
சலனம்-8
என் பார்வை இப்போதும், அலறிக் கொண்டிருந்த அலைபேசியின் மீதே இருந்தது. கிட்டத்தட்ட அரைமணி நேரமாய், ஓயாமல் கத்தி கத்தி கடைசியாய் சத்தமில்லாமல் ஓய்ந்தது.
இந்த அழைப்பிற்குக் காரணமே நான் என்கையில், நான் எங்கணம் அழைப்பை ஏற்பது? இந்தக் காதல் வந்தாலும் வந்தது.. பொல்லாத வேலையெல்லாமே செய்ய வைக்கிறது. இப்போது சம்யூவின் எதிர்வினை என்னவாக இருக்கும்? அழைப்பை ஏற்றிருந்தால், என்ன மனநிலையில் இருக்கிறாள்? கோபமாக இருக்கிறாளா? இல்லையா? என்பதைத் தெரிந்துக் கொண்டிருக்கலாம். என நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, மீண்டும் அலைபேசி அலறியது.
இந்த முறை அழைத்தது சித்தார்த்.
“சொல்லுடா!” என நிதானமாய் கேட்டேன்.
“லூசா டா நீ? என்ன பண்ணி வச்சு தொலைச்சிருக்கிற? சம்யூவோட கெரியரையே ஒண்ணுமில்லாமல் பண்ணிட்டியே டா!” என ஹைடெசிபலில் கேட்டது சித்தார்த்தின் குரல்.
“ம்ப்ச்! காலையிலேயே ஏன்டா இப்படி கத்தறே? நான் என்ன கொலையா பண்ணிட்டேன்.?” வெகு நிதானமாய்க் கேட்டேன் நான்.
“எதுவா இருந்தாலும் சம்யூ கிட்டே, நீ ஒரு வார்த்தையாவது கேட்டுருக்கணும் விக்ரம். நீ செய்தது கொஞ்சமும் சரி இல்லை. ஆனால், உன்னை நம்பி அந்தப் பொண்ணு வந்துச்சு பாரு..!” என சித்தார்த் எதையோ சொல்ல வர,
“போதும்! உன் உடன் பிறவா தங்கச்சிக்கு சப்போர்ட் பண்ணினதெல்லாம். நீ ஃபோனை வை.. நான் அப்பறம் பேசுறேன்.!” எனச் சொல்லிவிட்டு அலைபேசியே அணைத்து, மெத்திருக்கையில் தூக்கி எறிந்தேன்.
எப்படியும் சம்யூ வருவாள், அவளின் எதிர்வினை என்னவாக இருக்கப் போகிறது? என்பதைக் காண ஆவலாய் இருந்தேன். குளித்து முடித்து, காலை உணவை முடித்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேற கதவைத் திறந்த அந்த நொடியில் வீட்டுக்குள் நுழைந்தாள் சம்யுக்தா.
முகம் கோபத்தில் செவ்வரளியாய் சிவந்திருந்தது. அவளின் மூச்சுக் காற்றின் வெப்பம் கூட, அதீத உஷ்ணமாய் இருந்தது.
“என்ன ஆச்சு சம்யூ? இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட? ஷூட் முடிஞ்சுடுச்சா?” சகலமும் தெரிந்துக் கொண்டே, சாவகாசமாய் கேட்டேன் நான்.
“ஹவ் கேன் யூ டூ திஸ் டூ மீ விக்ரம்? ஏன் இப்படி செஞ்ச? உன்னைப் போய் உண்மையாய் லவ் பண்ணினேன் பாரு என்னைச் சொல்லணும்? சொல்லித் தொலையேன்டா? ஏன் இப்படி பண்ணினே? உனக்கு என்னைப் பார்த்தால் எப்படித் தெரியுது?!” கோபமாய் கத்தியபடி சட்டைக் காலரை இரு கரத்தால் பற்றி உலுக்கினாள் சம்யுக்தா.
“நான் என்ன பண்ணினேன்? நீபாட்டுக்கு உள்ளே வந்த? என் சட்டையைப் பிடிச்ச, கோபப்படுறே? என்ன ஏதுன்னு ஒண்ணும் சொல்லாமல், கோபமாகக் கத்தினால், என்ன அர்த்தம் சம்யூ?!”
