
அத்தியாயம் 12
புடவையுடன் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மனைவியைக் கண்டான் நவன்.
அவனிற்குப் புரிந்தது கனியால் இரவு முழுவதும் அதனைக் கையாள முடியாது என.
“டிரஸ் சேஞ்ச் பண்ணுறியா?”
“டிரஸ்ஸா.?”
“ஆமா.. சேரியைக் கட்டி இருக்கிறது உனக்குக் கஷ்டமா தான இருக்கு.?”
“ம்ம்.. எனக்கு இடுப்புலயே நிக்க மாட்டிது. அத்தையும் சித்தியும் சேர்ந்து தான் நாலஞ்சு பின்னு போட்டுக் கட்டி விட்டாங்க.”
‘இடுப்பு இருந்தா தான நிக்கிறதுக்கு? இவ சாப்பாடுனு ஏதாவது சாப்பிடுவாளா மாட்டாளா?’ என மனதோடு நினைத்தவன் வெளியே, “உனக்குச் சேரி கட்டத் தெரியாதா?”
“தெரியும். லேசா இருந்தா கட்டிடுவேன். இது கனமா கஞ்சி போட்ட மாதிரி வெறப்பா இருக்கு. அதுனால என்னால கட்ட முடியல.”
“சரி, சேஞ்ச் பண்ணிக்கோ.”
“டிரஸ் இல்லயே.?”
“ஏன்?” என அவன் அறைக்குள் பார்வையிட, “ஒரு சேலை தான் கொடுத்து விட்டாங்க. காலையில குளிச்சிட்டுக் கட்டிக்கணுமாம். மத்தது எல்லாம் வெளிய இருக்கு. இப்ப அதைத் மாத்திட்டா, காலையில என்ன கட்டுறது.?”
“ஓ..” என இரு நொடிகள் சிந்தித்தவன், “சர்ட் போடுவியா கனி.?”
“சட்டையா?” என்று அவள் கேள்வியாய் பார்த்திட, வலது கையால் வயிற்றுப் பகுதியில் இருந்த தனது உடையின் பொத்தானைப் பற்றி தூக்கிக் காட்டினான்.
அவள் தலை அசைத்து, “தம்பியோடது போடுவேன்.”
சட்டென்று சிரித்தவன், “தம்பியோடதா? அவன் சின்னப் பையன்ல?”
“அப்பாவோடது ரொம்ப பெருசா இருக்கும். செல்வாக்கு லூசா இருக்க சட்டை, எனக்குச் சரியா இருக்கும். அதுனால போடுவேன்.”
“ஓகே!” என பீரோவில் இருந்து தனது சட்டை ஒன்றை எடுத்து நீட்டினான்.
அவள் கை நீட்டிட, ‘அவ அப்பாவோடது பெருசா இருக்கும்னா, என்னோடதும் அப்படித்தான இருக்கும்?’ என ஆடவனின் சிந்தை விளக்கம் தந்தது.
பாவையின் உடல்வாகோடு தனது உடையைக் கற்பனையில் பொருத்திப் பார்த்தவனின் யோசனை, ‘குனிஞ்சாலோ, திரும்பிப் படுத்தாலோ உடம்பு தெரியும். பட்டனுக்கு நடுவுல கேப் வேற இருக்கு. அடடா! அவளுக்கு அன்கம்ஃபர்டா ஃபீல் ஆகும். எனக்குமே தான். அதோட, என்னைப் பத்தி என்ன நினைப்பா.?’ என அதிவேகமாய் நீண்டு சென்றது.
அடுத்த நொடியே, “இல்ல, இது வேணாம். நான் வேற தர்றேன்.” என்று உடையைச் சட்டென்று பின்னிழுத்துக் கொண்டான்.
‘என்னாச்சு?’ என சிந்தித்த படி கனி புரியாமல் பார்த்திட, டீசர்ட் ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.
வாங்கிக் கொண்டவள், “எங்க மாத்துறது.?” என்ற கேள்வியுடன் அறைக்குள் விழிகளை சுழல விட, சூழல் புரிந்தது ஆடவனிற்கு.
குளியல் அறை இருக்கிறது தான். ஆனால் பட்டுப்புடவையை அங்கு மாற்றுவது எல்லாம் இயலாத காரியம்.
