Loading

சுழலி-23

எதிர்பாராததை எதிர்பார்க்கும் தருணத்தில் நடத்துவதுதான் இந்த விதியின் விளையாட்டு. செந்தூரன் மடிவான், உயிரையும் உடலையும் பிடித்து செல்லலாம் என்று எண்ணி வந்த அகோரிகளுக்கு பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல, அவனே தன்னை அகோரிகளின்வசம் ஒப்படைப்பான் என்று அவர்கள் நினைக்கவில்லை. தானாக உயிர் பிரிந்தால், ஐந்து வருடமாவது அவனது ஆன்மாவை அடக்கி பணிய வைக்க நாட்கள் எடுத்திருக்கும். ஆனால், அவனே தீய வழியில் நுழைந்திட எண்ணம்கொண்டதனால், அத்தகைய சிரமம் இனி தேவையில்லை என்றே முதுகிழமகுடபதி மகிழ்ந்தான்.

“செந்தூரா, உனது ஆயுள் முடிவுக்கு வர இன்னும் சில நொடிப் பொழுதுகள் இருக்கின்றன. ஆனால், நீயே உனது ஆன்மாவை உடலில் இருந்து பிரித்து எடுத்துவிட்டாயெனில், இன்னும் சக்திகளை உருவேற்றமுடியும். நேரத்தைக் கடக்க வேண்டாம்.” அகோரிகளின் தலைவன் முதுகிழமகுடபதியின் சொற்கள் அனைத்திற்கும் செவிசாய்த்தான் செந்தூரன்.

குன்றுக்கு அருகில் அமர்ந்து செந்தூரன் தனது ஆன்மாவை பிரித்தெடுக்கும் முயற்சியை தொடங்கினான். உடலில் இருக்கும் அனைத்து நாடி நரம்புகளையும் வெட்டி எடுப்பது போல் வலித்தது, உயிர் பிரியும் வலி.

அப்போதுதான் அந்த நிகழ்வு நடந்தது. செந்தூரன் உயிர் பிரியும் நொடிக்கு ஒரு மயிரிழை முன்பாக அவனின் தலை வெட்டப்பட்டு மண்ணில் விழுந்தது. அவனின் உடல் தலையில்லா முண்டமாக குருதிக் கொப்பளிக்க அப்படியே மண்ணில் சரிந்தது. அத்தனை அகோரிகளுக்கும் அதிர்ச்சி.

இருவர் நின்றிருக்க, ஒருவன் கையில் வாளோடு நின்றிருந்தான். அவர்கள், கொங்குநாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் கருநாட்டின் சிற்றரசன் கந்தனும், அதனருகில் இருக்கும் கட்டியநாட்டின் சிற்றரசன் குகனும். வஞ்சனிற்கு அடுத்து செந்தூரனிற்கு மிகவும் நெருக்கமான ஆஸ்தான நண்பர்கள். இவர்கள் ஏன் செந்தூரனை கொல்ல வேண்டும்?

சிறிது நாழிகைகள் நாம் பின்னோக்கி செல்ல வேண்டும். பொதியமலையில் சித்தமுனியை தேடி வந்த படைகளில் வஞ்சனிற்கும் செந்தூரனிற்கும் அடுத்து தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள்தான் கந்தனும் குகனும். அந்நியப்படையெடுப்பு நடக்கவிருக்கிறது பற்றி ஒற்று செய்தி கொண்டு வந்ததே கந்தன் தான். நால்வரும் இணைந்துதான் என்றும் செயல்படுவார்கள். வஞ்சனின் கண்ணசைவிற்கு முன்னே இவர்கள் பணியை முடித்திருப்பார்கள்.

கமண்டல நீரை பெற்று, வெளியே வரும்போது காளிங்கன் படைகள் தாக்கிக் கொண்டிருந்தனர் அல்லவா, அப்போது மற்ற வீரர்களோடு இவர்களும் எதிர்தாக்குதல் நடத்திக் கொண்டுதான் இருந்தனர். திரும்பி வந்து பார்க்கும் பொழுது வஞ்சன் பரிதியில் சென்றுக் கொண்டிருக்க, அவனுக்கு உதவும்பொருட்டு இருவரும் அவனை பின்தொடர்ந்தனர். செந்தூரன் சென்றதை கவனித்து இருக்கவில்லை இருவரும். தன் மன்னரை தனியாக தவிக்க விடக்கூடாது என்று எண்ணி உடன் சென்றவர்கள், சிறிது நேரத்தில் வழிதவறிப் போயினர். அந்த நேரம்தான் காளிங்கன் வஞ்சனை தீண்டியிருந்தான்.