“உனக்கு எதுவுமே தெரியாது அப்படித்தானே?!” என் கண்களை மட்டும் நேராய்ப் பார்த்து, என்னை நெருங்கி நின்றபடி கேட்டாள். அவளின் விழி வீச்சை தாங்க முடியாது, விழி தாழ்த்தி,
“அதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது! வழி விடு! நான் ஷூட்டிங் கிளம்பணும்! வெளியே கிளம்பும் போது சட்டையைப் பிடிச்சுக் கசக்கிக்கிட்டு..!” என விட்டேற்றியாய் பதில் சொன்னேன் நான்.
வேண்டுமென்ற என் சட்டைக் காலரை, இரு கரங்களாலும், அழுத்தமாய் இறுகப் பற்றியவள்,
“நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்? உனக்கு சட்டை கசங்கினது தான் முக்கியமா? என் கண்ணைப் பார்த்து சொல்லுடா! நீ எதுவுமே பண்ணலைன்னு சொல்லு.. இந்த நிமிஷமே உன்னை விட்டுடுறேன்.!” என அவள் கேட்க பதில் சொல்ல முடியாமல் திணறி நின்றேன்.
இந்தப் பெண்ணை என்னோடு தக்க வைத்துக்கொள்ளும், ஒவ்வொரு முயற்சியிலுமே நான் அவளிடம், என்னை அறியாமல், தோற்றுத்தான் போகிறேன். அவள் என் கண்ணைப் பார்த்துக் கேட்ட கேள்விக்கு, அவள் விழிப்பார்த்து என்னால், பதில் சொல்லவே முடியவில்லை. அவளுக்கு நான் செய்திருப்பது, சாதாரண வியமில்லை. பச்சை துரோகம். அது எனக்கே தெரியும் எனும் போது, நான் எப்படி அவள் விழிப்பார்த்து சொல்ல? எனக்குள், என் மனதிற்குள் பிசைந்த ஏதோவொரு உணர்வு அவள் விழியைப் பார்த்துப் பேச விடாமல் தடுத்தது.
அவ்வுணர்வின் பெயர் தான் குற்றவுணர்ச்சி என்பதை காலம் கடந்த பின்பே நான் அறிந்துக் கொண்டேன். காலம் கடந்த புரிதல் என்பது, கரைந்துப் போன பனிக்கட்டிக்கு சமம் தான்.
“உன்னால் பதில் பேச முடியாது விக்ரம்.! என்னா நீதான் பண்ணினேன்னு எனக்கு நல்லா தெரியும். ரிலேஷன்ஷிப்ங்கிற பேரில், உன் கூட, சில வருடங்கள் வாழ்ந்திருக்கேனே.. இதைக் கூட என்னால் புரிஞ்சுக்க முடியாதுன்னு நினைச்சியா?”
“நான் என்ன பண்ணினேன்? நீ எதையோ கேட்டுட்டு வந்து புரியாமல் பேசுற சம்யூ!” ஏதாவது பதில் சொல்லி, தப்பித்துக் கொள்ள முயன்றேன் நான்.
“நான் புரியாமல் பேசுறேனா டா இடியட்! இந்த நியூஸ் பேப்பரில் வந்திருக்கிற ஃபோட்டோஸ் பாரு! இதெல்லாம் நம்ம கல்யாணத்தன்று எடுத்தது. உன்னோட தலையீடு இல்லாமல் இதெல்லாம் வெளியே போயிருக்க வாய்ப்பே இல்லை.!” எனச் சொன்னவள், என் சட்டைக் காலரை விடுவித்துவிட்டு, தன் கைப்பையிலிருந்து எடுத்த, கற்றையான செய்தித் தாளை என் முகத்திலேயே தூக்கி வீசினாள். என் முகத்தில் பட்டு நழுவி, கீழே விழுந்து காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தது செய்தித்தாள்.
“பிரபல இயக்குநர். விக்ரம் – நடிகை. சம்யுக்தா இரகசிய திருமணம். திருமணத்திற்கு பிறகு, நடிப்பை தொடரப் போவதில்லை என சம்யுக்தா முடிவு!” எனக் கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தி வெளியாகியிருந்தது.
உண்மையிலேயே அந்தச் செய்தி என் மனதிற்குள் பெரும் நிம்மதியைப் பரப்பியது. இனி இவள் நடிக்கப் போவதில்லை என்ற உணர்வே, என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது.
