
இரவு வேளையில் நால்வரும் உணவு மேசையில் அமர்ந்து, பரிமாறப்பட்ட உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“ம்ம்… என்ன பண்ணலாம்னு இருக்கேம்மா?” என்று நீலகண்டன் தான் பேச்சை ஆரம்பித்தார்.
“வீட்டை விற்கிறதைத் தவிர வேற வழி இல்லை மாமா! அந்த வீடு அவங்களுக்குச் சோறு போட்டுச்சு; கௌரவமா யார் கையையும் ஏந்தி நிற்காம வாழ வச்சது. இப்போ அதை வித்துட்டா ரொம்பக் கஷ்டம் தான் மாமா! ஆனாலும் மேற்கொண்டு கொஞ்சம் பணம் தேவைப்படுது. அந்த வீடு நாற்பத்தைந்து லட்சம் தான் போகும். மீதிப் பணத்துக்கு என்ன பண்ண? வட்டியும் முதலுமா கொடுக்கணுமே!” என வருத்தம் தேய்ந்த குரலில் சொன்னாள் ஜனனி.
“வேணும்னா இந்த வீட்டுப் பத்திரத்தைத் தரவாம்மா?! அதை அடமானம் வச்சுப் பணம் வாங்கலாம்… கொஞ்சம் கொஞ்சமாத் திருப்பி அடைச்சிடலாம்” – மருமகளின் வேதனையைத் தாங்க முடியாமல் ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்யக் கேட்டார் நீலகண்டன். பக்கவாட்டில் அமர்ந்திருந்த வள்ளியைக் கூட அவர் கேட்கவில்லை. வள்ளியும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
“இல்லை மாமா! உங்களுக்கு இருக்கிறது இந்த ஒரு வீடு மட்டும்தான்! உங்க சேமிப்பை வச்சு எனக்கு நீங்க கேட்டரிங் தொழில் வச்சுக் கொடுத்திருக்கீங்க. அதுக்கே நான் இன்னும் கடனாளியா தான் இருக்கேன். மேற்கொண்டு இதுவும் வேண்டாம் மாமா! வேற ஏதாவது வழி இருக்கான்னு பார்ப்போம்.”
“என்னம்மா நீ?! கடனாளி அது இதுன்னு பேசற? நான் என் சொந்தப் பொண்ணுக்கு என்ன செய்வேனோ, அதைத்தான் உனக்குச் செய்தேன். ‘கடனாளி’ன்னு சொல்லி என்னை அந்நியனாக்கிடாதேம்மா! எங்களுக்கு உங்களை விட்டா யார் இருக்கா?” என்று அவர் கலங்கியபடி பேசினார்.
“ஐயோ மாமா! எனக்கு நீங்க ரெண்டு பேரும் இன்னொரு அப்பா, அம்மா தான். உங்களை எப்படி நான் அந்நியனா நினைப்பேன்? நான் எங்க அம்மா, அப்பாவைப் பத்தி யோசிக்கிறது போல தான் உங்களையும் நினைக்கிறேன். நீங்க கௌரவமா இருக்கணும். இந்த வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைக்க வேண்டாம் மாமா! வேற வழி இருக்கத்தான் செய்யும். யோசிப்போம்! அவகாசம் கேட்டிருக்கேன். அதுக்குள்ள நமக்கு நல்லது நடக்கணும்” என்றாள்.
அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நந்துவிற்கு ஒரு யோசனை தோன்றியது.
“ஜனா! நீ ரெண்டு வீட்டையும் விற்க வேண்டாம். ஊர்ல தாத்தா எனக்கு எழுதி வச்ச நிலங்கள் நிறைய இருக்கு. அதை மாமா குத்தகைக்கு விட்டு நாலு காசு பார்த்துட்டு இருக்கார். அதுல பாதியை வித்தா கூடக் கடனை அடைக்கிற அளவுக்குப் பணம் கிடைக்கும். ஆனா, அந்த இடத்தை விக்கணும்னா எனக்குக் கல்யாணம் ஆகியிருக்கணும். முதல்ல நம்ம கல்யாணத்தை முடிச்சுட்டு, பிறகு நிலத்தை விக்கிற வேலையைப் பார்க்கலாம். என்ன சொல்ற?”
