Loading

அத்தியாயம் 6

யாருக்கும் காத்திருக்காமல் அழகாக விடிந்தது ஞாயிறு காலை.
நேற்று கணவனுடன் சென்று பெண் வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு என்று ஸ்வீட்டும் பழங்களும் வாங்கி வைத்திருந்தார் அனுபமா. பெண் பார்க்கச் செல்வதற்கு ஏழு தட்டுகளை நிறைத்து இருந்தார். அத்துடன் பூவும் சேர்ந்து கொள்ள மொத்தம் எட்டு தட்டுகளாக இருந்தது.
“அச்சோ.! எட்டு தட்டு ஆயிடுச்சே. ஒத்தப்படையில் தானே கொண்டு போகணும்.” என்று நாடியில் தட்டி யோசித்துக்கொண்டிருந்தவரின் அருகில் வந்த சஞ்சய்.

“என்னமா பலமான யோசனை.” எனக் கேட்டபடியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன், டீப்பாயின் மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்கள் மற்றும் இனிப்பு வகையறாக்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தான்.
“இல்ல, இந்த மாதிரிச் சீர் தட்டு வைக்கும்போது ஒற்றைப்படையில் தான் வைக்கணும். ஆனால் இங்கே எட்டு தட்டு இருக்கு. அதுதான் ஒன்றை குறைக்கலாமா.? அல்லது கூட்டலாமானு.? யோசிச்சிட்டு இருக்கேன்.” என்றபடி தட்டுகளைப் பார்த்துக்கொண்டே கூற. இதைக் கேட்டப்படியே வந்த பிரபு
“என்னது கூட்ட போறியா.? ஏன்மா நம்ம வெறும் பொண்ணு தான் பாக்க போறோம். நீ என்னமோ நிச்சயம் பண்ண போற மாதிரி  இவ்வளவு தட்ட நிறைத்து வச்சிருக்கே.”என்று சலிப்பாகக் கூற.

“என்னது பொண்ணு பாக்க மட்டும்தான் போறோமா? பெண்ணைப் பார்த்து உறுதி படுத்த போறோம். அதுக்கு வெறும் கையாகவா போவாங்க.”
“அதுக்குன்னு இவ்வளவா.?
“என்னது இவ்வளவு.? ஏழு தட்டு தானே. அது கூட இல்லாமலா போவாங்க. எனக்கு இருக்கிறதே ஒரே ஒரு பையன். அவனுக்குச் செய்யாமல் நான் வேற யாருக்கு செய்யப் போறேன்.”
“தாராளமா செய் டி. உன்னை யாரு செய்ய வேண்டாம் சொன்னது. ஆனா இப்ப அங்க போகப் போறது ரெண்டு பேரு மட்டும் தான். முதல்ல இந்தத் தட்டுகளை எல்லாம் தூக்குவதற்கு ஆள் இருக்கா.? இப்ப மொத மொதல்ல பொண்ணு பாக்க போகும்போது ஒரு ரெண்டு வகை ஸ்வீட் கொஞ்சம் பூக்கொண்டுட்டு போனா ஆகாதா.? பேசி முடிவெடுத்த பிறகு நாலு சொந்த பந்தங்களை கூட்டிட்டு போகும்போது இவ்வளவு எடுத்துட்டு போக வேண்டியதுதான் இப்பவே எதுக்கு இவ்வளவு அலப்பறைன்னு  தான் கேட்கிறேன்?..”
என்று கேட்டவரை முறைத்து நின்றவர்.

“இப்பதானே சொன்னேன். எனக்கு இருக்கிறதே ஒரே ஒரு பையன். அவனுக்கு நான் எல்லாம் நிறைவா செஞ்சு பாக்கணும்னு ஆசைப்படுறேன். அதைத் தெரிஞ்சுக்கிட்டே திரும்பவும் கேக்குறீங்க. இப்ப என்ன உங்க பிரச்சனை.? தட்டு தூக்க ஆள் இல்ல. அதுதானே. பரவால்ல நாம ரெண்டு பேருமே ஒரு ஒரு தட்டா போய் வச்சிட்டு வரலாம் தப்பில்லை.” என்று கூறியபடியே எதைக் கூட்டலாமெனப் பார்த்துக் கொண்டிருந்தவரைப் பார்த்துச் சிரித்த சஞ்சய்.