“ம்ப்ச்! இதுக்குத்தான் இந்த ஆர்ப்பாட்டமா? நீ கேட்டதைத் தானே செய்திருக்கிறேன்? ஊரறிய அங்கீரம் கேட்ட தானே? அதைத்தான் செஞ்சேன்.!” எனச் சொல்லிவிட்டு அவளைத் தாண்டி நடக்க முயன்றேன்.
“நான் ஆர்ப்பாட்டம் பண்ணுறேனா விக்ரம்? நீ பண்ணது தப்புன்னு உனக்குத் தெரியலையா? இந்த இண்டஸ்ட்ரிக்குள்ளே நுழைஞ்சு, இவ்வளவு தூரம் வளர்வதற்கு, நான் எவ்வளவு ஹார்ட் வொர்க் பண்ணிருக்கேன்னு உனக்கு தெரியும் விக்ரம்! அப்படி இருந்தும் நீ ஏன் இப்படி பண்ணின? நான் உன் கிட்டே நடிப்பை விடப் போறேன்னு சென்னேனா விக்ரம்? பதில் சொல்லுடா! நான் உன் கிட்டே சொன்னேனா?” என அறையின் சுவர்களெல்லாம் அதிரும் வண்ணம் கத்தினாள் சம்யுக்தா.
“ஏய்.. சும்மா வாயை மூடு! நீ நடிக்கிறது எனக்குப் பிடிக்கலை! அதனால் தான் இப்படி நியூஸ் கொடுத்தேன் போதுமா? சும்மா வந்து கத்திக்கிட்டே இருக்க? நீ நடிச்சு எதையும் சாதிக்கப் போறதில்லை. அதனால் பேசாமல் அமைதியாய் இரு. என்னமோ, நீ தானாக வளர்ந்த மாதிரி பேசுற.? இந்த விக்ரம் மட்டும் இல்லைன்னா, நீயெல்லாம் வந்த அன்னைக்கே அடையாளம் தெரியாமல் போயிருப்ப!” அவள் வார்த்தைகள் தந்த அழுத்தத்தில், என் மனப் பெட்டகத்தில் பதுக்கி வைத்திருந்த அத்தனை உணர்வுகளையும், என்னை அறியாமல் கொட்டியிருந்தேன்.
அவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி, கோபம் தொலைந்து, இறுகி பின் வெறுமையானது. கோபத்தில் சிவந்து தகித்துக் கொண்டிருந்த அவள் முகம், சட்டென வெறுமையான பாலைவனமாய் மாறியது.
அவள் முகம் பிரதிபலிக்கும் உணர்வு என்ன என்பதை என்னால் சுத்தமாக யூகிக்க முடியவில்லை. கண்ணீர் விட்டுக் கதறுவாள், அழுவாள், நான் ஏதேதோ கனவு கண்டிருக்க, இந்த முறையும் என் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கினாள் இந்த இராட்சசி.
“என்னை ஏமாத்திட்ட விக்ரம்! நீயொரு ஆணாதிக்கவாதி.. சேடிஸ்ட்! என் மனசு உனக்குப் புரியவே புரியாதுல்ல? ஆனால் ஒண்ணு விக்ரம்.. இதையெல்லாம் செய்தால், நான் உன்னை விட்டு விலகமாட்டேன்னு நினைச்சு தானே இதையெல்லாம் செய்ற? இதுவே உன்னையும் என்னையும் பிரிக்கப் போகுது.!” என என் முகத்தின் முன் ஆள்காட்டி விரலை நீட்டிச் சொன்னவள், அமைதியாய் அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
********
அன்றைய இரவு நான் வீடு திரும்பிய நேரம், என் வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. நிலவில்லா வெறுமையான விண்மீன் போல. கோடிக் கணக்கான விண்மீன்கள் வந்து ஒளியேற்றினாலும் கூட, விண்மீன் நிலவாகிட முடியாது தானே? அப்படித்தான் அன்றைய இரவும் இருந்தது. நுழைவாயிலின் முகப்பு விளக்கு மட்டும் ஒளிர்ந்துக் கொண்டிருக்க, நானும் சம்யுவும் தங்கியிருந்த தளம் முழுதுமே இருளில் மூழ்கிக் கிடந்தது.
என்னிடம் அவள் சண்டையிட்ட போதும் கூட, எனக்காக காத்திருப்பாள், ஏன் இப்படிச் செய்தேன்.? என நியாயம் கேட்பாள் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அவள் காணாமல் போவாள் எனக் கனவிலும் நினைக்கவில்லை.
