
27
ஒரு வார காலம் ஓடியிருந்தது… வால்பாறையின் பரபரப்பிற்குக் குறைவொன்றும் இருக்கவில்லை. செய்திகள் எங்கும் வால்பாறை காட்டின் மர்மங்கள்தான் பேசப்பட்டுக் கொண்டிருந்தன. அத்தனை ஊடகங்களும், வலைதளங்களும், தங்களுக்குத் தெரிந்த வகையில் எல்லாம், பொய்யும் மெய்யும் கலந்து தங்கள் பக்கம் மக்களை ஈர்த்துக் கொண்டிருந்தனர்.
விஷ்ணுவின் குடும்பம் மொத்தமும் வால்பாறையில் அவர்கள் தங்கியிருந்த மாளிகையில் இருந்தனர்.
அனைவரின் மனமும் ஒவ்வொரு எண்ணத்தில் உழன்று கொண்டிருந்தது. அவர்கள் அனைவருக்கும் இத்தனை நாட்கள் தங்களுடன் இருந்தது விஷ்ணு அல்ல, சிவா என்பது பெரும் அதிர்ச்சி. ஆனால் நினைத்து வருந்தவோ, யோசிக்கவோ எதுவும் இல்லையென்று அமைதியாக தங்கள் பெண் கிடைத்துவிட்டாள் என்று ஆசுவாசம் கொண்டனர்.
சுந்தர், சிவலட்சுமி மற்றும் ராஜசேகரன், விஷ்ணுப்ரியா கிடைத்துவிட்டாள் என்றும், அது விஷ்ணு இல்லை சிவா என்றும் தெரிந்துகொண்டு, ஆனந்தமும் அதிர்ச்சியும் கொண்டனர். அவளைப் பார்க்க புறப்பட்டு அவர்கள் வர நினைக்க, ராமராஜன் மறுத்துவிட்டார். இங்கு இருப்பவர்களே காவல் துறையினரின் பாதுகாப்பின் கீழ்தான் உள்ளனர் என்னும் நிலையில், அவர்கள் வந்து மீண்டும் செல்வதும் சிக்கலாகும் என்பதால், மறுத்துவிட்டார்.
கூடத்தில் ராமராஜன் சோர்வும், ஓய்வுமாய் அமர்ந்திருக்க, சமையலறையில் சிவப்ரியாவிற்கான சூப்பை பிரபாவதி தயாரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு ப்ரீத்தியும் உதவிக் கொண்டிருந்தாள்.
அறையினுள் கட்டிலில் விட்டத்தை வெறித்தபடி சிவப்ரியா படுத்திருக்க, அவள் அருகே நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தான், சுடரொளி வானன்.
மற்றவர்களுக்கு எப்படியோ? ஆனால் அவளுக்கு அவள் விஷ்ணு இல்லை, சிவா என்பது பேரதிர்ச்சி தானே? அவள் தொலைத்தது அவளுடைய நினைவுகளை, அவளுடைய உணர்வுகளை.. தொலைத்தவை மீண்டும் நினைவு வருகையில், அவளுக்கு சொல்லொண்ணா வலியாக அவை இருந்தன. மருத்துவமனையில் தன் நினைவுகளை மீட்டுக் கண் விழித்திருந்த சிவப்ரியாவுக்கு, அன்றைய விபத்து நினைவில் ஓடி மறைந்தது…
அன்று அபூர்வின் மீது அவள் வீழ்ந்து, அவன் கரங்கள் அவளைத் தாங்கிப் பற்றிக் கொண்டதன் கதகதப்புத்தான் இத்தனை நாட்கள் தன்னில் உணர்த்திக் கொண்டிருந்த அவனது ஸ்பரிசத்தின் நினைவென்று நினைக்க, மனம் சொல்ல முடியாத வலியைக் கொடுத்தது.
அவன் மீது காதலா? நட்பா? பாசமா? அக்கறையா? அவளுக்கு அந்தக் கேள்விக்கான பதில் தெரியவுமில்லை, ஆராய வேண்டுமென்று நினைக்கவுமில்லை..
ஆனால் மனதில் அவன் நினைவுகளை மறந்ததை நினைத்து தன்மீது கோபம் கொண்டாள். சிவப்ரியா, விஷ்ணுப்ரியா, பிரம்மவதனி, ப்ரீத்தி, சுபிக்ஷா ஆகிய அனைவரும் அத்தனைச் சுட்டியான தோழிகள். அனைவருக்கும் ஒரே வயது. சுடர் ஐந்து பெண்களுக்கும் ஒரே மூத்தவன்.. அதில் நால்வர் அவனுக்கு தங்கை மாதிரியெல்லாம் இல்லை.. தங்கையேதான் என்று நினைத்திருப்பவன்..
விஷ்ணு இறந்த செய்தி, சிவா என்று சொல்லப்பட்டபோதும் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்? விஷ்ணுவாக இருந்தாலும், சிவாவாக இருந்தாலும் அவர்களுக்கு இழப்பு இழப்பு தானே? விஷ்ணு என்ற அடையாளத்திற்குள் பொருத்தப்பட்ட சிவாவிற்கு, பழையவையெல்லாம் மறந்தாலும் கூட, தன்னுடன் பிறந்தவளை இழந்தது மன அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தது.