“அப்பா சொல்றதும் சரிதானம்மா. முதல் முறை போகும்போது ஏன் இவ்வளவு. இத பார்த்து அவங்க பயப்பட மாட்டாங்களா.? உங்க ஆசைக்கு ஒரு மூணு தட்டு கொண்டு போனால் போதாதா.?”
“ஹப்பா.! முதல் முறை உன் பையன் என்னைச் சப்போர்ட் பண்ணி இருக்கான் டி. பாத்துக்கோ. அவனே சொல்றான் இது அதிகம்னு.”
“இதுல என்ன அதிகம்.? நீயும் அவர் கூடச் சேர்ந்துட்டியா.?”
“அதுக்கு இல்லம்மா. இப்ப நாம இவ்வளவு எடுத்துட்டு போனா அப்ப நம்மளும் இந்த மாதிரிச் சீர் செய்யணும்னு நெனச்சி அவங்க பயப்படுவாங்க தானே. இதே போல அவங்களும் செய்யணும்னு நாம எதிர்பார்ப்போம்னு அவங்க நினைக்கலாம் தானே.” என்று அமைதியாகக் கேட்ட மகனைப் பார்த்தவர்.

“அப்படி என்ன நான் பெருசா செஞ்சுட்டேன்.? ஒரு ஏலே ஏழு தட்டு அதுக்கு இந்தப் பாடா.?”என்று அங்கலாய்த்தவரிடம்.
“முதல்ல தட்டு தட்டுங்கிறியே. அப்படி ஒண்ணுமே இங்க இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலையே. எல்லாமே அந்தக் கால தொட்டில் போலக் குட்டியா  இருக்கு.”
“இதெல்லாம் லேட்டஸ்ட் ட்ரெண்ட். இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப் போகுது. என் பையனுக்குக் கல்யாணம் பேசும்போது இப்படி எல்லாம் பண்ணனும்னு எவ்வளவு விஷயங்களைப் பார்த்துப் பார்த்துச் சேகரிச்சு வச்சிருக்கேன். இதெல்லாம் என்னோட கனவு. இதைக் கெடுக்கிற மாதிரி  யாரு வந்தாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். தள்ளிப் போங்க.”என்றவர் மும்முரமாக வேறு எதைச் சேர்க்கலாம் என்று ஆராய இதற்கு மேல் அவர் செய்வது எதையும் தடுக்க முடியாது என்ற புரிந்துகொண்ட தந்தையும் மகனும் அமைதியாக அவரையே பார்த்திருந்தார்கள்.

அன்னை அடுக்கி வைத்திருந்த குட்டித் தொட்டில்களை எண்ணி பார்த்தவன், அவை மொத்தம் ஏழாக இருக்க.
“அம்மா. என்ன கவுண்டிங் மறந்து போச்சா உங்களுக்கு.? மொத்தம் ஏழு தான் இருக்கு. நீங்க எட்டுன்னு சொல்லிட்டு இருக்கீங்க…”என்ற மகனைப் பார்த்தவர்
“பூ ஒரு தட்டு இருக்குல்ல. அதோட சேர்த்து எட்டு ஆயிடுமே அது தான் இன்னும் ஒரு ஸ்வீட் சேர்க்கலாமா.? இல்ல பழம் சேர்க்கலாமா.? என்று யோசிச்சிட்டு இருக்கேன்.” என்றவரை பார்த்தவன்
“இப்போ என்ன உங்களுக்கு.? இதோட ஒன்றை சேர்க்கணும் அதானே.” என்று கேட்டவனிடம் ஆமாம் என்பதாகத் தலையாட்ட.

“ஒரு நிமிஷம் இருங்க வரேன்.” என்றவன், மேலிருந்த தன் அறையை நோக்கிச் சென்றான். அவன் சென்ற திசையைப் பார்த்தபடி என்னவென்று யோசித்துக் கொண்டிருந்த அனுபமாவின் யோசனைக்கு விடை கூறும் வகையில் வேகமாகத் திரும்பி வந்தவன் அன்னையின் அருகில் வந்து அவர் கைகளில் ஒரு சிறு பெட்டியைக் கொடுத்தான்.