“சம்யூ..!”
“சம்யூ.. எங்கே இருக்கே?”
“சம்யூ..! உன்னைத்தான் கூப்பிடுறேன்!”
என் மனம் அவள் இங்கே இல்லை என உணர்ந்த பிறகும், ஒரு நப்பாசையில் அழைத்துப் பார்த்தேன்.
“சார்! மேடம், நீங்க கிளம்பின கொஞ்ச நேரத்திலேயே காரை எடுத்துட்டு கிளம்பிட்டாங்க!” எனப் பணிப்பெண் அவசரமாய் வந்து தகவலைத் தர,
“எதாவது சொன்னாங்களா?” எனக்கான தகவல் விட்டுப் போயிருப்பாளோ, என்ற எண்ணத்தில் கேட்டுத் தொலைத்தேன். பணிப்பெண் இடவலமாய் தலையசைத்து மறுக்க, எனக்குள் ஏமாற்றம் சூழ்ந்தது.
“நீங்க போங்க! நான் பார்த்துக்கிறேன்..!” எனச் சொல்லிவிட்டு, விளக்குகள் ஒளிர்வதற்கான விசையை அழுத்திவிட்டு, படிகளில் ஏறத் துவங்கினேன்.
“சார்! சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?” என்ற பணிப்பெண்ணின் குரலுக்கு வேண்டாமென தலையாட்டி மறுத்துவிட்டு, எங்கள் அறைக்குள் நுழைந்தேன். அந்த அறை முழுதும், அவள் வாசம் இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தது. சட்டையை அவிழ்த்து வீசிவிட்டு, படுக்கையில் விழுந்தேன். அவளில்லாத அறை, சீதையில்லா அசோகவனமாய் தெரிந்தது.
சீதையில்லாமல், அசோகவனத்தில் சிக்கிக் கொண்ட இராமனாய் என் மனம் தவித்தது.
‘ஒவ்வொரு முறையும், இவளைத் தொலைத்து விட்டு, தொலைத்து விட்டுத் தேடுவதே என் வாடிக்கையாக இருக்கிறது. சின்னக் குழந்தையைப் போல், எங்காவது ஒளிந்துக் கொண்டும் ஆட்டம் காட்டுகிறாள். என் மனம் படும் பாடு புரியாமல்!’ என யோசித்தபடியே கண்களை மூடினேன்.
கண்களுக்குள் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டினாள் சம்யுக்தா.
‘எங்கே சென்றிருப்பாள்?’
யோசனைகளும், யூகங்களும் எனக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. கண்களை மூடியபடியே அலைபேசியைக் கைகளால் தேடி, அவள் எண்ணுக்கு அழைத்தேன். அழைப்பு சென்றுக் கொண்டே இருந்ததே ஒழிய, அவள் ஏற்கவே இல்லை.
“சம்யூ! எங்கே இருக்கிறாய்?” எனக் குறுஞ்செய்தி அனுப்பினேன். நான் அனுப்பியக் குறுஞ்செய்தியைப் படித்ததன் அடையாளமாய் நீல நிறக் குறியைக் காட்டியது புலனம். குறுஞ்செய்தியைப் பார்த்தவளுக்கு பதில் சொல்ல மனமில்லையா? கையாலாகாதக் கோபம் வேறு வந்துத் தொலைத்தது.
இனி என்ன செய்வது? அவள் எங்கே சென்றிருப்பாள்? அவள் வீட்டிற்குச் சென்றிருப்பாளோ? இந்த நட்ட நடு இராத்திரியில், நான் அவளை எங்கே சென்று தேடுவது? என்றக் கேள்விகளுடன், வேறு வழியில்லாமல், சித்தார்த்திற்கு அழைத்தேன். அவனும் அழைப்பை ஏற்கவே இல்லை.
என்னுடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்துவிட்டு, தாமதமாகத்தான் கிளம்பினான் என்பதும், எனக்குத் தெரியும். ஆனாலும், நான் அழைத்ததும் நான் ஏற்க வேண்டும் என என் மனம் எதிர்பார்த்தது. இந்த அகம்பாவம் பிடித்த மனம், எப்போதும் இப்படித்தான். தான் நினைத்ததெல்லாமே உடனே நடந்துவிட வேண்டுமென அடம் பிடித்தது.
