Loading

சலனம்-7

அவள் முடிவை வெகு சாதாரணமாய் சொல்லிவிட்டு, அவள் நகர்ந்துவிட்டாள்.

 

நான் தான் அதே இடத்தில் நகராமல் நின்றிருந்தேன். அந்தச் சாதாரணமான தொனிதான் எனக்குள் அசாதாரணமான அதிர்வுகளை உண்டாக்கியது. அவளின் அந்தப் பேச்சில் இருந்த அலட்சியம், நான் இத்தனை காலம் கட்டி எழுப்பிய என் ‘ஆண்’ எனும் அதிகாரக் கோட்டையை ஒரு நொடியில் தரைமட்டமாக்கியது.

 

பெரும்பாலும் பெண்கள் நகர்ந்து சென்றுவிடுகிறார்கள். இந்தப் பாழாய்ப் போன ஆண் மனம் தான் நகர மறுத்து அங்கேயே நின்று தொலைக்கிறது. இந்த ஆணாதிக்கச் சமூகத்தின் எச்சமான என் மனம், இன்னும் அந்தப் பழைய இடத்திலேயே வேரூன்றி நிற்கிறது.

 

 

சலனமற்ற அவள் முகத்திற்கு முன்னால், புயல் வீசும் கடலென என் மனம் தவித்துக் கொண்டிருந்தது.ஒவ்வொரு அலையும் கரையை மோதி சிதறுவது போல, என் ஈகோ அவளின் அமைதியில் மோதிச் சிதைந்தது.

 

​எப்போதும் அவள் கூந்தல் வாசம் என் நாசியை நனைக்க, அவளை அணைத்தபடி உறங்கும் அந்த இரவுகள் எனக்கு வரம். ஆனால், அன்று அந்த வரம் சாபமாக மாறியிருந்தது. பெட்ரூமின் குளுமை என்னை விரட்ட, வரவேற்பறையின் மெத்திருக்கை (Sofa) என் தற்காலிகத் தங்குமிடமானது.

 

 

எப்போதும், அவள் நெருக்கத்தில் அவளை அணைத்துக்கொண்டு உறங்கும் எனக்கு அன்று தூக்கமில்லா இரவாக மாறிப் போனது.அந்தச் சோபாவின் தனிமை, நான் அவளுக்கு எத்தனை அந்நியமாகிவிட்டேன் என்பதை ஒவ்வொரு நொடியும் எனக்குள் குத்திக் காட்டியது.

 

‘சம்யூ! ஐ லவ் யூ! எனக்காக இதைச் செய்ய மாட்டியா? நம்ம காதலை விட இந்த கெரியர் தான் உனக்கு முக்கியமா? நான் உனக்கு முக்கியமில்லையா? அப்போ என் மீதிருந்த காதல் பொய்யா?’ என்னுள் ஏராளமான கேள்விகள் அணிவகுத்து நின்றன.

 

 

‘அவள் தான் உன்னிடம் காதலே சொல்லவில்லையே? இதுவரை அவளிடமிருந்து ஐ லவ் யூ என்ற வார்த்தைகள் வெளி வந்திருக்கிறதா? நீ தான் அவள் அழகில் மயங்கிக் கிடக்கிறாய்!’ என் மனசாட்சி என்னைக் குத்தி ஞாபகப்படுத்தியது.

 

 

‘ஆம்! அதுவும் சரி தான். அவள் இதுவரை வார்த்தைக்காக கூட, ஐ லவ் யூ என்று சொன்னதில்லை. என் மீது காதல் இருந்தால் சொல்லியிருப்பாள் தானே?’ என யோசித்த எனக்கு, சொல்லிவிட்ட வார்த்தைகளை விட, சொல்லாத வார்த்தைகளின் வீரியம் அதிகம் என்பது புரியவே இல்லை. அவள் தன் காதலை வார்த்தைகளில் அடகு வைக்கவில்லை, தன் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் எனக்காகச் செய்த அர்ப்பணிப்புகளில் ஒளித்து வைத்திருந்தாள்.

