Loading

30

 

சென்னை…

 

தங்கள் குடியிருப்பின் அடுத்தடுத்த வீடுகளை தோழர்கள் அடைந்திருந்தனர்.

 

சிவகாமி மற்றும் ராஜசேகர், சுடர் மற்றும் ராமராஜன் வீட்டை ஆள் வைத்து அவர்கள் வரும் முன்பே சுத்தம் செய்து வைத்திருந்தனர்.

 

இரவு இருள் சூழ்ந்த நேரம், அனைவரும் வீட்டை அடைந்திருக்க, சிவகாமி, சிவப்ரியாவிற்கு ஆரத்தி சுற்றி வரவேற்றாள்.

 

சிவப்ரியா கிடைத்துவிட்ட நிறைவு அவர்கள் எல்லோரையும் சொல்ல இயலாத ஆசுவாசத்தை உணர வைத்தது…

 

அனைவருமாக ராமராஜன் வீட்டை அடைய,

 

ராஜசேகர், பிரம்மவதனி மற்றும் சுடரொளிவானன் மற்ற பொதிகளை வீட்டில் ஏற்றினர்…

 

செய்தியின் மூலம் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், சிவப்ரியாவைப் பற்றி விசாரிக்க அக்கம் பக்கத்தினர் சிலர் வந்து நின்றனர்.

 

சிவப்ரியா இருக்கும் நிலையில் அவளுக்கு இவை மேலும் அழுத்தம் கொடுக்கும் என்பதால், சுடரொளிவானன் அவர்களிடம் பேசி அனுப்பி வைத்திருந்தான்.

 

சோர்வுடன் வீட்டு நீள்விருக்கையில் தனது மகளை மடிசாய்த்துக் கொண்டு ராமராஜன் சாய்ந்து அமர்ந்திருக்க, அவரிடம் சொல்ல முடியாத அளவு ஆசுவாசம்…

 

இப்படி மகளோடு இதே வீட்டில் அவளைச் சீராட்டிக் கொண்டு அமரும் வாய்ப்பு இனி கிடைத்துவிடாதோ என்று அவர் தவித்த தவிப்புதான் எத்தனை? தாள முடியாமல் அவர் கண்ணோரம் கண்ணீர் கசிய, சுபிக்ஷா மென்மையாக அதனைத் துடைத்து விட்டாள்.

 

கண் திறந்து அவளைப் பார்த்தப் பெரியவரிடம் வேதனை மிஞ்சும் புன்னகை.

 

“ரொம்ப லேட்டாகிடுச்சு. எல்லாரும் போய் படுங்க. காலைல பேசிக்கலாம்” என்று சுந்தர் கூற,

 

சுடர் சுபி மட்டும் அவர்களுக்குத் துணையாக அங்கே இருந்து கொண்டனர்.

 

பிரம்மா தன் அக்காவுடனும், ப்ரீத்தி தன் தாயுடனும் வீட்டிற்கு செல்ல, வீட்டினுள் நுழைந்த ப்ரீத்தி, தன்னையே பார்த்திருக்கும் தந்தையைப் புரியாமல் பார்த்தாள்.

 

பின்புதான் அன்னை, தன் காதல் விடயத்தைத் தந்தையிடம் கூறியிருக்கக்கூடும் என்று புரிந்தது அவளுக்கு.

 

“அ..அப்பா..” என்று அவள் ஏதோ பேச வர,

 

“காலைல பேசிக்கலாம் ப்ரீத்திமா” என்று கூறி படுக்கச் சென்றார்.

 

அனைவரும் மனதில் ஒவ்வொரு எண்ணங்களோடு உறக்கம் தழுவ, இங்கு கருப்பசாமி, வெடித்து சிதறிய மயக்கத்துடன் தூக்கம் கொண்ட நண்பனை வேதனையோடு பார்த்திருந்தான்…

 

மறுநாள் காலை…

 

முந்தைய நாளின் பயணத்திலும், வீடு திரும்பிய ஆசுவாசத்திலும் அனைவரும் அன்று சற்றுத் தாமதமாகத்தான் எழுந்தனர்.

 

பத்து மணிக்கு மேலான நிலையில், சுட்டெரிக்கும் சூரியன், தன் மேனி தீண்ட, அதில் மெல்ல பிரண்டுப் படுத்த ப்ரீத்தி, கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புக்கு வந்தாள்.

