7-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி

Loading

அத்தியாயம் 7

மருமகளின் வரவிற்காக ஆவலுடன் காத்திருக்க, லாவண்டர் பட்டுடுத்தி அழகே உருவாக நடந்து வந்தாள் வசுந்தரா.
முகம் கொள்ளா புன்னகையுடன் அவளைப் பார்த்த அனுபமா
“வா மா.”என்று அழைத்துத் தன் அருகில் அமர வைத்துக் கொண்டார். அன்று சரியாக அவளைப் பார்க்க முடியாததால் இன்று நிறுத்தி நிதானமாக அவள் முகத்தில் பார்வையை நிலைக்க விட, அவரை ஏறிட்டு பார்த்த பெண் அவளுக்குத்தான் மிகவும்  சங்கோஜமாக இருந்தது.

இருந்தாலும் தன் பார்வையை விளக்காமல் தன்னையே புன்னகை முகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் மாமியாரை பார்த்ததும் பிடித்து விட்டது அவளுக்கு. அவரைப் போல முகம் விகாசிக்க புன்னகைக்காமல் அளவான புன்னகையுடன் அவரைப் பார்த்தவள், இமை தாழ்த்தி தலை குனிந்து கொண்டாள்.

“வசுந்தரா மா நிமிர்ந்து என்னையும் கொஞ்சம் பாருமா. நான் தான் உன்னுடைய பாவப்பட்ட மாமனார்.” என்று பிரபு அடக்கப்பட்ட புன்னகையுடன் கூற. அதில் அதிர்ந்தவள் குரல் வந்த திசையில் நிமிர்ந்து பார்த்தாள். அவளின் பார்வைக்காகக் காத்திருந்தவர்

“ஹாய் ஐ அம்டாக்டர் பிரபு.” என்று கை நீட்டினார் பழக்கத் தோசத்தில்.
மனைவியின் முறைப்பை பார்த்தவர், “அச்சோ.! சாரி, சாரி மா மருமகளே. நாம தமிழர் பண்பாட்டைக் கடைப் பிடிக்கணும் இல்லையா.? நான் தான் மா உன்னுடைய மாமனார் பிரபு.” என்று புன்னகையுடன் கூறியவர். மறுபடியும் கைக்குழுக்குவதற்காகக் கையை நீட்ட அவரின் இயல்பான பேச்சில் மனதில் இருந்த கலக்கம் நீங்கியவளாகத் தன் முன் நீண்டிருந்த அவரின் கையை மெதுவாகப் பிடித்துக் குலுக்கினாள் இவளும்.

இவர்களின் இயல்பான பேச்சைச் சிலர் மகிழ்வுடனும் சிலர் பொறாமை கொண்டு கோபத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“வசுந்தரா, இது என்ன பழக்கம்.? கைய பிடிச்சு குலுக்குறது. இப்படித்தான் பெரியவங்க கிட்ட மரியாதை இல்லாம நடந்துப்பியா.? உனக்கு வாழ்க்கை கொடுக்குறதுக்காகவே வந்திருக்காங்க. அவங்க கால தொட்டு கும்பிடு.” என்று சிடுசிடுப்புடன்  கூறிய வசுமதியை அவள் அதிர்ந்து பார்த்து வேகமாக எழ முற்பட. அவளை அதைவிட வேகமாகத் தடுத்த அனுபமா.

“என்னம்மா.? இன்னும் பத்தாம்பசலியாகவே இருக்க. உங்க அம்மாவோ அப்பாவோ இப்படி சொல்லி இருந்தா கூட, அதுவும் தப்புதான். இருந்தாலும்  அதை ஒரு பெரிய விஷயமாக நினைக்காமல் கடந்து போயிடலாம். நீங்க எல்லாம் படிச்சு உலகம் தெரிஞ்ச பிள்ளைங்க தானே. இதுல என்ன மரியாதை குறைவை பார்த்த நீ.?அதுவும் இல்லாமல் அவளா கை நீட்டலையே. இவருக்குப் பதில் அளிக்கும் விதத்தில் தான் அவளும் கைகுலுக்கினாள். அதில் ஒன்றும் தவறில்லை.” என்று தன்மையாகவே இருந்தாலும் சற்று அழுத்தமாகவே கூறினார்.

அனுபவமிக்க அனுபமாவிற்கு ஏனோ அப்போதே அங்குத் தன் மருமகளின் நிலை அவளவாகச் சரி இல்லை என்பதை புரிந்து கொண்டார்.

அனைவர் முன்பும் எப்போதும் தன் மருமகளை உயர்த்தி காட்ட வேண்டும் என்று உடனடி உறுதி எடுத்துக் கொண்டவருக்குத் தற்போது பார்க்க வரும் போதே அனைத்தையும் பார்த்து, பார்த்து வாங்கி வந்ததில் மகிழ்வே. முதல் முறை போகும்போதே மகன் கூறியது போல இவ்வளவையும் கொண்டு போகும்போது தாங்கள் ஆடம்பரத்திற்காகவும் பெருமைக்காகவும் செய்வதாகப் பெண் வீட்டில் நினைத்து விடுவார்களோ என்ற தயக்கமும். அவர்களையும் அப்படி செய்யச் சொல்லித் தாங்கள் மறைமுகமாகக் கூறுவது போல் நினைத்து விடுவார்களோ என்ற சங்கடமும் இருந்தது. தான்.ஆனால் தற்போது அப்படி கொண்டு வந்ததே சரி என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது அங்குத் தன் மருமகளின் நிலை.