“இந்தாங்க இதையும்  நீங்கக் கொண்டு போவதோடு சேர்த்து வைங்க. அப்ப மொத்தம் ஒன்பது ஆகிடும்.  நீங்க நினைச்ச மாதிரி ஒற்றைப்படையில வந்துருச்சு.” என்று கூற. மகன் கொடுத்த பெட்டியைப் பார்த்தவர் அது ஒரு நகைக்கடையின் பெயரைத் தங்கி இருப்பதை பார்த்து யோசனை உடன் அதைத் திறந்து பார்க்க உள்ளே குட்டி குட்டி இதய வடிவில் தொடராக அமையப்பெற்ற ஒரு கைச்செயின் இருந்தது. ஒவ்வொரு இதயத்தைச் சுற்றியும் பொடி கற்களைக் கொண்டு வேலைப்பாடுகள் செய்யப்பட்டு ஜொலி ஜொலித்ததோடு பார்ப்பவர்கள் கண்களைக் கொள்ளை கொள்ளும் அழக்கொடு மின்னியது.

மனைவியின் கைகளில் இருந்ததை பிரபுவும் எட்டி பார்த்து அதன் அழகில் லயித்து இருக்க.
“வாவ் சஞ்சய். ரொம்ப அழகா இருக்கு. யாருக்கு இது.?” என்று தெரியாதவர் போலக் கேட்க.
புருவத்தை உயர்த்தி, வெளிவர இருந்த புன்னகையை அடக்கி, பின் கழுத்து முடியைக் கோதியவாறு தொண்டையை சேருமி,
“இதெல்லாம் யாருக்கு எடுத்துட்டு போறீங்களோ அவளுக்குத் தான்.” என்றவன். அன்னை அடுக்கி வைத்திருந்தவைகளை கண்களால் சுட்டிக்காட்டி விட்டு, மெதுவாக நடந்து சென்று தந்தையின் அருகில்  அமர்ந்து கொள்ள. அவன் பின்னோடு பார்வையை செலுத்திய அனுப்பமா பின்  கணவனைப் பார்த்தபடி சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தார்.

அன்னையின் சிரிப்பில் வெட்கத்தோடு அவனுக்கும் சிரிப்பு வரப் பார்க்க அதை அடக்கிய படி அமர்ந்திருந்தான் சஞ்சய். அவனை ஓர பார்வை பார்த்துவிட்டுச் சிரிப்பை அடக்கியவராகக் கணவனின் புறம் திரும்பிய அனுப்பமா.

“என்னமோ நான் ஒரு ஏழு தட்டு எடுத்துட்டு போறதுக்கு அவ்வளவு பேசினீங்க. ஆனா உங்க பையன் அந்தப் பொண்ணுக்கு தங்கத்துல பிரேஸ்லெட் வாங்கிட்டு வந்து உறுதிப்படுத்திட்டான். இப்ப என்ன பண்ணுவீங்க.?” என்று இன்னும் சத்தமிட்டு சிரிக்க.
“ம்ம் உங்க ரெண்டு பேருக்கு நடுவுல மாட்டிகிட்டு முழிக்கணும். வேற என்ன செய்றது நானு.?” என்றபடி எழுந்தவர்,
“சரி நான் போய்ப் பூ வாங்கிட்டு வந்துடுறேன்.நீ அதுக்குள்ள ரெடி ஆகிடு.”என்று கூறியபடி சந்தோஷ மனநிலையிலேயே வெளியேறிச் சென்றார். முகம் விகாசிக்கும் புன்னகையுடன்.

கணவன் செல்வதை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்த அனுப்பமா. பின் மகனின் புறம் திரும்பி,

“எப்படா வாங்குன இந்தப்
பிரேஸ்லெட்டை.?” என்று கேட்டுக்கொண்டே மறுபடியும் அதைப் பிரித்து ஒரு முறை நன்றாகப் பார்த்தவர்.
“இந்தக் குட்டி குட்டி கல் எல்லாம் வைரமா.?” என மறுபடியும் கேட்க “இல்லம்மா ஸிர்கான் ஸ்டோன் தான்.” என்றான்.
“என்கிட்ட கூடச் சொல்லவே இல்ல. இப்படி ஒன்னு வாங்க போறேன்னு. எப்ப போய் வாங்குன.?”என்று முதலில் கேட்ட கேள்வியை மறுபடியும் கேட்க.