மீண்டும் வழியை அறிந்து வனக்காட்டில் நுழைந்த போதுதான், வஞ்சன் உடுத்தியிருந்த பட்டுத்துணியின் ஒரு பகுதி, ஒரு இடத்தில் கிடக்க, பதட்டத்தோடு தேடிக்கொண்டு எல்லைக்குன்றுக்கு வந்தவர்கள் கண்டது செந்தூரன் வஞ்சனை மலைச்சரிவிலிருந்து உருட்டிவிடுவதைத்தான்.

மேலும், அப்போது அவன் உதிர்த்த சொற்களும் தவறாமல் இருவரையும் சென்றடைந்தது. அரியணை ஆசைக்காக சிறுவயதிலிருந்து ஊனும் உயிருமாய் இருந்த நண்பனை கொல்ல எப்படி மனது வந்தது என்ற தீராக் கோபம் கொண்டனர் இருவரும். வனக்காட்டின் எல்லையை கடந்து நின்றிருந்ததால் செந்தூரனிடம் பேசிய அகோரிகள் யாரும் இருவர் கண்ணிற்கு புலப்படவில்லை. சினத்தின் உச்சியில் தனது வாளை உருவப்போக, உறையில் வாளும் இல்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால், கந்தனுக்கு செந்தூரனை கொல்லும் அளவிற்கு வெறி பிறந்தது. குகன் அத்தனை சொல்லியும் செவிசாய்க்காதவன் கண்களில் தென்பட்டது, வஞ்சனின் மரகதவாள். அது வனக்காட்டின் எல்லைக்குள் மிளிர்ந்தது. அதனை எடுக்ககும்போதுதான் அகோரிகளின் உருவமே இருவருக்கும் புலப்பட்டது. நொடியும் தாமதிக்காது அதனை எடுத்த கந்தன், ஒரே வீச்சில் செந்தூரனின் தலையை மண்ணில் சாய்த்தான். கந்தனின் கோபம் குகனுக்கு புரிந்ததுதான். ஆனாலும், செந்தூரனும் நமது நண்பனல்லவா என்றுதான் சிந்தித்தான். விதி வலியது.

முகத்தில் இரத்தத் துளிகள் சிதறியிருக்க, பெருமூச்சோடு நின்றிருந்தான் கந்தன். அவனோடு குகனும் முகத்தில் கலக்கத்துடனும் வேதனையுடனும் நின்றிருந்தான். தனது ஆருயிர் நண்பர்களை இழந்தும் அவர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர்சிந்தும் நிலையில் தான் இல்லை என்பது அப்பொழுதுதான் அவனது புத்திக்கு உரைத்தது.

செந்தூரன் மடிந்தான். ஆம், கொங்கு நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஈரேழு தேசத்தை கட்டியாளும் எண்ணம் கொண்டிருந்தவன், மஞ்சரியின் மீது தீராக் காதல் கொண்டிருந்தவன், விதியின் வசத்தால் தனது புண்ணிய பலன்களை இழந்தவன், இனி அகோரிகளின் எண்ணத்திற்கு ஆடப்போகின்றவன் இறந்தான்.

அகோரிகள் கந்தனை தாக்குவதற்குள், இருவரும் வேடுவக்குகைக்குள் புகுந்துவிட்டனர். அங்கு அகோரிகளால் நுழைய முடியவில்லை.

முதுகிழமகுடபதி சீறினான். “மானிடப்பதர்களே, வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்துவிட்டீர்களடா. அவர்களை விடுங்கள், உடனே செந்தூரனின் உடலையும் ஆன்மாவையும் கட்டுக்குள் கொண்டு வாருங்கள். கிங்கணர்கள் வருவதற்குள் நாம் செந்தூரனை பாதாளத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்” என்று ஆணையிட்டான். அகோரிகள் அனைவரும் ஒன்றிணைந்து தமது மந்திர சக்திகளை இணைத்து, செந்தூரனின் உடலையும் ஆன்மாவையும் அப்படியே பாதாளலோகத்திற்கு எடுத்து சென்றனர். பூமி பிளந்து உள்ளே ஒரு வழி தென்பட, மந்திர உச்சாடனங்கள் செய்தவாறே உள்ளே நுழைந்து மாயமாய் மறைந்தனர் அனைவரும்.

நடந்த அனைத்தையும் பார்த்த இருவரும் அதிர்ந்துதான் போயினர். செந்தூரன் மாயமந்திரங்கள் அறிந்தவன் என்று இருவருக்கும் தெரியும். ஆனால், அவன் தீயசக்திகளைத்தான் இத்தனை நாட்கள் பயன்படுத்தியிருக்கிறான் என்று சரியாக தவறாக புரிந்துக்கொண்டார்கள்.