 

 

அது புரியும் தருணத்தில், காலம் கடந்து போயிருக்கும் என்பதையும் நான் அறியவில்லை. காலம் கடந்து புரியும் அன்பு, மரண தண்டனைக்கு ஒப்பானது என்பதை அறிந்துக் கொள்ளும் மனநிலை அப்போதைக்கு என்னிடம் இல்லை.

 

அவள் ஒருபோதும் ‘ஐ லவ் யூ’ என்ற ஒற்றைச் சொல்லில் தன் அன்பைச் சிறைப்படுத்தியதில்லை. அவளின் அன்பும் நேசமும் ஆழ்கடலை விட விசாலமானதென்று எனக்கு அப்போதைக்கு உறைக்கவில்லை.

 

முழுக்க முழுக்க, ஓர் ஆணாதிக்க சமூகத்தில், பிறந்து, ஓடி, விளையாடி வளர்ந்த எனக்கு, பெண்ணின் மெல்லிய எதிர்பார்ப்புகளும், உணர்வுகளும் புரியவே இல்லை. குடும்பம், திருமணம், எனச் சொல்லிக் கொண்டு, அவளின் அடையாளத்தையே ஒட்டுமொத்தமாய் அழிக்கத் துணிந்திருக்கிறேன் என்ற எண்ணம் எனக்குள் எழவே இல்லை. என் மனம் முழுக்க முழுக்க, விக்ரம் எனும் ஆணாதிக்க மிருகம் மட்டுமே வாழ்ந்துக் கொண்டிருந்தான்.

 

 

என் விருப்பங்களை அவள் மீது திணிப்பதே ‘அன்பு’ என்று நம்பியிருந்த முட்டாள் நான். என் மனம் முழுக்க முழுக்க, விக்ரம் எனும் ஆணாதிக்க மிருகம் மட்டுமே கர்ஜித்துக் கொண்டிருந்தான்.

 

 

இந்த ஆதிக்கம் பிடித்தவன், தன்னை மட்டுமே யோசித்து தனக்காக மட்டுமே வாழ்பவன். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், வெளியே தெரியாத இன்னொரு மிருகம் இருக்கத்தான் செய்கிறது.

 

 

இந்தச் சமூகத்தில் உலவிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுமே, பசுத்தோல் போர்த்திய புலி தான். வெளியே பசு, உள்ளே புலி. ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் பசுவைக் கொன்று, கொடூரமான புலியின் சுயரூபம் வெளியே வரத்தான் செய்கிறது. கண்டதையும் யோசித்துக் கொண்டு இரவில் உறக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்தேன்.

 

சில வருடங்களாக, அவளை அணைத்துக் கொண்டே உறங்கிப் பழகிய எனக்கு, அவளில்லாமல் உறக்கம் வர மறுத்தது. மனமும் உடலும், அவளின் மென்மையான அணைப்பிற்கும், என் நாசியுணரும், அவள் ஸ்பரிசத்திற்கும் நிரம்பவும் ஏங்கித் தவித்தது. அவளில்லாத இரவு, அசையாமல் நகர மறுத்தது. இரவு என்பது வெறும் நேரமல்ல, அது அவளுடனான என் பிணைப்பு என்பதை அன்றுதான் உணர்ந்தேன்.

 

அவளில்லாத அந்த நான்கு சுவர்கள் என்னை ஒரு கைதியைப் போலப் பார்த்தன
முன்னெல்லாம் விடியாத இரவு வேண்டும், என நினைக்கும் எனக்கே, விடிந்துத் தொலைந்தால் என்ன? என்று தான் தோன்றியது. பேசாமல், அனைத்தையும் மறந்துவிட்டு உள்ளே சென்று விடலாமா? எனத் தோன்றினாலும், பைசாவிற்குப் பெறாத என் கோபம், அவள் உறங்கிக் கொண்டிருக்கும், அறைக்குள் செல்லவிடாமல், இழுத்து நிறுத்தியது. அவள் மீதான கோபம், என் கண்ணை மட்டுமல்ல, கருத்தையும் மறைத்திருந்தது. நன்றாக யோசித்துப் பார்த்தால், இது கோபம் இல்லை, வீம்பு..!