“இங்க ரூம்லயே மாத்து. நான் இப்ப வெளிய போக முடியாது. அதுனால பாத்ரூம்ல போய் வெயிட் பண்ணுறேன்.”
“பாத்ரூம்லயா?”
“வேற ஆப்சன் இல்ல.”
“இங்க தனியா இருக்க ஒரு மாதிரி இருக்கே. அதுவும் இல்லாம டிரஸ் வேற மாத்தணும். ஜன்னல் திறந்து இருக்கு.”
“அதை மூடிக்கலாம்!” என நவன் அதனின் கதவை அடைக்க, “நீங்க இங்கேயே இருக்கீங்களா? எனக்கு இந்த ரூம், இடம் எல்லாம் புதுசா. அதான்..” என்று தயக்கத்துடன் வினவினாள்.
“அதுசரி! ஒரு ஆம்பளை முன்னாடி டிரஸ் மாத்தலாமா.?”
“நான் எப்ப உங்க முன்னாடி மாத்துறேன்னு சொன்னேன்? தப்புத் தப்பா பேசாதீங்க. அப்பாவும் சித்தியும் நீங்க நல்லவங்கனு சொன்னாங்க. ஆனா, இப்படிப் பேசுறீங்க?”
“யாரு நான் தப்பாப் பேசுறேனா.? தேவை தான். நீ தான என்னை இங்க இருக்க சொன்ன?”
“இருக்கத்தான் சொன்னேன். பார்க்கச் சொல்லல.”
“ஓஹோ!”
“சுவரு பக்கம் திரும்பி கண்ணை மூடி நில்லுங்க! பார்க்கக் கூடாது. அதையும் மீறி ஏதாவது செஞ்சா, அத்தை மாமாக்கிட்டச் சொல்லிக் கொடுத்திடுவேன்.”
அவனிற்குச் சிரிப்பு வர, அதை அடக்கியபடி இமைகளை மூடி திரும்பி நின்றான்.
உடையை மாற்றத் துவங்கினாள் பாவை.
“கனி.”
“ம்ம்..”
“இன்னைக்குக் காலையில நமக்கு என்ன நடந்துச்சுனு தெரியுமா?”
“கல்யாணம் நடந்துச்சு.”
“அப்ப, நான் உனக்கு யாரு?”
“புருஷன்.”
“நைட் என்ன விஷேசம், நமக்கு.?”
புடவையைக் களைந்தவள், பதில் உரைக்கத் திணறி அமைதியாய் இருக்க, “ஃபர்ஸ்ட் நைட்.”
அவளிடம் இருந்து மறுமொழி எதுவும் வராமல் இருக்க.. உடையை மாற்றும் கைகளின் அசைவில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களின் ஒலியினைக் கேட்டவாறே, “அப்படினா என்ன மீனிங்குனு தெரியுமா உனக்கு?”
கடந்து சென்ற நிமிடத்தின் இடைவெளியில், சற்று இயல்பிற்கு மாறி விட்டாள் போலும்.
“நல்லவரு மாதிரி பாத்ரூம்ல போய் வெயிட் பண்ணுறேன்னு சொன்னீங்க.?” என இம்முறை பட்டென்று பதில் வந்தது.
“சொன்னேன் தான். ஆனா, முதல் ராத்திரியில ஒன்னும் பண்ணாம இருந்தா, நான் கெட்டவனாகிட மாட்டேனா.?”
“இப்போதைக்கு நீங்க கெட்டவனாவே இருங்க. இந்த நேரத்துல இங்க எனக்கு நல்லவன் தேவை இல்ல.” என்று வார்த்தைகள் தெளிவாய் குரல் லயம் மாறாமல் கோர்த்து வைத்தது போல் அவனின் செவியை வந்து சேர்ந்தன.
‘அவள் ஒன்றும் விபரம் தெரியாதவள் இல்லை. தன்னுள் இருக்கும் குழந்தைத் தனத்தை விலக்காமல், அதனுடனே வளர்ந்து வந்திருக்கிறாள்!’ என அறிந்து கொண்டான் நவன்.
பொதுவாய் புதிதாய் அறிமுகம் ஆகும் எவரிடமும் இந்த அளவிற்கு எல்லாம் அவன் இலகுவாய் பேசி விடமாட்டான். ஒருவரைப் பற்றி ஓரளவிற்காவது அறிந்த பின்னரே, அவரை நோக்கி அடியெடுத்து வைப்பான்.