அதுவும் மகனே ஸ்பெஷல் ஆக மருமகளுக்கு எனத் தங்க பிரேஸ்லெட்டை கொடுத்து விட்டதும் அவளை அனைவரும் முன்பும் பிரத்தியேகமாகவும் முக்கியமானவளாகவும் காட்டும் என நினைத்து எல்லையில்லா ஆனந்தமும் கொண்டார் அனுபமா.

தன் போல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தவர் பின்பே தன் கணவரின் சிரிப்புச் சத்தம் கேட்டுச் சுற்றம் உணர்ந்து பார்க்க. ரகுபதியுடன் ஏதோ ஜோக் அடித்துச் சிரித்துக் கொண்டிருந்தார் பிரபு.
அதற்குள் வந்தவர்களுக்குக் கேசரியும் முந்திரி பக்கோடாவையும் தட்டில் வைத்துக் கொண்டு வந்து உபசரித்தாள் வசுமதி. அவள் அருகில் தண்ணீர் நிறைந்த ஜக்கையும் எடுத்துக்கொண்டு வந்த வசந்தியை பார்த்த அனுபமா

“நீ தான் மூணாவது பெண்ணாம்மா. என்ன படிக்கிற.?” எனச் சகஜமாக அவளிடம் பேசத் துவங்க. அதற்குப் பதில் கூறிக் கொண்டிருந்தாள் அவளும். அனைவருக்கும் சிற்றுண்டியை வழங்கிய வசுமதி. பின், தன் தங்கை வசந்தியின் அருகில் நின்று கொண்டு தன்னையும் தன் தங்கையையும் அருகருகே  பார்க்கும் அனுபமாவிற்கு  தங்கள் மூவருக்கும் இடையில் இருக்கும் நிற வேறுபாடு கட்டாயம் தெரியும். அதில் அவரின் முகம் வாடும். என ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் வசுமதி. ஆனால் பாவம் அவளின் எண்ணம் தான் நிறைவேறாமல் போனது. சிரித்த முகத்துடன் வசந்தி கூறுவதைக் கேட்டுக் கொண்டே தன் அருகில் அமர்ந்திருந்த மருமகளுக்கு,  சிறிது கேசரியை எடுத்து ஊட்டி விட்டார் பேச்சோடு பேச்சாக.

அதில் வியந்து பார்த்தது அவள் மட்டுமல்ல சுற்றி இருந்த மற்றவர்களும் தான். அதைச் சிறிதும் கண்டு கொள்ளாமல் அவரும் சிறிது கேசரியை எடுத்த வாயில் போட்டவர் அதன் சுவையில் மெய் மறந்து,
“ரொம்ப நல்லா இருக்கு கேசரி. பைனாப்பிள் எல்லாம் குட்டி குட்டியா வெட்டிப் போட்டு இருக்கீங்களா.? யார் செய்தது.? செய்த கைக்குத் தங்க காப்பு தான் போடணும்.” என்று புகழாரம் சூடியபடி கேள்வி எழுப்ப. அனுபமாவின் கேள்விக்கு உடனே,

“நான் தான் செய்தேன். இந்தப் பக்குவம் எல்லாம் உங்க மருமகளுக்கு வராது. அது மட்டுமா அவ்வளவா சமையல் கூடச் செய்யத் தெரியாது அவளுக்கு.” என்று கோகிலா கூற. அதில் அவரை அதிர்ந்து பார்த்தது வசுந்தரா மட்டுமல்ல அவளின் தந்தையும், தமக்கையின் கணவனும் தான். ஏனென்றால் இவர்கள் வருவதற்கு சிறிது நேரம் முன்புதான் அனைத்தையும் செய்து முடித்து, மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் வருவதற்குள் தயாராகும்படி  தந்தை கண்டித்த பிறகே சமையலறையிலிருந்து வெளியேறி இருந்தாள்  வசுந்தரா.

