
அத்தியாயம்: 7
பாண்டிச்சேரியை நோக்கி பயணமாகிக் கொண்டிருந்த வாகனத்தில் நிசப்தம் நிலவியது, பின்னிருக்கையில் அமர்ந்திருந்த லாவண்யா காரை இயக்கிக் கொண்டிருந்த அஜய் மீது கோபத்துடன் அமர்ந்திருந்தாள். அவளை அவன் தான் மறைந்திருந்து புகைப்படம் எடுத்திருக்கிறான் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள் அதனால் என்னவோ இவன் மீது அவளுக்குக் கோபம் ஏற்பட்டது,
ஆனால் இப்போது அவளுக்கு அவளின் அண்ணன் ஆதித்தை பார்த்து வீட்டில் நடந்த விசயங்களைச் சொல்லியாக வேண்டும் அதனால் என்னவோ அவள் மௌனம் சாதித்தாள்.
பீச் வீயூ ரிசார்ட்டினுள் மெல்ல கார் நுழையும் போதே, அவளுக்காகக் காத்திருந்தான் ஆதித் கிருஷ்ணா. உடனே தன் அலைப்பேசியை எடுத்து அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
“லாவ் குட்டி.!” ஆதித் பாசத்துடன் அழைத்தான்.
“ஆதித் அண்ணா சொல்றதை கவனமாகக் கேளு, அங்கே யாருக்கும் தெரியாமல் கார்ல வந்து ஏறிக்கோ” அவள் சற்று பதற்றத்திலே பேசினான்.
“ஏய் இங்கே விக்கியும் நானும் தான் இருக்கோம் இறங்கி வா லாவ் குட்டி.?”
“அண்ணா இன்னும் நீ எல்லாரையும் நம்பிகிட்டு இருக்கியா.? உன் கூட இருக்கவங்க யாரோ தான் ஜெகன் அங்கிள்க்கு எல்லா டீடெய்லும் கொடுத்திட்டு இருக்காங்க” என அவள் விவரிக்க, ஆதித் கிருஷ்ணா மட்டும் தனியாக வந்து காரினுள் ஏறினான்.
“ஹே யூ ட்ரைவர் அண்ணாகிட்ட நான் ப்ர்சனலா பேசணும் வெளியே நில்லு” எனச் சொன்னவுடன்,
“ஹே நோ அஜய். யூ பி ஹியர்” என ஆதித் அஜய்யை அமரச் சொல்ல,
“இல்லை பரவாயில்லை சார்” என அவன் காரில் இருந்து இறங்கிய பின், பேசுவதைத் தொடர்ந்தாள் லாவண்யா.
“அண்ணா இப்படிக் கண்மூடி தனமா யாரையும் நம்பாதே, ஆரா அண்ணியைக் கொல்றதுக்கு நம்ம வீட்டில் எல்லாரும் திட்டம் தீட்டிட்டு இருக்காங்க” அவள் பட்டென விசயத்தைச் சொன்னாள்.
“வாட் லாவ்.! அவ எங்க போயிருக்கான்றது எனக்கு மட்டும் தான் தெரியும். அப்படி இருக்கும் போது .?” கேள்வியாய் தங்கையின் முகம் பார்த்தான்.
“அண்ணா என்ன தான் நடக்குது தெளிவாகச் சொல்லு, ஆரா ஓடி போயிட்டதா ஃப்ர்ஸ்ட் சொன்ன.? அப்பறம் மஹதி கடத்தி வச்சிருக்கான்னு சொன்ன.? இப்போ என்னன்னா எங்க போயிருக்காங்கன்னு உனக்கு மட்டும் தான் தெரியும்ன்னு சொல்ற.? இதில் நம்ம அப்பா அம்மா வேற ஜெகன் அங்கிளும் மஹதியும் சொல்றதை தான் கேட்கிறாங்க.?” தனக்குள் இருந்த ஒட்டு மொத்த சந்தேகத்தையும் கேட்டுவிட்டாள் லாவண்யா.