சிறு வயதிலிருந்தே, அடம் பிடித்தே அனைத்தையும் அடைந்து பழகியிருந்த எனக்கு, இப்போதும் கூட அந்தக் குணம் மாறாமல் அப்படியே இருந்தது. ஒற்றை ஆண் மகவாய் பிறந்து வளர்ந்த எனக்கு, நான் கொஞ்சம் அழுது முகம் சுருக்கினாலே கேட்டது கிடைத்துவிடும். எனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள் தான். அவள் வரும் வரை நான் தானே இராஜா. அப்போது மட்டுமல்ல, இப்போதும் எனக்கு நானே இராஜா.
அப்படி ஒருவேளை நான் கேட்டும் கிடைக்காத பொருளாய் இருந்தால் கூட, அதை எப்படி அடைய வேண்டும் என்ற சூத்திரமும் எனக்குத் தெரியும். நான் நினைத்தது கிடைப்பதற்காக யார் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அசிங்கப்பட்டாலும், எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. எனக்கு நான் மட்டுமே முக்கியம். அப்படியே வளர்ந்துவிட்டேன் மாற்றுவது என்பது மிக மிகச் சிரமம் தான்.
இப்போது மீண்டும், சம்யூவின் ஞாபகங்கள். மனம் வேறு கோபத்திலும், குழப்பத்திலும் தவித்துக் கொண்டிருந்தது. என்னிடம் சொல்லாமல் தானே போனாள்? போய்த் தொலையட்டும்.. என நினைத்தாலும், மனதிற்குள் படபடப்பாய் இருந்தது. ஒருவேளை எங்காவது போய், ஏதாவது செய்துக் கொண்டால்..? நினைத்த மாத்திரத்தில் நெஞ்சம் நடுங்கியது. இந்த நடுநிசியில், உறங்காமல் என்னைப் புலம்ப வைத்துவிட்டாளே இராட்சசி. எனப் புலம்பியபடியே, உடையை மாற்றி, இலகு உடையை அணிந்துக் கொண்டு மகிழுந்தின் சாவியையும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
ஓட்டுநரைத் தவிர்த்துவிட்டு, தரைதளத்தில் நின்றிருந்த மகிழுந்தைக் கிளப்பிக் கொண்டு வெளியேறினேன். எங்கே செல்வது? முதல் கேள்வி என் மனதில் உதயமானதும், நாங்கள் வசித்த பழைய வீட்டில் இருப்பாளா? இல்லை, அவள் வீட்டிற்குச் சென்றிருப்பாளா? குழப்ப மேகங்கள் என் மனதிற்குள் முகாமிட்டது.
முதலில் அவள் வீட்டிற்குச் சென்று பார்த்துவிடுவோம், என முடிவு செய்தவனாய், வாகனத்தைக் கிளப்பினேன். கொஞ்ச தூரம் செல்வதற்குள்ளே, ஏசிக் காற்றிலும், எனக்கு வியர்த்து வழிந்தது. உள்ளத்தின் உஷ்ணம், உடலிலும் பரவியதோ என்னாவோ? ஏசியை அணைத்துவிட்டு, பக்கவாட்டு ஜன்னல் திறப்பை இறக்கினேன். சில்லென்ற காற்று என் முகம் தழுவியது.
அவளில்லா இரவின் தனிமையின் வெற்றிடங்களை நிரப்ப, இசையை ஒலிக்க விட்டேன். மகிழுந்து முழுதும் இசை நிறைந்து வழிந்தது.
“தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே
நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன்
போல வருவேன் வருவேன்
அனுதினம் உன்னை ஆயிரம் கையால்
தொடுவேன் தொடுவேன்
சூரியனே சூரியனே
தாமரை முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து கொண்டே
விரல் நீட்டி திறக்கிறாய்..!”
என நான் என்றோ நிறுத்தி வைத்திருந்த பாடல் இடையிலிருந்து ஒலிக்க, மீண்டும் மீண்டும் அவள் ஞாபகங்கள் எனக்குள் புயலைப் போல் மையமிடத் துவங்கியிருந்தது.
