9-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி

Loading

அத்தியாயம் 9

முகம் முழுவதும் புன்னகையை பூசிக்கொண்டு வீட்டிற்குள் வந்தவனுக்கு இன்னுமே சிரிப்பை அடக்க முடியவில்லை.  இவன் மேலே உள்ள பால்கனியில் நிற்கிறானா.? இல்லையா.? எனத் தெரிந்து கொள்வதற்கு அவள் செய்த செயல்களை நினைத்தவனுக்கு சிரிப்பு பீறிட்டுக் கிளம்பியது.

வீட்டினுள் வந்தவன் தன் அறையை நோக்கி நடக்க, அவள் கையில் அணிந்திருக்கும் பிரேஸ்லெட்டை தான் பார்க்க முற்படுவதை அவள் அறிந்திருக்கிறாள் என்று தோன்றியது அவனுக்கு.தனக்கு அதைக் காட்டி இருக்கலாமென நினைத்தவனுக்கு அது அவள் கைகளில்  இடம்பெறவில்லையோ என்ற ஐயத்தைத் திடீரென ஏற்படுத்தி அவன் நடையை நிறுத்தி இருந்தது.

தான் பார்க்க நினைப்பதை அவனுக்குக் காட்டாமல் மறைத்து,  உடன் வந்த சக ஆசிரியையுடன் ஒட்டி நடந்து அவன் பார்வையிலிருந்து தன்னை முழுவதுமாக மறைத்துக் கொண்டு வேகமாகச் சென்றவளின் செயல் தற்போது அவனுக்கு வித்தியாசமாகத் தோன்றியது. தான் அவள் கைகளைப் பார்த்து விடக் கூடாது என்ற நினைவிலேயே அவள் வேகமாகத் தன்னை மறைத்துச் சென்றிருப்பதாகப்பட்டது அவனுக்கு.
ஏன் அப்படி.? தான் நினைப்பது சரிதானா.? என்று சிந்தித்தபடியே தன் அறைக்கு வந்தவனுக்கு அதற்கு மேல் யோசிக்க நேரம் இல்லாமல் வேலைகள் இழுத்துக் கொள்ள. நாளையும் இதுபோல் வொர்க் ப்ரம் ஹோம் வாங்கிக்கொண்டு அவளைப் பார்க்க முடியாத நிலைமையை நினைத்து வெறுத்தபடியே தன் வேலைகளில் மூழ்கி இருந்தான் சஞ்சய்.

ஆனால் ஏதோ ஒன்று சரியாக இல்லாதது போல் அவன் மனதை உருத்திக் கொண்டே இருந்தது. இதைப் பற்றித் தாயிடம் பேசலாமா என யோசித்தவனுக்கும் சரியாக முடிவெடுக்க முடியாத நிலை.

தன் மனதில் உள்ளவற்றை அன்னையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த சஞ்சய். இரவு நேர உணவு நேரத்தில் இதைப் பேச வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.
நினைத்ததை செயலாற்ற உணவு வேலை முடிந்தபின் இவன் பேச  ஆரம்பிப்பதற்குள், அவன் தந்தையே ஆரம்பித்தார்
“சஞ்சய். இந்த வார ஞாயிற்றுக்கிழமை நீ ஃப்ரீ பண்ணிக்கோ. பொண்ணு வீட்ல இருந்து உன்னைப் பார்க்க வரேன்னு சொல்லி இருக்காங்க.” என்றவரின் கூற்றில், தற்போது தன் மனதில் இருக்கும் சஞ்சலங்களை கூறுவது சரியாக இருக்குமா? என்பது தெரியாமல் சில நிமிடங்கள் யோசித்தவன், பின்பு தன் பதிலுக்காகத் தந்தை  தன்னையே பார்த்திருப்பதை பார்த்தவன்,
“சரிப்பா.” என்ற பேச்சுடன் முடித்துக் கொண்டு தன் அறையை நோக்கிச் சென்றான். அவர்கள் வந்து சென்றபின் தாயிடம் இதைப் பற்றிப் பேச வேண்டும் என்ற முடிவுடன்.

