Loading

அத்தியாயம் 8

 

கழுத்தில் மணமாலையுடனும் அருகே சஞ்சனாவுடனும் வந்து நின்ற மகனை ஏற இறங்க பார்த்தார் சிவநாதன்.

எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அனைத்து விபரங்களும் முன்னரே அவரை வந்து சேர்ந்திருந்தன.

சஞ்சனாவின் வீடும் வசந்தியின் வீடும் அடுத்தடுத்தத் தெருவில் இருப்பவை‌. சொல்லப் போனால் இரு இல்லங்களும் ஒற்றைச் சுவர் கொண்டவை. இரண்டின் உரிமையாளரும் ஒருவரே.

அவர் வெளிநாட்டில் இருக்க, இல்லங்களை வாடகைக்கு விட்டிருந்தார்.

சஞ்சனாவின் தந்தை நடராஜனிற்கு புறநகர் பகுதியில் சொந்தமாய் இரு வீடுகள் இருந்தும், மகள் பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாய் அப்பகுதியில் குடியேறி இருந்தார். பல ஆண்டுகளாய் அங்கே பழகிவிட்டதால் அவள் வளர்ந்த பின்பும் கூட, அங்கிருந்து இடம் பெயரவில்லை.

வசந்தியின் திருமணத்தின் பொழுது, மணிகண்டன் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். உண்மை யாதெனில், சிவநாதனின் நகைக்கடையில் மேலாளராகப் பணியாற்றியவர். அவரின் குணத்தையும் வியாபாரத் திறனையும் கண்டு, அத்தோடு ‘தனது சொல் பேச்சுக் கேட்டு நடப்பார்!’ என்ற எண்ணத்தில் மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்.

தற்போது அவர்களிற்கு பதினோரு வயதில் மகள் இருக்கிறாள். அவளின் எதிர்காலத்தைக் கணக்கிட்டு, தங்கும் வசதியுடன் கூடிய பள்ளியில் இணைத்து உள்ளனர். விடுமுறை காலத்தில் மட்டும் வீட்டிற்கு வந்து செல்வாள்.

திருமணம் ஆனதும் அங்கு குடிவந்த மணிகண்டன், தற்போது வரை அப்படியே தான் தொடர்கிறார். வளர்ந்து கொண்டிருக்கும் அவரின் பொருளாதாரம், குடியிருக்கும் வீட்டையே சொந்தமாய் வாங்கிவிடும் ஆசையை மனதில் விதைத்து விட்டது.

உரிமையாளரிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அம்மனிதரோ பிடி கொடாமல் நாட்களைக் கடத்துகிறார்.

கீழ் வீட்டின் அளவில், அரைப்பங்கு அளவு தான் மேலே இருக்கும் வீடு. மீதம் உள்ள இடத்தில் துணிகளைக் காயப் போடுவதற்கும் மற்ற வசதிகளுக்காகவும் ஒதுக்கி இருந்தனர்.

நடராஜனின் குடியிருப்பின் மேல் கனியின் குடும்பத்தார் வசிப்பது போல், மணிகண்டனின் வீட்டிற்கு மேலும் வேறொரு குடும்பம் வசிக்கிறது‌.

தமக்கையின் இல்லத்திற்கு அவ்வப்போது வந்து செல்வான் விஜயன். பெரும்பாலும் அங்கு தங்கும் வழக்கம் இல்லாதவன்.

தந்தையுடனான உறவில் விரிசல் விழத் துவங்கியதில் இருந்து, வசந்திதான் தம்பிக்கு ஆதரவாய் பேசி அவனை அரவணைத்துக் கொண்டிருக்கிறார்.

மணிகண்டனிற்கு மனைவியின் செயலில் அவ்வளவாய் உடன்பாடு இல்லை என்றாலும் மாமனாரிடம் பகையை வளர்த்துக் கொள்ள விரும்பாது, கண்டும் காணாதது போல் இருந்து கொள்வார். பின்னர் எப்படி சிவநாதனிடம் இருந்து சொத்தைப் பெறுவது.?

தந்தையும் தனயனும் இணைந்து இருந்தால், மருமகன் இடையில் நுழைந்திட இயலாதே.? அதனால் மச்சானின் கனவிற்கு ஆதரவு தருவது போல் பேசி, அப்பாவும் மகனும் எதிரெதிர் திசையிலேயே நிற்குமாறு பார்த்துக் கொண்டார்.

