Loading

 

அவனுடைய பெயரும் அவன் உச்சரித்த கடுஞ்சொற்களும் மீண்டும் கேட்பதாய் உணர்ந்தாள் ஆரத்யா. அவளுடன் தொலைப்பேசியில் உரையாடியவன் இவன் தானா.? என்ற சந்தேகமும் அவளுக்குள் எழுந்தது.

தனக்குள் ஏற்பட்ட புதிதோர் உணர்வை உணர்ந்துக் கொள்ள முடியாமல் தவித்தாள். அவனின் அருகாமையும் பாதுகாப்பான உணர்வை கொடுத்த போதிலும், காலையில் அவளிடம் வசைப்பாடியது அவன் தானோ.? என்ற சந்தேகங்களை கிளப்பியது. தன்னை விபாச்சார தொழில் செய்பவள் என நினைத்து அவளை காயப்படுத்தியவனாயிற்றே இவன். அவளின் கோபத்தை கட்டுபடுத்த முடியாமல் சீறியிருந்தாள்.

“மிஸ்டர் ஆதித் கிருஷ்ணா.!” என அவள் கோபமாய் விளித்ததில் திரும்பி அவளைப் பார்த்தான். அவள் வேகமாய் ஓடி வந்தத்தில் நெற்றியில் வியர்வை பூக்கள் அரும்பியிருந்தது. தன் துப்பாட்டவை கொண்டு நெற்றியை அழுத்தி துடைத்த படி அவனை முறைத்தாள்.

கார்மேகத்தை உடையாய் தைத்து போட்டிருந்தவளின் கார்குழல் காற்றில் இசை அமைக்க அஞ்சனம் தீட்டியிருந்த அவளின் கருவிழிகளில் இசைக்கேற்ப நடனமாடியதைப் போல் உணர்ந்தவனின் பார்வை அவள் கழுத்தில் அணிந்திருந்த செயினில் இருந்த டாலரை பார்த்து அவன் புருவம் தானாய் உயர்ந்தது. மயில் இறகுடன் சேர்ந்திருந்த புல்லாங்குழல் அவள் கழுத்தில் அழகாய் அலங்கரித்துக் கொண்டிருக்க அதை ரசனையாய் பார்த்தான். அவனை அந்த டாலர் மிகவும் ஈர்த்தது என்றே சொல்லாம். மயில் பீலி சூடும் கிருஷ்ணனின் நாமத்தை அவன் வைத்திருந்தால் அது பிடித்ததாக தெரியவில்லை, ஆனால் அந்த நொடி கிருஷ்ணிண் ராதையாக தெரிந்தாள் ஆரத்யா எனும் கோதைப் பெண் அவன் விழிகளுக்கு.

“என்ன லுக்கு மிஸ்டர்,கல்யாணத்தில் இன்ட்ரெஸ்ட் இல்லாத மாதிரி நடந்துக்கிறீங்க. யாரு என்றே தெரியாத பொண்ணை வச்சக் கண்ணு வாங்காம பாக்குறீங்களே இதெல்லாம் நியாயமா.? கொஞ்சம் ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுங்க “ சாலையை பார்த்தபடி பேசியவளின் குரலிலும் செயலிலும் வஞ்சனையில்லாமல் நக்கல் தொனித்தது.

“சாரி உங்க நேம்.?”

“ஆரத்யா.!” அவள் சொன்ன போது அவன் முகத்தில் சிறு பளிச்சிடலுடன் சேர்ந்த குற்ற உணர்வும் அவனை தொற்றிக்கொண்டது.

“ஆரத்யா.!” என்றழைத்தவன் அவள் விழிகளை பார்த்து நேராய் மன்னிப்பு கேட்க முற்பட்ட போது. அவள் முந்திக்கொண்டாள்

“ஃபரம் மேட்ரிமோனின்னு கண்டிப்பா சொல்லி தான் ஆகணுமா.? இல்லைனா தப்பான தொழில் செய்யுற பொண்ணுன்னு பட்டம் கட்டிருவீங்களே, டர்ட்டி மைண்ட்“ கோபம் கொப்பளிக்க பேசியவளின் விழிகள் சிவந்தது.