“அம்மா சொல்லக்கூடாதுன்னு இல்ல. ஏதாவது ஸ்பெஷலா கொடுக்கணும்னு தோணுச்சு. அப்படியே நேற்று இரவு வேலை முடிச்சுட்டு மால்ல சுத்திட்டு இருக்கும்போது இதைப் பார்த்தேன். ரொம்ப பிடிச்சு போயிடுச்சு. அதன் டிசைன்ஸ்  கொஞ்சம் ஸ்பெஷலாவும் தெரிஞ்சது. அதான் வாங்கிட்டு வந்தேன்.” என்றவன் சிறிய தயக்கத்திற்கு பிறகு,
“ம்மா, இதனால் உங்களுக்கு எதுவும் மனம் கஷ்டம் இல்லையே.?” என்று அன்னையை தவிப்பாகப் பார்த்துக் கேட்க. பெரிதாகச் சிரித்தவர்.

“எனக்கு என்னப்பா கஷ்டம்.? எனக்கு ரொம்ப சந்தோஷம் தான். என் மகன் அவனுக்குன்னு வரப் பொண்ணுக்காக ஸ்பெஷலா கொடுக்கணும்னு நெனச்சி ஒன்னு செய்றானே அதுவே எனக்குச் சந்தோஷம்தான்.” என்றார் புன்னகை மாறாமல்.
“நேத்தே உங்க கிட்ட சொல்லி இருப்பேன். வரதுக்கு லேட்டாயிடுச்சு அதுதான் சொல்ல முடியல. சாரி.” என்றான் கண்களைச் சுருக்கி.

“ஹேய்.! அதெல்லாம் பிரச்சனை இல்லை. நானே என் வருங்கால மருமகளுக்கு இவ்வளவு கொண்டு போகும்போது. நீ உன்னுடைய வருங்காலத்துக்கு இது கூடச் செய்யலைன்னா எப்படி.?” என்று மேலும் புன்னகையுடன் கேட்டவரை எழுந்து சென்று இறுக அணைத்துக் கொண்டான். அந்நேரம்  சரியாக
“ம்ம்க்கும்.” என்று தொண்டையை  கனைத்தபடி மகனையும், மனைவியையும் அவர்களின் அணைப்பையும் பொறாமையுடன் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே நெருங்கத் தொடுத்த  பெரிய சைஸ் மல்லிகை பந்துடன் உள்ளே வந்தார் பிரபு.

அவர் கையில் இருந்த பெரிய சைஸ் மல்லிகை பந்தைப் பார்த்த அனுபமா.
“எத்தனை பேருக்கு இந்தப் பூ…?” என்று நக்கலாகக் கேட்க.
“ம்ம் என் மருமகளுக்கு மட்டும்தான்.”என்றார் அவரும் குரலில் நக்கலை ஏற்றி.
“நீங்களே இவ்வளவு செய்யும்போது நான் என் மருமகளுக்காக இது கூடச் செய்ய மாட்டேன்னா.?” எனக் கேட்டபடியே புருவத்தை ஏற்றி இறக்க. மகனின் அணைப்பிலிருந்து வெளிவந்தவர் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டே “தாராளமா செய்ங்க யார் வேண்டாம் என்று சொன்னது.” என்றபடி அவர் கொண்டு வந்த பூவையும் மகன் கொடுத்த நகை பெட்டியையும் அதற்குண்டான சிறிய தொட்டில் போல் அமைப்பிலிருந்த பெட்டியில் அழகுற அடுக்கி வைத்தார்.

மனைவி செய்வதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவர்,
“எத்தனை மணிக்குக் கிளம்பலாம். அவங்க வீட்டுக்கு வேற தகவல் சொல்லனும் இல்ல.” எனக் கேட்க
“ஒரு பதினோரு மணிக்கு எல்லாம் அவங்க வீட்ல இருப்போம்னு சொல்லிடுங்க.”என்ற  மனைவியின் பதிலில் தன் அலைபேசியை எடுத்துக்கொண்டு ரகுபதிக்கு தகவல் சொல்லத் தன் அறையை நோக்கி நகர்ந்தார் பிரபு.

சோபாவில் அமர்ந்திருந்த மகனைப் பார்த்த அனுபமா,
“நீயும் வாயேன் சஞ்சய்.”என மறுபடியும் அழைக்க
“இல்லமா. நீங்கப் போயிட்டு வாங்க.” என்றபடி தன் அறையை நோக்கி நகர்ந்தான். அதற்கு மேல் இருந்தால் அன்னை தன்னை வரச் சொல்லி வற்புறுத்தக்கூடும் என்று அறிந்தவனாக.
அனைத்தையும் அழகுற அடுக்கி வைத்தவர் திருப்தி உற்றவராக. மணியைப் பார்த்துவிட்டு, தானும் கிளம்பி செல்வதற்கு தன் அறையை நோக்கிச் சென்றார் அனுபமா.