அவளோ தயக்கமாகவும் சங்கடமாகவும் அவனைப் பார்த்தாள்.
“என்ன ஜனா? என்ன சொல்ற?”
“இல்லைடா… அது வந்து…” எனத் தயங்கினாள்.
“என்னடி தயக்கம்?!”
“பொறு நந்து… யோசிக்கலாம்” என்று பதில் சொல்லாமல் எழுந்து கொண்டாள். அவளது இந்தச் செய்கையால் அவனுக்குக் கோபம் வந்தது. வள்ளியும் நீலகண்டனும் அமைதியாகத் தங்கள் அறைக்குள் சென்றுவிட்டனர். இவளும் அவனிடம் எதுவும் பேசாமல் சச்சினை அறைக்குள் அழைத்துச் சென்று உறங்க வைத்தாள்.
பதில் சொல்லாமல் உறங்கச் சென்றவளின் மீது கோபம் கொண்டு, முகம் கடுகடுவென நடுக் கூடத்தில் அமர்ந்திருந்தான் இளநந்தன்.
சச்சினை உறங்க வைத்தவள், கூடத்தில் இன்னும் வெளிச்சம் இருப்பதைப் பார்த்து வெளியே வந்தாள். நந்து தனியாக அமர்ந்து நகங்களைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தான்.
அவனது கையில் லேசாக ஒரு அடி போட்டு, “என்னடா பண்ற? நடுவீட்டுல நகத்தை கடிச்சுத் துப்பிட்டு இருக்க?” என அவன் பக்கத்தில் அமர்ந்தாள். அவனோ முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
‘பாருடா… சாருக்கு எவ்வளவு கோபம்!’ என்று எண்ணியவள், அவனது நாடியைப் பற்றித் தன் பக்கம் திருப்பினாள். அவனோ அவளது கரத்தைத் தட்டிவிட்டு, அவள் முகம் பாராமல் அப்படியே இருந்தான்.
“நந்து… என்ன கோபம் என் மேலே?”
“நான் யாருடி உனக்கு? சொல்லு, நான் உனக்கு யாரு?”
“நீ எனக்குப் புருஷன்.”
“அப்பாடா! புருஷன்னு சொன்னியே, அதுவரைக்கும் சந்தோஷம்” எனச் சலித்துக் கொண்டான்.
“புருஷனைப் புருஷன்னு தான் சொல்ல முடியும், வில்லன்னா சொல்ல முடியும்?” என அவள் நக்கல் செய்ய, அவனை முறைத்தவன்:
“புருஷன் தானே நான்? என்கிட்ட பணம் வாங்க உனக்கு என்னடி தயக்கம்? அவ்வளவு யோசிக்கிற? ‘யோசிக்கலாம்’னு வேற சொல்ற? இதுதான் நீ என்னை மதிக்கிற லட்சணமா? ச்சே, போடி!” எனக் காட்டமாகக் கேட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“நந்து…” என அழைத்தும் அவன் திரும்பவில்லை. மீண்டும் அழைத்துத் தன்னை நோக்கச் செய்தாள்.
“நந்து புரிஞ்சுக்கோ! உன்கிட்ட பணம் வாங்கக் கூடாதுன்னு இல்லை. நிச்சயமா நான் கேட்கலைனாலும் நீ உதவி செஞ்சிருப்ப. இந்தப் பிரச்சினையில இருந்து உன்னால என் அப்பாவை வெளிய கொண்டு வர முடியும்… ஆனா…” எனத் தயங்கித் தரையைப் பார்த்தாள்.
“ஆனா… என்னடி ஆனா?”