 

 

ஆனால் அதையெல்லாம் பிரித்தறியும் மனநிலை எனக்குள் துளியும் இல்லவே இல்லை.
ஒருவழியாக எதை எதையோ யோசித்து, மூளையின் களைப்பில் நான் உறங்கிய போது, இரவு முடிந்து, விடியலின் வெளிச்சம் பூமியின் மீது விழத் துவங்கியிருந்தது.

 

 

பிரம்ம பிராயத்தனப்பட்டு நான் உறங்கிய, அந்த காலை நேரத் தூக்கத்தையும் கலைக்கும் விதமாய், அழைப்புமணியின் சத்தம் ஓயாமல் கேட்டு, என் உறக்கத்தைக் காவு வாங்கியது.

 

“ம்ப்ச்!” சலிப்பாய் முனகியபடி, இழுத்துப் போர்த்திக் கொண்டு, மீண்டும் உறங்க முயற்சித்தேன். அதே நேரம், பணிப்பெண் கதவைத் திறந்துவிட, படிகளில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்க, அதைத் தொடர்ந்து, சம்யுக்தா அறைக் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வரும் சத்தமும் கேட்டது.

 

“வா நித்யா! இன்னைக்கு ப்ளான்ஸ் என்ன?” என்ற சம்யூவின் குரல் கேட்க, கண்கள் திறக்க முடியாத அளவிற்கு, திகுதிகுவென எரிந்ததையும் மீறி, கண்களை அழுந்தத் தேய்த்துக் கொண்டு எழுந்து அமர்ந்தேன் நான்.

 

“மகாதேவ் சாரை மீட் பண்ணிட்டு, ஆஃப்டர் நூன், ஒரு ஆட் ஷூட் இருக்கு மேம்! எப்படியும் முடிய ஈவ்னிங் ஆகிடும் மேம். அப்பறம், ஜி.ஆர் ப்ரொடக்ஷனில் இருந்து கால் பண்ணினாங்க! ஏப்ரல் மன்ந்த்க்கு அப்பறம் கால் ஷீட் கேட்டுருக்காங்க மேம்!” ஒரு சரியான, அந்தரங்க மேலாளராய் தன் பணியைச் சரியாய் செய்தாள் நித்யா.

 

 

“வில் திங்க்! யோசிச்சு சொல்றேன்னு சொல்லு.! மறக்காமல் ஸ்க்ரிப்ட் பேப்பர் அனுப்ப சொல்லு! எல்லாம் ரெடி தானே? நாம கிளம்பலாமா?” என அவள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்ட எனக்கு உடலும் மனமும் பற்றி எரிந்தது. நான் கற்பாறையாய் அவள் முன் நின்றாலும், அவள் என்னைக் காற்றாய் கடந்து சென்றாள்.

 

எப்படி இவளால், இப்படி சாதாரணமாய் நடந்துக் கொள்ள முடிகிறது? நான் வேண்டாமெனச் சொன்ன பிறகும், அவள் நடிக்க முடிவு செய்துவிட்டாள் என்பதை அவள் தோரணையிலேயே என்னால் உணர முடிந்தது.

 

“சம்யூ!” நித்யா உடனிருப்பதால், கொஞ்சம் மெதுவாகவே விளித்தேன்.

 

“யெஸ் விக்ரம்!” லிப் க்ளாஸில் பளபளத்த இதழ்களால் கேட்டாள்.

 

“நான் உன்கிட்டே சொன்னதையெல்லாம் மறந்துட்டியா?!” அவளை உன்னிப்பாய் அவதானித்தபடியே கேட்டேன் நான்.

 

“எல்லாமே நல்லாவே ஞாபகம் இருக்கு விக்ரம். நான் எதையும் அவ்வளவு ஈஸியாய் மறந்துட மாட்டேன். நீ கத்துக் கொடுத்த எதையும் மறக்கவும் முடியாது விக்ரம். பட், எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு. அதை யாருக்காகவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். புரியும்ன்னு நினைக்கிறேன்.!” புரிந்தும் புரியாமலும் பொடி வைத்துப் பேசினாள்.அவள் கண்கள் என்னை ஊடுருவிப் பார்த்தன. அந்தப் பார்வையில் ‘உன் அதிகாரம் என்னிடம் செல்லாது’ என்ற தெளிவான செய்தி இருந்தது.

