
இதயம் -24
“அப்படியா? கற்புன்னா என்ன சம்யூ?” ஷியாம் எதிர் கேள்வி கேட்பான் என அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
“ம்ப்ச், விதண்டாவாதம் பேசாதீங்க ஷியாம்!” பொறுமையில்லா குரல் அவளின் தற்போதைய மனநிலையைச் சொல்லாமல் சொன்னது.
“விதண்டாவாதம் பேசலை சம்யூ! தெரிஞ்சுக்கறதுக்காகத்தான் கேட்கிறேன். கற்புங்கிறது என்ன? பெண்ணின் கற்பு உடல் சார்ந்து நிர்ணயிக்கப்படுதுன்னா, ஆணின் கற்பு எதைச் சார்ந்து நிர்ணயிக்கப்படுது? ஆணுக்கு கற்பே இல்லையா? அப்போ ஓர் ஆண் கற்பு நெறிக்குள்ளே அடங்க மாட்டானா? அப்போ ஒருத்தனுக்கு ஒருத்திங்கிற பண்பாடு எதுக்கு?”
“நீங்க கேட்கிற எந்த கேள்விக்கும் பதில் என்கிட்டே இல்லை ஷியாம்! ஆனால் எதோ தப்பு பண்ணிட்டோம்ங்கிற குற்றவுணர்வு எனக்குள்ளே இருக்கு. நான் அவனை நம்பினேன் ஷியாம். என் உயிருக்கும் மேலாக அவனை நம்பினேன். நம்ப வச்சு கழுத்தறுத்துட்டான் துரோகி.!”
“நீ பண்ணின தப்பு என்ன தெரியுமா? உன் காதலுக்கு தகுதியில்லாத ஒருத்தனை நம்பினது தான் நீ செஞ்ச தப்பு. ஆனாலும், இத்தனை தூரம் அவனால் வேதனைப்பட்டாலும், அவனை எதிர்த்து ரெஜிஸ்டர் ஆஃபிஸில் வச்சு கேட்டியே கேள்வி, உண்மையிலேயே நீ தைரியமான பொண்ணு தான்.!”
“அந்த தைரியமெல்லாம் ஆதன் கொடுத்தது ஷியாம்.! யாரை எனக்கு பிடிக்காதுன்னு நினைச்சேனோ? யாரை எனக்கு எதிரின்னு நினைச்சேனோ, என் அப்பாவைப் பகைச்சுக்கிட்டவன்னு கோபப்பட்டு முகம் திருப்பினேனோ அவன் கொடுத்த தைரியம். என் அண்ணன் கொடுத்த தைரியத்தில் தான், ஓரளவிற்காவது மீண்டு வந்திருக்கிறேன். இல்லைன்னா என்ன ஆகிருப்பேனோ தெரியாது.!”
“சொல்லிக் கொடுத்தெல்லாம் தைரியம் வராது சம்யூ! உன் மனசுக்குள்ளே இருந்த தைரியம் ஆதனால் வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கு. நீ தைரியமே இல்லாதவள்ன்னு சொல்றதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்.” அவள் இயல்பிலேயே தைரியமானவள் தான், எல்லா சூழலையும் சமாளிக்கத் தெரிந்தவள் தான், என அவளுக்குள் நம்பிக்கையை விதைக்க முயன்றான் ஷியாம்.
“என்ன வேணும்ன்னாலும் இருக்கட்டுமே, ஆனால் நான் ஆகாஷை நம்பி ஏமாந்தது ஏமாந்தது தானே? அது வாழ்க்கை முழுசும் என் மனசுக்குள்ளே உறுத்திட்டு தானே இருக்கும்? வேண்டாம் ஷியாம்! என்னை மாதிரி ஒருத்தி உனக்கு வேணாம். நீ நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ!”