“ஆக்ச்சுவலி” என அவன் தன்னிலை விளக்கும் முன்னே,

“நான் வாழ்க்கையிலே பார்க்கவே கூடாதுன்னு நினைச்ச ஆள் நீங்க தான் மிஸ்டர் ஆதித் கிருஷ்ணா. எனி வே அந்த முரடனுக கிட்ட இருந்து என்னை காப்பாத்தி லிஃப்ட் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. வண்டியை நிறுத்துங்க” என்று கோபத்தில் கொப்பளித்தவளை ரசித்துக்கொண்டிருந்தான் ஆதித் கிருஷ்ணா.

“என்னை நம்பி வந்தவங்களை பாதியிலயே விட்டுட்டு போற பழக்கம் எனக்கில்லை,” வார்த்தைகளை அவன் உதிர்த்த நொடியில் அவனை பிடித்துக்கொண்டாள்.

“யாரு போன்ல பேசுறாங்கன்னு கூட தெரியாம அவங்க கேரக்டரை ஜட்ஜ் பண்ணுற நீங்க எல்லாம் இந்த வார்தையை பேசக் கூடாது மிஸ்டர் ஆதித் கிருஷ்ணா, எல்லாம் பணம் இருக்குதேன்ற திமிரு வேற என்ன சொல்ல, பணம் இருந்தால் மற்ற ஆட்களை மதிக்க கூடாதுன்னு உங்க வீட்டில் சொல்லி கொடுத்திருக்காங்களா?? ஜஸ்ட் ஸ்டாப் யுவர் கார் நான் இறங்கணும்” என அவள் தன்னை மீறி கோபத்தில் கத்திய போது கருஞ்சிறுத்தை தார் சாலையை உரசி நின்றுது. அவளை அவன் விழிகள் கோபத்துடன் பார்க்க அதையெல்லாம் கண்டுக்கொள்ளாது காரின் கதவை கோபத்தில் படாரென அடைத்ததில் கார் குலுங்கியது, அவன் ஆணவமும் அதில் ஆட்டம் கண்டதை உணர்ந்தான் ஆதித் கிருஷ்ணா. முறைத்தபடி தென்றலை போல் அவனை கடந்து சென்றாள் ஆரத்யா.

**********************************

பிருந்தாவனம் பேலஸ்

“ம்மா.! ம்மா.!”என கத்தியபடி வீட்டிற்குள் நுழைந்த ஆதித்தின் எதிரே வந்து நின்றார் யசோதா.

“ஆதித் ஏன் இவ்வளவு நேரம் கழிச்சு வர்ற? சாப்பிட்டியா.? முகம் ஏன் வாடி போயிருக்கு?” யசோதா பாசத்துடன் கேட்டார்.

“என்னோட ப்ரொஃபலை மேட்டிரிமோனிக்கு அனுப்பினது யாரு.?” கோபமாய் சீறினான்.

“நான் தான்ப்பா அனுப்பினேன், உனக்கும் கல்யாண வயசு வந்திடுச்சில” எனச் சொன்னபடி கோதண்டம் படியிறங்கி வந்தார்.

“என்கிட்ட கேட்காமல் உங்களை யார் கொடுக்க சொன்னது” எனக் கேட்க யாசோதாவிடமும் பதில் இல்லை கோதண்டத்திடமும் பதில் இல்லை இருவரையும் முறைத்துவிட்டு தன்னறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டான் ஆதித் கிருஷ்ணா.

இரவு உடைக்கு மாறியவன் தன் அறையிலிருந்த பால்கனியில் நடைபயில ஆரம்பித்தான், அவன் எண்ணம் முழுக்க அவளாகி போனாள், அறியாமல் அவளை திட்டியதை நினைத்து வருந்த ஆரம்பித்தான். ஒரு பெண்ணை பார்த்து சொல்லக் கூடாத வார்த்தையை சொல்லி விட்டோமே, அவள் மனதில் எவ்வளவு வலி இருந்திருந்தால், நள்ளிரவில் காரை விட்டு இறங்கி போயிருப்பாள் என்ற குற்ற உணர்வு அவனை வதைத்தது. அப்போது அவனின் அறையின் கதவு தட்டபட்டது. அவன் கதவை திறக்க லாவண்யா வந்து கையில் பால் டம்ளருடன் வந்து நின்றாள்.

“அண்ணா.!”

“லாவ் தூங்காமல் இங்கே என்ன பண்ணிகிட்டு இருக்க.?”