மகனிடம் கூறியது போலவே பிரபு, ரகுபதிக்கு போன் செய்திருந்தார்.
அலைபேசியின் அழைப்பு எடுக்கப்பட்ட உடனே ஆரவாரமாக ஆரம்பித்தார் பிரபு
“ஹலோ ரகு.எப்படி இருக்கீங்க.?” “நல்லா இருக்கேன் பிரபு. நீங்க எப்படி இருக்கீங்க.?” என்றார் அவரும் குரலில் உற்சாகம் குறையாமல்.
“எப்பவும் போல மனைவி, புள்ள, வீடு, நோயாளிகள் என்று போய்கிட்டு இருக்கேன்.” என்றார் அட்டகாசமான சிரிப்புடன்.
“சரிதான், சரிதான். நீங்க நல்லா இருந்தா தான் நாங்களும் நல்லா இருக்க முடியும்.” என்றார் இவரும் சிரிப்பு குறையாமல்.
“வேலையில இருக்கீங்களா…? நான் வேற நேரம் பாக்காம உங்களுக்குப் போன் பண்ணிட்டேன்.” எனப் பிரபு கேட்க
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. இப்ப டீப்பிரேக் தான். சொல்லுங்க.” என்றார் இவரும். “நாங்க பொண்ணு பார்த்து முடிச்சிட்டோம். நீங்கப் பையன் பார்க்க வரேன்னு சொன்னீங்களே அதுக்கு தான் அழைத்து இருந்தேன். வர்ற ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு வசதி படுமா.?”எனக் கேட்டவர், பின்
“ஏன்னா அன்னைக்கு தான் சஞ்சய்க்கு  லீவு.”என்று இவர் முடிப்பதற்குள்ளாகவே,
“ஞாயிற்றுக்கிழமை தான் வசதிப்படும் பிரபு.எங்களை மாதிரி அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு அன்னைக்கு ஒரு நாள் தானே விடுமுறை. எங்களுக்கு வசதிப்படும் நீங்க மருத்துவர்கள் உங்களுக்குச் சரினா எங்களுக்கும் சரிதான்.”
“அப்பச் சரி ஞாயிற்றுக்கிழமைய பிக்ஸ் செய்துப்போம். எல்லாரும் மதிய சாப்பாட்டுக்கு நம்ம வீட்டுக்கு வந்துடுங்க.”
” அய்யய்யோ.! சாப்பாடு எல்லாம் எதுக்கு.?”
“என்ன சாப்பாடு எல்லாம் எதுக்குன்னு கேக்குறீங்க. அதான் பெண்ணுக்குப் பூ வெச்சி உறுதிப்படுத்திட்டு  தானே வந்திருக்கோம். நாம இப்போ சம்பந்திங்கள் ஆயிட்டோம்.  அதனால நம்ம வீட்ல கை நனைக்கலாம். தப்பு இல்ல. எதைப் பத்தியும் நினைக்காம குடும்பமா பையன் பார்க்க வந்துடுங்க. மதியான சாப்பாடு நம்ம வீட்டுல தான்.” என்று கராராக அவர் கூறிவிட அதற்கு மேல் மறுக்க முடியவில்லை இவராலும்.
“சரி பிரபு நாங்க ஒரு பதினொன்னரை மணிபோல வந்துடுறோம்.”
“வாங்க வாங்க காத்துட்டு இருக்கோம்.” என்ற படியே  அலைபேசியை அனைத்தார் பிரபு.

இரவு உணவின்போது ரகு உடன் பேசியதை மனைவியுடனும் மகனுடனும் பகிர்ந்து கொண்டார் பிரபு.
“வரும் ஞாயிற்றுக்கிழமை அவங்க எல்லாம் வரேன்னு சொல்லி இருக்காங்க. சாப்பாடு அரேஞ்ச் பண்றோம்னு சொல்லிட்டேன். என்ன செய்யலாம்ன்னு நினைக்கிறே அனு…?” என்று மனைவியைப் பார்த்துக் கேட்க.
“அம்மா நீங்க எதையும் இழுத்து போட்டுட்டு செய்யாதீங்க. உங்களுக்கு மறுநாள் ஹாஸ்பிடல் போக வேண்டி இருக்கும்.அப்புறம் நீங்கப் படுத்துக்கிட்டீங்கன்னா உங்க பேஷன்ட் எல்லாம் யார் பார்க்கிறது.?” எனக் கேட்ட மகனைப் பார்த்து முறைத்த அனுப்புமா,
“ஏன்டா.? எப்பவுமே நான் தானே சமைக்கிறேன் வீட்ல. இப்ப மட்டும் என்ன.?”
“அது நமக்கு மட்டும். மூணு பேருக்குக் கொஞ்சமா செய்யறது. இப்ப வர்ற ஆளுங்க அதிகம் அதனால சமைக்கிறேன்னு கிச்சனுக்குள்ள நிக்காம, ஃப்ரீயா இருங்க. எல்லாமே ஆர்டர் பண்ணிக்கலாம்.” என்றான். பேச்சு மட்டுமே தாயிடம் பார்வை முழுவதும் தந்தையிடம் தான்.
“அவன் சொல்றதும் சரிதான். இவ்வளவு பேருக்கெல்லாம் உன்னால தனியா செய்ய முடியாது. எல்லாமே ஆர்டர் பண்ணிக்கலாம். மட்டன் பிரியாணி, சிக்கன் பிரை ஆர்டர் பண்ணிடலாமா.?”
“ஏங்க முதல் முதல்ல வராங்க. நான்வெஜ்ஜா அவங்களுக்கு வைக்கிறது.?”என இழுத்த தாயைப் பார்த்தவன்,
“அம்மா எந்தக் காலத்துல இருக்கீங்க. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே. ஏதும் நாள், கிழமை இல்லல்ல.”
“இல்ல தான். இருந்தாலும்.”என்ற அன்னையை முடிக்க விடாமல்,
“அப்புறம் என்ன.? இருந்தாலும்ன்னு இழுக்காதீங்க. கிடைக்கிறதே ஒரு நாள். அதுலயாவது நிம்மதியா நான்வெஜ் சாப்பிட விடுங்க.” என்ற மகனைப் பார்த்தவருக்கு வேறு ஏதும் சொல்ல முடியவில்லை.