“அவசரப்பட்டுவிட்டோமா கந்தா?” கண்களில் நீர் தேங்கியிருக்கக் கேட்டான் குகன்.

“இந்த கண்ணீர் செந்தூரனிற்காக என்றால் உடனே அதனை துடைத்துவிடு. நம் கண்ணீருக்குக் கூட அவன் தகுதியில்லாதவன்.”

“அவன் நம் நண்பனடா!”

“நண்பனா? நட்பிற்கான இலக்கணம் அறிவானா அவன்? வஞ்னைக் கொன்று மலைச்சரிவிலிருந்து தள்ளிவிட்டிருக்கிறான். அனைத்தையும் நீயும் கண்டாயல்லவா? அவன் துரோகி குகனா. இவனை நல்லவன் என்று நம்பி அங்கு மஞ்சரி இவனின் வரவிற்காகக் காத்துக்கிடக்கிறாள். அவளிடம், என்னவென்று போய் சொல்லப்போகின்றாய். அரசியாரிடம் என்னவென்று மொழிவாய்.? நாட்டு மக்களிடம் என்ன சொல்லித் தேற்றுவாய்? அத்தனைக்கும் உன்னிடம் பதில் உள்ளதா குகனா? இவன் உயிரோடு இருந்திருந்தால் எப்படியும் நாட்டை நாசமாக்கியிருப்பான். இப்பொழுது சொல் நாம் அவசரப்பட்டுவிட்டோமா?” பதிலேதும் இல்லை குகனிடம். அமைதியாய் நின்றான்.

இன்னும் சிறிது நேரத்தில் பொழுது விடிந்துவிடும். அதுவரை வேடுவகுகையில் இருந்துவிட்டு பின், புறப்படலாம் என்ற முடிவுக்கு வந்தனர் இருவரும். இவர்களின் சண்டையில் மீண்டும் மாயமாய் மரகதவாளை கவனிக்கத்தவறிவிட்டனர். அது, வேடுவத்தலைவனின் காலடியில் பாந்தமாய் ஒளிந்துகிடந்தது.

….

கொங்குநாடு, அரண்மனை.

கொங்கிளக்கேசர் அனுப்பிய மடலை வாசித்த மாரிவெண்கோ, மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

“செம்பியா, கேசர் கூறியதை நிகழ்த்திவிட்டார். வஞ்சனும் செந்தூரனும் மடிந்தார்கள். இனி நாடு நம் கையில். இன்னும் சிறிது நேரத்தில் வேள்வி முடிந்துவிடும். அதற்குள் நீ கோட்டையின் எல்லைக்கு சென்று உன் தந்தையை உள்ளே அழைத்து வா. நான் கோதையிடம் மெல்ல விசயத்தைக் கூறுகிறேன். காயை பொறுமையாக நகர்த்த வேண்டும். மஞ்சரி முன்போல் இல்லை. தற்போது அவளோடு யட்சினியும் இருக்கின்றாள். ஆகவே, நான் கூறும்வரை வஞ்சன் மற்றும் செந்தூரன் மடிந்தது பற்றி யாரும் அறிந்திடக் கூடாது” என்றவர், ஆலயத்திற்கு புறப்பட்டார்.

ஆலயத்தில் வேள்வி முடியும்தருவாயில் இருந்தது. மஞ்சரி சற்றும் குறையாத கோபத்தோடுதான் அமர்ந்திருந்தாள். செவ்வேலனும் அவனின் மனைவிகள் இருவரும் வேள்வியை முடித்து தீர்த்தநீரை அனைவருக்கும் கொடுத்திட, தனது சாபம் முழுவதுமாக களையப்பெற்றனர் நீலாவும் யட்சினியும். மஞ்சரியின் சினம் மெல்ல குறைந்தது. ஆனால், அவளின் மனத்தில் ஆற்றாமையும் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற எண்ணமும் செந்தூரனின் மீது வஞ்சத்தை விதைத்தது.

அங்கு வந்த மாரிவெண்கோ மஞ்சரியின் அருகில் சென்றார். “இளவரசி, தங்களிடம் தனியே உரையாட வேண்டும்” அவரின் சொல்லுக்கு செவிசாய்த்தவள் மெல்ல அங்கிருந்து மறைவான இடத்திற்கு வந்தாள். கோதை கருவுற்றிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், மஞ்சரி கருவுற்ற செய்தி, வேள்வியில் உடனிருந்தவர்களுக்கு மட்டுமே அறிந்த விசயம். இதனை கொங்கிளக்கேசரும் அறிந்திருக்கவில்லை.