“அண்ணா அம்மா தான் நீ சாப்பிடலைன்னு பால் கொடுத்திட்டு வரச் சொன்னாங்க” தங்கை தன் தூக்கம் கெடுத்து அவனுக்காக பால் கொண்டு வந்திருக்கிறாள் என்பதை அவனால் உணர முடிந்தது. அவளின் கலைந்து போன கேசமும், பாதி உறக்கத்தில் எழுந்து வந்திருப்பதை அவளின் சோர்வான முகமும் உணர்த்தியது. பாலை உடனே வாங்கி குடித்துவிட்டு தங்கையை அனுப்பி வைத்தவன். தன்னுடைய பஞ்சணையில் பொத்தென விழுந்தான்.

நடு இரவில் ஒரு பெண்ணை நிராதரவாய் விட்டு வந்தது அவனின் மனதை வலிக்க செய்தது. அவனின் அவசரத்தால் அவளை வார்த்தையில் வேறு காயப்படுத்தியிருக்கிறோம் என்பதே ஆதித் கிருஷ்ணாவுக்குள் குற்ற உணர்வை ஏற்படுத்தியது. ஏனோ அவளின் அழகு வதனம் மின்னல் கீற்றாய் அவன் கண் முன் வந்து போனது. அவள் போனில் பேசிய தன்மையான குரலுக்கும், நடு இரவில் அவனை திட்டி தீர்த்துச் சென்ற குரலுக்கும் இருந்த வித்தியாசங்களை அவன் மனம் கணக்கு போட்டுக்கொண்டிருந்தது. அவள் பேசிச் சென்ற வார்த்தைகளை எண்ணி பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.நடு இரவில் உச்சி வானில் வலம் வந்த பௌர்ணமி நிலவை போல் இவன் வாழ்வில் அந்த ஓரே ஒரு இரவில் அழகாய் வலம் வந்து சென்றிருந்தாள் ஆரத்யா. ஒரு நாள் இரவு பௌர்ணமி வானை அளந்து வலம் வந்தாலும் அதன் வெளிச்சமானது அதை யாசிக்கும் யாசகன் மீது விழ தானே செய்யும், அதே போல் தான் ஆரத்யா எனும் நிலாப்பெண்ணின் நிழல் அவன் மனதில் மென்மையாய் விழுந்தது.

*********************

கணினியின் முன் அமர்ந்திருந்தவள் மிரட்சியாய் அதை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் அன்று செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு தன்னுடைய நோட் பேடில் எழுதிக்கொண்டிருந்தாள். அப்போது இரண்டவதாய் அவள் எழுதிய பெயரை பார்த்ததும் அவளுள் கோபம் எழுந்தது. தன்னை இழிவாக பேசியவனின் பெயரை அவள் வைத்திருந்த பேனாவை கொண்டு அடித்தாள் அவன் பெயரின் மீது கிறுக்கி தள்ளினாள். அப்போதும் அவளின் கோபம் அடங்க வில்லை. கத்தியை கையில் வைத்து குத்துவது போல் பேனாவை வைத்து அவன் பெயரை குத்தி கிழித்தாள். அப்போது அவளுக்கு அழைப்பு வந்திருப்பதாய் சிக்னல் வர ஹெட் செட்டை காதில் மாட்டிக்கொண்டாள்.

“குட் மார்னிங் ஆரத்யா ஃப்ரம் மேட்ரிமோனி” என்றாள் தன்மையாக மறுபுறம் அமைதி நிலவியது.

“ஹலோ.!” மீண்டும் அவள் பேசினாள்.

“ஆதித் கிருஷ்ணா ஹியர்” என்ற கம்பீரமான குரல் அவள் செவிதனை தீண்டி அவளை உள்ளூர நடுங்க செய்தது. இன்று என்ன சொல்ல காத்திருக்கிறனோ என்ற பயம் இருந்தாலும் அதை தனக்குள் மறைத்துக்கொண்டாள் ஆரத்யா. நேற்று இரவு அவள் வாய்க்கு வந்ததையெல்லாம் திட்டிவிட்டு வந்துவிட்டாள். ஆனால் இப்போது அவள் பேசிக்கொண்டிருப்பது அவளுடைய க்ளையண்டிடம். பொறுமையை கையாண்டாள் பெண். மெல்ல தன்னை ஆசுவாசபடுத்திக்கொண்டவள் அவனை மெல்ல அழைத்தாள்.