 

மெல்ல எழுந்து, நன்கு சோம்பல் முறித்தவள், குளியலறை சென்று பல் துலக்கி புத்துணர்ச்சி பெற்று வெளியில் வர, கூடத்தில் சுந்தர் மற்றும் பிரபாவுடன் அமர்ந்து சுடரொளிவானன் பேசிக் கொண்டிருந்தான்.

 

பார்த்ததும் ப்ரீத்தி அதிர்ந்துபோய் நிற்க,

 

அவளை நிமிர்ந்து பார்த்த சுந்தர் முகத்தில், மெல்லிய புன்னகை…

 

அவர்கள் மூவரையும் பார்த்தது பார்த்தபடி அவள் உறைந்து நிற்க,

 

“வா டா” என்று சுந்தர் மெல்லிய புன்னகையோடு கையசைத்து அழைத்தார்.

 

இரு தனித்தனி மெத்திருக்கையில் சுந்தர் மற்றும் பிரபாவதி அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிரிருந்த நீள்விருக்கையில் சுடர் அமர்ந்திருந்தான்.

 

அவன் அருகில் தான் அவள் அமர இடம் இருந்தது. பயத்துடனும் படபடப்புடனும் அவள் விழிக்க, சுடரொளிவானன் தன் மாமனாரைப் பார்த்தான்.

 

அவர் புன்னகையுடன் தலையசைக்க, சட்டென்று தன்னவள் கரம் பற்றி, தன்னருகே அமர்த்திக் கொண்டான்.

 

அவன் செயலில் அரண்டு போனவள், அவனை ஆச்சரியமாகப் பார்த்துவிட்டுத் தன் தாய் தந்தையை நோக்க,

 

பிரபாவும் சுந்தரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

 

பூனை முகத்தோடு விழிக்கும் தன்னவளைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டால் என்னவென்று தோன்றியது சுடருக்கு.

 

அவள் பயத்துடன் எச்சிலைக் கூட்டி விழுங்கி, “அ..அப்பா.. அது.. நான்..” என்று பேச விழைய,

 

“சுடர் சொன்னான்டா” என்று கூறினார்.

 

அவள் தன்னவனைத் திரும்பிப் பார்க்க, புன்னகையாக அவள் கரத்துடன் தன் கரம் கோர்த்தவன், “நானும் என் ப்ரீத்தியும் ஆறு வருஷமா லவ் பண்றோம். எங்களுக்கு ஒருத்தர் மேல ஒருத்தர் விருப்பம் இருக்கு. ஆனா என் ப்ரீத்திமாக்கு அவங்க அப்பா அம்மா மேல உள்ள மரியாதை, என்கிட்டக்கூட அதை இன்னும் சொல்ல அனுமதிக்கலை. உரிமை கொடுங்க அப்பத்தான் ஊரறிய சொல்லுவேன்னு சொன்னானு மட்டும்தான் சொன்னேன்” என்று கூறினான்.

 

விழிகள் விரிய அவனைப் பார்த்தவள் தன் தந்தையையும் தாயையும் நோக்க,

 

“சுடர் முதல்ல சொன்னப்ப, எம்பொண்ணு இவ்ளோ பெரிய முடிவைப் பற்றி என்கிட்ட எதுவும் சொல்லலையேனு ஒரு அப்பாவா கோவம் வந்ததுதான். ஆனா அவ எங்களுக்கு மதிப்புக் கொடுத்து, இன்னும் அவன்கிட்டயே அதை சொல்லலனு தெரியும்போது, அவ ஆசைக்கு மதிப்புக் கொடுக்குறதுதான் பெத்தவங்களா எங்கக் கடமைனு புரிஞ்சுது.. சுடர் நாங்க பார்க்க வளர்ந்தவன்.. நல்லா படிச்சு, நல்லபடியா அவன் ஆசைப்பட்டப் போல நல்ல நிறுவனத்துல ரிசர்ச்சரா இருக்கான். ஒரு பெத்தவங்களா எங்களுக்கு வேற என்ன வேணும்?” என்று சுந்தர் கூறினார்.

 

“சாரி சுடர்.. அங்க இருக்கும்போது உன்னை நானும் நிறைய ஹர்ட் பண்ணினேன்.. ஒரு அம்மாவா அந்த இடத்துல என்னால வேற யோசிக்க முடியலை. நான் என்னோட தப்பை நியாயப்படுத்தப் பேசலை.. ஆனா அம்மானு வரும்போது நான் கொஞ்சம் சுயநலமான அம்மாதான்” என்று பிரபா கூற,

 

“எனக்குப் புரிஞ்சது அத்தை. நடந்ததை விடுங்க.. அதைப் பற்றி இனியும் நாம பேச வேணாம்” என்று சுடர் கூறினான்.