அவளுக்கும் எனக்குமாய் பிடித்த பாடல் தொகுப்புகளை இடைவிடாது கேட்டுவிட்டு, அவள் வீட்டிற்குச் சென்று, அவளில்லாமல், ஏமாற்றமாய் திரும்பி, மீண்டும், நாங்கள் வசித்த பழைய வீட்டிற்குச் சென்று பார்த்துவிட்டு, அங்கும் அவள் இல்லாமல் போக, கோபமும், ஆத்திரமும் உள்ளே கொதித்துக் கொண்டிருக்க, நான் வீடு வந்து சேரும் போது, கிட்டத்தட்ட விடிந்திருந்தது. என் இரண்டு நாள் உறக்கம், அவளாலும், அவள் நினைவுகளாலும், களவாடப்பட்டிருக்க, களைப்பாய் நான் வந்து சேரும் போது, என் வீட்டு போர்டிகோவில் அவளின் மகிழுந்து நின்றது.
“நான் இவளைத் தேடி எங்கெங்கோ, அலைந்துக் கொண்டிருக்க, இவள் இங்கே இருக்கிறாள். ஒரு கால் செய்து சொல்வதற்குக் கூட, இவளுக்கு வலிக்கிறதா?” என கோபத்தோடு எனக்குள் பேசியபடியே, கதவைத் திறந்து, அவசரமாய் படிகளைக் கடந்து, எங்கள் அறையை நோக்கிப் போனேன். விடிய விடிய ஒருபொட்டுக் கூட உறங்காமல், நான் இவளைத் தேடிக் கொண்டிருக்க, இவளோ, நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள்.
“சம்யூ!”
“ஏய் சம்யூ!”
“எழுந்திரு டி!”
கோபமாய் அவளை உலுக்கி எழுப்பினேன்.
“தூக்கம் வருது விக்ரம்! எதுவா இருந்தாலும், மார்னிங் பேசலாம்! போய் தூங்கு.! குட் நைட்!”
என அவள் திரும்பிப் படுக்க, என் கோபம் எல்லையைக் கடந்தது.
“உனக்கு என்னைப் பார்த்தால் பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா டி? இங்கே ஒருத்தன் விடிய விடிய தேடிட்டு இருக்கேன். எங்கே டி போய்த் தொலைஞ்ச?!” எனக் கத்தியபடியே அவளை உலுக்கி எழுப்பினேன்.
“ம்ப்ச்! கையை விடு விக்ரம்!” என என் கரத்தினை வேகமாய் உதறியவள்,
“நான் எங்கே போனால் உனக்கென்ன? நீ உன் வேலையைப் பார்க்க வேண்டியது தானே? உன்னை யார், விடிய விடிய என்னைத் தேடச் சொன்னது?” மார்பின் குறுக்கே கையைக் கட்டியபடி, எட்ட நின்று கேள்வி கேட்டாள் சம்யுக்தா.
“என்ன டி கேள்வி இது? நீ எங்கே போனால் எனக்கென்னன்னு என்னால் இருக்க முடியாது! எங்கே போனாலும் சொல்லிட்டுப் போய் பழகு!” வார்தைகளில் கூடுதல் அழுத்தத்துடன் சொன்னேன் நான்.
“நீ என்கிட்டே சொல்லிட்டுத்தான் போறியா விக்ரம்? என்னோட கனவுகளையும், அடையாளத்தையும் அழிச்சுட்டு, எனக்கென்னன்னு போய்ட்ட, நான் சும்மா இருப்பேன்னு நினைக்கிறியா? நான் ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லை. திருவிழாவில் தொலைஞ்சு போறதுக்கு. ஸோ, உனக்கு என்னைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது. உன் டௌட்ஸ் க்ளியர் ஆகிடுச்சா? இப்போ போய் தூங்கு!”
நிதானமாய் சொல்லிவிட்டு அவள் படுக்கையை நோக்கி நகர, அவள் கரம் பிடித்து இழுத்து நிறுத்தினேன் நான்.
“நீ என்னோட வொய்ஃப், நீ எங்கே போறன்னு எனக்கு தெரிஞ்சாகணும்!” அவள் கரத்தினை விடாமல் அழுத்தமாய் நின்றேன்.
“ஓஹோ.. பாரேன்.. நான் உன்னோட வொய்ஃப்ன்னு உனக்கு ஞாபகம் இருக்கு. நான் உன் மனைவி தான். அடிமை இல்லை. நீ எப்படி என் கிட்டே நடந்துக்கறியோ, அப்படி தான் நானும் உன் கிட்டே நடந்துப்பேன். நான் எப்படி இருக்கணும்ன்னு எதிர்பார்க்கிறியோ, அதே மாதிரி நீ முதலில் நடந்துக்கோ.. அப்பறம் என்கிட்டே எதிர்பார்க்கலாம்.!” இந்த முறையும், அவள் பதிலில் நான் அசந்து போய் தான் நின்றேன்.