இதை இப்படியே விடக் கூடாது என்று முடிவெடுத்த  ரகுபதி,
“உனக்கென்ன சமீபமா திடீர், திடீர்னு மறக்குற வியாதி வந்திருச்சா என்ன.? இவ்வளவையும் செய்து வைத்துவிட்டு தானே கிளம்பவே போனா வசுந்தரா. நீ என்னமோ அவ்வளவும் நீ தான் செஞ்ச மாதிரி பேசுற. நீ சமையல் கட்டுக்குள்ள போய் எத்தனை வருஷம் ஆகுது ஞாபகம் இருக்கா.? அவளுக்குச் சமையல் தெரியாதுன்னு வேற சொல்ற. இந்த வீட்ல அவ இல்லனா சாப்பிடறதுக்கு யாருக்குமே சாப்பாடு இருக்காது.” என்று கோபத்துடன் சத்தமிட்டவரை பார்த்த கோகிலாவிற்கு சொல்லென்னா கோபம் எழுந்தது. வந்திருப்பவர்கள் முன்பு தன்னை விட்டுக் கொடுக்கும் படி எதுவும் கணவர் கூற மாட்டார் என்று தைரியத்திலேயே அனைத்தையும் அவர் செய்ததாகப் பெருமை கூற ஆனால் கணவரோ அனைத்து உண்மைகளையும் கூறி அவர் மூக்கை உடைத்து விட்டார்.

நிலைமையைச் சகஜமாக்கும் பொருட்டு
“விடுங்க சம்பந்தி. சில பேருக்கு வயசானா இந்த மாதிரி மறதி நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கு. அதற்குச் செலக்டிவ் அம்னீசியா என்று பெயர். எல்லாமே மறக்காது சிலது மட்டும் மறந்து போயிடும். அப்படியான ஒரு வியாதி சம்மந்தி அம்மாவிற்கு வந்திருக்கும்னு நினைக்கிறேன். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. அவங்கள நம்ம கிளீனிங் கூட்டிட்டு வாங்க. ஒரு ஃபுல் செக்கப் எடுத்துட்டு ஊசி, மருந்து மாத்திரையில் சரி பண்ணிடலாம்.” என்று பிரபு கூற.

சிறுவயதிலிருந்து ஊசி என்றால் பயப்படும் அந்தப் பெரிய மனுஷிக்கு எங்குக் கையோடு தன்னை கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்து விடுவார்களோ என்ற பயத்தில்,
“இல்லை, இல்லை நான் நல்லா தான் இருக்கேன். சில நேரம் எனக்கே தெரியாம ஒன்னு ரெண்டு விஷயம் மறந்திடும் அவ்வளவுதான். வேற ஒன்னும் இல்ல. நீங்கச் சாப்பிடுங்க. எல்லாம் அப்படி அப்படியே இருக்கே. இன்னும் கொஞ்சம் கேசரி வைக்கட்டுமா நல்லா இருக்குன்னு சொன்னீங்களே.?” என்று அவர்களை உபசரிக்கும் நோக்கில் அவர்களை வெற்றிகரமாகத் திசை திருப்பினார்.

தந்தை இப்படி புதிதாக வந்தவர்கள் முன்பு அன்னையை விட்டுக் கொடுத்ததில் கோபமாக அவரையும் வசுந்தராவையும் முறைத்துக் கொண்டிருந்தார்கள் வசந்தியும், வசுமதியும்.

முறைக்கும் மகள்களையும், சமாளிக்கும் மனைவியையும் பார்த்தவருக்கு
“சீய் என்ன பெண்கள் இவர்கள்.?”என்ற எண்ணம் தான். எப்படியேனும்  தன் மகளுக்கு இந்தச் சம்பந்தத்தை முடித்து நல்லபடியாக அவளைத் திருமணம் முடித்துக் கணவன் வீட்டிற்கு அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணம் தான். மனம் முழுவதும் வியாபித்திருந்தது.

நல்ல மனிதர்கள் கையில் தன் மகள் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்ற நிலை மனதில் உறுதியானது. பெருமூச்சுடன்  உண்டு கொண்டிருந்தவர்களின் மேல் கவனத்தை திருப்பினார். உண்டு முடித்தவர்களுக்கு சூடான காபியும் வழங்கப்பட அதையும் குடித்து முடித்தவர்கள் அடுத்து பேசும் பொருட்டு.

ரகுபதியை பார்த்த பிரபு,
“இங்க பாருங்க ரகு. நாங்க பொண்ண பார்த்து உறுதி செய்யும் நோக்கத்தோடு தான் வந்தோம். அதனால உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே.” என்று கேட்டபடி பிரபு எழுந்து நிற்க. அவருடனே எழுந்து நின்ற ரகுபதி மறுப்பதற்குள்ளாக
“அது எப்படி.? நாங்க இன்னும் மாப்பிள்ளையைப் பாக்கலையே. அதற்குள்ள நீங்க எப்படி உறுதி செய்வீங்க.? மாப்பிள்ளை எப்படி இருப்பாரோ.?” என்று முகத்தை அஷ்ட கோணலாக்கியபடி கேட்ட வசுமதியை பார்த்தப் பிரபுவிற்கும், அனுபமாவிற்கும் தங்கள் மகனின் தோற்றத்தைப் பற்றி அவள் கூறிய விதம் கோபத்தை ஏற்படுத்தினாலும் அதைக் கட்டுப்படுத்திக் கொண்ட பிரபு.

