருக்கனும். ரெண்டுபேரும் செத்து ஒழிஞ்சானுங்கனு நினைச்சது தப்பா போச்சு.. இன்னிக்கு எனக்கே வேட்டு வச்சுட்டான்.. இதுக்கெல்லாம் பயப்படும் ஆளுனு நினைச்சுட்டான் போல.. ஒரே ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி.. என் அடையாளத்தையே மாத்திக்கிட்டு வேறு ஒரு ஆளா, என் வேலையைத் தொடர்ந்துட்டுப் போயிட்டே இருப்பேன்.. இந்த சந்திரசேகரை என்னனு நினைச்சுட்டான்?” என்று எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்த உள்ளத்து எண்ணங்களுக்கு ஒலி கொடுத்துக் கொண்டிருந்தார், சந்திரசேகர்…

 

அபூர்வனுக்கு அத்தனை ஆத்திரமாக வந்தது.

 

“சொன்னது நினைவிருக்குதுல?” என்று அபூர்வன் கேட்க,

 

கருப்பசாமி ஆமென்று தலையசைத்தான்.

 

சிறு தலையசைப்போடு நகர்ந்த அபூர்வன் சந்திரசேகர் பின் சென்று நின்றுகொண்டு, “என்னைத் தான் தேடுற போல?” என்று அத்தனை மிடுக்கோடு கேட்டான்.

 

அவன் குரலில் சட்டென்று திரும்பிய சந்திரசேகர், ஒரு கோணல் சிரிப்போடு, “வாடா வா.. உனக்காகத்தான் காத்துட்டு இருக்கேன்” என்று கூற,

 

“நாங்கூட உனக்குத்தான் இத்தனை வருஷமா காத்துட்டு இருக்கேன்” என்று கூறினான்.

 

சந்திரசேகர் கண்களில் துவேஷம், அபூர்வன் கண்களில் க்ரோதம்.

 

“என்னடா? என்னை மிரட்டிப் பார்க்குறியா? சின்னப்பய நீ.. உன்னால என்னை என்ன பண்ணிட முடியும்?” என்று சந்திரசேகர் கர்ஜிக்க,

 

“என்னால என்ன பண்ணிட முடியும்னு தான் பார்த்தியே? உன்னைப் போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்காம விட மாட்டேன்.. என் அப்பா அம்மாவோட சாவுக்கு முக்கிய காரணமே நீதான்” அபூர்வன் கூறினான்.

 

“ஆமா.. நான் தான்.. இப்ப அதுக்கு என்னங்குற நீ? உன் அம்மாவெல்லாம் என் லிஸ்ட்லயே இல்ல.. தானா வந்து செத்துட்டா.. உன் அப்பனையும் கொல்லும் நோக்கம் எனக்கில்லை.. என்கூட சேர்ந்துருந்தா, சேர்ந்தே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கலாம்.. அவனுக்குக் குடுத்து வைக்கலை.. தெரியாம உங்கம்மாக்கு ஊசி போட்டவன், தெரிஞ்ச பிறகாவது உன்னை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தினானா? பெத்த பாசம் தடுத்துருச்சு போல…” என்று சந்திரசேகர் கூற,

 

அபூர்வனுக்குக் கண்மண் தெரியாத கோபம் வந்தது.

 

கோபத்தில் காரியத்தைக் கெடுத்துவிடக்கூடாது என்பதற்காக தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு நின்றான்.