“சரி அப்ப எல்லாமே ஆர்டர் பண்ணி வாங்கிடுவோம். ஸ்வீட் மட்டும் நான் ஏதாவது வீட்ல செய்றேன்.”என்றவரிடம்
“அம்மா பருப்பு பாயாசம்.”
“தெரியும்டா இதுதான் கேட்பேன்னு.” என்றபடி சிரித்தவர்.
‘அதற்கு என்னென்ன தேவை.? வீட்டில் என்ன இருக்கிறது.? என்பதை ஒரு முறை பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.’ என நினைத்துக் கொண்டார்.
“வீடு எல்லாம் கொஞ்சம் கிளீன் பண்ணனும். நாளைக்கு வேணி கிட்ட சொல்லணும். அப்பதான் அவள் வேலையெல்லாம் முடிச்சுட்டு கொஞ்சம் ஃப்ரீ பண்ணிக்கொண்டு வருவா.சனிக்கிழமை நான் வரமாட்டேன் கிளினிக்குக்கு.  நீங்களே என்னோட பேஷண்டையும் சேர்த்து பார்த்துக்கோங்க.” என்று கணவரைப் பார்த்துக் கூறியவர். மிக வேகமாகத் திட்டமிட ஆரம்பித்தார்.

“இப்பவே ஆரம்பிச்சிட்டா இவ.” என்று பிரபு சந்தோஷமாக அழுத்துக் கொண்டு தன் அறைக்குள் செல்ல இவர்களைப் பார்த்துச் சிரித்தபடியே தன் அறைக்குச் செல்ல மாடி ஏறினான் சஞ்சய்.

காத்திருந்த ஞாயிற்றுக்கிழமையும் அழகாக விடிந்திருந்தது.
சொன்னபடியே வீட்டை அருமையாகச் சுத்தம் செய்து மாற்றி இருந்தார் அனுபமா. எப்பொழுதுமே இவர்களின் வீடு சுத்தமாகத் தான் இருக்கும். இன்று அதிகமாகச் சிரத்தை எடுத்து மேலும் பொலிவுடன் மின்னும்படி அழகாக்கி இருந்தார்.
சஞ்சய் கூறியது போலவே ஒரு உயர்தர உணவகத்தில் மட்டன் பிரியாணி, தந்தூரி சிக்கன், மீன் வறுவல், அவித்த முட்டை, கத்திரிக்காய் கூட்டு, தயிர் பச்சடியென அனைத்தும் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது. மகனின் ஆசைக்கிணங்க வீட்டிலேயே பருப்பு பாயாசம் செய்திருந்தார்.

அது வெயில் காலமாக இருப்பதால் வந்தவர்களுக்கு முதலில் அருந்துவதற்கு இளநீர் எலுமிச்சை சர்பத் செய்து தயாராக வைத்திருந்தார். அனைத்தையும் ஒருமுறை சரி பார்த்துவிட்டுத் தானும் கிளம்பி வரச் சென்றவர் அழகான இளஞ்சிவப்பு நிற சந்தேரி காட்டன் புடவை அணிந்து மிதமான அலங்காரத்துடன் மருத்துவருக்கே உண்டான  மிடுக்குடன் காத்திருந்தார். சம்மந்தி வீட்டாரின் வருகைக்காக.
சஞ்சய்யும் தலைமுடியை ஜெல் வைத்து அழகாக வாரி, அடர் நீல நிற முழுக்கை சட்டையுடன் சந்தன நிற  பேன்ட் அணிந்து ரிம்லெஸ் கண்ணாடியுடன் தயாராகி வெகு ஸ்மார்ட்டாக அமர்ந்திருந்தான்.

சரியாகப் பதினொன்று நாற்பதுக்கு வந்து சேர்ந்தார்கள் வசுந்தராவின் வீட்டிலிருந்து. வந்தவர்களை முன் சென்று வரவேற்றார்கள் பிரபுவும் அனுபமாவும். சஞ்சையை சோபாவில் அமர்ந்து கொள்ள சொல்லிவிட்டு, முன்னாள் வந்த ரகு மற்றும்  கோமதியை முறையே வரவேற்று விட்டு. அவருக்குப் பின்னால் அவரின் மூத்த மகளும் மருமகனும் வர அவர்களோடு இணைந்து இளைய மகளும் வந்தாள். வீட்டிற்குள் வந்தவர்களைப் புன் சிரிப்புடன் எதிர்நோக்கி பொதுவாக அனைவரையும் பார்த்து,
“வாங்க.” என வரவேற்றான் சஞ்சய்.
அருகில் வந்த வசுமதியின் கணவனின் அருகில் சென்று வரவேற்பாக அவன் கைகளைப் பிடித்துக் குலுக்கியவன் தன் அருகிலேயே அவனை அமர்த்திக் கொண்டான்.