“லாவ் குட்டி.! உனக்குச் சில விசயங்கள் தெரியக் கூடாதுன்னு அண்ணா உன் காதுக்கே அந்த விசயங்கள் வராமல் தடுத்து வச்சிருந்தேன், பட் இப்போ நீ வளர்ந்திட்ட.? சென்னையில் இருந்து பாண்டிச்சேரி வரைக்கும் இந்த அண்ணனுக்காக வந்திருக்க. ஆரா என் வாழ்கையில் வசந்த காலம் மாதிரி வந்தாள், அவளைக் கல்யாணம் பண்ணிகிட்டால் ஜெகன் அங்கிள் கூட இருக்க ஃப்ரெண்ட்ஷிப் முறிஞ்சிடும்ன்னு அப்பாவும் அம்மாவும் நினைக்கிறாங்க, அதனால் தான் ஆராவை வெறுக்கிறாங்க”
“அண்ணா என்ன சொல்ற.? ஆரா அண்ணியை வெறுக்கிற வரைக்கும் ஓகே. அவங்களை எதுக்காகக் கொல்லணும்ன்னு நினைக்கிறாங்க.?” என்று குழப்பமாய்க் கேட்டாள் லாவண்யா.
“அதை இனி தான் கண்டுபிடிக்கணும் லாவ்” என மௌனமாய்ச் சொன்னவனின் மனதில் ஆராவின் நினைவுகள் அலைமோத தொடங்கியது.
“சரி இப்போ அண்ணி எங்கே இருக்காங்கன்னு தெரியும் தானே வா தேடி போகலாம்” என உரைத்தாள் லாவண்யா.
“அவளோட காதலை தேடி போயிருக்கா, அவளோட டெஸ்டினேஷனை தேடி போயிருக்கா” எனச் சொன்னவனின் விழிகள் சோகத்தைத் தத்தெடுத்தது.
“என்ன அண்ணா சொல்ற.? எனக்கு எதுவுமே புரியலை”
“லாவ் ஆராவுக்குன்னு சில ட்ரீம்ஸ் இருந்திச்சு, அந்த ட்ரீம்ஸை அவளே நிறைவேற்றிக்கப் போயிட்டாள்
“எதுக்கு உன்கிட்ட சொல்லிக்காம போகணும்.? உன்கிட்ட சொல்லிட்டு போயிருந்தாள் இவ்வளவு பிரச்சனை இல்லையே அண்ணா”
“அவளைப் பற்றி முழுசா தெரிஞ்சிக்கிட்டால் மட்டும் தான் அவளைப் பற்றிப் புரிஞ்சிக்க முடியும், அவள் எனக்குக் கிடைத்த புதிர், அவள் எனக்குக் கிடைத்த புதையல், அவள் எனக்குக் கிடைத்த பரிசு, அவள் என்னுடைய காதல்” எனப் பேசிக்கொண்டிருந்தவனின் இதழ் மென்நகை புரிந்தது,
அவளை முதன் முதலில் சந்தித்த நாளை நோக்கி அவன் மனம் பயணித்தது.
**********************************************************************************************
அன்று.
சென்னையின் ஓஎம்ஆர் சாலையை ஒட்டி அமைந்திருந்தது அந்த நிறுவனம் ஏ.கே குருப் ஆஃப் கம்பெனிஸ், ஓங்கி உயர்ந்து நின்ற கண்ணாடியிலான கட்டிடத்தை நோக்கி அதன் பணியாளர்கள் விரைந்துக்கொண்டிருந்தனர். எந்த வித ஆர்பட்டமும் இன்றி விமானம் மெல்ல தரையிறங்குவது போல் பவ்யமாய் நின்றது அந்தக் கறுஞ்சிறுத்தை.
பவ்யமாய் நின்றாலும் அதன் கம்பீரம் அங்கிருப்பவர்களைக் கவரத் தான் செய்தது. ஜாக்குவாரை திறந்துக்கொண்டு ஏ.கே குருப் ஆஃப் கம்பெனியின் சம்ராஜ்ஜியத்தைக் கட்டி ஆளும் இளம் சிறுத்தை ஆதித் கிருஷ்ணா தோரணையாய் இறங்கினான். அவன் இறங்கியவுடன் ட்ரைவர் காரை உரிய இடத்தில் நிறுத்த புறப்பட்டதைப் பார்த்ததோடு, இந்தக் கலியுக கிருஷ்ணனை காண்பதற்கே தவம் கிடந்தது போல் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர் அந்த இளம் பெண்கள்.