“போங்க வாங்கன்னு கூப்பிட்டது போ, வான்னு மாறிடுச்சே, இதற்கு பிறகும் நான் ஏன் வேற பொண்ணைத் தேடிப் போகணும்? தேவையில்லாமல் முட்டாள்தனமாய் பேசாதே சம்யூ. ஆணுக்கும் பொண்ணுக்கும் கற்பை பொதுவில் வைக்கணும்ன்னு பாரதியார் சொன்னார். இப்போ பொதுவில் இருக்கா? பொதுவில் இல்லாத கண்ணுக்குத் தெரியாத ஒரு விஷயத்திற்காக உன் வாழ்க்கையை நீயே பாழ் பண்ணிக்காதே சம்யூ!”
“இதயம், மூளைன்னு நம்ம உடம்புக்குள்ளே இருக்கிறதும் தான் கண்ணுக்குத் தெரியறதில்லை. அதுக்காக அது இல்லைன்னு ஆகிடுமா? நம்ம உடம்புக்குள்ளே இருக்கிற உறுப்புகள் கண்ணுக்கு தெரியாவிட்டாலும் அது இருக்குன்னு நம்புறோமோ, அதே போல் கற்பும் கண்ணுக்குத் தெரியாத விஷயமாய் இருந்தாலும் அதை நம்பித்தான் ஆகணும். இது ஒருவித நம்பிக்கை தான்.!”
“உடலுக்கு உள்ளே இருக்கிற உறுப்புகளை ஸ்கேன் பண்ணியோ, எக்ஸ்-ரே எடுத்தோ பார்க்க முடியும் சம்யூ. எல்லாத்துக்கும் மேலே இதயத் துடிப்பையும், பசியையும், வலியையும் உணர முடியும். ஆனால் கற்பை உன்னால் உணர முடியுமா? உடனே ரெண்டு இண்ச் சதை தான் கற்பை முடிவு பண்ணுதுன்னு முட்டாள் தனமாய் சொல்லிடாதே! அப்போ ஆணோட கற்பை எதை வச்சு முடிவு செய்வே? ஆனால் நீ சொன்னதில் ஒண்ணு உண்மை தான். கற்புன்னா என்ன தெரியுமா? நம்பிக்கை. ஒருத்தர் இன்னொருத்தர் மேலே வச்சிருக்கிற நம்பிக்கை தான் கற்பு. நான் உன்னை முழுசா நம்பறேன். இனிமே முடிவு செய்ய வேண்டியது நீ தான் சம்யூ. நான் உனக்காக காத்திருக்கத் தயார்.!”
“இல்லை நான் என்ன சொல்ல வர்ரேன்னா..!” என எதோ சொல்ல வந்தவளை கை நீட்டி தடுத்து நிறுத்தினான் ஷியாம்.
“அவள் துப்பட்டாவை சரி செய்வது இருக்கட்டும்..
உன் பார்வையை சரி செய்வது யார்?”
“சமீபமா நான் வாசிச்ச கவிதை. இந்த கவிதையில் சொல்ற மாதிரி தான். பார்வைக் கோளாறோட இருக்கிற ஆகாஷ் மாதிரியான ஆட்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை. இதுக்கு முன்னே உன் வாழ்க்கையில் என்ன நடந்துச்சுங்கிறதெல்லாம் எனக்கு தேவையில்லை. நான் உன்னை நம்பறேன். அவ்வளவு தான். முடிவு உன் கையில் தான்.” கைப்பிடித்து அவன் அவள் கரத்தினில் தந்த அழுத்தம் அவளைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது.
“நான்.. நான்.. கொஞ்சம் யோசிக்கணும்! எனக்கு டைம் வேணும்.!” திக்கித் திணறி சொன்னவளைப் புன்னகையுடன் பார்த்தவன்,
“டேக் யுவர் ஓன் டைம் சம்யூ! பட், என்னை ரொம்ப காக்க வச்சிடாதே! நான் ரொம்பப் பாவம்.!” எனச் சொன்னபடியே அதே புன்னகையுடன் கிளம்பியிருந்தான் ஷியாம்.
பிம்பத்தை எதிரொளிக்கும் கண்ணாடியாய் அவன் புன்னகை அவள் முகத்திலும் எதிரொளித்தது.
“கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!”
******
“ஏன்ய்யா! உனக்கெல்லாம் அறிவு இருக்கா இல்லையா? போயும் போயும் நீ பெத்த புள்ளைக்கிட்டே தோத்துப்போய் நிக்கிறியே? உன்னை நம்பினதுக்கு தேரை இழுத்து தெருவில் விட்டுட்டே! அவன் என்ன செய்யறான், ஏது செய்யறான்னு கவனிக்காமல் நீயெல்லாம் என்ன அரசியல்வாதி? முதலில் நீயெல்லாம் என்ன அப்பன்? இன்னும் நாலு நாளுக்குள்ளே உன் மேலே கொடுத்தப் புகார் உண்மை இல்லைன்னு நீ நிரூபிச்சு ஆகணும். கட்சியோட அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தூக்கின பிறகும் கூட, எதிர்க்கட்சி ஆளுங்க, நம்ம கட்சியைப் பத்தி அவதூறு பரப்பிட்டு திரியறாங்க! எல்லாம் உண்ணால் தான்ய்யா!”
“சார்! நம்ம கட்சியோட முத்த தலைவர் நீங்க, நீங்களே இப்படிச் சொன்னால்..? இது நிஜமாவே எதிர்க்கட்சியோட சதி தான்.!”
“வாயை மூடுய்யா! எதாவது அசிங்கமா பேசிடப் போறேன். வருமானத்திற்கு அதிகமா சொத்து சேர்த்திருக்கிறேன்னு அமலாக்கத்துறைக்கு புகார் கொடுத்தது வேணும்ன்னா எதிர்க்கட்சி ஆளாக இருக்கலாம். ஆதாரத்தோட புகார் கொடுக்க வச்சது உன் பையன். இது கூடத் தெரியாமல் நீயெல்லாம் சட்ட அமைச்சர்ன்னு வெளியே சொல்லிடாதே!”
“பேசாமல், அவன் மேலேயும் நாம புகார் கொடுத்துடுவோமா?”
“மண்ணாங்கட்டி! மூளையை சேட்டு கடையில் அடகு வச்சிட்டியாய்யா? உன் பையனெல்லாம் பைசா சுத்தமா கணக்கு வச்சிருக்கான். வருமானத்துக்கு அதிகமா பத்து பைசா கூட அவன் சேர்க்கலை. எல்லாத்துக்கும் மேலே சரியா வருமானவரி கட்டறான். அவன் மேலே கம்ப்ளைண்ட் கொடுத்து மறுபடியும் அசிங்கப்படப் போறியா?”
“இப்போ நான் என்ன பண்ணுறது சார்? தலையே வெடிச்சுடும் போல இருக்கு!”
“வெடிக்கட்டும்ய்யா! தலை வெடிச்சு செத்துப் போ! உன்னை யாருய்யா அந்த பரமேஷ்வருக்கு பினாமியாய் இருக்கச் சொன்னது? அவன் வாங்கின சொத்து முழுசும் உன் பேரில் இருக்கு. அந்தாளு என்னடான்னா, சொத்து சதாசிவம் பேரில் இருக்கு. இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு சொல்லி விலகிட்டான். இப்போ மாட்டிட்டு முழிக்கிறது நீ மட்டும் தான்.!”
ஒருவர் தன்னுடைய பெயரால் சொத்து வாங்குவதையோ, வணிகம் செய்வதை யோ குறைத்துக் கொண்டு, மனைவி, மகள் போன்ற மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லாமல் வேறொருவர் பெயரில் செய்யும்போது அந்த இன்னொரு நபர் பினாமியாகி விடுகிறார். அசையும் பொருளாக இருந்தாலும் சரி, அசையா பொருளாக இருந்தாலும் சரி, இப்படி இன்னொருவர் பெயரில் வாங்கினாலே அது பினாமி எல்லைக்குள் வந்துவிடும்.