 

ப்ரீத்திக்கு ‘ஒருவேளை இன்னும் தூக்கத்துலதான் இருக்கோமோ?’ என்று தோன்றிவிட்டது.

 

யாருமறியா வண்ணம் தன் கரத்தினை அவள் கிள்ளிக் கொள்ள,

 

“கனவெல்லாம் இல்ல.. நினைவுதான்” என்று அவள் பக்கம் லேசாக சாய்ந்து கூறினான்.

 

திடுக்கிட்டுப் பார்த்தவளுக்கு, சொல்ல முடியாத சந்தோஷம் மனதில்.

 

அவள் கண்கள் மெல்ல கலங்க, இடவலமாய் தலையசைத்தவன், “உன்னைக் கண்கலங்காம பாத்துப்பேன்னு இப்பத்தான் மாமாக்குப் ப்ராமிஸ் பண்ணேன். உடனே கண் கலங்கிடாத.. மாமா டென்ஷன் ஆயிடப்போறாங்க” என்று கூற,

 

அனைவரும் அதில் கொள்ளெனச் சிரித்தனர்.

 

“கொஞ்ச நாள் போகட்டும் மாமா.. எல்லாம் நார்மலானதும் மித்ததைப் பேசிக்கலாம்” என்று சுடர் கூற,

 

“சரிப்பா.. முதல்ல சுபிக்குப் பண்ணிடுவோம்” என்று பிரபா கூறினார், கருப்பசாமியை மனதில் வைத்துக் கொண்டு. அவருக்கு உண்மையில் தங்களுக்கு உறுதுணையாக இருந்த கருப்பசாமியை அதிகம் பிடித்திருந்தது.

 

“இல்ல ம்மா..” என்ற ப்ரீத்தி, சுடரைப் பார்த்து, “நாங்க சேர்ந்து, அம்மா அப்பா ஸ்தானத்துல சுபிக்கு எல்லாமே செய்யனும்னு ஆசைப் படுறேன்” என்று கூற,

 

அவன் நெகிழ்ந்து புன்னகைத்தான்.

 

மகளையும், வருங்கால மருமகனையும் பெரியவர்கள் இருவரும் நிறைவோடு பார்த்தனர்.

 

“சரிடாமா.. கொஞ்ச நாள் போனதும் பேசிக்கலாம்” என்று சுந்தர் கூற,

 

“சரிசரி.. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன். சாப்பிட வாங்க” என்று பிரபா கூறினார்.

 

“இல்லத்த.. சுபி ரெடி பண்ணிட்டா.. விஷ்ணுவை இன்னிக்கு ஆஸ்பிடல் கூட்டிட்டுப் போகனும். நான் கிளம்புறேன். மதியத்துக்கு இங்கதான் வருவோம்” என்று அவன் கூற,

 

“சரி சுடர்.. நான் ரெடி பண்ணிடுறேன்” என்று கூறினார்.

 

“சரித்த.. நான் வரேன். வரேன் மாமா” என்று கூறிய சுடர் எழ,

 

தானும் எழுந்த ப்ரீத்தி அவனை வழியனுப்பச் செல்ல வேண்டி, தன் பெற்றோரைப் பார்த்தாள்.

 

அவர்கள் இருவரும் தலையசைத்து சம்மதம் வழங்க, அவள் அவனோடு வாசலுக்குச் சென்றாள்.

 

“என்ன மேடம்? ஹாப்பியா?” என்று சுடர் கேட்டதுதான் தாமதம்.

 

அவனை இறுக அணைத்திருந்தாள்.

 

அவனுக்குப் பெரும் அதிர்ச்சிதான்.. அவளாக, அவனிடம் எடுத்துக்கொள்ளும் முதல் உரிமை அல்லவா?!

 

மென்மையான புன்னகையுடன் அவனும் அவளை அணைத்துக் கொள்ள,

 

“தேங்க்ஸ்..” என்று மனமாரக் கூறினாள்.

 

“இப்படியா நன்றி சொல்லுவாங்க.. பிரம்மா சொன்னது சரிதான் போல.. உனக்கு ரோ இல்ல.. ரொ கூட தெரியலை” என்று அவன் கூற,

 

நாணத்துடன் புன்னகைத்தவள், அவன் கன்னம் கிள்ளி தன் விரல்களுக்கு முத்தம் கொடுத்துக் கொள்ள, “நான் என்ன பப்பு சோறு சாப்பிடுற குழந்தையாடி?” என்று கேட்டு சிரித்தான்.