கருநீல நிற கோட் அணிந்திருந்தவன் ஆகாய நீல நிறச்சட்டை அணிந்திருந்தான், தன் ஷூ கால்களைப் பதித்துத் தன்னுடைய அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஷாப்பிங் மாலில் இருந்த எஸ்கலேட்டரில் அவன் கால் வைக்க அது அவனை அழகாய் முதல் தளத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியது. சுற்றி நடப்பவற்றை உள் வாங்கியவாறே சிறு சலனமும் இன்றித் தன் அறைக்குச் சென்றான். இவனின் வரவுக்காகக் காத்திருந்தான் விக்னேஷ்.
“பாஸ்.!” விக்கியின் குரல்.
“ம்ம் சொல்லு விக்கி.?”
“பாஸ் ஒரு கான்ஃப்ரன்ஸ் ஹால்ல மீட்டிங் நடந்திட்டு இருக்கு, பெரிய பாஸ் தான் பார்த்திட்டு இருக்காங்க”
“ஓ டாட் வந்திருக்காங்களா.?”
“ஆமாம் பாஸ்.! உங்களுக்கு முன்னாடியே வந்துட்டாங்க”
“ஆல்ரைட்” எனச் சொன்னவன் வேக எட்டுகளை வைத்துக் கான்ஃப்ரன்ஸ் ஹாலை நோக்கி நடந்தான்.
அந்த நிறுவனத்தில் புதிதாய் இணையும் பணியாளர்களுக்கு. ட்ரைனிங் அண்ட் டெவலப்மென்ட் மூலம் ஏழு நாட்கள் ஓரியண்டேசன் எனச் சொல்லப்படும் பயிற்சி வகுப்புகள் நடைப்பெறும். அவ்வாறு நடக்கும் பயிற்சி வகுப்புகளில் புதிதாய் சேர்க்க போகும் சில விசயங்களைக் காரசாரமாய் விவாதித்துக் கொண்டிருந்தார் கோதண்டம். அந்தத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் அவற்றை அமைதியாகக் கேட்டிக்கொண்டிருந்த போது புயலைப் போல்
கான்ஃப்ரென்ஸ் ஹாலுக்குள் நுழைந்தான்.
“டாட் வாட்ஸ் கோயிங் ஆன்.?” என்ற கேள்வியுடன் அவனுடைய அரியாசனத்தில் தோரணையாய் வந்தமர்ந்தான் ஆதித் கிருஷ்ணா.
“திஸ் இஸ் நாட் ஃபேர் ஆதித்” கோபமாய்க் காய்ந்தார் கோதண்டம்.
“காய்ஸ் டிஸ்பர்ஸ்” என ஆதித் எதிரில் இருந்த பணியாட்களைப் பார்த்து உத்தரவிட்ட நொடியில் அவர்கள் எழுந்து வெளியே சென்றனர்.
“ஆதித்.! ஏன் இப்படிப் பண்ணுறே.?”
“டிரையினிங் அண்ட் டெவலப்மென்ட்ல எந்த டெவலப்மெண்டும் தேவையில்லை உங்களுக்குத் தான் டெவலப்மென்ட் தேவை, அவங்களோட டைம்மை வேஸ்ட் பண்ணுறீங்க டாட்” என ஆதித் பேசிக்கொண்டிருந்த போதே விக்கி கன்ஃப்ரென்ஸ் அறைக்குள் புகுந்தான்.
“ஆதித் என்ன பேச்சு பேசறே.?”
“விக்கி அவரைப் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வை” எனச் சொல்லி வெளியேறியவன் தன் அன்றாட வேலைகளில் ஆழ்ந்து போனான். தீர்க்கமான முடிவுடன் அவன் செய்யும் செயல்களில் வெற்றியும் கண்டான். வேலையின் மும்மரத்தில் அந்தி சாய்ந்ததைக் கூட மறந்து வேலை செய்துக்கொண்டிருந்த போது திடீரென வெட்டிய மின்னலில் கண்ணாடி சுவரின் அருகே வந்து நின்றான்.
கருமேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்ததே அவனுக்கு மழை வரும் அறிகுறியை கொடுத்தது. தேநீர் எனை வந்து ருசியேன் என அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கத் தேநீர் பருகிய படி மண் வந்து சேர்ந்த மழைக் காதலியை ரசிக்கத் துவங்கினான்.
கண்ணாடியிலான சுவற்றில் சாராலாய் தூவி அவன் மனதிற்கு இதமளித்தது.
எப்போதும் பம்பரம் போல் சுழன்றுக் கொண்டிருந்தவனுக்கு இதமான சூழலை தர தேநீரை மெல்ல உறிஞ்சினான். அதன் தித்திப்பில் லயித்துப் போனான். வேலையைப் பற்றிய கவலைகள் சற்றுப் புறம் தள்ளி போன சமயத்தில் அவனுடைய அலைப்பேசி மெல்ல சிணுங்கியது. விரல்களுக்கு நோகாமல் அழைப்பே ஏற்றான்.
“குட் ஈவினிங் சார்” தேன்குரல் அவன் செவிதனை தீண்டியது.
“குட் ஈவ்னிங், யார் நீங்க.?” தன்மையாய் கேட்டான்.
“சார் ஐ யெம் ஆரத்யா” அவளின் பெயர் அவனுக்குப் பிடித்தது.
“ஆரத்யா.! நைஸ் நேம்” இதுவே அவன் வேலையில் இருக்கும் போது பேசியிருந்தால் அவளை ஒரு வழி செய்திருப்பான்.
“சொல்லுங்க என்ன விசயம் ஆரத்யா.?”
“சார் உங்களோட வாட்ஸ் ஆப் கொஞ்சம் ஓப்பன் பண்ணி பாருங்க” அவள் மெதுவாய் பேசினாள். அவன் அதை ஓப்பன் செய்து பார்த்து சற்று அதிர்வுடன்.
“ஹலோ யாரு நீ.? ராங்க் நம்பர் வை போனை” கோபமாய் ஒலித்தது ஆதித் கிருஷ்ணாவின் குரல்.
“ஹலோ நீங்க ஆதித் கிருஷ்ணா தானே.?”
“ஆமாம்”
“உங்க அப்பா பேர் கோதண்டம் தானே.?”
“யா கரெக்ட்”
“உங்க அம்மா பேர் யசோதா சரி தானே.?”
“எல்லாம் சரி தான்.? எனக்கு எதுக்காக இதெல்லாம் அனுப்பியிருக்க.?”
“சார் உங்களுக்கு எந்த ப்ரொஃபைல் பிடிச்சிருக்குன்னு சொன்னீங்கன்னா.? நாங்க நெக்ஸ்ட் லெவல்க்கு மூவ் பண்ணுவோம்”
“வாட் புல் ஷிட்.! இப்போல்லாம் வாட்ஸ் ஆப் மூலமாவே பராஸ்டியூசனா.? ப்ளடி ஹவ் டேர் யூ.?” அவன் சொன்ன வார்த்தைகளில் மறுமுனையிலிருந்து சில நிமிடம் நிசப்தம் நிலவ.
“சாரி சார் திஸ் இஸ் மை ஃபால்ட். ஐ யெம் ஆரத்யா ஃப்ரம் மேட்ரிமோனி சார்” என அவள் பொறுமையாய் பேசினாலும் அவள் குரலில் அழுகையின் விசும்பல் தெளிவாய் கேட்டது.
“ஆரா.” அவன் எதோ சொல்லும் முன் இடைநிறுத்தியவள்.
“சாரி ஃபார் மை மிஸ்டேக் சார், உங்களுக்கு அனுப்பியிருக்க ப்ரொஃபைல்ல எந்த ப்ரொஃபைல் ஓகேன்னு சொன்னீங்கன்னா, ஃப்ர்தரா வீ வில் ப்ரோசீட் சார். சாரி அண்ட் தேங்க்யூ சார். ஹவ் எ ஸ்வீட் டே சார்” எனப் படபடவெனப் பேசி முடித்தவள் அழைப்பை துண்டித்தாள்.