அவளது மன அழுத்தம், உடல் சோர்வு எல்லாவற்றையும் கொண்டு, அவளுக்கு மனநல சிகிச்சை கொடுத்தபோதும், பழையவை எதுவும் நினைவில் இல்லை. ஆனால் மன அழுத்தத்திலிருந்து மீள முடிந்தது. பழைய நினைவுகள் மறந்தாலும், இரட்டையர்களின் பந்தம் அகம் சார்ந்ததல்லவா?
தற்போது நினைவு மீண்டவளுக்கு, தங்கையின் அடையாளத்தில் வாழ்ந்தது, அவளுக்கான தேடல்களை அழித்துவிட்டோமோ என்றெல்லாம் தோன்ற வைத்தது. அன்று இறந்தது சிவா என்று சொல்லும்போது சிவாவுக்கானக் கண்ணீர் தானே இவர்களிடம் தோன்றியிருக்கும்? இன்று இறந்தது விஷ்ணு என்று தெரிந்த பின்பும் கூட, யாராக இருந்தால் என்ன? என்ற உணர்வுடன் கடந்துவிட்டனர் அல்லவா? எனில் என் விஷ்ணுவிற்கான ஏக்கத்தை நானே அழித்துவிட்டேனோ? என்று நினைத்து மனம் சுணங்கினாள்.
இங்கு பிரம்மா அமைதியாக நீள்விருக்கையில் அமர்ந்து பழைய புகைப்படங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க, சுபிக்ஷா மௌனமாக மன உளைச்சலுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருந்தாள்.
கடந்து சென்ற நாட்களில் எங்கு திரும்பினாலும் அவர்கள் பார்க்கும் செய்தி, ‘பச்சை மனிதனைக் காணவில்லை’ என்பதும், ‘ப்ளான்டோ நிறுவனத்தில் பணி புரியும் ஆராய்ச்சியாளர் சந்திரசேகரின் சட்டவிரோதமான வேலைகள்’ என்பதும்தான்.
செய்தியில் சந்திரசேகரைப் பார்த்ததும், சுடர், ராமராஜன், மற்றும் பிரபா அதிர்ச்சிக்குள்ளாகினர். அவர்களுக்கு மட்டும்தானே சந்திரசேகரை அடையாளம் தெரியும்? சுபிக்ஷாவிற்கு நினைவு தெரியும் முன்பே பாட்டி வீட்டிற்கு அண்ணனுடன் வந்துவிட, பிறகு தாய் தந்தையைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவள் ஆர்வம் காட்டவில்லை.
தற்போது செய்திகளில் கண்டு அதிர்ந்த சுடரை, ராமராஜன் தேற்றும் போதுதான், அவளுக்குத் தெரியவந்தது, சந்திரசேகர் அவளுடைய தந்தை என்பது.
இந்த உலகம் எத்தனைச் சிறியது அல்லவா? எதிர்பாராமல் சந்திக்கும் அனைவரையும் உறவுகளாக்கிவிடுகிறதே!?
செய்தியாளர்களிடம், ‘இந்த மர்ம கொலைகளுக்குக் காரணமானவர்கள், இரும்பு தொழிற்சாலையிலும் ஏற்றுமதி இறக்குமதியிலும் கொடிகட்டிப் பறக்கும் பிரதாப்பும், ப்ளான்டோ நிறுவனத்தைச் சேர்ந்த சந்திரசேகரும் தான். சந்திரசேகர் இப்ப தலைமறைவாக இருக்கார். அவரைத் தேடும் பணியில்தான் காவல்துறை இயங்கி வருது’ என்று கூறிய ராஜசிம்மன், அபூர்வன் பற்றியக் கேள்விக்கு, “அவர் அபூர்வன். அவரோட தந்தையின் ஆராய்ச்சியொன்றால தவறுதலா இப்படி மாறிட்டார். ப்ளான்டோ நிறுவனத்தைச் சேர்ந்த சந்திரசேகரோட நண்பன் மகன் தான் அபூர்வன். அபூர்வனோட அப்பா அம்மா இரண்டு பேரையும் கொலை செய்து, அபூர்வனை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த சந்திரசேகர் முயற்சிப்பதாக தெரிய வந்திருக்கு. விசாரணை இன்னும் முடியலை. அதுவரைக் கொஞ்சம் எங்களுக்கான நேரத்தையும் குடுங்க” என்று கூறியிருந்தான்.
இப்படிச் செல்லும் நேரத்தில், நான்கு நாட்கள் முன்பு, பச்சை மனிதன் காணவில்லை என்று செய்தி வந்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
தனது தந்தையாகப்பட்டவரின் செயலில் சுடருக்கும் சுபிக்கும் பெரும் வருத்தம் தான். அதிலும் இரண்டு நாட்கள் முன்பு, கருப்பசாமியின் அண்ணன் தான் அபூர்வன் என்று, பேச்சு வாக்கில் ராஜசிம்மன் கூறிக் கேட்டவளுக்கு மனதில் சொல்ல முடியாத வலி..