 

“அது இல்லை சம்யூ..!” என நான் சொல்ல வருவதைக் கேட்காமல்,

 

“ஐ ஹேவ் டூ கோ, நோ டைம் டூ டாக் வித் யூ விக்ரம். அப்பறம் பார்க்கலாம்!” சர்வ சாதாரணமாய் சொல்லிவிட்டு, நித்யாவை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள். அவள் பிம்பம் என் பார்வையிலிருந்து மறையும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன் நான். என் தலை எரிமலை வெடிப்பதைப் போல் வலிக்கத் துவங்கியது.

 

 

அவள் வெளியேறி சில நிமிடங்கள் கடந்தப் பின்பும் கூட, அப்படியே அதே மெத்திருக்கையில் கிறுக்கனைப் போல் அமர்ந்திருந்தேன். கலைந்த தலையும், இரவில் உறக்கமில்லாமல், சிவந்த கண்களுமாய் நான் அமர்ந்திருந்த தோற்றம் எனக்கே சிரிப்பாக இருந்தது. அவள் என்னைக் கோமாளியாய் மாற்றிவிட்டுச் சென்றுவிட்டதைப் போல் பிரம்மை எனக்குள் எழுந்தது.

 

காதலா? காமமா? எனத் தெரியாமல் துவங்கி, அவளில்லாமல் வாழ முடியாதென்ற நிலையில், அவளைத் திருமண உறவில் இணைத்துக் கொண்ட பிறகும் கூட, எனக்கு அவள் மனம் புரிய மறுத்தது. நான் அவளைச் சொந்தமாக்க நினைத்தேனே தவிர, அவளைப் புரிந்து கொள்ள நினைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

 

அவள் மௌனம் என்பது வெறும் அமைதியல்ல; அது ஆழமான கடலின் அடியில் உறங்கும் பேரிரைச்சல் என்பதை நான் உணரவில்லை. என் அதிகாரக் குரல்கள் அவளின் மென்மையில் மோதித் தெறித்து, எனக்கே வலியாய் வந்து சேர்ந்தன.

 

​”காதலின் மொழியை நான் அகராதிகளில் தேடினேன், அவளோ அதைத் தன் இமைகளின் அசைவிலும், எனக்காகக் காத்திருந்த பொழுதுகளிலும் எழுதி வைத்திருந்தாள். நான் சொற்களைக் காதலித்தேன், அவள் என்னைக் காதலித்தாள். அன்று அவள் சூடிச் சென்றது வாசமுள்ள மலர்களை மட்டுமல்ல, என் கர்வத்தின் கருகிய மிச்சங்களையும் தான்!”
என் ஆழ் மனம் முழுதும் குழப்பம் நிரம்பித் தழும்பியது. அவள் நான் சொன்னதையும் மீறி, அவள் விருப்பத்திற்கு செய்வதை நினைத்தால், கண்மண் தெரியாமல் கோபம் வேறு வந்து தொலைத்தது.

 

 

இப்படி நான் குழம்பித் தவித்த வேளையில், அந்த அலைபேசி அழைப்பு என் சிந்தையைக் கலைத்தது.

 

அலைபேசியின் தொடு திரையில் ஒளிர்ந்துக் கொண்டிந்த பெயரைப் பார்த்ததும், சில நொடி யோசனையில் கடத்தினேன். ஒருவேளை இந்த அலைபேசி அழைப்பு தான், எனக்கும் சம்யூவிற்குமான விரிசலை அதிகமாக்கப் போகிறதெனத் தெரிந்திருந்தால், அழைப்பை ஏற்றிருக்க மாட்டேனோ என்னவோ?

 

 

விரிசல்கள், பிளவுகளாகி, வேரற்று அவள் சாய்ந்து போன பின், அவளைப் பற்றிய புரிதல் வந்து தொலைத்து, எதுவும் பெரிதாய் மாறிவிடப் போவதில்லை தான்.

 

“அகப்பட்டுக் கொள்ளத்தான்
இந்த மீன்
அலைகிறது..!
தொட மாட்டோம் என்று
தூண்டில்கள்
சொல்லிவிட்டப் பிறகும்..!”

( மூ.மேத்தாவின் வரிகளிலிருந்து.)‍

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்