“குட் மார்னிங் சார்.! நாங்க அனுப்பின ப்ரோஃபைல் உங்களுக்கு பிடிச்சிருந்ததா.?”

“நோ.!” என்ற ஒற்றை வார்த்தையில் பதில் அவனிடம் இருந்து வந்தது. ‘அய்யோ ஒத்தை வார்த்தையில பதில் சொல்லிட்டானே ஃப்ரொபைல் லீட் எடுக்க நான் பட்ட பாடு எனக்கு தானே தெரியும்’ என தனக்குள் புலம்பிக்கொண்டாள், எதையும் காட்டிக்கொள்ளாமல்,

“ஓகே சார்.! உங்களுடைய ப்ரொஃபைலுக்கு சூட் ஆகுற நியூ ப்ரொஃபைல்ஸ் எடுத்திட்டு உங்களுக்கு அனுப்புறோம் சார். தேங்க்யூ சார் ஹாவ் ஏ நைஸ் டே” எனச் சொன்னவள் அவனுடைய பதிலை எதிர்நோக்காது பட்டென அழைப்பை துண்டித்து நிம்மதி பெருமூச்சு விட்ட போது அவளெதிரே இருந்த கேபினில் வந்தமர்ந்தாள் சுதா.

“என்ன மேடம் காலையிலயே டென்சனா இருக்கீங்க.? யாரு அந்த ஹரியா.?” என சுதா ஆராவை பார்த்து கேட்டாள்.

“அடியே சுதா எல்லாம் உன்னால தான் ஒரு வாரம் லீவ் போட்டு ஜாலியா இருந்திகிட்ட, இப்போ உன்னோட ப்ரொஃபைல்ஸ்லாம் நான் மேனேஜ் பண்ண வேண்டியதா இருக்கு ஹம்ம்ம்” அஷ்ட கோணலாய் முகத்தை வைத்துக்கொண்டாள் ஆரா.

“ஏய் ஆரா என்னடி என்ன ஆச்சு.?” பதறிய சுதா ஆராவின் அருகில் வந்து அவளின் கைப்பற்றி கேட்டாள். ஆதித் கிருஷ்ணா விசயத்தை பற்றி ஆரா சுதாவிடம் சொன்ன பிறகு. ஆராவிடம் என்ன சமாதானம் சொல்வதென்று கூடத் தெரியவில்லை. ஆதித் கிருஷ்ணாவின் மீது அளவில்லா கோபம் தான் சுதாவுக்கு ஏற்பட்டது.

“யார்டி அவன் உன்னை இப்படி பேசினவன் நம்பர் கொடு நான் பார்த்துக்கிறேன்” என கோபமாக கேட்டாள்.

“ஏய் விடு சுதா.! அப்பறம் அந்த மேனேஜர் மண்ட கசாயத்துகிட்ட நம்ம பேச்சு வாங்க வேண்டியதாக இருக்கும். அந்த ஆதித் கிருஷ்ணா மல்ட்டி மில்லினர் போல டி மண்ட கசாயத்துக்கு வேட்டை தான்” என ஆரா சொன்னவுடன் சுதா பட்டென சிரித்து விட்டாள்.

“அப்பறம் அந்த மண்ட கசாயம் மனோகர் கிட்ட சொன்னியா.? என்ன சொன்னான்.?” என பேசியபடி தன் இருக்கைக்கு மீண்டும் வந்து அமர்ந்து தன் கணினியை உயிர்ப்பித்தாள் சுதா.

“வேலையை முடிச்சு கொடுத்தால் கமிசன் தர்றதா சொல்றாருடி”

“அப்படியா.? அப்போ நான் முடிச்சு கொடுத்தறேன்” என உற்சாகமான சுதா கணினியில் ஆதித் கிருஷ்ணாவின் ப்ரோப்ஃபைலை நோட்டம் விட ஆரம்பித்தாள்.

“வாவ்.! அவனோட இயர்லி டர்ன் ஓவரே மில்லியன் கணக்குல போகுதே.? இந்த கிருஷ்ணாவுக்கு ஒரு ராதாவை பிக்ஸ் பண்ணுறோம் பல்க் அமௌண்ட்டா மண்ட கசாயத்துகிட்ட வாங்குறோம்” சுதா குதுகலித்தாள்.