அத்துமீறி செயல்படுபவர்களையும், சட்ட விரோதமாக சம்பாதிப்ப வர்களையும் கட்டுப்படுத்தும் விதமாக 1988-ம் ஆண்டு, ‘பினாமி சொத்து தடுப்புச் சட்டம்’ கொண்டு வரப்பட்டது.
அதன் முக்கிய ஷரத்துகள் வருமாறு:
பினாமி சொத்தை வாங்குவதோ விற்பதோ சட்ட விரோதம்.
சொத்து யார் பெயரில் இருக்கிறதோ, யாரிடம் இருக்கிறதோ அவர்தான் உரிமையாளர்.
பினாமி பெயரில் சொத்து பரிமாற்றம் செய்தவர்கள்மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறைத் தண்டனை.
பினாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கு நான்தான் பணம் கொடுத்தேன். எனவே, அது என் சொத்து என உரிமை கோரி கோர்ட்டில் வழக்கு தொடர முடியாது.
பினாமி சொத்து பறிமுதல் செய்யப்படும்.
“யோவ்! நீ என்ன பண்ணுறன்னா, இந்த சொத்துக்களை எல்லாம் வாங்கறதுக்கு பணம் கொடுத்தது பரமேஷ்வர் தான்னு நிரூபிக்க முயற்சி பண்ணு. நம்மளோட சேர்ந்து அந்த ஆளும் மாட்டட்டும். என்ன ஏதுன்னு நல்லா தெரிஞ்சு விசாரிச்சு பண்ணுய்யா! நம்ம வக்கீலை அனுப்பறேன். நீ இந்த வழக்கிலிருந்து வெளி வர்ரது கட்சிக்கு ரொம்ப முக்கியம்.!” எனச் சொல்லிவிட்டு அந்த மூத்த தலைவர் சென்றுவிட யோசனையோடு அமர்ந்திருந்தார் சதாசிவம்.
*****
ஆதனின் அலுவலக அறையில், குழப்பம் தாங்கிய முகத்துடனே அமர்ந்திருந்தாள் சிம்மவாஹினி.
அந்தி சாயும் நேரமாதலால், கதிரவனின் வர்ணஜாலங்கள், கண்ணாடி சாளரம் வழியே அறைக்குள் வழிந்துக் கொண்டிருந்தது. பாவையவளின் பார்வையோ, எதிரில் அமர்ந்திருந்த கணவனின் முகத்தில் தான் நிலைத்திருந்தது.
“ஆதன்! இங்கே நடக்கறதெல்லாம் பார்க்க ரொம்பவே பயமா இருக்கு. எனக்காக உன்னைப் பெத்தவங்களை எதுக்காகப் பகைச்சுக்கணும். என்ன இருந்தாலும் அவர் உன் அப்பா..!”
“ஷட் அப் சிமி! சம்யூ பேசினதை கேட்டே தானே? அவள் கண்ணீருக்கு என்ன பதில்? என் அம்மாவை சுய நலத்திற்காக கொன்னார். இப்போ சம்யுவோட அம்மாவை, செத்தால் சாகட்டும்ன்னு தெனாவட்டா பேசியிருக்கார். மனிதாபினாமே இல்லாத ஒருத்தருக்கு நீ என் கிட்டே பரிஞ்சு பேசறியா சிமி? அவருக்கு புள்ளை, பொண்டாட்டி, பொண்ணு எதுவுமே முக்கியம் இல்லை. அவருக்கு முக்கியமானதெல்லாம் பணம், பதவி, புகழ் இது மட்டும் தான். சாகும் போதும் மினிஸ்டராவே சாகணும்ங்கிற வெறி. சரியான சுயநல முதலை.!”
“ஆதன், ப்ளீஸ்..! ஓர் உறவோட இழப்பு எவ்வளவு வலிக்கும்ன்னு எனக்கு தெரியும். நமக்குன்னு ஒரு துணை இல்லாமல், இந்த உலகமே நரகமா இருக்கும்ங்கிறதும் எனக்குத் தெரியும். அவர் நல்லவரோ கெட்டவரோ உனக்குன்னு இருக்கிற உறவை நீ இழக்க வேண்டாம் ஆதன். அப்பான்னு ஒருத்தர் கடைசி வரை இருந்துட்டுப் போகட்டுமே..!”
