
சலனம்-6
கண்கள் புன்னகையில் சுருங்க, என் கை வளைவில் புன்னகையோடு நின்றிருந்தாள் சம்யுக்தா. கழுத்தில் வைர முகப்பு வைத்த தாலிக்கொடி சிரித்துக் கொண்டிருந்தது.
Lilac எனப்படும் இளம் ஊதா நிற மென்பட்டுப் புடவையில் அத்தனை அழகாய் இருந்தாள். இன்று எனக்கும் சம்யுக்தாவிற்கும் திருமணம். இரகசிய திருமணம். என் வீட்டைப் போலவே சம்யுக்தாவின் வீட்டிலும் எங்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
காதலுக்கு நடுவே தடையாய் வருவதற்கு, அந்தஸ்து, மதம், மொழி, இனம் என எத்தனையோ காரணங்கள் இருக்கிறதே? இனி தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், அவள் என்னை விட்டுத் தள்ளிச் சென்றுவிடுவாளோ? என்ற பயம் எனக்குள் ஆழமாய் விழுந்திருந்தது. அதனாலேயே இந்தத் திருமணத்தை அவசரமாய் நடத்த முற்பட்டேன் நான்.
எனக்காக என் நண்பன் சித்தார்த் மட்டும் வந்திருக்க, அவள் சார்பாய் அவள் தோழியாய் பிரபல நடன இயக்குநர் ஒருவர் வந்திருந்தார்.
திருமணத்தைப் பதிவு செய்யும் அலுவலர்கள் சிலர் முன்னிலையில், அவளுக்குப் பிடித்தக் கோயிலில் எங்கள் திருமணம் இனிதே நடைபெற்றது.
திருமணம் என்பது மாபெரும் பொறுப்பு. திருமணம் என் முன்னேற்றத்திற்கு தடையாய் இருக்கும் என்ற எண்ணம் கொண்டிருந்த நானே திருமணம் செய்துக் கொண்டேனா? என நினைக்கையில் என்னை நினைத்தே எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
“ஹேப்பியா? இப்போதிருந்து நீ என்னோட சரிபாதி! மை பெட்டர் ஹாஃப்! அதுவும் சட்டப்படி!” அவள் காதோரம் சிலாகித்து சொன்னேன் நான்.
“இப்போவுமே இரகசியமாகத் தானே கல்யாணம் பண்ணியிருக்க விக்ரம்? உன் கெரியரில் என்னைத் தடையாய் பார்க்கிறியா விக்ரம்?” என அவள் கேட்ட கேள்வியில், எனக்குள் ஏற்படுத்திய பூகம்பத்தை என் முகத்தில் வெளிப்படுத்தாமல் இருக்க அடும்பாடுபட்டேன்.
‘அம்பென ஆழமாய்த் துளைக்கும் கேள்விகளை இவள் நிறுத்தவே மாட்டாளா?’ அந்தத் தருணத்திலுமே என் மனம் எரிச்சல்பட்டது.
“ம்ப்ச்! சம்யூ! நம்மளோட ஹேப்பி மொமெண்ட்ஸை ஸ்பாயில் பண்ணாதே ப்ளீஸ்..! இன்னைக்கும் எதையாவது கேட்டு சண்டையை ஆரம்பிக்காதே!” என நான் கொஞ்சம் அழுத்தமாய் சொல்ல அப்படியே அமைதியாகிப் போனாள் சம்யுக்தா.
திருமணம் முடிந்த சில நிமிடங்களில், நான் அவளுக்குப் பரிசளித்த புத்தம் புதிய வீடு கூட அவள் முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வரவில்லை. இந்தப் பெண்களின் மனதைப் புரிந்துக் கொள்வதே பெரும்பாடாக இருக்கிறது.
இப்படியே திருமணம் முடிந்து சில வாரங்கள் கடந்திருந்தது. இத்தனை நாள் பெயர் தெரியாத, காதல் என நான் சொல்லிக் கொண்ட, உறவிலிருந்து, திருமணம் என்ற புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்தாலும், எங்கள் வாழ்வில் பெரிதாய் ஒன்றும் மாற்றமில்லை. அதே நான்.. அதே அவள். மாற்றம் என்றால் வீடு மட்டுமே மாறியிருந்தது.
எங்களின் வாழ்க்கை மிகவும் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. எங்கள் திருமணத்தைக் கொண்டாட முடியாத படி, புதிய படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
தேன்நிலவிற்காக எங்கேயும் அழைத்ததுச் செல்லவில்லை என்ற கோபம் அவளுக்கு இருந்தது.