அவள் எதிரே இருந்த கணினியைப் பார்த்தபடி விழிகளில் நீர் கோர்க்க கட்டுபடுத்தி அமர்ந்திருந்தவள், அவளுக்குக் கொடுத்திருக்கும் வேலையின் அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னேறினாள்.
கணினியின் மூலம் அடுத்த எண்ணுக்கு அழைப்பை விடுத்தாள். கண்களில் தேங்கி நின்ற கண்ணீரை அழுந்த துடைத்தெறிந்தாள். அரிதாரம் பூசுவதைப் போல். புன்னகையை முகத்தில் பூசிக்கொண்டாள், உற்சாகத்தை அவள் குரலில் கொண்டு வந்தாள்.
“ஹாய் குட் ஈவ்னிங் சார் ஆரத்யா ஃப்ரம் மேட்ரிமோனி”
“ம்ம்ம சொல்லுங்க மேடம் தினமும் கால் பண்ணுறீங்க பொண்ணு தான் தர மாட்டேன்றீங்க” எதிர்முனையில் இருந்த குரல், அவளுக்குக் கடுப்பைக் கொடுத்தது.
“ஹரி சார் நாங்க தினமும் நாலு ப்ரொஃபைல் அனுப்புறோம், பட் நீங்க தான் செலக்ட் பண்ணவே மாட்டேன்றீங்க” பொறுமைக்கும் அவளுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது ஆனால் அவள் பொறுமையுடன் பேசிக்கொண்டிருக்கிறாள் என்றாள் ஒரே காரணம் தான் பணம், அவள் வாழ்வாதாரத்திற்குத் தேவையான பணம் வேண்டுமெனில் அவள் இத்தகைய பேச்செல்லாம் கேட்டு தான் ஆக வேண்டும்.
“நாலு ஃப்ரொஃபைல் அனுப்புறீங்க எத்தனை நாளா உங்க போட்டோ கேட்டுட்டு இருக்கேன் அனுப்ப மாட்டேன்றீங்களே” கிட்ட தட்ட அவன் வழிந்தான்.
“ஹரி சார் அப்படியெல்லாம் பண்ண முடியாது சார். இங்கே ரெஜிஸ்டர்ட் ப்ரொஃபைல் மட்டும் தான் காட்ட முடியும்”
“அப்போ ரெஜிஸ்டர் பண்ணுங்க மேடம்” அவன் பேசுவது பிடிக்காமல் காதில் மாட்டியிருந்த ஹெட்போனை கழட்டி விட்டு தலையைப் பிடித்துக்கொண்டாள். இவன் பேசியது ஏற்கனவே இருந்த தலை வலியை அதிகப் படுத்தியிருந்தது.
“சார்.! ப்ளீஸ் அனுப்பியிருக்க ப்ரொஃபைலை பாருங்க பார்த்திட்டு சொல்லுங்க” எனப் பணிவாய் பேசினாள் ஆரத்யா.
“சரி சரி.! லவ் யூ டார்லிங் சொல்லு பார்ப்போம்” ஹரி கேட்க,
“சார் இப்படியே பேசிகிட்டு இருந்தீங்கன்னா நெக்ஸ்ட் டைம் ஜென்ட்ஸ் ஸ்டாஃப் தான் கால் பண்ணுவாங்க, தேங்க்யூ சார்” எனப் பேசியவள் போலிப் புன்னகையைப் பூசிக்கொண்டு அழைப்பை துண்டித்தாள். தன் கேபினிலிருந்து எழுந்தவள். மேனேஜரின் அறையைத் திறந்து,
“எக்ஸ்க்யூஸ்மீ சார்.!”
“வாம்மா ஆரத்யா.!” என விழித்தார் அவளின் மேனேஜர் மனோகரன்.
