Loading

மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த அந்தப் பதிவு அலுவலகத்தில், தனித்திருந்த திருமணப் பதிவுப் பிரிவில் நந்து, ஜனனியுடன் மொத்தக் குடும்பமும் நின்றிருந்தது.

சார்பதிவாளர் முன் இருவரும் மாலையைக் கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தனர். அவர்களுக்குப் பின்னே கௌரி, நல்லசிவம், நீலகண்டன், வள்ளி, விபு, ஜோவிகா, சுதா, மேகவாணி, நவநீதன், சச்சின், ரகுபதி என அனைவரும் முகம் கொள்ளாப் புன்னகையுடன் நின்றிருந்தனர்.

விபுவின் கைகளில் சச்சின் இருந்தான். ஜனனி, நந்து இருவரையும் பார்த்தபடி இருந்தான். விபு ஓரளவிற்கு அவனுக்குப் புரிய வைத்திட, அதையும் அவன் ஏற்றுக்கொண்டான்.

துபாயிலிருந்து வாங்கி வந்த, அதிக வேலைப்பாடுகள் நிறைந்த பட்டுப்புடவை போன்றிருந்த புத்தம் புதிய புடவையைத் திருமணம் முடிவான பின் வெளியே எடுத்து ஜனனியிடம் கொடுத்தான் நந்து.

கைகளால் அதை மெல்லத் தடவி, விழிகளை விரித்து ஆச்சரியமாகப் பார்த்தாள் ஜனனி.

“இது உனக்காகத் துபாயிலிருந்து வாங்கிட்டு வந்தேன். நாம கல்யாணம் பண்ணிக்கும்போது இந்தச் சேலையைத்தான் நீ கட்டிக்கணும். அதுக்காகத்தான் உன்கிட்ட கொடுக்காம வச்சிருந்தேன். உனக்குப் பிடிச்சிருக்கா?” என அவள் பதிலுக்காக ஆவலோடு கேட்டான்.

“ம்ம்… ஓகே” என அவனை வம்பிழுப்பதற்காகச் சொன்னாள்.

“ஓகேதானா? அப்போ கல்யாணத்துக்கு வேற எடுத்துக்கலாம். இது வேண்டாம் ஜனா,” என்றான் உடனே.

அந்தப் புடவையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டவள், செல்லமாய் அவனது தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டு, “சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன். ஏன் பிடிக்காது? என்னாச்சு? எதுவுமே கேட்க மாட்டியா? உடனே வேற பார்க்கலாம்னு சொல்லிடுவியா?” என்றாள்.

“கண்டிப்பா! உனக்குப் பிடிக்கலைன்னா அது வேண்டாம். நானும் அதைச் செய்ய மாட்டேன். இனி உன்னோட விருப்பு வெறுப்புகளை நீ வெளிப்படையா சொல்லணும் ஜனா! யாருக்காகவும் எப்போதும் அட்ஜஸ்ட் பண்ணிப் போகக் கூடாது, அது நானாக இருந்தாலும் சரி. எப்போதும் உன்னோட உணர்வுகளுக்கு நான் மதிப்புக் கொடுப்பேன் ஜனா! உனக்கு இது பிடிக்கலைன்னா கட்ட வேண்டாம்… வேற பார்க்கலாம்,” என்றான். அவள் விளையாட்டாகச் சொன்னதற்கும் மிக முக்கியமான விஷயம் சொல்வது போலத் தீவிரமாகப் பேசினான்.

அவளுக்கோ விழியோரத்தில் நீர்த்துளி பூக்க, அவன் அறியாதபடி அதைத் துடைத்தவள் சிரிப்புடன், “சும்மா உன்னை வம்பிழுக்கச் சொன்னேன்டா! நிஜமாவே எனக்கு இது ரொம்பப் பிடிச்சிருக்கு! இதைத்தான் கட்டுவேன்,” என்று மேலும் நெஞ்சோடு அணைத்துக்கொள்ள, அவனோ பொறாமையுடன் பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

அழகிய வேலைப்பாடுகள் உடைய சேலையைத் தளதளவெனக் கட்டிக்கொண்டு அவன் முன்னே அவனது காதலியாக நின்றிருந்தாள் ஜனனி.

இதற்கு முன்பு இருவருக்கும் இடையில் நடந்த கசப்பான விஷயங்கள் அனைத்தையும் தூக்கித் தூரப் போட்டுவிட்டு, இருவரும் புதிதாகத் திருமண வாழ்க்கையில் இணைந்து, எதிர்காலத்தில் சேர்ந்து பயணிக்கப்போகும் கனவுடன் தயாராக வந்திருந்தனர்.

