Loading

தனக்கு எதிரில் அமர்ந்திருந்தவனைப் பார்த்து யோசனையுடன்,”இப்போ என்ன ஆச்சு மிஸ்டர். அபூர்வன்? ஆரா நல்லா தானே இருக்கிறாள்?”எனக் கேட்டார் கலைமகள். 

 

அதற்கு அவனோ,”இதுக்கு எனக்கு என்னப் பதில் சொல்றதுன்னுத் தெரியலை மேம்! நான் இப்பவும் உங்ககிட்ட ஒரு உதவி கேட்டுத் தான் வந்திருக்கேன்”என்றவனிடம், 

 

“என்னன்னு சொல்லுங்க”என்றிருந்தார்.

 

“நான் மிஸஸ். கனிஷ்காவை மீட் பண்ணனும் மேம். அவங்களோட அட்ரஸ் இல்லைன்னா மொபைல் நம்பரை எனக்குக் கொடுங்க. நான் அவங்க கிட்ட பேசியே ஆகனும்”என அவரிடம் தீர்க்கமாக உரைத்து இருந்தான் அபூர்வன். 

 

“அது தான் நான் அன்னைக்கே அதுக்கான பதிலை உங்ககிட்ட சொல்லிட்டேனே சார்?”என்றக் கலைமகளிடம், 

 

“அவங்க நேத்து எங்க வீட்டுக்கு வந்து எங்க எல்லார் கூடவும் பேசிட்டுத் தான் போனாங்க மேம்”என்றவனோ, 

 

முந்தைய நாள் தங்களது இல்லத்திற்கு வருகை தந்த கனிஷ்காவோ தங்கள் அனைவரிடமும் பேசி விட்டுப் போனதை அவரிடம் விரிவாக விவரித்து முடித்திருந்தான் அபூர்வன். 

 

அதைக் கேட்டதும்,”ஓஹ்! அப்படின்னா சரி. அவங்க இங்கே தான் வேலை பார்க்கிறாங்க. நான் இப்போ வரச் சொல்றேன். நீங்க விசிட்டர்ஸ் அறையில் வெயிட் பண்ணுங்க”என்று அவனுக்கு அதன் வழியைக் கூறி அனுப்பி வைத்து விட்டு அங்கே இருந்த பணியாளரிடம் கனிஷ்காவை அழைத்து வருமாறு கூறி அனுப்பினார் கலைமகள். 

 

தனது மாணவிகளுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருந்த கனிஷ்காவோ, பணியாள் வந்து தகவலைச் சொன்னதுமே வேறு ஒரு ஆசிரியரைத் தற்காலிகமாக வகுப்பைக் கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுத் துறைத்தலைவரைக் காணச் சென்றாள்.

 

இதே சமயம் அந்தப் பார்வையாளர்கள் அறையில் இருந்த அபூர்வனோ,”ஓஹ்! நாம இங்கே முதல் தடவை வந்து போனதைப் பத்தி இந்தப் பொண்ணு தான் ஆராவுக்குச் சொல்லி இருக்காங்க”என்று தனது சந்தேகத்தை உறுதி செய்து கொண்டான் அபூர்வன்.

 

அப்போது தனது துறைத்தலைவரிடம் வந்த கனிஷ்காவோ,”மேம்! நீங்க என்னைக் கூப்பிட்டதாகச் சொன்னாங்க”என்றிருந்தாள்.

 

“ஆமாம் கனிஷ்கா மேம். உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்கார். அவரை நாங்க விசிட்டர் ரூமுக்குள்ளே வெயிட் செய்ய வச்சிருக்கோம். நீங்கப் போய் அவரைப் பாருங்க. இங்கே வேலை பார்க்கிற ஒரு சிலர் அந்த ரூமுக்கு வெளியே வெயிட் பண்ணுவாங்க. அதனால் நீங்க தயங்காமல் அவர் கிட்ட போய்ப் பேசலாம்”என்றதுமே, 

 

“அது யாரு மேம்? அவங்களோட பேர் என்ன?”என்று அவரிடம் குழப்பத்துடன் வினவினாள் கனிஷ்கா. 