“ம்ம்ம் கால் பண்ணி பேசு ஒரு நைட்டுக்கு எவ்வளவுன்னு கேட்க போறான் பாரு” என வாய் மூடி சிரித்தாள் ஆரா சுதா வந்த பிறகு அவளின் பிரச்சனை சோகம் அனைத்தும் கண்ணுக்கு தெரியாத இடத்திற்க்கு காணாமல் போயிருந்தது.

“அப்படி பேசினால் மண்ட கசாயம் மனோகர்க்கு கான்ஃப்ரென்ஸ் போட்டு” அவள் சொல்லிக்கொண்டிருந்த போதே ஆரா சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள். அவளை பார்த்து சுதாவுக்கு புன்னகை அரும்பியது.

“ஏன்மா நிறுத்திட்ட மேல சொல்லு மண்ட கசாயம் மனோகர்க்கு கான்ப்ரென்ஸ் போட்டு அப்பறம்.? சொன்னால் நானும் சிரிப்பேன்ல சுதாம்மா”

“அய்யோ சார் சாரி” ஒரே நேரத்தில் கோரஸாக இருவரும் சொல்லி எழுந்து நிற்க.

“சொல்ற வேலையை தவிர மத்த வேலையை நல்லா பாக்கிறீங்கம்மா. இதென்ன பார்க்கா இல்லை பீச்சா.? இந்த மேட்டிரிமோனியை உருவாக்க நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்” அவர் புலம்ப ஆரம்பித்த போது.

“ஏதோ பெரிய சம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டதா நினைப்பு. ரெண்டு உடைஞ்ச கம்ப்யூட்டர் அதுல வொர்க் பண்ணுறதுக்கு நம்ம ரெண்டு பேரு நாலு ஓட்டை சேர் அவரு ரூம்க்கு மட்டும் ஏசி நமக்கு ஃபேன் கூட இல்லை” என சுதாவின் காதுகளில் ஆரா கிசுகிசுக்க மனோகரின் காதில் தெளிவாய் கேட்டு விட்டது.

“நீ சொல்றதும் சரிதான்ம்மா. ஆனால் இந்த டப்பா ஆஃபிஸை வச்சிகிட்டு கலர் கலரா வெப்சைட் போட்டு அதுக்கு ஆளுங்களை தேத்தி. வேலையே செய்யாத உங்களுக்கு சம்பளம்ன்னு ஒண்ணு போட்டு கொடுத்தேன் பாரு என்னை சொல்லணும்” என ஆதங்க பட்டவர்,

“சுதா.! இன்னைக்கி ஈவ்னிங் வரைக்கும் தான் உனக்கு டைம் அதுக்குள்ள இந்த ஹரிசந்திரனுக்கு நீ ஒரு வரனை ஓகே பண்ண வைக்கணும் அப்படி பண்ணலைனா நாளையில் இருந்து ஆஃபிஸ் வராதே” எனக் கோபமாய் கத்தினார்.

“சார் சாரி சார்.!” சுதா மன்னிப்பு வேண்டியதை பொருட்படுத்தாது ஆராவை பார்த்தார் மனோகரன்.

“ஆதித் கிருஷ்ணா ப்ரொஃபைலுக்கு நீ ஒரு வரனை பிக்ஸ் பண்ணி சம்மதிக்க வைக்கிற காட் இட் அதுவும் இப்போவே இன்றைக்கே” என கண்டிப்பாய் சொல்லி நகர்ந்த மனோகரனை இருவரும் வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தனர்.

“மண்ட கசாயம் ஆப்பு வச்சிருச்சா.? வா நியூவா யாரவது ரெஜிஸ்டர் பண்ணியிருக்காங்களான்னு பார்ப்போம். என இருவரும் தங்களின் வேலையில் மும்மரமாகி போயிருந்தனர். சில பெண்களின் தகவல்களை எடுத்துக் கொண்டு ஆதித் கிருஷ்ணாவுக்கு அழைப்பெடுக்க முயற்சித்தாள் ஆரா பலமுறை அழைப்பு விடுத்தும் அவன் எடுக்கவில்லை இதற்கு மேல் தாமதித்தால் பிரச்சனை ஆகிவிடும் எனப் பயந்து போன ஆரா மேனஜர் மனோகரை சந்திக்க அவருடைய அறையின் கண்ணாடியிலான கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

“சொல்லுமா ஆரா.! அதுக்குள்ள கொடுத்த டார்கெட்டை முடிச்சிட்டியா.?”சந்தோசமாக அவளை ஏறிட்டார்.