அவர்களுக்குள் புதிதாகத் திருமணம் செய்யப்போகிற எண்ணம் மட்டுமே இருந்தது; பழைய நினைவுகள் ஒன்றைக் கூடச் சுமந்துகொண்டு அங்கே நிற்கவில்லை. அவர்கள் மனதில் முழுக்கக் காதலும் எதிர்காலமும் மட்டுமே நிறைந்திருந்தது.

பட்டு வேட்டி சட்டையில் ஆண்மை மிடுக்குடன் அழகாக நின்றிருந்தான் இளநந்தன்.

கைதட்டல்களுடன் இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். வள்ளியும் நீலகண்டனும் தாலி எடுத்துக் கொடுக்க, அதை வாங்கிக்கொண்ட நந்து, ஆனந்தக் கண்ணீரோடு தலை தாழ்த்தி ஆவலோடு காத்திருக்கும் ஜனனியின் விழிகளில் தெரிந்த சம்மதத்தைக் கண்ட பின்னே, மூன்று முடிச்சுகள் போட்டு அவளைத் தன் துணைவியாக்கிக்கொண்டான்.

பின் இருவரும் பதிவாளர் காட்டிய இடத்தில் கையெழுத்திட்டனர். சாட்சி கையெழுத்திட இருவரின் தந்தையர்களும் கையெழுத்துப் போட்டுத் திருமணத்தை முடித்து வைத்தனர்.

அனைவரும் தங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகளையும் அணைப்பையும் மணமக்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

விபு தன் தோழியை அணைத்து விடுத்தவன், “உன்னை இப்படிப் பார்க்கச் சந்தோஷமா இருக்கு ஜானு! உன் வாழ்க்கையில இது போன்ற நாட்கள் மட்டும்தான் இருக்கணும்னு கடவுளை வேண்டாத நாளே இல்லை. அதுக்கு இப்பப் பெரிய பலன் கிடைச்சிருக்கு. ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்,” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

அங்கே யாருமே அவர்களது உறவைத் தவறாக எண்ணவில்லை. பின் நந்துவை அணைத்தவன், “ரொம்ப நாளாவே ஒரு சின்னக் குற்ற உணர்ச்சியில சிக்கிட்டு இருந்த எனக்கு இப்ப விடுதலை கொடுத்திருக்க… இனி மனசுல ஒரு நிம்மதியோட, குற்ற உணர்வு இல்லாம என் ஜானுவைப் பார்ப்பேன், பேசுவேன்… தேங்க்ஸ்டா மச்சி,” என்று அவனை இறுக அணைத்தான்.

“நானும் நன்றி சொல்வேண்டா! என் காதல் எனக்குக் கிடைக்க உதவி செஞ்சதுக்கு,” என்றபடி இருவரும் மீண்டும் அணைத்துக்கொண்டனர்.

ஜோவி அவர்கள் அருகே சென்று, “என் அக்கா, மாமாவிற்குத் திருமண வாழ்த்துகள்… நீங்க ரொம்பக் க்யூட் ஜோடி! நானே கண்ணு வச்சிடுவேன்,” என்று இருவர் கன்னத்திலும் தனது கண்மையை எடுத்துத் திருஷ்டி வைத்தாள்.

மணமக்கள் அருகே வந்த மேகவாணி இருவரையும் ஆசிர்வதித்தார்.

“உன்னை இப்படிப் பார்க்கணும்னுதான்டி எங்களோட ஆசை! ரொம்பப் பிகு பண்ணுனல்ல… இப்போ மாட்டிக்கிட்டியா?” என்று சிரித்தாள்.

“தம்பி! என் பொண்ணை நீதான் பத்திரமா பார்த்துக்கணும். மாப்பிள்ளைங்கிற முறையில உனக்குச் சொல்ல வேண்டியதில்லை, ஆனாலும் அம்மாவாச் சொல்றேன். நிறையக் கஷ்டங்களை ரெண்டு பேரும் அனுபவிச்சாச்சு! அந்த நாட்களுக்கும் சேர்த்து நீங்க சந்தோஷமா வாழணும்,” என்று வாழ்த்திட, அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

நீலகண்டன் – வள்ளி தம்பதியர் காலிலும், கௌரி – நல்லசிவம் மற்றும் சுதா காலிலும் விழுந்து வணங்க, அவர்கள் மனநிறைவோடு வாழ்த்தினார்கள்.

அங்கே அடுத்த வேலை இருந்ததால் பெரியவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கலாம் என்று நினைத்த வேளையில்தான் அங்கே கந்தன் வந்தான்.

அவனை எதிர்பார்க்காதவர்கள் இன்முகத்தோடு வரவேற்றனர். அவனும் கையில் மலர்க்கொத்துடன் வந்து மணமக்களுக்குத் தந்து வாழ்த்தினான்.

“தேங்க்ஸ்,” என்றனர் இருவரும்.