 

“அவர் பேர் அபூர்வன். அவர் நம்மளோட ஆராத்ரிகாவோட ஹஸ்பண்ட். அவர் உங்ககிட்ட ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசனும்னு வந்திருக்கார். அதே மாதிரி நீங்க நேத்துக் கூட அவங்க வீட்டுக்கு நீங்க போயிட்டு வந்தீங்களாம். அதனால் தான் உங்களைப் பார்க்கிறதுக்குக் கேட்டதும் ஓகே சொல்லிட்டேன். இதனால் உங்களுக்கும் எந்தச் சங்கடமும் இருக்காதுன்னு நினைக்கிறேன்”என அவளுக்குப் பொறுமையாக விளக்கிக் கூறியிருந்தார் கலைமகள். 

 

அதைக் கேட்டவுடனேயே அவளது இதயம் நின்று துடித்தது எனலாம்! 

 

‘அபூர்வன் அண்ணன் இங்கே எப்படி? இந்த விஷயம் தான் முடிந்து விட்டது என்றும், இனிமேல் இதைப் பற்றித் தனது கணவன் எதுவும் கேட்க மாட்டார் என்றும் தன்னிடம் உறுதியாக உரைத்து இருந்தாளே ஆராத்ரிகா! அப்படி இருக்கும் போது இப்போது திடீரென்று அவளது கணவன் தன்னைப் பார்க்க வந்திருக்கும் நோக்கம் என்னவாக இருக்கும்?’என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, 

 

“அவரைப் பார்த்துப் பேச எனக்கும் எந்தச் சங்கடமும் இல்லை மேம். நான் போய்ப் பேசிட்டு வர்றேன்”என்று அவரிடம் தெரிவித்தாள் கனிஷ்கா. 

 

“ஓகே. விசிட்டர்ஸ் ரூமுக்குப் போங்க”எனக் கூறி அவளை அனுப்பி வைத்தவரோ, 

 

அதேபோல் அவளுக்குத் துணையாக இரண்டு பணியாளர்களையும் அனுப்பி வைத்து அவர்களை வெளியே காவல் காக்குமாறு அறிவுறுத்தினார் கலைமகள். 

 

அந்த பார்வையாளர்கள் அறைக்குள் நுழைந்ததும் அங்கே இருந்த அபூர்வனைக் கண்டுச் சில கணங்கள் பேசாமல் நின்றிருந்தாள் கனிஷ்கா.

 

ஆனால் அவளைக் கண்டதும்,”ஹாய் மிஸஸ். கனிஷ்கா. நீங்க இங்கே தான் வேலை பார்க்கிறீங்களா? நான் இங்கே முதல் தடவை வந்தப்போ உங்களை மீட் பண்ணலை! அதான் கேட்டேன்”என்று அவன் இயல்பாகப் பேசியதைக் கண்டுப் புருவத்தைச் சுருக்கி விட்டுத்,

 

தானும்,”ஆமாம் அண்ணா. நான் இங்கே தான் வொர்க் பண்றேன். நாம நேத்து தானே மீட் பண்ணோம். இன்னைக்கு என் திடீர்னு என்னைப் பார்க்க வந்திருக்கீங்க? என்ன விஷயம்?”எனச் சாதாரணமாக கேட்டாள்.

 

“நீயும், ஆராவும் எங்கிட்ட ஒரு விஷயத்தை மறைக்கிறீங்க! அதைப் பத்தி உங்கிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கத் தான் வந்திருக்கேன்ம்மா”என்று அவளிடம் கூர்மையாக மொழிந்தான் அபூர்வன். 

 

அதில் தனக்குள் உருவான அதிர்வை மறைத்துக் கொண்டு,”நாங்க உங்க கிட்ட எதை மறைக்கப் போறோம்ண்ணா? நீங்களா எதையோ யோசிச்சுக் குழப்பிக்காதீங்க!”என்றவளை அழுத்தமாகப் பார்த்தவனோ, 

 

“ஆரா எங்கிட்ட காரிகான்றப் பொண்ணோட கதையைப் பத்திச் சொன்னால் அவ வாழ்க்கையில் நடந்த எல்லா கஷ்டத்தைப் பத்தியும் எங்கிட்ட சொன்னாள். ஆனால் எனக்குக் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் காரிகான்றப் பொண்ணே அவளுக்கு ஃப்ரண்ட் ஆக இல்லைன்றதும், அவ ஆரா கூடப் படிக்கவும் இல்லைன்றதும் எனக்குத் தெரிய வந்துச்சு!”என்றவனைச் சர்வமும் ஒடுங்கிப் போய்ப் பார்த்தாள் கனிஷ்கா. 

 

“இப்போ என் பொண்டாட்டியைப் பத்தின எல்லா உண்மையையும் எங்கிட்ட நீங்க சொல்லுவீங்கன்னு நம்புறேன்!”எனச் சொல்லி விட்டு அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான் அபூர்வன்.

