Loading

“ஆரா நல்ல துடிப்பான பொண்ணு அண்ணா! நாங்க காலேஜ் படிக்கிற டைமில் சீனியர்ஸோட பகடியில் இருந்து நிஹாரிகாவையும், என்னையும் நிறைய தடவைக் காப்பாத்தி இருக்கிறாள்! அந்தளவுக்கு அவள் துணிச்சல்காரி! அதே மாதிரி இப்படி காலேஜில் நடக்கிற விஷயங்களை இவளே நல்லபடியாகப் பிரச்சினை வராமல் சாமர்த்தியமாகத் தீர்த்து வச்சிட்றதால் அவளை எங்க ஹெச். ஓ. டி – க்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அவங்க எப்பவுமே காலேஜ் முடிஞ்சதும் அவளைக் கூப்பிட்டுத் தன்னோட ரூமில் கொஞ்ச நேரம் உட்கார வச்சு அவளோட பேசிட்டுத் தான் அவளை ஹாஸ்டலுக்கு அனுப்பி வைப்பாங்க”எனத் தன் தோழியைப் பற்றிய பெருமையான விஷயங்களை எல்லாம் முதலில் அவனிடம் பகிர்ந்து கொண்டாள் கனிஷ்கா. 

 

அதில் தனது மனைவியின் அருமை, பெருமைகளைக் கேட்டு அவளை நினைத்துப் பெருமிதம் அடைந்தான் அபூர்வன். 

 

“ஆரா! அவ பிறந்து வளர்ந்த ஆசிரமத்தில் வளர்ந்து, அங்கேயிருந்து கிடைச்ச ஸ்பான்சர், ஸ்காலர்ஷிப் மூலமாகப் படிச்சிட்டு இருந்தாள்! நான் அப்போ அவளுக்கும், நிஹாவுக்கும் அவ்வளவாக நெருங்கிய தோழியாக இருக்கலை! அவங்க ரெண்டு பேரும் மட்டும் தான் எப்பவுமே ஒன்னாக இருப்பாங்க! அது ஏன்னா, நிஹாவோட வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் அப்படி!”என்றவளோ, 

 

சிறிது நேரம் மூச்சு விட்டுக் கொண்டாள் கனிஷ்கா. 

 

“தண்ணீர் குடிக்கிறியாம்மா? இல்லைன்னா, நான் டீ வாங்கிட்டு வரவா?”என்று அவளிடம் அக்கறையுடன் வினவினான் அபூர்வன். 

 

“நீங்க எல்லாம் போக வேண்டாம்ண்ணா! நான் ஆஃபீஸ் பாய் கிட்ட சொல்லிக் கேன்டீனில் இருந்து வாங்கிட்டு வரச் சொல்றேன்!”என வெளியே இருந்த பணியாளரை அழைத்து தங்கள் இருவருக்கும் தேநீர் வாங்கிக் கொண்டும், அதனுடன் சேர்த்து தனது தண்ணீர் போத்தலை எடுத்துக் கொண்டும் வருமாறு கூறி அனுப்பி வைத்தாள் கனிஷ்கா.

 

“அந்தப் பொண்ணு நிஹாரிகாவோட கடந்த கால வாழ்க்கையில் என்னம்மா ஆச்சு?”

 

“அவளோட வீட்டில் அவளை ரொம்ப கொடுமைப்படுத்துவாங்கண்ணா! அவளை எங்கேயுமே அனுப்ப மாட்டாங்க! ஏன்னா, அவங்க எல்லாரும் நிஹாரிகாவை தங்களோட வீட்டோட துரதிர்ஷ்டமாகத் தான் பார்த்தாங்க! அதே மாதிரி அவளைத் துரதிஷ்டசாலின்னு சொல்லி, சொல்லியே தான் குத்திக் காட்டி வளர்த்தாங்க!”என்றதுமே,

 

“இதையெல்லாம் எங்கிட்ட ஆரா சொல்லி இருக்காள்ம்மா!”என்றிருந்தான் அபூர்வன். 

 

“ம்ஹ்ம். அது எனக்கும் தெரியும்ண்ணா. ஆனால் அவ சொன்னது எல்லாமே நிஹாவுக்கு நடந்தது இல்லை! அதனால் தான் நான் உங்களுக்கு எல்லாத்தையும் ஆரம்பத்தில் இருந்து சொல்ல விரும்பினேன்”என்று அவனிடம் தீர்க்கமாக கூறியிருந்தாள் கனிஷ்கா. 