“ஹேய்! நான் கொஞ்சம் பிஸி டி! உனக்குத்தான் தெரியுமே..!”
“அதுக்கு இப்போ என்ன பண்ணனும் விக்ரம்?”
“என்ன ஆச்சு டி? ஏன் இப்படி மூஞ்சியை வச்சிருக்கிற?”
“நான் நல்லா தான் இருக்கேன் விக்ரம்! என்னைப் பத்தி கவலைப்படாதே! உன் வேலையைப் பாரு!”
“இப்போ ஹனிமூன் ட்ரிப் எதுவும் போக முடியாது சம்யூ! அதுக்காக இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிறதெல்லாம் நல்லா இல்லை!” இத்தனை நேர பொறுமை காற்றில் பறக்கக் கேட்டேன் நான்.
“நான் உன்கிட்டே ஹனிமூன் போகாதது தான் கோபம்ன்னு சொன்னேனா விக்ரம்?!” அழுத்தமாய் நிமிர்ந்து எனைப் பார்த்துக் கேட்டாள் சம்யுக்தா.
“அப்பறம்..? அது தானே உன் கோபத்திற்குக் காரணம்?” மீண்டும் அதையே திரும்பவும் நான் கேட்க, வார்த்தையால் பதிலளிக்காமல், அவளின் அகன்ற கண்களை இன்னும் கொஞ்சம் அகலமாய் விரித்து எனை முறைத்தாள் அவள்.
“இப்படி முறைத்தால் என்ன அர்த்தம் சம்யூ?”
“நீ சொன்னது காரணம் இல்லைன்னு அர்த்தம்!” எனச் சத்தமாய் கத்திவிட்டு, பால்கனியிலிருந்து, தரையதிர நடந்து உள்ளே சென்றுவிட்டாள். எதற்காகக் கோபப்படுகிறாள்? என்ற காரணம் புரியாமல், விழித்துக் கொண்டு நின்றேன் நான்.
“ஏய்! என்ன தான் டி உன் பிரச்சனை? இருக்கிற டென்ஷனில் மனுஷனை கடுப்பாக்குறே? இப்போ என்ன உன் காலில் விழுந்து கெஞ்சணுமா? நானே இன்னும் ஒருமாசத்தில், ஷூட்டிங்கை முடிச்சுக் கொடுக்கணும்ங்கிற டென்ஷனில் இருக்கேன். இதில் நீயும் மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டால், நான் என்ன செய்றது?” அவள் குரல் உயர்ந்ததை விட, என் குரல் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே உயர்ந்தது.
“சும்மா கத்தாதே விக்ரம்.! நீ போய் உன் ஷூட்டிங் வேலையைப் பாரு! நீ என்கிட்டே கெஞ்சவும் வேணாம்! கொஞ்சவும் வேணாம்!” ஒருமாதிரியானக் குரலில் சொல்லிவிட்டு, கதவை அடித்துச் சாற்றியிருந்தாள்.
“ம்ப்ச்! திமிரு டி உனக்கு!” எனக்குள் முணுமுணுத்தபடியே அவளைத் தேடி அறைக்குள் நுழைந்தேன். பணிப்பெண் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போன, பழச்சாறை நிதானமாய் அருந்தியபடி, அவள் வழக்கமாய் அமரும், கண்ணாடி ஜன்னலின் அருகே அமர்ந்திருந்தாள்.
“சம்யூ!”
“சம்யுக்தா!” என் கோபத்தின் அளவைக் காட்டுவதற்காகவே, முழுப் பெயரைச் சொல்லி அழைத்தேன். விக்ரம் என்ற ஒருவன் இல்லாததைப் போலவே கண்டுக்கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.
நான் விளித்தது அவள் செவிகளில் விழவே இல்லை என்பதைப் போல் சட்டமாய் அமர்ந்திருந்தாள்.
“சம்யூ! என் பொறுமைக்கு ஓர் அளவு தான் சொல்லிட்டேன். என்னை ரொம்ப இன்ஸல்ட் பண்ணுற! எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. நான் பிஸியாய் இருக்கேன்னு தெரிஞ்சும், நீ இப்படியெல்லாம் செய்றது சரியில்லை.!” நறநறத்த பற்களின் நடுவே, கோபத்தை அடக்கியபடி பேசினேன் நான்.