 

——————————–

 

இதே நேரத்தில், நிஹாரிகாவிற்குக் கனியுடனான உரையாடல்கள் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது போலான உணர்வு.

 

“நான் என்னத் தப்புப் பண்ணேன்றது இதுவரைக்கும் எனக்குப் புரியவே மாட்டேங்குது. ஆனால் அந்தக் கனி ஏன் என்னைச் சுயநலவாதின்னுச் சொன்னாள்? ஆரா அப்படி சொல்லி இருந்தால் கூட அதை ஒரு விதத்தில் ஏத்துக்கலாம்! ஆனால், என்னைப் பத்தி என்னத் தெரியும்ன்னுக் கனி அப்படி ஒரு வார்த்தையைச் சொன்னாள்?”என்று எண்ணிக் கொண்டு, தனது கல்லூரிக் காலத்தில் நடந்த நிகழ்வுகளை மீண்டும் அசை போடத் தொடங்கி விட்டாள் நிஹாரிகா. 

 

கல்லூரி ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாவிற்கு அனைத்து மாணவிகளும் ஆர்ப்பாட்டமாகச் சென்றிருந்தனர்.

 

ஆராத்ரிகாவும், நிஹாரிகாவும் தங்களுக்கு ஒதுக்கி இருந்த அறையில் கையோடு கொண்டு வந்திருந்த தோள் பைகளில் இருந்த உடைகளை அங்கிருந்த அலமாரியில் அடுக்கி வைத்தனர்.

 

அந்த இரண்டு நாட்களும் தன் தோழி நிஹாரிகாவை முகம் வாடாமல் பார்த்துக் கொண்டாள் ஆராத்ரிகா.

 

அவளது நட்பின் உன்னதத் தன்மையை அப்போது தான் இன்னும் ஆழமாக உணர்ந்து கொண்டாள் நிஹாரிகா.

 

அந்த நாட்களில் அவர்கள் அங்கு நிறைய நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டனர்.

 

அவர்களுக்குத் துணையாக வந்தப் பேராசிரியர்களும் கலகலப்பான பேர்வழிகள் என்பதால் சிரிப்பிற்கும், குதூகலத்திற்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.

 

சுற்றுலாவின் முதல் நாள் முடிந்திருக்க இரண்டாம் நாள் குளித்துத் தயாராகி லந்த ஆராத்ரிகாவோ அறைக்கு வெளியே தோழி ஒருவளுடன் பேசிக் கொண்டு இருந்த நிஹாரிகாவை அழைத்து, 

 

“நான் குளிச்சுட்டேன்டி. நீ போய் குளிச்சுட்டு வா. இன்னைக்கு எல்லாரையும் சீக்கிரமாக ரெடியாகி வரச் சொன்னாங்க”என்று அறிவுறுத்தினாள்.

 

அதில் தன்னுடன் இருந்த தோழியிடம் விடைபெற்றுக் கொண்டு இவளிடம் வந்து, 

 

“சரி ஆரா. நான் குளிச்சுட்டு வந்துடறேன்” என்றவளோ,

 

தனது உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றதும், இங்குத் தலையைச் சீவிக் கிளிப் போட்டுக் கொண்டாள் ஆராத்ரிகா. 

 

பதினைந்து நிமிடங்களில் குளியலறையில் இருந்து வந்தவளோ, 

 

” நான் போனி டெய்ல் மட்டும் போட்டுக்கிறேன் ஆரா”என்று தனது தலைமுடியைக் குதிரைவால் போட்டுக் கொண்டுத், 

 

தன் உடை அடங்கிய பையை மறுபடியும் வைத்து விட்டுத் திரும்பியவளின் சுடிதார் எதிர்பாராத விதமாக, அலமாரிக்குள் வெளியே நீட்டி இருந்த ஆணியில் மாட்டிக் கொண்டதால், அதன் பின்பக்கம் நன்றாக கிழிந்து விட்டிருந்தது.

 

“அச்சோ! ப்ச்!” என்றவளோ,

 

அப்போது தானே குளித்து விட்டு அந்த சுடிதாரை அணிந்திருந்தாள்.

 

எனவே அவளுக்கு அது உடனே கிழிந்ததை நினைத்து அழுகையே வந்து விட்டது.