“அதற்கு என்னமா.? இன்னும் ரெண்டு நாள்ல நீங்க எங்க வீட்டுக்கு வாங்க. வந்து மாப்பிள்ளையை நேரிலேயே பாருங்க. அவன் எப்படி இருக்கான்னு அப்போ உங்களுக்குத் தெரியும்.” என்று சற்று குட்டு வைத்தே பேசினார். வசுமதி கூறியதில் நியாயம் இருப்பதாக நினைத்த அவளின் கணவனும்.

“சரி தாங்க. ஆனா நாங்க எல்லோரும் மாப்பிள்ளையைப் பார்த்தபிறகு நாம் உறுதி செய்துக்கலாம் இல்ல.” என்று தன்மையாகவே கேட்க. அவன் கேள்வியில் தவறு இருப்பதாகத் தோன்றாதால் அவனிடம் நல்ல மாதிரியாகவே பதில் கூறினார் பிரபுவும்.
“நீங்கச் சொல்றதும் சரிதான் தம்பி. ஆனா பெண்ணோட அப்பா  ஏற்கனவே மாப்பிள்ளையைப் பார்த்துச் சம்மதம் கூறிட்டாரே.” என்று  ரகுபதியை பார்த்தபடி கூற.

“ஆமாம் மாப்பிள்ளை. நான் ஏற்கனவே சஞ்சய் தம்பியைப் போட்டோல பாத்துட்டேன். எனக்கு முழு திருப்தி. அதுக்கப்புறம் தான் இவங்களை வீட்டுக்கே வரச் சொன்னேன். அதனால இப்போ சின்னதா உறுதி செய்து கொள்ளலாம்.” என்று கூறி விட அதற்கு மேல் தாமதிக்காமல் தன் காரை நோக்கிச் சென்றார் பிரபு.

அவர் கோபித்துக் கொண்டு செல்வதாக நினைத்த ரகுபதியும் வசுமதியின் கணவனும் அவரின் பின்னோடு எழுந்து செல்லக் காரில் இருந்த சீர் கூடைகளை அவர் எடுப்பதை பார்த்துவிட்டு அவருக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் அவர் அருகில் வந்து அவர்களும் ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டார்கள். கொண்டு வந்தவைகளை வரவேற்பறையின் நடுவில் வைத்து விட்டு மறுபடியும் அவர்கள் வெளியில் செல்ல. அவர்கள் வைத்து விட்டுச் சென்றதை விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பெண்கள் மூவரும்.

வெளியே சென்றவர்கள் மேலும் சில கூடைகளுடன் வர அந்த வரவேற்பரையே நிறைந்து விட்டது. மொத்தம் எட்டு கூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றில் மாதுளை, ஒன்றில் ஆப்பிள், ஒன்றில் ஆரஞ்சு. இரண்டு கூடைகளில் ஸ்ரீ மிட்டாய் இனிப்பு வகைகள். ஒன்றில் தேங்காயும், ஒன்றில் வாழைப்பழமும் மற்றொன்றில் வெற்றிலை பாக்கும் இடம் பெற்றிருந்தது. அனுபமாவின் அருகில் ஒரு கூடை முழுவதும் மல்லிகை பூப்பந்தாக இருந்தது. அதனை ஒட்டி இருந்த  நகை பெட்டி யார் கண்ணுக்கும் படாமல் போனது. அனைத்தும் சேர்த்து மொத்தமாக ஒன்பது கூடைகள் இருந்தன அனுபமாவின் விருப்பப்படி.

தன் அருகில் அமர்ந்திருந்த வசுந்தராவை பூவை வைப்பதற்கு ஏதுவாகத் திருப்பி அமர வைத்தவள் பின்பே அவளின் தலைமுடியை பார்த்தாள்.
“வாவ்.! எவ்வளவு அழகான நீளமான முடி.” என்று வியந்தவள்.
“அதற்கு ஏற்றார் போலத் தான் உங்க மாமனார் பெரிய பந்து பூவா வாங்கிட்டு வந்து இருக்காரு.” என்று சிரிப்புடன் கூறியவர். மேலும்,
“என் பையன் இந்தப் பெரிய முடியைப் பார்த்தா இன்னும் மயங்கிடுவான்.” என்று கூறியபடி பந்தாக இருந்த பூவில் பாதியை அவள் தலையில் கொண்டு வந்திருந்த பூப்பின்னை கொண்டு அழகாக இரண்டு பக்கமும் மூன்று மூன்றாக வரும்படி நீளமாக வைத்து அழகு பார்த்தார்.

“அதே தான் ஆன்ட்டி நாங்களும் சொல்றோம். இவகிட்ட வேற என்ன இருக்கு.? இந்தப் பெரிய முடியைத் தவிர. இத பார்த்துத் தான் உங்க பையனும் இவளைத் திருமணம் முடிக்கணும்னு சொல்லி இருப்பாரு. இது தவிர அவகிட்ட மயங்கறதுக்கு வேற என்ன இருக்கு.?” என்று அலட்சியமும் நக்கலும் நிறைந்த குரலில் கூறிய வசுமதியையை பார்த்தவருக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.