“சார் நோ சார். மிஸ்டர் ஆதித் கிருஷ்ணாக்கு கால் பண்ணினேன் அவர் போனை எடுக்க மாட்டேன்றார்”

“செக்கென்டரி நம்பர் எதாவது கொடுத்திருந்தால் அதற்கு ட்ரை பண்ணும்மா”

“சார்.!”

“என்னம்மா ஒரு பர்சன் கால் எடுக்கலைன்னா அவரோட வேற நம்பர்ருக்கு ட்ரை பண்ணி பார்க்கணும்ன்ற பேஸிக் சென்ஸ் கூடவா தெரியாது” என மீண்டும் திட்டி அனுப்பினார்.

“எல்லாத்தையும் கரெக்ட்டா செய்யுற நான் இந்த ஆதித் கிருஷ்ணா விசயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு சொதப்பி திட்டு வாங்கிட்டு இருக்கேன் நான் ஒரு இடியட்” என தன்னை தானே திட்டிக்கொண்டு தலையில் அடித்துக்கொண்டு அமரந்த ஆராவை பார்த்த சுதாவோ,

“அவன் போனை எடுக்கணும்னு நினைச்சு கால் பண்ணாமல், எடுக்க கூடாதுன்னு நினைச்சு கால் பண்ணினால் அப்படி தான் சொதப்பும்டி” என பல்லைக் காட்டிய சுதாவை முறைத்தாள் ஆரா.

“நீ என்ன டி அந்த ஹரி கேஸை முடிச்சிட்டியா.?”

“முடிச்சுட்டேனே”

“வாட் எப்படி டி.?” அதிர்வுடன் கேட்டாள் ஆரா.

“எது என்னடி கஸ்டம் அவனோட எக்ஸ்பெக்டேசனுக்கு ஏத்த ப்ரொஃபைல் ஒண்ணு வந்துச்சு பார்த்ததும் கிளிக் பண்ணிட்டான்”

“சூப்பர் டி. இந்த ஆதித் கிருஷ்ணாவுக்கு என்ன எக்‌ஸ்பெக்டேசன்னே மென்சன் பண்ணலைடி அதான் எனக்கு கஸ்டமா இருக்கு. போனை வேற எடுக்க மாட்டேன்றான்” என புலம்பிய படி அவனுடைய இன்னொரு எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.

“சரி சரி நீ பாருடி நான் போய் மண்ட கசாயத்துகிட்ட டீடெயில்ஸ் கொடுத்துட்டு டார்கெட் கம்ப்ளீட் பண்ணினதை சொல்லிட்டு வர்றேன்” சுதா மேனஜரின் அறைக்குள் சென்றாள்.

ஆரா அழைத்த எண்ணிற்கு அழைப்பு சென்றுக்கொண்டிருந்தது. பட்டென அழைப்பை ஏற்கபட்டவுடன்.

“ஹலோ சார் ஐ யெம் ஆரத்யா ஃப்ரம் மேட்ரிமோனி” என அவள் அவசரமாய் சொன்னாள்.

“சொல்லுங்க மேடம்” என்ற குரல்.

‘இது அவன் குரல் இல்லையே’ என அவள் மனம் யோசிக்க ஆரம்பித்தது. இருமுறை அவனிடம் தொலைப்பேசியில் பேசியிருக்கிறாள், ஒருமுறை நேரில் பேசியிருக்கிறாள் அவன் குரலில் இருந்த வசீகரம் இப்போது அவள் கேட்டுக்கொண்டிருக்கும் குரலில் இல்லை. அவன் குரலில் இருந்த கம்பீரமும் இப்போது அவள் செவிக்குள் கேட்டுக்கொண்டிருக்கும் குரலுக்கும் அவனுடைய குரலுக்கும் சம்பந்தமே இல்லை மனம் அடித்து சொன்ன நொடியில்.

“சார்.! ஆதித் கிருஷ்ணா சார் இருக்காங்களா.?” தெளிவாய் கேட்டாள்.