 

அதில் தானும் சிரித்துக் கொண்டவள், அவன் கண் பார்த்து, “உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்குது சுடர்.. நிறைய நிறைய காதலிக்கிறேன்.. இன்னும் நிறைய காதலிக்கனும்” என்று அவன் எதிர்பாராத விதமாய், தன் காதலை முன்மொழிந்தாள்.

 

இன்பமாக அதிர்ந்து போய் சுடர் அவளை நோக்க, அவன் கன்னத்தில் மெல்ல தன் கரம் பதித்து, “நிறைய காதலிப்பேன்… ஊரறிய உரிமை மட்டும் கொடுங்க. அப்றம் சொல்றேன். ரொ தெரியுமா ரோ தெரியுமானு” என்று சிரிக்க,

 

அதில் தானும் சிரித்துவிட்டவன், அவள் கன்னம் பற்றி, நெற்றி முட்டி, “லவ் யூ சோ மச் ப்ரீத்திமா..” என்றான்.

 

அவள், அவன், அவர்கள் காதல், அதற்கு அழகுசேர்க்கும் இளங்காலைத் தென்றலும், இளவெய்யிலும்… கவித்துவமாய் இருந்தது அத்தருணம்..

 

“விஷ்ணுவை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகனும்டா. போயிட்டு வரேன்” என்று அவன் கூற,

 

“சிவாவை” என்று திருத்தினாள்.

 

“ஸ்ஸ்..” என்று நெற்றித் தேய்த்துக் கொண்டவன், “மறந்துடுது” என்க,

 

“பழகிக்கனும்ப்பா. அவளுக்கு அது ரொம்ப ஹர்ட் ஆகும். இத்தனை நாளா தன்னோட ஐடென்டியைத் தொலைச்சுட்டு இருந்திருக்கா..” என்ற ப்ரீத்தி, “அந்த பச்சை அண்ணா எங்கப்பா போனார்? என்ன ஆனார்? சிவாவை அவர் பாதுகாத்து வச்சதுக்கு ஒரு நன்றி கூட சொல்ல முடியலையே” என்று கூறினாள்.

 

“நான் சொன்னேன்..” என்றவன், “சீக்கிரமே வருவார். யாரும் எதிர்பார்க்காதபடி” என்றுவிட்டுச் சென்றான்.

 

சொன்னபடி, சிவப்ரியாவையும் ராமராஜனையும் மருத்துவமனை அழைத்துச் சென்ற சுடரொளிவானன், அவள் தையல் பிரித்து, மருந்திட்டுக் கட்டியதும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

 

அங்கு, இளங்காலை வேளை, காட்டில் தன் தம்பியுடன் நடை பயின்று கொண்டிருந்தான், அபூர்வன்.

 

ராஜசிம்மனிடம் கூறியதைப் போல், கருப்பசாமியிடமும் தங்களது கடந்தகால பக்கங்களை அபூர்வன் கூறியிருக்க, கருப்பசாமிக்குச் சொல்லமுடியா உணர்வொன்று தொண்டையில் அடைத்தது…

 

இருவருமாக அப்படியே பாறை ஒன்றில் அமர,

 

“எப்படி இதெல்லாம் தாங்கின அண்ணா?” என்று கருப்பசாமி கேட்டான்.

 

அவனது ‘அண்ணா..’ என்ற அழைப்பு, தன்னைப் போல் அபூர்வனைப் புன்னகைக்க வைத்தது.

 

அவன் முன்பே ‘அண்ணா’ என்று அழைத்தபோது, ‘நமக்கு ஒரு வயசுதான்டா வித்தியாசம். எதுக்கு இதெல்லாம்?’ என்று அபூர்வன் கேட்டிருக்கிறான்.

 

‘மரியாதையா அழைக்கணும்னுலாம் அப்படி கூப்பிடலை. ‘நீ’ ‘வா’ ‘போ’னு தான் சொல்லுவேன்.. ஆனா அந்த அண்ணா, எனக்காக ஒரு பந்தம் இன்னும் உயிரோட இருக்குங்குறதை உணர்த்தும் அழைப்பு.. அதை என்னால மாத்திக்க முடியாது’ என்று கூறியிருந்தான்.