“ஜனனி, உங்களுக்காக ஒரு கல்யாணப் பரிசு கொண்டு வந்திருக்கேன்,” என்றான் பீடிகையுடன்.

“என்ன அது?” என்று அவனது கைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஜனனி.

கந்தன் விசிலடிக்க, அவனது ஆட்கள் காசியையும் அவனது மகனையும் பிடித்து இழுத்து வந்தனர்.

ஜனனியை விட நல்லசிவம் அதிர்ந்து போனார். வேகமாக வந்தவர் காளியின் கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்தார்.

“பாவி! உன்னை நண்பனா பார்த்ததுக்கு என்னை நடுத்தெருவுல நிக்க வச்சிட்டியே! உன்னை நம்பிக் கையெழுத்துப் போட்டதுக்கு என் வீட்டை விக்கிற நிலைமைக்குக் கொண்டு வந்திட்டியேடா! உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தா உனக்காகச் சூரிட்டி (Surety) கையெழுத்துப் போட்டிருப்பேன்… காசைப் பார்த்ததும் பழக்கத்தை மறந்து என்னை ஏமாத்திட்டியே, சீ! எங்கடா தம்பிக்குக் கொடுக்க வேண்டிய பணம்? கொடுடா,” என்று சட்டையைப் பிடித்து உலுக்கினார்.

“என்னை மன்னிச்சிடு சிவம்! உனக்கு உண்மையா இருக்கணும்னுதான் நினைச்சேன். ஆனா என் மகன் மறுபடியும் ஏமாந்துட்டான். இருக்கிற காசை வச்சாவது தப்பிக்கணும்னுதான் வேற வழியில்லாம ஊரை விட்டு ஓடிப் போக நினைச்சோம். அந்த இடத்துல சுயநலமா என் வாழ்க்கையையும் என் மகன் வாழ்க்கையையும் மட்டும்தான் பார்த்தேன். உதவி செஞ்ச உன்னைப் பற்றிக் கவலைப்படாம பணத்தை மட்டும் பார்த்தேன், என்னை மன்னிச்சிடு சிவம்,” என்று தலைகுனிந்து கண்ணீர் வடித்தார் காளி.

“சீ! மன்னிப்பு கேட்டு அந்த வார்த்தையையே கொச்சைப்படுத்தாதே! அதுக்குக் கூட உனக்குத் தகுதி இல்லை,” என்றவர், “தம்பி! இவங்க ரெண்டு பேரையும் ஜெயில்ல போடுங்க! இனி யாரையும் இவனுங்க ஏமாத்தக் கூடாது,” என்று பற்களைக் கடித்தார்.

“இவங்க ரெண்டு பேரையும் ஜெயிலுக்கு அனுப்பிட்டா என் பணத்தை எப்படி வசூலிக்கிறது சார்? இவனுங்ககிட்ட இருந்த பணத்தைக் கைப்பத்தியாச்சு. மீதிப் பணத்தை எப்படி வசூலிக்கணும்னு எனக்குத் தெரியும், நான் பார்த்துக்கிறேன்,” என்றவன் தனது கூட்டாளியிடம் கையை நீட்ட, அவன் ஒரு பத்திரத்தைக் கொடுத்தான்.

“இது நீங்க சூரிட்டி போட்ட கையெழுத்துப் பத்திரம். இனி இந்தப் பணத்தைச் செட்டில் பண்ணணும்னு அவசியமில்லை. நான் இவனுங்களை வச்சுப் பார்த்துக்கிறேன்… நீங்க உங்க வீட்டை விற்க வேண்டாம். எப்பவும் போலக் கம்பீரமா இருங்க,” என்று பத்திரத்தை நீட்ட, நல்லசிவம் கண்களில் நீரோடு அதைப் பெற்றுக்கொண்டார்.

கந்தனின் இந்தக் கல்யாணப் பரிசு எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சிதான்.

“எப்படி இதைக் கண்டுபிடிச்சீங்க?” என ஜனனி ஆர்வமாகக் கேட்டாள்.

கந்தன் சிரித்துக்கொண்டே, “வழக்கமா நடக்கிறதுதான். இப்படிப் பணத்தை ஏமாத்திட்டு ஓடிட்டா, அவங்களைத் தேடிப் பிடிச்சுட்டு வர்றதுதான் என் ஆட்களோட வேலை. எந்த ஊரா இருந்தாலும் தகவல் சொன்ன ஒரு வாரத்துல பிடிச்சிட்டு வந்துடுவாங்க. இங்க மட்டும் இல்லை, இன்டர்நேஷனல் லெவல்ல எனக்கு ஆட்கள் இருக்காங்க,” என்றான்.

