Loading

அத்தியாயம் 9

 

‘கெட்டிமேளம் கெட்டிமேளம்.’ என்ற குரலில் மங்கல வாத்தியங்கள் முழங்க, உறவுகள் மற்றும் சுற்றத்தார் அட்சதை தூவிட, கனியின் கழுத்தில் மஞ்சள் கயிறைக் கட்டி மூன்று முடிச்சிட்டான் நவநீதன்.

ஆடவனுடன் இணைந்து அக்கினியை வலம் வந்த பாவைக்கு, நடப்பது எல்லாம் கனவு போலவே தோன்றியது‌. இன்னுமே நம்பிட இயலவில்லை.

மூன்று தினங்களிற்கு முன்னர் அவளிடம் வழி கேட்டு பின்னால் வந்தவன், தற்போது முன்நின்று கரம் பற்றி அழைத்துச் செல்கிறான்.

அவன் தான், கீழ் வீட்டுப் பெண்ணிற்கு நிச்சயம் செய்து இருக்கும் மாப்பிள்ளை என்று அந்நொடி வரைக்குமே தெரியாது கனிக்கு. அவ்வுறவு அப்படியே வெட்டுப்பட்டு, இவளுக்கு மணமகனாய் மாறுவான் என்றும் அறியவில்லை.

அடுத்த நொடி வியப்புகள் தானே, வாழ்க்கையின் அழகு. அப்படியான ஒரு நிகழ்வு தான் அவளின் வாழ்வில் அரங்கேறிக் கொண்டிருந்தது.

ராஜகணபதி இல்லத்திற்கு வந்து பேசியது யாவும்‍, அப்படியே காட்சியாய் கண்முன் விரிந்தது‌.

நடராஜன் கல்யாணி தம்பதியின் உறவுகளும், நவநீதனின் குடும்பப் பக்க உறவுகளும், நின்று போன திருமணத்தைப் பற்றி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

‘மகனே மனம் சமாதானம் ஆகி கிளம்பிச் சென்று விட, இனியும் இங்கு பேசுவதில் எந்த பயனும் இல்லை!’ என ராஜாவும் புறப்படத் தயாரானார்.

சஞ்சனா வீட்டில் இருந்து வெளியேறியது அதிகாலையில் தெரிந்ததும், பந்தக்கால் ஊன்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தவர்கள் அப்படியே இங்கு ஓடிவந்து விட்டனர்.

நீர் கூட அருந்தவில்லை. மகனின் திருமணம் நடைபெறாது என்ற ஏமாற்றமும், சுப நிகழ்வு நின்று போனதால் அடைந்த வலியும் உடலைக் கொஞ்சம் சோதித்துதான் பார்த்து விட்டது.

ராஜா சோர்வாய் இருக்க, செல்வாம்பிகை நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.

“ம்மா.. என்ன செய்யிது உனக்கு.?” எனக் கணவர் பதற்றத்துடன் வினவ, “நெஞ்சைக் கரிக்கிற மாதிரி இருக்குங்க. குடிக்க தண்ணி வேணும்!” என்றார் துணைவி.

சஞ்சனாவின் இல்லத்தில் நீர் வாங்கி அருந்த இருவருக்குமே மனம் இல்லை‌. தண்ணீர் பாட்டில் விற்கும் அளவிற்கு, அருகே இருந்த பெட்டிக் கடைகள் எதுவும் பெரியது இல்லை.

கீழ் வீட்டில் நடக்கும் கலவரத்தைப் பார்த்து விட்டு, கனியைத் தனியே விட்டுச் செல்ல மனம் இன்றி, அன்றைய தினம் வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்தார்‌ காளீஸ்வரி.

மகனைப் பள்ளியில் விட்டுவிட்டு அப்படியே நியாய விலைக் கடைக்கும் சென்று வரலாம் எனச் செல்வாவுடன் இறங்கி வர, “அம்மா, குடிக்கக் கொஞ்சம் தண்ணி கிடைக்குமா.?” என வினவினார் ராஜா.

அமர்ந்து இருந்த அம்பிகையை ஒருமுறை பார்த்தவர், “ஏய் கனி, குடிக்கிறதுக்கு ஒரு பாத்திரத்துல தண்ணியும், செம்பும் எடுத்துட்டு வா.” எனக் குரல் கொடுக்க, அடுத்த மூன்றாவது நிமிடம் சிறிய அளவிலான பானையுடன் கீழே வந்தாள் ஆசைக்கனி.

அம்பிகைக்கு மட்டும் அல்லாது அவர்களுடன் வந்த மற்றவர்களின் தேவையையும் கேட்டு தாகத்திற்கு நீரைத் தர, ராஜகணபதிக்கு ஏனோ கண்ட அந்நொடியிலேயே கனியைப் பிடித்துவிட்டது.