 

“அண்ணா..” என்று கருப்பசாமி மீண்டும் அழைக்க,

 

“தெரியலைடா.. சர்வைவல் மோட் ஆக்டிவேட் ஆயிடுச்சு.. உணர்வுகள் மரத்துப் போச்சு” என்று கூறினான்.

 

“நான் நினைவு தெரிஞ்சதுலருந்து ஆசிரமம் தான். எனக்கு பெருசா ஐந்து வயசுக்கு முன்ன இருந்த வாழ்க்கை நினைவுலயே இல்ல.. எப்பவாவது கலங்கலா, அம்மா விட்டுட்டுப் போனது தெரிஞ்சு அம்மா வேணும்னு ஆசிரமத்துல அழுதது நினைவு வரும்.. அப்பலாம் ஏன் என்னை அவங்களுக்குப் பிடிக்காம போச்சுனுகூட நினைச்சிருக்கேன்.. ஆனா அம்மா பட்டக் கஷ்டத்தையெல்லாம் கேட்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு” என்று கருப்பசாமி கூற,

 

அபூர்வனிடம் ஒரு பெருமூச்சு… தாய்வாசம் என்ற ஒன்றே அவன் நினைவில் இல்லையே?! அவனுக்கு அனைத்துமாக இருந்தது சக்கரவர்த்தி மட்டும் தானே? அதற்காக தந்தை செய்தது சரியென்று நியாயம் செய்யவெல்லாம் அவன் நினைக்கவில்லை… ஆனாலும் அழகாக மலர்ந்த தங்கள் பெற்றோரின் காதல் இத்தனை அகோரமான முடிவுக்கு வந்திருக்க வேண்டாம் என்று தோன்றியது..

 

“நான் பெருசா சந்தோஷம் அனுபவிச்சதில்லைங்குறத விட, கஷ்டம் அனுபவிக்கலை அண்ணா. அந்த வகையில் நல்ல வாழ்க்கை தான் வாழ்ந்தேன். ராஜ் அளவு கஷ்டமும் நான் படலை. அமைதியான வாழ்க்கை. காடு மட்டும் தான் என் காதல். அதுக்குப் படிச்சேன். எக்ஸாம் எழுதினேன், வேலைக்கு வந்தேன்.. அவ்ளோதான்.. என்னமோ ராஜ் எவ்ளோ சிடுசிடுனு இருந்தாலும் அவனை விட்டுக்குடுக்க மட்டும் மனசே வராது. அவன்கூட தன்னைப் போல் ஒரு ஒட்டுதல் உருவாச்சு.. அவனோட அப்ஸ் டௌன்ஸ் எல்லாத்தையும் பாத்த ஒருத்தன் நான் தான்.. அதெல்லாம், என்ன நடந்தாலும் அவனுக்கான துணையா நான் இருக்கனுங்குற எண்ணத்தை வலுபெற செய்தது.. அவன் இப்ப இங்க நம்ம கூட இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.. ஊருக்குப் போனவன இன்னும் ஆளைக் காணும். இங்கயே டிரான்ஸ்பர் அப்ளை பண்ணி வாடானு சொன்னேன். என்ன யோசிச்சிருக்கானோ?” என்று கருப்பசாமி கூற,

 

“எல்லாம் சீக்கிரம் சரியாகும்டா” என்று தம்பியின் தோளில் கரமிட்டான்.

 

அந்த தோள் அணைப்பின் ஸ்பரிசம், அவனுக்குத் தாய்மையை உணர்த்தியது.

 

தன் அண்ணனைப் பார்த்தவன், “உன்ன ஹக் பண்ணிக்கவா?” என்று அமைதியான குரலில் கேட்க,

 

அபூர்வன் விழிகள் உடைந்து போனது.

 

உடைந்த அணையை மீறி, கண்ணீர் கசிய, தம்பியை இறுக அணைத்துக் கொண்டான்.

 

“தேங்க்ஸ்.. என் லைஃப்ல வந்ததுக்கு.. எனக்கு நீ இருக்கனு உணர்த்தினதுக்கு” என்று கருப்பசாமி கூற,

 

“நீ என் தம்பிடா.. உனக்காக நான் இல்லாம எப்படி?” என்று தட்டிக் கொடுத்தான்.

 

இருவரிடமும் சொல்ல முடியாத நெகிழ்வும், சந்தோஷமும் சூழ்ந்திருக்க, ஒரு நிறைவு அங்கே நிறைந்திருந்தது…

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்