கருப்பசாமியின் குடும்பம் உடைந்துபோக தனது தந்தையானவர் ஒரு காரணம் என்று நினைத்தவளுக்கு அது பெரும் மன உளைச்சலைக் கொடுத்தது. எனது பெற்றவரைக் கொன்றவனின் மகள் என்று தன்னை நினைத்து விடுவாரோ? என்று நினைக்கவே உள்ளம் கனத்தது… இது காதலா என்று கூட அறிந்து புரிந்துகொள்ள அவகாசம் இல்லாத காலத்தில், அவளே அறியாமல் காதல் வலி சுமந்தாள், சுபிக்ஷா…
அனைவரும் ஒவ்வொரு எண்ணங்களில் இருக்க, சூப்புடன் ப்ரீத்தி உள்ளே நுழைந்தாள்.
அவள் உள்ளே நுழைந்ததை உணரும் நிலையில் யாரும் இல்லை.
சுடர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகிருந்த மேஜையில் சூப்பை வைத்தவள், சிவப்ரியாவை அமர்த்த உதவுவதற்காக, சுடரின் தோளில் கரம் வைத்தாள்.
சட்டென சுயம் மீண்ட சுடர், ப்ரீத்தியை நோக்க, “சூப் கொண்டு வந்திருக்கேன்… விஷ்ணுவை..ப்ச்.. சிவாவை உட்கார வைக்க ஹெல்ப் பண்ணுங்க” என்றாள்.
சிறு தலையசைப்புடன் எழுந்தவன், “வ்.. சிவா” என்று அழைக்க,
சிவா மெல்ல அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“சூப் குடிச்சுட்டுப் படுடாமா” என்றவன், அவளைத் தாங்கிக் கொண்டு, தூக்கி அமர்த்த உதவ, வயிற்றில் போடப்பட்டத் தையல் அலுங்காமல் அமர, சற்றுச் சிரமப்பட்டாள்.
“பார்த்து” என்று ப்ரீத்தி கூற,
அவளை அமர்த்தியவன், ப்ரீத்தியிடமிருந்து சூப்பை வாங்க, அவனிடம் கொடுத்துவிட்டு அவளும் அருகே அமர்ந்துகொண்டாள்.
இவர்கள் சப்தத்தில் பிரம்மா மற்றும், சுபிக்ஷாவும் தங்கள் நிலையிலிருந்து மீண்டு, கட்டிலருகே வந்தமர்ந்தனர்.
சுடர் சிவாவுக்கு சூப்பை கரண்டியில் எடுத்து ஊட்ட, அவளும் மௌனமாகக் குடித்து முடித்தாள்.
அவள் வாயைத் துடைத்துவிட்ட ப்ரீத்தி, “ரெஸ்ட்ரூம் போனுமா சிவா?” என்று கேட்க,
இடவலமாய்த் தலையசைத்தாள்.
அந்நேரம், அறை வாசலில் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது.
அனைவரும் அறை வாசலை நோக்க, கருப்பசாமி, ராஜசிம்மன் மற்றும், மருத்துவ சாதனங்கள் அடங்கிய பையுடன் ஒரு செவிலியர், பர்தாவும் ஹிஜாபும் அணிந்த நிலையில் நின்றிருந்தார்.
சிவப்ரியாவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் எழுந்து நிற்க,
“உட்காருங்க.. எதுக்கிந்த ஃபார்மாலிடி?” என்ற ராஜசிம்மன், “சிவாவுக்கு ட்ரெஸிங் பண்ண நர்ஸ் வர்றதா வெளியே காவலுக்கு இருந்த ஆஃபிஸர் சொன்னாங்க. அதான் அப்படியே அவங்களையும் செக் பண்ணிட்டு உங்களையும் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்” என்று ராஜசிம்மன் கூறிவிட்டு ஓரவிழியால் பிரம்மாவைப் பார்த்துக் கொண்டான்.
‘கண்ணு ரெண்டையும் நோண்டி எடுக்கனும்.. பார்க்குறாராம்’ என்று மனதோடு நினைத்துக் கொண்டு அவனை முறைத்தபடி நின்றாள் பிரம்மா.
அவன் இதழ்கடையோரம் மெல்ல வளைந்து, அவன் கட்டுப்பாட்டில் அடங்கியது.
“இப்ப எப்படி இருக்கீங்க சிவப்ரியா?” என்று கருப்பசாமி கேட்க,
மெல்லிய புன்னகை மட்டுமே அவள் பதிலாய்…
சுபிக்ஷாவின் பார்வை, அவனை வேதனையோடு வட்டமிட்டது.. தனக்கு பெற்றவர்கள் இருந்தும் இல்லாத நிலை, அவனுக்கு இருந்தவர்கள் இல்லாமல் போன நிலை.. அதுவும் அதற்குக் காரணம் தனது தந்தையாகச் சொல்லப்படுபவர்.. இதில் அவள் செய்யவோ மாற்றவோ எதுவுமில்லை என்று புரிந்தாலும் கூட, உணர்வுகளைத் தாங்கிய மனம், அவளை வலு இழக்கத்தான் செய்தது.