பெண் வீட்டுக்குத் தாங்கள் கிளம்பிய தகவலைக் கொடுத்து விட்டு. நல்ல நேரத்தில் கிளம்பினார்கள் பிரபுவும் அனுபமாவும். அன்னை தந்தையோடு அனைத்து சீர்தட்டுகளையும் எடுத்துக் காரில் அடுக்கி வைத்து விட்டு அவர்களை வழி அனுப்பி வைத்துக் கேட்டையும் கதவையும் மூடி விட்டுத் தன் அறையை நோக்கிச் சென்றான் சஞ்சய்.

அங்கு வசுந்தராவின் வீட்டில் காபி கொட்டை நிறத்தில் இருந்த தன் புடவையைத் தங்கையிடம் கொடுத்துக் கட்டிக் கொள்ளக் கூறினாள் வசுமதி.
அன்று தந்தையின் கோபத்தில் பயந்து வீட்டிற்கு சென்றவள் இன்று காலையில் தன் கணவனுடன் வந்திருந்தாள் அன்னையின் வீட்டிற்கு. வரும்போது தன் புடவை ஒன்றை கொண்டு வந்திருந்தாள். நல்ல எண்ணத்தில் தங்கைக்குத் திருமணம் முடிகிறது என்ற மகிழ்வில் கொண்டு வந்தாளா என்றால் அது தான் இல்லை. காபி நிறம் அவள் தோளின் நிறத்தை மட்டுப்படுத்திக் காட்டும். முதல் முறை பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டிற்கு அதுவே பிடித்தமின்மையை கொடுக்கும் என்ற நல்ல்ல்ல எண்ணத்தில் தான் கொண்டு வந்தாள் அந்தப் புடவையை.

தமக்கை கொண்டு வந்து கொடுத்த புடவையைப் பார்த்தவளுக்கு மனம் மிகவும் வருந்தியது. இந்த நிறம் தனக்கு எடுப்பாக இருக்காது என்பதும். தமக்கையின் வெண்மை நிறத்திற்கு இந்தப் புடவை மிகவும் அழகாக இருந்தது என்பதும் அவளுக்கே தெரியும். அப்படி இருக்க தனக்கு அவள் கொண்டு வந்து கொடுத்த புடவையை மறுக்கவும் வழி இல்லாமல் கட்டவும் விருப்பம் இல்லாமல் புடவையைக் கையில் ஏந்தியபடி நின்றிருந்தவளை காக்க வென வந்தார் கோகிலா. எப்போதேனும் அதிசயமாக இப்படி காக்கவும் செய்வார். அதற்குக் காரணம் தன் மகள் என்ற எண்ணத்திலா.? அல்லது சுற்றி இருப்பவர்கள் தன்னை எதுவும் சொல்லி விடக் கூடாது என்ற எண்ணத்திலா.? என்பது அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.

அவளின் அறைக்குள் வந்தவர்
“என்ன கையில புடவையை வச்சுக்கிட்டு நின்னுட்டு இருக்க.? கட்ட வேண்டியது தானே.” எனக் கேட்டபடி அவள் கையில் இருந்த புடவை பார்த்தவர்,
“யார் கொடுத்தது இந்தப் புடவையை.?” எனக் கேள்வியாகக் கேட்க அவரின் பின்னோடு வந்திருந்த வசுமதியும்,

“நான் தான்மா கொடுத்தேன். என்னோட புடவை தான் அதைக் கட்டட்டும்.” என்றாள் அவரின் பின் நின்று. அந்தப் புடவையைக் கையில் வாங்கி பார்த்தவர் அதன் நிறம் கண்டிப்பாக வசுந்தராவிற்கு நன்றாக இருக்காது என்பதை உணர்ந்தவராக “இந்தப் புடவை கட்ட வேண்டாம்.” என்றவர் அவளின் அலமாரியை திறந்து தமக்கையின் திருமணத்திற்காக அவளுக்குத் தந்தை எடுத்துக் கொடுத்திருந்த லாவண்டர் நிற பட்டுப்புடவையை அவள் கையில் கொடுத்து
“இதைக் கட்டிக்கோ.” என்றவர் அதற்கு மறுத்து ஏதோ கூற முயன்ற பெரிய மகளைக் கையோடு இழுத்துக் கொண்டு வெளியேறினார் அறையிலிருந்து.