முதன் முதலில் நேரில் சஞ்சையை பார்த்தவர்களுக்கு பரம திருப்தி.
கோகிலாவிற்கும் மனது மகிழ்வடைந்தது. என்னதான் பிடிக்காத மகளாக இருந்தாலும் அவளும் அவர் பெற்ற மகள் தானே அந்தச் சிறு நினைவு மனதில் இருக்க. மாப்பிள்ளையின் அழகு அவரின் மனதை நிறைத்தது. கண்களைச் சுழற்றி வீட்டைப் பார்த்தவர் அவர்களின் வசதி நிலையை அறிந்து மனமகிழவே செய்தார்.
ஆனால் பொறாமையில் பொங்கிக் கொண்டிருந்தவர்கள் இருவர் மட்டுமே வசுமதியும், வசந்தியும்.

“அந்தக் கருவாச்சிக்கு இப்படியொரு மாப்பிள்ளையா டி.? அதுவும் இவ்வளவு வசதி வாய்ப்போட.? இவ்வளவு அழகா, இவ்வளவு கலரா, ரெண்டு பேரும் ஒண்ணா நின்னா பிளாக் அண்ட் ஒயிட் மாதிரி இருக்காது.?  இப்படி வசதியானவங்க கொஞ்சத்துக்கும் நம்மள மதிக்கமாட்டாங்க போலயே. இவங்கள விடு, இதுக்கும் மேல எங்க வீட்டு ஆளுங்க இனிமே என்ன நினைப்பாங்களோன்னு   கெதக்குனு  இருக்கு.”என்று தங்கை காதில் முணுமுணுத்தவாறு கூறியவளின் விழிகள் வீட்டைச் சுழன்று மதிப்பிட்டுக் கொண்டே இருந்தன.

வந்தவர்கள் அமர்ந்தவுடன் அவர்களுக்கான ஜூஸை எடுத்து வந்த அனுபமாவின் கையில் இருந்த ட்ரேயை வாங்கிக் கொண்டான் சஞ்சய். அவனின் செயலில் புருவம் உயர்த்தி மெச்சுதலாக அவனைப் பார்த்தார் ரகுபதி. சங்கோஜம் எதுவும் படாமல் ஒவ்வொருவருக்கும் கொடுத்துக்கொண்டே வந்தான் இன்முகத்துடன். அவனிடமிருந்து ஜூசை பெற்றுக் கொண்டவர்களுக்கும் அந்தப் புன்னகை தொற்றிக் கொண்டிருந்தது. வசந்தியின் கணவன் டம்ளரை எடுத்துக்கொண்டே. சஞ்சயை நிமிர்ந்து பார்த்தவன் “மாப்பிள்ளையை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” என்றான் சிரிப்புடன். அதற்கு லேசாகத் தலையசைத்து தன் கையில் இருந்த ட்ரேவை டைனிங் டேபிள் வைத்துவிட்டு அவனின் அருகில் வந்த அமர்ந்து கொண்டான் சஞ்சய்.

“ஏதோ காணாததை கண்ட மாதிரி அந்தக் கருவாச்சி கிட்ட என்ன பிடிச்சதுன்னு அவளைக் கல்யாணம் பண்ணிக்க இவர் கேட்கிறார் என்று தெரியவில்லை. இதற்கு முன்னாடி அழகான பெண்களைப் பார்த்திருக்க மாட்டாரோ என்னவோ.?  உனக்கு ஒரு சான்ஸ். பேசாம, அவர் உன்னைக் கவனிக்கிற மாதிரி ஏதாவது பண்ணு. அவளை வேண்டாம்னு சொல்லிட்டு உன்ன கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் அவருக்கு வரட்டும்.” என்றாள்  தங்கையின் காதில் மெதுவாக வசுமதி.

அப்படியான எண்ணம் சிறிதும் இல்லாமல் வீட்டை ரசித்துப் பார்த்துக் கொண்டு புது வித சுவையுடன் இருந்த இளநீர் சர்பத்தை அருந்திக் கொண்டிருந்தவள் தமக்கையின் பேச்சில் அதிர்ந்தவளாக
“என்னக்கா சொல்ற.? என்றவள் குடித்துக் கொண்டிருந்த டம்ளரை எதிரில் இருந்த மேஜையில் வேகமாக வைத்தபடி.
“எதுக்குடி கத்தி காட்டி கொடுக்கிற. அமைதியா பேசு.. ஏன்.? இந்த மாதிரி ஒரு வாழ்க்கை வேணாமா உனக்கு.?”என்றதற்கு.
“வேணும் தான்.” என்றாள் அவளும் வேகமாக.

“அப்போ ட்ரை பண்ணு. தப்பு இல்ல.அங்க பாரு எவ்ளோ அழகா இருக்காரு. அவர கரெக்ட் பண்ண முடியாத உன்னால. உனக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ எனக்கு உன் அழகு மேலையும் நிறத்து மேலையும்  நிறையவே நம்பிக்கை இருக்கு. கண்ணில்லாதவன் கூட உன்னை வேணாம்னு சொல்லமாட்டான். ஏன்னா  என் தங்கச்சியோட அழகு அப்படியானது.”என்று தங்கை மனதில் விஷத்தை ஏற்றுகிறோம் என்பதை உணராமல், மற்றொரு தங்கையின் மேல் சிறு வயதில் இருந்தே ஏன் என்று தெரியாத காழ்ப்புணர்ச்சியால் சிறு பெண்ணின் மனதில் நஞ்சை விதைத்துக்கொண்டிருந்தாள்.