“நீ பிஸியா இருக்கே.. அப்போ நான் என்ன வெட்டியாய் இருக்கேன்னு சொல்றியா?” என அவள் கேட்ட பின்பு தான், நானே வலிய வந்து மாட்டிக் கொண்டதை உணர்ந்தேன்.
“நான் அப்படிச் சொல்ல வரலை சம்யூ!”
“வேற என்ன அர்த்தத்தில் சொன்ன விக்ரம்?”
“ஏதோ வாய் தவறி பேசினதை பிடிச்சுக்கிட்டு சண்டை போடுற? என்ன ஆச்சு டி? மூட் ஸ்விங்ஸ்-ஆ? இல்லை பீரியட்ஸா?”
“ஓ! நான் மூட் ஸ்விங்ஸில் இருக்கிறதால், இப்படி கத்தறேன்னு சொல்றியா? நீ என்ன நினைச்சுட்டு இருக்கே விக்ரம்? என்னைப் பார்த்தால் பைத்தியக்காரி மாதிரி தெரியுதா?” அவள் மீண்டும், மீண்டும் கேள்வி கேட்க, அதீத கோபம் உச்சந்தலைக்கு ஏற,
“ஆமா! நீயொரு பைத்தியம் தான். என்ன ஏதுன்னு சொல்லாமல், உன் இஷ்டத்திற்கு கத்திக்கிட்டே இருக்க? என்னன்னு சொல்லித் தொலையாமல் மூஞ்சியைத் தூக்கிட்டு திரியறதா இருந்தால், நல்லா தூக்கி வச்சிக்கோ! எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை. உன் கிட்டே வந்து, என்ன ஏதுன்னு கேட்டேனே, என்னைச் சொல்லணும்!” என எரிச்சலுடன், நான் அறை வாயிலை நோக்கி நகர்ந்த அந்த நொடி,
“டைரக்டர். மகாதேவ் கிட்டே என்ன சொன்னே விக்ரம்?” என்ற அவளின் கேள்வி, வேரூன்றிய மரத்தைப் போல் என்னை அசையாமல் நிற்க வைத்தது.
“நான் ஒண்ணும் சொல்லலையே.? அவர் இண்டஸ்ட்ரியில் பெரிய ஆள், அதனால் தான், நம்ம கல்யாண விஷயத்தை அவர்கிட்டே சொன்னேன்.!” மழுப்பலாய் நான் சொன்னதை அவள் நம்பவில்லை என்பது, அவள் விழிகளிலேயே தெரிந்தது.
“அதை மட்டும் தான் சொன்னியா விக்ரம்?! ஒருவேளை என்ன சொன்னன்னு மறந்துட்டியா விக்ரம்?” சொல் அம்புகளாய் அவள் வினாக்கள், என் செவி தீண்ட, பதில் சொல்ல முடியாமல் திக்கித் திணறி நின்றேன் நான்.
“பதில் சொல்லு விக்ரம்? என்ன பதில் சொல்றதுன்னு யோசிக்கிறியா? வேணும்னா நான் சொல்லட்டுமா?!” எனக் கோபத்தில் முகம் சிவக்க வினவியவள், மீண்டும் அவளே தொடர்ந்தாள்.
“ஏன்டா இப்படி பண்ணினே? நான் நடிக்க மாட்டேன்னு உன்கிட்டே சொன்னேனா? என் அனுமதி இல்லாமல், நான் நடிக்க மாட்டேன்னு சொல்றதுக்கு நீ யாரு? என் சம்மந்தமான முடிவை, என்னைக் கேட்காமல் முடிவெடுக்க உனக்கு யாரு அதிகாரம் கொடுத்தது?” நொடிக்கு நொடி சத்தம் உயர்ந்தக் குரலிலேயே கேட்டாள்.
“யூ ஆர் மை பெட்டர் ஹாஃப் சம்யூ! உனக்கான முடிவுகளை நான் தான் எடுக்கணும். நம்ம கல்யாணத்தைப் பத்தி அவர்கிட்டே சொன்னேன். கொஞ்ச நாளைக்கு நீ ஃப்ரீயா இருக்கணும்ன்னு தான். நீ எந்தப் படமும் பண்ண வேணாம்ன்னு முடிவு பண்ணினேன். இதில் என்ன தப்பு இருக்கு?” கொஞ்சம் திமிராகவே பதில் சொன்னேன் நான்.