“ஏன்மா நான் கொடுத்த புடவையை மாத்துனீங்க. இப்ப நீங்கக் கொடுத்திருக்கிற புடவை அவளுக்கு ரொம்ப நல்லா இருக்கும். அன்னைக்கே அவ ரொம்ப அழகா இருந்தா அந்தப் புடவையில். அதைச் சொன்னா அப்படியே கனவுல மிதப்பாலேன்னு தான் நான் சொல்லல. இப்ப நான் கொடுத்த அந்தப் புடவை அவள் அழகை கொஞ்சம் மட்டுப்படுத்தி காட்டும். என்னதான் அவ கலர் கம்மியா இருந்தாலும் அழகுல அவள அடிச்சுக்க முடியாது தான். இப்ப எதுக்கு நீங்க இந்தப் புடவையைக் கொடுத்து அவளை அழகாக்குறீங்க.? இந்த இடம் தட்டி போகணும்ன்னு நானும் எவ்வளவு முயற்சி பண்றேன். நீங்க அதுக்கு ஒத்துழைக்காம, நீங்களே குழி தோண்டுறீங்க.” என்று சற்று கோபமாகக் கேட்க.

“ஏன் டி நீயும் நிலைமை புரியாம குதிச்சிட்டு இருக்க.? நேத்தே உங்க அப்பா அந்த வாங்கு வாங்கினார் என்னை.அதுவும் இல்லாம இவளுக்கு எப்படினாலும் கல்யாணம் பண்ணி தான ஆகணும். இப்படியே வீட்ல வச்சுட்டு இருக்க முடியுமா.? நீயே சொன்ன மாதிரி அவளுடைய கலருக்கு மாப்பிள்ளை தேடி வருவது எல்லாம் ரொம்ப கஷ்டம்.” என்ற அன்னையின் பேச்சை இடை மறித்தவள்

“அதுக்கு வத்தலோ தொத்தலோ ஏதோ ஒன்னு அவளுக்குக் கிடைக்காமலா போகும்.கூனோ. குருடோ கூடக் குறைய இருந்தாலும் பரவாயில்லன்னு கல்யாணம் முடிச்சு அனுப்பிடலாம்.ஆனா இந்தச் சம்மந்தம் அப்படியா.? ரொம்ப வசதியானவங்க. டாக்டர் வீடு.பையன் இன்ஜினியர். இந்தச் சம்பந்தம் அவளுக்குக் கிடைப்பதற்கு நான் ஒரு காலமும் அனுமதிக்க மாட்டேன்.” என்றாள் கோபமாக.

“நீ என்னடி அனுமதிக்கிறது.? உங்க அப்பா வெட்டிப் போட்டுவாரு நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து. அதனால எந்த ஏழ்ரையையும் இழுக்காம அமைதியா இரு. அவங்களா விரும்பி இவளைக் கேட்டு வராங்க. நல்லபடியா கல்யாணத்தை முடிச்சு சந்தோஷமா அனுப்பிவிட வேண்டியதுதான். இனி எதுக்காகவும் நம்ம வீட்டைத் தேடி வரமாட்டா. அவ பொழப்ப அவ பார்த்துப்பா. வசதியான வீடுங்கிறதுனால நம்ம தேவைக்கும் அவகிட்ட ஏதாவது பணம் வாங்க முடிஞ்சா அது வரவு தான். அதுவும் இல்லாம இனிவரும் காலங்களில் உனக்கும் உன் தங்கச்சிக்கும் ஏதாவது பார்த்துச் செய்ய முடியும். அதனால எந்தக் குட்டையையும் குழப்பமா அமைதியா இரு.” என மகளுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் போதே. வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க வேகமாக வரவேற்புரைக்கு வந்தார்கள் இருவரும்.