“ஓகே.. அவங்க டிரஸிங் பண்ணட்டும். நாம வெளிய இருப்போம்” என்று ராஜசிம்மன் கூற,
‘இவன் இப்படிலாம் பேச மாட்டானே? ஆஸ்பிடல்ல அத்தனைப் பேர் இருந்தும், அவளை அட்மிட் பண்ண ரூம்ல யாரையாவது இருக்க சொல்லிட்டே இருப்பான்.. இப்ப என்ன எல்லாரையும் வெளிய பத்துறான்?’ என்று மரியாதை காற்றில் பறக்க அவனை மனதில் வறுத்தபடி யோசித்த பிரம்மா, வந்திருந்த செவிலியரை ஏற இறங்க பார்த்தாள்.
‘இந்த பர்தாக்குள்ள என்னமோ இருக்கு.. என்னவா இருக்கும்?’ என்று பிரம்மா யோசிக்க,
“என்ன யோசனை? வெளிய போலாம்னு சொல்லி அவங்க எல்லாம் நடைய கட்டியாச்சு” என்று ராஜசிம்மன் அவளிடம் கூறினான்.
அவனை ஏற இறங்க பார்த்தவள், “என் ஃபிரெண்டோட சேஃப்டிக்காக நான் இங்கயே இருக்கேன்.. இவங்க யாரு என்னனு தெரியாம நம்பி தனியாலாம் விட முடியாது” என்று கூற,
செவிலியர் ராஜசிம்மனைப் பார்த்தார்.
இதழுக்குள் சிரிப்பை அடக்கிய ராஜசிம்மன், “நம்பகமான ஆள்தான் மேடம். வாங்க” என்று கூற,
“எனக்கு நம்பிக்கை இல்லையே” என்றாள்.
“என்மேல நம்பிக்கை இல்லையா?” என்று அவன் கேட்க,
“இல்லவே இல்லை” என்றாள்.
‘உன் பாடு திண்டாட்டம்தான்டா சிம்மா..’ என்று தனக்குள் ராஜ சிம்மன் நினைத்துக் கொள்ள,
“பிரம்மா… இருக்கட்டும்டி.. அதான் சார் அவ்ளோ சொல்றாங்களே.. நீ வெளிய இரு” என்று சிவப்ரியா கூறினாள்.
பிரம்மா சிவாவைப் பார்த்து, “எனக்கு இவர்மேல நம்பிக்கை இல்ல” என்று கூற,
அதற்குமேல் பொறுமை இல்லாதவன், “வா நம்பிக்கை வர வைக்கிறேன்” எனக் கூறி சட்டென அவள் கரம் பற்றி இழுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
சிவப்ரியா இதனை அதிர்ச்சியாக பார்த்திருக்க, அவள் அருகே முதலுதவிப் பெட்டியைத் திறந்தபடி அமர்ந்தார் செவிலியர்.
அவள் மேலாடையை உயர்த்தி, ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்டரை அவர் நீக்க, “ஷ்ஷ்.. ஆ..” என்று லேசாய் வலியில் ஓசை எழுப்பினாள்.
அவளை ஒருநிமிடம் நிமிர்ந்து பார்த்து, தோளில் தட்டிக் கொடுத்தவர், காயத்தைத் துடைத்து, மருந்திட்டார்.
வெளியே இழுத்துச் சென்ற பிரம்மாவோடு, கூடத்திற்குச் செல்லாமல், பக்கத்து அறைக்குள் நுழைந்தான் ராஜசிம்மன்.
“ஹே என்ன பண்ற?” என்று அவள் கத்த,
“ஷ்ஷ்.. பேச கொஞ்சம் நேரம் கொடுடி.. இப்படி பார்க்கும்போதெல்லாம் முகத்தை வெட்டினா என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.
“எனக்கு பார்க்க இன்ட்ரஸ்ட் இல்லைன்னு அர்த்தம்.. கைய விடுறியா?” என்று அவள் கத்த,
அவள் கரம் விடுத்தான்.
அவனைக் கடந்து சட்டென அவள் செல்ல முற்பட,
“ப்ச்.. நில்லு பிரம்மா” என்று அவள் கரம் பற்றினான்.
அவன் பிடித்த விசைக்கும் நகர்ந்த விசைக்கும் இடையில், கால் வழுக்கிவிட, பின்னோக்கி சாய்ந்தவளைப் பற்றிக் கொண்டான் காவலன்.
விழுந்துவிடும் அச்சத்தில் இமைமூடி அவன் புஜங்களை இறுக்கிப் பிடித்தபடி அவளிருக்க, அவள் மெல்லிடையினைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு அவள் முகத்தை ரசனையோடு பார்த்தபடி அவன் இருந்தான்.
விழவில்லை என்ற உணர்வு உரைக்கும் நொடி, அவன் ஸ்பரிசமும் உரைக்க, சட்டென கண்விழித்து, அவனிடமிருந்து நகர்ந்தாள்.
“கொஞ்சமாவது பொறுமை இருக்கா?” என்று அவன் கேட்க,
“உங்களை யாரு கையைப் பிடிக்கச் சொன்னது?” என்று கத்தினாள்.