“கூறுங்கள் அமைச்சரே! தமையனை கண்டறிந்துவிட்டீர்களா?”

அவளின் வினாவிற்கு விடையளிக்க இயலாமல் கண்ணீரோடு தலைகவிழ்ந்தார் மாரிவெண்கோ.

“அமைச்சரே! என்னவாயிற்று? ஏன் இந்த அமைதி?” அவளின் குரல் தழுதழுத்தது.

“இந்த கிழவனின் உயிர் ஏன் இன்னும் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று எண்ணி வெறுப்பு உண்டாகிறது இளவரசி. நாம் கணித்தது போல், செந்தூரன் வஞ்சனை கொன்றுவிட்டான். நம் மன்னர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார் இளவரசி” கண்ணீர் மல்க கூறியவனின் வார்த்தைமாயம் சரியாக மஞ்சரியின் சினத்தை பகையாக மாற்றியது.

பொங்கியெழுந்த விழிநீரை உள்ளேயே அடக்கியவள், “மகாராணியாரிடம் கூறியாயிற்றா?”

“இன்னும் இல்லை.”

“இனியும் தெரிவிக்க வேண்டாம். தமையன் நாட்டின் நலனுக்காக தேசம்விட்டு சென்றிருக்கிறார் என்று மட்டும் தெரிவியுங்கள்”

“ஆனால், இளவரசி…”

“என்ன?”

“எத்தனை தினங்கள் அரியணையை வெற்றிடமாக வைத்திருப்பது. இது நம் எதிரிகளுக்கு தெரிந்தால் பெரும் போர் சூழும் அபாயம் இருக்கின்றது.”

சிறிது நேரம் யோசித்தவள், “ஒற்றர் செய்தி…?”

“நமக்கு ஒற்றர்கள் மூலம் கிடைத்த செய்திகள் அனைத்தும் உண்மை. செந்தூரன் நாட்டைக் கைப்பற்ற அந்நிய நாட்டோடு கூட்டு வைத்திருக்கிறான். உங்களை மணக்க வேண்டும் என்பதும் அவன் திட்டத்தின் ஒரு பகுதி” என்று இன்னும் அவளை ஏற்றிவிட்டார்.

“அந்த நயவஞ்சகனின் நிலை?”

“அவனைப் பற்றிய செய்தி இன்னும் கிடைக்கவில்லை. ஆனால்…”

“ஆனால் என்ன?”

“கொங்கிளக்கேசர் உயிரோடு தான் இருக்கிறார். அவர் நாடு திரும்பிக்கொண்டிருக்கிறார். அவருக்கு செந்தூரனைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது?”

“கொங்கிளக்கேசரா?” குழப்பரேகை அவளின் முகத்தில்.

“ஆம், இளவரசி. எனது தந்தை இத்தனை நாட்களாக செந்தூரனின் கட்டுப்பாட்டில் அவனது சிறையில் இருந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு தான் நம் ஒற்றர்கள் மூலம் அவர் தப்பித்தார். காட்டில் மறைந்து வாழ்ந்தவர், பொதிய மலையில் நடந்ததையும், கல்வராயன் மலையில் நடந்ததையும் கண்ணுற கண்டு, நம் நாட்டிற்கு வந்துக் கொண்டிருக்கிறார் இளவரசி.”

“நல்லது. அவர் வந்ததும் நாம் மீண்டும் ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். பல போர்களை கண்டு, நாட்டினை ஆளுமையாக நிர்வகித்து வந்தவரின் ஆலோசனையோடும் தங்களின் வழிநடத்தலோடும் மகாராணியார் அரியணை அமருவார். அதன்பிறகு இக்கொங்கு நாட்டின் வாரிசு என் மருமகன் அரியணை ஏறுவான். இது அந்த ஈசனின் மீது ஆணை. நான் சென்று மற்ற பணிகளை கவனிக்கின்றேன்.” என்று அங்கிருந்து நகர்ந்தாள்.

இறுதியாய் அவள் கூறிய அனைத்தும் மாரிவெண்கோவிற்கு எரிச்சலைக் கொடுத்தது. தான் ஒன்று நினைத்து இருக்க, தற்போது மஞ்சரி சொல்லிச் சென்றது பெரும் அதிருப்தியைக் கொடுத்தது. அமைதியாக வந்தவர், பொறுமைக் காத்தார்.