தமக்கையின் புகழ்ச்சியில் மயங்கியவள் இப்படியான ஒரு செல்வ செழிப்பான வாழ்வும், அழகான கணவனும் அமையப்பெற்றால் வாழ்க்கை வண்ணமயமாகிவிடும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செயலாற்றி கொள்ள முடியும் என்ற நினைவும் மனதில் தோன்ற,
‘முயன்று தான் பார்ப்போமே. அக்காவே சொல்லிவிட்டாள். அப்புறம் என்ன பயம்.?’ என நினைத்தபடி எதிரில் அமர்ந்திருந்தவன் தன் மற்றொரு தமக்கையை விரும்பி மனம் முடிக்கக் கேட்டவன் என்பதை மறந்தவளாக அவன் கவனத்தை தன் பால் இழுக்க என்ன செய்யலாமென மும்முறமாக யோசிக்க ஆரம்பித்தாள். அதன் சாதக பாதகம் அறியாத சிறு பெண்ணானவள்.

‘தன்னால் முடிந்த வரைக்கும் சிறியவளை குழப்பி அவள் ஏதேனும் செய்து இந்தத் திருமணம் நின்று தங்கைக்கு இந்த வாழ்வு கிடைத்தால் மகிழ்வுதானென நினைத்தவளுக்கு ஏனோ வசுந்தராவுக்கு இந்த வாழ்வு அமையக் கூடாது. தப்பி தவறி அமையும் படி ஏதேனும் நடந்தாலும் எப்படியாவது அதைக் குழப்பி நிறுத்தி விட வேண்டும் என உள்ளம் முழுவதும் அழுக்கைச் சுமந்தபடி எண்ணிக் கொண்டிருந்தவள் முகத்தை அழகுற புன்னகையில் நிறைந்திருந்தாள்.

பொதுவான சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.பின்பு, “எப்போ கல்யாணம் வச்சுக்கலாம்னு இருக்கீங்க ரகு.?” எனப் பிரபுவின் கேள்வியில் அவரை நிமிர்ந்து பார்த்தவர்
“நீங்களே சொல்லுங்க பிரபு.” என்றார் அவரும்.
“நான் எங்க குடும்ப ஜோசியரை பார்த்துப் பேசிட்டேன்.” என்று கூறிய பிரபு மனைவியைப் பார்த்து,
“ஜோசியர் குறித்து கொடுத்திருந்த தேதிகளைக் கொண்டு வந்து கொடும்மா.” எனக் கூற. வேகமாகத் தங்களின் அறைக்குள் சென்றவர். கையில் ஒரு பேப்பரோடு வெளியில் வந்து கணவரிடம் கொடுக்க. அதை வாங்கியவர், மற்றொரு கைக்கொண்டு மனைவியின் கைப்பிடித்து அவரையும் தன் அருகில் அமர்த்திக் கொண்டார் பிரபு.அதைக் காணாமல் கண்ட ரகுவிற்கு மனம் இதமாக இருந்தது.

‘தன் வீடு போல அல்ல.அப்பாடா.!’ என்ற ஆசுவாசம் தான்.
‘இங்குக் கணவன் மனைவிக்குள் நல்ல சமூகமான நிலையும், புரிதலும் இருப்பதை பார்த்தவர். அவர்களின் மகனும் இதே போல மனைவிக்கு மரியாதையும், அன்பும் கொடுக்கக் கூடியவனாகக் கட்டாயமாக இருப்பான்.’ என நினைத்து மனதிற்குள் மகிழ்ந்தவர். தன்னையும் மீறி வெளி எழும்பிய பெருமூச்சை அடக்க மிகவும் சிரமப்பட்டார். ஜோசியர் குறித்து கொடுத்த தேதிகளில் மூன்று மாதத்திற்கு பின் வரும் திருமண நாள் இவர்களுக்கும் வசதியாக இருக்க அதையே முடிவு செய்து கொள்ளலாமென ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.

பெண்கள் அனைவரும் அமைதியாக அமர்ந்திருப்பதையும் இளையவலான வசந்தி இங்கும் அங்கும் நெளிந்து கொண்டிருப்பதையும் பார்த்த பிரபு. அவளுக்கு ஏதேனும் அசவுகரியமாக இருக்கிறதோ.? என எண்ணியவராக “என்னமா வசந்தி ஏன் நெளிஞ்சுகிட்டே இருக்க.? ஏதாவது வேணுமா.? எனக் கேட்டார் வெள்ளந்தியாக. அவள் தன் மகனின் கவனத்தைக் கவர இப்படி செய்கிறாள் என்பது கூடத் தெரியவில்லை அந்த மருத்துவருக்கு.
“இல்ல அங்கிள், சும்மாதான்.” என்றவள் சிரிப்பதாகப் பெயர் செய்து கொண்டு உதட்டை இழுத்து வைத்த படி அவரின் கேள்விக்குப் பதில் கூறியவள், ஓரப்பார்வையாகத் தன் தந்தையும் பார்த்துக் கொண்டாள்.