 

“எனக்கும் அது தான் தேவைம்மா. நீ நிதானமாக சொல்லு”என்றுரைக்கும் போதே அவர்களிடம் அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே வந்த பணியாளரோ, 

 

“இந்தாங்க மேம்”, 

 

“இந்தாங்க சார்”என அவ்விருவருக்கும் தனித் தனியாகப் பிளாஸ்டிக் கப்புகளைக் கொடுத்தார். 

 

அதில் ஆவி பறக்கத் தேநீர் நிறைந்திருந்தது. 

 

“உங்களோட தண்ணீர் பாட்டில் மேம்”என்று கனிஷ்காவிடம் கொடுக்கவும், 

 

அதை வாங்கிக் கொண்டு,”ரொம்ப நன்றி அண்ணா”என்று தெரிவித்து அவரை அனுப்பி வைத்து விட்டு, 

 

“நீங்க டீயைக் குடிங்க அண்ணா”என அபூர்வனுக்கு அறிவுறுத்தி விட்டுத் தானும் தேநீரைப் பருகினாள் கனிஷ்கா. 

 

அதேபோல் தன்னுடைய தேநீரைக் குடித்து முடித்து விட்டு அவள் கதையைத் தொடர்வதற்காக காத்திருந்தான் அபூர்வன். 

 

சில நிமிடங்கள் கழித்துக் காலி பிளாஸ்டிக் கப்பைக் கீழே வைத்து விட்டு அவனை ஏறிட்டுப் பார்த்து, 

 

“நிஹாவை அவளோட வீட்டாளுங்க சூடு எல்லாம் வச்சிருக்காங்க போல! அதை முதலில் கண்டுபிடிச்சுக் கேட்டது ஆரா தானாம் அண்ணா! அவ அதுக்கப்புறம் நிஹாவை இன்னுமே நல்லா பார்த்துக்கிட்டாள்! இப்படியே அவங்க ரெண்டு பேரோட காலேஜ் லைஃப் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு! ஆனால்…”என்றவளோ, 

 

சட்டென்று அமைதியாகி விட்டாள். அவளது முகமும் வேதனையில் வெளுத்துப் போய் விட்டிருந்தது! 

 

அதைக் கண்டதும்,”கனி!”என்று அவளைக் கனிவுடன் அழைத்தாலும் கூடத் தனது மனைவிக்கு நேர்ந்த அந்த எதிர்பாராத, மோசமான நிகழ்வு என்ன என்பதை தெரிந்து கொள்ள அபூர்வனின் மனம் பரபரத்தது! 

 

“நான் இப்போ சொல்லப் போறதைக் கேட்டு நீங்க ஆராவைப் பத்தி அருவருப்பாக நினைச்சு, அவளை வெறுத்து ஒதுக்கிடக் கூடாது! அவ, நான், நிஹாவும் இவ்வளவு பண்ணதுக்குக் காரணமே இந்த விஷயம் தான்! அதனால் தான் இதை உங்களுக்கு அழுத்திச் சொல்றேன்”என்று அவனிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டாள் கனிஷ்கா. 

 

அதில் அவளைக் குழப்பத்துடன் பார்த்து,”நான் எதுக்கு ஆராவை வெறுக்கப் போறேன்? அவ தான் என்னோட உலகமே! அவளை என்னால் வெறுத்து ஒதுக்கிறதைப் பத்தி நான் கனவில் கூட நினைச்சுப் பார்க்க மாட்டேன்!”என்று உறுதியாக உரைத்தான் அபூர்வன். 

 

“நீங்க அவளை வெறுத்து ஒதுக்கிறதை அவளும் தன்னால் கனவில் கூட நினைச்சுப் பார்க்க முடியாதுன்னு தான் எங்ககிட்ட உதவியே கேட்டிருந்தாள்”என்றவளிடம், 

 

“ம்ஹ்ம்”என அவள் கூறப் போவதைக் கேட்பதற்காகத் தன்னை மனதளவில் தயார்படுத்திக் கொண்டு அவளைப் பார்க்கவும்,

 

“எங்க காலேஜில் படிக்கிற பசங்க கிட்டே இருந்து ஆராவுக்கு நிறைய லவ் புரபோசல்ஸ் வரும். ஆனால் அவ யாருக்குமே சம்மதம் சொல்லலை! அவங்க கிட்ட தன்னோட மறுப்பை நாகரீகமான முறையில் சொல்லிருவா! அதனாலேயே அவங்களும் அதை ஏத்துக்கிட்டு அவளை அதுக்கப்புறம் தொல்லை செய்ய மாட்டாங்க! ஆனால் ஒருத்தன் மட்டும் அவளை விடாமல் தொல்லை செஞ்சான்!”என்றதுமே, 

 

அந்த வார்த்தைகள் கொடுத்த அதிர்ச்சியில் அபூர்வனின் விழிகளோ பெரிதாக விரிந்தது. 