செந்தூரன் பற்றி தவறாக மஞ்சரியிடம் கூறிய அனைத்தும் அவன்மேல் இவள்கொண்ட காதலை நசுக்கி நயவஞ்சகனாக மாற்றியது சரியாக வேலை செய்கின்றதை எண்ணி மர்ம புன்னகை வீசினார். அனைத்திற்கும் காரணம் மாரிவெண்கோதான் என்பது இனி சொல்லி தெரியவேண்டியது இல்லை.

வேள்வி முடிந்து அனைவரும் அரண்மனைக்கு புறப்பட்டனர். நீலா பேச முற்படும்பொழுது எல்லாம் அவளை எட்டவே நிறுத்தினாள் மஞ்சரி.

யட்சினியை உடன் வைத்துக் கொண்டவள், செந்தூரனை கோதைக்கு காவலாக நியமித்தாள்.

அரண்மனைக்கு வந்தவளின் முகத்தில் சோர்வுக்கு பதில் வெறுமையுணர்வு தான் தோன்றியது. வேள்வி நடந்துவிட்டது. இனி யார் நினைத்தாலும் ஆலயப்பணிகள் முழுவதுமாக நடந்தேறும். ஆகவே, அடுத்து நடக்க வேண்டிய பணிகளுக்கு ஆணையிட்டு தனது அறைக்கு வந்தாள். அவளுடனேயே யட்சினியும் வந்தாள்.

மஞ்சரிக்கு ஓய்வு தேவையில்லை. ஆனால், அவளின் பிள்ளைகளுக்கு ஓய்வு அவசியம்தானே! அதனை யட்சினியும் கூறினாள்.

“இத்தனை நேரம் உறங்காமல் இருக்கக் கூடாது மஞ்சரி. சற்றே கண்ணயரு. இரட்டைக் கருவை தாங்கிக் கொண்டிருக்கிறாய். உடலும் மனமும் சோர்ந்து இருக்கிறது. இப்படியிருந்தால் பிள்ளைகளின் நிலை என்னவாவது?”

“ஏன், நான் உறங்கும்போதே என்னைக் கொன்றுவிடும்படி அவன் உனக்கு உத்தரவிட்டிருக்கின்றானா?” விரக்தி புன்னகையோடு கேட்டாள் மஞ்சரி.

“மஞ்சரி! என்ன வார்த்தை மொழிந்துவிட்டாய்? ஒன்றை நீ மறந்துவிட்டாயா? நான் தற்போது யாருக்கும் அடிமை கிடையாது. எனக்கு யாரும் உத்தரவிட முடியாது. வேதனையில் வார்த்தைகளை விடாதே மஞ்சரி. எனக்கு மனது வெம்புகிறது”

மெல்ல நடந்து பஞ்சணையில் அமர்ந்தவள், தனது கரங்களை வயிற்றில் பதித்து, “எனது காதல் உண்மைதான் யட்சினி. அவன் ஏன் என்னை ஏமாற்றி சென்றுவிட்டான்? இந்த அரியணைதான் வேண்டுமென்றால் என் சொல்லிற்காக என் தமையன் அனைத்தையும் விட்டுக்கொடுத்திருப்பாரே. செந்தூரனிற்காக எதையும் செய்யும் நிலையில் இருந்த என் தமையனை கொன்றுவிட்டான். என்னை ஏமாற்றி, துரோகத்தை பரிசளித்துவிட்டானே. ஏன், யட்சினி?”

“நான் என்ன கூறினாலும் அது உன் மனதை சாந்தப்படுத்தாது மஞ்சரி. தெரிந்த துரோகியாய் செந்தூரனை நிர்ணயித்துவிட்டாய். ஆனால், இங்கு நல்லவர்கள் வேடம் புரிந்து தெரியாத துரோகிகள் பலர் இருக்கின்றனர். அவர்களையும் நீ இனம்கண்டு உன்னையும் இந்த நாட்டையும் காக்க வேண்டும். செந்தூரன் பற்றி தற்போது நான் என்ன கூறினாலும், அதனை புரிந்து உணரும் நிலையில் நீ இல்லை. நடந்து முடிந்ததை விட்டுவிடு. இனி நடக்கவிருப்பதை கவனி.”

இவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது, வீரன் ஒருவன் “இளவரசி, கொங்கிளக்கேசர் வருகை தந்து இருக்கிறார். அமைச்சர், அவரசக்கூட்டத்தை கூட்டியிருக்கிறார். தங்களை உடனே வரும்படி கூறினார்” என்று சொல்லிச் சென்றான்.

“கொங்கிளக்கேசரா…?” அதிர்ந்த விழிகளில் நடந்தேறிய நிகழ்வுகளை உணரத் தொடங்கினாள் யட்சினி.

செந்தூரனின் ஆட்டம் ஆரம்பம்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்