விஜயனிற்கும், மணிகண்டனின் எண்ணம் புரியவே செய்தது. இருந்தும் சொத்தின் மீதான ஆசையைத் தவிர்த்து தவறான குணம் கொண்டவர் இல்லை என்பதால், அறிந்தும் அறியாதது போல் இருந்து கொண்டான்.

‘பூர்வீக சொத்தான நகைக்கடையில், மகளான தமக்கைக்கும் உரிமை உண்டு தானே?’ என்ற எண்ணம் அவனிற்கு.

‘தமக்கையின் கணவன் அதை வசமாக்க நினைப்பதில் தவறேதும் இல்லை!’ என விட்டு விட்டான். அத்தோடு இந்த காரணத்திற்காகவும் தான், கடைக்குச் செல்ல மறுத்தான்.‌

வசந்தியின் இல்லத்திற்கு வரும் சமயங்களில், மாடியில் ஓரிரு முறை சஞ்சனாவை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது விஜயனிற்கு.

துவக்கத்தில் நட்பு ரீதியில் உருவான பேச்சு வார்த்தை மெல்ல மெல்ல பாவையின் உந்துதலால்‍, காதலின் வழியில் மாற்றம் அடைந்தது. முதலில் விரும்பியதும் அவள்தான்‌. அதைத் தெரிவித்ததும் அவள்தான்.

இதற்கிடையில் தனக்கு நிச்சயம் ஆனதும், திருமண தேதிக் குறித்து இருப்பதும் சஞ்சனாவின் சிந்தையில் சிறிதும் பதியவில்லை. அவளிற்கு வேண்டியது எல்லாம், மனதின் விருப்பப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் அவ்வளவே!

தாய் தந்தையரைப் பற்றியோ, சுற்றம் மற்றும் உறவுகளைப் பற்றியோ கவலை கொள்ளாதவள்.

மகள் வீட்டை விட்டு வெளியேறியதை அறிந்ததுமே, என்ன நடந்தது என விசாரணை செய்து அடுத்த இருபது நிமிடங்களில் வசந்தியின் வீட்டிற்கு வந்து அடைந்தனர், நடராஜனும் கல்யாணியும்.

விஷயம் பரவிட‌, அக்கம் பக்கத்தார் தெருவில் நின்று வேடிக்கைப் பார்ப்பதில் ஆர்வமாகி விட்டனர்.

“உன்னைக் கேட்டு தான கல்யாணத்தை முடிவு பண்ணோம்? இப்ப, இப்படி வந்து நின்னா என்ன அர்த்தம்?” எனக் கண்களில் நீரோடு கல்யாணி வினவ,

“நான்தான் எனக்கு இஷ்டம் இல்லனு சொன்னேனே அம்மா? நீங்க தான், நீ சின்னப்பிள்ள உனக்கு வெளி உலகம் தெரியாது. நாங்க சொல்லுறதைக் கேளுனு வற்புறுத்துனீங்க‌. அப்ப எனக்கு வேற வழி தெரியல.‌ அதுனால சரினு தலையை ஆட்டுனேன். ஆனா, என்னால முடியலம்மா.

ஒருத்தரைப் பத்தி எதுவும் தெரிஞ்சிக்காம எப்படிக் கல்யாணம் செஞ்சுக்கிறது? அப்படியும் நீங்க பார்த்த மாப்பிள்ளைக்கு, ஒன் டைம் கால் பண்ணேன். அவர்க்கிட்ட இருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்ல. எனக்குப் பயம் வந்துடுச்சு, அவரைக் கல்யாணம் செஞ்சா என் வாழ்க்கை எப்படி இருக்குமோனு.

அதுவும் இல்லாம எனக்கு விஜியைப் பிடிச்சு இருந்துச்சு. நீங்க எல்லாம் கல்யாண வேலையில தான் பிஸியா இருந்தீங்களே தவிர, என்னோட மனநிலையைப் பத்தி யோசிக்கவே இல்ல. அப்புறம் நான் மட்டும் ஏன் உங்களைப் பத்தி யோசிக்கணும்.? அதான், கிளம்பி வந்துட்டேன்.

விஜி நல்லவன்.‌ என்னைப் பார்த்துப்பான். நீங்க கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல!” என்று பதில் அளித்தாள் சஞ்சனா.