அதுவரை அவர் கூறியவற்றிற்கு லேசான வெட்கம் கலந்த சிரிப்புடன் அமர்ந்திருந்த வசுந்தராவின்  சிரித்த முகம் துடைத்தது போலச் சிரிப்பு மறைந்து காணப்பட்டது. அதில் கோபத்தை அடக்கியவராக,
“உனக்கு எதுக்குமா அதைப் பற்றிய கவலை.? என் பையன நேர்ல பாப்ப இல்லையா அப்ப நீயே கேட்டுத் தெரிஞ்சுக்கோ. எதைப் பார்த்துக் கட்டினால் உன் தங்கையைத் தான் கட்டுவேன்னு அவன் சொன்னான் என்று.” என அவளுக்குப் பதிலடி கொடுத்தவர்.

“எதைக் கண்டு மயங்கினானோ.? பெண் பார்க்கப் போகும்போதே உறுதி செய்து. என் சார்பாக இந்தப் பிரேஸ்லெட்டையும் அவ கையில போட்டு  விட்டுட்டு வந்துடுங்கன்னு சொல்லி அவனே போய் அவனுக்கு வரவிருக்கும் மனைவிக்காக ஸ்பெஷலா தேடிப் பிடிச்சு வாங்கிட்டு வந்த பிரேஸ்லெட்.”என்றபடி அவளின் வலது கையைத் தன் புறமாக இழுத்து, அவள் கைகளில் மாட்டிவிட்டு அழகு பார்த்தவர். அதை ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பின்பு அவளை நிற்க வைத்து முழுவதுமாக ஒன்றிரண்டு புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்
“என் மகன் கிட்ட காட்ட.” என்று கண் சிமிட்டி கூறியபடி.

அதுவரை கொண்டு வந்து வைத்திருந்த அழகான மரத்திலான கூடைகளையும் அதற்குள் அடைத்துக் கொண்டிருந்த பழ வகைகளையும், உயர்தர இனிப்பு வகைகளையும் பார்த்து வியந்து கொண்டிருந்தார்கள். தற்போது, எப்படியும் இரண்டு பவுனுக்கு குறையாமல் இருந்த பிரேஸ்லெட்டை பார்த்தவர்களுக்கு திறந்த வாயை மூட வேண்டும் என்ற சொரணை இல்லாமல் பார்த்தது பார்த்தபடி நின்று இருந்தார்கள்.

வசுந்தராவிற்குமே தன் கையில் அழகுடன் இடம்பெற்றிருந்த நகையைப் பார்த்து வியப்புத் தான். ஆனாலும் தனக்காக அவன் வாங்கிய முதல் பரிசு என்ற நினைவு மனதை மகிழ்ச்சி கடலில்  ஆழ்த்தியிருந்தது. தன்னையும் விரும்பும் ஓர் இதயம் என்ற நினைவே அவளுக்குப் பேர் உவகையை கொடுத்து மட்டற்ற மகிழ்ச்சியில்  தள்ளியது.

சஞ்சய் கொடுத்த பிரேஸ்லெட்டை வசுந்தராவின் கையில் அணிவித்து அழகு பார்த்த அனுபமா,
“ரொம்ப அழகா இருக்குமா. உனக்குப் பிடிச்சிருக்கா.?” எனக் கேட்க
“ரொம்ப, ரொம்ப பிடிச்சிருக்கு அத்தை.”  என்றாள் அவளும்.
அவளின் அத்தை என்ற அழைப்பிலேயே மகிழ்ந்தவர் மகன் முதல் முதலாகப் பரிசளித்த ஒன்று அவளுக்கும் பிடித்ததில் மிகுந்த மன நிறைவு.
“நான் சஞ்சய் கிட்ட சொல்றேன்.” என்று கூறியபடி கண் சிமிட்டியவரை பார்த்தவளுக்கு வெட்க புன்னகை அரும்ப, தலை தாழ்த்திக் கொண்டாள்.
அனைவரிடமும் விடை பெற்று கிளம்பினார்கள் பிரபுவும் அனுபமாவும்.
“சரி ரகு,  நாங்க கிளம்புறோம்? நீங்க எப்ப மாப்பிள்ளை பார்க்க வரீங்கன்னு சொல்லுங்க. ஆனா அது ஞாயிற்றுக்கிழமையா இருந்தா எல்லாருக்குமே வசதியா இருக்கும். அதை மட்டும் கொஞ்சம் பார்த்துக்கோங்க.”என்று கூற “கட்டாயமா ஞாயிற்றுக்கிழமையிலேயே வருகிறோம். அதுதான் எல்லாருக்குமே வசதி.” என்று மாமனார் பதில் கூறுவதற்கு முன்பாகவே தன் கருத்தைக் கூறினான் வசுமதியின் கணவன்.