“மேல போயி வீட்டுல ஃபேனை போட்டு வேணும்னா கொஞ்ச நேரம் உட்காருங்க. நான், கடை வரைக்கும் போயிட்டு வர்றேன். ஏய், பார்த்துக்கடி!” எனப் பெறாத மகளிடம் உரைத்துவிட்டுக் காளீஸ்வரி செல்ல, “உன்னோட பேரு என்னம்மா.?”‌ என்று விசாரித்தார் அம்பிகை.

“ஆசைக்கனி ம்மா. தண்ணி போதுமா? இன்னும் கொஞ்சம் தரவா‌?”

“இல்லம்மா போதும்.‌ ரொம்ப நன்றி!”

“இதுல என்னம்மா இருக்கு.? காபி எதுவும் குடிக்கிறீங்களா? போட்டுக் கொண்டு வரவா?”

“அதெல்லாம் வேணாம். உன்னோட அம்மாக்குத் தெரிஞ்சா சத்தம் போடப் போறாங்க.”

“சித்தி இதுக்கு எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.”

“சித்தியா.? அப்ப,‌ உன்னோட அம்மா?”

“எனக்கு எட்டு வயசு இருக்கும் போதே இறந்துட்டாங்க. சித்தியை அப்பா ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அவங்கதான் இப்ப என்னைப் பார்த்துக்கிறாங்க.”

சட்டென்று ஓர் அமைதி நிலவியது அவ்விடத்தில்.

“சித்தி பாத்திரத்தைக் கழுவி வைக்கச் சொன்னாங்க. நான் போய் வேலையைப் பார்க்கிறேன். ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க அம்மா.” என்றுவிட்டு அவள் நகர, “உன் வயசு என்ன?‌” என வினவினார்‌ ராஜா.

படிகளில் ஏறிக் கொண்டிருந்தவள் திரும்பிப் பாராமல், “இருபது.” என்றவாறே செல்ல, அருகே இருந்த மனைவியைப் பார்த்தார் அவர்.

“என்னங்க.?”

“இந்தப் பிள்ளையைப் பத்தி‌ என்ன நினைக்கிற.?”

“நல்லப் பிள்ளயா தான் தெரியிது. ஏன்.?”

“நம்ம நவநீக்குச் சரி வரும்னு தோணுது.”

அம்பிகை திகைத்து, “திடீர்னு எப்படி? சும்மா நாலு வார்த்தைப் பேசுனதை வச்சு, இப்படி ஒரு முடிவுக்கு வர்றது சரியா தெரியல.”

“நாம பல தடவை யோசிச்சுப் பார்த்து நிதானமா பேசி எடுக்கிற முடிவைக் காட்டிலும், இதுமாதிரி சட்டுனு எடுக்கிறது தான் சரியா வாழ்க்கைக்குப் பொருந்திடும். அந்தப் பிள்ளையோட சித்தி வரட்டும். பேசிப் பார்க்கலாம்!” என்றவர் காத்திருந்து காளீஸ்வரி வரவும் பேசியே விட்டார்.

“உங்க வீட்டுக்காரரு எங்கம்மா.?” என விசாரிக்க, “அவரு திருப்பூர்ல வேலை பார்க்கிறாரு. லீவ் நேரத்துல, ஊருக்கு வந்து போவாரு.”

“இன்னைக்கு எதுவும் வரச் சொல்ல முடியுமா.?”

“ஏங்க ஐயா திடீர்னு கேட்கிறீங்க? எதுவும் விவகாரமா?”

“ஆமா ம்மா..‌” எனத் தலை அசைத்தவர், “வீட்டுக்குப் போய் பேசலாமா? வெளிய நின்னு பேசுறது அவ்வளவு நல்லா இருக்காது!” என்றிட, அழைத்துச் சென்றார் காளீஸ்வரி.

ராஜாவும் அம்பிகையும் வீட்டிற்குள் செல்ல, உடன் வந்த மற்ற உறவினர்கள் மாடியில் வெளிப்பக்கம் மீதம் இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

காலைப் பொழுது என்பதால், சூரியன் அப்பொழுதுதான் தனது பயணத்தைத் துவக்கி இருந்தான். அதனால் அனல் எதுவும் இன்றி, சற்று இயல்பாகவே இருந்தது வானிலை.