“என்னது அங்கிளா.? அழகா மாமான்னு சொல்லுமா. உங்க அக்காக்கு தான் மாமனார் உனக்கு மாமா தான்.” என்றவர் அட்டகாசமாகச் சிரிக்க. அவளும் சங்கோஜமாகச் சிரித்துக் கொண்டே
“சரிங்க மாமா.” என்றாள்.
“ஏன் அமைதியா உக்காந்துட்டு இருக்கீங்க.? போய் வீடு சுத்தி பாருங்க. உங்க அக்கா வாழப் போற வீடு. சஞ்சய் கூட்டிட்டு போப்பா. அவங்களுக்கும் உன்கிட்ட ஏதாவது பேசணும் கேட்கணும்னு இருக்கும்.” என்றவர்.

“அவங்க கேக்குறதுக்கு எல்லாம் கரெக்டா பதில் சொல்லிடு. அப்பதான் உன்ன அவங்க செலக்ட் பண்ணுவாங்க.” எனக் கூறி மறுபடியும் அட்டகாசமாகச் சிரிக்க. மற்றவர்களும் இணைந்து கொண்டார்கள் அவருடன். வசுமதி அவள் கணவர் மற்றும் வசந்தியை பார்த்துக் கொண்டே எழுந்தான் சஞ்சய்.அவர்களும் இவனுடன் எழுந்தார்கள். அவன் பின்னே செல்வதற்கு. அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தந்தையை நோக்கியவன்,

“இவங்க ஏன் பா என்னைச் செலக்ட் பண்ணனும்.? என்னைச் செலக்ட் பண்ண வேண்டியவ தான் இப்ப இங்க வரலையே.? ஆனா அவளும் என்னை வேண்டாம் என்று சொல்ல மாட்டா.”என்றவனுக்கு பதில் கொடுத்தார் ரகு,
“கட்டாயமா என் பொண்ணு உங்களை வேண்டாம்னு  சொல்ல மாட்டா மாப்பிள்ளை.” என்று புன்னகை மாறாமல் கூற, அதற்கு ஆமோதிப்பாகத் தலையசைத்து புன்னகை முகத்துடன் அவர்களுடன் மாடி ஏறினான் சஞ்சய்.

மாடிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள அறைகள் மூன்றையும் சுற்றி காட்டியவன் தன் அறைக்குள் அழைத்துச் செல்லாமல் வெளியில் இருந்தபடியே அது தன் அறை என்று கூறிவிட்டு பால்கனியின் பக்கம் செல்ல. அவனின் அறையைப் பார்க்க ஆசைப்பட்டு அங்கேயே நின்றிருந்த வசந்தியை திரும்பிக் கேள்வியாகப் பார்த்தவன் எதுவும் கேட்பதற்கு முன்பாகவே,
“உங்க அறைய நான் பாக்க கூடாதா மாமா.?” என வசந்தி கேட்க. அவளின் மாமா என்று அழைப்பில் அக்காள் கணவரை அழைக்கும் முறை அது என நினைத்தவனாக,
“பார்க்கலாம். உங்க அக்காவுடைய அறையா அது மாறும்போது…” என்று புன்னகையுடன் கூறியவனாக முன் நடக்க. வேறு வழியின்றி அவனைப் பின் தொடர வேண்டிய நிலை இவர்களுக்கு.

“மேல என்ன.?”என்று கேட்ட வசுமதியின் கணவனிடம் “மொட்டை மாடிதான். வேறு எதுவும் இல்லை.” என்று கூறிய சஞ்சய்யின் பதிலில்,
“ஓ.! நான் போய்ப் பார்க்கலாமா.” எனக் கேட்க,
“தாராளமா போய்ப் பாருங்க.” என்றான் இவனும்.
“வசுமதி வா, மேல போய்ப் பார்க்கலாம்.” என்று மனைவியை அழைக்க, சஞ்சய் அங்குள்ள பால்கனிக்கு செல்வதை பார்த்த வசுமதி தங்கைக்கு அவன் பின் செல்லுமாறு கண் ஜாடை காட்டி விட்டு
“நீங்கப் போங்க. நான் வரேன்…” என்று கணவனுக்குப் பதில் கூறிவிட்டு. இவர்களின் பின்னே அவளும் சென்றாள்.
பால்கனிக்கு சென்றவன் எதிரில் இருக்கும் மாடியை வழக்கம்போல ஒரு பார்வை பார்க்க. இவனையே நோட்டமிட்டு கொண்டிருந்த வசுமதியின் கண்களில் அது தவறாமல் பட்டது.
“ஓஹோ.! இங்கே இருந்து தான் அவ உங்கள பாப்பாளா.?” என்ற வசுமதியின் கேள்விக்கு.
“மன்னிக்கணும். அவ என்னைப் பாக்க மாட்டா. நான் தான் அவள பாப்பேன்.” என்றான் நெற்றி சுருக்கி யோசனையுடன். இவரின் பேச்சும் பார்வையும் சரி இல்லையோ எனத் தோன்றியது அவனுக்கு.