 

“என்னடா? கோபம் வருதா? வரும் தான? செத்தது உன் அம்மா அப்பாவாச்சே” என்று சிரித்த சந்திரசேகர், “அந்தக் காட்டுலருந்து மூலிகை செடியை மருந்து தயாரிக்கத் திருடினதுக்கெல்லாம் என்னை ஜெயில்ல போடுவாங்கனு நீ நினைக்குறியா? பெனாலிடி கட்டிட்டுத் தப்பிச்சுப் போயிருப்பேன்…” என்று கூற,

 

“ஆமா.. ஆனா அந்த காட்டு மக்களை உன் ஆராய்ச்சிக்கு நீ பயன்படுத்தினியே.. அதுலருந்து தப்பிக்கவே முடியாது” என்று அபூர்வன் கூறினான்…

 

“ஹ்ம்.. பொல்லாத தப்பு.. ஆமா.. பண்ணேன். அந்த மக்களை என் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தினேன். காட்டு மக்களை பயமுறுத்தினேன்.. கொன்னு போட்டேன்.. இதுக்கெல்லாம் உன்கிட்ட ஆதாரம் இருக்கா? ஒன்னுமிருக்காது.. நீ சின்னப்பயடா.. உனக்கு இதைப் பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது. தப்புப் பண்றவனுக்குத்தான் இங்க தப்பிக்க ஆயிரம் வழி இருக்கு… நான் பல தப்புகளைப் பண்ணி சந்தோஷமாதானே இருக்கேன்? திரும்பவும் பண்ணுவேன்.. நிம்மதியா சந்தோஷமாதான் இருப்பேன்” என்று பேசிக் கொண்டிருந்த சந்திரசேகர் சட்டென்று தன் துப்பாக்கியை எடுத்து, அபூர்வனை சுட்டுவிட, குண்டடிப்பட்ட அபூர்வன் பொத்தென்று தரையில் சாய்ந்தான்.

 

“ஹ்ம்.. இவ்வளவுதான் உன் வாழ்க்கை.. போடா.. போ.. உங்கப்பா அம்மாகூடவே நீயும் போய் சேரு” என்று கூறியபடி தனது அலைபேசியோடு நகர்ந்த சந்திரசேகர், “ஹலோ.. ஒருத்தன் பாடியை தூக்கிட்டுப் போகனும். இல்ல இல்ல.. எரிக்கலாம் வேணாம். அவன் பாடி எனக்குத் தேவை… ம்ம்.. இடம் அனுப்புறேன்..” என்று பேசிவிட்டு அவன் திரும்ப முற்பட, அவன் கழுத்தில் சரக்கென்று ஊசி ஒன்றை சொருகியிருந்தான், கருப்பசாமி.

 

அவனைக் கண்டதும் திடுக்கிட்ட சந்திரசேகருக்கு, சட்டென்று எதிர்வினை ஆற்ற இயலவில்லை. வெகு அருகில், கோப முகத்துடன் நின்று கொண்டிருந்தவனின் முக சாயல், அபூர்வனுடன் ஒத்துப்போவதை அவர் கிரகிக்கும் நேரம், அவர் கழுத்தில் குத்தப்பட்ட ஊசியிலிருந்த திரவத்தை உள்ளே செலுத்திவிட்டு, ஊசியைப் பிடுங்கினான்.

 

“ஆ..” என்று ஊசி குத்தப்பட்ட இடத்தில் கரம் வைத்து அழுத்தியபடி, “நி.. நீ?” என்று தடுமாறி, அபூர்வனை நோக்க, அவன் சாவகாசமாக எழுந்து தனது துப்பாக்கி தோட்டாவினைத் தடுக்கும் உடை கலைந்து, ராஜசிம்மன் கொடுத்த தண்ணீரை மெல்ல மெல்ல பருகினான்.

 

சந்திரசேகர் மூவரையும் அதிர்ந்துபோய் பார்த்தான்.

 

“என்ன பார்க்குற? நீ விட்டுவச்சது ஒன்னு இல்ல.. ரெண்டு உயிர்..” என்று அபூர்வன் ஏளனச் சிரிப்போடு கூற,

 

அவர்களை அதிர்வும் பயமுமாகப் பார்த்தான்.