“சார்.! டூ ஹவர்ஸ்ல பிஃபிட்டி கால்ஸ் பண்ணியிருக்கேன், அதில் இரண்டு பேர் மட்டும் இன்ட்ரெஸ்ட் காட்டுற மாதிரி தெரியலை சார். ஒருத்தர் ஆதித் கிருஷ்ணா, இன்னொருத்தர் ஹரிசந்திரன்” அவள் சொல்லி முடித்தாள்.
“இந்த ஹரி சந்திரனை விட்டு தள்ளிடும்மா, பட் இந்த ஆதித் கிருஷ்ணாவுக்கு ஒரு குறிப்பிட்ட ஃபரொஃபலை முடிச்சு தந்தால் உனக்குக் கமிசன் தர்றேன்ம்மா” என மனோகரன் சொன்னார்.
“மனோ சார்.! அவருக்கு மேரேஜ்லையே இன்ட்ரெஸ்ட் இல்லை போலச் சார் ராங்க் நம்பர்ன்னு நினைச்சு திட்டிட்டார்” எனப் புலம்பினாள்.
“சில சமயம் அப்படித் தான் பேசுவாங்க நம்ம தான் வழிக்குக் கொண்டு வரணும்” எனச் சொல்லி ஆரத்யாவை அனுப்பி வைத்தார் மனோ.
ஆரத்யாவுக்கு இது மட்டும் தான் வேலை என்று இல்லை. அவள் பார்க்கும் வேலைகளில் இதுவும் ஒன்று, சில நேரங்களில் டெலிவரி பெண்ணாக, சில சமயங்களில் மேடைகளில் பாட்டு பாடும் பாடகியாகத் தினமும் புதுப் புது அவதாரம் எடுத்துவரும் இவள் இன்னும் சற்று நேரத்தில் ஒரு திருமண விஷேசத்தில் பாட்டு பாடச் சென்றாக வேண்டும் மேட்ரிமோனி ஆஃபிஸில் இருந்து புறப்பட்டவள் ஷேர் ஆட்டோவை நாடினாள். அதில் ஏறிய பின் உரிய இடத்திற்குச் சென்றாள்.
ராககீதம் ஆர்கிஸ்ட்ராவில் இவளும் ஒரு பாடகி கிடைக்கும் நேரங்களில் கிட்டாரும் கற்றுக்கொண்டு இருக்கிறாள். அன்றைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவளுக்குக் கொடுத்திருந்த பாட்டைப் பாடிவிட்டு அங்கேயே தன் இரவு உணவை உண்டு விட்டு கிளம்பவே நேரம் பதினொன்றை தாண்டியிருந்தது.
அவள் கையில் இருந்த இருபது ரூபாயை வைத்து ஒன்றும் செய்ய முடியாது இரவு பதினொன்று என்பதால் பேருந்துகள் ஏதும் வராத சூழலில் சாலையோரம் மெல்ல நடக்க ஆரம்பித்தாள். காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு நடந்தவளுக்கு மக்களின் நடமாட்டம் இருப்பதே நிம்மதியை தந்தது. மூன்று கிலோமீட்டர் நடந்தாக வேண்டும். அவள் செல்லும் வழியில் இருக்கும் சிறிய காட்டு பகுதியை நினைத்து அவளுக்குப் பயம் பிடித்துக்கொண்டது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வேக எட்டுகளை வைத்தாள்.
சமூக விரோதமாக நிறையச் செயல்கள் நடக்கும் இடம் அது, தலைக் கவிழ்ந்து கொண்டு நடந்தவளின் எதிரே வந்து நின்றது லுங்கி கட்டிய ஒரு உருவம், இருளில் அவன் முகம் கூட அவளுக்குத் தெளிவாய் தெரியவில்லை.
“அண்ணா வழியை விடுங்க” எனச் சொன்னவள் ஹெட்போனை கழட்டி தன் பைக்குள் வைப்பது போல் எதையோ துலாவினாள்.
“என்ன பாப்பா பயந்துட்டியா.?” பற்களைக் காட்டினான்.
“அண்ணா வழி விடுங்க” என மீண்டும் அவள் பேசியபடி அங்கிருந்து நகர முற்பட்ட போது அவளின் கைகளை அழுந்த பிடித்தவன்.