அவளின் கடந்தக் கால காயங்கள் அவளை இப்படியெல்லாம் பேச வைத்திருந்தது.
“அப்போ, எனக்கு உறவோட அருமை தெரியாதுன்னு சொல்லுறியா சிமி? உறவை இழக்கிற வலி என்னன்னு எனக்கு தெரியும் சிமி. என் அம்மா செத்ததை என் கண்ணால் பார்த்தேன். அம்மாவைக் கொலை பண்ணின அந்த ஆள், நான் ஒளிஞ்சிருந்த இடத்துக்குப் பக்கத்தில் நின்னு தான் என் அப்பாவுக்கு ஃபோன் பண்ணி பேசினான். ‘என்னய்யா! நிஜமாவே செத்துட்டாளா? மூச்சு இருக்கான்னு பார்த்தியா? அரைகுறையா உயிரு இருந்து தொலைக்கப் போகுதுய்யா! முழுசா முடிச்சுட்டுட்டு வந்து பணத்தை வாங்கிக்கோ’ அப்படின்னு என் அப்பா பேசினதை என் காதால் கேட்டேன் சிமி! என் அம்மாவைக் கொன்னதுக்குக் காரணம் இந்தப் பணமும் பதவியும் தானே? அது அவரை விட்டுப் போகணும். நிரந்தரமாய் போகணும். போக வைப்பேன்.!”
“ஆதன் எதுக்கு இவ்வளவு கோபம்? கேண்டி க்ரஷ் விஷயத்தில், ஆகாஷ் தான் எல்லாம் பண்ணியிருக்கிறான்னு தெரிஞ்சுடுச்சு. நமக்கான பணமும் திரும்ப கிடைக்கப் போகுது. போதுமே விட்டுடலாமே..?”
“முடியாது சிமி! விட முடியாது! ஆகாஷை பண்ண வச்சது அவர் தானே? இல்லைன்னு உன்னால் சொல்ல முடியுமா? அவர் என்ன பண்ணியிருந்தாலும், நான் அவரை விட்டிருப்பேன். ஆனால், உன் விஷயத்தில் தலையிட்டு, உன் கனவை அழிச்சதை என்னால் மன்னிக்கவே முடியாது சிமி! இதெல்லாம் நான் செய்யறது அவரைப் பழி வாங்குறதுக்காக இல்லை. அவருக்கு தான் செஞ்சதெல்லாம் தப்புன்னு புரியணும். நல்ல உறவுகள் வாழ்க்கையின் வரம்ன்னு அவருக்குப் புரியணும். சுயநலத்தால் எல்லாத்தையும் இழந்துட்டோமேன்னு மனசு சுடணும். கடைசிவரை சாகாமல் குற்றவுணர்ச்சியோடே அவர் வாழணும். இந்த பணம், பதவி, புகழ் எல்லாம் நிரந்தரமானது இல்லைன்னு அவருக்குப் புரியற வரை நான் விடமாட்டேன். எந்தப் பக்கம் போனாலும் அவருக்கு செக் மேட் தான்.!” அவன் வார்த்தைகளில் இருந்த தீவிரம் வாஹினிக்குள் பயத்தைப் படர விட்டது.
இதுநாள் வரையிலுமே, இத்தனை தீவிரமாய் அவனை அவள் கண்டதில்லை. அந்த அளவிற்கு மனதிற்குள் ஆறா ரணங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்துக் கொண்டாள் அவள்.
இதற்கு எப்படி ஆறுதல் சொல்வதென அவளுக்குப் புரியவில்லை. ஆனாலும் அவளின் மென் கரங்கள் நீண்டு, ஆதனின் கரத்தை இறுக்கமாய் பற்றி, கரத்தில் அழுத்தம் வைத்தது.