வந்தவர்கள் கிளம்பி சென்றதும் வீட்டில் பெரும் பிரளயமே வெடிக்க தயாராக இருந்தது. இருக்கும் இதமான மனநிலையை கெடுத்துக் கொள்ள விரும்பாத வசுந்தரா. உடை மாற்றப் போவது போலத் தன் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

“கொஞ்சமாவது அறிவு இருக்கா உங்களுக்கு.?நான் தான் எல்லாம் சமைச்சேன்னு  அவங்க கிட்ட சொல்லிட்டு இருக்கேன். நீங்கப் பாட்டுக்கு எனக்கு மறதி நோய் வந்துவிட்டதா என்று கேட்டு என்னை அசிங்கப்படுத்தியதும் இல்லாமல், என் மேல பழி போட்டு என்னை மூளைல உட்கார வைக்கப் பாக்குறீங்களா.? வீட்டுக்குப் பெரிய மனுஷியா நான் ஒருத்தி இருக்கும்போது வேலை எல்லாம் நான் தான் செய்தேன் அப்படின்னு நான் சொல்லிக்கறதுல்ல என்ன தப்பு இருக்கு.? அவங்க பெருமையா என்னைப் பார்க்கிறதில் நீங்க என்ன குறைஞ்சு போயிடுவீங்க.?” என்று ஆங்காரமாகச் சத்தமிட.

“நீங்கச் செஞ்சது ரொம்ப தப்பு பா. என்னதான் இருந்தாலும் புதுசா வந்தவங்க முன்னாடி அம்மாவை நீங்க அப்படி விட்டுக் கொடுத்துப் பேசியிருக்கக் கூடாது. அவங்க தான் எல்லாம் செஞ்சாங்கன்னு சொல்றதுல இப்ப என்ன ஆகிடும்.?”என்று பெரிய மகளும் தன் அன்னைக்காக நியாயம் கேட்க. அவர்களின் அருகிலேயே நின்று கொண்டு இவர்கள் கேட்கும் கேள்விதான் தனதும் என்ற நிலைப்பாட்டில் நின்றுகொண்டிருந்தாள் வசந்தியும்.

மாமியார் ஆங்காரமாகச் சத்தமிடும் போதே இதற்கு மேல் இங்கு இருந்தால் தன் தலையும் உருளும் என நினைத்தவனாக வெளியேறிச் சென்றிருந்தான் வசுமதியின் கணவன்.

மகளின் கேள்வியில் அவளைத் திரும்பிப் பார்த்து ரகுபதி
“அதுமட்டுமா உங்க அம்மா சொன்னா. வசுந்தராவுக்கு சமையலே தெரியாதுன்னு சொன்னா. அவ ஒருத்தி இந்த வீட்ல இல்லனா குப்பை மேடா தான் இருக்கும் இந்த வீடு. சாப்பிடறதுக்கும் ஒன்னு இல்லாம உக்காந்திருக்கணும்.”

“ஏன் பா நான் எல்லாம் எதுவும் செய்ய மாட்டேனா.?” என்று ஆதங்கமாகக் கேட்ட வசந்தியையை பார்த்தவர். “இதுவரைக்கும் நீ எதுவுமே செய்ததில்லையே மா. ஏதாவது வேலை செய்திருந்தால் தானே எனக்கும் தெரியும். குடிச்ச காஃபி டம்ளரை கொண்டு போய்க் கழுவ கூடப் போட மாட்டேங்கிறீங்க. அதை எடுத்துப் போடறதுக்கும் அவதான் வர வேண்டி இருக்கு. இதுல நீங்க வேலை செஞ்சு கிழிப்பீங்க…” என்றார் கோபத்தை அடக்கிய குரலில்.

“அவள் இருக்கான்னு தான் நான் எதுவும் செய்றதில்லை. அவ கல்யாணம் ஆகி போயிட்டா நானும் பொறுப்பா எல்லாம் செய்யத் தான் செய்வேன்.” என்றாள் தன்னை விட்டுக்கொடுக்காமல்.
“அதுக்கு ஏன்மா கல்யாணம் ஆகி போறவரை காத்திருக்கணும்.? இப்பவே நீயும் செய்ய ஆரம்பி. அவ கிட்ட கேட்டுக் கத்துக்கோ..”

“நான் ஏன் அவ கிட்ட கத்துக்கணும்..? யூட்யூப் பை போட்டா ஆயிரம் ரெசிபி வந்து கொட்டும்..” என்றாள் சிடுசிடுப்புடன்.
“ஆயிரம் ரெசிபி வரும். ஆனால் அதில் எதிலும் கைமணம் இருக்காது. நம்ம குடும்பத்து பாரம்பரியமும் இருக்காது.. எங்க அம்மா அவளுக்கு சொல்லிக் கொடுத்த உணவில் இருக்கும் மருத்துவ நலன்களும் தெரியாது. ஹ்ம்ம்..! உங்க கிட்ட எல்லாம் பேசுறது வேஸ்ட்..என்று தெரிந்தும் கூட பேசிட்டு இருக்கேன் பாத்தியா என்ன சொல்லணும்..”என்றபடி வெளியே செல்ல முயன்றவரின் முன் வந்து நின்றார் கோகிலா. ஏற்கனவே கோபம் அடங்காமல் நின்றிருந்தவர் தன் செல்ல மகளையும் கணவர் பேசுவதை பார்த்து கொண்டிருந்தவர் அதற்கு மேல் பொறுக்க முடியாமல்,