“கையத்தானே பிடிச்சேன்? கட்டிப்பிடிச்ச மாதிரி கத்துற?” என்று அவன் நக்கலடிக்க,
“போலீஸ் மாதிரியா பிஹேவ் பண்றீங்க?” என்றாள்.
“ஏன் போலீஸ்னா காதலிக்கக்கூடாதா?” என்று அவன் சிரிக்க,
“கஞ்சி போட்ட காட்டன் சட்டை மாதிரி விறைப்பாயிருந்துட்டு இப்பப் பேச்சைப் பாரு” என்றாள்.
அதில் பகென்று சிரித்தபடி, பக்கவாட்டாக இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன் முகம் பார்த்து, “ஆமால்ல.. அப்படித்தான் இருந்தேன்..” என்றவன், அவளைப் பார்த்து, “உன்னைப் பார்க்கும் வரை” என்று மிக மென்மையாய்க் கூறினான்.
அவள் உக்கிரமாய் அவனைப் பார்க்க, “லிசன்.. உன்கிட்டப் பேசத்தான் கூட்டிட்டு வந்தேன். ரொம்ப கொதிக்காம கேளு..” என்று கூறினான்.
“சொல்லுங்க. பட் நீங்க எவ்ளோ பேசினாலும் என்னால உங்க லவ்வை அக்செப்ட்லாம் பண்ண முடியாது… எனக்கு இதுலலாம் இன்ட்ரஸ்ட் இல்ல. அதுவும் சிடுசிடுனு இருக்கும் உங்களை.. நெவர்” என்று கூற,
“இனியாவது லைஃப்ல சிரிக்கனும்னுதான் உன்னை லைஃப் பார்ட்னராக்கிக்க நினைக்கிறேன் பிரம்மா.. எனக்கும் சிடுசிடுனு இருக்கப் பிடிக்கலைத்தான்.. வேற வழியில்ல.. உன்னைப் போல நினைச்சதும் சிரிக்கும்படியான, ரசிக்கும்படியான உணர்வைக் கொடுக்கும் நபரோ, சம்பவமோ என் வாழ்க்கையில் இல்ல.. அதை நீ தந்த. இனியும் தர்றதுக்கு எனக்கு நீ வேணும்னு தோனுச்சு. என் விருப்பைச் சொன்னேன்.. என் உணர்வை வேற என்னனு உனக்கு விளக்கனும்னு தெரியல.. யோசிச்சு சொல்லு” என்றவன் வெளியே சென்றுவிட்டான்.
அவன் உதிர்த்துச் சென்ற வார்த்தைகளில் அவள்தான் குழப்பமும் வியப்பும் கொண்டு உறைந்து நின்றாள்.
இங்கு சிவப்ரியா காயத்திற்கு மருந்திட்டு முடித்து செவிலியர் நிமிர, “ஏன் பேச மாட்ற அபூ?” என்று அவனை ஆழ்ந்து பார்த்தபடி சிவப்ரியா கேட்டாள்.
அடுத்த நொடி அவன் கரம் அசைவற்று நின்றது…
“எல்லாம் மறந்தப்பவே என் நினைவில் உணர்வா இருந்த.. நினைவு வந்த பிறகா உன்னைக் கண்டுபிடிக்க முடியாம இருக்கப் போறேன்?” என்று கேட்கும்போதே அவள் கண்கள் கலங்கிவிட,
சட்டென அவளைத் தோளோடு அணைத்திருந்தான் அபூர்வன்.
கண்ணீரோடு தானும் அவனை அணைத்துக் கொண்டாள்.
காயத்தின் வலியெல்லாம் மனவலிக்கு முன் ஒரு பொருட்டாக இல்லை அவளுக்கு.
“இதைக் கழட்டு அபூ” என்று அவன் முகம் மறைக்கும் உடையைப் பிடித்து அவள் கூற,
அவன் அவளைப் பார்த்தான்.
“எனக்கு என் அபூவைப் பார்க்கனும்” என்று கண்ணீரோடு அவள் கூற,
தனது முகம் மூடியத் துணியைக் கலைந்தான்.
அவன் கன்னம் பற்றியவள், “என்னாச்சு உனக்கு? என்ன ஆராய்ச்சி? நியூஸ்ல என்ன சொல்றாங்கன்னே புரியல..” என்க,
கண்ணீர் மின்னும் பச்சை விழிகளோடு அவளைப் பார்த்தவன், தனது தந்தையின் ஆராய்ச்சிப் பற்றிக் கூறினான்.
சுறுக்கமாக நடந்தவற்றை அவளுக்கு அவன் கூறி முடிக்க, அவனுக்காக மனம் வருந்தி, அவள் கரைந்தாள்.
அவள் விக்கி அழுவதைப் பார்த்துப் பதறியவன், “ஷ்ஷ்.. ப்ரியா.. ஸ்டிட்சஸ் பிரிஞ்சுடும்.. ப்ளீஸ்..” என்று அவளுக்காகக் கரைய,
“அபூ.. எனக்கு ஏன் எல்லாம் மறந்துச்சு? என்னாலக்கூட உனக்கு எதுவும் ஹெல்ப் பண்ண முடியலைல?” என்று அழுதாள்.