 

அதில்,“என்னாச்சு டி?”என்ற ஆராத்ரிகாவோ அவளது உடையைக் கண்டு விட்டு,”ஆணியில் மாட்டிக் கிழிஞ்சுருச்சா? ப்ச்”என அந்தக் கிழிசலைப் பார்வையிட்ட போது தோழியின் பின்னங் கழுத்தில் சற்றுக் கீழே இருந்த பகுதியில் தெரிந்த அந்தச் சூட்டுக் காயம் ஆராத்ரிகாவின் கண்களுக்குத் தென்பட்டது.

 

“என்னடி இது? சூடு போட்டத் தழும்பு தானே? யார் இப்படி பண்ணது?”எனத் தோழியிடம் பதறிப் போய்க் கேட்க, 

 

அதில் தன் கண்கள் கலங்குவதை தவிர்க்க இயலாமல் அவளைப் பார்த்தாள் நிஹாரிகா.

 

“நீ முதல்ல வேற டிரஸ்ஸைப் போட்டுட்டு வா”என்றவளோ, அவளுக்கு வேறு உடையை எடுத்துக் கொடுத்து மாற்றி வருமாறு அனுப்பி வைத்தாள் ஆராத்ரிகா.

 

அதைச் செயல்படுத்தி விட்டுத் தன் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து இருந்தாள் நிஹாரிகா.

 

அவள் அழுததை மறைக்க முயன்றுள்ளாள் என்பது ஆராவிற்குப் புரிந்தது.

 

“இப்போ சொல்லு. என்ன நடந்துச்சு?”

 

“ப்ச்! சின்னத் தப்புப் பண்ணினால் கூட எங்க வீட்டில் இருக்கிறவங்க பெரிய பனிஷ்மெண்ட்ஸ் தான் கொடுப்பாங்க ஆரா. அதில் ஒன்னு தான் இந்தச் சூடு”என விரக்தியாக மொழிந்தாள் நிஹாரிகா. 

 

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து,”அப்போ சின்ன வயசிஅல ஒன்னுமே தெரியாது! முடிவு எடுக்கத் தோனாது; பயம் தான் ஃபர்ஸ்ட் வரும்! அதெல்லாம் ஓகே தான்! ஆனால் இப்போ நீ மேஜர் தானே! நல்லா படிச்சிருக்கிற, ஒரு தடவையாவது இதைப் பத்தி யோசிச்சுப் பார்த்து உங்க வீட்டாளுங்களை எதிர்த்துப் பேசனும்னு உனக்குத் தோனலையா?”என அவளிடம் காட்டமாகக் கேள்விக் கேட்டாள் ஆராத்ரிகா. 

 

தனக்குத் தோழியாக இருந்தாலும் இந்த முடிவைக் கூட யோசிக்காமல் இருப்பவளது மேல் கோபம் தான் வந்தது அவளுக்கு.

 

“இல்லைடி! சொந்தப் பேரன்ட்ஸ்ஸே இப்படி இருக்காங்கன்னு நினைச்சு உடைஞ்சுப் போய்ட்டேன்! அப்படியான மனநிலையில் தான், நான் இப்பவும் இருக்கேன். இயற்கையாகவே எனக்கு பயந்த சுபாவம் இல்லை! ஆனால் அந்தச் சுபாவம் என்னை ஆட்கொள்ளுற அளவுக்கு மனசளவுல பாதிக்கப்பட்டு இருக்கேன். அதில் இருந்து இப்போ வரைக்கும் என்னால் வெளியே வரவே முடியல”என்றிருந்தாள் நிஹாரிகா. 

 

“அது தான், மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கேன்னு நீயே சொல்லிட்டியே? அதில் இருந்து வெளியே வரவும் நீயே முயற்சிப் பண்ணலாமே? இப்போ நான் இதைக் கேட்காமல் இருந்து இருந்தால் நீ இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லி இருக்கவே மாட்ட! அது மட்டும் எனக்குக் கன்ஃபார்ம் ஆகத் தெரிஞ்சு போச்சு. உனக்கு நடந்ததை வெளியில் சொல்ல முடியாது, சொன்னால் நமக்கு இதனால் மன உளைச்சல் வரும்ன்றது உன்னோட கணிப்பு”என்று உளவியல் ரீதியாக அவள் தன்னை நன்றாக கணித்துக் கூறிய விஷயங்கள் யாவும் வியப்பை அளித்தது நிஹாரிகாவிற்கு.

 

“அதெப்படி ஆரா? உனக்கு என்னோட எண்ணம் இது தான்னுச் சரியாகப் புரிஞ்சிடுச்சு! சைக்காலஜிக்கல் ஆக அனலைஸ் செய்து சொல்ற! என்னைப் பத்தி முழு விஷயமும் தெரியாமலேயே இவ்வளவு சொல்ற?”