கார் வந்த சத்தத்தில் மகளோடு வெளி வந்தவர் அவருக்கு முன்பாகக் கணவர் செல்வதை பார்த்துவிட்டு “கூப்பிடுறாரா பாத்தியா.?” என்ற படியே  கணவனின் அருகில் வேகமாகச் சென்றார். அவரைவிட வேகமாக அவரைத் தாண்டிச் சென்று  வந்திருப்பவர்கள் யார் யாரெனத் தெரிந்து கொள்ளவும் அவர்களின்  தோற்றத்தைப் பார்க்கவும் ஆவலாகச் சென்ற மகளின் கையைப் பிடித்து நிறுத்தியவர்,

“பின்னாடி நில்லுடி,  முந்திரிக் கொட்டை மாதிரி முன்னாடி போகாத. அதுக்கு ஏதாவது சொல்லப் போறார் உங்க அப்பா.” எனக் கடிந்த படி “மாப்பிள்ளை எங்க.?” எனக் கேட்க. அவரும் கணவருடன் சென்று வந்தவர்களை வரவேற்க நிற்பதை பார்த்து மனதில் மகிழ்ந்து கொண்டாலும் வெளியில் எதுவும் கூறாமல் மகளைத் தன் பின் நிறுத்திவிட்டு இவர் வந்தவர்களைக் கவனிக்க.

“வாங்க பிரபு…” எனக் கணவர் மிக நாள் பழகிய பழக்கம்போல் வந்தவரை வரவேற்க ஒன்றும் புரியாமல் பே வெனப் பார்த்துக்கொண்டு நின்றவரை மேலும் அதிர்ச்சியூட்டும்  வகையில்
“வரேன் ரகு.” என்றவரும் புன்னகை முகத்துடன் தன் மனைவியுடன் அவர்களின் இல்லம் நுழைந்தார் பிரபு.

இவர்கள் வீட்டில் உள் நுழைந்த பிறகும் அதிர்ச்சி நீங்காமல் நின்றிருந்த மனைவியைப் பார்த்தவர் கோபமாகப் பல்லைக் கடித்துக் கொண்டு
“வந்தவங்கள வாங்கன்னு கேளு. வீட்டுக்குப் பெரிய மனுஷியா நடந்துக்கோ இப்பவாவது.” என்று மெதுவாகக் கூற. அதிர்விலிருந்து வெளிவந்தவர்
“வாங்க, வாங்க.” என வரவேற்றார் புன்னகை முகத்துடன்.

இன்முகத்துடன் வரவேற்றவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு உள்ளே வந்தார்கள் பிரபு மற்றும் அனுபமா. தன் மகன் கொடுத்த தங்க பிரேஸ்லெட் மற்றும் பெரிய பந்தாகக் கணவர் வாங்கி வந்திருந்த மல்லி பூ மட்டும் எடுத்துக்கொண்டு உள் நுழைந்தார் அனுபமா. மற்ற சீர் தட்டுகள் காரில் இருந்தது சற்று அமர்ந்து ஆசுவாசப்பட்ட பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்ற கணவனின் குறிப்பிற்கு சம்மதித்து தன் வருங்கால மருமகளை பார்க்கும் ஆர்வத்தில் அமர்ந்திருந்தார் அவர்.

வந்தவர்களை வரவேற்று சோபாவில் அமர வைத்த கோகிலா பெரிய மகளை விட்டு அவர்கள் இருவருக்கும் தண்ணீர் கொடுக்க வைத்து விட்டு இயல்பான குரலில் “நீங்களும் டாக்டராமா.?” என்று கேட்டபடியே அவரின் அருகில் அமர்ந்து கொள்ள.
“ஆமா.” என்றார் அவரும் லேசான சிரிப்புடன்.
“என்ன ஸ்பெஷலைசேஷன் ஆன்ட்டி.?” எனக் கேட்டாள் வசுமதி.
“ஜெனரல் தான்மா.” என்றவரின் பதிலில்
“ஓஹோ.!” என்று இழுவையாக இழுத்தவளுக்கு பொது மருத்துவம் தானா என்ற நினைப்பு வர, ஏனோ அதில் சற்று சந்தோஷம் அவளுக்கு.

“அப்புறம் ரகு, பொண்ண எப்ப கட்டுவீங்க.? நான் இதுவரை ஒரு முறை கூட என் மருமகளை பார்த்ததில்லை.” என்ற பிரபுவின் இலகுவான பேச்சில்
“இதோ, இதோ பிரபு.” என்றபடியே எழுந்தவர் தன் பெரிய மகளைப் பார்க்க
“அதுக்குள்ள என்ன அவசரம்.? இந்தக் கருப்பிய பாக்குறதுக்கு, அந்த டாக்டருக்கு.” என்று முனுமுனுத்த படியே தங்கையின் அறையை நோக்கிச் சென்றாள் அவளை அழைத்து வருவதற்கு.

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்