“நீ உதவி செய்ய முன்வந்தாலும் அதை ஏற்கும் மனநிலையிலயும் சூழல்லயும் நான் இல்லையே ப்ரியா” என்று அவள் கன்னம் தாங்கி, கட்டை விரல்களால் கண்ணீர் துடைத்தவன், “எனக்கு உன் நினைவு வரும்போதெல்லாம், அந்த பதினெட்டு வயசு பொண்ணோட கள்ளப் பார்வைத் தொடர்வதுதான் தோன்றும்” என்று சிரித்தான்.
அவனைப் போல் அவளால் சிரிக்க முடியவில்லை. அவளுக்கு உண்மையில் அதிகம் வலித்தது. உணர்வுகளின் பிடிமானத்தில், முள் தாங்கிய ரோஜாவைக் கசக்கிப் பிடிக்கும் உணர்வு அவளுக்கு.
“எனக்கு நீ பழசை மறந்ததே சந்தோஷம்தான்.. இல்லைனா என்னை நினைச்சு ஃபீல் பண்ணிட்டே இருந்திருப்ப. ஆக்சுவலி, நானும் நீ இறந்துட்டதா தான் நினைச்சேன். காட்டுல மாட்டிக்கிட்டப் பிறகு, அந்த இடத்துக்குப் பழகவும், திரும்ப ஊருக்குள்ள வந்துபோகும் பாதைகளைப் புரிஞ்சுக்கவும் எனக்கு ஒரு வருஷம் தேவைப்பட்டது. இதோ.. இதே கெட்டப்ல, நாம அட்மிட்டான ஹாஸ்பிடலுக்கு நான் போனேன். உன்னைப் பற்றி எதாவது தெரிஞ்சுக்கலாம்னுதான் போனேன். ஆனா ரெக்கார்ட்ஸ்ல நீ இறந்துட்டதா இருந்தது. திரும்ப காட்டுக்கு வந்த எனக்கு உயிரே இல்ல.. அ..அன்னிக்கு நான் அழுதது.. சின்ன வயசுலருந்து எனக்காக மட்டுமே இருந்த என் அப்பாவுக்குக்கூட நான் அப்படி அழுதேனானு தெரியலடி.. நீ என்னை என்னப் பண்ண?” எனக் கேட்டு, அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன், “ஆனா உன் ஃபிரெண்ட்ஸ் கூட அந்தக் காட்டுக்கு வந்து புதைகுழில மாட்டினியே.. அப்பவே நீதான் என் ப்ரியானு எனக்குப் புரிஞ்சுடுச்சு” என்று அவள் மூக்கின் நுனியைக் கிள்ளினான்.
அவன் கரத்தைத் தட்டிவிட்டவள், “எப்படி?” என்று கேட்க,
“எனக்குத் தெரியாதா? உன்னால மட்டும்தான் என்னை உணர முடியுமா?” என்று கேட்டான்.
அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“எனக்கு சத்தியமா நம்ம உணர்வையும் உறவையும் புரிஞ்சுக்க முடியலை அபூ.. நான் அந்த வயசுக்கு, ஒரு ஆர்வத்தில் உங்களைப் பார்த்தேன்.. நீங்களும் பார்த்தீங்க.. பேசினோம், பழகினோம்.. நம்ம இதோ இப்படிக்கூட உடல் உரச நெருக்கமா இருந்தது இல்ல. நீங்க தொட்டதுகூட அந்த ஆக்சிடென்ட்ல தான்.. அது மட்டுமேதான் மனசுலயே இருக்கு. அந்த பாதுகாப்பு.. எனக்கு எதுவும் ஆகிடக்கூடாதேங்குற ஏக்கம் அந்தப் பிடியில இருந்துது. உணர்ந்தேன்.. வேற எதுவுமே இல்ல. ஆனா எப்படி இந்த பாண்டிங்? இந்த உணர்வு? இந்த..இந்த உறவு.. இதுக்கு என்னப் பெயர்? எனக்குப் புரியல” என்று கண்ணீரோடும் குழப்பத்தோடும் கூறியவள்,
“ஒருவேள அதுக்கு முன்னவும் உங்களைப் பார்த்து எதுவும் ஆக்சிடென்ட்ல மறந்துட்டேனா?” என்று கேட்க,
பக்கென்று சிரித்தான்.
“சிரிக்காத அபூ.. நான் சத்தியமா கேட்குறேன். என்னால நம்ப முடியல.. நி..நீ.. எனக்கு வலிக்குது. உனக்கு என்னவோனு பயமா இருக்கு. நி..நீ.. எனக்கு சொல்லத் தெரியலை.. இது என்னது” என்று அவள் தடுமாறினாள்.
“எல்லா உறவுக்கும் ஒரு பெயர் வைச்சுத்தான் ஆகணுமா?” என்று சிரித்தபடி அபூர்வன் கேட்க,
பட்டென்று, “ஆமா.. எனக்கு பெயர் வேணும்” என்று அவள் கூறினாள்.
அவள் கன்னத்தோடு கரம் கோர்த்தவன், “அப்போ காதல்னே வச்சுக்கோ” என்க,
அவனையே வியந்து பார்த்தவள், “எனக்குக் குழப்பமா இருக்கே..” என்றாள்.