“இப்ப, எல்லாம் பார்க்க லேசா தான் தெரியும் பாப்பா. ஆனா வாழுறது அவ்வளவு ஈசி இல்ல. உனக்கு, நாங்க பார்த்த மாப்பிள்ளை பிடிக்கலனா பரவாயில்ல. கல்யாணத்தை நிறுத்திடலாம். அதுக்குனு வேற ஒருத்தரோட வீட்டுல வந்து இப்படி உட்காருறது சரி இல்ல. வா, பாப்பா.” ‌என நடராஜன் மகளை அழைத்திட,

“இல்லப்பா. நான் வரல. விஜிக்கூட தான் இருப்பேன்‌. அவனைத்தான் கல்யாணம் செஞ்சுக்குவேன்!” என்று பிடிவாதமாய் உரைத்தாள்.

பெற்றவர்கள் எவ்வளவு பேசியும் அவள் விட்டுக் கொடுப்பதாய் இல்லை. தான் எடுத்த முடிவிலேயே உறுதியாய் நின்றாள்.

விஜயனின் குடும்பப் பின்னணியும் செல்வாக்கும் நன்றாய் தெரியும் என்பதால், ‘மகள் நன்றாய் இருந்தால் போதும்!’ என்ற எண்ணத்தில் சஞ்சனாவின் விருப்பத்திற்கே விட்டு விட்டார் நடராஜன்‌. கணவனின் சிந்தனையை அப்படியே ஏற்று, கல்யாணியும் அமைதியாய் இருந்து கொண்டார்.

இரண்டரை ஆண்டுகள் பணிசெய்து சேமித்த வங்கிக் கணக்கின் ஆவணங்கள் மற்றும் தனது கல்விச் சான்றிதழ்களுடனும், இரண்டு ஜோடி உடைகளுடனும் வெளியேறி இருந்தாள் சஞ்சனா.

காதலுடனான வாழ்வின் பயணம் மலர்ப் பாதையாக அமைந்து மகிழ்ச்சியைத் தரும்‌ என எண்ணிக் கொண்டு இருக்கிறாள், அந்தக் கற்பனையின் காதலி.

மலரின் காம்பில் முட்களும் உண்டு. அது சில நேரங்களில் வலியையும், பல சமயங்களில் கடினங்களையும் பரிசளிக்கும் என்ற புரிதல் இல்லாது, விரும்பியவனின் கரத்தைப் பற்றிக் கொண்டு புகுந்த வீட்டின் முன்பு தற்போது நின்றிருந்தாள்.

“என் வாழ்க்கையை, எனக்குப் பார்த்துக்கத் தெரியும்னு சொல்லிட்டு, நீ வீட்டை விட்டு வெளியப் போனதா எனக்கு ஞாபகம்.‌ ஜெயிச்சிட்டுத்தான் திரும்பி வருவேன்னு சொன்னது நீயா? இல்ல, உன்னை மாதிரியே வேற ஒருத்தன் இருக்கானா?”‌ என வினவிய சிவநாதனின் குரலில் ஏகத்திற்கும் கேலி நிரம்பி வழிந்தது.

“அப்ப, இதை நான் எதிர்பார்க்கல.‌ எனக்குப் பிரச்சனை இல்ல, இவ்வளவு நாளும் பசங்களோட தான் தங்கி இருந்தேன்‌. ஆனா சஞ்சுவை அங்கக் கூட்டிட்டுப் போக முடியாது.‌ அதான்.” என்று தயங்கித் தயங்கிச் சூழலை உரைத்தான் விஜயன்.

“படிப்பு, கேரியர்னு எதுலயும் அப்பன்னு என்னோட பேச்சை நீ கேட்கல. கல்யாண விசயத்துலயும் நிச்சயம் கேட்க மாட்டன்னு தெரியும். அதுனாலயே நான் உன்னைப் பத்திப் பெருசா எந்த எதிர்பார்ப்பும் வச்சுக்கல. வெளிய போய் மத்தவங்கக்கிட்ட நீ தங்க இடம் வேணும்னு கேட்டா, எனக்குத்தான் அசிங்கம். அதுனால உள்ள விடுறேன்.‌ உன்னோட ரூம் அப்படியே தான் இருக்கு. அதுலயே இருந்துக்கலாம்‌. மத்தபடி இங்க வேற எந்த உரிமையும் கிடையாது. உன்னால என்ன முடியும்னு செஞ்சுக் காட்டிட்டு, மகன்கிற உறவையும் உரிமையும் வாங்கிக்க!” என்றுவிட்டுச் சென்றார் இல்லத்தின் தலைவர்.

நடந்ததைப் பார்த்து இருந்த வீட்டுப் பணிப்பெண், “தம்பி தம்பி, நில்லுங்க‌. கல்யாணம் செஞ்சு வந்திருக்கீங்க. ஆரத்தி எடுக்க வேண்டாமா‌?” என ஆலம் சுற்றி வரவேற்க, “தேங்க்ஸ் ம்மா.” என்று உரைத்து சஞ்சனாவுடன் இல்லத்திற்குள் அடியெடுத்து வைத்தான்.