“அவங்க ஓடுனதுமே ஆட்களைத் தேட வச்சாச்சு. இருந்தாலும் நல்லசிவம் சாரை நெருக்கடியில வச்சு உன்னை ஓகே பண்ண வைக்கலாம்னு அப்படிச் செஞ்சேன். என்னை மன்னிச்சிடுங்க! இப்போ என் தப்பைத் திருத்திக்கிட்டேன். அவங்க கிடைச்சதும் உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன், அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்,” என்று விளக்கம் கொடுக்க, அனைவரும் அவனைக் கனிவாகப் பார்த்தனர்.

“ரொம்ப நன்றி கந்தன். இப்போ மட்டும் நீங்க வரலைன்னா இவரோட நிலம் கைமீறிப் போயிருக்கும். மனசுல ஒரு நெருடலோட இருந்திருப்போம்… இப்போ அதுவும் இல்லை,” என்றாள் ஜனனி. அவள் சிரித்த முகத்துடன் பார்த்தாலும் உள்ளுக்குள் ஒரு வலி உண்டாவதைக் கந்தனால் தடுக்க முடியவில்லை. அதை மறைத்தபடி,

“பரவாயில்லை, என் வேலையைத்தான் செஞ்சேன்,” என்று தோளைக் குலுக்கியவன், “உங்கள் இருவருக்கும் திருமண வாழ்த்துகள்,” என்றான். நல்லசிவம் அவனைத் தழுவிக்கொண்டார். பின் கந்தன் அங்கிருந்து சென்றான்.

“அப்போ வீட்டுக்குப் போகலாமே,” என கௌரி சொல்ல, “இன்னும் ஒரு வேலை இருக்கு அத்தை,” என்றான் நந்து.

“என்ன நந்து? பணப் பிரச்சினை முடிஞ்சிடுச்சுல்ல… அப்புறம் ஏன் நிலத்தை விக்கணும்?” என நீலகண்டன் கேட்டார்.

“விக்கப் போறது இல்லை பெரியப்பா! மாத்தி எழுதப் போறோம்,” என்றான் புதிராக. ஜனனியும் நந்துவும் மட்டும் புன்னகையுடன் நின்றிருக்க, மற்றவர்கள் புரியாமல் பார்த்தனர்.

“மாத்தி எழுதப் போறியா? யார் பேர்ல?” என ரகுபதி கேட்டார்.

“உங்க பேர்லதான் மாமா!” என்றான் நந்து சிரித்தபடி.

“என் பேர்லயா? எதுக்கு?”

“மாமா! எனக்கு யாரும் இல்லாத நேரத்துல துணையா இருந்து என்னை உயர்த்திவிட்ட உங்களுக்கு நான் செய்யுற சின்னக் கைம்மாறு இது. என்கிட்ட இருக்கிற நிலத்துல பாதியை உங்க பெயருக்கு மாத்தணும்னு நினைக்கிறேன். நீங்களும் கௌரவமா வாழணும் மாமா. இந்த நிலத்தை வச்சு நீங்க என்ன பண்ணினாலும் ஓகே. நேரமாச்சு வாங்க, ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணிடலாம்,” என்று அழைக்க, ரகுபதி கண்ணீருடன் அவனை அணைத்துக்கொண்டார்.

“நீ எனக்குச் செய்யுற அளவுக்கு நான் உனக்கு ஒண்ணுமே செய்யலையே நந்து! எனக்கு எதுக்கு இவ்வளவு செய்ற?”

“கடுகளவு உதவியா இருந்தாலும் தக்க நேரத்துல செய்றதுதான் மதிப்புள்ளது மாமா. அதைத்தான் நீங்க எனக்குச் செஞ்சிருக்கீங்க. இதுக்கு மேலயும் கொடுப்பேன். நீங்க மறுக்காம வாங்கிக்கணும். எனக்கு உங்களோட கௌரவம்தான் முக்கியம். உங்க வீட்லயும் சரி, வெளியிலயும் சரி… யோசிக்காதீங்க, என் அம்மா சார்புல செய்றேன், வாங்க,” என்று நந்து அழைக்க, ரகுபதி நெகிழ்ச்சியுடன் ஜனனியைப் பார்த்தார்.

அவளோ இன்முகத்தோடு, “சித்தப்பா! நந்து உங்களுக்கு மரியாதை செய்றான். அதை நீங்க வாங்கித்தான் ஆகணும்,” என்றாள்.

இருவரும் சொன்ன பின் அவர் அதை மனதார ஏற்றுக்கொண்டார். நிலங்களில் பாதியை அவர் பெயரில் மாற்றிப் பதிவு செய்தான் நந்து. மீதி நிலங்கள் நந்துவின் பெயரிலேயே இருந்தன. வந்த வேலை முடிந்து அனைவரும் மனநிறைவோடு இல்லம் சென்றனர்.

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்