 

“அது நீங்க உங்களோட புராஜெக்ட்டைச் செஞ்சிட்டு இருந்த டைமில் தானே நடந்துச்சு?”என்றவனின் குரலில் நடுக்கம் தொனித்தது. 

 

“ஆமாம் அண்ணா!”என்றிருந்தாள் கனிஷ்கா. 

 

“ஆனால் அது நிஹாரிகாவுக்கு நடந்ததாகத் தானே எங்கிட்ட ஆரா சொன்னாள்!”என்று குழப்பமாக கேட்கவும், 

 

“ஆரா இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்கிட்டயும், நிஹாகிட்டேயும் ஹெல்ப் கேட்டதுக்கான ஆரம்பப் புள்ளியே அது தான் அண்ணா”என்றவளை மேலே கூறுமாறு சைகை செய்தான் அபூர்வன். 

 

“அந்தப் புரபோசல் வந்ததே ஆராவுக்குத் தான்! அதே மாதிரி அவன் தன்னை விடாமல் டார்ச்சர் செஞ்சிட்டு இருக்கிறதைப் பொறுத்துக்க முடியாமல் ஹெச். ஓ. டி கிட்டே புகார் கொடுத்துட்டாள்! அவங்க அவனைக் கூப்பிட்டு நல்லா கண்டிச்சு அனுப்பிட்டாங்க! அதனால் அவனுக்கு எங்க காலேஜ் முழுசும் கெட்டப் பேர் வந்துடுச்சு! அதை நினைச்சு அவனுக்கு ரொம்ப அவமானமாகிடுச்சு! அதுக்காக ஆராவைப் பழி வாங்கனும்னு முடிவு செஞ்சி அவளை…”என்றவளது குரல் உடைந்து போய் அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வர மறுத்தது. 

 

“அவளைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செஞ்சான்!”எனத் தன் முகம் இறுக கூறியவனை வேதனையாகப் பார்த்து, 

 

“ஆமாண்ணா. அப்போ அவளை நான் தான் அவன்கிட்டே இருந்து காப்பாத்தி அவனுக்கு லீகலா என்னத் தண்டனை வாங்கிக் கொடுக்க முடியுமோ அதை வாங்கிக் கொடுத்தேன்! ஆனால் அந்தச் சம்பவத்துக்கு அப்பறம் ஆராவோட நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு! என் கூடச் சேர்ந்துக்கிட்டு நிஹாவும் அவளை அது கொடுத்தப் பாதிப்பில் இருந்து மீட்க முயற்சி செஞ்சா! ஆனால் எங்களால் ஆராவை அதிலிருந்து மீட்கவே முடியலை! அதுக்கப்புறம் விஷயத்தை எங்க ஹெச். ஓ. டி வரைக்கும் கொண்டுப் போனோம்! அவங்க தான் அவளைச் சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே கூட்டிட்டுப் போய்க் கவுன்சிலிங் பண்ணி அவளைக் குணமாக்கினாங்க!”என்று கூறி முடித்தாள் கனிஷ்கா. 

 

அதைக் கேட்டதும் தன்னவள் அனுபவித்த துன்பத்தை எண்ணி மிகவும் மனமுடைந்து போய் விட்ட அபூர்வனுக்குக் கண்கள் கலங்கிப் போயிற்று.

 

ஆனால் அவனது முகத்தை நன்றாக ஆராய்ந்து பார்த்து, அதில் ஆராத்ரிகாவின் மீதான வெறுப்போ, அருவருப்போ தென்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு நிம்மதியுற்றாள் கனிஷ்கா. 

 

“அப்போ அவளோட முதுகில் இருந்த தழும்புக்குக் காரணம்?”என அவளிடம் கலங்கிய விழிகளுடன் வினவ, 

 

“அவளை உடலளவில் காயப்படுத்த முயற்சி செஞ்ச அந்த நாய் தான் பிராண்டி விட்டுச்சு அண்ணா! அதில் ஏற்நட்ட தழும்பு தான் அது!”என்றாள் வருத்தமாக! 