“ஹ்ம்ம்.! யாரு பார்த்தா என்ன.? ரெண்டும் ஒன்னு தானே.”
“அது எப்படிங்க ரெண்டும் ஒன்னு ஆகும்.? அவங்க என்னைப் பாக்குறதுக்கும்  நான் அவங்கள பாக்குறதுக்கும்  நிறைய வித்தியாசம் இருக்கு இல்லையா.? இன்பாக்ட் நான் பாக்குறது கூட அவங்களுக்கு தெரியாது.”
“நம்ப முடியலையே.”
“நீங்க நம்பனுங்கறதுக்காக என்னால பொய் சொல்ல முடியாது. நீங்க நம்பினாலும்  நம்பலைன்னாலும்  உண்மை அதுதான்.”
“நீங்கச் சொல்றீங்க. ஆனா இப்பவும் நம்ப தான் முடியல. இங்கிருந்து பார்த்தாலே நீங்க நிக்கிறது நல்லா தெரியுமே. அப்புறம் எப்படி அவ உங்களைப் பார்த்ததே இல்லைன்னு அவ்ளோ உறுதியா சொல்றீங்க…”
“ஏன்னா இதுக்கு முன்ன இந்த இடத்தை அதோ அங்க இருக்கிற மரத்தோட கிளைகள் முழுதாக மறைச்சிருந்தது. அதனால அங்க இருந்து பார்க்கிறவங்களுக்கு நான் இங்கு நிற்கிறது கூடத் தெரியாது. ஆனால் என்னால் இங்க இருந்து நல்லாவே பார்க்க முடியும். இப்படியே நான் மட்டும் பார்த்துட்டு இருந்தது போதும்னு நெனச்சி, இனி அவங்களும் என்னைப் பாக்கணும்னு தோணினதனாலதான் இங்க இருக்கிற கிளைகள் எல்லாம் வெட்டி அவங்களும் என்னைப் பாக்குற மாதிரி செய்தேன்.”

“இதோ இப்ப நீங்களே ஒத்துக்கிட்டீங்களே. அவளும் தானே உங்கள பார்த்திருக்கா…”
“ஆமா, ஆமா பார்த்தாங்க தான். ஆனா பார்த்த அடுத்த நாள்ல இருந்து மாடிக்கு வரதையே நிறுத்திட்டாங்க.” என்று ரசனையுடன் கூறிக் கொண்டிருந்தவனை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் வசுமத்தியும் வசந்தியும். அவனின் குரலும் கண்களுமே பெண் அவளின் மீது இவன் கொண்டுள்ள காதலை உரைப்பதற்கு போதுமானதாக இருந்தது.

“இருந்தாலும் அவளுக்கு இப்படியொரு வாழ்வா.?” என மனதில் குமைந்த வசுமதி,
“அப்படி என்ன உங்களுக்கு அவகிட்ட பிடிச்சது.? எத பார்த்து மயங்கினீங்க.? மிஞ்சி மிஞ்சிப் போனா அவ கிட்ட இருக்குறது பெரிய முடி மட்டும்தான்…”என்று எரிச்சலுடன் கூறிய வசுமதியை கூர்ந்து பார்த்தவனுக்கு, தன்னவளை ஏனோ இவளுக்குப் பிடிக்கவில்லை என்பதில் உறுதி ஏற்பட்டிருந்தது. அதில் முகம் மாறியவன் அவனின் அதிருப்தியை தெரிவிப்பதற்கு முன்பாகவே,

“இவ அளவுக்கு அவ நிறம் கூடக் கிடையாது. அழகும் கம்மிதான்.”என்று தன் தங்கையை அவன் கவனித்து பார்க்கச் செய்யும் முனைப்பில் செயல்பட்டவளின் கேள்விக்குப் பதில் கூற விரும்பாமல் தணிச்சை செயலாக வசந்தியை நிமிர்ந்து பார்த்தவனுக்கு அவளின் நிறமோ அழகோ மனதை கவர்வதாகவே  இல்லை. அப்படி இவளின் அழகு தன் கண்களுக்குப் புலப்பட கூட இல்லையெனச் சொல்ல நினைத்தவன் எதெர்ச்சையாக வசந்தியின் கைகளைப் பார்க்க, தன்னவளுக்காக ஆசையாக அவன் வாங்கி அன்னையிடம் கொடுத்து அனுப்பிய பிரேஸ்லெட் அவள் கைகளில் ஒய்யாரமாக வீற்றிருந்தது.