 

“நீ தான் பெரிய சைன்டிஸ்ட் ஆச்சே.. கேன்தாரிடின் தெரியுமா?” என்று கேட்ட அபூர்வன் அவனது அதிர்ந்த பார்வைப் பார்த்து, “ப்ளிஸ்டர் பீட்டில்லருந்து வரக்கூடிய ஒரு டாக்ஸிக்.. முதல் ஆறு மணி நேரத்துல உன் செரிமானம் சார்ந்த உறுப்புகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா செயலிழக்க வைக்கும். இருபத்தி நாலு மணி நேரத்துக்குள்ள உன் கிட்னி பெயிலியர் ஆகும், எழுபத்தி ரெண்டு மணி நேரத்துல உள்ள இருக்குற உறுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமா சிதைஞ்சு இன்டர்னல் ப்ளீடிங் ஏற்படும். ரெண்டுலருந்து மூனு நாள்ல உனக்கு சங்குதான்டி” என்றபடி அவனை நெருங்கினான்.

 

சந்திரசேகர் சட்டைக் காலரைக் கொத்தாகப் பற்றி, “இது என் அப்பா அம்மாக்காக மட்டுமில்ல.. நீ கொன்ன ஒவ்வொரு உயிருக்காகவும்.. இந்த மூனு நாள்ல, நீ கொன்ன அத்தனை உயிருக்காகவும் தவிப்ப.. உள்ள போயிருக்கே.. அது உன்னைத் தவிக்க வைக்கும்” என்று கூறி, அவனிடமிருந்து அலைபேசி மற்றும் இதரப் பொருட்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டான்.

 

“இங்கதான் நீ இருந்தங்குறதுக்கு ஆதாரம் யாருட்டயும் இல்ல.. நீ யாருக்கும் உன் லொகேஷனும் இன்னும் அனுப்பலை.. அப்புறம் நீ தான் ஃபோன்ல டாக்ர் வெப் சிஸ்டர் ஆக்டிவேட் பண்ணி வச்சிருக்கியே.. உன் கால் ஹிஸ்டரியோ, லொகேஷனோ கூட காவலர்களால கண்டுபிடிக்க முடியலைனு கையை விரிக்கலாம். பொடி நடையா நடந்தே போலாம்னு நினைச்சாக்கூட அதுக்குள்ள பாதி செத்துடுவ.. உன்னைக் காப்பாத்த அந்த ஆண்டவனாலும் முடியாது.. அப்புறம் இன்னொரு விஷயம்.. நீ இவ்வளவு நேரம் பேசினியே.. அதையெல்லாம் இவங்க ரெக்கார்ட் பண்ணிட்டாங்க.. நீ என்னை ஷூட் பண்ணதையும் சேர்த்து. என்னைத் தேடி வரும்போது கண்டுபிடிச்சு இவங்க என் உயிரைக் காப்பாத்திட்டாங்க.. ஆனா தப்பிப் போகும்போது நீதான் காட்டுல வழி மாறி போய், பூச்சி கடிச்சு அநியாயமா செத்துட்ட” எனக் கூறி உச்சு கொட்டிய அபூர்வன் ராஜ சிம்மன் மற்றும் கருப்போடு புறப்பட்டிருந்தான்.

 

“இல்ல.. இல்ல…” என்று கத்திய சந்திரசேகருக்கு மரணம் கொஞ்சம் கொஞ்சமாக அவரை நெருங்குவது புரிந்தது.

 

“ஆ….” என்று இரவு பகல் பாராமல் வலியில் கதறினார்.

 

“ஆ.. எரியுது.. என்னைக் கொல்லு.. என்னைக் கொல்லு” என்று ஆளில்லா இடத்தில் யாரிடம் மன்றாட என்றுகூடத் தெரியாமல் கதறினான்.

 

உள்ளூர உயிர் பரிபோவதை அறிந்து, உணர்ந்து அணு அணுவாய் சிதைவதும் தான் எத்தனை கொடிய வலி?

 

எழுந்து சென்று தற்கொலை செய்துக்கொள்ளவும் தெம்பில்லை அவரிடம். தான் செய்த பாவங்களையெல்லாம் கடைசி நிமிடங்களில் கண்முன் கண்டு அவற்றுக்கெல்லாம் சேர்த்து துடிதுடித்து, இறந்து போனார் சந்திரசேகர்…

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
2
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்