“சொல்லுங்க ஐயா..”‌ எனக் காளீஸ்வரி ராஜாவிடம் கேட்டிட,

“அம்மா நடந்தது எல்லாம் உங்களுக்கு இப்ப தெரிஞ்சிருக்கும். மூனு நாள்ல கல்யாணத் தேதி குறிச்சிருக்கு. இனி ஒவ்வொரு சொந்தக்காரங்களுக்கும் கூப்பிட்டு விசேஷம் நின்னுடுச்சு நீங்க வரவேணாம்னு சொல்லுற அளவுக்கு மனசுல திடம் இல்ல.‌

இப்ப விட்டா, எங்க மகனைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைக்கிறதும் சிரமம் தான்‌. அதுனால உங்க பொண்ணைக் கேட்டு வந்திருக்கோம். பிள்ளைய எங்க வீட்டுக்குக் கட்டித் தர்றீங்களா?” என்று நேரடியாகவே கேட்டு விட்டார்.

மதிய உணவிற்காக வாழைத் தண்டில் இருந்த நார்களை நீக்கி, அதனைச் சிறிது சிறிதாய் அரிந்து கொண்டிருந்த கனி அவர்களைப் புரியாது பார்க்க, காளீஸ்வரியோ திகைப்புடன் நோக்கினார்.

“உள்ள போ!” என்ற சிற்றன்னையின் சொல்லில் அவள் உடனே எழுந்து உள்ளறைக்குச் சென்று விட, “ஐயா! உங்களுக்கு நாங்க ஈடானவங்க இல்ல‌. சீர் சனத்தி செய்யக் கூடிய சக்தியும் திறமும் இல்லாத மனுசங்க. எங்க வீட்டுப் பொண்ணைப் போய் கேட்குறீங்களே.?”

“நீங்க எதுவுமே செய்ய வேணாம்மா. பொண்ணை மட்டும் கொடுத்தா போதும்.”

“அவ இன்னும் சின்னப் பிள்ள மாதிரி தான் இருக்கா. விபரம் பத்தாது‌.”

“விபரம் பத்தலனு சொல்ல முடியாது. எதார்த்தமா இருக்கா. என்னோட வயசுக்கு எனக்கு இருக்கிற தெளிவை விட, உங்க பொண்ணு தெளிவா தான் இருக்கா.”

“அதுங்க ஐயா..” எனக் காளீஸ்வரி திணற, “கனியோட அப்பாக்கிட்ட பேச முடியுமா?” என்றார் ராஜா.

கைப்பேசியிலேயே திருப்பதியிடம் பேசினார்.

மகளிற்குத் தேடி வந்திருக்கும் வாழ்வு‌. தங்களிற்கு இருக்கும் தற்போதைய பொருளாதார சூழலில், மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்ய வேண்டுமானால் இன்னும் ஆறேழு வருடங்கள் ஆகக்கூடும்.

‘காலத்தின் கணக்கும் கடவுளின் சித்தமும் இதுவாக இருந்தால்‍, அதை ஏன் தட்டி விடுவானேன்?’ என்று பணிக்கு விடுப்பு சொல்லிவிட்டு, உடனடியாய் அங்கிருந்து கிளம்பி விட்டார் திருப்பதி.

ஆறரை மணி நேர பயணம்‌. இதற்கிடையில் இரு குடும்பத்தாரும் ஒருவருக்கொருவர் நன்றாய் அறிமுகமாகிக் கொண்டனர்.

“கல்யாணம் முடிவு ஆகலனாலும் பரவாயில்ல. சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்து இருக்கிறதா நினைச்சுச் சாப்பிடுங்க! விடியிறதுக்கு முன்னால வந்தது. எவ்வளவு நேரம் பசியோட இருப்பீங்க.?” என்று அனைவருக்கும் சேர்த்தே சமைத்து, உணவைப் பரிமாறினார் காளீஸ்வரி.

பெரிதாய் ஒன்றும் இல்லை‌. பருப்பு, ரசம், காலையில் முன்னரே வைத்திருந்த வெண்டை குழம்பு, மோர், வாழைத்தண்டு கூட்டு, அப்பளம். அவ்வளவு தான்‌. பசிக்கு மிகத் திருப்திகரமாகவே இருந்தது உணவு.

அவரின் இந்த குணத்திற்காகவே ராஜாவிற்குக் கனியை விட்டுச் செல்ல மனம் இல்லை. அதுவரை அறிந்த, கேட்ட, பார்த்த சிற்றன்னைகளிடம் இருந்து மேன்மையானவராக தெரிந்தார் காளீஸ்வரி.

எப்பொழுதும் சற்று கடுமையுடனே கனியிடம் நடந்து கொள்ளும் குணத்திற்குப் பின்னால், அவளின் மீதான அக்கறையும் அன்பும் மறைபொருளாய் காட்சி அளித்தது.