“எல்லாம் சரியாகிடும் சிமி! என்னைப் பற்றி நீ கவலைப்படாதே! நான் எல்லத்தையும் ஆயிரம் முறைகள் யோசிச்சு தான் செய்யறேன். யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. நான் கொலைகாரன் இல்லை. என்னை சுத்தி சரியில்லாமல், ஏனோ தானோன்னு இருக்கிற சில விஷயங்களை சரி பண்ண நினைக்கிற சாதாரண மனுஷன் தான். என் அப்பாவைப் பத்தி நீ கவலைப் படாதே! அவர் சம்பாதிச்சதெல்லாம், உழைச்சு சம்பாதிச்சது இல்லை. பாவ மூட்டைகளை சம்பாதிச்சு வச்சிருக்கிறார். அதை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துடுறது தான் நல்லது.!” அவனுக்கு ஆறுதல் சொல்ல முயன்றவளை அவன் ஆறுதல் படுத்தினான்.
அதே நேரம்,
“சார்! நிஷா மேம் வந்திருக்காங்க. உள்ளே அனுப்பட்டுமா?” என்றபடி வந்து நின்றான் உதவியாளன் பிரபு.
“எஸ்! அனுப்பி வை! அஞ்சு நிமிஷத்திற்கு பிறகு..” எனச் சொன்னவனின் புருவங்கள் யோசனையாய் வளைந்தது. சிங்கத்தின் கோட்டைக்கு நரி வருகிறதென்றால், யோசிக்கத்தானே வேண்டும். இன்னொரு முறை நரியின் தந்திரங்களில் சிங்கம் சிக்கிவிடக் கூடாதல்லவா?
குள்ளநரித்தனம் கொஞ்சமாவது இருக்க வேண்டும். குழி பறிக்க அல்ல, பிறர் பறித்த குழியில் விழாமல் இருக்க. இப்போது ஆதனும் நரியின் பக்கமிருந்து யோசிக்கத் துவங்கியிருந்தான். நிஷா எதற்காக வந்திருப்பாள் என கொஞ்சம் கொஞ்சமாக விளங்கத் துவங்கியது.
“இப்போ எதுக்கு நிஷா இங்கே வந்திருக்கா? இருக்கிற பிரச்சனை பத்தாதுன்னு இவள் வேறே?” பிடித்தமின்மை வாஹினியின் குரலில் அப்பட்டமாய் தெரிந்தது.
“பொறாமையா மை டியர் பொண்டாட்டி?” புன்னகையுடன் கேட்டவன், அவளின் அனல் தெறிக்கும் முறைப்பைப் பார்த்ததும் பேச்சை மாற்றினான்.
“சிமி! என்னதான் நரி புலி வேஷம் போட்டாலும், நரிக்கு புலியைப் போல் கர்ஜிக்கத் தெரியாது. இப்போ இந்த நரி வந்திருக்கிறது சமாதானத்திற்கு. ஆகாஷ் வெளியே வரணுமா இல்லையா?”
“இவ அண்ணன் ஊரெல்லாம் பொறுக்கித்தனம் பண்ணுவான், நாம இவனை வெளியே விடணுமா.? ராஸ்கல், பணத்திமிரில் தானே இந்த ஆட்டம் ஆடினான். கொஞ்ச நாளைக்கு உள்ளே கிடக்கட்டும். அப்போ தான் புத்தி வரும்.!” கோபமும் ஆற்றாமையும் தெரிந்தது அவள் குரலில்.
அதே நேரம் உள்ளே வந்த நிஷா, ஆதனை ஏறிட்டு பார்த்தபடி தயக்கமாய் நின்றாள்.
முதன் முறையாய் நிஷாவின் முகத்திலிருந்த தயக்கம் ஆதனுக்கு புதிதாய், வேறு யாரையோ பார்ப்பதைப் போல் தோன்றியது.
“வெல்கம் நிஷா! ப்ளீஸ் பீ சீட்டட், என்ன விஷயமா வந்திருக்கேன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” நக்கல் தொனித்தது அவன் குரலில்.