“என்னை அசிங்கப்படுத்தினதும் இல்லாம. பொறுப்பா இருப்பேன்னு சொல்ற மகளையும் எடுத்தெறிஞ்சு  பேசிட்டு போறீங்க. என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல..?” என்று கேட்டபடி அவரின் சட்டை காலரை பிடித்து அதீத கோபத்தில் உலுக்க. அதற்கு மேல் பொறுமையை கடைப்பிடிக்க முடியாத ரகு, இழுத்து ஒரு அறை விட்டிருந்தார். அதில் சுழன்று சென்று சோபாவில் தொப் என்று அமர்ந்த கோகிலாவிற்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. எவ்வளவு பேசினாலும் இதுவரை கை நீட்டாத கணவர் அடித்ததில் அதிர்ச்சியோடு அடி வாங்கிய கன்னத்தில் ஒரு கையை கொண்டு பொத்தியவாறு ஏறிட்டு பார்க்க. வேகமாக அவரின் முன் வந்து நின்றவர்,

“இதுவரைக்கும் நீங்க செய்தது எல்லாத்தையும் நான் பொறுத்துக்கிட்டு இருந்தேன். இப்போதான் அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து வந்திருக்கு. அதை கெடுக்கிற மாதிரி யாராவது ஏதாவது செஞ்சீங்க. தொலைச்சு கட்டிடுவேன்..” என்றவாறு மூவரையும் கோப பார்வை பார்த்துவிட்டு வேகமாக வெளியேறி சென்றார்.

தாயின் அருகில் வந்து பக்கத்திற்கு ஒருவராக அமைதியாக அமர்ந்து கொண்டார்கள் வசந்தியும் வசுமதியும். தந்தையின் கோப முகத்தில் அவர்களுமே சற்று பயந்து தான் அமர்ந்திருந்தார்கள். இதுவரை தந்தையிடமிருந்து இப்படியான ஒரு எதிர் வினையை  பார்த்ததில்லை அவர்கள்.
தீவிர யோசனையில் அமர்ந்திருந்த கோகிலாவும் கணவனின் அதீத கோபத்தை நினைத்து அப்படித்தான் அமர்ந்திருந்தார். வசுந்தராவின் திருமணம் ரகுபதிக்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரிந்திருந்தது.

என்னதான் மாமியாரின் ஜாடையில் அவள் இருந்தாலும், அவர் பத்து மாதம் சுமந்து பெற்ற அவரின் மகள் தான். அவள்மீது சில வேண்டாத வெறுப்புக்கள் இருந்தாலும், திருமணம் முடித்து நன்றாக அவள் வாழ வேண்டும் என்ற தாய்மைக்கே உண்டான நினைப்பு அவருக்கும் இருந்தது.

எந்த வகையிலும் அவள் திருமணத்தைத் தடுத்து நிறுத்தாமல் நல்லபடியாகத் திருமணம் முடித்து அவளின் கணவன் வீட்டிற்கு சென்று வாழட்டும் என்ற முடிவெடுத்தவராகப் பெருமூச்சுடன் எழுந்து அறைக்குள் செல்ல அவரைப் பின்பற்றிச் சென்றார்கள் அவரின் இரு மகள்களும். வெளியே தாய்க்கும் தந்தைக்கும் இடையில் நடந்த சண்டை எதுவும் தெரியாமல் அறைக்குள் இருந்த வசுந்தரா இலகுவான உடைக்கு மாறித் தலையில் அதிகமாக இருந்த பூவை அகற்றலாமா.? வேண்டாமா.? என்று யோசனையில் அமர்ந்திருந்தவள் தன் கையில் புதிதாக இடம் பெற்றிருந்த பிரேஸ்லெட்டை மெதுவாகத் தடவி பார்த்தவளுக்கு புன்னகை மனமெங்கும் வியாபித்திருந்தது.

அன்று இவளைப் பார்த்து அவன் செய்கையில் பேசியதே நினைவடுக்கில் வளம் வந்து அவளின் புன்னகையை வாடாமல் வைத்திருந்தது. அவனை ஒரு முறை மட்டுமே பார்த்திருந்தாலும் அவன் முகமும் செயலும் மனதில் பசு மரத்து ஆணிபோல் பதிந்திருந்தது.