“டேய் சீக்கிரம் வாங்கடா” எனக் குரல் கொடுக்க நாலைந்து பீம் பாய் போல் இருந்தவர்கள் வர மிரண்டு போய் விழித்தாள். அவன் கையை உதறிக்கொண்டு ஓட ஆரம்பித்தாள். மின்விளக்கு அவள் கண்களுக்கு மிகத் தொலைவில் தெரிந்தது.
மின்விளக்கை அடைந்தால் போதும் என்ற இலக்கை வைத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தாள். பீம்பாய்கள் துரத்த ஆரம்பித்தனர்.
ஓடியபடி அவள் கைப்பையில் இருந்த விசிலை எடுத்து ஊதிக்கொண்டே ஓடினாள்.
“டேய் விசில் ஊதுகிறாள் பாரு.வாடா போலீஸ் வந்திட போறாங்க போயிடலாம்” ஒருவன் சொன்னான்
“டேய் போலீஸூக்கு பயந்தா இந்தத் தொழில் பண்ணுறோம் முதலில் அவளைப் பிடிப்போம் டா” இன்னொருவன் சொல்ல ஓட்டத்தில் வேகத்தைக் கூட்டினர்.
அதே நேரம் அங்கே விரைந்து வந்துக்கொண்டிருந்த கருப்பு நிறக் காரின் முன் போய் விழ. அதை இயக்கி வந்தவன் சடன் ப்ரேக் போட்டு நிறுத்தியிருந்தான்.
“ஹெல்ப்.! ஹெல்ப்.!” எனக் காரின் கதவை தட்டியவள் மூச்சு வாங்க நின்றிருந்தாள். அவளால் என்ன நடந்தது என்று கூட விவரிக்க முடியாத பயத்தில் நின்றிருந்தாள்.
கார் கதவை திறந்துக்கொண்டு கம்பீரமாய் இறங்கினான் கார்மேக கண்ணனை போல், அன்று திரௌபதியின் மானத்தைக் காக்க துயில் கொடுத்த கிருஷ்ணனை போல் தன்னவள் என்று அறியாமலே அவளின் மானம் காக்க வந்தானோ இந்த ஆதித் கிருஷ்ணன்.
அவன் விழிகளைப் பார்த்து நின்றவளை கரம்பற்றித் தன்புறம் இழுக்க, ஆதித் கிருஷ்ணாவை கண்டு தலை தெறிக்க ஓடினார்கள் அந்த பீம் பாய்கள்.
“ரொம்பத் தேங்க்ஸ் சார்.!” என்று அங்கிருந்து நகரப் போனவளை,
“வெயிட் வீடு எங்கே இருக்கு சொல்லு நான் ட்ராப் பண்ணுறேன்” எனக் கேட்ட ஆதித் கிருஷ்ணாவை பார்த்து.
“நோ தேங்க்ஸ்” என உதட்டை சுழித்தாள் ஆரத்யா.
“சரி போ.! நீ தனியா போறதை பார்த்து மறுபடியும் வரப்போறாங்க” எனச் சொல்லி அவன் திரும்புவதற்குள் அவனுடைய காரில் ஏறி அமர்ந்துக்கொண்டாள் ஆரத்யா. அவனும் உள்ளே சென்று அமர்ந்து கொண்டு வண்டியை இயக்க ஆரம்பித்தான்.
“ஹாய் சார் ஐ யெம் ஆரத்யா.!” எனச் சொல்லி அவன் புறம் கரம் நீட்ட,
“ஆதித் கிருஷ்ணா” என அவனும் அவள் கையைப் பிடித்த நொடியில் அந்தப் பெயரும் ஆதித் கிருஷ்ணா என்ற அப்பளிகேசனில் ஒட்டப்படிருந்த அவனின் புகைப்படமும் நினைவுக்கு வர. அவளின் கரம் பற்றியிருந்தவனை கையை வேகமாக உதறியவளின் செவ்விதழ்கள் தானாய் “இடியட்” எனச் சொல்லி அவனை முறைத்தாள்.