“ரித்வி! ஐ அம் ரியலி ஸாரி! நான் உனக்கு செஞ்சதுக்கெல்லாம் சேர்த்து வச்சு என்னை மன்னிச்சுடு. ஆகாஷையும், என் அப்பாவையும் மீட்டுக் கொடு. அவன் ஜெயிலில் கஷ்டப்படறதையும், அப்பா எதையும் செய்ய முடியாமல் திணறிப் போய் நிக்கிறதையும் என்னால் பார்க்க முடியலை. ப்ளீஸ் உதவி செய்யேன்?”
“இப்போ என்கிட்டே வந்து நீ உதவி கேட்கிறது, நிஜமாவே உன் அப்பாவுக்காகவும், ஆகாஷுக்காகவும் தானா? இல்லை முன்ன மாதிரி பப், க்ளப்ன்னு சுத்த முடியலைன்னு என்னைத் தேடி வந்தியா?” வாஹினியின் முன்னால் வைத்து, நிஷாவிடம் அவன் கேட்ட கேள்வி, நிஷாவிற்கு ரொம்பவே அவமானமாய் இருந்தது.
“ரித்வி! ப்ளீஸ்..! நான் தான் மன்னிப்பு கேட்டேன் தானே? இனிமேல், நானோ என் குடும்பமோ உன் வழியில் குறுக்கிட மாட்டோம். நாங்க செஞ்ச எல்லாமே தப்பு தான். உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக்கிறேன். ஏதாவது பண்ணு, ப்ளீஸ்..! ப்ளீஸ்..!” அவள் கையெடுத்துக் கும்பிட்டதைப் பார்க்கவும் நிஜமாகவே சிரிப்பு வந்தது ஆதனுக்கு.
“சரி, ஓகே! நான் உன் வழிக்கே வர்ரேன். நாம ஒரு டீல் போட்டுக்கலாமா?” என அவன் கேட்டதைப் பார்த்து நிஷா புரியாமல் விழிக்க, ஆதனின் இதழோரம் புன்னகை வழிந்தது. அவன் கேட்ட விஷயத்திற்கு சம்மதம் சொல்ல நிஷாவுக்கு விருப்பம் இல்லை என்றாலும், அவன் கேட்டதைச் செய்வதைத் தவிர வேறு வழி அவளுக்கு இருக்கவில்லை. அப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் அவளை நிறுத்தியிருந்தான் ஆதன். சில நொடிகள் தீவிரமான யோசனைக்குப் பிறகு,
“ஓகே! நீ சொல்றதை நான் அப்படியே செய்யறேன். பேச்சு மாறிட மாட்டியே..?” கொஞ்சம் பயமும் சந்தேகமும் அவளுக்குள் இருந்தது. இந்த வாய்ப்பை பழி வாங்குவதற்காக ஆதன் பயன்படுத்திவிடக் கூடாதென்ற பயம் நிஷாவிற்குள் இருந்தது.
“நான் ஒண்ணும் சதாசிவம் இல்லை. நம்ப வச்சு கழுத்தறுக்கிறதுக்கு, நான் ஆதன், ஆதன் ரித்விக். நான் சொல்றதை நீ செய், மத்ததெல்லாம் தன்னால் நடக்கும். என்மேல் நம்பிக்கை இல்லைன்னா நீ எதையும் செய்ய வேண்டாம். ஆனால், உன் அப்பாவும், அண்ணனும் உனக்கு வேணும்ன்னா நான் சொல்றதை நீ செஞ்சு தான் ஆகணும்.” அவ்வளவு தான் என்பது போல், இருக்கையிலிருந்து எழுந்துக் கொண்டான் அவன்.
“ஓகே! என்ன செய்யணும் சொல்லு ரித்வி!” என அவள் கேட்கவும், தன் மனையாளின் அருகே வந்து நின்று, அவள் கரத்தினை தன் கைக்குள் அடக்கியபடியே நிஷாவைப் பார்த்து என்ன செய்ய வேண்டுமெனச் சொல்லத் துவங்கினான்.