“இப்போ நான் உன்னைக் கல்யாணம் பண்ணினாத் தானே உன்னால உன் தாத்தா எழுதின நிலத்தை விற்க முடியும்? நம்ம கையெழுத்துப் போட்டா நிலத்தை விக்க முடியும், பிரச்சினை தீரும். ஆனா எனக்கு அதுல உடன்பாடே இல்லை நந்து.”
“ஏன்?”
“நான் உன்னைப் பணத்துக்காகக் கல்யாணம் பண்றேங்கிற எண்ணம் உனக்கு வந்திடக் கூடாது நந்து.”
“என்ன பேசறடி நீ? நான் அப்படி நினைப்பேனா?”
“நீ அப்படி நினைப்பேன்னு நான் சொல்லலடா! ஆனா எனக்கு அப்படி ஒரு எண்ணம் வந்திடக் கூடாதுன்னு சொல்றேன்” என்றாள். அவன் புரியாமல் விழித்தான்.
“நந்து! நம்ம கல்யாணத்துக்குப் பின்னாடி காதல் மட்டும்தான் இருக்கணும், காசு இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். என்னோட முதல் கல்யாணமும் சரி, விபுவோட நடக்க இருந்த கல்யாணமும் சரி, விருப்பமே இல்லாம ஏதோ ஒரு காரணத்துக்காக வற்புறுத்தலோட நடந்தது. என் வாழ்க்கையில இந்த ரெண்டு விஷயமும் நடந்திருக்கவே கூடாதுன்னு ஒவ்வொரு நொடியும் நான் நினைச்சுட்டு இருக்கேன். உன்னோட நடக்கிற இந்தக் கல்யாணத்துக்குப் பின்னே பணம் ஒரு காரணமா இருக்கக் கூடாது நந்து. என் மனசை நீயாவது புரிஞ்சுக்கோ! இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியலடா.”
“நான் ‘யோசிக்கலாம்’னு சொல்லித் தயங்குனது உன் பணத்தை வாங்குறதுக்காக இல்லை; நான் சொன்ன இந்தக் காரணத்துக்காகத் தான்… வேற எதுவும் இல்லைடா!” எனக் கண்கள் கலங்கச் சொன்னவளை இழுத்துத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அவளும் அவனுக்குள் அடைக்கலமானாள்.
“ஸாரிடி, நீ என்ன நினைக்கிறன்னு யோசிக்காமக் கோபப்பட்டேன். ஸாரி… ஸாரி அன்னம்மா!” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
“பரவாயில்லைடா! உன் கோபமும் சரியானது தான். என் புருஷன் நீ, எனக்காகத் தான் யோசிக்கணும், கோபப்படணும். அதனால உன் கோபமும் நியாயமானது தான் நந்து!”
“இப்போ பணத்துக்கு என்ன பண்ணப் போறோம்?”
“தெரியல நந்து. வீட்டை வித்து பாதிப் பணத்தைக் கொடுக்கலாம். மீதிப் பணத்துக்குக் கேட்டரிங் பத்திரத்தை அடகு வைக்கலாம்னு யோசிக்கிறேன்” என்றாள்.
“சரி! இப்போ புருஷனா ஒண்ணு சொல்லுவேன், நீ கேட்டு தான் ஆகணும்” என்றான்.
“என்ன?” என்று அவனது அணைப்பிலிருந்தே நிமிர்ந்து கேட்டாள்.
“வெளிய ஒருத்தர்கிட்ட உன் வீட்டையும் வித்து, கேட்டரிங் பத்திரத்தையும் அடகு வச்சுப் பணம் வாங்குறதுக்கு பதிலா, அந்த இரண்டையும் என்கிட்ட கொடுத்தேன்னா, நான் என் நிலத்தை வித்துப் பணத்தைக் கொடுப்பேனே! உனக்கும் பணத்துக்காகக் கல்யாணம் பண்ற எண்ணம் இருக்காதுல? என்ன சொல்ற?” எனத் தனது யோசனையைச் சொல்லி அவள் முகம் பார்த்தான்.