 

“அப்போ அந்தப் பொறுக்கி என் ஆராவைத் தொல்லை செய்ததுக்கு முன்னாடி வரைக்கும் நடந்தது எல்லாம் நிஹாரிகாவோட வாழ்க்கையில் நடந்த விஷயங்கள்! அதுக்கப்புறம் நடந்தது எல்லாமே என் ஆராவுக்கு நடந்தது அப்படித் தானே?”என்று துக்கம் தொண்டையை அடைக்க கேட்டான் அபூர்வன். 

 

“எஸ் அண்ணா”என்றவளின் குரலும் கூட உள்ளிறங்கிப் போயிருந்தது. 

 

“இது எப்பவோ நடந்தது சரி! அதுக்கப்புறம் அவ படிச்சு எங்க கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தாள்! அதே மாதிரி எனக்கு அவளோட அந்த துறுதுறு குணத்தைப் பார்த்து தான் அவளைப் பிடிச்சுப் போய் அவ கிட்ட லவ் புரபோசல் பண்ணாமல் நேரடியாக கல்யாணம் பண்ணிக்கலாமான்னுக் கேட்டேன்! அதுக்கு அவ ஒரு வருஷமாகப் பிடி கொடுக்காததுக்குக் காரணம் இது தானா?”எனக் கேட்டவனிடம், 

 

“அப்படித் தான் எங்ககிட்ட ஆரா சொன்னாள் அண்ணா!”என்றிருந்தாள் கனிஷ்கா. 

 

அப்போது மதிய உணவு நேரம் வந்து விடவும், 

 

“சரிம்மா. நீ போய் லன்ச் சாப்பிடு. அதுக்கு முன்னாடி ஏனக்கு உன்னோட மொபைல் நம்பரைக் கொடு. நான் உங்கிட்ட ஃபோன் காலில் மத்த விஷயங்களைக் கேட்டுக்கிறேன்! ஏன்னா, என்னால் உனக்கும் ரொம்ப சிரமமாக இருக்கும்! அதான்”என்று அவளிடம் சங்கடத்துடன் மொழிந்தான் அபூர்வன்.

 

“அதெல்லாம் ஒன்னும் இல்லண்ணா. உங்களோட கல்யாண வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் வந்துடக் கூடாதுன்றதுக்காகத் தான் நாங்க அவ கேட்டுக்கிட்டதுக்கு உதவி செய்ய சம்மதிச்சோம்!”என்றவளின் செல்பேசி ஒலிக்கவும் அதை எடுத்துக் காதில் வைத்து மறுமுனையில் பேசியவருக்குப் பதிலளிக்கும் விதமாக, 

 

“எஸ் மேம். இதோ போய்ச் சாப்பிட்றேன்”என்றுரைத்து விட்டு அழைப்பை வைத்தவளோ, 

 

“ஹெச்.ஓ. டி தான் கால் பண்ணி இருந்தாங்க அண்ணா. லன்ச் டைம்ல? அதான்”என்றிருந்தாள் கனிஷ்கா. 

 

“ஓகேம்மா. நீ போய்ச் சாப்பிடு”என்று அவளிடம் கூறினான் அபூர்வன். 

 

“நீங்களும் இங்கேயே கேன்டீனில் சாப்பிடலாமே அண்ணா?”

 

“இல்லம்மா. நான் ஆஃபீஸூக்குப் போறேன்னுச் சொல்லிக் கிளம்பியதால் என்க்கு மதியச் சாப்பாட்டைப் பேக் செஞ்சிக் கொடுத்துட்டாங்க. நான் அதைக் காரில் உட்கார்ந்து சாப்பிட்டுட்டு மதியம் ஆஃபீஸூக்குப் போயிடுவேன்!”என்று கூறி அவளிடமும், கலைமகளிடமும் நன்றித் தெரிவித்து விட்டு அங்கேயிருந்து வெளியேறித் தனது காரிலேயே மதிய உணவை உண்டு முடித்து விட்டுத் தான் வேலை செய்யும் அலுவலகத்தை அடைந்து தனது டீம் லீடரிடம் சென்று தனது வருகையைப் பதிவு செய்து விட்டுத் தன் வேலையைச் செய்யத் தொடங்கி விட்டான் அபூர்வன். 

 

– தொடரும்

Click on a star to rate it!

Rating 3 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்