“மேடம் நான் அவரோட பி.ஏ விக்னேஷ் பேசுறேன்”

“விக்னேஷ் சார்.! மிஸ்டர் ஆதித் கிருஷ்ணாகிட்ட பேசணும் இட்ஸ் வெரி அர்ஜென்ட்” அவள் விளக்கி கொண்டிருந்தாள்.

“ஆதித் சார் மீட்டிங்ல இருக்காரு. நீங்க கால் பண்ணுவீங்கன்னு சொன்னாரு உங்களுக்கு அப்பாயிண்ட்மென்ட் பிக்ஸ் பண்ணியிருக்காரு நீங்க ஒரு த்ரீ ஓ க்ளாக் ஆபீஸ்க்கு வர முடியுமா.? சார் கேப் அரென்ஞ்ச்மென்ட் கூட பண்ணி தர சொன்னாரு” என ஆதித் சொல்லிக் கொடுத்ததை அவனை பார்த்தபடியே சொல்லிக்கொண்டிருந்தான் விக்னேஷ். அவளின் குரலை மட்டும் கேட்டு புன்னைகைத்துக் கொண்டிருந்தான் காதல் கொண்ட கிருஷ்ணன்.

“சார்.! சாரி டூ சே திஸ். எங்க ஆபிஸ்ல நேர்ல மீட் பண்ணி பிக்ஸ் செய்யுற வழக்கம் இல்லை”என ஆரா மழுப்பலாய் பதில் கொடுத்தாள்.

“ஓகே மேம் நோ ப்ராப்ளம்” என்றவன் அழைப்பை துண்டித்திருந்தான்.

“ஹே ஆதித்.! நிஜமா தான் சொல்லுறியா.? அவளை உனக்கு பிடிச்சிருக்கா.?” அழைப்பை துண்டித்தவன் தன் தோழனாகிய முதலாளி ஆதித் கிருஷ்ணாவை பார்த்துக் கேட்டான்.

“விக்கி.! நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை டா, அவகிட்ட மன்னிப்பு கேட்கணும் அவ்வளவு தான்” அவன் அப்படி சொன்னாலும் அவனின் விழிகளில் அவளை காண வேண்டும் என்ற ஏக்கம் கூடி இருந்தது.

“ஒரு சாரி கேட்கிறதுக்கா அவ்வளவு பெரிய மீட்டிங்கை கேன்சல் பண்ணியிருக்க.?”

“ஆமா.! சாரி கேட்க மட்டும் தான்” என சொன்னவனின் இதழ் அழகாய் வளைந்தது.

“அப்போ ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா ஆதித்”

“டேய் விக்கி நான் அப்படி எதுவும் சொல்லலையே”

“சரி நீ அந்த மனோகர்க்கு கால் பண்ணி ஆரத்யாவை மீட்டிங்க்கு அனுப்பி வைக்க சொல்லு, அப்போ அவ வந்து தானே ஆகணும்”

“ஓ இது தான் உன்னோட மாஸ்டர் ப்ளானா.?” என புன்னகைத்த படி மனோகருக்கு அழைப்பை விடுத்தான் விக்கி.

“ஹலோ.!”

“மிஸ்டர் மனோகர் நான் ஆதித் கிருஷ்ணாவோட பிஏ விக்னேஷ் பேசுறேன்”

“சார் சொல்லுங்க சார்” அமர்ந்திருந்த மனோகர் படக்கென எழுந்து நின்று பேசியதை பார்த்தபடி நின்றிருந்த ஆரத்யா அதிர்ந்தாள்.

“ஓகே சார் அனுப்பிடுறேன் சார் நோ ப்ராப்ளம் சார்” என பேசி முடித்து அழைப்பை துண்டித்த மனோகர்.

“ஆரத்யா உன் வாழ்க்கையில் ஜாக்பாட் தான் அடிக்க போகுது பாரு” என மனோகர் பல் இளிக்க புரியாது விழித்தாள் பாவை பெண்ணவள்.

“என்ன ஆரத்யா முழிக்கிற.? அந்த ஆதித் கிருஷ்ணாவுக்கு ஆஃபிஸ் வரைக்கும் போயிட்டு அவருக்கு பிடிச்ச ப்ரொஃபைலுக்கு ஓகே பண்ணிட்டு வா” அதிகாரமாய் ஒலித்த மனோகரின் குரலில் சர்வமும் அடங்கி நின்றாள் ஆரத்யா.

 

 

 

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்