“ச்சில்.. ரிலாக்ஸ்.. இப்பதான் எனக்காக புல்லெட்டெல்லாம் வாங்கி படுத்து எழுந்திருக்க.. அதுக்குள்ள ரொம்ப யோசிக்காத” என்று கூறியவன், “நீ சொல்றியே.. வெறும் பஸ்ல பேசிக்கிட்டதுல எப்படி இவ்ளோ உணர்வுனு.. நாம பேசிக்கிட்டதெல்லாம் யோசிச்சுப் பாரு.. ஒரு வருஷம் தான்.. கால அளவு குறைவாக்கூடத் தெரியலாம்.. ஆனா உணர்வுகளுக்குக் காலம் தேவையில்லை.. ஒருநாள், ஒரு நிமிஷம், ஏன் ஒரு நொடிகூட போதும் பிடிச்சுக்குறதுக்கு.. அந்த ஒரு வருஷமும், தினமும் காலையும் சில நாட்கள் மாலையும், நாம அந்த நாளில் பார்த்த, கடந்த, பாதிச்ச, பாதிக்கப்பட்ட அத்தனையும் பேசிக்கிட்டோம்.. அத்தனையும். ஒருநாளில் ஒரு அணுவையும் நாம பகிர்ந்துக்காம கடந்ததில்லைங்குற அளவு… அந்த நாட்கள்.. அது நமக்கு ஒருத்தரை ஒருத்தர் அத்தனை உணர்த்திச்சு. உனக்கும் எனக்கும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு ஈர்ப்பு இருந்தது. அந்த ஈர்ப்புத்தான் பேச வைத்ததாக இருக்கலாம். ஆனா அத்தனையும் தாண்டி, ஒரு நம்பிக்கை நமக்குள்ள உருவாச்சுப்பாரு.. அது வேற.. அது நீ சொல்லும், நான் சொல்லும் எந்த உறவுக்கும் அப்பாற்பட்டது. ஒருத்தரோட உணர்வுக்கு இன்னொருத்தர் கொடுத்த மரியாதை, நம்ம மேல நாம வச்ச நம்பிக்கை.. எல்லா உறவுக்கும் அடிப்படையான தேவை இதுதான்.. அது நம்மக்கிட்ட இருந்தது. இந்த அடிப்படைய எந்த உறவின் பாதையில் கொண்டுபோகணுமுங்கிறது நம்ம எண்ணம்.. எனக்கு இதைக் காதலில் கொண்டுபோகத் தோன்றிச்சு.. உன்னைவிட்டுப் பிரிஞ்சப்ப, நீ இல்லைனு நினைச்சப்ப நான் அழுத அழுகை, எனக்கு உணர்த்திச்சு.. நீ தான் ப்ரியா, நீ உயிரோட இருக்கனு தெரிஞ்சப்ப நான் உணர்ந்த உணர்வை சொன்னாலும் உனக்குப் புரியாது.. அது ஒருமாதிரி ஃபீல்” என்று சிலாகித்துக் கூறினான்.
“முதன்முறை என்னைக் காப்பாற்றினப்ப ஏன் நீ என்னைப் பார்க்கவோ பேசவோ முயற்சி செய்யலை?” என்று சிவப்ரியா கேட்க,
“முதல்ல நீங்க வரும்போதே உங்களைப் பார்த்துட்டேன். எல்லாரும் உன்னை விஷ்ணுனு கூப்பிடவும், நீ சிவப்ரியா சிஸ்டர்னுதான் நானும் நினைச்சேன்.. ஆனா புதைகுழிலருந்து உன்னைக் காப்பாற்றும்போது, நீ விஷ்ணு இல்ல சிவான்னு எனக்கு ஃபீலாச்சு.. ரொம்ப உறுதியா. என்னால அதை உணர முடிஞ்சுது.. கேட்க வேடிக்கையா இருந்தாலும் அதுதான் உண்மை.. ஆனாலும் உன்னைக் காப்பாத்திட்டு அங்கருந்து போயிட்டேன். உன்னைத் தூக்கிட்டுப்போக கருப்பு வரும்வரை பார்த்துட்டுருந்தேன்.. பஸ்ல சும்மா டிராவல் பண்ண நீ, ஏன் என்னைப் பார்க்கனும்? சும்மா பார்த்த நாம ஏன் பேசிக்கனும்? ஏன் எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கனும்? சத்தியமா நாம பேசிக்கிட்டக் காலத்தில் நமக்குள்ள காதல் இல்ல.. ஆனா அந்த நாட்கள் நம்ம காதலுக்கான காரணங்களா மாறிடுச்சு எனக்கு.. எங்கயோ இருந்த நீ, செத்துட்டனு நினைச்சுட்டிருந்த நீ, திடீர்னு ஏன் என் கண்ணுல படனும்? இதெல்லாத்தையும் நடத்திக் கொடுப்பதுதான் நம்ம விதினா அதுவே உன்னை என்கிட்டக் கொண்டுவரும்னு நினைச்சேன்.. கடத்திட்டே வந்துடுச்சு” என்று சிரித்தான்.