“வச்ச காயை வீணாக்காத. ஒழுங்கா சாப்பிடு!”‌‌ என்ற‌ கட்டளையில், தட்டில் இருந்த முழுவதையும் மீதம் வைக்காமல் காலி செய்து விட்டாள் கனி.

அதன் பின்னரான அவளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் வீட்டில் செய்திடும் பணிகளையும் கவனித்தவர்களிற்கு, வெளித்தோற்றத்தைப் போல் அவள் ஒன்றும் அத்தனை பலவீனமானவள் இல்லை எனப் புரிந்தது.

நான்கரை மணிக்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தார் திருப்பதி. பயணத்தின் இடையிலேயே ஐந்து முறைக்கும் மேல் கைப்பேசியில் அழைத்து பரஸ்பரம் அறிமுகமாகி, பேசி இருந்தனர்.

ராஜா நடத்திய நிதி நிறுவனம், அதன் பின்னர் நடந்த வாழ்க்கை மாற்றங்கள் அனைத்தையும் அறிவார் திருப்பதி. முக்கியமாய் அவரின் நேர்மை‌. அதற்காகவே தன் பெண்ணை மணம் முடித்துக் கொடுக்கலாம் என்ற மனநிலைக்கு வந்திருந்தார்.

“சொத்து சுகம்னு எங்கக்கிட்ட பெருசா எதுவும் இல்லங்க. இப்ப கல்யாணம் செய்யிறதுக்கான வசதியும் இல்ல. கனியோட அம்மா நகை, ஒரு ஏழு பவுன் இருக்கு. அதுவும் கூட ரொம்ப பழசு‌. அவ கல்யாணத்துக்குப் போட்டுட்டு வந்தது‌. இருபத்திரண்டு வருஷம் ஆச்சு. இப்ப அதை மாத்துற அளவுக்கு அவகாசம் இல்ல.

வேற, புதுசா வாங்குறதுக்கான சூழ்நிலை இல்ல. கொஞ்ச பணம் சேர்த்து வச்சிருக்கோம். பண்ட பாத்திரம் வாங்கித் தர முடியும். கல்யாண செலவுக்குனு கொஞ்சப் பணம் கொடுக்கிற திடம் இருக்கு. இதுதான் எங்க நிலைமை.

அப்புறம் என்னோட மகளுக்கு நீங்க நகை நட்டு வாங்கித் தரணும், வசதியா வச்சுக்கணும்னு எல்லாம் நான் எதிர்பார்க்கல. பிள்ளையோட மனசைக் கஷ்டப்பட விடாம பார்த்துக்கிட்டா, போதும். இதுக்குச் சம்மதம்னா, மேல பேசுவோம்.” என நேரடியாகவே உரைத்தார் திருப்பதி.

அவரின் இந்த வெளிப்படையான பேச்சு நவனின் பெற்றோரிற்கும் பிடித்துவிட, “முதல்ல ஏற்பாடான கல்யாணம் நின்னு போன விபரம் உங்களுக்குத் தெரியும். எங்களுக்கும் பெருசா எந்த எதிர்பார்ப்பும் இல்ல. பிள்ள குணமா இருந்தாலே போதும். கனிக்கு இதுல சம்மதம் தானானு, கொஞ்சம் எங்க முன்னாடியே கேட்க முடியுமா‌?” என்று கேட்டார் அம்பிகை.

நாள் முழுவதும் அறைக்குள் இருந்தவளிற்கு, நடந்த அனைத்துப் பேச்சு வார்த்தைகளும் தெரியும். அத்தோடு புரியவும் செய்தது‌.

அவளிற்கு கல்யாணக் கனவென்று எதுவும் கிடையாது‌. அதேபோல் வருங்கால கணவனை நினைத்து எதிர்பார்ப்பும்‌ இல்லை.

திருமண வாழ்வைப் பற்றிய புரிதல் அற்று, தனது குடும்பத்தின் நிலையை சிறு வயதில் இருந்தே பார்த்ததால், ஒரு குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற அடிப்படையை மட்டும் உணர்ந்து இருந்தாள்.

அவளுடன் பேசிய சிறிது நேரத்திலேயே அறிந்து கொண்டனர், குடியிருக்கும் அத்தெருவைக் கடந்து வெளியுலகம் தெரியாதவள் என.

பெற்றோரின் சொல்லைக் கேட்டு நடப்பதும், வீட்டு வேலைகளைச் செய்யும் பாங்கும், எச்சூழலையும் சமாளித்துக் கொள்வாள் என்ற புரிதலைக் கொடுக்க, முழு மனதுடன் வெற்றிலை பாக்கை மாற்றிவிட்டு வந்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்