கனி அவனிற்கு மனைவியாய் மாறியதால் அன்னியமானவள் என்ற நிலையில் இருந்து உறவில் நெருங்கி வந்திருந்தாலும், அவளை அறிந்தது என்னவோ கடந்த நான்கு நாட்களாய் தான்.
முதல் சந்திப்பிலேயே அவனின் மனதில் நல் அபிப்ராயத்தை அறியாமலேயே உருவாக்கிக் கொண்டதால், தற்போதான பாவையின் பேச்சுகள் ரசனையைத் தூண்டும் விதமாகவே இருந்தன.
காரணம் இன்றி அச்சம் கொள்ளா நிமிர்வு, பேசுவதற்குத் தயங்காத சிந்தனை, எதிர்பாலினமாய் இருந்த போதிலும் அவனிடம் வேறுபாடு காட்டாத இயல்பு, நாணம் என பொய்யாடை போர்த்தாத பெண்மை, இடத்திற்குத் தக்கப்படி தன்னைப் பொருத்திக் கொள்ளும் குணம் என கடந்த சில நிமிடங்களிலேயே தான் யார் என்று செயலாலும் சொல்லாலும் பார்வையாலும் முன்னுரை தந்திருந்தாள் ஆசைக்கனி.
வேலை செய்யும் இடத்திலும் கூட எட்டி நிற்கும் தூரத்திலேயே பெண் பணியாளர்களிடம் பேசிப் பழகிய நவனிற்கு, கைத்தொடும் தூரத்தில் நின்று வாயாடும் வளர்ந்த அச்சிறுமியின் அசைவுகள் யாவும் சிற்றின்பத்தின் அழகியல்களாகத் தான் தெரிந்தன.
சளைக்காமல் பேசிடும் பாவையின் மறுமொழிகள், அவளை மேலும் சீண்டி விளையாடும் ஆர்வத்தைத் தூண்டிட, வேண்டும் என்றே பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தான் நவன்.
“மாத்திட்டேன்.” என்றவளின் சொல்லில் திரும்பிட, அவன் இரண்டாவதாய் கொடுத்த உடையும் மிக தளர்வாகவே இருந்தது.
ஆடையானது தேகத்தில் படிந்திருந்த விதம், அவள் சட்டையை கழட்டிவிட்டு உள்ளாடையின் மீது அணிந்திருப்பதை தெரிவிப்பதாய் தோற்றமளிக்க, “ஏன் இவ்வளவு ஒல்லியா இருக்க?” என்றான்.
“என்ன திடீர்னு கேட்கிறீங்க? அன்னைக்கு அந்த அக்கா வீட்டுக்கு வந்திருந்த போதே பார்த்தீங்க தான?” என வினவியபடி அவள் புடைவையை மடிக்கத் தொடங்கிட, கனி உரைத்ததின் விளைவாய் அரை நொடிக்கும் குறைவாய் சஞ்சனாவின் நினைவு வந்து போனது.
கைப்பேசியில் இருந்த புகைப்படத்தை அழித்த பொழுதே, அவளைப் பற்றிய எண்ணங்களையும் மனதில் இருந்து முழுமையாய் அழித்து விட்டான். எனினும், அதன் பயனாய் கற்ற பாடம் அப்படியே நினைவில் தங்கிப் போனது.
உண்மையில் சஞ்சனாவை அவன் நேரில் ஒருமுறைக் கூட பார்த்தது இல்லை. புகைப்படத்தில் மட்டுமே கண்டிருந்தான். ஆனால் கனியுடனான சந்திப்பு அதற்கு அப்படியே தலைக்கீழாய் நிகழ்ந்திருந்தது.
முதலில் நேரில் தான் பார்த்தான். அதன் பின்னரே, ‘இவள் தான் பெண்.’ எனப் புகைப்படத்தைக் காட்டினர் பெற்றோர்.
நிச்சயிக்கப்பட்டப் பெண்ணிற்கு மாற்றாய் இவள் அவ்விடத்தில் பொருத்தப்பட்டு இருப்பதாய் ஒரு வலி மிகுந்த பிம்பம் தோன்றிட, “இனிமேல் இந்த சேரியை நீ கட்டாத!” என்றான் நவன்.
அவள் ஒன்றும் புரியாமல் கேள்வியாய் பார்த்திட, “இது, உனக்காக வாங்கினது இல்ல. வேண்டாம்!”