மகிழ்வான நினைவுகளுடன்  லயித்து இருந்தவளை கலைப்பதற்கு என்றே அறையனுள்  வந்தார்கள் தாயும், சகோதரிகளும். உள்ளே வந்ததும் இவளின் அருகில் வேகமாக வந்த வசந்தி,
“ஹேய்.! அவங்க போட்ட பிரேஸ்லெட்ட காமி.” எனக் கேட்கத் தன் கைகளை உயர்த்தி அவள் முன் நீட்டினாள் வசுந்தரா.
“ஓஹோ.! இப்படியே தான் பார்க்கணுமா.? கழட்டி கொடுக்க மாட்டியா.?”என்றபடி தன் முன் நீண்டிருந்த கையிலிருந்து பிரேஸ்லெட்டை கழட்டியவள். அதை முன்னும், பின்னும் திருப்பிப் பார்த்தவன் பிறகு தன் கைகளில் அணிந்து கொண்டு அழகு பார்த்தபடி,
“அம்மா ரொம்ப அழகா இருக்குல்ல எனக்கு. என்ற படியே தன் கைகளை இங்கும் அங்கும் திருப்பி அழகு பார்த்துக்கொண்டிருந்தாள்.

தனக்காகத் தன்னவன் வாங்கி கொடுத்த முதல் பரிசைத் தங்கை தன்னிடம் ஒரு வார்த்தையும் கேட்காமல் அணிந்து கொண்டது ஏனோ மனதை வருந்தச் செய்தது.
‘அது என்னுடையது தா.’ வென்று உரிமையாகக் கேட்கவும் முடியவில்லை அவளால். அன்னையாவது அவளைக் கண்டிப்பாரா என அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்க. இவளையே ஆராய்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார் அவர். இது எப்போதும் நடப்பது தான் இவளுக்கென்று எதுவுமே இருந்தது இல்லை. வருடத்திற்கு ஒரு முறை கிடைக்கும் உடையைக் கூட ஓரிரு முறை அணிந்து விட்டே கொடுப்பார்கள் தமக்கையும், தங்கையும். மூவரும் உடல்வாகில் ஒரே அளவில் தான் இருந்தார்கள் தற்போது திருமணத்திற்கு பிறகு சற்று ஒரு சுற்று அதிகமாகி இருந்தாள் வசுமதி.

இப்படி தங்கை தன் கையில் இருப்பதை கழட்டி அவள் அணிந்து கொள்ள, அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் அமைதியாக இருந்த அன்னையை பார்த்த வசுந்தராவிற்கு பெருமூச்சு மட்டும்தான். அதற்கு மேல் அங்கே நின்று அவர்கள் பேசுவதை கேட்க விருப்பம் இல்லாமல் சமையலறை சென்று அடைந்து கொண்டாள் வேலைகளில் தன்னை உட்படுத்தி மனதை அரிக்கும் உணர்வுகளிலிருந்து வெளிப்பட, ஆனால் காயம்பட்ட புண் தண்ணீர் பட்டு எறிவது போல மனதிற்குள் தங்கை தன் கைகளிலிருந்து கழட்டிய தன்னவனின் பரிசை நினைத்து ஊமையாக அழுது கொண்டே இருந்தது. அதைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் தான் அங்கு யாரும் இல்லை.

முகம் கொள்ளா புன்னகையுடன் வீட்டிற்குள் நுழைந்த பெற்றோரைப் பார்த்த சஞ்சய்,
“என்னம்மா போன விஷயம் எல்லாம் சிறப்பா நடந்ததா.? என்று கேள்வி கேட்க
“ஓஹ்.! பேஷ், பேஷ்  எல்லாம் சிறப்பு.”என்றார் அவரும் புன்னகை வாடா முகத்துடன்.
சோபாவில் வந்து அமர்ந்த பெற்றோர்களுக்குத் தண்ணீரைக் கொண்டு வந்து அவன் கொடுக்க, வாங்கி அருந்திவிட்டு,

” அப்புறம் சஞ்சய். அவங்க எல்லாம் உன்னைப் பார்க்கணும்னு கேட்டாங்க. இன்னைக்கு ஏன் கூட்டிட்டு வரலன்னு அவ்ளோ கேள்வி.? அனேகமா வர ஞாயிற்றுக்கிழமை உன்னைப் பார்க்க வருவாங்கன்னு நினைக்கிறேன்.” என்ற அன்னையை பார்த்தவன்
“ஓகே. வரட்டும்.” என்றான் லேசாகத் தோள்களை ஏற்றி இறக்கி.
“அன்னைக்கு எந்தக் கமிட்மெண்டும் வச்சுக்காத. வீட்ல இரு.” என்ற தந்தையை பார்த்துச் சம்மதமாகத் தலையசைத்தவன் வேறு எதுவும் அங்கு நடந்த நிகழ்வுகளை அன்னை கூறுவாரா.? என அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவர் அருகில் சென்று அமர்ந்தான்.

மகன் வந்து தன் அருகில் அமர்ந்ததும் அவனிடம் பகிர்ந்து கொள்ள ஏராளமான விஷயங்கள் இருந்தது அந்தத் தாய்க்கு. ஆனால் அவனே தன்னிடம் கேட்க வேண்டும் என நினைத்தவர் அவனாகக் கேட்கும் வரைக்கும் தானாக எதுவும் சொல்லக் கூடாது என்ற நினைவில் அமைதியை கடைபிடித்தார் குறும்பு புன்னகையுடன்.

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்