கூடத்தில் விஜயனது அன்னையின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, அதற்கு முன்பு விளக்கு ஏற்றப்பட்டு இருந்தது.

ஒன்றரை வருடங்களிற்கு முன்னர் இயற்கை எய்தி இருந்தார். உடல் குறைபாடோ, மன வருத்தமோ என்று எதுவும் இல்லை அவரிற்கு. சிவநாதன் கண்டிப்பானவர் தான் என்றாலும், மனைவியிடம் அப்படி நடந்து கொள்ள மாட்டார். வாழ்ந்த மட்டும் மனைவியின் தேவைகளைக் கவனித்து, மதிப்புடனே நடத்தினார்.

நற்சாவு, பெரும் வரம் என்பர். அப்படியான இறுதி நொடிகளைப் பெற்றவர், விஜயனின் அன்னை. மதிய நேர சமையலை முடித்துவிட்டு ஓய்வாகப் படுத்தவர், எழவே இல்லை. தாயின் இறப்பிற்குப் பின்னர் தான், வீட்டுடனான அவனின் பிடிப்பும் தளர்ந்து போனது.

ஐந்து வயது வரை மகனிற்கு நாயகனாகத் தெரியும் தந்தை, பத்து வயதில் கண்டிப்பானவராக மாறி‌‌‌ விடுவார். பதினைந்து வயதில் இருவருக்கும் இடையேயான பேச்சு குறைந்து, இருபது வயதில் அவரவருக்கான வாழ்க்கைப் பாதையில் தனித்தனியாய் சென்று கொண்டிருப்பர்.

அதன் பின்னர் தான் எதார்த்தம் புரியும் மகனிற்கு, தான் இதுவரை நடந்து வந்தது தந்தை அமைத்துத் தந்த பாதை என. அதிலிருந்து தான், தனக்கான புது பயணத்தைத் துவக்கி இருப்பான் புதல்வன்.

ஈன்றவரின் நாயக பிம்பம் உடையும் பொழுது தாலிக் கொடியையும் தொப்புள் கொடியையும் இணைத்து உறவுப் பாலத்தை அமைத்து கணவனையும் மகனையும் ஒன்றாய் பயணிக்க வைப்பதே, குடும்பத்தின் தலைவி தான்.‌

அப்பாலம் அறுந்தால், வழிநடத்தல் இன்றி உறவில் மெல்ல மெல்ல விரிசல் விடத் துவங்கும். தந்தையோ தனயனோ எவரோ ஒருவர் அதை உணர்ந்து சரிசெய்திட முனைய வேண்டும். இல்லையேல், புரிதலின்மை பிரிவிற்கு முன்னுரை எழுதத் துவங்கிவிடும்.

தற்போது சிவநாதனிற்கும் விஜயனிற்கும் இடையே அதுதான் நடந்து கொண்டிருந்தது‌. இவர்களின் பட்டும் படாத உறவிற்குச் சாட்சியாய் இருந்தார், புகைப்படத்தில் இருந்த அவனின் அன்னை.

அவரை சஞ்சனாவிற்கு அறிமுகம் செய்து வைக்க, இருவருமாய் இணைந்து வணங்கிக் கொண்டனர்.

மனைவியை அறைக்கு அழைத்துச் சென்ற விஜயன், அங்கிருக்கும் வசதிகள் மற்றும் குறைபாடுகளைத் தெளிவு படுத்திவிட்டு, “நீ ரெஸ்ட் எடு. நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வந்திடுறேன்!” என்று கிளம்பினான்.

வந்த உடனேயே விட்டுச் செல்பவனைக் கண்டு மனம் பதறிட, “எங்க போற.?” எனக் கைப்பற்றித் தடுத்தாள் சஞ்சனா.

“கல்யாணம் செஞ்சிட்டா, போதுமா? அதுக்குப் பின்னாடியான லைஃபைப் பார்க்கணும்ல? இதுவரைக்கும், நான் ஒருத்தன் தான். அதுனால எதுவும் பெருசா சிரமம் இல்ல. ஆனா, இப்ப நீ வேற இருக்கியே‌? உனக்குத் தேவையானதையும் கவனிக்கனுமே‌‍? நைட் வந்திடுவேன்!” என்று அவளின் கரத்தை விலக்கிவிட்டு வெளியேறினான் விஜயன்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
0
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்