“அதுனால என்ன? கல்யாண சேலைக்கு எப்பவும் மதிப்பு அதிகம்.”
“அப்ப வச்சுக்கோ. ஆனா வியர் பண்ணாத. உனக்குக் கட்டுறதுக்கு ஈசியா வெயிட் கம்மியா வேற சேரி வாங்கித் தர்றேன்.”
“எதுக்குக் காசை வீணாக்க நினைக்கிறீங்க? இதை நான் கட்டல, சரியா? அதுக்காக புது சேலை வாங்கணும்னு இல்ல.” என்றவள் நாற்காலியில் புடைவையை வைத்துவிட்டு, ஜன்னல் கதவுகளைத் திறந்தாள்.
அதுவரை உள்ளே வர இயலாது வெளியே சத்தியாகிரகம் செய்து கொண்டிருந்த தென்றல், அந்நொடியில் பட்டென்று உள்நுழைந்து பாவையின் முகத்தில் மோதி, அவளிற்குப் பின்னிருந்த ஆடவனின் உடலையும் தழுவி மிதந்து சென்றது.
“தூங்குறியா கனி?” என்ற நவனின் வினாவில் ஜன்னலின் கம்பிகளைப் பற்றிய படி வெளிப்பக்கம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பாவை, அவன்புறம் திரும்பினாள்.
“நீங்க?”
“எனக்குத் தூக்கம் வரல. நீ படு.”
“கோபமா என்மேல?”
புரியாது பார்த்தவன், “நான் எதுக்குக் கோபப் படப் போறேன் உன்மேல, அதுவும் கல்யாணம் ஆன அன்னைக்கே?”
“இல்ல ஃபர்ஸ்ட் நைட்டுனு என்னமோ சொன்னீங்க. ஆனா பதிலுக்கு நான் கொஞ்சம் எதுவோ பேசிட்டேன்.”
மெலிதாய்ப் புன்னகைத்தவன், “அதெல்லாம் ஒன்னும் இல்ல.”
“நிஜமா.?”
“நிஜமா தான்.”
“அப்ப, உண்மையாவே நான் தூங்கவா?”
“நான் ரூமுக்குள்ள வரும் போது தூங்கிட்டுத் தான இருந்த?”
“அது கொஞ்சம் உடம்பு அசதியா இருந்துச்சு.”
“இப்பவும் அந்த டயர்ட்நெஸ் இருக்கும் தான? ரெஸ்ட் எடு.”
“ம்ம்..” என்றவள், படுக்கையில் இருந்த ஒரு போர்வையை எடுத்து கீழே விரிக்க, “மேலயே படு கனி.”
சற்றே தயக்கத்துடன் அவனை நோக்கியவள், “அது, எனக்கு மெத்தையில படுத்துப் பழக்கம் இல்ல.”
நவன் புரியாது பார்க்க, “எங்க வீட்டுல மெத்தை கிடையாது.”
அவளிற்கு அன்னை இல்லை என்பதும் நினைவிற்கு வர, “உங்க வீட்டுல உன்னை நல்லா பார்த்துக்கிட்டாங்களா.?”
சட்டென்று சிரித்தவள், “நல்லா பார்த்துக்கிறதுனா என்ன.?”
“நீ கேட்கிறதைச் செஞ்சு கொடுக்கிறது.”
“அதுக்கு வசதி இல்லேனா.?”
கல்வி விஷயத்தில் தனது தந்தை மறுப்பு தெரிவித்தது நினைவிற்கு வந்தது.
“உண்மை தான். நல்லதுக்கும் வசதிக்கும் ஏலாம் பொருத்தம். ரெண்டும் ஒன்னா இருக்காது. அப்படியே இருந்தாலும், விதி பிரிச்சு விட்டுடும். எங்கப்பா ஒரே நாள்ல எல்லாத்தையும் தொலைச்ச மாதிரி.” என்று தன்னை மறந்து உரைத்தவனின் மனதை, கடந்த கால கசந்த நிகழ்வுகளின் நினைவு மெல்ல ஆக்கிரமிக்க தொடங்கியது.
அதில் இருந்து வெளிவந்திடும் எண்ணத்தில் மெலிதான பெருமூச்சு ஒன்றை விட்டு, கவனத்தை அருகில் இருந்த மனைவியிடம் திருப்பினான்.