அவனிடமிருந்து விலகி அவனை முறைத்தாள்.
“என்னடி, ஐடியா நல்லா இல்லையா? வீடும் கேட்டரிங்கும் நம்மகிட்டயே பாதுகாப்பா இருக்கும், வெளிய போகாது! எதுக்குடி முறைக்கிற? நான் தப்பா எதுவும் சொல்லலையே!” எனத் திருட்டு முழியுடன் அவளைப் பார்த்தான். அவள் வேகமாக அவன் முகம் ஏந்தி, நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட்டாள். அவனும் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டான்.
“நிலத்தை வித்தாலும் பரவாயில்லை, ஆனா வீட்டையும் கேட்டரிங்கையும் வெளிய போயிடக் கூடாதுன்னு நினைக்கிறியே, ஏன் நந்து? நான் உன்னோடது என்னோடதுன்னு பிரிச்சுப் பேசுறேன்னு நினைக்காதே! நிலத்தை வித்து வீட்டையும் கேட்டரிங்கையும் பாதுகாக்கணும்னு ஏன் நினைக்கிற?”
“ரெண்டுமே உன்னைச் சார்ந்ததுடி, அதை எப்படி இழக்கச் சொல்ற? கேட்டரிங்ல உன்னோட உழைப்பு இருக்கு! அதை எப்படி அவ்வளவு சீக்கிரம் வெளிய கொடுத்திட முடியும்? நீ உதட்டளவுல சரின்னு சொன்னாலும், உள் மனசு எவ்வளவு துடிக்கும்னு எனக்குத் தெரியாதா? நிலத்து மேல எனக்குப் பெரிய ஈடுபாடு இல்லைடி. ஆனா உனக்கு அப்படி இல்லையே? அதனால நீ எதையும் போட்டு மனசுக்குள்ள குழப்பிக்காமக் கல்யாணத்துக்குத் தயாராகு! நம்ம கல்யாணத்துக்குப் பின்னாடி கடன், காசு எதுவும் இல்லை… காதல், காதல் மட்டும்தான் இருக்கு… என்ன?”
என்றதும் வேகமாகத் தலையசைத்தாள். அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
மறுநாள் அவர்கள் முடிவை நீலகண்டன் வள்ளியிடம் சொல்ல, அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர்.
நல்லசிவம் நந்துவிடம் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொல்ல, அவரது கைகளைப் பிடித்துக்கொண்டவன், “நான் உங்க மருமகன் இல்லை, மகன். எனக்கு உங்களைப் பாதுகாக்கிற பொறுப்பு இருக்கு. அதனோட அடிப்படையில தான் இந்தக் கடனை அடைக்கிறேன் மாமா. நீங்க நன்றி சொல்லி என்னை அந்நியப்படுத்தாதீங்க மாமா” என்றான். அவர் அவனை அணைத்துக் கொண்டார்.
பதிவுத் திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடக்க, நிலத்தை விற்கவும் ஏற்பாடுகள் நடந்தன. நந்துவின் தாய்மாமா நிலத்தை விற்றுக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
நிலத்தை வாங்க ஒருவர் முன்வர, பதிவுத் திருமணம் முடிந்த கையோடு நிலத்தையும் விற்றுவிடலாம் என்று முடிவு செய்திருந்தனர். நிலத்தை வாங்க வேண்டியவரும் திருமணத்திற்கு வந்திருந்தார்.
பெற்றோர்களின் ஆசியோடு மாலை மாற்றி, தாலி கட்டி, கையெழுத்திட்டு நந்துவும் ஜனனியும் தம்பதிகளாயினர். அவர்கள் திருமணத்திற்கு நந்துவின் நண்பன் கந்தனும் வந்திருந்தான். இருவரும் அவனை இயல்பாக வரவேற்க, அவன் கொடுத்த திருமணப் பரிசைக் கண்டு குடும்பமே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
+1