அவளும் மென்மையாக புன்னகைத்தாள்…
“அப்ப இது காதலா?” என்று அவள் கேட்க,
“எனக்குக் காதல்.. உனக்கு எப்படினு நீதான் உணரனும்” என்றான்.
“அப்ப உனக்கு நான் காதலிக்க வேணாமா?” என்று அவள் கேட்க,
“அதெப்படி விடுவேன்? உன்னோட பழைய உணர்வுகளை எதுவா எடுத்துக்கனும்னு யோசிக்குறதுதான் உன் விருப்பம்னு சொன்னேன்.. என் காதலுக்கு நீ பதில் சொல்லும்வரை விடுவதா இல்ல.. பதிலை ஆமானு சொல்லும்வரை விடுவதாவே இல்ல” என்று அவள் நெற்றியில் முட்டினான்.
பெண்ணவள் கலுக்கென்று சிரிக்க, வயிற்றில் சுருக்கென்று வலி.
அவள் முகம் சுருங்கவும் பதறி, “ப்ச்.. பாத்து ப்ரியா.. இப்பத்தான் ஸ்டிட்சஸ் போட்டிருக்கு” என்று அவன் கூற,
அவனை ரசனையோடு பார்த்தாள்.
அவள் பார்வையில் மெல்ல புன்னகைத்தவன், “பச்சையா இருக்கேனேடி.. என்னைக் கட்டிப்பியா?” என்று கேட்க,
“அதுக்கு என்ன?” என்று அவனை அணைத்துக் கொண்டாள்.
கொள்ளென்று சிரித்தவன், “இந்த கட்டிக்குறத சொல்லல.. கல்யாணத்தைச் சொன்னேன்” என்று கூற,
“நீ எப்படி இருந்தாலும் உன்னை எனக்குப் பிடிக்கும் அபூ..” என்று கூறினாள்.
“அப்ப லவ்வா?” என்று அவன் கேட்க,
அவன் முகம் பார்த்து, “அதுலாம் தெரியாது.. ஆனா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்” என்று கூறி புன்னகைத்தாள்.
“சரிசரி.. யாராவது வர்றதுக்குள்ள நான் கிளம்பனும்” என்று அவன் கூற,
“நிஜமாவே நீ தான் அங்க எல்லாரையும் கொலை பண்ணியா அபூ?” என்று அவன் கண் பார்த்து கேட்டாள்.
மற்றவரிடம் போல், அவன் மனதை வென்ற மாவீராங்கனையிடம் அவனால் தன்னைக் கொலைகாரன் என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை.. அவன் கண்களில் நொடியில் அதீத தவிப்பு ஒன்று குடிபுகுந்து, அவளை அசைத்தது.
ஒரு முழு நிமிடம் அவன் விழிகளை உற்று நோக்கியவள், அவனை விட்டு, “போயிட்டு வா அபூ” என்றாள்.
அவன் பதற்றம் கொண்டான்.
தன்னைத் தவறாக புரிந்துகொள்வாளோ? என்ற அதீத பயம், அவன் விழிகளில் அப்பட்டமாய் தெரிந்தது…
“ப்..ப்ரியா.. நான்..” என்று அவன் ஏதோ பேச விழைய, அவன் கண்கள் கலங்கிச் சிவந்தன.
அவன் வாய் பொத்தி, இடவலமாய்த் தலையசைத்தவள், “ஒரு உயிரோட மதிப்பு என் அபூக்கு தெரியும். என் அபூ ஒரு விஷயத்தை செய்தா, அதுக்குப் பின்னாடி கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும். நீ போ.. திரும்ப என்கிட்ட வெளிப்படையா வர முடியுற ஒரு நாள் உனக்கு வரும். அப்ப சொல்லு.. எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு” என்று அவன் கண் பார்த்து கூற,
அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
கண்களில் கண்ணீர் மழை, இதழில் புன்னகை ஊற்று…
“டேய்.. வலிக்குது” என்று அவள் மெல்லமாய்க் கூறவும் பதறி விலகியவன், தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “சாரி ப்ரியா..டேக் கேர்” எனக் கூறி, மீண்டும் தனது மாறுவேடத்தினுள் நுழைந்து புறப்பட்டான்.
கூடத்தில் கருப்பசாமி, ராஜசிம்மன் மற்றும் சுடர் பேசிக் கொண்டிருக்க, அபூர்வன் வந்து நின்றான்.
அவனைப் பார்த்ததும், “ஓகே சுடர் நாங்க கிளம்புறோம்” என்று கருப்பசாமி கூற,
“ஓகே சார்” என்று அவர்களுக்கு விடை கொடுத்தான்.
வந்ததிலிருந்து தன்னை நிமிர்ந்தும் பாராத கருப்பசாமியிடம்தான், சுபிக்ஷாவின் மொத்த பார்வையும் இருந்தது…
வண்டி ஏறி செல்லும் கடைசி நொடியிலாவது தன்னைப் பார்ப்பானா, என்று ஏக்கம் தழுவிய விழிகளோடு அவள் பார்த்திருக்க, அவன் பாவை முகம் பாராமல் புறப்பட்டிருந்தான்.