“இது சரியா வருமா ஆதன்? யாருக்கும் எதுவும் ஆகிடாதே..?” மனைவியின் தவிப்பு புரிந்தவனாய்,
“ட்ரஸ்ட் மீ சிமி! எல்லாம் நல்லபடியா நடக்கும். எதையும் மனசில் போட்டு குழப்பிக்காதே..! நான் இருக்கேன். எல்லாத்தையும் நான் பார்த்துப்பேன்.!” அவள் கரத்தினில் மென் முத்தம் பதித்து அவன் சொல்ல, அங்கே அமர்ந்திருந்த நிஷாவிற்கோ, அவனின் செயலில் கோபம் கொப்பளித்தது. ஆனால், அவன் மீது வெளிப்படையாய் கோபப் பட முடியாது பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“கோபம் வருதா நிஷா? வராமால் எப்படி இருக்கும்? சம்யூவிற்காக நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடிவு செஞ்சப்போ, நீ எப்படி இருந்தாலும் உன்னை அப்படியே ஏத்துக்கணும்ன்னு தான் நினைச்சேன். ஆனால், எனக்கு ஒருவிஷயம் லேட்டா தான் புரிஞ்சது, ஒரு ஆண் சிங்கம், இன்னொரு பெண் சிங்கத்தைத் தான் துணையாய் ஏத்துக்கும். ஒருநாளும், குள்ளநரி சிங்கத்தின் ஜோடியாய் ஆக முடியாதுன்னு புரிஞ்சது. நளபாகத்திற்காக திட்டம் போட்டு, கடைசியில் உன் அப்பாவும், அண்ணனுமே, அவங்க விரிச்ச வலைக்குள் மாட்டிக்கிட்டாங்களே..! ச்சு ச்சு ச்சு..!” அவன் நக்கலாய் சொன்னது அவளுக்கு ரசிக்கவில்லை.
“நான்.. நான்.. கிளம்பறேன் ரித்வி!” வேறு வழியின்றி கிளம்ப முயன்றாள்.
“கிளம்பலாம் நிஷா, இரு. இப்போ நான் ஆம்பிள்ளை தான்னு நம்பிக்கை வந்துடுச்சா.? தம், தண்ணி, பொண்ணுன்னு இருக்கிறவன் தானே உன் அகராதியில் ஆம்பிள்ளை. அப்படி இருக்கிற சுத்தமான ஆம்பிள்ளைக்கிட்டே உதவி கேட்டுப் போயிருக்கலாமே.. இங்கே ஏன் வந்தே?” எல்லையில்லா கோபத்தில் அவன் கண்கள் சிவந்து நெருப்புத் துண்டங்களாய் தகித்தது. நிஷா விக்கித்து போய் நிற்க,
“ஒவ்வொரு வார்த்தைப் பேசும் போதும் கவனம் இருக்கணும் நிஷா. நாம என்னசொல்றோம்ன்னு மட்டுமில்லை, நாம சொல்றதை எதிரில் நிக்கிறவங்க எப்படி புரிஞ்சுக்கிறாங்கன்னு தெளிவு நம்மக்கிட்டே இருக்கணும். ஏன்னா கொட்டின வார்த்தைகளை அள்ள முடியாது பாரு.! நீ கிளம்பு, நான் ஆதன் கிட்டே பேசறேன்.!” என வாஹினி சொல்லவும்,
“தேங்க்ஸ்.. வாஹினி! அன், ஐ அம் ரியலி ஸாரி! ஆகாஷ் மேலே இருக்கிற தனப்பட்ட கோபத்தில், பழிவாங்கிடாதே ப்ளீஸ்..!” தடுமாற்றமான குரலில் நிஷா கேட்க, வாஹினியிடமிருந்து வெளிப்பட்டது சன்னமான புன்னகை மட்டுமே..! ஆனால் அந்தச் சின்னப் புன்னகையில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருந்தது.
இசைக்கும் ❤
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


செம