 

“நான் குறிப்பிட்ட வயசு வரைக்கும் ஆசிரமத்தில் வளர்ந்தேன். என்னோட அப்பா, அம்மா இறந்ததுக்கு அப்பறம், உலகத்தோட மறுபக்கத்தையும் தெரிஞ்சுக்க வாய்ப்புக் கிடைச்சுச்சு. ஹாஸ்டலில் தங்கி இருந்தப்போ என் கூடப் படிச்ச ஃப்ரண்ட்ஸ் ஷேர் செய்த விஷயங்களை வச்சு அவங்களைப் பத்திப் புரிஞ்சுப்பேன். அதே மாதிரி ஒருத்தரைப் பார்த்தவுடனே இவங்க இப்படித் தான்னுக் கடந்துப் போறப் பழக்கம் எனக்கில்லை நிஹா! அதனாலேயே உன்னை மாதிரியான நிறையப் பேரைக் கடந்து வந்திருக்கேன். அவங்க சொன்னதில் சில குணாதிசயங்கள் உனக்கும் இருக்கு”என்றவளைக் கண்டு ஆச்சரியத்தின் உச்சத்திற்கேப் போய் விட்டவளோ, 

 

“ஓஹோ! இது தான் விஷயமா? சூப்பர் ஆரா”என அவளைப் பாராட்டினாள் நிஹாரிகா.

 

“சரி! பாராட்டு எல்லாம் போதும். நீ எப்போ தைரியமாக இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளப் போற? டூர் முடிஞ்சுப் போனவுடனேயே இதுக்கான தீர்வை எடுத்துடுவ தானே?”என்றவளோ, 

 

அவள் தைரியமாக முடிவெடுக்கும் வரை அவளை விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தாள் ஆராத்ரிகா.

 

“காலேஜ் முடியட்டும் ஆரா. அதுக்கப்புறம் நான் ஒரு நல்ல வேலையைத் தேடிக்கிட்டதுக்கு அப்பறமாக கண்டிப்பாக இதுக்கு ஒரு முடிவுக் கட்றேன்! அது வரைக்கும் படிப்பில் கவனத்தைச் செலுத்துறேனே?” 

 

“நல்ல விஷயத்தைத் தள்ளிப் போடக் கூடாது நிஹா. அதுவும் உன் வாழ்க்கை விஷயத்தில் இப்படி லேட் செய்யக் கூடாது! அதுவரைக்கும் உன் உடம்பையும், மனசையும் உன் வீட்டாளுங்க எவ்வளவு காயப்படுத்த முடியுமோ, அவ்வளவு காயப்படுத்துவாங்க!”என அவளுக்கு எச்சரிக்கை விடுத்தாள் ஆராத்ரிகா.

 

“அதையெல்லாம் நான் சமாளிச்சுக்குவேன் ஆரா!”எனக்

கெஞ்சியே தோழியைச் சமாதானம் செய்து விட்டாள் நிஹாரிகா. 

 

மீதமுள்ள ஒருநாளில் தனது தோழி மனதளவில் வெகுவாக முன்னேற்றம் அடைந்திருந்ததைப் பார்த்து ஆராத்ரிகாவிற்குச் சந்தோஷமாக இருந்தது.

 

அதற்குப் பிறகுச் சுற்றுலா முடிந்து ஊருக்குத் திரும்பினர்.

 

அன்றைய நாட்களில் தனது தோழியின் அந்த அறிவுரைகள் இப்போதும் தன்னைத் தெளிவான மனநிலையில் வலம் வர வைத்துக் கொண்டு இருப்பதை எண்ணி ஆராத்ரிகாவிற்கு மானசீகமாக அதற்கு நன்றித் தெரிவித்துக் கொண்டாள் நிஹாரிகா. 

 

———————————–

 

இப்போது ஒரு ஆழ்ந்த மூச்சு எடுத்துக் கொண்டுத் தனது இரு தோழிகளின் கடந்த கால வாழ்க்கையில் வாழ்வில் நடந்தவற்றையும், அந்தச் சமயத்தில் ஆராத்ரிகாவிற்கு நடந்த ஒரு மோசமான நிகழ்வைப் பற்றியும், அதனால் அவள் அடைந்த மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலைப் பற்றியும் அபூர்வனிடம் கூறத் தயாரானாள் கனிஷ்கா. 

 

– தொடரும்

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்