ஆனாலும், அவள் என்னை விட தெளிவானவள் என்பதை ஒப்புக்கொள்ள என் ஆண்மனம் சம்மதிக்கவே இல்லை.
“ஆயிரம் தான் நீ சொன்னாலும், நான் ஒரு ஆண்..!” திமிராய் சொல்லிவிட்டு அவள் முன் நிமிர்ந்து நின்றேன்.
“நீ ஆம்பிள்ளை தானே? கடவுள் இல்லையே?!” ஒற்றைக் கேள்வியில் சாதாரணமாய் என்னை வீழ்த்திவிட்டு,
“அல்ரெடி, ஐ அம் ஸோ டயர்ட் விக்ரம்! ப்ளீஸ் என்னைத் தூங்க விடு!” எனச் சொன்னவள், மீண்டும் அதே இடத்தில் படுத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.
எனக்குத்தான் அவள் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. விடையில்லை எனத் தெரிந்தும் கேள்வி கேட்டது அவள் தவறு தானே? அவள் நான் படித்த பாடப்புத்தகத்திற்கு அப்பாலிருந்து கேள்வியைக் கேட்டுவிட்டாள். அதாவது அவுட் ஆஃப் சிலபஸ். என யோசித்தப்படியே நிமிர்ந்தேன்.
இப்போது நான் தான் அங்கே தேவையில்லாத ஆணியாய் நின்றுக் கொண்டிருந்தேன்.
என்ன செய்தாலும், இவளை என்னால் வெல்ல முடியவில்லையே? என்ற யோசனையோடு நான் நின்றுக் கொண்டிருக்க,
“நீயும் போய் தூங்கு விக்ரம்! விடிஞ்சிருந்தாலும், இன்னும் வெளிச்சம் வரலையே.. காலையிலேயே உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு..!” எனச் சொல்லிவிட்டு, மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.
“இவள் என்ன செய்திருப்பாள்? நாள் முழுதும் எங்கே சென்றிருந்தாள்? காலையில் அவள் முகத்தில் விரவியிருந்த வெறுமை இப்போதில்லை. அவள் முகத்தில் அதீத களைப்பையும் மீறி ஒரு தெளிவு இருந்ததை என்னால் உணர முடிந்தது. வேண்டுமென்றே அவள் உறங்குவது பிடிக்காமல், கதவை அடித்துச் சாற்றிவிட்டு, வழக்கம் போல், மெத்திருக்கையில் வந்து அமர்ந்தேன். கண்கள் தீயாகக் காந்திய போதும், தூக்கம் வர மறுத்தது.
தொலைக்காட்சியை உயிர்ப்பித்து, அதீத சத்தத்துடன் வைத்துக் கொண்டேன். அவள் தூக்கத்தைக் கெடுப்பதற்கான இந்த சின்ன முயற்சியில் என் மனம் கொஞ்சமாய் சந்தோஷப்பட்டுக் கொண்டது.
“என்ன சர்ப்ரைஸா இருக்கும்? நான் வெளியிட்ட திருமண செய்தியும், அவள் நடிக்கப் போவதில்லை என்ற செய்தியுமே, அவள் கெரியரை மொத்தமாய் முடிக்கப் போதுமானது. எந்த இயக்குநரும், திருமணமான நடிகைக்கு அவ்வளவு எளிதில் வாய்ப்பு கொடுப்பதில்லை. அதிலும் என் மனைவி எனும் போது, அவளுக்கு வாய்ப்புக் கொடுக்க, யோசிக்கத்தான் செய்வார்கள். அப்படியிருக்கையில், இவள் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறாள்? எனக்குத் தெரியாமல், அவள் எதுவும் செய்துவிட முடியாதே..!” என்ற கேள்விகளுடன் விடிந்த பின்னும் உறங்காமல், விடியலுக்காக காத்திருந்தேன் நான்.
“வரங்களே சாபங்கள் ஆகுமென்றால்..
இங்கே தவங்கள் எதற்காக..?”
(கவிக்கோ.அப்துல் ரகுமானின் வரிகளிலிருந்து)