பார்த்தவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. அவள் கையில் தன் விரல் படாமல் பிரேஸ்லெட்டை  மட்டும் பிடித்துத் தூக்கியவன்
“என்னது இது.?” எனக் கேட்டான் கோபத்தை அடக்கிய குரலில்.
“நீங்க அக்காவுக்கு வாங்கிக் கொடுத்த பிரேஸ்லெட் தான் மாமா. மறந்துட்டீங்களா… ?” என்று நிஜமாகவே அவனுக்குத் தெரியவில்லை மறந்து விட்டான் என்று நினைத்தபடி அவனுக்குப் பதில் கூறிய வசந்தியை அவன் உறுத்து முறைக்க. அவனின் கோபத்தை தெரிந்து கொண்ட வசுமதி, அவனைச் சமாளிக்கும் விதமாக.
“அது, அவ கை மொட்டையா இருக்குன்னு வரும்போது வசுந்தரா தான் அவ கையில இருந்ததை கழட்டி இவளுக்குப் போட்டு விட்டா.” என்றாள் சமாளிக்கும் விதமாக.

அதில் கோபம் இன்னும் கூடியவனாக “நான் அவளுக்கு கிஃப்ட்டா கொடுத்தத அவ எப்படி வேற ஒருத்தருக்கு கொடுக்கலாம்.?” என்று கேட்ட படியே, அணிந்திருந்தவள் உணர்வதற்கு முன்பாகவே அவள் கைகளிலிருந்து அந்தப் பிரேஸ்லெட்டை கழற்றி இருந்தான்.
“அய்யய்யோ என் கழட்டிட்டீங்க.?” என்று வசந்தியும்.
“யாருக்கோ அவ கொடுக்கலையே. தங்கச்சிக்கு தானே கொடுத்தா.” என  வசுமதியும் ஒரே நேரத்தில் கேட்க.

“நான் கிப்ட்டா ஒருத்தருக்கு கொடுத்ததை வேற ஒருத்தர் உபயோகிக்கிறது எனக்குப் பிடிக்காது.” என்றவன் அதைத் தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்ள,
“சரி, இனிமே அத யாருக்கும் கொடுக்கக் கூடாதுன்னு நான் அவ கிட்ட சொல்றேன். நீங்க என்கிட்ட குடுங்க.” என்று வசுமதி கேட்க.

“வேண்டாம் நானே அவள நேர்ல பார்த்துக் கொடுத்துக்கிறேன். நான் கொடுத்த கிப்ட்ட மதிக்காம வேற ஒருத்தருக்கு போடக் கொடுத்தது தப்புன்னு அவளுக்குப் புரிய வச்சிட்டு, அதுக்கான தண்டனையும் அவளுக்குக் கொடுத்துட்டே நான் அவகிட்ட கொடுத்துக்கிறேன்.” என்றான் இன்னும் கோபம் மாறாமல்.

இதற்கிடையில் மொட்டை மாடிக்குச் சென்று இருந்த வசுமதியின் கணவனும் கீழே பேசிக்கொண்டிருந்த ரகுபதி மற்றும் கோகிலாவும் மேல் மாடியைப் பார்க்க வந்தவர்கள் அனைத்தையும் கேட்டிருந்தார்கள். முகம் இறுக நின்றிருந்த ரகுபதியை பார்த்த சஞ்சய்,
“நீங்க மேல பாத்துட்டு கீழ வந்துடுங்க மாமா.” என்ற படியே வேகமாகப் படி இறங்கி சென்றான்.
“என்ன செய்து வச்சிருக்கீங்க.?” என்று கோபமாக மகளையும் மனைவியையும் முறைத்த ரகுபதி கோபமா இறங்கி சென்ற சஞ்சய் பின்னே சென்றார் கோபத்தை அடக்கியவராக.
“நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்க என்ன ஜென்மங்களோ.” என்ற படியே வசுமதியின்  கணவனும் இறங்கிச் செல்ல, இங்கு வைத்து எதுவும் பேச முடியாது என நினைத்தவர்களாகப் பெண்கள் மூவரும் அவர்களின் பின்னே சென்றார்கள்.

அனைவரும் ஒன்றாகக் கீழ் இறங்கி வருவதை பார்த்த அனுபமா “என்னப்பா மேலே எல்லாம் சுத்தி காட்டுனியா.?” என்று மகனைப் பார்த்துக் கேட்ட
“ஆமாம் மா.” என்ற படியே அவரின் அருகில் வந்தவன் அனைவரும் சாப்பிடுவதற்கு ஏதுவாக டைனிங் டேபிளில் உணவுப் பதார்த்தங்களை எடுத்து வைக்க அன்னைக்கு உதவா ஆரம்பித்தான்.
அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக அமர்ந்திருந்தவன். அவனைச் சாப்பிட அழைத்த அன்னையிடம் பிறகு உண்ணுவதாகக் கூறிவிட்டு, அனைவரும் விடைபெற்றுக் கிளம்பும் வேளையில்.

“அப்பா, ஜோசியர் அடுத்த மாசத்திலேயே ஒரு முகூர்த்தம் இருக்குன்னு சொன்னார் இல்லையா அந்தத் தேதியிலேயே திருமணத்தை முடிவு பண்ணிக்கலாம்.” என்றான் முடிவாக.

தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்