“அப்போ.. நீ படத்தை டைரக்ட் பண்ண வேணாம்ன்னு நான் முடிவு எடுக்கவா விக்ரம்? கொஞ்ச நாளைக்கு நீயும் ஃப்ரீயா இருக்கலாம். ஊர் சுத்தலாம்.. உலகம் சுத்தலாம்.. ஏன்னா உனக்கும் இப்போ தானே கல்யாணம் ஆகியிருக்கு?” என நக்கலாய் கேள்வி கேட்க,
“சம்யூ!” குரலுயர்த்தி அவள் பேச்சை இடை நிறுத்தினேன் நான்.
‘இப்போது இவள் நடித்து என்ன செய்யப் போகிறாள்? நான் சம்பாதிப்பது பத்தாதா? திருமணத்திற்கு பின் நடிகைகள் குடும்பம், குழந்தை என செட்டில் ஆவது தானே வழக்கம்! இவள் என்னடா என்றால் எதுவும் புரியாமல் வானுக்கும், பூமிக்கும் குதிக்கிறாள்.’ எனக்குள் சலித்துக் கொண்டேன் நான்.
“சம்யூ! புரிஞ்சுக்க டி! நான் இருக்கேன்ல்ல.. எல்லாத்தையும் நான் பார்த்துப்பேன். நீ இந்த நடிப்பு அது இதுன்னு ஸ்ட்ரெஸ் எடுத்துக்காமல் நிம்மதியாய் இரு.!”கொஞ்சம் பொறுமையாய் பேசி அவளை வழிக்குக் கொண்டு வர முயன்றேன் நான்.
“நான் ஓகே சொல்லிட்டேன் விக்ரம்! நாளை மறுநாள் ஷூட்டிங்காக நான் கிளம்புறேன்.!” என் தலையில் பெரிய இடியாய் தூக்கிப் போட்டாள்.
“ம்ப்ச்! புரிஞ்சுக்கவே மாட்டியா? அந்த டைரக்டர் கொஞ்சம் ஒரு மாதிரி டி.. உனக்கே தெரியும். சொன்னால் புரிஞ்சுக்க? இப்போ நடிச்சு என்னத்தை சாதிக்கப் போற.?” அதீத கோபத்தின் மிகுதியில் வார்த்தைகள் என்னை அறியாமல் வெளிப்பட்டிருக்க, இமை கூட சிமிட்டாமல் எனைப் பார்த்தபடியே நின்றாள் சம்யுக்தா.
“ஏன் எனக்கெல்லாம் சாதிக்கனும்ன்னு ஆசை இருக்கக் கூடாதா விக்ரம்? நீ எந்த மாதிரி விக்ரம்? நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா? மத்தவங்க உன்னை அப்ரோச் பண்ணுறதைத் தடுக்கவும், உன்னை நீ ஆம்பிள்ளைன்னு நிரூபிக்கவும் தானே என்னை நீ யூஸ் பண்ணிக்கிட்ட? இப்போ நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதும், நான் விட்டுப் போயிடுவேன்ங்கிற பயத்தில் தானே? தாலியைக் கட்டிக் கூட்டிட்டு வந்துட்டால், நாய்க்குட்டி மாதிரி உன் பின்னாலேயே வருவேன்னு நினைச்சியா? என்னை நீ சரியா புரிஞ்சுக்கலை விக்ரம்.! உண்மையாகவே என்கிட்டே எவனும், தப்பாக அப்ரோச் பண்ணக் கூடாதுன்னு நீ நினைச்சிருந்தால், நம்ம கல்யாணத்தை ஊரறிய சொல்லியிருப்ப! நீ ஏன் சொல்லலைன்னு நான் சொல்லவா? உனக்கு பயம் விக்ரம்.! நான் உன்னைத் தாண்டி வளர்ந்துடுவேனோ? உன்னை விட்டுப் போய்டுவேனோங்கிற பயம். இன்செக்யூரிட்டி.. அப்படித்தானே விக்ரம்?” என் மனதில் ஓடிக் கொண்டிருந்த அத்தனையையும், வார்த்தைகளாய் கேட்டாள் சம்யுக்தா.
அவள் சொன்னதைக் கேட்ட எனக்குள்ளே அதிர்ச்சி! எப்படி இவளுக்கு இதெல்லாம் தெரிகிறது? ஒருவேளை பெண்கள் ஆண்களை விட, அறிவாளிகள் தானோ? நான் அவளுக்கே தெரியாமல், அவள் நடிப்பதை நிறுத்த முற்பட்டேன். படவாய்ப்புகள் கிடைக்கவில்லையெனில், ஒரு கட்டத்தில் அவளே அமைதியாகிவிடுவாள் என நினைத்தேன். ஆனால் நான் நினைத்தது நடக்கவில்லை. தேள் கொட்டிய திருடனைப் போல் இவளிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறேன். அவள் சொன்னது போலவே, எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாய், கிளைபரப்பி வளர்ந்துக் கொண்டிருந்தது இன்செக்யூரிட்டி தான்.
கொஞ்சம் இல்லை, நிரம்பவும் அழகாக இருக்கிறாள். ஒரு இயக்குநராய் அவளைப் பற்றி, அவள் திறமையைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருக்கையில் திருமணத்தின் பின்பும் கூட, அவள் என்னை விட்டு விலகி விடுவாளோ? என்ற பயம் எனக்குள் இருந்துக் கொண்டே இருந்தது.
“நான் உன்னைப் பாதுகாக்கணும்ன்னு நினைக்கிறேன் டி! உனக்குப் புரியலையா? என்னை நீ புரிஞ்சுக்கிட்டது இவ்வளவு தானா சம்யூ?” என் மனதில் ஓடிக் கொண்டிருந்த அத்தனை விஷயங்களையும் மறைத்துவிட்டு, நிதானமாய் மெல்லிய குரலில் அவளைப் பார்த்துக் கேட்டேன்.
என் மெல்லிய குரல், அவளிடம் சிறிதளவு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அவள் முகத்தில் சிந்தனை ரேகைகள் கிளைபரப்பின. எதையோ யோசித்து, என்னை நிமிர்ந்து ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.
யோசனையின் முடிவில், தெளிவும் தீட்சண்யமும் தாங்கிய விழிகளுடன், என்னை எறிட்டுப் பார்த்தாள். இவள் என்ன சொல்லப் போகிறாளோ? என்ற பதைபதைப்புடன் அவளையே பார்த்திருந்தேன் நான்.
“நான் எதற்காகவும், யாருக்காகவும் என் கெரியரை விட்டுக் கொடுக்க மாட்டேன் விக்ரம். நான் நடிப்பை க்விட் பண்ண மாட்டேன்.!” தெளிவாய் உறுதியாய் சொல்லிவிட்டாள். நான் போட்ட திட்டம் அரகேறாமல், ஆட்டம் கண்டுவிட்டதை அடக்கப்பட்டக் கோபத்துடன் பார்த்தேன் நான்.
“இதெல்லாம் தேவையில்லாத ஆணி சம்யூ! திருமண வாழ்க்கைக்குள்ளே நுழைந்த பிறகு இதெல்லாம் எதுக்கு? நீ நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது தான் நல்லது. நாளைக்கே நமக்கு குழந்தைன்னு ஒண்ணு வரும் போது, நீ க்விட் பண்ணி தான் ஆகணும். அதுக்குப் பிறகு உனக்கு வாய்ப்புகளே கிடைக்காமல் போகலாம்.!” ஒரு ஆணாய், என் மன உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தினேன் நான்.
“உன்னைப் பொருத்தவரை ஒரு பொண்ணு சாதிச்சிடக் கூடாது! வளர்ந்திடக் கூடாது.. அப்படித்தானே விக்ரம்.? நான் கூட, உன்னை உயர்வா நினைச்சிருந்தேன். நீயும் ஒரு சாதாரண ஆம்பிள்ளைன்னு நிரூபிச்சுட்ட விக்ரம். குழந்தைகளைப் பார்த்துக்கிறதும், அடுப்படியில் ஆக்கிப் போடுறதும் தான் பொண்ணுங்களோட வேலை. அப்படித்தானே நீ சொல்ற.? என்னைக் கூட்டுக்குள்ளே சிறை பிடிக்க முயற்சிக்காதே விக்ரம். எனக்குப் பறக்கத் தெரியும். தங்கக் கூண்டுக்குள்ளே உட்கார்ந்துகிட்டு, என் இறகே எனக்கு பாரமாகிப் போறதை நான் விரும்பலை.!” எனச் சாதாரணமாய் சொல்லிவிட்டு, அவள் சென்றுவிட்டாள். அத்துவானக் காட்டில் கண்ணைக் கட்டி விட்டதைப் போல், அநாதையாய் தவித்து தனித்து நின்றேன் நான்.

